‘நோய்களுக்கு மருந்து நீ’
******************************
உலகின் ஒப்பற்ற தேசம்!
அகிலத்தின் அழகு தேசம்
மூத்த இனமும் மொழியும்
தோன்றிய முதன்மை தேசம்!
வற்றா நதிகளும்
வளமார் மண்ணும்
குன்றா வளமும்
குறைவிலா செல்வமும்
மாண்பமை மக்களும்
இயற்கையின் செல்ல தேசம்!
இந்திய தேசம்!
வார்த்தை ஜாலத்திற்காக
வர்ணனை செய்யவில்லை!
இந்த தேசத்தின்
பூர்வக் குடியின்…
இந்த தேசத்தை
சுவாசிக்கும் வார்த்தை
வடிவங்கள்!
இன்று….
முடங்கிக் கிடக்கும் தேசமாக
முட்டுக்கட்டை களைப்
போட்டது யார்?
சுய நலத்திற்காக
உழைக்கும் மக்களை
உடைத்தது யார்?
ஒன்றாகப் பிறந்து
ஒன்றாக உழைத்து
ஒன்றாக உண்டு
ஓர் உணவை உண்டு
ஓரிடத்தில் உறங்கி
ஒரே உறவுகளாய் வாழ்ந்தோமே…. !
இது பொய்யென்றால்
நீ சொன்னாலும்
நான் சொன்னாலும்
இந்த மண்ணின்
பூர்வக்குடிகள் இல்லை நாம்!
மதங்கள் நம்மை அண்டின
சாதிகள் நம்மை தொற்றின
நோய்கள்… நோய்கள்…!
நோய்களை விரட்டுவோம்
‘நோயற்ற வாழ்வுதானே
குறைவற்ற செல்வம்’
இந்த தேசத்திற்கு!
சொர்க்கத்தில்
இருக்கும்
என் பெற்றோர்
என்னிடம் பேசினர்!
கனவின் வழி!!
மீண்டும்
மண்ணுலகில் பிறப்பு
வேண்டுமெனில்
அருளுகின்றேனென
ஆண்டவன்
அனுமதித்துள்ளார் !
மகனே…..
பிறவியெடுத்து
வருவதற்கு…
பேராசைதான்!
இந்தியாவில்
சாதிகளின் பேயாட்டம்
மதம்பிடித்தோர் வெறியாட்டம்
ஏய்ப்போரின் வெறியாட்டம்
அரசியல் வாதிகளின்
கொள்ளைக்கூட்டம்
அழிந்திருந்தால்
சொல் மகனே….
உனக்கே
பிள்ளைகளாகப்
பிறக்கிறோமென்றனர்
என்னத்தச்சொல்ல?
*********************************
ஏமாற்றும்
வித்தைகள்
பல விதம்!
வீதி ஓரங்களில்
வித்தைக் காட்டுபவனின்
வித்தை
வயிற்றுப் பாட்டுக்கானது!
திரைக்காக…
நடிகர் மட்டுமல்ல
திரைப்படம் உருவாக
உழைக்கிறோம் என்போர்
அனைவரின் வித்தை
ஆசைக்கானது!
அலப்பறை செய்து
கொள்ளையே கொள்கை
என்னும்..
அரசியல் பேய்களின்
வித்தை….
அநாகரிகமானது!
மயிர் வளர்ப்பு
அம்மணத் திறப்பு
அங்க வஸ்திர அணிவிப்பு
அருவருப்பான
வேஷ கோஷம்
கூச்சல்… குடைச்சல்
எல்லாமும்
மனநோயின் வித்தை;
மக்களை மயக்கும்
மதிகெட்ட வித்தை!
வித்தைக் காட்டுபவரே
வித்தகனானான்!
விதை போட்டு
வியர்வைசிந்துவோன்
வேடிக்கைப் பொருளானான்!
விந்தை உலகமடா….
இல்லை… இல்லை….
வித்தை உலகமடா!
**************************************
மனிதன்
என்னென்னவோ வேடமிட்டு
பிழைப்பை நடத்திக்
கொண்டிருக்கிறான்!
உலகம் ஒரு நாடகமேடை
நாமெல்லாம் நடிகர்
என்ற
அறிஞனின்
ஆழமான சிந்தனை
எவ்வளவு நிதர்சனம்!
வயிற்றுப் பிழைப்பிற்காக
கடவுள் போன்று
வேடமிட்டு….
பிச்சையெடுக்கின்றார் சிலர்;
ஓ…..
கடவுள் இப்படித்தான் இருப்பாரோ?
வேடமிட்டவனுக்கு எப்படித் தெரியும்?
இந்த
உருவத்தை உருவாக்கியவனுக்குத்தான் தெரியும்!
கடவுளின் உருவம்.
கடவுள் உருவத்தில்
கையேந்தி வருபவருக்கு
ஏன் கற்பூரம் ஏற்றவில்லை?
கடவுள் உருவத்தை
கற்பனையில் உண்டாக்கியவர்!
அவர்களுக்கு
நன்றாகத் தெரியும்
கடவுளுக்கு உருவமில்லை என்பது!
வயிற்றுப் பசிக்காக
கடவுள் வேடமிட்டு
கையேந்தி வந்தாலும்
பிச்சைப் பாத்திரம்
நிரம்புவதில்லை….
பிச்சைப் போடுபவனுக்கும் தெரியும்!
பிச்சையெடுப்பவன்
கடவுள் இல்லையென்பது!
பிச்சையெடுப்பவன்தான்
நம்புகின்றான்…..
பாவம்;கடவுளை!