இரை தேடி அலைகையில் கிடைப்பதென்னவோ கசப்பான கனிகளும் துவர்ப்பான காடி பானமும் கவிதை – வசந்ததீபன்
வரப்புயர நீர் உயர
பழங்கவிதை சொன்னதெல்லாம்
பதர் ஆகி…
கோன் உயர குடி அழிகிறதே
உலர்ந்த கனவுகளோடு
விரைந்து கொண்டிருக்கிறேன்
இருண்ட பாதையில்
ஒளியைத் தேடி…
இச்சைகள் படம் விரிக்கின்றன
இதயம் உக்கிர நாட்டியமாடுகிறது
மகுடியே அடக்கி ஆள வா
வாழ்த்துக்கள் பூக்கின்றன
ஆசீர்வாதங்கள் பொழிகின்றன
தூரத்தில் நிற்கின்றன
புது நம்பிக்கைகள்
மலர்கள் அழுகின்றன
செடிகள் ஆறுதல் சொல்கின்றன
பூத்தததும் பிரிவு தவிர்க்கவொன்னாதது
புத்தரின் பிச்சைக்காரன் பாத்திரம்
காலியாயிருக்கிறது
கடுகு செடிகள் காய்த்திருக்கின்றன
திக்குத்தெரியாத காட்டில்
அமிர்தகலசம் கேட்பாரற்று கிடக்கிறது
கூட்டுப் புழுவின் தனிமை
பட்டுப்பூச்சியாய் மனசு
விட்டு விடுதலையாக ஒருநாள்
கள்ள மெளனத்துக்குள் வஞ்சகம்
பதுங்குதலுக்குப் பின்னே கொலைவெறி
வேட்டையில் பீறிடும் அநியாயமாய் சிந்தும் குருதி
ஆவல்கள் மேகங்களாய் அலைகின்றன
தேடல்கள் எறும்புகளாய்த் திரிகின்றன
கரை மீறாமல் வாழ்க்கை ஓடுகிறது
உடைந்த படகின் பாகங்கள் கிடக்கின்றன
சிதிலமாகிப் போன மீன் துண்டுகள்
வரவிருக்கின்றன
கடற்கரை யொட்டி மனித வாசம்
இடிந்த குடிசைகள்
ஆமை நகருகிறது
முயல் பாய்ந்து செல்கிறது
வெற்றி பெறுகிறார்கள் தந்திரசாலிகள்