Posted inPoetry
மரு.சா.வீரமணியின் கவிதைகள்
1.
பாகற்காயான வாழ்க்கையில்
சுண்டைக்காய் கனவோடு
புடலங்காயாய் நீளும் தேவைகளை
கூறுகளாய் விற்கும் அவள்
ஒரு கூறின் விலை பத்து
என்கிறபோது
கலந்திருக்கிறது
பத்தாது என்கிற முனகல்
2.
முன்பொருநாள் நீர் வழிந்தோடிய
வாய்க்கால்களில்
எதிர்நீச்சல் பழகிய
வெள்ளிக் கெண்டைகள்
பொய்த்துப் போன மழையால்
கண்ணில்படவேயில்லை
வாய்க்கால்கள்
சாலைகளானது
திடீரென்று
ஒருநாள் பொத்துக்கொண்டு
ஊற்றிய மழையில்
சாலைகளில் நீச்சல் பழகுகிறது
வண்டிகள்
3.
நிறைய சிந்திக்கிறேன்
என்கிற பதிலில்
பழகிவிட்டது
அப்படியே இருக்கிற
முதல் நரைமுடியின்
வருத்தம்.