புனிதனின் கவிதைகள்
தேநீர் மரம்
**************
வாசல்
வானமாக தெரிகிறது
வானம்
ரோஜா பூக்கள் பூத்த
வாசலாக தோன்றுகிறது
அம்மாவுக்கு அடுக்களையில்
தேநீர் வைக்க
உதவி செய்பவன்
விவசாயம் பொய்த்த பின்
தேநீர் கடையில்
தேநீர் தயாரிப்பவன் ஆகிறான்
போதி மரமாகிறது
தேநீர் கடையில் ஒலிக்கும்
சினிமா பாடல்கள்
ஜென் ஆகிறான்
தேநீர் தயாரிப்பவன்
டென்னிஸ் மட்டையின் ஜென் ஆற்றல்
********************************************
இந்த வருடம்
மஞ்சள் விளைச்சல் குறைவு
உடல் சோர்வு
மன அழுத்தம்
வாதை
அம்மா வழக்கம் போல்
காலையில் தேநீர் தந்தாள்
பட்டாம் பூச்சி
பாறாங்கல்லை கட்டி தூக்குவது போல்
மனம் லேசானது
பிரண்டை சட்னி எப்படி
செய்வது என பேசி கொண்டிருந்தார்கள்
அம்மாவும் சக வேலைக்கார அம்மாவும்
ஒண்டிரெண்டு நகைச்சுவை
அடிக்க முயன்றேன் நானும்
அம்மா வழக்கம் போல்
மதியம் ஒரு மணிக்கு
உறங்குவதற்காய்
கொட்டாவி விட ஆரம்பித்தாள்
அம்மா உறங்க போன பின்
என் கட்டிலில் கிடக்கும்
தலையணையை
வெறுமனே பார்க்க
ஆரம்பித்தேன்
சோர்வுறும் முயற்சியை விட
வாழ்வியல் பயிற்சியே
தேவை என புரிந்தது