பெயர் சொல்லும் பறவை 24 – கூம்பலகன் | முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவை 24 – கூம்பலகன் | முனைவர். வெ. கிருபாநந்தினி




இவ்வுலகில் ஒவ்வொரு கண்டுபிடிப்புகளும் தனது சூழலை கவனித்து கேள்விகள் கேட்பதிலிருந்தும், அதற்கான பதில்களை தேடுவதிலிருந்தும் கிடைக்கின்றன. அதில் தற்போது விவாத பொருளாகவே உள்ள உயிரினங்களின் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சி தவிர்க்கமுடியாதது. அதற்கான பதில்களை தேடும்போது கிடைத்தது தான் கூம்பழகனின் அலகு வடிவங்களில் ஏற்பட்ட மாற்றங்கள்.

பரிணாம வளர்ச்சி பற்றி சார்லஸ் டார்வின் அவர்கள் எழுதிய “உயிரினங்களின் தோற்றம்” என்ற நூல் பற்றி அனைவரும் அறிந்ததே. அதன் அடிப்படையில் எப்படி ஒரு உயிரினம் உடல் அமைப்பில் மாறுபடுகிறது என்பதை ஒரு பறவையின் அலகை கவனித்து கணடறிந்தார். இயற்கையில் ஏற்படும் சில மாற்றங்களால் உயிரினங்களுக்கு உணவு பற்றாக்குறை ஏற்பட்டு எளிதாக கிடைக்கும் உணவுகளை உட்கொள்ள ஆரம்பிக்கின்றன. அதன் விளைவாக அதன் உடலில் சில மாற்றங்கள் நிகழ்கின்றன.

குறிப்பிட்ட இனங்கள் இப்பூமியில் தங்கள் இனங்களை நிலைநிறுத்த மாற்றங்களுக்கு தகுந்தாற் போல் தங்களை தகவமைத்து கொள்கின்றன. அதில் மிக முக்கியமான பறவைகளில் ஒரு இனம் தான் பின்ச் (Finch species). ஆதலால் ‘டார்வின் பின்ச்’ என்று குறிப்பிடுகின்றனர் விஞ்ஞானிகள்.

Carpodacus grandis: Name Telling Birds Series 24 Article by V Kirubhanandhini. பெயர் சொல்லும் பறவை 24 - கூம்பழகன் Blyth's rosefinch
படம் கூம்பலகன் தகவமைப்பு

உலகில் மொத்தம் 230 இனங்களை கொண்டுள்ளன. அதில் கூம்பலகன் (Rosefinch) 27 இனங்கள் உள்ளன. நாம் இன்றைக்கு பாக்கவிருப்பது பிலித் கூம்பலகன் (Blyth’s rosefinch). பொதுவான பெயர் விலங்கியலாளர் “எட்வர்ட் பிளைத்” என்பவரின் நினைவாக உள்ளது.

Carpodacus grandis: Name Telling Birds Series 24 Article by V Kirubhanandhini. பெயர் சொல்லும் பறவை 24 - கூம்பழகன் Blyth's rosefinch
எட்வர்ட் பிளைத் (23 திசெம்பர் 1810 – 27 திசெம்பர் 1873)

அவர் ஒரு ஆங்கிலேய விலங்கியலாளர் ஆவார். கொல்கத்தாவில் உள்ள இந்திய ஆசிய சமூகத்தின் விலங்கியல் அருங்காட்சியகத்தில் பொறுப்பாளராகப் பணியாற்றினார்.

ஒரு வகைப்பாட்டியலராகவும், களஆய்வாளராகவும் பிளைத் டார்வினின் கவனத்தை ஈர்த்தார். இருப்பினும், பறவையியலில் அவரது ஆய்வுகளே பிளைத்தின் மிக முக்கியப் பங்களிப்பாகக் கருதப்படுகிறது.

பிளைத் ஆசியச் சமூக விலங்கியல் அருங்காட்சியகத்தில் 1841ஆம் ஆண்டு பொறுப்பாளராகப் பணியில் அமர்ந்தார். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட ஊதியம் மிகவும் குறைவாக இருந்தது. எனவே, பத்திரிக்கைகளில் எழுதுவது போன்ற வேலைகளைத் தன் வாழ்வாதாரத்தினை உயர்த்தும் பொருட்டு அவர் செய்துவந்தார். இதைத் தவிர, ஆசிய சமூகத்தின் பனுவலுக்காக பறவைகள், பாலூட்டிகள் குறித்த பல ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். பன்னாட்டு ஆய்விதழான இயற்கை வரலாறு பனுவலில் பல்வேறு பறவைகள் குறித்த ஆய்வுகளை வெளியிட்டார். 1857ல் கல்கத்தா ரிவ்யூ என்ற பனுவலுக்காக அவர் எழுதிய ஆய்வுக் கட்டுரையை டார்வின் தம் இயற்கையியல் தேர்வு ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இந்த காலகட்டத்தில் டார்வினுடன் பிளைத் கடிதங்கள் மூலம் வைத்துக்கொண்ட தொடர்பு மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது.

அருங்காட்சியகத்தில் பிளைத் பணியிலிருந்த காலத்தில், அங்கிருந்த விலங்கியல் சேகரிப்பை அவர் பெரிதும் வளப்படுத்தியிருந்தார். அது அதிக பார்வையாளர்களை அங்கு ஈர்த்தது. உயிரினங்களில் செயற்கைத் தேர்வு என்ற கருத்தியல் சார்ந்து பிளைத் எழுதிய மூன்று ஆய்வுக் கட்டுரைகள் இயற்கை வரலாறு பனுவலில் வெளியிடப்பட்டன. அக்கட்டுரைகளில் மாறுபாடு, இயற்கைத் தேர்வு, மரபுப் பெறுகை, தக்கன பிழைத்தல் போன்ற கருத்தியல்களைக் கூறியிருந்தார்.

மொத்தம் நான்கு புத்தகங்களை எழுதியுள்ளார். அதில் பர்மாவில் உள்ள பாலூட்டிகள் மற்றும் பறவைகளின் பட்டியல், கொக்குகளின் இயற்கை வரலாறு ஆகிய இரண்டு நூல்கள் அவர் இறந்த பிறகு வெளியிடப்பட்டன.

பிளைத்தின் பெயர் தாங்கிய பறவைகள்:
தமிழ்நாட்டில் காணப்படும் பறவைகளான, பிளைத் நாணல் கதிர்குருவி, பிளைத் நெட்டைக்காலி
இந்தியாவின் பிற பகுதிகளில் காணப்படும் பறவைகள் — பிளைத் இலை கதிர்குருவி, Blyth Olive bulbul, பிளைத் கிளி, Blyth rosefinch, Blyth shrike-babbler, Blyth tragopan, பிளைத் மீன்கொத்தி
உலகின் பிற பகுதிகளில் காணப்படும் பறவைகள் — Blyth hawk-eagle, பிளைத் தவளைவாயன், பிளைத் இருவாயன்.

பிளைத்தின் பெயர் தாங்கிய உயிரினங்கள்:
பாம்புகள் — Blythia reticulata, Rhinophius blythii
அரணை – Eumeces blythianus

பல இன்னல்களுக்கு இடையிலும், விமரசங்களைக் கடந்தும் பறவைகளை பற்றிய ஆய்வுகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இவருடைய பெயரை கூம்பழகன் என்ற பறவைக்கும் வைத்துள்ளனர். கூம்பழகன் வடக்கு ஆப்கானிஸ்தானில் இருந்து மேற்கு இமயமலை வரை காணப்படுகிறது. அதன் வாழ்விடங்கள் மிதமான காடுகள் மற்றும் போரியல் புதர் நிலங்கள் ஆகும். உயர்ந்த மலைப் பகுதிகளில் ஊசியிலையுள்ள காடுகளில் அல்லது மரக்கட்டைகளுக்கு மேல் காணப்படும். குளிர்காலத்தில் தோப்புகளுக்கு இடம் பெயர்கிறன்றன.

ஒப்பீட்டளவில் கனமான, வெளிர் அலகை கொண்ட பெரிய கூம்பழகன். ஆண் புருவம் மற்றும் கன்னங்கள் மற்றும் மந்தமான இளஞ்சிவப்பு கீழ் பகுதிகள் உள்ளன. பெண் பறவையானது ஒட்டுமொத்தமாக பழுப்பு நிறத்தில் வலுவான கோடுகள் மற்றும் வெளிறிய, லேசான கோடுகள் கொண்ட புருவத்துடன் இருக்கும்.Carpodacus grandis: Name Telling Birds Series 24 Article by V Kirubhanandhini. பெயர் சொல்லும் பறவை 24 - கூம்பழகன் Blyth's rosefinch

கூம்பழகன் பலுசிஸ்தானில் (வட-மேற்கு எல்லைப்புற மாகாணம்) 2400 மீ முதல் 3500 மீ வரையிலும், கில்கிட்டில் (பால்டிஸ்தான்) 3700 மீ வரையிலும், லடாக் மற்றும் லாஹுல் (அலி & ரிப்லே 2007) 3400 மீ முதல் 3800 மீ வரையிலும் இனப்பெருக்கம் செய்கிறது.

தாவரப் பொருட்களான (திறந்த இலை மொட்டுகள், பூ மொட்டுகள், பழங்கள் மற்றும் இலையுதிர் மரங்களின் விதைகள், புதர்கள் மற்றும் மூலிகைகள்) முக்கிய உணவாக உட்கொள்கின்றன.

பொதுவாகவே குழந்தைகள் எதை பார்த்தாலும் ஏன் எதற்கு எப்படி என்ற கேள்விகளால் பெரியவர்களை யோசிக்கவைப்பது வழக்கம். அவர்களின் கேள்விகளுக்கு சரியான பதிலை கண்டறிய சிந்தித்தாலே பல பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைத்துவிடும். ஆதலால் குழந்தைகளைப் போல் நாமும் சுற்றுப்புறத்தை கவனிப்போம், கேள்விகள் கேட்போம், சிந்திப்போம், தீர்வுகளை கண்டறிவோம். அப்போது தான் சூழலை நாம் முழுமனதாக காப்பதற்கு முன் வருவோம்.

தரவுகள்
https://osme.org/wp-content/uploads/2019/10/10-Busuttil_C_pp146-159_31_2_Sandgrouse.pdf
https://www.mun.ca/biology/scarr/Adaptation_in_Darwins_Finches.html
https://ebird.org/species/blyros1?siteLanguage=en_IN
http://indianbirds.in/pdfs/IB7.5_Rahut_BlythsRosefinch.pdf
https://ncse.ngo/edward-blyth-creationist-or-just-another-misinterpreted-scientist
https://en.wikipedia.org/wiki/Edward_Blyth

முந்தைய தொடரை வாசிக்க :

பெயர் சொல்லும் பறவை 16 – ஆற்று ஆள்காட்டி (Vanellus duvaucelii) | முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவை 17 – காட்டுப் பஞ்சுருட்டான் (Blue-bearded Bee-eater) | முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவை 18 – கம்பிவால் தகைவிலான் Wire-tailed Swallow | முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவை 19 – உப்புக்கொத்தி Charadrius leschenaultia | முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவை 20 – நீலநிற ஈப்பிடிப்பான் (Cyornis tickelliae) | முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவை 21 – பூங்குருவி(Himalayan Forest Thrush) | முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவை 22 – நிக்கோபார் பருந்து(Accipiter butleri) | முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவை 23 – தவளைவாயன் | முனைவர். வெ. கிருபாநந்தினி