நூல் அறிமுகம்: உசுல பி.விஜயசூரியவின் ’அம்பரய’ தமிழில்: தேவா – A.காயத்ரி
இலங்கையைச் சேர்ந்த சிங்கள எழுத்தாளரான உசுல பி.விஜயசூரிய இந்நூலின் ஆசிரியர்.
தமிழில் : தேவா.
1970 களில் இலங்கையில் இப்புத்தகமானது வெளியிடப்பட்டது.
மீனவர்களின் வாழ்க்கை முறை, அவர்களின் மீன்பிடி முறை, நம்பிக்கை எல்லாவற்றையும் தெளிவாக சித்தரித்துக் காட்டியுள்ளார் ஆசிரியர். கதையில் வரும் சுமனே 17 வயது மீனவ சிறுவன். விடியலின் முதல் கீற்று படற தொடங்கும் போது அவன் கடற்கரையில் இருப்பான் ஏனென்றால் எப்போதுமே இலகுவாக கிடைத்து விடாத மீனாம்பலை தேடி. மீனாம்பல் என்பது திமிங்கலத்தின் கழிவு ஆகும் அது ஒரு சிறிய தூண்டின் விலை மிகப் பெரியதாகும் அதுதான் தன்னுடைய வாழ்க்கையின் கஷ்டங்கள் எல்லாவற்றையும் மாற்றும் என்று நம்பிக்கை கொண்டு விடாது ஒவ்வொரு நாளும் தேடிக் கொண்டே இருப்பான் அதனால் கிராமத்தில் உள்ளவர்கள் அவனை கேலியாக அம்பரைய என்று தான் அழைப்பார்கள். சுமன் மற்றும் அவனது இரண்டு தங்கைகள் வயது முதிர்ந்த பாட்டி ஆகியோரே குடும்பத்தின் உறுப்பினர்கள். வயதான பாட்டியையும் தன் தங்கைகளையும் நன்றாக பார்த்துக் கொள்ளும் கடமையும் பொறுப்பும் அவனுக்கு இருந்தது. தன்னுடைய தங்கைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்று உறுதி கொள்கிறான்.
தனக்குத் தெரிந்த மீன்பிடித்தொழில் மூலம் அன்றாட உணவுக்கு தேவையான வருமானம் ஈட்ட முயற்சிப்பான். அவனது மீன்பிடிமுறை மிகச் சாதாரணமானது ஆற்றினுள் இறங்கி அவன் சரி என நினைக்கும் இடத்தில் மரக்கிளைகளை அங்கும் இங்குமாக போட்டு வைப்பான் தாறுமாறான ஒரு கொக்கு கூடு போல் அது இருக்கும் அதன் நடுவே சோற்றை தூவி வைப்பான். ஏனென்றால் புண்ணாக்கு வாங்க அவனிடம் பணம் இருக்காது. இதில் கிழிந்த வலையில் தான் மீன் பிடிப்பான் அதுவும் யாரோ வேண்டாம் என்று தூக்கிப் போட்ட வலையை அவனது பாட்டி தைத்துக் கொடுப்பார். அந்த வலையே வைத்து தான் மீன் பிடித்து அந்த மீன்களை விற்று தினமும் சாப்பாட்டிற்கு வழி செய்வான். இவ்வாறு மீன்பிடித்தும் தேங்காய் புடுங்கியும் சிறுசிறு வேலைகள் செய்தும் வருமானம் ஈட்ட முயற்சிப்பான். ஆனாலும் அது அவர்களின்மூன்று வேளை உணவுக்கு கூட போதவில்லை.
அதனால் கூடுதலாக வருமானம் ஈட்ட சாராயம் கடத்த முற்படுகிறான். சாராயம் கடத்தி சிறை செல்கிறான். சிறை தண்டனையை அனுபவிக்கும் போது காவலாளி தண்டனை காலம் முடிந்து நீ விடுதலையான பின்பு என்ன செய்யப் போகிறாய் என்று சுமனிடம் கேட்கிறார். அதற்கு அவன் வீடு கட்ட போகிறேன் சகோதரிகளை படிக்கவைக்க போகிறேன், அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பேன், பாட்டியை பார்த்துக் கொள்வேன். என்று சொல்கிறான் அதற்கு காவலாளி இதற்கெல்லாம் எப்படி உழைக்கப் போகிறாய் என்று கேட்கும் பொழுது அதற்கு அவன் நான் எப்படியாவது ஆம்பல் கண்டெடுக்க வேண்டும் திரும்பவும் மீன்பிடிக்க வேண்டும் எனக்கு சொந்தமான நல்ல கூரை சுவர்கள் தரை என எல்லாம் உள்ள ஒரு வீட்டை சம்பாதிக்கும் வரை ஆம்பல் தேடுவதை நான் விடப் போவதில்லை என்கிறான். ஆம் அவனுக்குத் தெரிந்த வழிகளில் எல்லாம் அவன் முயற்சித்துக் கொண்டே இருந்தான் மூன்று வேளை உணவுக்காகவும் ஒரு நல்ல கூரை வீட்டிற்க்காக ஒவ்வொரு நாளும் வாழ்கையில் போராடிக் கொண்டே இருக்கிறான் ஏனென்றால் கிராமத்திலேயே அவனது வீடுதான் மிகப் பரிதாபமானது சித்தப்பாவின் வீட்டு சுவரோடு சாய்வாக இறக்கிய ஓலை கூரை. மூங்கிலான சுவர். கதவோ ஜன்னல்களோ இல்லை. மழை பெய்தால் கூரை ஒழுகும்.
எல்லோரும் ஒழுகாத இடத்தில் நெருங்கி இருப்பதை தவிர வேறு எதுவும் செய்ய முடியாது இதுவே அவனது வீட்டு நிலை. எனவே நல்ல கூரை உள்ள ஒரு வீடு என்பதே அவனது பெரும் கனவாக இருந்தது. தண்டனை காலம் முடிந்து விடுதலையான பின் சிறையில் ஓர் உயர் அதிகாரியின் உதவியால் படகும், வலையும் கிடைக்க பெறுகிறான். அதன் மூலம் மீன்பிடித் தொழிலில் நல்ல வருமானம் ஈட்டுகிறான். ஒருநாள் கிராமத்தை ஒட்டி உள்ள ப்ரீஸ் தோட்ட நிலம் மக்களுக்குபிரித்து பகிர்ந்து அளிக்க இருப்பதாக அறிகிறான் . ஆனால் அவனது பாட்டி வயது முதிர்ந்த காரணத்தாலும் சுமன் வயது குறைவாக உள்ள காரணத்தாலும் அவனுக்கு நிலம் கிடைக்கவில்லை எனவே அரசாங்கத்திற்கு கடிதம் எழுதுகிறான் அரசாங்கத்தின் உதவியால் எல்லோரும் வேண்டாம் என்று கழித்து விடப்பட்ட நிலத்தில் இரண்டு துண்டுகளில் ஒரு துண்டு நிலம் அவனுக்கு கிடைக்கிறது. இதுவரை அவன் சிறிது சிறிதாக சேமித்த பணத்தின் மூலம் பாதி வீட்டை கட்டி முடிக்கிறான் இந்நிலையில் அவனுக்கு ஒரு சில மருத்துவ காரணங்களால் உடல்நிலை சரியில்லாமல் போனபோது சேமிப்பில் இருந்த பணமும் செலவாகிறது. எனவே சுமன் தனக்கு வழங்கப்பட்ட கழிவு நிலத்தை சமப்படுத்தும் போது அதில் கிடைத்த மண்ணையும் கல்லையும் வைத்து வைத்து வீட்டை கட்டி முடிக்கிறான்.
பாட்டி சிறு சிறு செடிகளை நட்டு வீட்டை மேலும் அழகு படுத்துகிறாள். இப்போது கிராமத்திலேயே அவனது வீடு தான் மிகவும் அழகாக இருந்தது அவன் கண்ட கனவு இல்லம் நனவாகியது. அவனுக்கென்று இப்போது சொந்தமான படகும் மீன்பிடி வலையும் உள்ளது .
தன்னுடைய கடின உழைப்பால் அவன் தன்னுடைய கனவை நனைவாக்கினான் விடாமுயற்சி கடின உழைப்பு என்பது மீனவர்களுக்கே உரித்தான குணம் அதை கதையில் பல இடங்களில் காணலாம். சோர்ந்து போகும்போதெல்லாம் அதிலிருந்து மீண்டு வருவதற்கு அம்பரய புத்தகம் கற்றுக் கொடுத்தது நன்றி ஆசிரியர் அவர்களுக்கு.
தோழர் A.காயத்ரி
மூன்றாம் ஆண்டு,
மதுரை சட்டக் கல்லூரி.
நூல் : அம்பரய
ஆசிரியர் : உசுல பி.விஜயசூரிய
தமிழில்: தேவா
வெளியீடு : வடலி
விலை : ரூ. 115/-
பக்கம் : 175
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
bharathiputhakalayam@gmail.com


