லூலா வெற்றியின் முக்கியத்துவம் கட்டுரை – தமிழில் ச.வீரமணி

லூலா வெற்றியின் முக்கியத்துவம் கட்டுரை – தமிழில் ச.வீரமணி




பிரேசிலில் நடைபெற்ற ஜனாதிபதிக்கான தேர்தலில் லூயிஸ் இனாசியா லூலா (Luiz Inacio ‘Lula’ da Silva) வெற்றி பெற்றிருப்பது, உலகம் முழுவதும் ஒருவிதமான நிவாரணப் பெருமூச்சுடன் வரவேற்கப்பட்டிருக்கிறது. அதிதீவிர வலதுசாரியான ஜெயிர் போல்சனாரோ (Jair Bolsonaro)வைத் தோற்கடித்து பிரேசில் ஜனாதிபதியாக அவர் வென்றிருப்பது, பிரேசிலின் எதிர்காலத்தில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த லத்தீன் அமெரிக்க பிராந்தியத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

2022 அக்டோபர் 30 அன்று நடைபெற்ற தேர்தலில், லூலா, (PT) எனப்படும் தொழிலாளர் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு 50.9 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். அவரை எதிர்த்து நின்ற போல்சனாரோவிற்கு 49.1 விழுக்காடு வாக்குகள் கிடைத்துள்ளன. 1980களில் ஜனநாயகம் மீளவும் புதுப்பித்து சீரமைக்கப்பட்ட பின்னர் இப்போது நடந்துள்ள ஜனாதிபதி தேர்தலில் கடும் போட்டிக்கு இடையே 21,25,334 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். பதவியிலிருந்த ஒரு ஜனாதிபதி தேர்தலில் தோற்பது என்பதும் இதுவே முதல் தடவையாகும்.

முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையின்போதே லூலா எளிதாக வெற்றிபெற்றுவிடுவார் என்று தேர்தல் கணிப்பாளர்கள் பலர் முன்கூட்டியே ஊகித்திருந்தார்கள். அதேபோன்றே பல்வேறு ஆய்வுகளும், போல்சனாரோவைவிட லூலா இரண்டு இலக்க புள்ளிகள் முன்னணியில் இருப்பார் என்று காட்டின. எனினும், இக்கணிப்புகள் அனைத்தும் அக்டோபர் 2 அன்று நடைபெற்ற முதல் சுற்று முடிவின்போது தவறு என்று மெய்ப்பிக்கப்பட்டன. செல்லுபடியாகும் வாக்குகளின் எண்ணிக்கையில் போல்சானாரோ 43.20 விழுக்காடு வாக்குகளே பெற்றிருந்த அதே சமயத்தில், லூலா 48.43 விழுக்காடு பெற்று வென்றார். வெற்றி பெறும் வேட்பாளர் 50 விழுக்காடு வாக்குகளைப் பெறுவதில் தோல்வியடைந்ததால், இரண்டாம் சுற்று வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் லூலா 50.9வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

லூலா 2003க்கும் 2010க்கும் இடையே இரு தடவை பிரேசில் ஜனாதிபதியாக இருந்தார். இது அவருக்கு மூன்றாவது தடவை. இந்தத் தடவை அவருக்கு மிகவும் சவாலானதாக இருந்தது. ஏனெனில் இந்தக் காலகட்டத்தில் பிரேசில் கணிசமான அளவிற்கு மாறியிருக்கிறது.

லூலா முதல் தடவை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, பண்டங்கள் சந்தையில் ஓர் ஏற்றம் இருந்தது. இதன் காரணமாகத் தொழிலாளர் கட்சி அரசாங்கம் சமூக நலத் திட்டங்கள் பலவற்றைக் கொண்டுவந்து, பல லட்சக்கணக்கான பிரேசில் மக்களை, வறுமையின் கோரப் பிடியிலிருந்து மீட்டது. 2014 இறுதிக்குள், தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த லூலாவும் அவரைத் தொடர்ந்து அவருக்குப் பின்னே வந்த டில்மா ரூசூஃப் (Dilma Rousseff)-உம் சேர்ந்து பிரேசில் பசி-பட்டினிக் கொடுமையிலிருந்து விடுவிக்கப்பட்டதாகப் பிரகடனம் செய்தனர்.

இப்போது அந்த நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது. உணவு மற்றும் சத்துணவு இறையாண்மை மற்றும் பாதுகாப்பு மீதான பிரேசிலியன் ஆய்வு வலைப்பின்னல் (Brazilian Research Network on Food and Nutritional Sovereignty and Security) ஒன்றின்படி, 3 கோடியே 31 லட்சம் மக்கள் தற்போது பசி-பட்டினிக் கொடுமைக்கு ஆளாகி இருக்கிறார்கள், இது சென்ற ஆண்டைக் காட்டிலும் இரு மடங்காகும் என்றும் தெரிவிக்கிறது.

கோவிட்-19 பெருந்தொற்று ஏற்பட்ட சமயத்தில் பிரேசிலில் சுமார் 7 லட்சம் மக்கள் இறந்துவிட்டார்கள். இதற்கு ஆட்சிபுரிந்த போல்சனாரோவின் நிர்வாகச் சீர்கேடே காரணமாகும். கொரோனா வைரஸ் பெருந்தொற்று என்ற கூற்றையே போல்சனாரோ ஏற்க மறுத்தார். அதனால் அது பரவுவதைப்பற்றி அவர் கிஞ்சிற்றும் கவலைப்படாது இருந்தார். இதனால் நாட்டில் சுகாதார நெருக்கடியைக் கையாள முடியாத நிலை இயற்கையாகவே ஏற்பட்டது. அறிவியலை மறுத்த போக்கும், நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாக சுகாதாரச் செலவினங்களில் வெட்டை ஏற்படுத்தியதும் கோவிட்-19 கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் ஏற்பட்ட நெருக்கடியை அதிகரித்தது. அந்த சமயத்தில் தடுப்பூசிகள் உற்பத்தியிலும், அவற்றை விநியோகிப்பதிலும் நடைபெற்ற ஊழல்கள், அரசாங்கத்தின் மனிதாபிமானமற்ற குணத்தைத் தோலுரித்துக் காட்டின.

போல்சனாரோ பகுத்தறிவற்ற, அறிவியலற்ற நபர் மட்டுமல்ல, புவி வெப்பமயமாதலை மறுக்கின்ற நபராகவும் இருந்தார். இந்தப் பார்வைகளும் இதனுடன் கார்ப்பரேட் ஆதரவு நிலைப்பாடும் பிரேசிலின் பாதுகாப்பு வளையத்தை பலவீனப்படுத்த இட்டுச் சென்றன, மழை பெய்துவந்த அமேசான் காடுகள் பெரிய அளவில் எரியத் தொடங்கின. நடைபெறும் ஆபத்தை சூழலியல்வாதிகளும் (environmentalists), பசுமை செயற்பாட்டாளர்களும் (green activisits) விரிவான அளவில் எடுத்துச் சொல்லி இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தபோதிலும், இந்த நபர் அவற்றை யெல்லாம் காதில் போட்டுக்கொள்ளவே இல்லை. இந்த நிலங்கள் பெரும் வேளாண்-வர்த்தகக் கார்ப்பரேஷன்களுக்கும், பெரும் நிலப்பிரபுக்களுக்கும் விவசாயத்திற்காகத் திறந்து விடப்பட்டிருக்கின்றன.

அரசியல் அரங்கில், போல்சனாரோ ஜனநாயக உரிமைகள் மீது கொடூரமான தாக்குதல்களை ஏவினார். பிரேசிலில் முன்பிருந்தவந்த ராணுவ மற்றும் எதேச்சாதிகார ஆட்சிகளுக்கு வெளிப்படையாகவே ஆதரவினைத் தெரிவித்தார். தன்னுடைய பாசிஸ்ட் ஆதரவு கொள்கைகளை வெட்கமேதுமின்றி வெளிப்படையாகவே பறைசாற்றத் தொடங்கினார், தொழிற்சங்கங்களையும், பூர்வகுடி மக்களையும், பெண்களையும், பெரும்பான்மை இன மக்களிடமிருந்து வித்தியாசமான பாலியல் நடைமுறைகளைக் கடைப்பிடித்திடும் சிறுபான்மையினரையும் (sexual minorities) கடுமையாகத் தாக்கினார். கம்யூனிச விரோத, இடதுசாரிகள் விரோத சிந்தனைகளைக் கொண்டாடினார்.

இவருடைய அறிவியலற்ற, பகுத்தறிவற்ற, சிறுபான்மையினருக்கு எதிரான, கம்யூனிசத்திற்கு எதிரான நிலைப்பாடுகளின் காரணமாக இவர் சுவிசேஷ கிறித்தவர்களின் ஆதரவினைப் பெற்றிருந்தார். இவர்கள்தான் இவருடைய முக்கியமான ஆதரவு தளமாகும். பிரேசிலியன் அரசியலிலும் சமூகத்திலும் வலுவான பிற்போக்கு சக்தியாக விளங்கும் சுவிசேஷ கிறித்தவ போதகர்கள், போல்சனாரோவிற்குப் பின்னர் அணிதிரண்டிருந்தனர், அவருடைய அறநெறி நிலைப்பாடுகளுக்கு ஆதரவு அளித்தனர். இத்தகைய மதஞ்சார்ந்த வலதுசாரிகள் இடதுசாரிகளுக்கு எதிராகத் தீவிரமாக போதனைகள் செய்து வந்தார்கள். ‘லூலா ஆட்சிக்கு வந்தால் தேவாலயங்களையெல்லாம் மூடிவிடுவார்’ என்று கூறி வந்தார்கள். இந்தவகையில்தான் போல்சனாரோ வலதுசாரி சிந்தனாவாதிகளை அணிதிரட்டினார். அதன்மூலம் சமூகப் பிரிவுகளை ஆழமானமுறையில் ஏற்படுத்தி வந்தார்.

போல்சனாரோவின் ஆதரவுத் தளமாக சுவிசேஷ கிறித்தவர்கள் இருப்பதோடு அல்லாமல், நவீன தாராளமய, சந்தைப் பொருளாதாரக் கொள்கைகளைத் தீவிரமாக ஆதரித்திடும் உயர் வர்க்கத்தினர், வர்த்தகப் புள்ளிகள் மற்றும் பெரு முதலாளிகள் வர்க்கத்தினரும் அவரை ஆதரித்து வந்தார்கள். வேளாண கார்ப்பரேஷன்கள் மற்றும் பெரும் நிலப்பிரபுக்களும் இவருடன் இருந்தனர். இவ்வாறு போல்சனாரோவின் பின்னால் அனைத்துத் தீவிரவாத வலதுசாரிகளும் அணிவகுத்திருந்தனர். இவ்வாறு ஆளும் வர்க்கங்கள் மற்றும் தீவிர வலதுசாரிகளின் ஆதரவு போல்சனாரோவிற்கு இருந்ததன் காரணமாகத்தான் இவர்களின் ஆதிக்கத்தில் இருக்கும் ஊடகங்களும் இவருக்கு ஆதரவாக இருந்தன. இவர்கள் அனைவரும் சமூக ஊடகங்களையும் பயன்படுத்திக்கொண்டு, பொய் மூட்டைகளையும் பொய்ச் செய்திகளையும் பரப்பினர்.

இதற்கு நேரெதிராக, லூலாவிற்கோ சமூகத்தின் வறிய பிரிவினர் முழுமையாக ஆதரவு அளித்தனர். இவ்வாறு ஏழை மக்கள் முழுமையாக லூலாவுடன் இருப்பதால் பயந்துபோன போல்சனாரோ, குறைந்த வருமானம் ஈட்டும் குடிமக்களுக்கு நேரடியாக பணம் அளிக்கும் ஒரு சமூக நலத் திட்டத்தை ஆக்சிலியோ பிரேசில் (Auxilio Brasil) என்ற பெயரில் கொண்டுவந்து அவர்களை வென்றெடுத்திட முயற்சித்தார். கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றுக் காலத்தில் போல்சனாரோவின் அரசாங்கம் அதனைக் கட்டுப்படுத்துவதில் முழுமையாகத் தோல்வியடைந்து, அனைத்துத்தரப்பினராலும் கடும் விமர்சனத்திற்கு உள்ளான நிலையில் ஒரு குறுகியகாலத் திட்டமாக இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது. எனினும் இந்தத் திட்டமானது மக்கள் மத்தியில் வரவேற்பைப்பெற்று ஏழை மக்கள் மத்தியில் இருந்த லூலாவின் ஆதரவு தளத்தில் சற்றே சரிவை ஏற்படுத்தியதால், போல்சனாரோ இத்திட்டத்தைத் தொடர்ந்தார்.

இவ்வாறான அனைத்து முயற்சிகளின் விளைவாகவும், போல்சனாரோ லூலாவிற்கு கடும் போட்டியை இப்போது நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களில் அளித்தார். மேலும் போல்சனாரோ வலதுசாரி சக்திகள் மற்றும் மத்தியக் கட்சிகளின் (centre parties) ஆதரவுடன் நாடாளுமன்றத்திலும் (Congress), ஆளுநர்களுக்கான தேர்தல்களிலும் (governorships) மற்றும் பிராந்திய அளவிலான சட்டமன்றங்களிலும் (regional assemblies) (இவை அனைத்துக்கும் ஜனாதிபதிக்கான தேர்தலுடன், முதல் சுற்றுக்கான தேர்தல்கள் நடைபெற்றன.) பெரும்பான்மை பெறவும் இட்டுச் சென்றது. போல்சனாரோ மொத்தம் உள்ள 27 மாநிலங்களில் 14இல் வெற்றி பெற்றுள்ளார். நாடாளுமன்றத்தில் (Congress) வலதுசாரிக் கட்சிகள் தங்கள் பிரதிநிதித்துவத்தை (மொத்தம் உள்ள 513 இடங்களில்) 249 இடங்களை (இது பாதிக்குச் சற்றே குறைவு) அதிகரித்துக்கொண்டுள்ளன. லூலாவின் தொழிலாளர் கட்சிக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் 141 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன.

இவ்வாறு வலதுசாரிகள் பிரதிநிதித்துவம் சட்டமன்றங்கள், நாடாளுமன்றத்தில் வலுவாக உள்ளதால் லூலா தன் நிகழ்ச்சிநிரலை அமல்படுத்துவதை சிரமத்திற்கு உள்ளாக்கி இருக்கின்றன. இவர் ஆட்சி புரியும் காலத்தில் இவர்களுடன் சில சமரசங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கலாம்.

லூலா வெற்றி பெறுவதற்காக ஏற்கனவே சில சமரசங்களைச் செய்துகொண்டிருக்கிறார். இவர் தேர்தல் பொதுக்கூட்டங்களில் உரையாற்றும்போது சுவிசேஷங்களில் உள்ள போதனைகளிலிருந்தும், கடவுள் குறித்தும் சுவிசேஷ கிறித்துவர்களைத் திருப்திப்படுத்தும் விதத்தில் சில வேண்டுகோள்களை விடுக்க முயற்சித்தார். இவருடைய துணை ஜனாதிபதிக்கான வேட்பாளர், ஜெரால்டோ அல்க்மின் (Geraldo Alckmin), இவருடைய முன்னாள் போட்டியாளர் மற்றும் மத்தியக் கட்சியின் (Centre Party) தலைவர். லூலாவின் கூட்டணி, கம்யூனிஸ்டுகள், சோசலிஸ்டுகள், தாராள-முதலாளிகள் (liberal-bourgeois) என அனைத்துத்தரப்பினரையும் உள்ளடக்கியுள்ளது. இவர்கள் அனைவரும் ‘ஜனநாயகத்தைப் பாதுகாப்போம், வலதுசாரிகள் வளர்ச்சியை முறியடிப்போம், அமேசான் காடுகளைப் பாதுகாப்போம் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்’ என்கிற ஒரு பொதுவான குறிக்கோளுடன் இணைந்துள்ளனர்.

லூலாவின் வெற்றி பிரேசில் முழுவதும் உள்ள ஏழை மக்களால், ‘சுதந்திரமும் ஜனநாயகமும் மீளவும் கிடைத்துவிட்டது’ என்கிற உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. அவரே, இந்த வெற்றியை ஜனநாயக இயக்கத்திற்குக் கிடைத்த வெற்றி எனக் கூறியிருக்கிறார். அவர், வறுமை, பசி-பட்டினிக் கொடுமை, குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரித்தல் மற்றும் அமேசான் காடுகள் அழிக்கப்படுவதிலிருந்து அதனைப் பாதுகாத்தல் ஆகிய பிரச்சனைகள் உடனடியாக கவனம் செலுத்தப்படும் என்று உறுதிமொழியை அளித்திருக்கிறார்.

லத்தீன் அமெரிக்காவில் இடதுசாரித் தலைவர்களின் ஆட்சி அதிகரித்துக் கொண்டிருப்பது, உலகத் தலைவர்களை ஜனாதிபதி லூலாவை வாழ்த்துவதற்கு இட்டுச் சென்றுள்ளன. இவருடைய வெற்றி நிச்சயமாக ‘பிரிக்ஸ்’ (‘BRICS’), (இதில் இந்தியாவும் ஓர் அங்கம்) மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள ‘செலாக்’ (CELAC) போன்ற பன்னாட்டுக்குழுக்களுக்கும் புதியதொரு நம்பிக்கையைக் கொண்டுவரும்.

இப்போது நடைபெற்ற தேர்தல்களில் போல்சனாரோ தோற்கடிக்கப்பட்டபோதிலும், அவர் பெற்றுள்ள வாக்குகளிலிருந்து சாமானிய மக்கள் மத்தியில் வலதுசாரி சித்தாந்தம் எந்த அளவிற்கு வேரூன்றியிருக்கிறது என்பதைத் தெளிவாகக் காணமுடிகிறது. லூலா நிர்வாகம், தான் அளித்திட்ட தேர்தல் உறுதிமொழிகளை அமல்படுத்தத் தவறினால், ஜனநாயகத்தை மீட்டெடுக்கத் தவறினால், மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கத் தவறினால், பசி-பட்டினிக் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறினால், வலதுசாரிகள் மீளவும் தலைதூக்குவதற்கு இருக்கின்ற அச்சுறுத்தலைத் தடுக்க முடியாது.

(நவம்பர் 2, 2022)
நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி