Books in my life by Pavannan book review by S.Jayasri பாவண்ணனின் என் வாழ்வில் புத்தகங்கள் நூல் அறிமுகம் எஸ்.ஜெய ஸ்ரீ

நூல் அறிமுகம்: பாவண்ணனின் என் வாழ்வில் புத்தகங்கள்- எஸ்.ஜெயஸ்ரீ



வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டும் புத்தகம்

இன்றைய சூழ்நிலையில் கல்விக்கூடம் என்பது மாணவமாணவிகளை வெறுமனே பாடங்களை உருவேற்றி மதிப்பெண் என்னும் சூழலுக்குள் தள்ளும் இடமாக மாறிவிட்டது. வாசித்தல் வகுப்பு, நூலக வகுப்பு என்பதெல்லாம் மலையேறிப் போய்விட்ட காலமாகிவிட்டது. கணினி யுகத்தில் கற்றுக்கொள்வதற்கும் தெரிந்துகொள்வதற்குமான வழிமுறைகள் கணக்கற்ற அளவில் பெருகிவிட்டன. டிஜிட்டல் வழியாகவே வாசிக்கும் வழக்கமும் வளர்ந்துவிட்டது. பல பக்கங்கள் உள்ள புத்தகங்களைக்கூட கைப்பேசியிலோ, கணினியிலோ, கிண்டில் எனப்படும் கைப்புத்தகத்தில் சேமித்துவைத்துக்கொண்டு வாசிக்கமுடிகிறது. ஆனால் புத்தகங்கள் கிடைப்பதே அரிதான ஒரு காலத்தில், கிடைத்தாலும் பணம் கொடுத்து வாங்கமுடியாத நெருக்கடியான சூழலில் புத்தகங்களைத் தேடித்தேடி வாசித்த இளமைக்காலத்து அனுபவங்களை நாமும் அறிந்துகொள்வதற்கு ஏதுவாக புத்தகமாக எழுதியிருக்கிறார் பாவண்ணன்.

என் வாழ்வில் புத்தகங்கள் என்ற பாவண்ணனின் சமீபத்திய புத்தகம் வழியாக, அவர் படித்துக் கடந்த பால்யகால நாட்களை நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது. வாசிப்பின் வளர்ச்சியும் ரசனையும் ஒருவரிடம் சி/றிய வயதிலிருந்து படிப்படியாக எப்படி அழகாக வளர்கிறது என்பதையும் உணர்த்துகிறது.

‘விளையும் பயிர் முளையிலேயே தெரியும்’ என்பது பழமொழி. பாவண்ணன் சிறந்த எழுத்தாளராகவும் தான் படித்த புதிய சிறந்த புத்தகங்களை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துபவராகவும் இருக்கிறார். ஒரு பாடகர் சிறந்த பாடகராக வேண்டுமெனில் நன்றாக சாதகம் செய்யவேண்டும். கைவேலையோ, கைத்தொழிலோ சிறப்பாகச் செய்யவேண்டுமெனில் அதில் நல்ல முறையான பயிற்சி வேண்டும். மண்பாண்டம் செய்வது அவ்வளவு எளிதல்ல என்பது, குயவரின் சுற்றும் சக்கரத்தில் கைவைத்துப் பார்த்தால்தான் தெரியும். இயற்கையிலேயே சில பண்புகளும் திறமைகளும் சிலரிடம் அமைந்துவிடுவதுண்டு. அதைக் கண்டறிந்து, ஊக்கமூட்டி, சரியாக முறைப்படுத்தி வழிநடத்த ஒரு குருவும் கிடைத்துவிட்டால் அது ஒருவர் பெற்ற நற்பேறு.

பாவண்ணனுக்கு இயல்பிலேயே படிக்கும் ஆர்வமும் எழுதும் ஆர்வமும் அமைந்துவிட்டிருக்கின்றன. அவற்றைத் தூண்டிவிட்டு ஒளிரச் செய்யும் ஆசிரியர்களும் நூலகர்களும் அவருடைய வாழ்வில் அமைந்திருக்கிறார்கள். அவர்களைப்பற்றிய அக்காலத்து நினைவுகளை இப்புத்தகத்தின் வழியாக பாவண்ணன் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறார். நவநீதம் டீச்சர், கண்ணன், ராமனாதன், ரங்கநாதன் என பல ஆசிரியர்களைப்பற்றி நாமும் அறிந்துகொள்ள அவருடைய கட்டுரைகள் உதவியாக அமைந்துள்ளன. சிறுவனாக இருக்கும்போது படக்கதைகள், காமிக்ஸ் என்று ஆரம்பித்து அம்புலிமாமா, துப்பறியும் கதைகள் என வளர்ந்து சரித்திர நாவல்கள், மற்றைய இலக்கியங்கள் என அடுத்தடுத்து சுவை மாறுபட்டு வாசிக்கும் புள்ளியை வந்தடைந்த விதத்தை இயல்பாகவும் மிக அழகாகவும் இப்புத்தகத்தில் பாவண்ணன் பதிவு செய்திருக்கிறார்.

பள்ளிக்கூட ஆசிரியர்கள் பிள்ளைகளுக்கு கதைகளையும் பாட்டுகளையும் சொல்லி அவற்றில் ஆர்வத்தை வளர்த்தெடுத்திருக்கிறார்கள். மாணவர்களை தன்னம்பிக்கையுடன் பேச வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு அனுபவத்தையும் தனித்தனி காட்சியாக எழுதியிருக்கிறார் பாவண்ணன். ‘வாலு போச்சு, கத்தி வந்தது டும்டும்டும்’ என்ற பாடலை ஆசிரியர் வகுப்பில் சொல்லிக் கொடுத்தபோதே, அதை சுவாரசியமாகச் சொல்லித் தந்ததை பதிவு செய்திருக்கும் விதத்தைப் படிக்கும்போது, நாமும் அவரோடு வகுப்பில் சேர்ந்து உட்கார்ந்து படிக்கும் உணர்வும் குதூகலமும் தன்னிச்சையாக ஏற்படுகின்றன. அதுபோன்ற ஆசிரியர்களிடம் சென்று மீண்டும் படிக்கமாட்டோமா என்னும் ஏக்கத்தையும் ஏற்படுத்துகிறது.

எல்லாக் காலத்திலும் இலக்கணம் என்றாலே கசப்பாக உணர்பவர்களே மிகுதி. ஆனால் தளை பிரித்தல் என்னும் கடினமான இலக்கண வகையை தம் காலத்தில் ஆசிரியர் எவ்வளவு சுவைபட புரியவைத்தார் என்பதை பாவண்ணன் விவரித்திருப்பதைப் படிக்கும்போதே சுவையாக இருக்கிறது. ஒரு திரைப்படத்தின் பெயரைச் சொல்லவைத்து, அதைத் தளைபிரித்து புரியவைத்திருக்கிறார் ஆசிரியர். இப்படி புரியவைக்கப்படும் பாடங்களும் விஷயங்களும் எந்தக் காலத்திலும் மறந்துவிடாத அளவுக்கு நெஞ்சில் ஆழமாகப் பதிந்துவிடுவது இயற்கையே. இப்படியெல்லாம் பணியாற்றிய ஆசிரியர்களை நினைத்தாலே மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது.

ஒருமுறை பள்ளியில் நடைபெற்ற ஓவியப்போட்டியில் பாவண்ணனுக்கு பரிசு கிடைக்கிறது. அவரிடம் காணப்படும் ஓவியத்திறமையை அறிந்துகொண்ட ஓவிய ஆசிரியர் மேலும் மேலும் பல சுவடிகளை பாவண்ணனிடம் கொடுத்து வரைந்து பழக ஊக்கப்படுத்துகிறார். இப்படி ஒரு கட்டுரை நீண்டு செல்கிறது. ஒருமுறை பாவண்ணன் தான் எழுதிய கவிதையை தன்னுடைய ஆசிரியரிடம் காட்டுகிறார். அதைப் படித்த ஆசிரியர் அவருக்குள் முளைவிடும் எழுத்தார்வத்தைப் புரிந்துகொள்கிறார். தன் அறைக்கு வரவழைத்து பிழைகள் திருத்தி மேலும் எழுத ஊக்கப்படுத்துகிறார். இப்படி ஒரு கட்டுரை விரிந்துசெல்கிறது. புத்தகம் படிக்கும் ஆர்வம் இருப்பதை அறிந்துகொள்ளும் ஆசிரியர்கள், தம் வீட்டுக்கே வந்து புத்தகங்களைப் படிக்கவும், வீட்டுக்கு எடுத்துச் சென்று படிக்க அனுமதித்தும் உற்சாகப்படுத்துகிறார்கள். இப்படியும் சில கட்டுரைகள் உள்ளன. ஒவ்வொரு கட்டுரையும் ஒரு புதிய உலகத்தை அறிமுகம் செய்துகொண்ட விதத்தை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறது.

ஆசிரியர்கள் வழியாக புத்தகங்களைப்பற்றித் தெரிந்துகொண்டு, அவர்களுடைய வழிகாட்டலின்படி நூலகத்துக்குச் சென்று புத்தகம் படிக்கும் வழக்கத்தை வளர்த்துக்கொண்ட விதத்தை, இந்த நூல்முழுதும் சின்னச்சின்ன காட்சிச்சித்திரங்களாக வடித்திருக்கிறார் பாவண்ணன். அவர் குறிப்பிடும் நூலகரான பாண்டியன் அண்ணன் என்பவர்தான் எவ்வளவு அருமையான மனிதர். ஒரு சிறுவன் ஆர்வமாகப் படிக்கிறான் என்பதைத் தெரிந்துகொண்டு, அவன் வாசிக்க ஏற்ற வகையில் அடுத்தடுத்து நல்ல நூல்களை எடுத்துக்கொடுத்து படிக்க வைப்பதில் அவர் காட்டும் ஈடுபாடும் ஆர்வமும் மிகமுக்கியமானவை. ஒரு சிற்றூரில் இப்படிப்பட்ட எளிய வழிகாட்டல்கள் ஒருவருடைய வாழ்வில் மகத்தான மாற்றங்களையும் விளைவுகளையும் உருவாக்கும் தன்மையுடையவை என்பதற்கு பாவண்ணனின் புத்தகம் ஒரு சாட்சியாக விளங்குகிறது.

தம் வீட்டுக்கு அருகில் வசித்த அக்காமார்களைப்பற்றிய பாவண்ணனின் சித்தரிப்பு மனநெகிழ்ச்சியை அளிக்கிறது. அவர்கள் படிப்பார்வம் நிறைந்தவர்களாக இருக்கிறார்கள். பள்ளிக்கூடங்களில் நன்றாகப் படிக்கிறார்கள். பத்திரிகைகளையும் புத்தகங்களையும் வாங்கி வரச் சொல்லி ஆர்வமுடன் படிக்கிறார்கள். திருமணம் முடிவானதுமே எல்லாவற்றிலிருந்தும் விடுபட்டு, புதிய வேறொரு ஆளாக புகுந்த வீட்டுக்குச் செல்லவேண்டிய நெருக்கடிக்கு ஆளாகிறார்கள். தாமாக எந்த முடிவையும் எடுக்கமுடியாத சூழலிலும் தமக்கென எந்த விருப்பத்தையும் சொந்தமாக வைத்துக்கொள்ள முடியாத சூழலிலும் வாழ்ந்த அக்காலத்துப் பெண்களின் வாழ்க்கையை ஒரு குறுக்குவெட்டுச் சித்திரமாக பாவண்ணனின் கட்டுரையில் காணமுடிகிறது. ஒரு காலகட்டத்துச் சூழலை உணர்த்தும் ஒரு முக்கியமான சமூக ஆவணம் என்றே அக்கட்டுரையைக் கருதலாம்.

அடுத்த வீட்டு அக்காவுக்குக் குற்றேவல் செய்யும் சிறுவனாக இருந்த காலத்தில் அவருக்காக கடைக்குச் சென்று பத்திரிகைகளும் புத்தகங்களும் வாங்கி வந்து கொடுத்த அனுபவத்தைப்பற்றிய நினைவலைகள் சுவாரசியான பதிவாக இருக்கின்றன. அவற்றை வாங்கிவரும் வழியிலேயே வேகவேகமாக புரட்டிப் படிக்கும் தருணத்தைப்பற்றிய சித்தரிப்பு உயிரோட்டமுடன் உள்ளது. திருமணம் நிச்சயிக்கப்பட்டதும் தம்மிடம் இருக்கும் புத்தகங்களையெல்லாம் கடைக்குப் போடச் சொல்லி அந்த அக்கா கொடுப்பதும், அவற்றையெல்லாம் அக்காவின் அனுமதியுடன் அச்சிறுவன் தன் வீட்டுக்கு எடுத்துச் சென்று படிப்பதும் ஒரு சிறுகதைக்குரிய திருப்பத்துடன் அமைந்துள்ளது. ( பெரிய எழுத்தாளரான போது, இதுதான் பெண்களின் நிலைமை என்று உணர அவர் மனத்தில் படிந்திருக்கும் இப்படிப்பட்ட பல நிகழ்ச்சிகளே தூண்டுகோலாக அமைந்திருக்கும் என்று தோன்றுகிறது )

இந்தப் புத்தகத்தை வாசிக்கும் நடுவயதுக்காரர்கள் ஒவ்வொருவரும் தம் பள்ளிநாட்களின் நினைவுகளில் மூழ்குவது உறுதி. சிறுவர்கள் வாசித்தால், அவர்கள் சுவாரசியமான பல பாடல்களையும் கதைகளையும் தெரிந்துகொள்ளலாம். நூலகத்துக்குச் செல்லும் ஆர்வமும் ஏற்படக்கூடும். பள்ளி ஆசிரியர்கள் படித்தால், எப்படி மாணவர்களை உருவாக்கலாம் என்ற புதிய யோசனை பிறக்கலாம். பெற்றோர்கள் வாசித்தால் குழந்தைகளின் வாசிப்புப்பழக்கத்தை எப்படி ஆற்றுப்படுத்தலாம் என்ற யோசனை பிறக்கலாம். இந்த வகைகளையெல்லாம் கடந்த புதியவிதமான வாசகர்களுக்கோ, இப்படியெல்லாம் ஆசிரியர்களும் நூலகர்களும் இந்த மண்ணில் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை அறிந்து வியப்பு உருவாகலாம்.

இலக்கியம் என்பது முற்றிலும் புதிய ஓர் உலகமென்றும் வாழ்க்கைக்கும் அதற்கும் தொடர்பில்லை என்றும் நினைப்பவர்களின் எண்ணத்தை இப்புத்தகத்தில் பாவண்ணன் விவரிக்கும் ஒரு நிகழ்ச்சி கலைத்துப்போட்டுவிடுகிறது. இரண்டும் வேறுவேறல்ல என்பதையும் இலக்கியத்தையும் வாழ்க்கையையும் இணைத்துப் புரிந்துகொள்ளவோ அல்லது இலக்கியத்தின் மூலம் வாழ்க்கையைப் புரிந்துகொள்ளவோ முடியும் என்பதை உணர்த்தும் ஒரு சிறிய எடுத்துக்காட்டாக இந்நிகழ்ச்சி அமைந்துள்ளது. ஒருநாள் அவருடைய தந்தையார் ஒரு பிச்சைக்காரனை ஆதரித்து உதவி செய்கிறார். கு.அழகிரிசாமியின் ‘ராஜா வந்திருக்கிறார்’ சிறுகதையை வாசிக்கும்போது அந்தப் பழைய நிகழ்ச்சியை நினைத்துக்கொள்கிறார். இரண்டையும் இணைத்துப் பார்க்கும் சிறுவனின் மனம் ‘ஒரு மனிதர் காசில்லாமல் கூட வாழலாம். ஆனால் கருணையில்லாமல் வாழமுடியாது’ என்னும் எண்ணத்தை அடைகிறான். அடுக்கடுக்கான இந்தத் தளமாற்றத்தைப் படிக்கும்போது மனம் சிலிர்ப்படைகிறது. இதுதான் இலக்கியம். அது நேரிடையாக எதையும் சொல்வதில்லை. உணரவைக்கிறது.

பாவண்ணன் பஞ்சுமிட்டாய் என்னும் குழந்தைகள் இதழுக்காக தொடர்ந்து எழுதிவந்த கட்டுரைகளின் தொகுப்பே இந்தப் புத்தகம். ஒருபுறம் பாவண்ணனின் பள்ளிக்கூட நாட்களின் சுயசரிதையைப்போல இயல்பாக இருக்கிறது. மறுபுறம் படிப்படியாக இலக்கிய ரசனையின் வளர்ச்சியை, அவருடையதாக மட்டுமல்லாமல், வாசகருக்கும் கடத்துகிறது. வாசிப்பின் மீதான ஆர்வத்தை வளர்க்கும் விதமாக இத்தொகுப்பைக் கொண்டுவந்துள்ள பாவண்ணனும் சிறப்பாக வெளியிட்டிருக்கும் சந்தியா பதிப்பகத்தாரும் பாராட்டுக்குரியவர்கள்.

என் வாழ்வில் புத்தகங்கள் – பாவண்ணன்
கட்டுரைத்தொகுதி.
சந்தியா பதிப்பகம்,
53 வது தெரு, 9 வது அவென்யு,
அசோக் நகர்,
சென்னை -83.
விலை. ரூ.180