Posted inPoetry
தீர்வு தினம் கவிதை – மு.ராம்குமார்
நுரை பொங்கும்
மலக்குழியில் மிதக்கிறது ஒரு முகம்
நேரம் கடந்தும் ஓடுகின்றன பலரின் கால்கள்
ஒட்டியிருக்கும் தேகங்களின் வியர்வை கொண்டு
வானுயர்கின்றன கோபுரங்கள்
புத்தகம் ஏந்த வேண்டியவை
செங்கல்லை சுமக்கின்றன
பிஞ்சுக் கையெல்லாம் பீடிக் கட்டை
சுருட்டுகிறது
வறண்ட நாட்களில் கூட
வற்றிய பயிர்களால் வயல்கள்
செழிக்கின்றன இப்படி
நேரமின்றி
இயந்திரத்தைப் போல உழைக்கும்
அவர்களைக்கண்டு பெயரிடப்படாத
மற்ற நாட்கள் சிரிக்கின்றன
பொழுதெல்லாம் போராட்டம்
தீராத புலம்பல்கள்
வந்து சேரா ஊதியங்கள் என
நாளெல்லாம் வதைபடுவோருக்கு
தனி தினம் ஏது
வாழ்வில்
தீர்வு வரும் தினம் எது
மு.ராம்குமார்
கல்லூர்