அகழாய்வென்பது பண்பாட்டு வரலாற்றின் கூர்முனை – சு. வெங்கடேசன் எம் பி

அகழாய்வென்பது பண்பாட்டு வரலாற்றின் கூர்முனை – சு. வெங்கடேசன் எம் பி




கீழடி விவகாரத்தில் மத்திய அரசு பிடிவாதமாக இருப்பது ஏன்? : உயர்நீதிமன்றம் |  Why is the central Government stubborn in the Keeladi excavation matter ? :  HC | Puthiyathalaimurai - Tamil News ...

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு (2014-15) கீழடியில் அகழாய்வுக்கான தொல்நிலம் ஒன்றினைக் கண்டறிந்து அங்கே அகழாய்வுப் பணியினை அமர்நாத் இராமகிருஷ்ணன் குழு தொடங்கிய காலம்.

தொடக்கத்தில் நானும் நண்பர்களும் மாதத்திற்கு ஓரிரு நாள்கள் அங்கு போய்வரத்தொடங்கினோம். ஒரு கட்டத்தில் மாதத்தில் பாதி நாள்கள் அங்கே கிடப்பது போலானது.

மதுரை எனும் வசீகர நிலத்தின் வாசல் திடீரென மண்ணுக்குள் திறந்தது. “மண்மூடிப்போக” என்ற சாபம்தான் இது வரை கேள்விப்பட்டதுண்டு. ஆனால் மண்மூடிகிடக்கும் வளத்தை தோண்டத்தோண்டப் பார்த்து பூரித்தோம்.

தொல்லியல், வரலாறு, இலக்கியம் என எல்லாவற்றையும் நேரங்காலம் அறியாது அகழாய்வு குழிகளின் ஓரம் நின்று நாட்கணக்கில் பேசினோம்.

முதலில் இந்து தமிழ் திசை நாளிதழிலும் பின்னர் ஆனந்தவிகடனிலும் கீழடி பற்றி எழுதத் தொடங்கினேன்.
கீழடி பற்றிய உண்மைகள் சிறிது சிறிதாக வெளிஉலகிற்குத் தெரியத் தொடங்கியது.

அதன் பிறகு காட்சிகள் மாறத் தொடங்கின.புதையுண்ட இடத்தை மீண்டும் புதைக்க நினைக்கும் செயல்பாடு தொடங்கியது. அரசியல் வெளியில் கீழடி இயங்கத் தொடங்கியது. அகழாய்வைக் கைவிட நினைத்தவர்கள் அது முடியாது என்ற நிலையில் அமர்நாத் இராம கிருஷ்ணனை அசாமிற்கு அனுப்பினர். பின்னர் ஒருவரை நியமித்து “அங்கு எதுவுமில்லை” என்று அறிக்கை கொடுத்தனர். சட்டமன்றம், நாடாளுமன்றம், நீதிமன்றம் என்று அனைத்து மன்றங்களும் கீழடிக்கான போராட்டக்களங்களாக மாறின.

எண்ணிலடங்காப் பொழுதையும் பணியையும் இதன் பொருட்டு செலவழித்தவர்கள் பலர். அவற்றில் முதன்மையானவர் அமர்நாத் இராமகிருஷ்ணன். தனது அலுவல்தொழில் சார்ந்தே இந்த ஆய்வில் அவர் ஈடுபட்டார். ஆனால் அதில் ஓர் அநீதி இழைக்கப்பட்ட போது அதனை அவர் எதிர்கொண்ட முறையும் அதன் பொருட்டு அவர் அடைந்த துயரமும் மிகப்பெரியது. என்றும் போற்றுதலுக்குரியது.

கீழடியில் தமிழ்நாடு அரசு அருங்காட்சியகம் திறக்கப்பட்ட நாளில் தனது அகழாய்வு அறிக்கையின் நகல் ஒன்றினை எனது பார்வைக்குத் தந்தார். அதனை வாங்கி சில நிமிடங்கள் மட்டுமே கையில் வைத்திருக்க முடிந்தது. இந்த உண்மைகளை உலகிற்கு சொல்லத்தான் இவ்வளவு பாடு. உண்மைகள் எழுத்தாக உருப்பெறும் போதே ஆற்றலின் வடிவங்கொள்கிறது.

ஒன்றிய அரசின் தொல்லியல் துறை இவ்வாய்வறிக்கையை வெளியிடும் நாளுக்காக காத்திருக்கிறேன். விரைந்து வெளியிட வேண்டுமெனக் கோருகிறேன்.

சங்ககால மதுரை என்பது இன்றைய மதுரைக்கு கிழக்கே திருப்புவனம் பக்கம் இருக்கலாம் என்று 1960 களில் பேரா. மா. இராசமாணிக்கனார் எழுதினார்.

அவர் சுட்டிய திசையில் 2015 ஆண்டு அகழாய்வு நிகழ்த்திய அமர்நாத் இராமகிருஷ்ணன் சங்ககால நகரமொன்றினைக் கண்டறிந்து கொடுத்துள்ளார்.

இதுதான் பழைய மதுரையா அல்லது மதுரையையொட்டிய இன்னொரு நகரமா அல்லது மதுரையின் புறப்பகுதியா என்ற எண்ணற்ற வினாகள் எழுந்து நிற்கின்றன. ஆய்வின் முதற்பணி விடையை அறிவதன்று; வினாவை உருக்கொள்ளச்செய்வதே. கீழடி அகழாய்வு பல வினாக்களை உருக்கொள்ளச்செய்திருக்கிறது.

அதே நேரம் பல விடைகளை தெளிவுபடுத்தியும் இருக்கிறது. புரானீக கட்டுக்கதைகளையே வரலாறென நிறுவும் ஒன்றிய அரசின் முயற்சி தமிழ் மண்ணில் எடுபடாது. “இலக்கியமும் அகழாய்வும் இவ்வளவு இறுக்கமாக கைகுலுக்கும் இடம் வேறெதுவுமில்லை” என்று ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன் கூறுவது பேருண்மை.

வளமான சங்க இலக்கியச் சான்றும் பல்லாயிரக்கணக்கான தொல்லியல் எச்சங்களும் ஒருங்கே கைகூடி இருக்கும் கீழடி எமது செம்மார்ந்த மரபையும் தனித்துவத்தையும் உலகிற்கு பறைசாற்றுகிறது.

மதுரையும் வைகையும் எமது மொழியின் முதுசொல்கள். அவை இன்னும் பல அறிஞர்களின் ஆய்வினூடே பற்பல வியப்புகளை நோக்கி நம்மை அழைத்துசெல்வன. அருங்காட்சிகள் வரலாறு நெடுகிலும் நமக்காக காத்திருக்கின்றன.

சு. வெங்கடேசன் எம் பி

நூல் அறிமுகம்: சு.வெங்கடேசனின் வைகை நதி நாகரிகம்! – இரா.சண்முகசாமி 

நூல் அறிமுகம்: சு.வெங்கடேசனின் வைகை நதி நாகரிகம்! – இரா.சண்முகசாமி 




அணிந்துரை : தமுஎகசவின் மிகப்பெரிய ஆளுமை தோழர் ச.தமிழ்ச்செல்வன் அவர்கள்.

நிறைய தொல்லியல் ஆவணங்களை வரலாற்றுத் தரவுகளுடன் 19 தலைப்புகளில் மிகவும் அருமையாக பதிவு செய்துள்ளார் தோழர் சு.வெங்கடேசன் அவர்கள்.

இறுதியாக ஒன்றிய அரசு கீழடியை மூடி மறைக்கிற வேலைகளை செய்த தகிடுதத்தங்களை அம்பலப்படுத்திய எழுதிய கட்டுரைகள் பகீர் என்கிறது. வடமாநில ஆய்வுகளுக்கு, இல்லாத சரஸ்வதி நதியை தேடுவதற்கு, ராமாயண கண்காட்சிக்கு என அதிக நிதியை ஒதுக்கிய ஒன்றிய அரசு கீழடியில் கிடைத்த பொருட்களை கரிம ஆய்வு செய்வதற்கு கிடைத்த நிறைய பொருட்களில் இரண்டே இரண்டை மட்டும் அமெரிக்காவுக்கு ஏனோ தானோ என்று அனுப்பியது இப்படி நிறைய பித்தலாட்டங்களை தோலுரித்துக் காட்டியுள்ளார்.

‘கீழடியை மூடி மறைக்கிறான் அநியாயமய்யா
வந்தேறி நாட்டை கெடுக்கிறான் அவமானமய்யா’ என்கிற சங்கத்தலைவனின் பாடல் வரிகள் தான் உடனே நினைவுக்கு வந்தது.

வைகை நதிக்கரையின் நகர நாகரிகத்திற்கு மிகுந்த எடுத்துக்காட்டுகளை வழங்கிய விதம் அப்பப்பா அருமை!

கண்ணகி வாழ்ந்த ஊர் கடை சிலம்பு ஏந்தல் (கடைச்சநேந்தல்), தேனூர், அந்த நரி (அந்தனேரி), வெம்பூர் (குத்துக்கல்), புலிமான்கோம்பை (புள்ளிமான்கோம்பை), அழகன்குளம் இப்படி ஏராளமான தரவுகளை வாரி வழங்கியிருக்கிறார்.

அரசியல் காரணங்களால் வடஇந்திய தொடர்புகள் அறுபட்ட நிலையில் ரோமானியர்கள் கடல்வழியைக் கண்டறிந்து மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் யவனர்களாக வாணிபம் செய்தது, அதற்கான சான்றுகளாக நிறைய ரோமானிய நாணயங்கள் வைகை நதிக்கரை ஓரம் கிடைத்தது இப்படி ஏராளம் அரிய காட்சிகளை படம் பிடித்துக் காட்டுகிறார்.

தமிழரின் நாகரிகம் இன்னும் பல நூறாண்டுகள் பின்னோக்கி போவதற்கான அத்தனை சாத்தியக்கூறுகளும் உள்ளன. கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட 5,000க்கும் மேற்பட்ட பொருட்களில் ஒன்றுகூட கடவுள் வழிபாடு சம்பந்தப்பட்ட தகவல்கள் இல்லையென்பதால் ஒன்றிய அரசு கீழடியை கைகழுவும் வேலையை செய்கிறது என்று ஒன்றிய அரசின் சூழ்ச்சியை போட்டு உடைக்கிறார். அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்கள் மிகச்சிறப்பாக கீழடியை ஆய்வு செய்த நிலையில் அவரை ஏன் மாற்றவேண்டும். அவருக்குப் பதிலாக வந்த ஸ்ரீராமன் என்பவர் மண்ணின் அடி ஆழத்தில் ஆய்வு செய்யாமல் திட்டமிட்டு மேலோட்ட கிடைத்த பொருட்களை ஆய்வுக்கு அனுப்பி ஆயிரம் ஆண்டுகள் குறைத்துக் காட்டுவதற்கான வேலையை ஒன்றிய அரசின் சூழ்ச்சி வேலையை செய்தார். அமர்நாத் ராமகிருஷ்ணன் ஒருநாளைக்கு சராசரியாக 80 நபர்கள் வரை ஆட்களை வைத்து ஆய்வு செய்த நிலையில், ஸ்ரீராமன் ஒரு நாளைக்கு 20 ஆட்கள் வரையே பயன்படுத்தியுள்ளார் என்றும் கூறுவதன் மூலம் தமிழ்ச் சமூகத்தை திட்டமிட்டு ஒன்றிய அரசு கீழிறக்கப் பார்க்கிறது என்றே தெரிகிறது.

தமிழ்ச் சமூகம் விழித்திருந்து கீழடியை பாதுகாக்க வேண்டும் என்று மக்களின் ஊழியர் தோழர் சு.வெங்கடேசன் அவர்கள் மக்களுக்கு அறைகூவல் விடுக்கிறார். 2017ல் வெளியான போது இந்நூல் கண்ணில் படவில்லை. 2022ல் திண்டுக்கல் புத்தகக் கண்காட்சியில் கிடைக்கப்பெற்றேன். நிறைய தரவுகளைக் காண இதுவரை வாசிக்காத தோழர்கள் அவசியம் இந்நூலை வாசிக்க வேண்டுகிறேன்.

வாசிப்போம்!
உலகை நேசிப்போம்!!

நூல் : வைகை நதி நாகரிகம்!
ஆசிரியர் : சு.வெங்கடேசன்
விலை : ரூ.210

வெளியீடு : விகடன் பிரசுரம்
ஆண்டு : 2017ல் முதல் பதிப்பு, ஜூன்2022ல் இரண்டாம் பதிப்பு.
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
[email protected]

தோழமையுடன்
இரா.சண்முகசாமி 
புதுச்சேரி.