நூல் : கைரதி 377 (மாறிய பாலினரின் மாறாத வலிகள்)
ஆசிரியர் : மு.ஆனந்தன்
விலை : ரூ.₹110
பக்கங்கள் – 120
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]
கைரதி 377 கவிஞர் மு. ஆனந்தனின் முதல் சிறுகதைத் தொகுப்பு. பதினொறு சிறுகதைகள் அடங்கிய இத்தொகுப்பில் 2 முன்னுரைகளுடன்
1 தன்னுரையும் அடங்கியுள்ளது. இந்நூலில் இடம்பெற்ற கதைகள் ஒரே வகைமை. அனைத்தும் மாற்றுப் பாலினத்தவர்கள் பற்றிய கதைகளே. மேலும் முக்கியமான விசயம், நாம் திருநங்கைகளைப் பார்த்திருப்போம். அவர்களைப் பற்றி ஏதேனும் ஓரளவேனும் தெரிந்து வைத்திருப்போம். மிஞ்சிப்போனால் திருநம்பிகளைப் பற்றி கேட்டிருப்போம். ஆனால் இயற்கையின் அற்புத படைப்பில் இவர்கள் மட்டுமில்லை, திருநர்களில் திருநங்கையர், திருநம்பியர், தன்பாலினர், இரு பாலினர், பால் தன்மையற்ற பாலிலியர், இடைப்பாலினர் மற்றும் சில வகையினரும் உள்ளனர். சிலர் இப்படியான இயல்பானவர்களில் 18 வகையினர் உள்ளனர் என்கின்றனர். ஆனால் இயற்கை அனைவருக்குமே கொடுத்திருக்கும் உயிர் ஒன்றுதான், அதுவே உலகினில் அனைத்திற்கும் மேலானது. அனைவருக்கும் சமமானது.
1.ஓலையக்கா லாக்கப்.
இக்கதை முதலில் நாட்டார் தெய்வங்களின் வழிபாட்டு முறைப் பற்றியும் ஓலையக்கா எனும் தெய்வம் பற்றியும் கூறுகிறது. அதில் ஆரம்பித்து உள்ளூர் அளவிலும் இந்திய அளவிலுமான, திருநங்கைகள் மீதான கடந்தகாலப் பார்வையைச் சொல்கிறது.
குற்றப்பரம்பரைச் சட்டம் பற்றி தெரியும். ஆனால் அதில் திருநர்களும் மாட்டி சித்திரவதைப் பட்டதை இக்கதையின் மூலம்தான் நான் அறிந்து கொண்டேன். குற்றப்பரம்பரைத் தண்டனைச் சட்டம் கொடுமையானது. ஆனால் திருநர்கள் வாழ்வியல் அதைவிட கொடுமையாக இருக்கிறது. இதில் குற்றப்பரம்பரைச் சட்டம் வேறு அவர்களை வாட்டி வதைத்து இருக்கிறது. இதைப்பற்றி 140 ஆண்டுகளுக்கு முன்பான ஆவணங்கள்தான் ஒரே சாட்சி.
தன்னைப் பெண்ணாக உணரும் காளிசாமி அந்த ஓலையக்கா நோன்பில் கும்மியடித்து வெளிப்படுத்துகிறார். முதலில் அதை மறுத்து தூற்றுவோர், பிறகு அவனையே போற்றினர். காளிசாமி கைரதியாக மாறுகிறார். ஊரே அவரை வணங்குகிறது. ஆனால் இடையில் காவல்துறை தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி கைரதியை துன்புருத்தி மானபங்கப் படுத்துகின்றனர். அவள் தன்னையே தீயிட்டு மாய்த்துக் கொள்கிறாள். அதுதான் முதல் சிறுகதையான ஓலையக்கா லாக்கப். இந்த தீயிடும் காட்சிக்கு ஓலையக்கா எனும் நாட்டார் தெய்வத்தின் கதையையும் சேர்த்து சொல்லியிருப்பது நன்று. கதையின் காட்சி ஒவ்வொன்றும் வேகமாக நம்மை கதைக்குள் இழுத்துக் கொண்டு செல்கின்றன. எங்கும் தொய்வில்லாமல் கதை நகர்வது சிறப்பு.
2. இதரர்கள்’ என்ற சிறுகதை
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையிலானது இக்கதை. கைரதி கிருஷ்ணன் என்ற நபர் தனது கல்லூரி சேர்க்கும் விண்ணப்பத்தில் தான் ஆணும் அல்ல, பெண்ணும் அல்ல, இரண்டுக்கும் இடையிலான ‘இடைப் பாலினம்’ என்பதை குறிப்பிட்டு சொல்வதற்கு தேவையான இடத்தை வேண்டி கோரிக்கை வைக்கிறார். ஆனால் அலுவலகம் அதை மறுக்கிறது. ஏதேதோ காரணங்கள் சொல்கிறது. இதனால் தான் தானாக இருக்க முடியாத சூழலில் மாணவர் அமைப்புகளுடன் இணைந்து முன்னெடுத்த முயற்சியே போராட்டமாக கிளம்பி, அதை வெற்றிகரமாக முடித்து, ஆண் பெண் மட்டுமன்றி, மூன்றாவதாக இருக்கக்கூடிய ஒரு இடத்தையும் விண்ணப்பத்தில் பெற்றுத் தந்திருக்கிறது. கதையின் கதாப்பாத்திரங்களைத் தவிர்த்து, கதை உண்மை நிகழ்வே.
கதையின் இடையில் கைரதி கிருஸ்ணன் பற்றி அறிய மாணவர் தலைவர்கள் தயங்கி தயங்கி ஒரு கேள்வி கேட்பர். அதை அப்படியே வாசிப்பதுதான் நன்று –
‘ நீங்க அலியா.? ஹிஜராவா.? இல்லை யூனக்கா.?’
‘ இல்லை. நானொரு இன்டர்செக்ஸ். தமிழ்ல இடைப்பாலினம் எனப் பெயர் வைத்துள்ளோம்.’
‘ அப்படின்னா.?’
‘ பிறக்கும்போதே ஆண், பெண் இரண்டு உறுப்புகளுடனும் பண்புகளுடன் பிறப்பவர்கள். எனக்கு இரண்டு உறுப்புக்களும் உள்ளன இரண்டு பண்புகளும் உள்ளன.’ மொத்தக் கூட்டமும் உறைந்தது.”
இடைப் பாலினர் என்பவர்களும் உள்ளனர் என்றும், அவர்களுக்கு ஆணுறுப்பும் இருக்கும் பெண்ணுறுப்பும் இருக்கும் என்பதையும், இப்படி பிறக்கும் குழந்தைகளைப் பிறந்தவுடனேயே உறுப்பை வெட்டி விடுவார்கள் என்பதையும் இதனால் பல குழந்தைகள் பிறந்தவுடன் இறந்து விடுவதும் உண்டு என்பதையும்கூட கதையின் மூலம்தான் நான் அறிந்து கொண்டேன். இதை இச்சமூகத்துக்கு சிறுகதை மூலம் கொண்டு வந்திருக்கிறார் கதாசிரியர்.
திரிந்த பாலினரைப்போல இயல்பாகப் பிறந்த இருபாலினரும் இடைப் பாலினரும் இன்னும் சிலரும்கூட இருக்கிறார்கள். இது இயற்கைத் தேர்வு. அற்புதப் படைப்பு. அப்படியானால் திரிந்தவர்கள் மேல் இதுவரை நமது சமூகம் இழைத்த கொடுமைகளுக்கு நாம்தான் பதில் சொல்ல வேண்டும்.
கதையின் ஓரிடத்தில், ‘நான் தேர்ட் ஜென்டர், மூன்றாவது பாலினம்.’ இப்படியொரு வரி வருகிறது. இக்கதை எழுதப்பட்ட காலம் எதுவென தெரியவில்லை. ஏனெனில் திருநர்களை ‘மூன்றாம் பாலினர்’ என்று 2014 ஏப்ரல் 15ம் தேதி சுப்ரீம் கோர்ட் திருநங்கைகளை அங்கீகரித்து ஆணையிட்டது. அப்படியானால் யார் முதல் பாலினம் என்று யார் முடிவு செய்தது.? இரண்டாம் பால் யார்.? என்ற கேள்விகளுக்கு விடையில்லை. மூன்றாம் பால் என பிரிப்பதற்கு நாம் ஒன்றும் எண்கள் இல்லை. பதிலாக அவர்களுக்கான அடையாளமாக அவர்களது பெயரை அவர்களே சொல்வதுதான் ஏற்கத்தக்கது எனக் கருதுகிறேன்.
3. கூடுதலாய் ஒரு நாப்கின்.
கல்லூரி பேருந்துக்காக நிற்கிறாள் பூர்வீகா. ஆனால் அவளுக்கு உதிரம் வெளியேறி உடலெங்கும் எரிச்சல் பரவுகிறது. கல்லூரிப் பேருந்துவேறு வந்துவிடும் இந்நேரத்தில் இப்படியா.. என்று நாப்கினைத் தேடி வீட்டிற்கு வருகிறாள் பூர்வீகா.
சானிட்டரி நாப்கினைத் தேடித் தேடி அவதியுற்று அது கிடைக்காத நிலையில் ஒரு பெண் எவ்வளவு கோபத்தில் இருப்பாள்..? அதுவும் ஒரு அவசரமான நேரத்தில்.. மேலும் உடலெங்கும் பரவி எரியும் எரிச்சலின்போது..? குறிப்பாக வீட்டு வேலைக்காக ஒரு திருநங்கையை வீட்டில் வைத்திருந்தால்..?
சாதாரணமான மனநிலைக் கொண்ட பெண்ணாக இருந்திருந்தால் நாப்கினைத் திருடிவிட்டாள் என்று வீட்டைவிட்டு துரத்தி இருப்பார். நல்லவேளையாக கதையின் முடிவு அப்படியில்லை.
ஆதரவற்ற கைரதிக்கு தங்கி வீட்டு வேலை செய்ய அமைந்த இடம்தான் பூர்வீகாவின் வீடு. நான்கு பேர் கொண்ட வீட்டில் அம்மா மட்டுமே கைரதிக்கு ஆறுதல். மற்றவர்கள் கைரதியின் சமையலை மட்டுமே விரும்புவர். விதவிதமான சமையல், வாய்க்கு ருசியும் வக்கனையுமாய் உணவு. ஆனால் அது அவள் பரிமாறக்கூடாது. பூர்வீகாவின் அண்ணனுக்கு கோபம் பொத்துக்கும். பூர்வீகாவும் பட்டும்படாமல் இருந்தாள். அவளுக்குதான் அந்த சேனிட்டரி நேப்கின் இப்போதைய அவசரத் தேவை. வீடெங்கும் தேடி அலைந்து கிடைக்காத நேப்கினை யார் எடுத்திருப்பார் என்ற எண்ணம் எழுந்தபோது கைரதியை கைகாட்டியது புத்தி. வீட்டிற்கு வெளியே சிறிய இடத்தில் தங்கி வேலை செய்கிறாள் கைரதி. அந்த இடத்திற்கு சொல்கிறாள் பூர்விகா. ஜன்னல் வழியே எட்டிப் பார்க்கிறாள். உள்ளே கைரதி. அவளிடம் நேப்கின். கோபம் கண்களில் கொப்பளிக்கும் நேரம். அதுவரை ஒரு திருநங்கையை மட்டுமே பார்த்த பூர்வீகா அன்றுதான் அவளது முகமலர்ச்சியைக் காண்கிறாள். கைரதி ஏன் அப்போது முகம் மலர்ந்தாள்.? அதைக் கண்ட பூர்வீகா என்ன செய்தாள்? என்பதைத்தான் ஆசிரியர் கதையின் தலைப்பாக வைத்துள்ளார்.
அத்தருணத்தை பூர்விகா பார்த்திருந்ததால் அங்கே உடைந்து விழுந்தன அவளுடைய திருநர் பற்றிய அவகற்பிதங்கள். நேப்கினைத் திருடி விட்டதாக கைரேகையை வீட்டைவிட்டு வெளியே துரத்தி விடுவார்களோ என்று கதையின் போக்கில் வரும்போது நான் பயந்துவிட்டேன். ஆனால் கதையின் முடிவை ஆசிரியர் நேர்மறையாக முடித்து வைத்து இருக்கிறார். அதனால்தான் இது போற்றப்பட வேண்டிய ஒரு கதையாகிறது.
தன்னை முழு பெண்ணாய் உணரும் அந்த சந்தோஷத்தைப் பார்க்கும்போது அதன் முடிவாக அவளுக்கும் சேர்த்து கூடுதலாக ஒன்று வாங்கிக் கொண்டு வந்து வீட்டில் வைப்பதும் அதை கைரதி எடுத்துக் கொண்டு செல்வதும் என அவர்களது நட்பு தொடர்வதாகக் கதையை முடித்திருக்கிறார் ஆசிரியர். இது நேர்மறையான கதையாக அமைந்திருப்பதுதான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
4. ஜாட்ளா.
திருநர்களை சமூகம் எப்படி நடத்துகிறது என்பதைப் பார்த்திருப்போம். ஆனால் அரசு இயந்திரமும் அவர்களைப் பலியெடுப்பதைப் பற்றிய கதையாக இருக்கிறது இது.
கைரதி வீட்டைவிட்டு வெளியேறி பல நாளாகிவிட்டது. கடைசியாக இவ்விடத்தில் வந்து சேருகிறாள். சிம்ரன் என்ற திருநங்கைக்கு தன்னை மகளாக்க – சேலாவாக்க விரும்புகிறாள். திருநங்கையர் கூட்டமைப்பிடம் தான் முழு பெண்ணாக மாறவேண்டும் ஆப்ரேசன் செய்யவேண்டும் என்று கோரிக்கை வைக்கிறாள். அதற்கு முன்பு முதலில் வாரியத்தில் பதிவு செய் என்று அவளுக்கு கூறப்படுகிறது. இதற்கிடையிலான உரையாடல் வழியாக அவர்களது உடல்வலிகள் எவ்வளவு, மனவலி, வேதனை எவ்வளவு என்று பதிவிடுகிறார் ஆசிரியர். திருநங்கைகள் நல வாரியத்தில் முதலில் பதிவு செய் அப்பதான் கவர்மெண்ட் பணம் கொடுக்கும் என்று எல்லோரும் ஒரே குரலில் சொல்கிறார்கள்.
2008 ஏப்ரல் 15, திருநங்கையர் நலவாரியம் கருணாநிதி அவர்களால் தொடங்கப்பட்டது. அதே நாளை திருநங்கையர் தினமாக அறிவிக்கும்படி கோரிக்கை வைத்தனர். கோரிக்கை சுப்ரீம் கோர்ட்டால் நிறைவேற்றப்பட்டது.
வாரியத்தில் பதிவு செய்ய முதலில் கலெக்டரிடம் சான்றிதழ் பெறவேண்டும். அவரிடம் சென்றால் அரசு மருத்துவரிடமிருந்து மருத்துவச் சான்றிதழ் தேவை என்று சொல்லி அனுப்பப்பட்டாள். மருத்துவ சான்றிதழ் தேவை என்றால் மருத்துவமனைக்குச் சென்று மருத்துவர்களை அணுக வேண்டும். அங்கு சென்றால் RMO அலுவலகம் போ என்று அனுப்புகின்றனர். அங்கு போனால் ப்யூன் அவளை வேண்டுமென்றே நிற்க வைக்கிறார். புறநோயாளி சீட்டு வாங்கி வா, 9ம் நம்பர், இல்லையில்லை, 7ம் நம்பர் விண்ணப்பம் வாங்கி வா என்று கூறு சுற்ற விடுகிறார். விண்ணப்பம் வாங்கி பூர்த்தி செய்து தரப்படுகிறது. பிறகு மருத்துவரைப் பார்த்தால் நியூரோ டாக்டரைப் பாரும்மா என்று முடுக்கப்பட்டாள். தேடிப்பிடித்து அந்த மருத்துவர் பரிந்துரைப்பார் என்று நினைத்திருந்த கைரதிக்கு பேரிடர் காத்திருந்தது. மாணவர்களுக்கு தான் புது கேஸ் சப்ஜெக்ட் காட்டப்போகிறேன் என்று சொல்லி, கைரதியின் உடலைத் திறந்து காட்டுகிறார் அந்த நரம்பியல் மருத்துவர். அதுவரை நிர்வாணம் பண்ணாத உடம்பு கைரதிக்கு. நேராக அறுவைச் சிகிச்சை செய்து முழு பெண்ணாக மாற வேண்டும் என்பது மட்டுமே அவளது ஆசை. ஆனால் இங்கோ மருத்துவர் ஆணுறுப்புடன் இருக்கும் எப்படி சான்றிதழ் தருவது என்று மடக்கி கேள்வி கேட்கிறார். பிறகு மாணவர்களுக்கு காட்ட அவளது ஜட்டியை இறக்கச் சொல்கிறார். மிகவும் கடினப்பட்டு மனதைத் தேற்றி இறக்கிவிட்டப் பின்னர் மருத்துவர் ஆண்குறியை ஆட்டிப்பார்த்தார். அதற்குமேல் அவளால் அந்த அவமானத்தைப் பொறுக்க முடியாமல் வெளியே ஓடிவந்து ஜாட்லா போடுகிறாள்.
அப்போது அவள் சொல்கிறாள்,
‘என் மனசுக்கு தெரியாதா நான் ஆம்பளையா, இல்ல பொம்பளையான்னு. நான் பொம்பளைன்னு யாருக்கு நிரூபிக்கோணும்.’
ஏற்கனவே புறக்கணிப்பில் அல்லாடுபவர்களை அலைக்கழிப்பினாலும் அரசு இயந்திரம் துன்பப்படுத்தும்போது அவர்களது வேதனையைச் சொல்லி மாளாது. கட்டடத்தின் முன்பு இருக்கும் காம்பவுண்ட் கீப்பர் முதல் உச்சபட்ச அதிகாரத்தில் இருக்கும் மருத்துவர்வரை அவளை ஏளனமாக பார்க்காத கண்கள் இல்லை.
5. அழகன் என்ற போர்க்குதிரை.
இச்சிறுகதையின் மூலம் ஒரு அருமையான தீர்வை ஆசிரியர் முன் வைத்திருக்கிறார். நல்லவேளையாக இந்த சிறுகதையும் ஒரு நேர்மறை முடிவை முன் வைத்திருக்கிறது. இது ஒரு ஜாலியான சிறுகதை.
கடலோரத்தில் குதிரை சவாரிக்கு அழகனோடு நிற்கும் கைரதி. அவளுடன் தொழிலில் போட்டிப்போடும் மற்ற குதிரைக்காரர்கள். மாரி என்பவன் மேல் கைரதிக்கு விருப்பம். ஆனால் தன்னைப் பெண்ணாக உணர்ந்தவளுக்கு அப்படியே மாறிவிட அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்கு பணம் மிகப்பெரிய தேவையாக இருக்கிறது. சிறுவயதில் இருந்தே தன்னுடன் இருக்கும் குதிரை அழகனைத் தவிர தற்போதைக்கு வேறு ஆதரவு இல்லை என்ற நிலையில்தான் மாரி என்பவன் கைரதியுடன் பழகுகிறான். அவர்களது பழக்கம் காதலாக மாறுகிறது. அவளுக்காக ஆப்பரேஷன் செய்ய வேண்டும் என்பதற்காக ஊரிலிருந்த சிறிய வீட்டை விற்றுவிட்டு வந்து கைரதிக்கு பணம் கொடுக்கிறான்.
‘ஆபரேசன் செஞ்சிட்டு வா, நம்ம கல்யாணத்தை வச்சிக்கலாம்’ என்று சொல்லிவிட்டு செல்கிறான். அழகன் குதிரை அவனைப் போக விடாமல் தன் மேல் ஏற்றிக்கொண்டு அவளிடம் வருகிறது என்றதோடு இந்த கதையை முடிக்கிறார் ஆசிரியர்.
இந்த சிறுகதை ஒரு நேர்மறை முடிவை முன்வைத்திருக்கிறது. தன்னுடையப் பெண்மையை முழுதாக உணர்ந்தபின் தன் உடலில் இருக்கும் ஆணுறுப்பை காண்பதற்கு கஷ்டப்படும் திருநங்கைகளின் மன ஓட்டத்தைக் கதையில் பதிவிட்டு இருக்கிறார் ஆசிரியர்.
பிரச்சனைக்கு ஒரு தீர்வையும் முன்வைத்து முடித்திருப்பது சிறப்பு. மாரியைப் போல சிலரை நான் அறிவேன். கைரதி போன்ற சிலரையும் நானறிவேன். பார்க்கும்போது மனம் வேதனை கொள்வதும் பிறகு அதைக் கடந்து போவதுமான பொது மனநிலைக்கு மாற்றாக அவர்களுக்கு ஆதரவு தரும் மனப்பக்குவத்தையும் மேலும் அவர்களது பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் மனப்பக்குவத்தையும்தான் மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும். வளர்க்க வேண்டும். அதை இக்கதை எளிமையாக செய்கிறது!.
6. 377ம் பிரிவின்கீழ் கைரதி.
இக்கதை ஒரு எதிர்மறையான கதை. பல ஓட்டல்களில் வேலை செய்து கொண்டு, கிடைக்கும் உணவை சாப்பிட்டு, கிடைக்கும் இடத்தில் படுத்து உறங்கி, தன் வயிற்றைக் கழுவிக் கொண்டிருக்கும் உயிர்தான் கைரதி. ஒருநாள் ஓட்டலுக்கு வெளியே படுத்திருக்கும்போது அவளைப் பிடித்துக்கொண்டு போகிறது காவல்துறை.
போலீசார் வன்கொடுமை செய்து வல்லுறவு கொள்கின்றனர். இதில் என்ன பெரிய கதைக்குறிய அம்சம் இருக்கிறது என்று தோன்றினால் கதையில் வரும் உரையாடல்களைப் படித்தால் மட்டுமே அது தெரியும். கதாசிரியர் கதையின் வழியாக சொல்ல வரும் முக்கியமான விசயத்தையே அங்குதான் வைத்திருக்கிறார். போலீஸ்தடியின் இரும்பு பூன்போட்ட முனையை கைரதியின் பின்னுறுப்பில் விட்டு இழுக்கிறார்கள். அவர்களது நோக்கம் வல்லுறவே தவிர, உயிர்போக அங்கே கத்திக்கொண்டிருக்கும் கைரதியின் வலியைக் கவனிப்பதல்ல. அதேப்போலத்தான் நீதிமன்றத்தில் அவளை இயற்கைக்கு மாறான உடலுறவில் ஈடுபடுகிறார் என்று குற்றம் சாட்டப்பட்டு நிற்கிறாள். ஆனால் கைரதி அதையெல்லாம் கவனிக்கும் நிலையிலின்றி, உயிர்போகும் நிலையிலிருக்கும் உடலோடு நிற்கிறாள். எதிர்வாதம் செய்யும் தெம்பு கொஞ்சம்கூட இல்லை.
ஆக, கதை ஒரு திறந்தநிலை முடிவாக அமைகிறது. காவல்துறையிடமுள்ள அதிகாரம் எப்படி வேலை செய்கிறது என்பதை கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். அதுவே அதுவே ஓர் அநாதரவற்ற திருநருக்கு நிகழும்போது காப்பாற்ற ஒருவரும் இல்லை என்ற எண்ணமே பாதி கொன்றுவிடும். ‘கண்ணா அபயம்’ என்றாலும்கூட சட்டென ஒருவர் வந்துவிடுவதில்லை.
இத்தொகுப்பின் முதல் சிறுகதையான ஓலையக்கா லாக்கப்புடன் ஒப்பிட்டால் அதைவிட இச்சிறுகதை ஒருபடி சுவாரஸ்யம் குறைவுதான். ஏனெனில் இது எதிர்மறையான முடிவுடன்கூடிய கதை.
கொடூரங்கள் செய்யும் காவலர்களைப் பற்றி நான் கேள்விப்பட்டுக்கொண்டே இருக்கிறேன். அவர்களுக்கு மனசாட்சி என்பது இல்லையா என்று வழக்கம்போல கேள்வி கேட்பதால் ஒன்றுமே மாறிவிடாது என்பதையும் நான் அறிவேன். இதனால் திருநர்களின் வலியை ஒரு பொட்டுகூட குறைக்கவும் முடியாது. அதற்கு காரணமானவர்களைத் தண்டிக்கவும் முடியாது. ஏனெனில் இன்றைய நாட்களில் காவல்துறை நீதித்துறை இரண்டுமே பாதிக்கப்பட்டவருக்கு நீதி என்ற நிலையிலிருந்து எப்போதோ மாறிவிட்டது. ஒரு நல்ல தீர்ப்பு வரும்போது மட்டுமே தவிர நீதிமன்றம் நியாய மன்றமாக எப்போதும் இருப்பதில்லை. இல்லையென்றால் சங்கரை வெட்டிக்கொன்றவர்களும் திட்டமிட்டவர்களும் ஏன் இன்று வெளியில் இருக்கின்றனர்.? மாவட்ட நீதிமன்றங்களில் தண்டனைக் கொடுப்பதும் உயர் நீதிமன்றம் குற்றவாளிகளைக் குற்றமற்றவர்கள் என்றும் போதிய ஆதாரம் இல்லை என்றும் வெளிவிடுவது ஏன்.? கேள்விகள் நீளும் ஆனால் திருநர்களின் வலி குறையுமா.? இதற்கு மானிடர்கள் ஒவ்வொருவரும் பதில் சொல்ல வேண்டும்.
சட்டத்தை வளைத்து காவலர்கள் தப்பித்துக்கொள்ளும்போது சாமானிய மக்கள் நீதிக்காக வடக்கிருந்து உயிர் துறக்க வேண்டிய விளைவுதான் ஏற்படும். இதற்கு பதிலாய் தவறிழைத்தவர்களுக்கு அதே செயலைத் திருப்பி தண்டனையாக கொடுத்தால் என்ன ஆகும்? தனிமனித உரிமையை யார் பறித்தாலும் ஹமுராபியின் சட்டங்களை மக்கள் பயன்படுத்துவதில் எவ்வித தவறும் இல்லை. இது எதிர்மறை முடிவாக இருந்தாலும் ஒரு பிரச்சனையை முன்வைத்து விட்டது. தீர்வை நோக்கி நகர்வார்தான் மானிடர். அல்லாதார் மனம் செல்லாத காசு.
7. நஸ்ரியா ஒரு வேலைக்காரி சிறுகதை.
நஸ்ரியா அன்று வேலைக்கு கிளம்புமுன் அத்தாவிடம் சொல்கிறாள், ‘அத்தா நான் ஆபீஸ்க்கு போயிட்டு வரேன்.’ அவளது அப்பா வழியனுப்புகிறார். கூடவே அவளது கண்ணில் மை இட்டுக்கொள்ளவில்லை என்பதையும் கவனிக்கிறார். அவளது இயல்பில் சில மாற்றங்கள் தெரிவதை அவ்வபோது கவனிக்காதவரில்லை தந்தை.
நஸ்ரியா அங்கிருந்து வேறொரு இடத்திற்கு செல்கிறாள். அங்கே கைரதி இருக்கிறாள். நஸ்ரியாவிற்காக சில ஏற்பாடுகளைச் செய்து வைத்திருக்கிறாள். அங்கே நஸ்ரியா அங்கிருந்து மொகம்மது நஸ்ருதீனாக மாறி வெளியே வந்தான். அதாவது நஸ்ரியா பெண்ணாகப் பிறந்திருந்தாலும் இயல்பால் ஆண். இப்படிப்பட்டவர்களைத்தான் திருநம்பி என்று கூறுகிறோம். இக்கதையினூடாக அவனுடைய வாழ்வும் காட்டப்பட்டுள்ளது. ஆண்கள் இயல்பாக செய்யும் வேலைகளின்மீதுதான் அவனுக்கு கண். அதனால் இயல்பாகவே அவனது தந்தைப் போலவே கசாப்பு பணியில் ஈடுபடுகிறான். ஆணாக தன்னை உணர்கிறான். பெண்ணுறுப்புகள் உடலில் இருப்பதைக் கண்டு கண்டு மனம் நோகிறான். தனால் தன்னை தனக்கு படித்தபடி மாற்றிக்கொள்கிறாள். ஆணாக உடை உடுத்து ஆண்களைப்போல ஆம்பளன்னா கஸ்டமான வேலை செய்யனும். என்று சொல்லி மெக்கானிக் வேலைக்கு புல்லட் பைக்கில் செல்கிறாள்.
இயல்பான ஒரு கதைதான். நஸ்ரியாவின் வாழ்க்கை எப்படி இருந்தது என்று கண்முன்னே காட்டும் படைப்பு. ஓரிடத்தில் கதைகள் எப்படி வருகிறது.
“படைச்சவனே.! என்னை எதுக்கு இப்படி படைச்ச.? என்னோட மார்பையும் கர்ப்பப்பையையும் எடுத்துட்டு என்னை ஆம்பளையா மாத்திடு’ அல்லாஹ்விடம் அவள் இறைஞ்சாத நாளில்லை.” இப்படியொரு வாக்கியம் வருகிறது. தன்னை ஆணாக உணரும்போதெல்லாம் தான் பெண்ணுடலில் இருக்கிறோம் என்ற எண்ணமே அவனை வதைக்கிறது. ஆண்டுதோறும் இதே சிக்கலை அனுபவித்தால் எப்படியிருக்கும்.? துயர் மண்டி மனம் உடைந்துபோகும். இதுதான் திருநம்பியரின் நிலை.
படித்தவுடனே நான்கூட நினைத்தேன், என்ன இது கதை எளிமையாக முடிந்துவிட்டதே… கதையின் கடைசியில் எதேனும் ஒரு தீர்வோ அல்லது ஒரு அற்புத முடிவோ இல்லையே என்று. மறுமுறை திருப்பிப் பார்க்கும்போதுதான் கதையின் முடிவில் கிடைக்கும் அந்த தீர்வைக் கண்டுக்கொண்டேன். தன்னை எந்த பாலினமாக ஒருவர் உணர்கிறாரோ, அதேப்போல தன்னை மாற்றிக்கொள்ள யாருடைய அனுமதியும் தேவையில்லை. குறைந்த பட்சம் அப்படி இருக்கும் நபர்களை நாம் ஏளனப்படுத்தாமல் இருந்தாலே போதும். இங்கே நாம் என்பது ஒட்டு மொத்த மனித சமூகமே.!
8. இலா என்ற சிறுகதை.
நிச்சயம் இக்கதை அனைவரையும் ஆச்சர்யப்படுத்தும். இதுவரை நாமெல்லாம் என்னதான் தெரிந்து வைத்திருக்கிறோம் என்ற எண்ணத்தைத் தரும். இப்படியும்கூட இருக்கிறார்களா என்று நினைக்க வைக்கும்.
புராணப்படி புதனின் மனைவிதான் இலா. ஒரு மாதத்திற்கு பெண்ணாகவும் ஒரு மாததிற்கு ஆணாகவும் இருக்கும்படி சபிக்கப்பட்டவள். அப்படி இலா பெண்ணாக மாறும்போது புதனின் மனைவியாக இருப்பாள். அதாவது பெண்மை, ஆண்மை இரண்டு பண்புகளுமே ஒரு உடலில் இருக்கும். ஆனால் அவ்வபோது அது மாறும். இவர்கள்தான் இருனர்கள்.
கைரதனுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதைப் பேசிய மறுகணமே அதிர்ந்து போனார். அவரது காதல் மனைவி புஷ்பலதா அதைக்கண்டு வெகுண்டு விசாரித்தாள். உடனே வீட்டைவிட்டு காரில் கிளம்பிவிட்டார். போகும்போதே அவரது உடலுணர்வுகள் மாறியது. ஆணாக இருந்த கைரதன் இப்போது கைரதியாக மாறினார். தனது கணவனுக்கு விபத்து என்று கேட்டதும் கிளம்பியவர் கணவனின் வீட்டிற்கு வந்ததும் இறந்தார் வீட்டில் நடக்கும் அத்தனைக் காரியங்களும் நடப்பது கண்டு மனம் வெதும்புகிறாள்.
‘ அய்யோ என் ஆம்படையானுக்கு என்ன ஆச்சு? என்று அலருகிறாள். தனது கணவர் வேலாயுதத்தின் அண்ணன்தான் இறந்தார் என்றும் தன் கணவர் மருத்துவமனையில் இருக்கிறார் என்றும் அறிந்தவள் உடனே அங்கு கிளம்பினாள். காலில் கட்டுடன் இருந்தவனைக் கண்டு அழுகிறாள். வேலாயுதம் கைரதியை சமாதானப்படுத்துகிறார். அன்றிரவு இருவரும் தூங்கினர். ஆனால் இரவு முழுவதும் உறக்கமில்லாமல் புரண்டுக் கொண்டிருந்தாள் புஷ்பலதா என்று கதை முடிகிறது.
இதுவரை பலர் தொடங்காத இடத்திலிருந்து இக்கதையை உருவாக்கியிருக்கிறார் ஆசிரியர். கைரதியோ கைரதனோ இருபாலினமோ இடைப்பாலினமோ யாராக இருந்தாலும் அவரும் ஓருயிர். அனைவரையும்போல சகல சுக போகத்துடன் வாழ்வதற்கு அவருக்கும்தான் உரிமை உள்ளது. பெண்தன்மை மிகும்போது பெண்ணாக மாறி தன் கணவருடன் வாழ்கிற, அதே சமயம் ஆண்தன்மை மிகும்போது தன் மனைவியுடன் இணைந்து வாழ்கிறது அந்த உயிர். ஆணோ பெண்ணோ திரிந்தவரோ திரியாதவரோ எப்படியாயினும் அவர் ஓர் உயிர். இது அனைவருக்கும் சமம்தானே!
ஆணாகவும் பெண்ணாகவும், கணவனாகவும் மனைவியாகவும் இரண்டு வாழ்க்கை வாழ்கிற கைரதி என்ற புதிய கண்ணோட்டத்தை இக்கதை கொடுத்துள்ளது. புஷ்பலதா பாத்திரத்தை நினைத்தால்தான் சங்கடமாக உள்ளது தன் கணவர் இன்னொருவனின் மனைவி என்பது தெரிந்தால் எப்படி எடுத்துக்கொள்வார் என்பதை வாசகரின் பார்வைக்கு கொடுக்காமல் ஆசிரியர் விட்டுள்ளார்.
9. அடையாளங்களின் அவஸ்தை.
உடலின் இயற்கை உபாதை அவளுக்கு. கைரதி, பிலோமினா, சந்தியா.. இவர்கள் தங்குவதற்கு ஓட்டல் ரூம் தேடுகிறார்கள். பேருந்து நிலையம் அருகில் ஒரு ஓட்டலுக்கு வருகிறார்கள். ஓட்டலில் ரூம் கொடுக்க ஆயத்தமான நேரம், வெள்ளைவேட்டி கட்டிய ஓட்டல் மேனேஜர் அழகாக வந்து அருமையாக தடுத்துவிட்டார். அவரது பேச்சில் எந்த நியாயமும் இல்லை. ஒம்போது என்கிறான் ஹோட்டலில் ரூம் இல்லை என்கிறான். விரட்டுகிறான்.
அடுத்து வேறொரு ஓட்டல் செல்கிறார்கள். அங்கே அறைகள் இருந்தன. ஆனால் இவர்களுக்கு கொடுக்கப்படவில்லை. காரணம் கேட்டால் இப்போ வேகன்ட் இல்லைங்க என்கின்றனர். அது நம்பும்படியாக இல்லாததால் அங்கிருந்து வெளியே வந்துவிட்டு நண்பரிடம் சொல்லி அவர் மூலம் அந்த ஹோட்டலில் ரூம் இருக்கிறதா என்று விசாரித்தனர். ரூம் இருக்கிறது என்ற பதில் வந்தது. அவர்கள் தங்களிடம் பொய் சொன்னதைத் தாங்க முடியாமல் திருப்பி கேட்பதற்காக உள்ளே சென்றனர். ஏன் ரூம் வேகன்ட் வச்சுக்கிட்டு எங்களுக்கு இல்லைன்னு சொல்லிட்டீங்க என்று கேட்டதற்கு அந்த ரூமை ஆன்லைன்ல வேற கஸ்டமர் புக் செஞ்சிருக்காங்க, அதை கவனிக்காம சொல்லிட்டாங்க என்று சமாளித்துவிட்டு அவர்களை வெளியே அனுப்பினர். அடிவயிறு முட்டியது. அப்போதுதான் இந்த உரையாடல் வருகிறது.
‘நான் திருச்சியில் கலெக்டர் ஆபீஸ்ல லேடீஸ் டாய்லெட் போனப்ப ஏதோ பேய் பிசாசைப் பார்த்த மாதிரி கத்தி கூச்சல் போட்டாலே ஒருத்தி. அவமானத்துல எனக்கு உசுரே போயிருச்சு.’
‘என்ன அரவாணிகளுக்கு கக்கூசே வராதுனு இந்த உலகம் நெனைக்குதா?’
‘நம்மள ரெண்டும் கெட்டானாக படைச்ச கடவுள் நமக்கு கக்கூஸே வராத வயித்தையாவது கொடுத்திருக்கலாம்.’ இவ்வரிகளிலேயே திருநர்களின் இயற்கை உபாதைகளுக்கு அவர்கள் அனுபவிக்கும் அவமானங்களையும் அவமரியாதைகளையும் காட்டியிருக்கிறார் ஆசிரியர்.
ஒருமணி நேரத்தேடலுக்குப் பிறகு ஒரு ஓட்டலில் இடம் கிடைத்தது. அதன் மொட்டை மாடியில் தகர அட்டையை கூரையாக கவிழ்த்து இருக்கும் ஒரு சிறிய அறை. அதற்குப் பக்கத்தில் அழுக்கடைந்து கிடக்கும் ஒரு கக்கூஸ். பைகளை அறையில் வைத்துவிட்டு உடனடியாக கக்கூசுக்கு நுழைந்தாள் கைரதி. வெளியேறிய மலத்தைப்போல அவமரியாதையின் வலி மனதைவிட்டு வெளியேறவில்லை என்பதோடு இந்த கதையை முடித்திருக்கிறார் ஆசிரியர்.
திருநங்கைகளை நிராகரித்த காட்சிகளை நான் நேருக்கு நேராக கண்டதுண்டு. அதேபோல திருநங்கைகளை மரியாதையுடன் நடத்துவதையும் கண்டதுண்டு. நிராகரிப்பும் செய்யாமல் எந்தவித ஆதரவும் காட்டாமல் இருக்கும் நபர்களையும் அதிகம் கண்டதுண்டு. அவர்களின் மொழியை ஓரளவிற்குத் தெரிந்து வைத்திருக்கிறேன். ஆனால் அவர்களது வழியைப் பற்றி அறிவதில் ஒரு சிறிதுகூட நான் நெருங்கியவன் அல்ல. மேலும் அவர்களின் வலியை நான் குறைக்க முற்பட்டவனும் அல்ல. அவர்களுக்கு நியாயமான மரியாதைக் கொடுக்கும் மனநிலைக்கு நான் தற்போது வந்திருக்கிறேன். திருநங்கை திருநம்பி போன்றோருடன் எனக்கு எந்த தனி மனித பிறழ்மனநிலையும் இல்லை.
இக்கதையில் கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் அரவான் கலப்பலி காட்சி பற்றி ஆசிரியர் கூறியுள்ளார். அரவான் சிலை தலை ஓரிடத்திலிருந்து வரும். கை, கால், உடல் என ஒவ்வொரு இடங்களிலிருந்து வரும். அவை ஓரிடத்தில் இணைந்து முழு உருவத்திற்கு அரவான் எழுவார். சிலை ஊர்வலம் வரும்போது காய்கறிகள் பழங்கள் எல்லாம் சிலைமீது வீசப்படும். விவசாயம் செழிக்க வேண்டி. சிலை வரும்போது அனைத்து திருநங்ககைகளும் புதுமண பெண்களாவர். தாலிக்கட்டிக் கொள்வர். புத்தாடை. தோழிளுடன் குதூகலமும் கொண்டாட்டமுமாய் இருப்பர். அரவான் வரும்போது கற்பூரம் பொறுத்தி அதை சேலைக் கொண்டு அணைத்து விடுவார்களாம். காரணம் அவர்களது கற்பை நிரூபிக்கும் செயல். பின்னர் அரவானின் தலை வெட்டப்படும். கணவனை இழந்த பெண்களாக மாறிவிட்ட திருநங்கைகள் ஒப்பாரி வைத்து அழுவர். அவர்களது வேதனை அங்கு முழுமையாக வெளிவரும். தாலி கட்டிய உடனே தாலியறுத்தால் எப்படி இருக்குமோ. அந்த வேதனைதான் அவர்களுக்கும்.
எனது நேரடி அனுபவம். ஊரின் பொதுகழிப்பிடத்தில் ஒருநாள் எனக்கு தெரிந்த திருநங்கை ஒருவர் ஆண்கள் பகுதியில் வந்தபோது அவரைப் பார்த்த எனக்கு எந்த பிரச்சனையும் தென்படவில்லை. இயல்பாக அவர் இருந்தார். நானும் அப்படிதான் இருந்தேன். அதன்பின்னர் யோசித்தேன். அவரிடம் கேட்டேன். அதாவது ஆண்கள் பகுதியில் வருவதில் உங்களுக்கு பிரச்சனை இல்லையே.? என்று கேட்டேன்.
‘ஆணாகப் பிறந்தாலும் நான் பெண்ணாக மாறியவள். அப்படி என்றால் நான் எந்த பக்கம் செல்ல வேண்டும்.?’
‘பெண்கள் பக்கம்தான் செல்ல வேண்டும்.’
‘ஆனால் எங்களை உள்ளே பார்த்தால் முகம் சுழித்து கொள்வார்கள். திட்டுவார்கள். அவர்களது வீட்டின் பிரச்சனைக்கெல்லாம் ஏதோ நாங்களே காரணம் என்பது போலிருக்கும். அவர்களது முகத்தை அப்போது பார்த்தால் முக உணர்வுகள்கூட எங்களைத் தாக்கும். இதற்கெல்லாம் பயந்துதான் நான் ஆண்கள் பகுதிக்கே வருகிறேன்.’ அவர் சொன்னபோது என்னால் அதை ஏற்கவே முடியவில்லை. அவர் மேலும் தொடர்ந்தார்.
‘எங்களை ட்ரான்ஸ்ஜெண்டர் என்கிறார்கள். ஆணாக இருந்து பெண்ணாக மாறிய எங்களை ட்ரான்ஸ் விமன் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் எத்தனைப்பேரை வைத்து என்னைக் கூப்பிடுகிறார்கள் என்று உனக்கே தெரியுமே.!’ சொல்வதற்கு என்னிடம் ஒன்றுமேயில்லை. அடையாளங்களின் அவஸ்தை மிகக் கொடுமையானது.
இக்கதையில் திருநங்கைகளுக்கு தனியான ஒரு கழிப்பறை வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது வீட்டைத் தவிர வெளி இடங்களில் கழிப்பறைகளைப் பார்க்கும்போதெல்லாம் திருநர்களுக்குமான கழிப்பறை எங்கே என்பதை என் கண்கள் தேடும்.
10. மாத்தாராணி கிளினிக்.
சந்தேகத்தின் பெயரில் பிடிக்கப்படும் திருநங்கைகளில் கைரதியும் போலீசிடம் மாட்டிக் கொள்கிறாள். காவல் ஆய்வாளர் விமலா, என்ன விஷயம் என்று விசாரிக்கும் போது திருநங்கைகள் தங்களது பிரச்சினைகளை கூறுகிறார்கள். அவை என்னென்ன என்பதைக் கதையில் படிக்கும்போது புரியும். அவர்களது கல்வித்தகுதியை கேட்கும்போது கைரதி சொல்கிறார், ‘நான் ஒரு மருத்துவர்’ என்று. திருநங்கைகளுடன் சேர்ந்து காவல் ஆய்வாளர் விமலாவும் ஸ்தம்பித்துப் போகிறார்.
ஆணாகப் பிறந்த முத்தையா மருத்துவம் படித்தவன். ஆனால் அவனது இயற்கையான, இயல்பான தன்மை பெண்மையாக இருப்பதால் தன்னை பெண்ணாக மாற்றிக் கொண்டாள். அவனது வீட்டில் பெற்றோர்களும் உறவினர்களும் ஒதுக்குகிறார்கள். வேறெங்கும் செல்வதற்கு இல்லை என்ற நிலையில் அனாதையாகிறான் முத்தையா. அந்த முத்தையா பெண்ணாக கைரதியாக மாறியப்பின் வீட்டைவிட்டு வெளியேறுகிறாள்.
திருநங்கைகளுடன் தங்குவதற்கு தகுதியற்ற ஒரு இடத்தில் தங்கி இருக்கிறாள். அந்த இடம்வரை சென்று காவல் ஆய்வாளர் விமலா கைரதியின் கல்விச் சான்றிதழ்களைக் காண்கிறார். ஒரு திருநங்கை மருத்துவம் படித்திருந்தும் சமூகப் புறக்கணிப்பால் அவரது வாழ்வாதாரம் முழுக்க முழுக்க கேள்விக்குறியாக மாறியிருக்கும் அந்த சூழலைப் புதிதாக எதிர்க்கொள்கிறார் காவல் ஆய்வாளர் விமலா. அவளுக்கு உதவ வேண்டும் என மனதில் எண்ணுகிறார்.
கைரதியின் குடும்பத்துடன் சென்று பேசுகிறார். ஆனால் ஒரு திருநங்கையைத் தனது குடும்பத்தில் ஏற்க அந்த குடும்பம் தயாராக இல்லை. கைரதி வேலைபார்த்த மருத்துவமனையில் சென்று பேசுகிறார். ஆனால் திருநங்கையான ஒரு மருத்துவரை பணியில் அமர்த்த மருத்துவமனை நிர்வாகம் தயாராக இல்லை.
அதன்பிறகு தனது மேலதிகாரிகளிடம் கேட்டுவிட்டு ஒரு சில செயற்பாடுகளை தயார் செய்தார் காவல் ஆய்வாளர் விமலா. சிறிது நாட்கள் கழித்து ஒரு மருத்துவமனையையே திறக்கிறார் காவல் ஆய்வாளர் விமலா. கைரதி மாத்தாராணி தெய்வத்திற்கு தனது கழுத்திலிருந்த ஸ்டெத்தஸ்கோப்பைக் கழட்டி மாலையாக அணிவிக்கிறாள். அன்றிலிருந்து மாத்தாராணி மருத்துவமனை தனது மருத்துவ சேவையைத் தொடங்கியது.
இது நேர்மறையான முடிவுள்ள சிறுகதை. நான் படித்து வியந்த கதை. திருநங்கையர்களின் மகிழ்ச்சியைப் பதிவு செய்யும் கதை.
விமலா கைரதியின் இன்னொரு தாயுள்ளமாக மாறிவிட்டார் என்று தோன்றுகிறது. ஆதரவு மனநிலையோடு ஆய்வாளர்கள் திருநங்கைகளை வணங்குவதும் நன்று. இதுவே ஆண் ஆய்வாளராக இருந்து ஆதரவு மனநிலையுடன் இருப்பாரா என்பது கேள்விதான். திருநங்கைகளுக்காக பல அமைப்புகள் செயல்படுகின்றன. அவர்களது மிகப்பெரிய பிரச்சினையே பொருளாதாரமும் புறக்கணிப்பும்தான். அவற்றை நீக்க வேண்டும். மற்றபடி நேர்த்தியாக அமைந்திருக்கிறது சிறுகதை.இக்கதையை ஒரு நாடக பாணியில் எழுதி இருப்பது சிறப்பு. நாடகமாக எழுதி வைத்தால் அறங்கேற்றக் கூடியதே.!
கதையின் இடையில் நாட்டார் தெய்வமான மாத்தாராணியைப் பற்றிய வரலாறும் சொல்லப்பட்டிருக்கிறது. என்ன.? திருநங்கை நாட்டார் தெய்வமா.? என்று நீங்கள் எண்ணினால் அந்த தெய்வத்தைப்பற்றியும் தெரிந்து கொள்ள தயாராகிவிட்டீர்கள் என்று பொருள்.
எழுதி தொகுத்து வெளியிடும் ஆனந்தனின் முதல் சிறுகதைத் தொகுப்பு இது என்று பார்க்கையில் ஆச்சரியம் மேலிடுகிறது தேர்ந்த எழுத்தைக் கொடுத்திருக்கிறார்.
11. பாவ சங்கீர்த்தனம்.
வாடிகன் ஃபாதர் என்றழைக்கப்படும் அந்த பாதிரியார் அந்த சர்ச்சுக்கு வந்திருந்தார். தடபுடலான ஏற்பாடு. ஆடல் பாடல் என வரவேற்பு களைக் கட்டியது. அவரிடம் பாவ மன்னிப்பு கேட்பதற்காக நீண்ட கூட்டம் நின்றது. பாவசங்கீர்த்தனம் செய்வதற்காகவே அவ்வளவு பெரிய கூட்டம். பாவசங்கீர்த்தனம் என்றால் பிறந்தது முதல் செய்த பாவங்களை எல்லாம் சொல்லி மன்னிப்பு கேட்பது என்று பொருள்.
அந்த பாதிரியாரின் மேல் அவ்வளவு மதிப்பு மக்களுக்கு. அந்தக் கூட்டத்தில் ஒரு ஆளாக நிற்கிறான் கென்னடி. பாதிரியாராவதற்கு படித்த இளையர். வாடிகனில் ஒருநாளாவது போப்பாண்டவரிடம் நேரடியாக ஊழியம் செய்வதே அவனது லட்சியம் என்று தெரிவிக்கிறான். வாடிகன் பாதிரியார் வரவேற்கிறார். இதற்கு பிறகுதான் தனக்கிருக்கும் சிக்கலையும் இயல்பாகவே தான் யார் என்றும் தனக்கு என்னென்ன நடந்தன எனவும் பாதிரியாரிடம் பகிர்ந்து கொள்கிறான். தான் ஒரு பெண் என்றும் முழு பெண்ணாக மாற விரும்புவதாகவும் சொல்கிறான். ஆனால் மதத்தின் பார்வையில் திருநங்கை ஒருவர் மதகுருவாக முடியாது என்று சொல்கிறார் வாடிகன் பாதிரியார். அதற்கான காரணமாக மதநூல்கள் சொல்வதையும் சுட்டிக் காட்டுகிறார். அதாவது ஒரு திருநங்கைகளை மதகுருவாக நியமிக்கக்கூடாது என்று மதநூல்கள் சொல்கின்றனவாம். ஆனால் ஒரு ஆணை மட்டுமே மதகுருவாக நியமிக்க முடியும் என்று கூறுகிறார்.
அப்போது கென்னடி/கைரதி சொல்கிறான்/ள், ‘நான் எல்லா மதங்களுக்கும் பாவ மன்னிப்பு அளிக்கிறேன். இனிமேலாவது மதங்கள் பெண்களை சமமாக நடத்தட்டும்.!’ தனது அங்கியைக் கழட்டி பாதிரியாரிடமே தந்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டாள் கைரதி என்கிறதோடு இக்கதை முடிகிறது.
ஆழமான ஓர் உரையாடல். ஒவ்வொரு வரியும் ஒவ்வொரு சொல்லும் அருமையானவை. நேர்மையானவை. ஒவ்வொரு கேள்வியும் பதிலும் நம்மைச் சுடுபவை. மதங்களின் பார்வையில் பெண்களைப் பற்றிய கண்ணோட்டம் என்ன என்பதையும் இச்சிறுகதையில் ஆசிரியர் கூறியுள்ளார். மக்களின் பார்வையில் அவர்கள் எப்படியோ அதேபோலத்தான் மதங்களும் பார்க்கின்றன. பாதிரியாருக்கும் பாதிரியார் ஆவதற்கு படிக்கும் மாணவருக்கும் இடையில் நடைபெறும் இவ்வுரையாடல் உள்ளூர் முதல் உலகம் முழுமைக்குமான பரந்துபட்டப் பார்வையோடு கதையாக அமைந்திருக்கிறது. இக்கதையின் ருசி அதன் உரையாடல்களில் அமைந்திருப்பதனால் கதையைப் படித்து நா மலர்ந்து கொள்ளுங்கள்.
இக்கதையில் ஒரு திருநங்கை மதகுருவாகக் கூடாது என மத நூல்கள் சொல்வதாய் பாதிரியார் சொல்வதும் ஒரு திருநங்கை பாதிரியை வாடிகன் தேவாலயம்வரை செல்ல முடியாது என்பதால் தனது ஆசை, லட்சயம் எல்லாவற்றையும் எறிந்துவிட்டு தன்னிலையோடு விடைபெற்று செல்கிற கைரதியையும் பார்க்கிறோம். ஆனால் எனக்கு மிக மிகப் பிடித்த ஒன்று, இக்கதையின் கைரதிக்கு உலக மதங்களை எல்லாம் மன்னிக்கும் அளவுக்கு மனம் பெரிது. இதைவிட வேறென்ன வேண்டும்.!
எனது நேரடி அனுபவம். நான் திருநங்கை பாதிரியை ‘எஸ்தர் பாரதி’யை அறிவேன். இந்தியாவின் முதல் திருநங்கை பாதிரியை அவர்தான். சேலத்தில் திருநங்கையர் குறித்த மாநாடு ஒன்று நடைபெற்றது. அதில்தான் நான் திருநங்கையர் குறித்தும் அவர்களின் வாழ்வைக் குறித்தும் நிறைய அறிந்துக் கொண்டேன். அப்போதுதான் பாதிரியை எஸ்தர் பாரதியை அறிந்தேன். அவரே தென்னிந்தியாவின் முதல் ட்ரான்ஸ்விமன் பாஸ்டர் – திருநங்கை பாதிரியை என்பது அவரே என்னிடம் நேரடியாக சொன்ன தகவல்தான். ‘ட்ரான்ஸ்ஜெண்டர்’ என்பதைவிட எங்களை ‘ட்ரான்ஸ்விமன்’ என்று அழைப்பதே பொருத்தமானது என்றும் அவருடனான உரையாடலின்போது சொன்னார்.
அதென்ன.? பாதிரியார் என்றுதானே வரும் பாதிரியை என்று சொல்கிறாய்.? திருநர்களுக்கென தனிமொழிவகை உண்டு. தங்களுக்கான வாழ்வை அமைத்துக் கொண்ட அவர்களே தங்களுக்கான மொழியையும் அமைத்துக் கொண்டார்கள். நிர்வாணம், ஜாட்ளா, தந்தா, சேலா, ஹிஜரா, ரீத்து… இப்படி பல சொற்கள் உண்டு. பாதிரியார் என்ற சொல்லுக்கு பெண்பால் சொல்லை அமைத்து பார்த்தால் பாதிரியை என்பதுதான் வரும். அதையே பயன்படுத்துவது தவறில்லை. தமிழக அரசே அவர்களை கண்ணியத்துடன் நடத்துவதற்கும் அழைப்பதற்கும் குறிப்பிடுவதற்குமான சொல்லகராதியை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. எதிர்காலத்தில் திருநர்களுக்கான அகராதியும் விற்பனை செய்யப்படும்.
ஒரு சீன அரசரின் அவையில் அமைச்சராக இருந்த சாய்லூன் என்பவர் ஒரு திருநங்கை. எதற்கும் உதவாதவர்கள் திருநர்கள் என்ற எண்ணத்தை உடைத்தவர்களில் அவரும் ஒருவர். ஏனெனில் அவர்தான் காகிதத்தைக் கண்டுப்பிடித்தவர். காதிதம் என்பது இல்லையென்றால் இந்நாள்வரை எதில் எழுதிக் கொண்டிருந்திருப்போம் என்பதை எண்ணிப் பாருங்கள். இந்தியாவின் முதல் திருநங்கை பொறியியல் பட்டதாரி கிரேஸ் பாணு. அவர் கடந்து வந்த பாதை மிக மோசமானது. ஆனால் இன்று வென்றிருக்கிறார்.
இந்தியாவின் முதல் திருநங்கை எஸ்.ஐ பிரித்திகா யாசினி. தமிழகத்தின் முதல் திருநங்கை பேராசிரியர் பியூட்டி லீனா. இன்னும் லிவிங் ஸ்மைல் வித்யா, சுதா, நர்த்தகி நடராஜ் போன்ற பலர் இன்று வாழ்வை தங்களுக்கு ஏற்றார்போல மாற்றியிருக்கிறார்கள். திருநம்பியான பிட்டு கார்த்திக் இன்று கல்லூரி பேராசிரியர். இப்படியாக பலர் உள்ளனர். இவர்களது பிரச்சனைகளையெல்லாம் சொல்வதற்கு இன்று சில வாய்ப்பேனும் உள்ளன. ஆனால் முன்பெல்லாம் சுத்தமாக இல்லை.
அதென்ன ஒவ்வொரு கதையிலும் கைரதி என்றே பெயர்.? இப்படி சிலருக்கு தோன்றிக்கக்கூடும். கைரதி என்பவர்தான் திருநர்களுக்காக முதன்முதலில் சட்டப் போராட்டம் நடத்திய முன்னோடி. 140 ஆண்டுகளுக்கு முன்பு நம்மைப்போல வாழ்ந்த நபர். குற்றப்பரம்பரைச் சட்டத்தில் சிக்கியவர் போராடி விடுதலைப் பெற்றார். அதேப்போல திருநங்கைகளுக்காக முதல் சங்கம் அமைத்தவர் கைரதி லால் போலா என்ற திருநங்கை. இவர்களது செயல்களால் இவர்கள் முன்னோடிகளாக இருக்கின்றனர். எனவே கைரதி என்ள பெயரையே அனைத்து கதைகளிலும் பயன்படுத்தியிருப்பது ஈர்க்கும் கதையாடல்களில் ஓர் உத்தி. இவையெல்லாம் ஆசிரியரே இந்நூலின் கடைசியில் உள்ள தன்னுரையில் கொடுத்துள்ளார். இது ஆசிரியர் திருநர்களுக்கு செய்யும் மரியாதை.
ஒரு திருநங்கைக்காக ஆஸ்பத்திரியே திறந்தார்களா.?
ஒரு மாரி கைரதியைக் கல்யாணம் செய்துகொள்ளப் போகிறானா.?
என்ன.? திருநங்கையர் மீது குற்றப் பரம்பரைச் சட்டமா.?
அதெப்படி ஒரு நபருக்குள் பெண் தன்மையும் ஆண் தன்மையும் இருக்கும்?
ஆணுறுப்பையும் பெண்ணுறுப்பையும் ஒன்றாகக் கொண்ட குழந்தைகூட பிறக்குமா.?
மதங்கள் திருநர்களை புறக்கணிக்கிறதா.?
இந்த கேள்விகளும் தோன்றியிருக்கும். இக்கதைகளைப் படிக்கும்போது இப்படியாக நிறைய யோசித்திருப்போம். நமது கேள்விகளுக்கெல்லாம் ஆச்சரியம்தான் காரணமாக இருக்கும் என்று நினைத்தால் தவறு. இவை அனைத்துமே உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டவை. சில மட்டும் புனைவு. படிக்கும்போது அனைத்தும் புரியும்.
மனிதர்கள் தங்களுக்கு ஒவ்வாத சூழ்நிலையாக உணரும்போது அச்சூழ்நிலையை மாற்றுவதற்கு முயற்சி செய்வர். அல்லது சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ள முயற்சி செய்வர். அப்படியான கதைதான் ‘ஓலையக்கா லாக்கப்.’ திருநங்கைகளைத் திருமணம் செய்து கொண்டு வாழும் பலர் உள்ளனர். அப்படியான சிறுகதையதான் ‘அழகன் என்ற போர்க்குதிரை.’ இன்று இலக்கியத்திலும் ‘திருநர் இலக்கியம்’ என்ற ஒருவகை உருவாகியிருக்கிறது. திருநங்கைகளுக்கு அன்பும் சரியான வாய்ப்பும் கொடுத்தாலே அவர்களை அவர்களே உயர்த்திக் கொள்வார்கள் என்று தோன்றுகிறது.
ஆக, மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் மனிதம் என்பதே அடிப்படையாக இருக்க வேண்டும். மற்றவை எல்லாம் பின்னர்தான். பதினொரு கதைகளும் ஒவ்வொரு வகையில் சிறப்பானவை. திருநங்கையர்களின் வாழ்வைக் கண்முன்னே நிறுத்துபவை. ஆசிரியருக்கு எனது வாழ்த்துகள். ‘உங்கள் எழுத்து ருசிக்கிறது தோழர்.’
– கார்த்தி டாவின்சி