உயிரியல் மாற்றங்களை தன் உடம்பில் தாங்கிய பெண்ணே ஆணை விட வலிமையானவள்
இப்புத்தகம் 64 பக்கங்கள் கொண்ட சிறிய நூல் என்றாலும், பெண்மை என்பது ஒரு பொய் என்பது போல, ஆண்மை என்பதும் பொய் என்ற வாதத்தை வலுவாக முன் வைக்கிறது.பெண் சமத்துவம் குறித்த பல்வேறு விவாதங்களை தூண்டக்கூடிய கேள்விகளை இந்நூல் நம்முள் எழுப்புகிறது.
ஆளுமைத் தன்மை உடையவன் என்பதால் ஆண்மை ஆண்களுக்கு உரியதாயிற்று. பெடை, பெட்டை, பேணுகை, பாதுகாப்பு, அன்பு போன்று பொருள்தரும் பெட்பு என்னும் சொல்லின் அடியாகப் தோன்றிய பெண்மை பெண்களுக்கு உரியதாயிற்று.
சொற்களில் கூட பாகுபாடு நிலவும் சமூகத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் பெண் என்றால் கருப்பை என்று சொன்னவர்கள் உண்டு. கருப்பையும் பாலூட்டும் மார்பகங்களும் தான் பெண் என்றவர்களும் உண்டு.
இயற்கையிலேயே குறைபாடுள்ள மனிதப் பிறப்பே மனுஷி என்று அரிஸ்டாட்டில் போன்ற அக்கால அறிஞர்கள் கூறியதுண்டு. உலகம் ஆண்களுடையது ; அதில் பெண்கள் இருக்கிறார்கள். ஆணின் விலா எலும்பிலிருந்து வந்தவள்தான் பெண். ஈசன் தன் உடம்பில் பாதியை கொடுத்தார் என்பது போன்ற ஆழமான நம்பிக்கைகளும் கதைகளும் ஆண்-பெண் பற்றி நம்மிடம் புழங்குகின்றன.
அவற்றில் பெரும்பாலானவை மதம் சார்ந்தவை; நம்பிக்கை சார்ந்தவை; சில அறிவியலின் பெயரால்,இலக்கியங்கள் இன்னும் வேறுமாதிரி பெண்கள் தலையில் மிளகாய் அரைத்துப் பூசுகிறது.
தொல்காப்பியத்தில்
” ஏனது சுவைப்பினும், நீ கை தொட்டது
வானோர் அமிர்தம் புரையுமால் எமக்கு”.
சிலப்பதிகாரம் கண்ணகியை ” மண்மகள் அறியா வண்ணச் சீறடியாள்”
இன்னும் நம் விளம்பரங்களோ ” பெண்மையை விட மென்மையான உடைகள் ”
மென்மை என்பது பெண்ணின் ஒரு அம்சம் என்று காலம் காலமாக நம் மனதில் கட்டமைக்கப்பட்டு விட்டது. அந்த வெள்ளைக்காரர்கள் கூட வெண்டைக்காய்க்கு லேடீஸ் ஃபிங்கர் என்று பெயர் வைத்து நாங்களும் உங்களுக்கு குறைந்தவர்கள் இல்ல, அப்படின்னு நிலைநாட்டி விட்டனர்.
ஆனால் நாட்டில் பெருவாரியான உழைக்கின்ற பெண்களின் கைகளைத் தொட்டுப் பார்த்தால் முரடாகவும், உறுதியாகவும்தான் இருக்கும்.
ஆனால் ஒன்றை யோசித்துப் பாருங்கள். மனிதனின் ஆரம்ப காலத்தில் தாய்வழிச் சமூகத்தில், பலம் வாய்ந்த மரக்கட்டைகளை கொண்டு வேட்டையாட முன் சென்றவள் பெண்தான். என்று தனி நபர் சொத்து, உடமைகள் வந்ததோ அன்று ஆரம்பித்த தந்தைவழிச் சமூகம், கொஞ்சம் கொஞ்சமாக பெண்ணைத் தனக்கு அடிமைப்படுத்தி சுயம் மறக்கச் செய்தார்கள்.
தாய்மை, பெண்மை, மென்மை போன்றமைகள் பண்பாட்டு ரீதியாக பெண்கள் மேல் சுமத்தப்பட்டது. அதை தொடர்ச்சியாக இலக்கியங்கள், கலைகள் வாயிலாகச் சொல்லச் சொல்ல பெண்மையைப் பற்றி அவர்கள் உருவாக்கிய இலக்கணங்கள் மெல்ல மெல்ல மூளையிலும், இதயத்திலும் புகுத்தப்பட்டு இன்றுவரை காக்கப்பட்டும் வருகிறது.
உண்மையில் ஆணை விட பெண் மனதிலும், உடலிலும் வலிமையானவள் தான். மாதவிலக்கில் துவங்கி கருத்தரித்தல், குழந்தை பெறுதல், மெனோபாஸ் என உயிரை காவு கேட்கும் உதிரப்போக்கு நிறைந்த பல உயிரியல் ரீதியான மாற்றங்களை தன் உடம்பில் தாங்கிய படியே தன் வாழ்நாள் முழுவதையும் கடந்து கொண்டிருக்கிறாள் பெண்.
சரி பெண்கள் கல்வி கற்கச் சென்றாவது தன் சுயத்தை அறிவார்களா என்று பார்த்தால் , அங்கும் சமூகத்தின் பொதுப்புத்தியில் உள்ளதுதான் பாடம் ஆக்கப்பட்டுள்ளது. பால பாடங்களில் குடும்பம் பற்றிய படத்தில் அப்பா ஈஸி சேரில் உட்கார்ந்து பேப்பர் படிப்பதும், அம்மா சமையல் செய்வதும் போன்ற போன்ற காட்சிகள் தான் உள்ளது.” வினையே ஆடவர்க்கு உயிரே வாள்நுதல் மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர் ” மனையுறை மகளிர் என்று மீண்டும் மீண்டும் பிள்ளைகளின் மனதில் அழுந்தப் பதிக்கிறது.உடல்களை கடந்து மானுட பிறவிகளாக ஆணும் பெண்ணும் வாழ, என்ன மனநிலையை தகவமைக்க வேண்டுமோ , அது பள்ளிக்கூடத்தில் தான் செய்யப்படவேண்டும். அப்படியான ஒரு கல்வி தான் நமக்குத் தேவை.
ஆதவன் தீட்சண்யாவின் கவிதை வரிகளோடு நூல் முடிந்திருக்கும்.
” நீண்ட நெடுங்காலமாய்
காத்திருக்கிறோம்.
நெஞ்சுக்குழியில் வாழும்
கனவைத் தேக்கி நிற்கிறோம்.
சமத்துவமாய் வாழ ஒரு சாசனத்தை
முன் மொழிகின்றோம் .
உன் கரம் பிடித்து கையெழுத்தை
இடுமாறு கோரி நிற்கிறோம்.
கனிந்து வரட்டும் என்று காத்திருக்க
காலம் இனி இல்லை.
எம் காதலரை என் நெஞ்சுக்கு நெருக்கமான
அன்பர் தம்மை எதிர்த்து சமர் புரியும்
சங்கடத்தை தந்து விடாமல்
சமமான உணர்வோடு கரம் இணைத்து
இச்சமூகத்தின் ஆணிவேரை அறுத்திட வாரீர் .
ஆணாதிக்கம் தானந்த வேர்
எனவே புரிந்திட வாரீர்.
அறைகூவி அழைக்கின்றோம்
தோழர்களே!
ஆழ்மனதில் பொங்கிவரும் தாகத்துடனே…”
கண்டிப்பாக பெண்களும், பெண்களை உடமையாக பார்க்காமல் சக பயணியாய் பார்க்க ,ஆண்களும் படிக்க வேண்டிய புத்தகம் இது.
நூல்விமர்சனம்:
தி. தாஜ்தீன் – ஆவணியாபுரம்