கொரோனா வைரஸைத் துரத்தியடித்த வகுப்புவாத வைரஸ் – பிருந்தா காரத் | தமிழில்: தா.சந்திரகுரு
முஸ்லீம் பெண்கள் தங்களுடைய தலையில் ஹிஜாப் என்று குறிப்பிடப்படுகின்ற முக்காடு அணிந்து கொள்ள விரும்புவதில் சர்ச்சைக்குரியதாக எதுவொன்றும் இருக்கவில்லை. பாஜக ஆளுகின்ற கர்நாடகா மாநிலத்தில் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளை ‘ஹிஜாப் சர்ச்சை’ என்று விவரிப்பது தவறாகும். அதுவொன்றும் அதுபோன்ற சர்ச்சையாக இருக்கவில்லை. உண்மையில் இளம் முஸ்லீம் பெண்களின் கல்வி உரிமையின் மீது நேரடியாக நடத்தப்படுகின்ற தாக்குதலாகவே இந்த சர்ச்சை இருக்கின்றது. அந்தப் பெண்களுக்கான கல்வி உத்தரவாதம் சட்டம் மற்றும் இந்திய அரசியலமைப்பால் அளிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு ஆதரவாக இருப்பதாகக் கருதப்படுகின்ற புதிய தலைமையின் கீழ் உள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம் கூட இது குறித்த புகார் பெற்றவுடனே ஜனவரி 27 அன்று ‘இந்த விவகாரத்தின் உண்மைகள் கவலையளிக்கும் வகையில் இருக்கின்றன. ‘கல்வி உரிமை’ தொடர்பாக இந்தப் புகார் மிகவும் தீவிரமானதாக உள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்களின் மனித உரிமைகளைக் கடுமையாக மீறுவதாகவே இந்த விவகாரம் உள்ளது’ என்று உடுப்பியில் உள்ள மாவட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கை ஒன்றை அனுப்பி வைத்தது.
இறுதியாண்டில் படிக்கின்ற, இன்னும் இரண்டு மாதங்களில் தங்களுடைய பன்னிரண்டாவது வகுப்புத் தேர்வுகளை எழுதப் போகின்ற நூற்றுக்கணக்கான இஸ்லாமிய இளம் பெண்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி இருக்கின்ற கர்நாடக அரசின் முற்றிலும் தேவையற்ற, தவறான எண்ணத்துடன் கூடிய பிப்ரவரி 5ஆம் நாளிட்ட உத்தரவுக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தின் ஒற்றை நீதிபதி அமர்வு இடைக்காலத் தடை விதிக்காதது மிகுந்த ஏமாற்றத்தைத் தருவதாகவே இருக்கிறது.
கர்நாடக அரசின் அந்த உத்தரவு கல்லூரி மேம்பாட்டுக் குழு அல்லது புகுமுகக் கல்வித் துறையின் கீழ் வருகின்ற புகுமுகக் கல்லூரிகளின் நிர்வாக வாரியத்தின் மேல்முறையீட்டுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுகின்ற உடையையே மாணவர்கள் அணிந்து வர வேண்டும் என்று குறிப்பிடுகின்ற கர்நாடகா கல்விச் சட்டம் – 1983இன் பிரிவு 133(2)ஐத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்தப் பிரிவு நிர்வாகக்குழு சீருடையைத் தேர்ந்தெடுக்காத பட்சத்தில் ‘சமத்துவம், ஒருமைப்பாடு, பொதுச் சட்டம் மற்றும் ஒழுங்கைச் சீர்குலைக்கும் வகையிலான ஆடைகளை மாணவர்கள் அணியக் கூடாது என்று குறிப்பிடுகிறது. குறிப்பிட்ட அந்தப் பிரிவு 133(2) கல்வி மேம்பாடு தொடர்பான விஷயங்களில் மாநில அரசு நேரடியாகத் தலையிட அனுமதிப்பதாகவே இருக்கிறது. சீருடைகள் அந்த வகைக்குள் நிச்சயமாகப் பொருந்தாது என்பதால் அந்தப் பிரிவைப் பயன்படுத்திக் கொண்டிருப்பது கேள்விக்குரிய செயலாகவே உள்ளது.
சந்தேகத்திற்குரிய அந்த சொற்றொடரைப் பயன்படுத்துவதன் நோக்கம் மிகவும் தெளிவாகவே உள்ளது. கர்நாடகாவில் கல்லூரி மேம்பாட்டுக் குழுக்கள் அந்தக் கல்லூரி அமைந்துள்ள பகுதியின் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினரின் தலைமையிலேயே செயல்பட்டு வருகின்றன. தலையில் முக்காடு அணிவதற்கு எதிரான விதிகள் எதுவும் கல்லூரிகளில் இல்லை. ஆயினும் இந்தப் பிரச்சனை முதலில் தொடங்கிய உடுப்பி மாவட்டத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் உள்ள புகுமுகக் கல்லூரியில் முஸ்லீம் பெண்கள் முக்காடு அணிந்து கல்லூரி வளாகத்திற்குள் நுழைவதற்குத் தடை விதிப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டது. பஜ்ரங் தள் அமைப்பின் உடுப்பி மாவட்டச் செயலாளரான சுரேந்தர் கோட்டேஷ்வர் ‘கல்லூரி வளாகத்திற்குள் மாணவர்களை ஹிஜாப் அணிய அனுமதித்தால், வளாகத்திற்குள் உள்ள ஹிந்து மாணவர்கள் அனைவரையும் நாங்கள் காவித் துண்டு அணியச் செய்வோம்’ என்று எச்சரித்தார்.
அவர் இந்தத் திட்டத்தை அரசாங்கத்தின் அனுசரணையுடனே செயல்படுத்தினார். அவர் மற்றும் பஜ்ரங் தள் போன்ற அரசு சாரா அமைப்புகள் என்று தங்களுக்குள்ள வலைப்பின்னல் மூலம் அரசாங்கம் காவித் துண்டு அணிந்த ஆக்ரோஷமான இளைஞர்களை முஸ்லீம் பெண்களுக்கு எதிராக முதலில் அணிதிரட்டியது. அவர்கள் அனைவரையும் முஸ்லீம் மாணவிகளை உள்ளே விடாமல் வாசலில் தடுத்து நிறுத்தி வைத்திருந்த கல்லூரிகளுக்குப் பேரணியாகச் செல்வதற்குப் பின்னர் அனுமதித்தது. பெண்களை நோக்கி கூச்சலிட்டு அவர்களைக் கேலி செய்தவர்களை காவல் துறையினர் வெறும் பார்வையாளர்களாக நின்று பார்த்துக் கொண்டிருந்தனர். அதற்குப் பின்னர் ‘சமமான நடவடிக்கை’ என்ற பெயரில் சட்டம் ஒழுங்குப் பிரச்சனையை உண்டாக்கும் என்பதால், கல்லூரியில் அப்படி ஒரு விதி இருக்கிறது அல்லது இல்லையென்றாலும் முஸ்லீம் மானவிகள் முக்காடு அணிந்து கொண்டு வருவதைத் தடைசெய்வது என்ற உத்தரவை வெளியிட்டது.
உண்மையில் உடுப்பி மாவட்டத்தில் உள்ள மற்றொரு கல்லூரியான பண்டார்கர்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முஸ்லீம் பெண்கள் தலையில் முக்காடு அணிய அனுமதித்துள்ளதுடன், அது துப்பட்டாவின் வண்ணமே இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. ஆனால் இன்றைக்கு அந்தக் கல்லூரி தன்னுடைய விதியையே மீறி முஸ்லீம் மாணவிகளை கல்லூரிக்கு வெளியிலேயே தடுத்து நிறுத்தியுள்ளது. இது அப்பட்டமான அநியாயம் இல்லையா?
முஸ்லீம் பெண்களை இவ்வாறு குறிவைப்பது சமூகத்தின் மத்தியில் எதிர்வினைக்கே இட்டுச் செல்கிறது. இதுவரையிலும் முக்காடு அணியாதவர்களும் கூட இப்போது அதை அணிந்து கொள்வதை எதிர்ப்பின் அடையாளமாகக் கருதுகின்றனர். கர்நாடகாவில் அதுபோன்ற நிலைமை உருவாவதைப் பார்க்க முடிகிறது. இதுபோன்ற நிலைமை பெண் சுதந்திரத்திற்கு ஆதரவாக இல்லாத தீவிரவாத முஸ்லீம் அமைப்புகள் தங்களுடைய அடிப்படைவாத சித்தாந்தத்தை முன்னெடுப்பதற்கு அடித்தளமிட்டுத் தருவதாகவும் இருக்கிறது.
கல்வி நிறுவனங்களில் சீருடை என்ற கருத்தையே இந்தப் பெண்கள் அடியோடு எதிர்த்து வருவது போன்ற கருத்து முன்வைக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கர்நாடகா கல்வித்துறை அமைச்சர் பி.சி.நாகேஷ் கூறுகையில் ‘மாணவர்கள் அனைவரிடமும் அரசு நிர்ணயித்துள்ள சீருடையை மதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளேன். அரசாங்கம் விதித்துள்ள பள்ளிச் சீருடை விதிமுறைகளை மீறுபவர்கள் பள்ளிகளுக்குள் நுழைந்து தங்கள் வகுப்புகளுக்குச் செல்ல முடியாது என்பதையும் நான் தெளிவுபடுத்தியிருக்கிறேன்’ என்றார். முஸ்லீம் பெண்கள் அரசால் பரிந்துரைக்கப்பட்ட சீருடையையே அணிந்துள்ளனர். கூடுதலாக அவர்கள் தங்கள் தலையை ஒரு முக்காடு கொண்டு மறைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
சீருடைக்குப் பதிலாக புர்காவுடன் அவர்கள் பள்ளிக்கு வருவதில்லை. தங்களுடைய முகத்தை மறைத்துக் கொள்ள முக்காடைப் பயன்படுத்துவதில்லை. தலைப்பாகை அணிந்து கொள்ளும் சீக்கிய மதம் சார்ந்த மாணவர்கள் சீருடை குறித்த அரசின் உத்தரவை மீறுவதில்லை. சீக்கிய மாணவன் அல்லது மாணவி தன்னுடைய தலையை மூடிக் கொண்டு வரக் கூடாது என்று இந்தியாவில் எங்காவது விதிகள் இருக்கின்றனவா? இந்த இரட்டை நிலைப்பாடு ஏன் இருக்க வேண்டும்? கல்வி நிறுவனங்களில் சீருடைகளை யாரும் எதிர்க்கவில்லை. முக்காடு அணிவதில் முஸ்லீம் பெண்கள் அனைவருக்குமான விதிமுறைகளை மீறுவதும் இல்லை.
இதனை சட்ட ஒழுங்குப் பிரச்சினை என்று முன்வைக்கின்ற வாதம் மிகவும் அபத்தமானது. இத்தனை ஆண்டுகளாக கர்நாடகாவிலோ அல்லது இந்தியாவில் வேறு எங்குமோ இது சட்ட ஒழுங்குப் பிரச்சனையாக இருந்ததே இல்லை. அண்டை மாநிலமான கேரளாவில் முஸ்லீம் மாணவர்கள் தாங்கள் விரும்பினால், முக்காடு அணிந்து கொள்ளலாம் என்றாலும் அதனை வேண்டாம் என்றே பலரும் தேர்வு செய்து கொள்கிறார்கள். எந்த வகையிலும் அது கட்டாயம் என்று அங்கே இருக்கவில்லை. பெண்கள் முக்காடு அணிவதால் கேரளாவில் சட்ட ஒழுங்குப் பிரச்னை எதுவும் ஏற்பட்டிருக்கவில்லை. முஸ்லீம் பெண்களிடையே அதிக கல்வியறிவு விகிதத்தைக் கொண்ட மாநிலமாக கேரளா இருக்கிறது. அங்கே உயர்நிலைப் பள்ளிகளில் முஸ்லீம் பெண்களின் சேர்க்கை அதிகமாக உள்ளது.
கர்நாடக அரசின் உத்தரவில் பொது ஒழுங்கு பற்றிய குறிப்பு வேண்டுமென்றே சேர்க்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் இருபத்தைந்தாவது பிரிவு ‘(1) பொது ஒழுங்கமைதி, ஒழுக்கநெறி, நல்வாழ்வு ஆகியவற்றிற்கும் இந்தப் பகுதியின் பிற வகையங்களுக்கும் உட்பட்டு, மனச்சான்று வழி ஒழுகுவதற்கான சுதந்திரத்திற்கும், சுதந்திரமாக மதநெறி ஓம்புதல், ஒழுகுதல், ஓதிப் பரப்புதலுக்கும் அனைவரும் சரிசமமாக உரிமை கொண்டவர் ஆவார்’ என்று கூறுகிறது. இப்போது ‘மதநெறியை ஓம்புவது, ஒழுகுவது, ஓதிப் பரப்புவதற்கான உரிமை’ பொது ஒழுங்குப் பிரச்சனைக்கு வழிவகுக்கிறது என்று கூறி இந்த விவகாரத்தில் பொது ஒழுங்குப் பிரச்சினையைக் கொண்டு வருவதன் மூலம் அரசாங்கம் தனது நிலைப்பாடு அரசியலமைப்பால் பாதுகாக்கப்படுவதான தொனியைக் கட்டமைத்துக் கொள்ளப் பார்க்கிறது.
கேரள உயர் நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள குறிப்பிட்ட வழக்கு (2016ஆம் ஆண்டு அம்னா பின்ட் பஷீர் எதிர் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்) உள்ளது. முஸ்லீம் பெண்கள் முக்காடு, நீண்ட கை உள்ள சட்டை போன்றவற்றை அணிவது ‘அத்தியாவசியமான மதப் பழக்கம்’ என்று குறிப்பிட்டு, அந்த வழக்கம் அரசியலமைப்பின் பிரிவு 25இன் பாதுகாப்புடன் இருப்பதாக அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் ஆடைக் கட்டுப்பாடு விதிகளால் பாதிக்கப்பட்ட முஸ்லீம் பெண் தேர்வர் ஒருவர் அந்த வழக்கைத் தொடர்ந்திருந்தார். பெண் தேர்வர்கள் குட்டை கை சட்டை அணிய வேண்டும், தலையை மூடக் கூடாது என்றிருந்த அந்த ஆடைக் கட்டுப்பாடு விதி அரசியலமைப்பு பிரிவு 25-ன் கீழ் தனக்குள்ள அடிப்படை உரிமைகளை மீறுவதாக இருக்கிறது என்று அந்தப் பெண் கூறியிருந்தார்.
தேர்வு அறைக்குள் ஏமாற்றி தேர்வு எழுத உதவும் பொருட்களைத் தேர்வர்கள் கொண்டு சென்று விடுவார்கள் என்பதற்காகவே அந்த விதிமுறைகள் இயற்றப்பட்டுள்ளதாகவும், அவை பொது ஒழுங்கு அல்லது ஒழுக்கத்துடன் இணைக்கப்படவில்லை என்றும் கூறி நீதிமன்றம் அந்தப் பெண்ணின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டது. மேலும் தனது தீர்ப்பில் இடைநிலைக் கல்வி வாரியத்தால் நியமிக்கப்படும் அதிகாரிகளால் அந்த தேர்வர் தன்னை உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அந்தத் தேர்வருக்கு அறிவுறுத்தலையும் வழங்கியிருந்தது. இவ்வாறாக அந்த தீர்ப்பின் மூலம் தேர்வு முறையின் நியாயமும், பெண் தேர்வரின் அடிப்படை உரிமையும் பாதுகாக்கப்பட்டது.
முன்னதாக 2015ஆம் ஆண்டு இதேபோன்ற மற்றொரு வழக்கில் (நாடியா ரஹீம் எதிர் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்), மத நம்பிக்கையின் அடிப்படையில் தலையில் முக்காடு மற்றும் நீண்ட கையுடனான சட்டை அணிய அனுமதியளிக்க வேண்டும் என்று இரண்டு முஸ்லீம் பெண் தேர்வர்கள் சமர்ப்பித்த மனுவை நீதிமன்றம் உறுதி செய்து தந்தது. பல மதங்கள், பல்வேறு பழக்கவழக்கங்களைக் கொண்டதொரு நாட்டில், குறிப்பிட்ட ஆடைக் கட்டுப்பாட்டைப் பின்பற்றாத மாணவர்களுக்கு தேர்வு எழுதுவதற்குத் தடை விதிக்கப்படும் என்று கூறி அந்த ஆடைக் கட்டுப்பாட்டு விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று யாரையும் வலியுறுத்த முடியாது என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. அந்த வழக்கிலும் வாரியத்தின் கவலைகளைப் போக்குகின்ற வகையில் உடல் பரிசோதனைக்கு தன்னை உட்படுத்திக் கொள்ளுமாறு மனுதாரருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுபோன்ற தீர்ப்புகளின் தாக்கங்களைத் தவிர்ப்பதற்காகவே நீதிமன்ற விசாரணைக்கு முன்பாகவே கர்நாடக அரசு வேண்டுமென்றே சட்ட ஒழுங்குப் பிரச்சனையை உருவாக்கியுள்ளது.
கல்வி உரிமையை அதிக அளவிலான குழந்தைகளுக்கு விரிவுபடுத்துவதிலேயே அரசு கவனம் செலுத்திட வேண்டும். இந்த இரண்டு ஆண்டுகளாக இணையவழி வகுப்புகளின் போது மாணவிகள் அளவுக்கதிகமாகவே பாதிக்கப்பட்டுள்ளனர். கோவிட்-19 தொற்றுநோயால் இந்தியாவில் ஒரு கோடி பெண்கள் மேனிலைப் பள்ளிப் படிப்பை விட்டு வெளியேறக் கூடும் என்று கல்வி உரிமை மன்றத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. கர்நாடகா கிராமப்புற மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையால் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் மூலம் 2021 ஜூலை மாதம் மாநில உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகள் கர்நாடகா கிராமப்புறங்களில் 1.59 லட்சம் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லவில்லை என்று கண்டறிவித்துள்ளன.
ஆனாலும் இந்த அரசாங்கம் மிகக் குறுகிய கண்ணோட்டத்துடனான தன்னுடைய திட்டத்தை முன்னிறுத்தி, பள்ளிக்குச் செல்லும் பெண்களை வலுக்கட்டாயமாகத் தடுத்து நிறுத்துகிறது. அரசாங்கம் முன்வைக்கின்ற ‘மகள்களைக் காப்பற்றுங்கள், மகள்களுக்குக் கற்றுக் கொடுங்கள்’ (பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ) என்ற முழக்கத்தில் இருந்து பேட்டிகளாக – மகள்களாக – இல்லாமல் இந்த முஸ்லீம் சிறுமிகள் ஒதுக்கி வைக்கப்படப் போகிறார்கள் என்றே தோன்றுகிறது.
இந்தச் சக்திகளால் இளைஞர்களின் உணர்வுகள் இழிவான முறையில் கையாளப்படுவதைப் பார்க்கும் போது சோகமே ஏற்படுகிறது. லட்சக்கணக்கான மாணவர்கள் இணையவழிக் கல்வியை அணுக முடியாமல் கல்வியை இழந்து தவித்து வருகின்ற இந்த நேரத்தில் இதுபோன்று இளைஞர்களிடையே மோதல்களும், பிளவுகளும் ஏற்படுத்தப்பட்டிருப்பது மிகப் பெரிய குற்றச்செயல் என்பதைத் தவிர வேறாக இருக்கவில்லை. இப்போது நடந்திருப்பது ஹிந்துத்துவாவை வெளிப்படையாக, அப்பட்டமாக கல்வி நிறுவனங்களுக்கு விரிவுபடுத்துகின்ற திட்டமே ஆகும். கொரோனா தொற்றுநோயை ஹிந்துத்துவா சக்திகளின் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட வைரஸைக் கொண்டு பரப்பப்படுகின்ற இந்த வகுப்புவாத தொற்றுநோய் மாற்றீடு செய்து கொண்டிருக்கிறது. கல்வி நிறுவனங்களை மூடுவதற்கே வழிவகுக்கும் இந்தச் செயல் இளைஞர்களின் வாழ்க்கையைச் சீரழிப்பதாகவும் இருக்கிறது.
https://www.ndtv.com/opinion/are-muslim-girls-excluded-from-beti-bachao-beti-padhao-2760357
நன்றி: என்டிடிவி
தமிழில்: தா.சந்திரகுரு
குடியரசு தினத்தன்று தில்லியில் பட்டப்பகலில் இளம்பெண் கொடூரமாகத் தாக்கப்பட்ட நிகழ்வு – பொறுப்புள்ள குடிமக்களின் பங்கு என்ன? – பிருந்தா காரத் | தமிழில்:
இரண்டு வயது குழந்தைக்குத் தாயான இருபது வயது பெண் ஒருவர் மீது நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான அந்த வன்முறை – தில்லியில் அந்த இளம்பெண் சந்தித்த சித்திரவதை வீடியோ அதிகமாகப் பகிரப்பட்டதை அடுத்து பரவலான கோபத்தை மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது. தன்னுடைய வீட்டிலிருந்த அந்தப் பெண்ணிடமிருந்த குழந்தையைப் பறித்துக் கொண்ட பிறகு அவர் கடத்தப்பட்டு வலுக்கட்டாயமாக வேறு பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்று ஊடகங்களில் வெளியாகியுள்ள முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டு, கொடூரமான முறையில் தாக்கப்பட்டதுடன் மொட்டை அடித்து, முகத்தில் கருப்பு சாயம் பூசப்பட்டு, கழுத்தில் காலணிகளை மாலையாக அணிவித்து அவமானப்படுத்தப்பட்டு அந்தப் பெண் கேலி செய்யப்பட்டார் எனவும், அந்தப் பகுதியில் இருந்த தெருக்களில் அவர் இழுத்துச் செல்லப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
வெளியான அந்த வீடியோ அந்தப் பெண் எதிர்கொண்ட வன்முறையின் ஒரு பகுதியை மட்டுமே நமக்குக் காட்டியுள்ளது. அந்தப் பெண்ணைத் தள்ளும் போதும், தலையைப் பிடித்து இழுத்து அறையும் போதும் கைதட்டி கேலி செய்கின்ற ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் அவரைச் சூழ்ந்து நிற்பதைக் காண முடிகிறது. மற்றொரு வீடியோ இளைஞன் ஒருவன் அந்தப் பெண்ணைத் தரையில் தள்ளி உதைப்பதையும், கொடூரமாக பெல்ட்டால் அடிப்பதையும் காட்டுவதாக இருக்கிறது. அது உண்மையில் மிகவும் பயங்கரமானது. இந்த நிகழ்வுகள் அனைத்துமே பட்டப்பகலில் நடந்தவையாகும். அந்தக் கொடுமை ஏறத்தாழ ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்திருக்கிறது. இவ்வாறு மிகவும் மோசமாக அந்தப் பெண் தாக்கப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டது எங்கோ ஒரு தொலைதூரக் கிராமத்தில் நடந்திருக்கவில்லை. இந்தியத் தலைநகரின் கிழக்கு பகுதியில் எப்போதும் பரபரப்பாக உள்ள ஒரு பகுதியிலேயே அந்த நிகழ்வு நடந்தேறி இருக்கிறது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தற்கொலை செய்து கொண்ட இளைஞர் ஒருவரின் குடும்பத்தினரின் பழிவாங்கும் நடவடிக்கையாகவே அந்தப் பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்று தற்போது தெரிய வந்துள்ளது. அந்த இளைஞரின் மரணத்திற்கு இந்த இளம்பெண்தான் காரணம் என்று இளைஞரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியிருந்தனர். அன்றிலிருந்தே அந்தக் குடும்பத்தினர் அந்தப் பெண்ணுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்திருக்கின்றனர். அந்தப் பெண் வேலை செய்து வந்த கடைக்குச் சென்றும் அவர்கள் தகராறு செய்ததால் வேலையை விட்டு அந்தப் பெண் வெளியேற வேண்டியதாயிற்று. தொடர்ந்து விடுக்கப்பட்ட வன்முறை அச்சுறுத்தல் காரணமாக அவர் தனது கணவர், குழந்தையுடன் வீட்டை மாற்றிக் கொள்ள வேண்டியதாயிற்று. அவரின் தங்கையும் மிரட்டப்பட்டார். தில்லி காவல்துறையிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவொரு நடவடிக்கையையும் யாரும் எடுக்கவே இல்லை.
அந்த வீடியோ வெளியான பிறகு, அந்தப் பெண்ணைத் தாக்கியவர்களை ‘விலங்குகள்’ என்று குறிப்பிட்ட தில்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் தாக்கியவர்கள் சட்டவிரோத மதுபான வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றும் அவர்கள் நன்கு அறியப்பட்ட குற்றவாளிகள் என்றும் தெரிவித்திருந்தார். அவர் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதற்கான கெடுவையும் விதித்தார். தேசிய மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவர் பெண்ணைத் தாக்கியவர்களை அசுரர்கள் என்று குறிப்பிட்டார். பாதிக்கப்பட்ட அந்தக் குடும்பத்தை நேரில் சென்று சந்தித்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் கெளதம் காம்பீர் குற்றவாளிகளை கொடூரமான மிருகங்கள், விலங்குகள் என்று குறிப்பிட்டதுடன் தில்லி குடிமக்களுக்கு நீதி வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார். சம்பவம் நடந்து நான்கு நாட்களுக்குப் பிறகு, ஏழு பெண்கள் உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இப்போது அந்த மிருகங்களும், அசுரர்களும் சிறைக்குள் அடைக்கப்பட்டு விட்டதால், அந்த விஷயம் அத்துடன் முடிந்து விட்டதா என்ன?
நீதிக்காகவும், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்காகவும் போராடிக் கொண்டிருப்பவர்கள் நன்கு அறிந்தவையாகவே இதுபோன்று எழுகின்ற கேள்விகள் இருக்கின்றன. அந்தப் பெண்ணின் மீதான தாக்குதலுக்கு ஒரு வாரத்திற்கு முன்பாக அவருடைய தங்கையால் அளிக்கப்பட்ட புகாரின் மீது தில்லி காவல்துறை ஏன் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை? உரிய நேரத்தில் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்திருப்பார்கள் என்றால் நிச்சயம் அந்த இளம்பெண்ணைக் காப்பாற்றியிருக்க முடியும்.
காவல்துறையினர் யாருமே இல்லாத நிலையில் ஏராளமான மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போது பொது இடத்தில் வைத்து இளம்பெண் ஒருவரை அடித்து தாக்குகின்ற அளவிற்கான குற்றம் ஏன் நிகழ்ந்தது? பகிரங்கமாக தன்னை இழுத்துச் சென்ற அவர்கள் தன்னை ஓர் அறைக்குள் அடைத்து வைத்ததாகவும், அங்கே தான் மிகவும் கொடூரமாகத் தாக்கப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் கூறியுள்ளார். காவல்துறை சரியான நேரத்தில் வந்திருந்தால், நடத்தப்பட்ட வன்முறையின் ஒரு பகுதியிலிருந்தாவது அந்தப் பெண்ணைக் காப்பாற்றியிருக்க முடியும். இந்த வழக்கில் காவல்துறையின் பங்கு – பல வழக்குகளைப் போலவே – நம்மைப் புண்படுத்துவதாகவே இருக்கிறது. ஆனாலும் காவல்துறையின் உடந்தை அல்லது அதன் கடமை தவறிய செயல் குறித்து எந்தவொரு விசாரணையும் நடத்தப்படவில்லை. மற்றொரு அதிர்ச்சிகரமான, கொடூரமான உண்மை என்னவென்றால், ஒருவேளை அந்த வீடியோ பகிரங்கப்படுத்தப்பட்டிருக்கவில்லை என்றால் அந்த வன்முறையில் ஈடுபட்டவர்களால் அந்தக் குற்றத்திலிருந்து எளிதாகத் தப்பியிருக்கவும் முடியும். இந்த வழக்கில், இதுபோன்ற பலவற்றில் ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளவாறு, பாதிக்கப்பட்டவர் மீதான தங்கள் அதிகாரத்தின் நீட்டிப்பை உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில் அந்த வீடியோ வன்முறையை நிகழ்த்தியவர்களாலேயே படமாக்கப்பட்டிருக்கலாம்.
அந்தப் பெண் தாக்கப்பட்ட போது அங்கே பார்வையாளர்களாக நின்றவர்கள் அனைவரும் அந்த நிகழ்விற்குப் பொறுப்பானவர்கள் இல்லையா? சதி வழிபாட்டிற்கு எதிரான சட்டம் 1987ஆம் ஆண்டு இயற்றப்பட்ட நேரத்தில், சதியின் பெயரால் கொலை நடப்பதற்கு அனுமதிக்கின்ற பார்வையாளர்களிடம் இருக்க வேண்டிய பொறுப்பு பற்றி சமூக ஆர்வலர்களிடையே விவாதம் எழுந்தது. அந்தக் கொலை நடக்கப் போகிறது என்று தெரிந்திருந்தால், அத்தகைய குற்றத்தைத் தடுக்க வேண்டிய சட்டப்பூர்வமான கடமை குடிமக்களுக்கு இருக்க வேண்டும் என்றே அப்போது ஏற்றுக் கொள்ளப்பட்டது. ‘அதிகாரிகள் மட்டுமின்றி, அத்தகைய பகுதியில் வசிப்பவர்கள், தங்களுடைய பகுதியில் சதி நடக்கவிருக்கிறதா, அல்லது சதி நடத்தப்பட்டுள்ளது என்று நம்புவதற்கு காரணம் என்று ஏதாவது இருந்தால் அல்லது அது குறித்து அறிந்திருந்தால், உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் அந்த உண்மையைத் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால், அவர்கள் அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையைச் சந்திக்க நேரிடும்’ என்ற சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டது.
‘கௌரவம்’ என்ற பெயரிலே நடத்தப்படுகின்ற குற்றங்களுக்கு எதிரான சட்டத்திற்காக நடந்த போராட்டத்தின் போது, அப்போதைய தேசிய மகளிர் ஆணையம், பெண் ஆர்வலர்களுடன் இணைந்து தயாரித்த வரைவறிக்கையில் நடத்தப்பட்ட ‘கௌரவக் கொலை’ பற்றி புகாரளிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இன்னும் அந்த சட்ட வரைவு நிலுவையிலே இருந்து வருகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க வேண்டிய சந்தர்ப்பங்களில் குடிமக்களின் பொறுப்பு மிகவும் முக்கியமானது. இந்த ஷாஹ்தாரா வழக்கிலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் தங்கை மட்டுமே காவல்துறையினரைத் தொடர்ந்து அழைத்து தனது சகோதரியைக் காப்பாற்றியிருந்தார்.
இந்தச் சம்பவம் மற்றொரு உண்மை முற்றிலுமாகப் புறக்கணிப்படுவதை எடுத்துக் காட்டுவதாகவும் இருக்கிறது. பசுவதைத் தடுப்பு என்ற பெயரில், ‘லவ் ஜிஹாத்’ என்ற பெயரில் அல்லது தாடி வளர்ப்பதற்கு, வெள்ளைத் தொப்பி அணிவதற்கு எதிராக செயல்பட்டு வருகின்ற கும்பல்கள், பொதுவெளியில் கொலைகளை நடத்துபவர்கள், அவமானப்படுத்துபவர்கள், அடித்து உதைப்பவர்கள் எல்லாம் கொடூரமான மிருகங்கள், விலங்குகளாக இருக்க மாட்டார்களா? இதுபோன்ற குற்றச்செயல்களுக்கு ஆதரவையும் பாதுகாப்பையும் வழங்கி, கும்பல் படுகொலை போன்ற குற்றச் செயல்களை ஊக்குவித்து வருகின்ற அரசியல் தலைவர்களை கௌதம் காம்பீர் எவ்வாறாக விவரிப்பார்? ஷாஹ்தாராவில் இழைக்கப்பட்டுள்ள குற்றத்தின் மீது நமது வேதனையையும், கோபத்தையும், அச்சத்தையும் வெளிப்படுத்துகின்ற அதே வேளையில் இதுபோன்ற குற்றங்கள் அதிகாரப் பதவிகளில் அமர்ந்துள்ள தலைவர்களால் ஊக்குவிக்கப்பட்டு வருகின்ற கொடூரமான, ரத்தத்தில் தோய்ந்துள்ள கும்பல் படுகொலைக் கலாச்சாரத்தின் மூலம் மிகவும் சாதாரணமாக்கப்பட்டதன் விளைவு என்பதை நாம் ஒருபோதும் மறந்து விடக் கூடாது.
இந்திய தலைநகரில் பொதுவெளியில் இளம்பெண் அடித்து தாக்கப்பட்ட அந்தச் சம்பவம், மிகவும் மோசமான தற்செயலான நிகழ்வாக இந்திய குடியரசு தினத்தன்று நிகழ்ந்துள்ளது. நடைபெற்றுள்ள அந்தச் சம்பவம் தங்கள் எதிரிகளிடமும் பொறுப்புள்ளவர்களாக நடந்து கொள்கின்ற குடிமக்களை உருவாக்கத் தேவையான விழுமியங்களை மேம்படுத்துவதில் இருந்து விலகிப் பயணித்திருக்கும் நமது அரசியல், சமூக செயல்பாடுகளின் அடையாளமாக இருக்கிறதா?
https://www.ndtv.com/opinion/the-filmed-assault-and-lynching-of-a-young-mother-in-delhi-2741335
நன்றி: என் டிடிவி
தமிழில்: தா.சந்திரகுரு
பெண்களின் திருமண வயது 21 – ஒன்றிய அரசின் போலி நாடகம் – பிருந்தா காரத் | தமிழில்: தா.சந்திரகுரு
பெண்களின் திருமண வயதை இருபத்தியொன்று என்று உயர்த்துகின்ற மசோதாவை ஒன்றிய அரசு கொண்டு வரவிருக்கின்றது. பாஜகவிற்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருப்பதால் அந்த மசோதா சட்டமாக மாறும் என்றாலும்கூட, மிகவும் ஆழமான பரிசீலனைகள் தேவைப்படுகின்ற பல முக்கியமான சிக்கல்கள் அதில் உள்ளன. மசோதாவை நிறைவேற்றுவதற்குப் பதிலாக அதை தொடர்புடைய நிலைக்குழுவிற்குப் பரிந்துரைப்பதே அரசாங்கம் மேற்கொள்ளும் சிறந்த வழியாக இருக்கும்.
ஒரு பெண் தன்னுடைய பதினெட்டாவது வயதில் வயதிற்கு வந்தவள் என்று கருதப்படுகிறாள். குற்றவியல் சட்டங்கள் உட்பட வயதுக்கு வந்த குடிமக்களுக்குப் பொருந்துகின்ற அனைத்துச் சட்டங்களும் ஒரு பெண்ணின் பதினெட்டாவது வயதில் அவளுக்குப் பொருந்துகின்றன. பதினெட்டு வயதிற்குப் பிறகு தான் செய்யும் செயல்களுக்கு அவளே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். வயதுக்கு வந்தோருக்கான சிறைச்சாலையில் சிறைத்தண்டனை விதிக்கப்படும் அளவிற்கான வயது ஒரு பெண்ணுக்கு 18-21 வயதிற்கு இடையில் வந்து விடுகின்ற போதிலும், முன்மொழியப்படவிருக்கின்ற மசோதாவின்படி, அந்த வயதில் திருமணம் செய்து கொள்வதற்கான விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியாத அளவிற்கு அந்தப் பெண் இளமையானவளாகவே இருப்பாள்.
உத்தேசிக்கப்பட்டுள்ள சட்டம் பெண்களுக்கு அளிக்கப்படும் அதிகாரமாக இல்லாமல், அவர்களைக் குழந்தைகளாக்குவதாகவே உள்ளது. முதிர்வயது என்பது பிரித்துச் சொல்ல முடியாதது. திருமணம் தொடர்பான முடிவுகளில் வயதுக்கு வந்த பெண்ணின் விருப்பத்தை மறுப்பது தவறாகும். பெரும்பாலும் இந்த மசோதா சாதி மற்றும் சமூக தடைகளை உடைத்தெறிந்து இளம் வயது தம்பதிகள் தாங்களாகத் தேர்வு செய்து கொள்கின்ற திருமணங்களைச் சட்டவிரோதமாக்கி விடும். இந்த மசோதா வயதுக்கு வந்த பெண் ஒருவள் அனுபவித்து வருகின்ற தனிப்பட்ட விருப்பம் குறித்த விஷயங்களில் இன்றைக்கு இருந்து வருகின்ற சட்டத்தின் கீழ் அவளுக்கிருக்கும் சுதந்திரம் குறித்ததாக நீதித்துறை வழங்கியுள்ள தீர்ப்புகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள கொள்கைக்கு எதிரானதாகவே இருக்கும்.
மேலும், இந்தியாவில் உள்ள இளம் பெண்கள் தங்கள் வாழ்வு குறித்த முடிவுகளில் முன்பிருந்ததைக் காட்டிலும் அதிக சுதந்திரத்துடனான மாற்றத்தை இப்போது கொண்டு வந்திருக்கின்றனர். அவர்களிடையே இளம் வயது திருமணம் குறித்து அதிக கேள்விகளும், எதிர்ப்புகளும் எழுந்துள்ளன. பெற்றோர்கள், சமூகம் தருகின்ற அழுத்தங்களுக்கு எதிராக இளம் பருவத்தினர் கிளர்ந்தெழுந்துள்ள பல நிகழ்வுகள் தலைப்புச் செய்திகளாகியுள்ளன.
திருமணத்திற்கான சராசரி வயது 22.2 ஆக (MOSPI 2019) இந்தியாவில் அதிகரித்திருப்பதற்கு இளம் பெண்களிடம் இதுபோன்று உருவாகியுள்ள எண்ணமும் ஒரு காரணமாக உள்ளது. உண்மையில் தன்னார்வத்துடன் திருமணத்திற்கான வயது கணிசமாக அதிகரித்து வந்திருக்கும் வேளையில், அவர்களுக்கு தண்டனை தரும் வகையிலான நடவடிக்கைகளை ஏன் இப்போது மேற்கொள்ள வேண்டும்? 18-21 வயதுக்குட்பட்ட பெண்களின் திருமணத்தைக் குற்றமாக்குவதைக் காட்டிலும், தாங்களாக தேர்வுகளைச் செய்து கொள்ளும் வகையிலான சூழலை உருவாக்கித் தருகின்ற உத்தரவாதமான வேலை வாய்ப்புகள், கல்விக்கான அணுகல் போன்றவற்றை இளம் பெண்களுக்கு வழங்குவதே சிறந்த நடவடிக்கையாக இருக்கும். பெண்கள் கருவுறும் விகிதம் ஏற்கனவே குறைந்து வரும் நிலையில், திருமண வயதை உயர்த்தும் இதுபோன்ற நடவடிக்கை மக்கள்தொகைக் கட்டுப்பாட்டிற்காக பாஜக தலைமையிலான சில அரசாங்கங்களால் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் கொடூரமான சட்டங்களுக்குப் பின்னால் உள்ள பகுத்தறிவற்ற தன்மையைப் போன்றதாகவே இருக்கும்.
திருமண வயதை உயர்த்துவதில் என்ன தவறு உள்ளது என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். ஆனால் உண்மை நிலை என்ன? பதினெட்டு வயதுக்குட்பட்ட குழந்தை திருமணங்கள் கணிசமான அளவில் இந்தியாவில் இன்னும் நடைபெற்று வருகின்ற நிலையில், அதற்கான காரணங்களைக் கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்வதே அரசின் முன்னுரிமையாக இருக்க வேண்டும். கடந்த ஐந்தாண்டுகளில் குழந்தை திருமணங்களின் எண்ணிக்கை 27 சதவீதத்தில் இருந்து 23 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. ஆயினும் இந்தக் குறைப்பு நகர்ப்புறங்களிலேயே மிக அதிகமாக உள்ளது என்றும், கிராமப்புற இந்தியாவில் 20-24 வயதில் உள்ள நான்கில் ஒரு பெண்ணுக்கும் அதிகமானவர்கள் பதினெட்டு வயதிற்குள்ளாகவே திருமணம் செய்து வைக்கப்படுகிறார்கள் என்றும் தேசிய குடும்ப சுகாதார ஆய்வு கூறுகிறது. அதற்கான காரணங்கள் நன்கு அறியப்பட்டவையாகவே இருக்கின்றன.
இப்போதைய தொற்றுநோய் பொருளாதார நெருக்கடிக்கும், குழந்தைகள் பாதிக்கப்படும் அளவிற்கு பேரழிவை ஏற்படுத்தியிருக்கும் சமூக விளைவுகளுக்கும் இடையே உள்ள நேரடித் தொடர்புகளை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது. கடந்த ஆண்டு மார்ச் முதல் மே மாதம் வரை பொதுமுடக்க காலத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் உதவியுடன் இயங்கி வந்த குழந்தைகள் உதவி எண்ணுக்கு குழந்தை திருமணம் குறித்து 5,200க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்திருந்தன.
பெரும்பாலும் ஏழ்மையில் இருப்பவர்களின் பெண் குழந்தைகளுக்கே பதினெட்டு வயதுக்கு முன்பாகத் திருமணம் செய்து வைக்கப்படுகிறது. வறுமை, அதிகரித்து வருகின்ற வரதட்சணைக் கோரிக்கைகள், பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை குறித்த அச்சம் போன்றவற்றைச் சமாளிக்கும் தீர்வாகவே அந்த திருமணங்கள் கருதப்படுகின்றன. ஒருவரின் செல்வத்தை தானமாக (பரய தான்) கொடுப்பது, பெண்களை அடுத்தவருக்கு கைப்பிடித்துத் தர வேண்டிய புனிதக் கடமை பெண்களின் பாதுகாவலர்களுக்கு இருக்கிறது என்பது போன்ற ஆணாதிக்கக் கருத்துக்களை ஊக்குவிக்கின்ற வகையிலே குழந்தை திருமணங்களுக்கான கலாச்சார அங்கீகாரமும் தொடர்ந்து இருந்து வருகிறது.
அத்தகைய கலாச்சாரங்களுடன் தற்போதைய ஆட்சிக்காலம் மிகவும் நெருக்கமாக இருந்து வருகிறது. பெண் குழந்தைகளின் கல்விக்கான அணுகலை அதிக அளவிலே உறுதி செய்திருக்கின்ற கேரளா போன்ற மாநிலங்கள் குழந்தை திருமணங்கள் விடுக்கின்ற சவாலை வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளன. சட்டப்பூர்வ திருமண வயதை பெண்களுக்கு பதினைந்து வயதிலிருந்தும், ஆண்களுக்கு பதினெட்டு வயதிலிருந்தும் முறையே பதினெட்டு மற்றும் இருபத்தியொன்று என்று 1978ஆம் ஆண்டில் இந்தியா மாற்றியது. எந்தவொரு தனிப்பட்ட சட்டமும் குழந்தை திருமணங்களைத் தடைசெய்யும் சட்டங்களை மீற முடியாது என்று நீதிமன்றங்கள் பலமுறை தீர்ப்பு வழங்கி வந்துள்ளதால், இந்தச் சட்டங்கள் அனைத்து சமூகங்களுக்கும் பொருந்துபவையாகவே இருந்து வருகின்றன. இந்த நாற்பத்தி மூன்று ஆண்டுகளாக பதினெட்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் திருமணங்களை ஒழிக்கத் தவறியுள்ள நிலை நீடித்து வருகின்ற நிலைமையில், திருமணத்திற்கான பெண்களின் தகுதி வயதை இருபத்தியோரு ஆண்டுகளாக உயர்த்துவது என்பது மக்கள்தொகையில் பெரும் பகுதியினர் – முக்கியமாக ஏழைகள் – சட்டரீதியான தண்டனைகளை எதிர்கொள்வதற்கே வழிவகுத்துக் கொடுக்கும்.
மிகக் குறைந்த வயதிலேயே தாயாகின்ற இளம் பெண்களின் உடல்நலம் மீதான அக்கறையே இந்த நடவடிக்கையின் பின்னணியில் இருப்பதாகவும், திருமண வயதை இருபத்தியொன்று என்று உயர்த்துவதன் மூலம் குழந்தை பிறப்பைத் தடுத்து இலம் பெண்களின் உடல்நலத்தைப் பாதுகாக்க முடியும் என்றும் அரசாங்கம் கூறுகிறது. இது முற்றிலும் போலித்தனமான வாதம். தாய் மற்றும் சிசு இறப்பு, ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பிரச்சனைகள் பொதுக்கொள்கையுடன் தொடர்புடையவை. பொதுசுகாதாரத்திற்கான நிதியைக் குறைத்துக் கொண்டே வருகின்ற அரசாங்கம் மறுபுறத்தில் சுகாதாரத் துறையை தனியார்மயமாக்கிக் கொண்டிருக்கிறது. உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்து வருகின்ற நிலையில் உணவுப் பாதுகாப்பு முறையை விரிவுபடுத்தவும் அரசாங்கம் மறுக்கிறது. ஆனால் அதே நேரத்தில் பெண்களின் உடல்நலம் மீதான தன்னுடைய அக்கறையை அது இவ்வாறு வெளிப்படுத்திக் கொள்ளவும் செய்கிறது. சுகாதாரம் மற்றும் கல்விக்கான செலவினங்களை அதிகரிப்பதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ள முன்வராத அரசாங்கம், இனப்பெருக்க உடல்நலம் என்ற பெயரில் வயதுக்கு வந்த பெண்களின் உரிமைகளைக் கட்டுப்படுத்தவே விரும்புகிறது.
பெண்களின் திருமண வயதை இருபத்தியொன்றாக உயர்த்துவதன் மூலம், ஆண்கள் மற்றும் பெண்களின் திருமண வயது சமன் செய்யப்படுவது பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான ஒரு படியாகும் என்ற அரசின் கூற்றை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்-பெண் சமத்துவம் குறித்து உண்மையிலேயே இந்த அரசு ஆர்வமுடன் இருக்குமென்றால், ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமணத்திற்கான தகுதியான வயதை பதினெட்டு என்று வைத்திருக்க வேண்டும் என்று 2008ஆம் ஆண்டில் அளிக்கப்பட்ட சட்ட ஆணையத்தின் பரிந்துரையை ஏன் அது ஏற்றுக் கொள்ளக் கூடாது?
தனிப்பட்ட உறவுகளில் பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் உண்மையிலேயே இந்த அரசாங்கம் அக்கறை கொண்டிருக்குமானால், ‘ஆணவக் குற்றங்களுக்கு’ எதிரான தனிச் சட்டம், திருமண உறவில் ஏற்படுகின்ற பலாத்காரத்தை குற்றமாக அங்கீகரிக்கும் சட்டம் என்பது போன்ற மிக முக்கியமான, அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் குடும்ப வன்முறைகளுக்கு எதிரான சட்டங்களை நீர்த்துப் போகச் செய்வதற்கான தன்னுடைய முயற்சிகளுக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்கலாம்.
உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான நாடுகளில், வயதுக்கு வருகின்ற வயதிற்கும், திருமணத்திற்கான தகுதிக்கான வயதிற்கும் இடையில் வேறுபாடுகள் எதுவும் இருக்கவில்லை. வயதுக்கு வரும் வயதை பதினெட்டு என்று பரிந்துரைத்து 1989ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தில் இந்தியா கையொப்பமிட்டுள்ளது. உலகளாவிய ஒருமித்த கருத்துக்கு எதிராகச் செல்வதற்கு இந்த அரசாங்கம் கூறுகின்ற காரணங்கள் எதுவும் உண்மையில் நம்பத்தகுந்தவையாக இல்லை. அவை எதிர்விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவையாகவே இருக்கின்றன.
https://www.ndtv.com/opinion/centres-hypocrisy-in-raising-marrying-age-for-women-to-21-2660378
நன்றி: என்டிடிவி
தமிழில்: தா.சந்திரகுரு
முஸ்லீம்கள் தொழுகை நடத்துவதற்கு சிக்கலை ஏற்படுத்தும் ஹரியானா முதல்வர் கட்டாரின் நயவஞ்சகம் – பிருந்தா காரத் | தமிழில்: தா.சந்திரகுரு
முஸ்லீம்கள் 2018ஆம் ஆண்டு முதல் அதிகாரப்பூர்வமாக ஒதுக்கப்பட்ட இடங்களில் தொழுகை நடத்தி வருவதை வலுக்கட்டாயமாகத் தடுத்து நிறுத்துவது இஸ்லாமிய வெறுப்பு அடிப்படையில் இயங்குகின்ற குழுக்களின் கைவேலையாக இருக்கும் என்றே யாரும் நினைக்கலாம். ஹரியானா முதல்வர் எம்.எல்.கட்டார் இப்போது நேரடியாக அந்தச் சாதனையைச் செய்திருக்கிறார். திறந்தவெளியில் தொழுகைகள் நடத்தப்படுவதை தனது அரசாங்கம் ‘சகித்துக் கொள்ளாது’ என்றும், முஸ்லீம்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே தொழுகை நடத்திக் கொள்ள வேண்டும் என்றும் அச்சுறுத்துகின்ற ஆட்சேபணைக்குரிய மொழியில் கடந்த சனிக்கிழமையன்று முதல்வர் கட்டார் முஸ்லீம்களை எச்சரித்திருந்தார்.இதுபோன்ற பிரச்சனைகளை முதலமைச்சர் ஒருவரே உருவாக்குவது மக்களைத் தவறாக வழிநடத்துகின்ற செயலாகவே இருக்கிறது. மதநம்பிக்கை கொண்ட முஸ்லீம்கள் அனைவரும் வெள்ளிக்கிழமைகளில் ஒன்று கூடி ஜமாஅத் தொழுகைகளில் கலந்து கொள்வது பொதுவான வழக்கம். மற்ற நாட்களில் அவர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் வீடுகளிலேயே தொழுகைகளை நடத்திக் கொள்கின்றனர். இந்த நிலைதான் நாடு முழுவதும் இருந்து வருகிறது. ஏதோ முஸ்லீம்கள் சாலைகளிலும், திறந்த வெளியிலும் அமர்ந்து நாளொன்றிற்கு ஐந்து முறை தொழுகைகளை நடத்திக் கொண்டிருப்பதைப் போல, வீட்டில் மட்டுமே முஸ்லீம்கள் தொழுகை நடத்த வேண்டும் என்று குறிப்பாக ஹரியானா முதல்வர் எதற்காக உத்தரவிட வேண்டும்?
இரண்டாவதாக முதல்வர் கட்டார் தன்னுடைய உரையில் உண்மைகளைக் கூறுவதை வேண்டுமென்றே தவிர்த்திருக்கிறார். குருகிராம் மக்கள்தொகையில் ஐந்து சதவிகிதத்திற்கும் குறைவான முஸ்லீம்களே இருக்கின்றனர். குருகிராமில் அதிக எண்ணிக்கையில் மசூதிகள் இல்லாததால், வெள்ளிக்கிழமை ஜமாஅத் தொழுகையை நடத்துவதில் அவர்கள் பெரும்சிக்கலை எதிர்கொண்டு வருகின்றனர். பள்ளிவாசல்களுக்கான இடங்களை வாங்குவதற்கு முஸ்லீம் சமூகத்தின் பிரதிநிதிகளால் மீண்டும் மீண்டும் மேற்கொள்ளப்படுகின்ற முயற்சிகள் அதிகாரப்பூர்வ நிறுவனங்களால் முறியடிக்கப்படுகின்ற அதேசமயத்தில் மற்ற வழிபாட்டுத் தலங்களுக்கு பிரச்சனைகள் எதுவுமின்றி நிலங்கள் ஒதுக்கப்படுகின்றன. மற்றவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அல்லது அரசு நிறுவனங்களிடம் இருக்கின்ற வக்ஃப் நிலங்களில் மசூதிகள் கட்டிக் கொள்ளலாம் அல்லது தொழுகைக்காக சுற்றுச்சுவர்களுடனான திறந்த வெளிகளை அமைத்துக் கொள்ள முடியும் என்பதால் அவற்றை மீட்டுத் தருமாறு அரசாங்கத்திடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. வக்ஃப் நிலத்தை மீளப் பெற்றுத் தருவதாக 2018ஆம் ஆண்டே அரசாங்கம் உறுதியளித்திருந்த போதிலும், அதன் பிறகு பெரிதாக நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
மூன்றாவதாக திறந்தவெளியில் தொழுகை நடத்துவது தொடர்பாக 2018ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் அரசு நிர்வாகத்தால் இப்போது ஏன் வேண்டுமென்றே புறக்கணிக்கப்படுகிறது என்பதற்கு முதலமைச்சரிடமிருந்து எந்த விளக்கமும் கிடைக்கப் பெறவில்லை. சில அமைப்புகள் பொது இடங்களில் தொழுகை நடத்த 2018ஆம் ஆண்டு மே மாதம் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. அரசு நிர்வாகம் வெள்ளிக்கிழமை தொழுகைக்கென்று முப்பத்தியேழு இடங்களை ஒதுக்கித் தந்தது. வெள்ளிக்கிழமை தொழுகை ஐந்து நிமிடங்களுக்கு மேல் நீடிப்பதில்லை. இரண்டு ரக்அத்கள் ஓதப்படும். ஒரு குத்பா ஓதப்பட்டால், அது பொதுவாக பதினைந்து முதல் இருபது நிமிடங்களுக்கு நீடிக்கும். குருகிராமில் தொழுகைக்காக அரசால் ஒதுக்கித் தரப்பட்ட பெரும்பாலான இடங்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் அமைந்திருக்கவில்லை. அவை முக்கிய சாலைகள் அல்லது தொழிற்சாலைப் பகுதிகளை ஒட்டியுள்ள லாரிகள் நிறுத்தப் பயன்படுத்தப்படுகின்ற காலி இடங்களாகவே இருந்தன. தொழுகையால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டதாகவோ, வழித்தடங்கள் எதுவும் தடைபட்டதாகவோ ஒருபோதும் இருந்ததில்லை. அந்த ஒப்பந்தத்தை இப்போது திரும்பப் பெற்றுக் கொண்டதற்கான காரணம் என்ன? அந்த இடங்களின் எண்ணிக்கையைத் தற்போது பத்துக்கும் குறைவான இடங்களாக நிர்வாகம் குறைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அரசின் நேர்மைற்ற, நியாயமற்ற செயலாக இருப்பதுடன் அது முற்றிலும் ஒருபக்கச் சார்பானதாகவும் இருக்கிறது.பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக மிரட்டல், அச்சுறுத்தலில் மாநில முதல்வரே ஈடுபடுகிறார். ஆனால் அவருக்கு நேர்மாறாக முஸ்லீம்களிடம் அனுதாபத்தையும் ஆதரவையும் வழங்கிய பிற குடிமக்களும் குருகிராமில் இருக்கவே செய்கின்றனர். வெள்ளிக்கிழமை தொழுகையில் கலந்து கொள்பவர்களில் பலர் ஆடை மற்றும் பிற தொழில்களில் பணிபுரியும் தொழிற்துறை சார்ந்த தொழிலாளர்களாக அல்லது அமைப்புசாரா துறை சார்ந்த தொழிலாளர்களாகவே இருக்கின்றனர். போதிய இடவசதியுடன் உள்ள சில தொழிற்சாலைகளில் அந்த தொழிற்சாலை உரிமையாளர்கள் – பெரும்பாலும் ஹிந்துக்கள் – அங்கேயே தங்கள் தொழிலாளர்களை தொழுது கொள்வதற்கு அனுமதிக்கின்றனர். வகுப்புவாதப் பிரிவினைகள் தங்கள் தொழிற்சாலையில் நடைபெறுகின்ற வேலைகளை எவ்வாறு பாதிக்கும் என்பதைப் பற்றி அவர்கள் கவலைப்படுகிறார்கள் என்பது அதன் மூலம் தெளிவாகிறது. ஆயினும் காரணம் எதுவாக இருந்தாலும், அது நேர்மறையான விளைவையே கொண்டிருக்கிறது. தொழிற்சாலைகளில் பணியாற்றும் சக ஊழியர்களும், ஹிந்துக்களும் எதிர்ப்பு தெரிவித்ததாக எந்தவொரு சம்பவமும் நடைபெற்றிருக்கவில்லை. குருகிராமில் வசிக்கும் பலரும் தொழுகைக்கான இடங்களை வழங்குவதில் ஆதரவுடனே இருந்து வருகின்றனர்.
கடந்த சில வாரங்களாக இந்திய அரசியலில் இரண்டு இணையான போக்குகள் காணப்படுகின்றன. முதலாவதாக தொழிலாளர்கள் ஆதரவுடன் நடத்தப்பட்ட விவசாயிகளின் ஒன்றுபட்ட போராட்டங்களுக்கு கிடைத்த வரலாற்று வெற்றி வெளிப்படுத்திக் காட்டியுள்ள ஒற்றுமை அரசியல். அந்த ஒற்றுமையே பல்வேறு பிராந்தியங்களில் கட்டப்பட்டிருக்கும் வகுப்புவாதச் சுவர்களை உடைத்தெறிந்து, பின்வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு அரசாங்கத்தைத் தள்ளியதில் முக்கிய காரணியாக இருந்திருக்கிறது.
இரண்டாவதாக குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக மதத்தைத் தவறாகப் பயன்படுத்துகின்ற மத்திய ஆளுகின்ற கட்சியின் தலைவர்களின் ஆத்திரமூட்டும் பேச்சுகள் – அவை ஹரியானா முதல்வரின் அல்லது குஜராத் மாநில வருவாய் அமைச்சர் ராஜேந்திர திரிவேதியின் வார்த்தைகளில் தென்படுகின்றன. சாலைகளில் அசைவ உணவுகளை வெளிப்படையாக விற்பது ஹிந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக திரிவேதி கூறியிருந்தார். அதுபோன்ற பேச்சுகள் புறந்தள்ளக் கூடியவையாக இருந்தாலும், அவை ஒரு தொகுதியை வலுப்படுத்தும் வகையிலே வடிவமைக்கப்படுகின்றன. குருகிராமில் தீவிரவாத ஹிந்துத்துவா குழுக்கள் தொழுகையை நிறுத்தி வைக்கிறார்கள் என்றால், குஜராத்தில் அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் அசைவ உணவு விற்பனையாளர்களுக்குத் தடை விதித்து, அவர்களின் பொருட்களைக் காவல்துறையினர் பறிமுதல் செய்கின்றனர். குஜராத்தில் நடந்தது குஜராத் உயர் நீதிமன்றத்தின் கடுமையான விமர்சனத்திற்கு வழிவகுத்துக் கொடுத்தது. உத்தரப்பிரதேசத்தில் மத்திய மற்றும் மாநில அளவிலான பாஜக தலைவர்களின் ஒவ்வொரு பேச்சும் வகுப்புவாதத்தைத் தூண்டும் வகையிலேயே இருக்கின்றன.இதுபோன்ற பல எடுத்துக்காட்டுகள் உள்ளன என்றாலும் ‘பாதுகாப்பு அச்சுறுத்தல்’ என்ற பெயரில் ஒட்டுமொத்த சமூகத்தையும் மோசமாகச் சித்தரித்து அச்சுறுத்துகின்ற இப்போதைய போக்கு கூடுதல் கவலையளிப்பதாகவே இருக்கின்றது. குருகிராமில் முஸ்லீம்களுக்கு எதிராக நடத்தப்படுகின்ற போராட்டங்களுக்கு ஏற்பாடு செய்தவர்கள் பகிர்ந்துள்ள வீடியோவில் விஎச்பி தலைவர் ஒருவர் ‘இது தொழுகை அல்ல, ஜிஹாத், பயங்கரவாதம்’ என்று கூறுகின்றார். இது போன்ற பிரச்சாரமே ஹிந்துக்கள் வசிக்கின்ற உள்ளூர்ப் பகுதிகளுக்குள் தெருவோர முஸ்லீம் வியாபாரிகள் நுழைவதை ஹிந்துத்துவா குழுக்கள் வலுக்கட்டாயமாகத் தடுக்கின்ற போது அல்லது முஸ்லீம்கள் வாடகை குடியிருப்பாளர்களாக நிராகரிக்கப்பட்டிருக்கும் பிற குடியிருப்பு பகுதிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்தப் பிரச்சாரம் ஒரு சமூகத்தைப் பற்றிய அச்ச உணர்வை உருவாக்க பெரும்பாலும் பாதுகாப்பு என்ற அஸ்திரத்தை தன்னுடன் இணைத்துக் கொள்கிறது. இது ஹிந்துத்துவா சக்திகள் பயன்படுத்துகின்ற திட்டமிட்ட உத்தியாகும். அது அவர்களுடைய உன்னதமான தேசியவாதம், பெரும்பான்மைவாதத்துடன் முற்றிலும் பொருந்திப் போவதாக இருக்கிறது.
விவசாயிகள் போராட்டத்தைப் போல் வெறுப்பு மற்றும் பிரிவினை அரசியலை வெகுஜனப் போராட்ட அரசியலின் பலத்தால் முறியடித்திட முடியும். ஆனால் அது நீண்ட தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு, ஒரு போராட்டத்தின் போது உருவாகும் தன்னிச்சையான சகோதரத்துவ உணர்வுகளுக்கு அப்பால் நாம் செல்ல வேண்டியது அவசியம். பிளவுபடுத்துகின்ற வகுப்புவாத சக்திகளால் மேற்கொள்ளப்படுகின்ற சிறுபான்மையினருக்கு எதிரான அணிதிரட்டல்களுக்கு எதிராக தன்னுனர்வு கொண்ட போராட்டத்திற்கான அரசியல் நோக்குநிலை நிச்சயமாக இப்போது தேவைப்படுகிறது. தானாகப் போய்விடும் என்ற நம்பிக்கையில் பிரச்சனையைப் புறக்கணிக்கின்ற எந்தவொரு தற்காப்பு நிலையும், மதவெறி அடிப்படையில் மக்கள் பிளவுபடுகின்ற போது அதிக நன்மையடைகின்ற சக்திகளைத் தைரியப்படுத்துவதை மட்டுமே செய்யும்.
https://www.ndtv.com/opinion/haryana-chief-ministers-deceit-in-handling-the-namaaz-issue-2648573
நன்றி என்டிடிவி
தமிழில்: தா.சந்திரகுரு
தன்னுடைய தோல்வியில் பிரதமர் மோடி பெருந்தன்மையுடன் இருந்திருக்கவில்லை – பிருந்தா காரத் | தமிழில்: தா. சந்திரகுரு
மூன்று வேளாண் சட்டங்களை தனது அரசாங்கம் ரத்து செய்யும் என்ற பிரதமரின் அறிவிப்பு ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் (சம்யுக்தா கிசான் மோர்ச்சா) தலைமையின் கீழ் நடைபெற்று வந்த விவசாயிகளின் ஓராண்டு கால, வரலாற்றுச் சிறப்புமிக்க, ஒன்றுபட்ட போராட்டத்திற்கு கிடைத்திருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியாகும். தன்னுடைய தோல்வியில் மோடி பெருந்தன்மையுடன் இருந்திருக்கவில்லை.
போராட்டத்தில் வீரமரணம் அடைந்த எழுநூறு விவசாயிகளுக்காக அவர் தன்னுடைய உரையில் ஒரு வார்த்தை கூட வருத்தம் தெரிவித்திருக்கவில்லை. விவசாயிகள் மீதான பொய் வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும் என்பதற்கான எந்தவொரு உறுதியும் அவரது பேச்சில் காணப்படவில்லை. பயங்கரவாதிகள், துரோகிகள், குண்டர்கள், சீர்குலைப்பவர்கள், பொய்யர்கள், ஏமாற்றுக்காரர்கள் என விவசாயிகளுக்கு எதிராக அவரது கட்சித் தலைவர்களால் இந்த ஓராண்டாகப் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கும் கடுமையான வார்த்தைகளுக்கான மன்னிப்பும் இருக்கவில்லை. லக்கிம்பூர் கேரியில் நடந்த பயங்கரச் சம்பவங்களுக்குக் காரணமாக இருந்தவர் இன்னும் ஒன்றிய அமைச்சரவையில் அங்கம் வகித்து வருகிறார். மோடி அதுகுறித்து கனத்த மௌனம் காத்து வருகிறார்.
சட்டங்களுக்கு ஆதரவாகப் பேசிய பிரதமர் விவசாயிகளில் ‘சிலரை’ நம்ப வைக்கத் தவறியதற்கு வருந்துகிறேன் என்று கூறி தன்னுடைய பக்கமே கோல் அடித்து வைத்திருக்கிறார். இங்கே ஒரு கேள்வி நம்மிடையே எழுகின்றது: இந்தச் சட்டங்கள் உண்மையிலேயே நல்லவை என்றால், அவற்றை ‘சில’ விவசாயிகள் மட்டுமே எதிர்த்திருந்தால், அவர் ஏன் அவ்வாறான நல்ல சட்டங்களைத் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும்? விவசாயிகளின் போராட்டத்தின் மையப்பகுதிகளான உத்தரப்பிரதேசம், பஞ்சாபில் வரவிருக்கும் தேர்தல்களில் ஏற்படப் போகும் அரசியல் வீழ்ச்சி என்பதைத் தவிர, சட்டங்களை விலக்கிக் கொண்டதற்கான காரணத்தை அறிந்து கொள்ள அரசியல் அறிவியலாளர் எவரின் உதவியும் நமக்குத் தேவைப்படப் போவதில்லை.
வாய்ப்பு கிடைத்து அந்த மாநிலத் தேர்தல்களில் வெற்றி பெற்றால், அரசாங்கம் அந்தச் சட்டங்களை மீண்டும் விவசாயிகள் மீது திணிக்கும் என்பதாகவே சட்டங்களைத் திரும்பப் பெற்றுக் கொள்ளும்போது கூட, சட்டங்களுக்கு ஆதரவாக இருந்த பிரதமரின் அந்தக் குரல் உரத்து, மிகத்தெளிவாக விவசாயிகளின் காதுகளை எட்டியுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் பாஜகவின் முக்கிய போட்டியாளராக அதிகாரத்திற்கு வருவதற்காக காத்திருக்கும் சமாஜ்வாதி கட்சி, ஏற்கனவே ‘அவர்களுடைய நோக்கங்கள் பெருந்தன்மையுடன் இருக்கவில்லை; தேர்தலுக்குப் பிறகு மீண்டும் சட்டங்களைக் கொண்டு வருவார்கள்’ என்ற முழக்கத்தை உருவாக்கியுள்ளது.
குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டப்பூர்வமான உத்தரவாதம் வேண்டும் என்று தாங்கள் எழுப்பி வரும் மிக முக்கியமான பிரச்சனைக்குத் தீர்வு காணும் வரை, தங்களுடைய போராட்டத்தைத் திரும்பப் பெறப் போவதில்லை என்று ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. மின்சாரத் திருத்தச் சட்டம் உள்ளிட்ட தீர்க்கப்பட வேண்டிய மற்ற பிரச்சனைகளும் விவசாயிகளின் தலைவர்களால் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன. அந்தத் தலைவர்களில் பலரும் பிரதமரின் அறிவிப்பு குறித்து தங்களுடைய சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
அரசாங்கத்தின் மீதான அவநம்பிக்கை அவர்களிடையே மிகவும் அதிகமாக உள்ளது. எனவே சட்டங்களைத் திரும்பப் பெறுவது என்ற நடவடிக்கையின் மூலம் விவசாயிகளின் கோரிக்கைகளை தேர்தல் களத்திலிருந்து நீக்கிவிடலாம் என்று பாஜக நினைக்குமென்றால், விரும்பத்தகாத ஆச்சரியத்திற்கே அந்தக் கட்சி உள்ளாக நேரிடும்.
பாஜகவின் இந்த நடவடிக்கைக்கு மேலும் ஓர் இழிவான காரணமும் உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் குறிப்பாக மேற்கு உத்தரப்பிரதேசத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக நடந்தப்பட்ட வகுப்புவாத கலவரங்கள் பாஜகவிற்கு தேர்தல் பலன்களை அளித்தன. இம்முறையும் தேர்தலுக்கான ஆயத்த வேலைகள் தொடங்கியதில் இருந்தே, வகுப்புவாத நச்சு முழக்கங்கள், சிறுபான்மையினரைக் குறிவைத்து ‘லவ் ஜிஹாத்’ பிரச்சாரங்கள், வன்முறையுடனான பசுவதை எதிர்ப்பு பிரச்சாரங்கள், தங்கள் விருப்பப்படி முஸ்லீம் இளைஞர்களை கைது செய்வதற்கான உரிமத்தை காவல்துறைக்கு வழங்குதல் போன்ற செயல்பாடுகளின் மூலம் வகுப்புவாத ஒற்றுமையை சீர்குலைக்கும் பணியில் பாஜக ஈடுபட்டு வருகிறது.
ஆனாலும் அவர்களுடைய வகுப்புவாத பிரச்சாரத்திற்கான எதிர்வினை மந்தமாகவே உள்ளது. மத சமூகங்கள், சாதிகளுக்கு அப்பாற்பட்டு விவசாயிகளிடம் இருக்கின்ற ஒற்றுமையானது பாஜகவின் இயல்பான தேர்தல் வியூகத்திற்குத் தடையாக இருந்து வருகிறது. விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதன் மூலம் இப்போதைக்கு விவசாயிகளின் பிரச்சனையிலிருந்து விடுவித்துக் கொண்டு மக்களைப் பிளவுபடுத்துகின்ற தங்களுடைய திட்டங்களை முன்வைப்பதற்கான சிறந்த வாய்ப்பைப் பெற முடியும் என்று பாஜக நம்புகிறது. விவசாயிகள் கற்றுக் கொடுத்திருக்கும் பாடங்களை அரசாங்கம் கற்றுக்கொள்ளுமேயானால் அது இந்தியாவிற்கு மிகவும் நல்லது.
பாடம் 1: முரட்டுத்தனமான பெரும்பான்மை என்ற பலத்தைப் பயன்படுத்தி பாராளுமன்ற நடைமுறைகளைத் தகர்ப்பது பெருத்த இழப்பை ஏற்படுத்துவதாகவே இருக்கும். மசோதாக்களை நிலைக்குழுவிற்கு அரசு அனுப்பியிருந்தால், விவசாயிகளின் கருத்தைக் கேட்பதற்கான வாய்ப்பை அளித்திருந்தால், நியாயமான வாக்குப்பதிவு நடைமுறைகளை பாராளுமன்றத்தில் அனுமதித்திருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. நிச்சயம் அந்த மசோதாக்கள் சட்டங்களாக மாறியிருக்காது.
பாடம் 2: எதிர்க்குரல்களைப் புறக்கணிப்பதும், அவமதிப்பதும் எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும். இந்த அரசு ஆரம்பத்திலிருந்தே தன்னுடைய ஒட்டுமொத்த அதிகாரத்தை விவசாயிகளை இழிவுபடுத்துவதற்கே பயன்படுத்தியது. ஆதிவாசிகள், தலித்துகள், சிறுபான்மையினருக்கான நீதிக்காக வாதிடுபவர்களை ‘நகர்ப்புற நக்சல்கள்’ என்று முத்திரை குத்தி சிறையில் அடைத்ததைப் போல, விவசாயிகள் தலைவர்கள் மீதும் தேச விரோதிகள் என்று முத்திரையைக் குத்தியது. இந்த நிலையில் மத்தியிலும் மாநிலங்களிலும் உள்ள பாஜக மற்றும் அதன் அரசுகளுக்கு எதிரான வெகுஜனப் போராட்டமாக விவசாயிகளின் போராட்டம் இயல்பாக மாறியது. விவசாயிகளின் ஒன்றிணைந்த இயக்கங்களின் பலம் அரசாங்கத்தைத் தற்காப்பு நிலைக்குத் தள்ளியது.
எந்த விளக்கமும் தேவைப்படாத பாடம் 3: இந்திய தொழிலாளர் வர்க்கங்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் தங்களுடைய துணிச்சலின் மூலம் சர்வாதிகாரம் பலிக்காது, சர்வாதிகாரத்தைத் தோற்கடிக்க முடியும் என்பதைச் சாதித்துக் காட்டியுள்ளனர்.
விவசாய இயக்கத்தின் வெற்றி பரந்த தாக்கங்களைக் கொண்டிருக்கின்றது. இந்த வெற்றி நமது அரசியலமைப்பில் பொதிந்துள்ள நீதி, ஜனநாயகம், மதச்சார்பின்மை ஆகியவற்றின் மீது அனைவருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
https://www.ndtv.com/opinion/opinion-three-lessons-for-modi-government-from-farmers-struggle-2617153
நன்றி: என்டிடிவி
தமிழில்: தா.சந்திரகுரு