Attempt to rewrite the history of the liberation struggle in Tamil Translated By Sa Veeramani. விடுதலைப் போராட்டத்தின் வரலாறு திரித்து எழுத முயற்சி - தமிழில்: ச.வீரமணி

விடுதலைப் போராட்டத்தின் வரலாறு திரித்து எழுத முயற்சி – தமிழில்: ச.வீரமணி




ஜனவரி 11 அன்று, பி.ஐ.பி. என்னும் பத்திரிகைத் தகவல் மையம் (PIB-Press Information Bureau), ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் ஓர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இது இந்திய சுதந்திர தினத்தின் 75ஆவது ஆண்டு கொண்டாட்டத்தை அனுசரிப்பது சம்பந்தமானதாகும். ஆசாதி கா அம்ரித் மகோத்சவ் (Azadi ka Amrit Mahotsav) என அதற்குப் பெயரும் இட்டிருக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சியாளரிடமிருந்து சுதந்திரத்திற்காகப் போராடி வீர காவியம் படைத்திட்ட இந்திய மக்களின் வரலாற்றைத் திரித்து எழுதுவதற்காகவே மோடி அரசாங்கம் இவ்வாறு அறிவித்திருக்கிறது என்பது தெளிவாகும்.

இந்த அறிவிப்பில், “இந்திய விடுதலை இயக்கம் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான போராட்டத்துடன் மட்டும் வரையறுக்கப்பட்டுவிடவில்லை, மாறாக அது அதற்கும் முன்பாகவே நாட்டின் அடிமைத்தனத்தின் காலகட்டத்தையும் கடந்திருக்கிறது,” (“the freedom movement is not limited only to British rule, even before that India has gone through a period of servitude”) என்று கூறுகிறது. இன்றைய தினம் நிறுவப்பட்டுள்ள இந்தியத் துணைக் கண்டத்தின் பூகோள வரைபடம், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அவர்கள் அழைத்ததுபோன்று பல்வேறு “மன்னர் சமஸ்தானங்களாக” (“princely states”) இருந்தது.

பிரிட்டிஷாரை விரட்டியடிப்பதில் வெற்றிபெற்ற விடுதலை இயக்கம், பின்னர், இந்தியாவில் இருந்துவந்த 650க்கும் மேற்பட்ட மன்னர் சமஸ்தானங்களை இந்திய ஒன்றியம் என்னும் ஒரே குடையின்கீழ் கொண்டுவந்தது. அந்த அடிப்படையில்தான் அரசியல் நிர்ணயசபையால் இந்திய அரசமைப்புச்சட்டம் தயாரிக்கப்பட்டது. இந்த அரசமைப்புச்சட்டம் 1950இல் நிறைவேற்றப்பட்டதன் மூலமாக, இந்தியா என்னும் ஒரு மதச்சார்பற்ற-ஜனநாயகக் குடியரசு பிரகடனம் செய்யப்பட்டது. அதாவது, சுதந்திரம் பெற்ற 1947 ஆகஸ்ட் 15க்குப்பின் ஒன்றரை ஆண்டுகள் கழித்து, இவ்வாறு பிரகடனம் செய்யப்பட்டது. இந்தியா, பிரிட்டிஷ் காலனிய ஆட்சியை வெற்றிகரமாகத் தோற்கடித்தபின்னர் ஒரு சுதந்திரமான நாடாக மாறியது.

இத்தகைய வீரகாவியம் படைத்திட்ட சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்கோ மற்றும் அதன் இந்துத்துவா சித்தாந்தத்தின் முன்னோடிகளுக்கோ எவ்விதப் பங்கும் கிடையாது. இப்போராட்டத்தில் அளப்பரிய தியாகங்கள் புரிந்த இந்திய மக்கள் தங்கள் மத பேதங்களை ஒதுக்கித்தள்ளிவிட்டு, சுதந்திரம் பெற்றிடவும், ஒரு மதச்சார்பற்ற-ஜனநாயகக் குடியரசை நிறுவியிருப்பது குறித்தும் அவர்களுக்கும் எவ்விதச்சம்பந்தமும் கிடையாது.

இப்போது ஒன்றிய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை, இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் முதல் யுத்தம், 1857 எழுச்சிக்கு, ஸ்வாமி விவேகானந்தரும், ரமண மகரிஷியும் உத்வேகம் ஊட்டினார்கள் என்று கூறுகிறது. ஸ்வாமி விவேகானந்தர் 1863ஆம் ஆண்டிலும், ரமண மகிரிஷி 1879ஆம் ஆண்டிலும் பிறந்தவர்களாவார்கள். இவர்கள் எப்படி இவர்கள் பிறப்பதற்கு முன்பே நடைபெற்ற 1857 கலகத்திற்கு உத்வேகம் ஊட்டினார்கள் என்பது வேடிக்கையாக இருக்கிறது.

1857 கலகம், இந்திய மக்களின் ஒன்றுபட்ட போராட்டத்தால் நடைபெற்றது. இதில் இந்துக்களும் முஸ்லீம்களும் பிரதானமான பங்களிப்பினைச் செய்தார்கள். ஜான்சி ராணி, லட்சுமிபாய் அவர்கள், தாண்டியா டோப் (Tantia Tope) மற்றும் இதர தலைவர்களுடன் இணைந்து, 1857இல் தில்லி செங்கோட்டையில் நின்றுகொண்டு, பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியா சுதந்திரம் பெற்றுவிட்டது என்றும், இனி சுதந்திரமான இறையாண்மையுடன் கூடிய இந்தியாவை மொகலாய அரசர், பகதூர் ஷா ஜஃபார் (Bahadur Shah Zafar) ஆட்சி புரிவார் என்றும் பிரகடனம் செய்தார்கள். பகதூர் ஷா ஜஃபார் அவர்களை ஆர்எஸ்எஸ் அகராதியானது, “பாபரின் சந்ததியைச் சேர்ந்தவர்” (“Babur ki Aulad”) எனக் கேலி செய்துள்ளது.

ஹரித்வாரில் நடைபெற்ற சாமியார்கள் நாடாளுமன்றத்தில் முஸ்லீம்களைத் தீயிட்டுக் கூண்டோடு கொலை செய்திட வேண்டும் என்று அறைகூவல் விடுக்கப்பட்டது, சமூக ஊடகங்களில் முஸ்லீம் பெண்களைக் குறிவைத்து எண்ணற்ற அசிங்கமான ஆப்புகள் (nasty and obscene apps) வலம் வந்துகொண்டிருப்பது, உத்தரப்பிரதேச முதலமைச்சர் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் 80 சதவீதத்தினரான இந்துக்களுக்கும், 20 சதவீதத்தினரான முஸ்லீம்களுக்கும் இடையேயான போராட்டம் என்று பிரகடனம் செய்திருப்பது (உத்தரப்பிரதேசத்தில் முஸ்லீம்களின் மக்கள்தொகை சுமார் 19 சதவீதமாகும்) ஆகியவற்றை இந்தப் பின்னணியில் பார்த்திட வேண்டும்.

ஒன்றிய மோடி அரசாங்கம் மேலே கண்டவாறு ஆபத்தான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருப்பது ஆர்எஸ்எஸ் மற்றும் மோடி அரசாங்கம் இப்போதுள்ள இந்தியக்குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயகக் குணாம்சத்தை மாற்றியமைத்திட விரும்புகிறார்கள் என்னும் நோக்கத்தைத் தெளிவாகவே வெளிப்படுத்துகிறது.

இவர்களின் சூழ்ச்சித்திட்டம் மிகவும் தெளிவானவையே. இவர்கள் இந்திய அரசமைப்புச்சட்டத்தால் அளிக்கப்பட்டுள்ள இப்போதைய மதச்சார்பற்ற-ஜனநாயக இந்தியக் குடியரசை, தாங்கள் விரும்பும் வெறிபிடித்த சகிப்புத்தன்மையற்ற பாசிஸ்ட் “இந்துத்துவா ராஷ்ட்ரமாக” மாற்ற வேண்டும் என்பதே இவர்களின் சூழ்ச்சித்திட்டமாகும். இது, சுதந்திரத்திற்காகப் போராடிய இந்திய மக்களின் போராட்டத்திற்கு நேரெதிரான ஒன்றாகும்.

பிஐபி பத்திரிகைச் செய்தி மேலும், “இந்த அநாமதேய சுதந்திரப் போராளிகள் மீதான கவனத்தை மாற்றும் நோக்கத்துடன், அம்ரித் மகோத்சவ் கொண்டாட்டங்கள் தொடங்கி இருக்கின்றன” (“With the purpose to shift the spotlight on these anonymous freedom fighters, Amrit Mahotsav celebrations have been started”) என்று கூறுகிறது. இதற்குப்பின் ஒளிந்துள்ள நிகழ்ச்சிநிரல் என்னவெனில், விடுதலைப் போராட்டக் காலத்தில் உண்மையில் பிரிட்டிஷாருடன் கூடிக்குலாவிய ஆர்எஸ்எஸ்/இந்துத்துவா பேர்வழிகளை, “வீராதிவீரர்கள்” எனக் காட்டுவதற்கான முயற்சிகளேயாகும். ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்கு மிகவும் அனுதாபம் காட்டக்கூடிய விதத்தில் புத்தகங்கள் எழுதியுள்ள வால்டர் கே.ஆண்டர்சன் மற்றும் ஸ்ரீதர் டி. டாம்லே போன்றவர்கள்கூட (The Brotherhood in Saffron by Walter K Andersen and Shridhar D Damle, 1987, amongst others) விடுதலை இயக்கத்தில் ஆர்எஸ்எஸ் முற்றிலுமாக இல்லாமலிருந்த விவரங்களையும், அதன்காரணமாக பிரிட்டிஷாரிடமிருந்து பல்வேறு ஆதாயங்களைப் பெற்ற விவரங்களையும் அளித்திருக்கின்றனர்.

அவர்கள் தங்கள் புத்தகத்தில் மேலும் கூறியிருப்பதாவது: “உண்மையில், பம்பாய் உள்துறை, 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது, சங் பரிவாரங்கள் சட்டத்திற்கு உட்பட்டு எவ்விதமான போராட்ட நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல் தன்னைப் பார்த்துக்கொண்டது. குறிப்பாக, 1942 ஆகஸ்ட்டில் நடைபெற்ற கலவரங்களின்போது எவ்விதப் பங்கும் மேற்கொள்ளாது தன்னைத் தவிர்த்துக்கொண்டது….” (ஆண்டர்சன் – டாம்லே எழுதிய புத்தகம், 1987, ப.44). “இந்துத்துவா ராஷ்ட்ரத்தை” நிறுவ வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்கு இருந்துவந்த அரிப்புதான், அதனை பிரிட்டிஷாருக்கு வெண்சாமரம் வீச இட்டுச்சென்றது.

இவ்வாறாக ஆர்எஸ்எஸ் இயக்கமானது பிரிட்டிஷாருடன் கூடிக்குலாவியது நன்கு நிறுவப்பட்டுள்ளபோதிலும், அது விடுதலைப் போராட்டத்தில் கம்யூனிஸ்ட்டுகளின் பங்களிப்புகளுக்கு எதிராக அவதூறுச் சேற்றை வாரி இறைத்திட எப்போதும் தயங்கியது இல்லை.

இதற்கு ஓர் எடுத்துக்காட்டாக 1992 ஆகஸ்ட் 9 அன்று வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 50ஆவது ஆண்டு தினத்தைக் கொண்டாடும் சமயத்தில், அப்போதைய குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா, இந்திய நாடாளுமன்றத்தின் நள்ளிரவுக் கூட்டத்தில் ஆற்றிய உரையின் ஒரு பகுதியை மேற்கோள் காட்டினாலே போதுமானதாகும். அப்போது அவர், “கான்பூர், ஜாம்ஷெட்பூர், அகமதாபாத் ஆகிய இடங்களிலிருந்த ஆலைகளில் பெரிய அளவில் வேலை நிறுத்தங்கள் நடந்தபின்னர், 1942 செப்டம்பர் 5 அன்று தில்லியிலிருந்து லண்டன் அரசு செயலாளருக்கு அனுப்பப்பட்ட கடிதங்களில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைப் பற்றிக் குறிப்பிட்டு, அதில் உள்ளவர்களில் பலர் பிரிட்டிஷ் எதிர்ப்பு புரட்சியாளர்கள் என்று நிரூபணமாகியிருக்கிறது எனக் குறிப்பிடப்பட்டிருந்ததாகப்,” பேசினார்.

இதைவிட வேறெதுவும் சொல்ல வேண்டிய தேவை இருக்கிறதா, என்ன? சுதந்திர இந்தியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசுத் தலைவர் ஒருவரே, இந்திய நாடாளுமன்றத்தில் அதிகாரபூர்வமாகப் பேசும்போது, கம்யூனிஸ்ட்டுகள் எப்போதும் “பிரிட்டிஷ் எதிர்ப்பு புரட்சியாளர்களாகவே” இருந்தார்கள் என்று நேரடியாகவேப் பதிவு செய்திருக்கிறார்.

இந்திய அரசமைப்புச்சட்டத்தால் உத்தரவாதமளிக்கப்பட்டுள்ள சமத்துவம், சமூகநீதி, சகோதரத்துவம் ஆகியவற்றை நோக்கிய நம் பயணத்திற்குத் தடையாக இருந்திடும், ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்களின் இத்தகைய ஆபத்தான நிகழ்ச்சிநிரல் முறியடிக்கப்பட்டாக வேண்டும்.

“இந்தியா, அதாவது பாரதத்திற்காக”, சுதந்திர இந்தியாவின் குணாம்சத்தை மாற்ற முயலும் இந்த மதவெறி சக்திகள் முறியடிக்கப்பட்டாக வேண்டும்.

நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி

Tigeris Book By Sa Balamurugan Bookreview By Karuppu Anbarasan நூல் அறிமுகம்: ச.பாலமுருகனின் டைகரிஸ் - கருப்பு அன்பரசன்

நூல் அறிமுகம்: ச.பாலமுருகனின் டைகரிஸ் – கருப்பு அன்பரசன்




நூல்: டைகரிஸ்
ஆசிரியர்: ச. பாலமுருகன்
வெளியீடு: எதிர்வெளியீடு
463 பக்கங்கள்
விலை: ₹.550/-
புத்தகம் வாங்க இங்கு க்ளிக் செய்யவும்: thamizhbooks.com

பள்ளிக் காலங்களிலும்.. கல்லூரிக் காலங்களிலும் நதி என்கிற இரண்டு எழுத்தினை உதடுகள் உச்சரிக்கும் பொழுது; அந்தி நேரத்து சூரியனின் கொஞ்சம் வெயிலில் கொஞ்சி ஓடிடும் சலசலக்கும் நீரின் ரம்மியமான இசையும்.. கரையோரத்தில் வளர்ந்து நிற்கும் நாணல் கூட்டத்தில் நுழைந்து எதிர்க்கரையில் பேசித்திரியும் காதலன் காதலியின் மெல்லிய சிரிப்பு சத்தத்தின் ரகசியத்தை, அவளின் கருநிற கூந்தலில் மட்டுமல்லாமல் கரையின் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தூவிச் செல்லும் சாதி மல்லியின் வாசத்தை தழுவித் ததும்பித் தீண்டிடும் இளம் காற்றை..

எதிர்பாராத கணமொன்றில் காதலனால் காதலியின் கால் சுண்டு விரலில் பதிந்திட்ட முத்தத்தின் ஈரத்தை.. இன்னும் சில முத்தங்களை பெற்றுவிட வேண்டும் என்று தன் கறுத்த முகமெங்கும் செம்பருத்தியின் சிவப்பை பொய்க் கோபமாய் பூசி இருக்கும் காதலியின் ஏக்கத்தை.. காதல் மனங்கள் பலவற்றிற்கு சாட்சியாக நதியின் போக்கில் வெட்டியும் ஒட்டியும் இரு கரைகளையும் இணைத்து வைக்கும் பரிசில்களும் படகுகளும்.. உழைக்கும் மனிதர்களின் உள்ளங்கை ரேகை தாங்கி நிற்கும் துடுப்புகளும்.. நீர் பாய்ந்து வரும் நிலத்தின் தன்மையை மனசும் அறிவும் உள்வாங்கிக்கொண்டதிற்கு ஏற்ப நதி ஆவேசமாகவும் அமைதியாகவும் மென்மையாகவும் நமக்குள் பல விதமான கோலங்களை நிகழ்த்திக் காட்டும். சமவெளியில் பாய்ந்துவரும் பொழுது ஒருவிதமான மன உணர்வினையும் மலைகளிலிருந்து நீர்வீழ்ச்சியாக குதித்து வரும் பொழுது மனதிற்குள் பெரிய உற்சாகத்தையும் மன உடைப்பையும் கொடுக்கும் பிம்பமாகவே நதி என்கிற வார்த்தை வசீகரம் மிக்கதாக வனப்பு மிகுந்ததாக.. காட்டுப் பூக்களின் நறுமணத்தை கொண்டதாக நமக்குள் பதியப்பட்டு இருக்கிறது.

ஆனால் மெசபடோமியாவின் டைகிரிஸ்..?

எழுத்தாளர் ச.பாலமுருகன் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது தமிழ் சமூக வாசகர்களுக்கு இன்று. இந்தியப் பெரும் சமூகம் இன்று சந்தித்து வரும் நிகழ்கால அரசியல் சூழலில்.. இந்திய நிலப்பரப்பில் பெரும் சமூகம் ஒன்று இன்னுமொரு சமூகத்தை எதிராக நிறுத்தி இனம் சார்ந்த அரசியல் படுகொலைகள் நடத்தி வரும் பேரபாயம் மிகுந்த சூழலில், இந்தப் புதினம் பேசிடும் ரத்தம் தோய்ந்த நிஜ வரலாறுதான் டைகரிஸ். அன்று நிலத்தின் மீது கொண்ட அதிகார, நிற, இன வெறியின் நிஜங்களை இன்றும் எள்ளளவும் முனை மாறாமல் அப்படியே நிகழ்ந்து கொண்டிருப்பதை கண்முன்னே கொண்டு வந்து பெரும் வலியோடு நிறுத்தி இருக்கிறது. நிலத்தின் மீது கொண்ட அதிகார ஆதிக்க வெறி என்பது எளிய மக்களை அவர்களின் சம்மதம் இல்லாமலேயே பெரும் போர் ஒன்றில் ஈடுபடுத்தி அவர்களின் உயிர் குடித்து தன்னை இன்றளவும் நிலை நிறுத்தி வருகிறது என்பதின் நெடிய வரலாற்றினை பாலமுருகன் பேசியிருக்கிறார் தன் டைகரிஸ் புதினத்தில்.

பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் அடிமைகளாய் வாழ்ந்து இந்திய மக்களை.. 1900 ஆண்டுகளின் தொடக்கத்தில் இந்தியா முழுமையிலும் தொற்றி அலைந்த பஞ்சத்தின் கொடூரத்தையும், பசியின் கொடுமையாலும் ஒருவேளை கஞ்சியாவது கிடைக்காதா என்று ஏங்கி அலைந்த மக்கள் பெரும் திரளுக்குள்.. ஆங்காங்கே முளைவிட்ட இந்திய விடுதலை உணர்வையும் தனதாக்கி, நில உரிமையின் மீதான.. இயற்கை வளங்களின் அதிகார ஆதிக்கத்தின் மீதான வெறியினால் தொடங்கிய முதலாம் உலகப்போரில் தங்களை அடிமைப்படுத்திய பிரிட்டிஷ் அரசின் அதிகார வெறிக்கு துணையாக தங்களை தாங்களே ஈடுபடுத்திக் கொண்ட அல்லது அதிகாரத்தின் மிரட்டலுக்கு பயந்து உட்படுத்திக் கொண்ட.. பசியின் கொடூரத் தாக்குதலில் இருந்து எப்படியாவது விடுபட்டால் போதும் உயிர் பிழைத்தால் போதும் என்கிற நம்பிக்கையோடு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இந்திய மக்கள் இராணுவத்தில் சேர்ந்த, சேர்க்கப்பட்ட இளைஞர்களை இழுத்துக்கொண்டு போய் பாலைவன புதை மணலுக்குள் புதைத்த ஆகப் பெரும் துயரம் மிகுந்த வரலாற்றின் நிஜங்களை வலிமிகுந்த வார்த்தைகளால் டைகிரிஸ் நாவலை கொடுத்திருக்கிறார் எழுத்தாளர் பாலமுருகன்.

இந்தப் போர் எதற்காக நடத்தப்படுகிறது..? யாருக்காக நடத்தப்படுகிறது.. ? எவரை நோக்கி நடத்தப்படுகிறது என்பது எதுவுமே அறியாமல் சாதாரண விவசாய மக்கள்.. விவசாயக் கூலிகள்.. தொழிலாளர்கள்.. இளைஞர்கள் கொலை ஆயுதங்களாக எப்படி மாற்றப்படுகிறார்கள் என்பதை வலுவாக சொல்லியிருக்கிறார். சாகச வார்த்தைகளை பேசி உணர்ச்சிகளைத் தூண்டி இந்தியாவில் இருந்து வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்ட பல ஆயிரக்கணக்கான போர் வீரர்களும் ஏழைத் தொழிலாளிகளும் மாண்டுபோன வரலாற்றினை இந்தியாவின் வரலாற்று ஆவணங்கள் முழுமையாக வைத்திருக்கிறதோ இல்லையோ ஈராக்கில் பாய்ந்து செல்லக் கூடிய டைகிரிஸ் நதி, தான் ஆகப்பெரிய ஆவணம் என்று இன்றும் உலகிற்கு ஓங்கிப் பறை சாற்றிக் கொண்டிருக்கிறது.

புதினம் நான்கு பாகங்களாக எழுதப்பட்டிருக்கிறது..

இந்தியாவிலிருந்து பிரிட்டிஷ் அரசுக்காக இந்தியர்களை ராணுவத்தினர் எப்படி தயார் படுத்தப்பட்டார்கள் என்பதும்.. மெசபடோமியாவின் டைகிரிஸ் ஆற்றங்கரையோரம் இருக்கக்கூடிய துயர்மிகு நகரங்களில் நடைபெற்ற போரின் அவலங்களையும், ஜெர்மன் ஆதிக்கத்திற்கு எதிராக போரிட்டு வெற்றி கொள்ள முடியாமல் செய்யும் குட் நகரில் சரணடைந்த நிகழ்வுகளையும்.. முதலாம் உலகப் போர் முடிவுக்கு வந்த நினைவுகளோடும்..

இரண்டாம் பாகத்தின் பக்கங்களுக்குள் நாம் வாசிக்க நுழையும் பொழுது நம்மை ஸ்னைப்பர் துப்பாக்கியின் குண்டுகள் உரசிச் செல்லும்.. உரசிச் செல்லும் அந்த வினாடி நம் தோள்பட்டையில் இருந்து இளம் சூட்டு ரத்தத்தோடு சதை கிழிந்துத் தொங்கலாம்.. நம்முடைய பின் மண்டையில் துப்பாக்கி தோட்டா ஒன்று உள் நுழைந்து வெளியேறும்.. வெளியேறும் தோட்டாவின் கூடவே நம்முடைய வலப்புறக் கண்ணும் சேர்ந்தே போயிருக்கும்.. அருகில் விழுந்த குண்டின் வெடிப்பில் நம்முடைய உடல் பல நூறு துண்டுகளாக சிதைக்கப்பட்டு எதிரில் நம்முடைய இருதயம் எகிறி விழுந்து துடித்துக் கொண்டிருக்கும்.. நம்முடைய உடம்பிலிருந்து பியத்து எறியப்பட்ட கால் ஒன்று ரத்தச் சேற்றில் துடித்துக் கொண்டிருக்கும் எவர் ஒருவரின் கைகளில் தஞ்சம் அடைந்து இருக்கலாம்…

குட் நகர கோட்டைக்கு அருகாமையில் அமைந்து இருக்கக்கூடிய முள்வேலியில் நூற்றுக்கணக்கான பிணங்களோடு நம்முடைய பிணமும் சிக்கிக் கவிழ்ந்து.. நிமிர்ந்து கிடக்கலாம்.. பறந்து திரியும் கழுகு கூட்டத்தின் கழுகு ஒன்று தாழ்ந்து வந்து நம்முடைய கண்களை கொத்தித் தின்று தன் பசியாறலாம்.. கந்தகப் புகை நாற்றம் நம்முடைய நாசியை அடைத்து மூச்சுத் திணறடிக்க முகம் கோணலாக கை கால்கள் மாறி மாறி அடித்துக் கொள்ளலாம் தரையோடு.. பக்கங்கள் முழுவதும்
போர் நிகழ்த்திய பெரும் கொடூரங்களை துயரங்களை வலி கொண்டு வார்த்தைகளால் பதிவு செய்திருக்கிறார்.

சரணடைந்த பிறகு சரணடைந்த போர் வீரர்களை ஜெர்மன் நிறவெறி துருக்கி இனவெறி ஆதிக்கம் ஆர்மீனிய கிருத்துவ மக்களை, இளைஞர்களை, பெண்களை, குழந்தைகளை கொடூரமாக கொலை செய்து பெண்களை பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கி கொன்று எரித்த வரலாற்று நிஜங்களை புதினத்தின் மூன்றாவது பாகத்தினை வாசிக்கும் பொழுதில், டைகரிஸ் நதி முழுவதும் மனித ரத்தத்தால் நிரப்பப்பட்ட சூட்டின் வெம்மை நம்முடைய இருதயத்தின் ரத்த நாளங்களில் பாய்ந்து கண்களின் வழியாக கண்ணீராய் வெளியேறும் வலியினை உணர முடியும்.

குட் நகரில் ஒட்டமான் படைகளிடம் சரணடைந்த இந்திய ஆஸ்திரேலிய படைவீரர்கள் உள்ளிட்ட பிரிட்டிஷ் நேச நாட்டுப் படைகள் பகலில் கடும் வெயிலிலும் இரவில் அதைவிட கடுமையான எலும்புகளை உருக்கிடும் பணிக் காற்றிலும் உடன் வந்த பல வீரர்களை வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல தொற்று நோய்களுக்குத் தின்னக் கொடுத்தும்.. துருக்கிப் படைகளின் தாக்குதலில் கை கால்களை இழந்து முடமாகி உடலெங்கும் ரத்தம் ஒழுகும் சதைப் பிண்டங்களாக நடந்து.. நடந்து.. நடக்கமுடியாமல் இறந்து போயும்.. போர்க்களத்தில் இறந்துபோன வீரர்களை அடக்கம் செய்யக்கூட நேரமும் வழியும் இல்லாமல் பருந்துகளும் கழுகுகளும் சூறையாடிய அவலத்தையும்.. நதிக்கரையோரம் நடந்து வரும் பொழுதெல்லாம் நதி எங்கும் ரத்தச் சகதியாக.. தலை கொய்யப்பட்ட குழந்தைகள், துண்டுதுண்டாக வெட்டப்பட்ட ஆண்கள்,நிர்வாணமாகத் தூக்கி வீசப்பட்டு சிதைக்கப்பட்ட பெண்கள் இப்படி அனைவரின் உடல்களும் மிதந்து கிடக்க, உணவின்றியும், குடிக்க நீர் இன்றியும் நடந்தே பல மைல் தூரம் கடந்து கிராமம் ஒன்றிணை பார்க்க நேரிடுகிறது..

தங்களுக்கு எதிராக ஒன்று திரண்டு இருக்கக்கூடிய துருக்கியர்கள் வசிக்கும் கிராமமாக இருக்குமோ என்ற அச்சத்தில்.. “குடிப்பதற்கு நீர் கூட கொடுக்க முடியாத மனிதர்களையா இந்தச் சமூகம் நமக்கு காட்டி விடப்போகிறது” என்கிற ஒரு நம்பிக்கையில் அந்தக் கிராமத்தை நோக்கி மூன்று வீரர்கள் சென்றிட.. கிராமமே மயான அமைதியில் கிடக்கிறது. வீடு ஒன்றில் நுழைந்து பார்க்கும் பொழுது அங்கே ஒரு கிணறு.. கிணற்றுக்குள் அருகில் இருக்கும் பாத்திரத்தை எடுத்து நீர் எடுக்க முயற்சி செய்ய.. பாத்திரத்தை கயிறு கட்டி கிணற்றுக்குள் வேகமாக இறக்கிட.. பாத்திரம் கிணற்றுக்குள் தொப்பென்று சத்தத்தோடு… விழுந்த அம்மாத்திரத்திலேயே கிணற்றிலிருந்து பல ஆயிரக்கணக்கான ஈக்கள் பறந்து வெளியேற..

கிணற்றில் விழுந்த பாத்திரத்தில் நீர் நிரம்பி இருக்கும் என்கிற எண்ணத்தில் மேலே இழுக்க.. மேலே வந்த அப் பாத்திரத்திற்குள் குழந்தையின் வெட்டப்பட்ட தனித் தலை மட்டும் கிடக்கிறது. பாத்திரத்தின் அடிப்புறத்திலோ கிணற்றுக்குள் ஈக்கள் மொய்க்க புழுக்கள் நெளிய அழுகிக் கிடக்கும் பிணத்தின் சதைகள் தொங்கிக் கொண்டு..பாத்திரத்திற்குள் இருக்கும் குழந்தையின் மண்டைக்குள் புழுக்கள் நெளிந்து கிடக்கிறது.. கிணற்றுக்குள் பெரும்பகுதி ஆழம் துண்டு துண்டாக வெட்டி எறியப்பட்ட மனித உடல்களால் நிரப்பப்பட்டிருக்கிறது. அந்த கிராமத்தில் இருந்த அனைவருமே அர்மீனியர்கள்.. கிருத்துவ மதத்தை தழுவியவர்கள்.. கிருத்துவ இனம் என்பதற்காகவே கிராமத்தினர் அனைவரையும் துருக்கியர்கள் மொத்தமாக ஓரிடத்தில் வரவைத்து ஆண்களை வெட்டிக் கொன்று, குழந்தைகளின் தலைகளை அறுத்தெறிந்து, பெண்களை நிர்வாணப்படுத்திக் கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்தும் எரித்திருக்கிறார்கள். பலரைத் துண்டு துண்டாக வெட்டி வீசியிருக்கிறார்கள்..

இப்படியான நிஜங்களை எழுத்தாளர் பாலமுருகன் நாவலில் காட்சிப்படுத்தும் பொழுது வாசிக்கும் நமக்கு 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட கோத்ரா ரயில் எரிப்பு சம்பவமும்; அதிலே எரிந்து போன ஐம்பத்தி ஒன்பது கருகிய உடல்களை வைத்து வீதிவீதியாக முஸ்லிம் மக்களுக்கு எதிராக ஆர் எஸ் எஸ் மற்றும் இந்து முன்னணியாரால் நடத்தப்பட்ட வன்முறை பிரச்சாரமும், அதைத்தொடர்ந்து 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்கள் குறிவைத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதும்; கர்ப்பிணி பெண் ஒருவரின் வயிற்றைக் கிழித்து வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையை சூலாயுதம் கொண்டு குத்தி நிமிர்த்தியதும்; பெஸ்ட் பேக்கரியில் ஒன்பது உயிர்கள் உயிரோடு பெட்ரோல் ஊற்றி கொளுத்தப்பட்டது.. குல்பர்க் சொசைட்டியில் 69 முஸ்லிம்கள் மொத்தமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது.. இப்படி நடைபெற்ற கொடூரங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக ஞாபகத்திற்கு வரும்..

ஒரு குறிப்பிட்ட இனத்திற்கு எதிராக மதத்திற்கு எதிராக திட்டமிட்டு விதைக்கப்பட்ட விஷம் தோய்ந்த வார்த்தைகள் மனித உயிர்களை எப்படியெல்லாம் கொன்று புதைக்கும், நெருப்பிற்கு தின்னக் கொடுக்கும் என்பதற்கு சாட்சியாக வரலாற்றில் வழிநெடுகிலும் ஏராளமான நிஜங்கள் இரத்த சாட்சிகளாக நம்மை எச்சரிக்கை செய்து கொண்டே வருகிறது.

ஆனாலும்கூட வெறுப்பு, ஒழிப்பு அரசியல் என்பது திட்டமிட்டே இங்கு நிகழ்த்தப்பட்டு வந்து கொண்டிருக்கிறது தொடர்ந்து. ஒரு மனிதனை வெறுப்பது என்பது அவனின் அடையாளத்தை கொஞ்சம் கொஞ்சமாக அழிப்பது என்பதுவும் அனுதினமும் இங்கே நடந்து வந்து கொண்டு இருக்கிறது. அன்று குஜராத்தில் நெறியற்ற தலைமையால் வழிநடத்தப்படும் அரசின் செயல்பாட்டையும் காவல்துறையின் நடவடிக்கைகளையும் இந்தியா முழுமையும் பார்த்தது..

அதே நெறியற்ற தலைமையின் செயல்பாட்டை பணம் மதிப்பிழப்பு நடவடிக்கையின் மாண்புகள் குறித்து இறந்துபோன 500-க்கும் மேற்பட்ட பிணங்களின் மீது ஏறி நின்று பேசிய போதும்.. பெரும் தொற்று காலத்தில் இந்தியா முழுவதிலும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு நடந்தே சென்று ஆயிரமாயிரமாய் செத்து ஒழிந்த போதும்; பலநூறு விவசாயிகள் பலியான பெரும் துயரினை தலைநகர் டில்லியில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டததின் போதும் உலக நாடுகளே பார்த்தது..

மிகப் பொருத்தமான ஒரு காலத்தில் இந்தியா சந்தித்து வரும் அபாயகரமான அரசியல் சூழலில் எழுத்தாளர் பாலமுருகன் அவர்கள் மிகச்சரியாகவே இந்த நாவலை கொண்டு வந்திருக்கிறார். இந்த நாவலுக்கான ஆதாரங்களை அவர் மிகுந்த மெனக்கெடலோடும்.. அரசியல் பொறுப்புணர்வோடும்.. சமூகத்தின்பால் ஒரு படைப்பாளி கொண்டிருக்க வேண்டிய மெய்யான நேர்மையோடும் அக்கறையோடும் செய்து முடித்திருக்கிறார்.

குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினர்களும் அவரவர் குடும்பத்தில் மிகவும் மதிப்பிற்குரியவர்கள், போற்றுதலுக்கு உரியவர்கள்.. சக்தி மிகுந்தவர்கள். அப்படியானவர்கள் முதலாளித்துவ அமைப்பு தேசபக்தியின் பெயரால் குயுக்த்தியான முழக்கங்களை முன்வைத்து எளிய மக்களிடையே உணர்ச்சியைத் தூண்டி தன்வசப்படுத்தி அவர்களை பகடைக்காயாக மாற்றிடும் பொழுது, அந்த எளிய மக்கள் குடும்பத்தின் அனைவராலும் போற்றுதலுக்குரியவர் கொண்டாடப்பட கூடியவர் தாம் நம்பிய அரசினால் கைவிடப்பட்டு தங்களின் வாழ்வு மட்டுமல்லாமல் குடும்ப உறுப்பினர் வாழ்வு அனைத்தும் எப்படியெல்லாம் சூறையாடப்படுகிறது என்பதற்கு சாட்சியாகவே டைகரிஸ் புதினமும் அதில் வரக்கூடிய நிஜ சம்பவங்கள் பலதும்.

இத்தனை வலிகளின் ஊடாகக்கூட மனித மனங்களில் தோன்றக்கூடிய காதலும் பேரன்பும் என்னவிதமான ரசவாத மாற்றங்களை உடலுக்குள்ளும் நினைவுக்குள்ளும் நிகழ்த்தும் என்பதற்கு சாட்சியாக இந்த நாவலுக்குள் வில்லியம்ஸும் அவருடைய காதலி அயனியும்.. அந்த “வசந்தகால மலரின்” ஒற்றைப் பார்வைக்காகவும் சின்னதொரு புன்னகைக்கவும் போர்க்களத்திலும் அவன் மனதிற்குள் நடத்திடும் அந்த மென்மையான காதல் உணர்வு போராட்டத்தை முத்தங்களின் சத்தத்தை பேரன்பின் வார்த்தைகளால் அழகாகவும் இலக்கியமாகவும் சொல்லி இருக்கிறார் எழுத்தாளர் பாலமுருகன். அந்த “வசந்தகால மலரினை” எப்படியாவது வில்லியம்ஸ் தன்னோடு அழைத்து வந்து விடக் கூடாதா என்று நம்முடைய காதல் மனத ஏங்க வைத்திருக்கிறார் எழுத்தாளர் பாலமுருகன்.

ஆழ்ந்த வரலாற்று மாணவர்களுக்கும்.. சென்னையின் பூர்வகுடிகளுக்கும்.. சென்னை நகரின் முன்னோடிகளுக்கும் மட்டுமே தெரியும் முதலாம் உலகப் போரின்போது வணிகக் கப்பலின் வேஷம் தரித்து வந்த ஜெர்மனிய போர்க்கப்பல் எம்டன் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு அருகில் குண்டு வீசிச் சென்றதை.. வளர்ந்து வரக்கூடிய இளம் தலைமுறையினர் எத்தனை பேருக்குத் தெரியும் முதலாம் உலகப்போரின் குண்டு ஒன்று சென்னை நகரின் மீது விழுந்தது என்று.. குண்டு விழுந்த நாள் முதலே சென்னை நகரை விட்டு மக்கள் கிராமம் நோக்கி செல்லத் தொடங்கிய வரலாறு ஒன்றும் உண்டு என..

நிஜ வரலாறுகளை சொல்லிக் கொடுப்போம் நம் பிள்ளைகளுக்கு.. இரத்தச் சாட்சிகளை அறிமுகப்படுத்தி வைப்போம் நம் பிள்ளைகளுக்கு.. நேற்றைய நாளில் நம்முடைய மூதாதையர்களும் முன்னோடிகளும் இன்றைய நாளைக் காண எத்தகைய தியாகங்களை செய்து செத்துப் போனார்கள் என்பதை அவர்களுக்கு வலியோடு சொல்லி வைப்போம்.. பயிற்றுவிப்போம்.

சொல்லி வைப்பதும் பயிற்றுவிப்பதும் மட்டுமே நாளை நம்மைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி நிற்க வைக்காமல் எதிர்கால சந்ததியினர் இடமிருந்து தப்புவிக்கும். நமக்கு ஒரு வாய்ப்பாக கொடுத்திருக்கிறார் எழுத்தாளர் ச.பாலமுருகன் அவர்கள் தன்னுடைய டைகிரிஸ் புதினத்தின் வழியாக. வரலாற்றினை பயிற்றுவிப்பதற்கு.

ஒவ்வொருவரின் வீட்டிலும் பாதுகாக்க வேண்டிய அழகிய முறையில் வடிவமைத்து வெளிக் கொண்டு வந்திருக்கிறார்கள் எதிர் வெளியீட்டுப் பதிப்பகத்தார்.. இருவருக்கும் நிகழ்காலச் சமூகம் கடமைப்பட்டிருக்கிறது. அன்பும் வாழ்த்துக்களும்.!