து.பா.பரமேஸ்வரியின் கவிதைகள்
மனிதம் அற்ற மனிதா..
******************************
துயரத்திலும் துவண்டு போகாது
வாழ்க்கையை வெறுத்தொதுக்காது
வறுமையிலும் முகம்சுளிக்காது
ஏழ்மையிலும் தாழ்வுறாது
மனபாரத்திலும் புன்சிரிப்பு மாறாது
கயவர் மத்தியிலும் கடமை தவறாது
பெரும் தோல்வியிலும் மனம்தளராது
புகழ்ச்சிப் பெருக்கிலும் தன்நிலை மாறாது
துரோகியிடமும் காழ்ப்புணர்வு பாராது
துளைக்கும் முட்களிடத்தும் அகமலர்ச்சி இழக்காது
வெறுப்பவரிடத்தும் முகம் பூக்க மறவாது
கோபத்திலும் வன்சொல் வீசாது
வதைத்தவனிடத்தும் வன்மம் பாராது
மானபங்கத்திலும் கண்ணியம் தவறாது
வசவுகளையும் வரவேற்கத் தவறாது
சுடுசொல்லிலும் துளி நீர் சிந்தாது
பகைவரிடத்தும் நேசிக்க மறவாது
பட்டினியிலும் பசிமுகம் காண பொறுக்காது
வாழ்வின் விளிம்பிலும் மரணத்தை நோக்காது
போட்டியிலும் பொறாமை பாராது
கொடுஞ்சுழலிலும் பிரிதுயிர் வாட பொறுக்காது
எச்சூழலிலும் பிறர் மனம் புண்படுத்தாது…
….வாழும் மனிதமே மனிதம்..
மனிதம் என்பது ..
தமக்குட்பட்ட
தமக்கேற்ற
தமக்கானவாறு
தம்மனத்திற்கான
தம்சூழல்பாதிப்பற்ற போக்கில்
கடந்தும் கடமையல்ல..
பிறர் நோக தம் உயிர்நொந்திடும்
நிலையே மனிதம்..
மனிதம்..
மனிதமனத்தின்மீதமல்ல
மனிதவாழ்வின் மார்க்கம்..
மனிதம் கொண்ட மனிதனாய்
வாழ்கிறோமா..
விடைதெரியா மானுடமாய்
நிற்கிறோம்
வெறும் மனிதம் கண்ட
இதழ் சுமக்கும் மரமாய்..
உடைந்து போகாதே..
***************************
இது இலையுதிர் காலம்…
இயற்கையின் சோதனை..
பெரும் வேதனை
காய்ந்தும் சுருண்டும்
நொடிந்தும் ஒடிந்தும்
ஊடாடும் விருட்சம்..
பசுமை தொலைத்த கிளைகள்
காய்ந்து சருகாகிய இலைகள்..
காலத்தின் கைங்கயர்யம்
பருவத்தின் பகிர்ந்தளிப்பு..
ஆட்டமும் பாட்டமும்
மேய்தலும் மெருகேறலும்
நிலையற்றது சுழற்சியில்..
வருந்தியும் வாடியும்
வருத்தியும் வதங்கியும்
உயிர் மட்டும்
ஒட்டியிருக்கும் பட்டமரம்..
வாழ்க்கையெனும் இந்த ஓடம்
வழங்கும் அனுகணமும் பாடம்.
மேலிருப்பதைக் கீழும்
கீழுள்ளதை மேலும்
நொந்தவரைத் தூக்கியும்
உயர்ந்தவரை நொடித்தும்
திருப்பிப் போடும்
திருப்புமுனை.
மரத்தின் பெருமாண்பும்
மனிதனின் பேரிறுமாப்பும்
வேறுபடும் துன்ப காலங்களில்
பசுமையில் பல் இளிக்காது
பெருவறட்சியிலும் பரிதவிக்காது
மன சமநிலைக் குன்றாது
மகத்துவத்தை உணர்த்தும் மரம்
அமைதியின் மேன்மைக்கான பாடம்
வாழ்க்கைப் போர்க்களத்தை
எதிர்கொள்ளும் குணமே
சோதனையிலும் வேதனையிலும்
சோர்ந்து போகா மனமே..
சாதனையை நோக்கி நடைபோடும் தினமே..
பெருங்காற்றாய் நீ
**********************
பெருங்காற்றாய் உன் மொழி
சிறு பறவையாய் என்செவி
சில நேரம் ஏற்கிறேன்
பல நேரம் தவிக்கிறேன்..
உன் விழி எனையாள
குளிர்கிறேன்..
உன்மொழி
எனைக் கொல்ல
மாள்கிறேன்..
உன்…
மொழியோ விழியோ
மௌனித்தே கிடக்கும்
பல சமயங்களில்..
என்..
உடலோ மனமோ
புரியாமல் பிதற்றும்
அநேகவிடங்களில்..
இவ்விரண்டிற்கும் மத்தியில்
நமது பெரும் பனிப்போர்..
வானமகளின் பரிணாமம்
*******************************
அந்திப்பொழுதின்
பொன்னிற மேனியவள்..
அடர் மஞ்சள் சேலையுடுத்தி
வெளிர் நீல ரவிக்கைச் சுற்றி
கண்கூசும் மின்னல் கீற்றிழுக்க
கற்றை கற்றையாய்
சுருண்டு விழுந்த
கார்மேகக் கூந்தல்
மார்பை அணைத்திட
தென்றல் வீச
கரமேந்திய முந்தி
கவிதை பேச
சட்டென…
பறவைகளின் எச்சம் பட ..
சேலை சிவக்க
சிவந்த சேலையின் சாயம்
மங்கை முகம் படர்ந்தொளிர
தகிக்கிறாள் பாவை
ரோஜா கூட்டமாய்
சற்றே தாமதம்
எட்ட நின்ற
நட்சத்திரங்களைத் தட்டிப் பறித்து
வான் விட்டம் மின்னிய
விண்மீன்களைப் பற்றியிழுத்து
இருபுறமும் ஒருபுறமாய்
மேலிழுத்தும்
கீழிழுத்தும்
இடமென்றும்
வலமென்றும்
முன்னொன்றும்
பின்னொன்றுமாய்
விரவியமைத்தவள்..
வண்ணமலர்களாய்..
சுற்றியே பார்க்க..
சற்றே திரும்பியவள்
சுத்தியே நின்றாள்
கருவண்ண காரிகையாய்..
அப்போதே வந்த
பால் வண்ண வேந்தன்
இருகரம் ஏந்தி
இறுமாப்பாய் நிற்க..
அண்ணலும் நோக்க
அவளும் நோக்கினாள்..
அன்ன நடைபயில
தென்றலிடை தவழ
இருள் கொண்டு
விழியுண்டு
மருவினாள் கருவாச்சி..
விண்ணவனும் வானவளும்
கைகூடி கரம் பற்ற
தடாகத்தினின்று ஏங்கியேத்
வெளிரிப் போனாள் அல்லி மகள்..
கர்வம் கூடி தலைக்கனம் பூண
மதி மீது மதி மயங்கினாள்
கரு மங்கையவள்….
விழியின் மொழி
***********************
என் விழிகள்
எனைக் காட்டிலும்
உனக்கு அதீத பரிச்சயம்.
என் விழிகள்
எனைக் காட்டிலும்
உனக்கு அதிக பிடித்தம்.
என் விழிகள்
எனைச் சுற்றிலும்
உனைச் சுற்றின பெரும்பாலும்
என் விழிகள்
எனைக் காட்டிலும்
உனை நோக்கின எப்போதும்
என் விழிகள்
எனைக் காட்டிலும்
உனைத் தேடின முப்போதும்
என் விழிகள்
எனைக் காட்டிலும்
உனைக் கொண்டன அவ்வப்போது
என் விழிகள்
எனைக் காட்டிலும்
உனை உண்டன முப்பொழுதிலும்
இத்தனையும் பருகத் தந்த
பேரன்பின் நிமித்தம்..
எனதழகிய விழிகள்..
எப்போதும் நீ….
வெறுமை
கண்ணீர்
ரணம்
ஏக்கம்
ஏமாற்றம்
மட்டுமே பருகத் தருகிறாய்..
விழியில் விழந்தெழுந்த நீ
சென்று விடுகிறாய் வெகு இயல்பாய்.
பரிசாக கணத்தை விட்டுவிட்டு
பாவம்
செய்வதறியாது..
ஒன்றுமற்றுக் கிடக்கின்றன விழிகள்..