விக்னேஷ் குமார் கவிதைகள்
“கனி”
பனை சூழ்ந்து பேயரற்றும் எல்லையம்மன் கோவிலுக்கு காலையும் மாலையும் விளக்கு போடும் வேலை அவளுக்கானது
பாவாடை சட்டையணிந்து
ஒத்தை சடை பின்னல் முதுகில் ஆட்டம்போட
அவள் பெருக்கி கோலமிட்டுக் கொண்டிருப்பாள் தனியாளாக
வயலும் வறப்பும் அலுத்துப் போன அவளுக்கு ஒத்த மாமரத்தின் கனி மட்டும் சலிக்காது பிடிக்கும்
அவளை கட்டிக்கொடுத்தப் ஊரில் மாமரங்கள் எட்டா கனியாகிவிட்டன
அதனால் தானோ என்னவோ சீக்கிரமே வீடு திரும்பிவிட்டாள்
ஆனால் விளக்கு வைக்க இனி அவளால் முடியாது
அம்மாவிற்கு துணையாகிவிட்டாள்
இப்போதும் ஒத்த மாமரத்தின் கனி அவளுக்கு பிடிக்கும் என்பதை மறைக்கப் பாடுபடுகிறாள்.
“களி”
‘நல்ல செவப்பு
பையனுக்கு ஜோறா புடிச்சிட்டா பொன்ன’
கலியாணத்தில் ஊர்வாயெல்லாம் சொல்லிக் கொள்வதை மாமியார் உச்சிமோந்துக் கொண்டிருப்பாள்
பழகி பழகி புளித்துவிட
‘செவப்பாம் செவப்பு
அத வெச்சு வாழவா முடியும்’
என்கிறாள்
களியாட்டங்களின் போது ஊர்வாயில் புளிப்பை கரைத்து
‘என் மருமகளுக்கு சுத்தி தான் போடனும்
ஊரு கண்ணே அவ மேல தான்’
சொல்லியபடி நெட்டி முறித்திடுவாள்
“வெண்கலம்”
மஞ்சளாய் ஜொலித்துக் கொண்டிருந்த உடலெங்கும் பரவி விரிந்த வான்நீலக் கருக்கள்
பாசியாய் படிந்துவிட்டன
சோப்புக் குழைந்த தண்ணீர் அடர்ந்த
அம்மாவின் வெண்கல சோப்புக் கிண்ணம்
“பேதம்”
எங்கள் வீட்டின் கூடத்தில் மழலை கண்ணன் தொங்கியபடி தவழ்கிறான்
அலமாரியில் புத்தன் தவமிருக்க
பக்கவாட்டில் பச்சை கிளிகள் அசையாது வெறிக்கின்றன்
சிலுவை போட்ட சாவிக் கொத்து பிள்ளையாரோடு உரசிக் கொள்கிறது
அப்பாவின் நண்பர் முஹம்மது பரிசளித்த திருக்குரான் திருக்குறளோடு சாய்ந்து நிற்கிறது
பெரியார் அம்பேத்கர் விவேகானந்தர் பாரதியார் என வரிசைகட்டி நிரம்பியிருக்கும் புத்தக அலமாரி
வீட்டிற்கு வரும் அனைவரிடமும் ஒரு ஆச்சரியம் விரிந்துவிடும்
அப்பாவிற்கு பெருத்த பெருமிதம்
இதையணைத்தும் அழுக்குப் படியாமல் பாதுகாக்கும் அம்மாவிற்கு பாராட்டு தெரிவிக்கிறார்கள்
பாரதியார் போல மீசையை முறுக்கி கொண்டிருக்கிறார் அப்பா
“சயனைடு குப்பி”
போருக்கு பின் பேரமைதி
போராட்டங்கள் முடிந்துவிட்டன
போராளிகள் மறித்தும் மறைந்தும் போயினர்
பொது சனம் இயல்புநிலை திரும்பிக் கொண்டிருக்கின்றன
ஆனால் கழுத்தில் சயனைடு குப்பி தொங்கிக் கொண்டேயிருக்கிறது
“ஒண்டிப்புழு”
உடனிருத்தல் வெகுவாக காணாமற் போய்விட்டது
ஊர்ந்து ஊர்ந்து தேய்மானத்தை தழுவத் தொடங்கியிருப்பாள்
இனி தேகமும் பயனில்லை கஞ்சிக்கு சாக
நெளிந்து நெளிந்தாவது போய் சேர்ந்து விடுவாள் என்ற நம்பிக்கையுடன் புதைக்கத் தொடங்கியிருந்தோம்
புதைக்க புதைக்க புழுக்கள் படமெடுத்து நின்றன
சம்மட்டி அடிகளில் சமண் செய்துவிட்டு ஒருவழியாக கிளம்பி வந்தோம்