Posted inPoetry
பகல்வேட்டை கவிதை – புதியமாதவி
பகல்வேட்டை
****************
என் வனம் உன் ராஜாங்கம் அல்ல.
பூத்துக்குலுங்குவதும்
பூமியதிர பொருமுவதும்
அருவியின் ஆர்ப்பரிப்பும்
காட்டாற்று வெள்ளமும்
உன் கட்டுப்பாட்டுக்குள் வராது.
வனத்தில் புலிகள் உண்டு.
காட்டுப்பன்றிகள் உண்டு.
நரிகளும் உண்டு.
வேட்டையாட வந்தவன் நீ.
புலியாக வா
உன் ஓவ்வொரு பார்வையும்
பாய்ச்சலாய் இருக்கட்டும்.
உன் கூரிய நகங்களால்
வேட்டையாடு.
தொங்கும் தசைகள் கிழித்து
புசி.
அப்போதும் பசி அடங்கவில்லையா
என் கருப்பைக் கிழித்து
கனவுகள் எடுத்து வீசு.
பாறையில் கசியும் ரத்தம்
பருகியது போக மீதியைத் தொட்டு
உன் மேனி எங்கும் பூசிக்கொள்.
மறந்துவிடாதே
வனத்தின் யட்சி
விழித்துக்கொள்ளும்
இரவு வருவதற்குள் புறப்பட்டு விடு.
பகல்வேட்டை பகற்கனவு.
-புதியமாதவி