தொடர் 19: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி
அப்போதெல்லாம் நான் திரைப்படத்திற்குப் பாடல் எழுதிவிட்டு அதை டிடிபி சென்டரில் டைப் செய்து ஸ்டிக் ஃபைலில் வைத்து இயக்குநர்களிடம் கொடுப்பேன். இப்போதும் அப்படித்தான் ஆனால் டைப் செய்ய சென்டர் செல்வதில்லை செல் நோட் பேட்டில் டைப் செய்து பிரிண்ட் எடுக்க மட்டுமே அங்கு செல்கிறேன்.
வடழனி பஸ் டிப்போ ஒட்டினாற்போல் கணபதி ஸ்வீட்ஸ் ஒன்று இருக்கிறது. அந்தக் கடை பிரபலமானது. அதன் வாசலில் சினிமாக்காரர்கள் நிறைய நின்றிருப்பார்கள். டைப்பிங் வேலையாக நான் அங்கு அடிக்கடி செல்வது வழக்கம். 2018 வருடம் நான் ஏதோ ஒரு படத்தின் பாடலை டைப் செய்யப் போயிருந்தேன். அன்றைக்கு அங்கே ஒரு 56 வயதுகொண்ட ஒருவர் இருந்தார். பார்ப்பதற்கு நல்லவர்போல் காணப்பட்டார். போல் என்ன போல் அவர் நல்லவரே தான். அவரும் டிடிபி வேலைக்காகக் காத்திருப்பது தெரிந்தது. நான் என் வேலையை முடித்துக் கிளம்பத் தயாராகையில்,. சார் நீங்க பாடலாசிரியரா என்று கேட்டார். நான் ஆமாம் என்றேன். மன்னிக்கணும் உங்கள் அனுமதியின்றி பாடலை இவர் டைப் செய்துகோண்டிருக்கும்போதே வாசித்தேன் மிகவும் பிடித்திருக்கிறது எனக்கூற புன்னகைத்தபடி நன்றி சொல்லி எழுந்தேன், அப்போது என் பெயர் ஜனார்த்தனன். எக்ஸ்க்யூட்டி புரட்யூசர். சின்னப் படம் ஒன்று மகேஷை கதாநாயகனாக வைத்து எடுப்பதற்காக வேலை நடந்து கொண்டிருக்கிறது. அந்தப் படத்திற்கு இரண்டு பாடல் நீங்கள் எழுதினால் சிறப்பாக இருக்குமென்று இந்த நொடித் தோன்றுகிறது என்றார்.
அப்போது நான் பாடல் வாய்ப்பு பெரிதாக இல்லாமல் காஞ்சு கிடந்த நேரம் இப்படி ஒருவர் கேட்டால் விடுவேனா. இப்ப என்ன பிசியான்னுதானே கேக்குறீங்க. நான் இப்பவும் அப்படித்தான் இருக்கிறேன். ஆனால் உண்மையைச் சொன்னால் சினிமாவிற்குள் மரியாதை இருக்காது. எனவே எப்போதும் பிஸியாக இருப்பதுபோலவே காட்டிக் கொள்வதென்பது சாதாரணமாகிவிட்டது. சரி அதை விடுங்கள். சார் உங்களுக்கு ஒரு குட் நியூஸ் நான் உங்கள் படத்திற்கு பாடல் எழுதலாமென முடிவு பண்ணிட்டேன் என்பதுபோல் மனதில் வெட்டிப் பந்தா செய்துகொண்டு கொடுத்துவிட்டுப் போன தொடர்பு எண்ணையும் அலுவலக முகவரியையும் எடுத்துக் கொண்டு எப்படா விடியுமென்று பார்த்து மறுநாள் காலை அலுவலகம் போனேன். இயக்குநர் ராம்சேவாவை அறிமுகம் செய்து வைத்தார் ஜனார்த்தனன். இசை அம்ரீஷ். படத்தின் பெயர் “என் காதலி சீன் போடுறா”. முதல் பாடல் காதல் வழிந்தொழுகக் கேட்டார்கள். சம்பளத்தில் பாதி முன்பணமாகத் தந்தார்கள். என் பேனா போதையுண்டு சுழலத் தொடங்கியது.
பல்லவி
ஆண்:
நிலா கல்லுல செதுக்கிய சிலையா
நெஞ்சாங் கூட்டுல மிதக்கிற அலையா
தேகம் எங்கிலும் றெக்கை முளைத்து
தேவதை நீதான் பறக்குற
ஆடை கிழிந்திட சோப்பைத் தேய்த்து
ஆக்சிசன் காதலில் கலக்குற
தடங்களைப் படம்பிடித்து
மீட்டி வைப்பேன் – அதை
தாஜ்மஹாலில் ஆணியடித்து
மாட்டி வைப்பேன்
சரணம் – 1
ஆண்:
உனதன்பு சிணுங்களை இசைஞானி கேட்டிருந்தால்
சிம்பொனி இசைத்திடும் வேலையில்லை
பெண்:
அழகென்ற சொல்லுக்கு அர்த்தங்கள் நீதானே
அகராதி புரட்டிடத் தேவையில்லை
ஆண்:
கோடிட்ட இடங்களை நிரப்பிடச் சொன்னால்
உம்பேரை நானும் போட்டிடுவேன்
பெண்:
இந்தக் கோயில் சிலையினைக் கொள்ளையடித்தது
நீதானென்று காட்டிடுவேன்
ஆண்:
தயிர்சாதத்திலும் உன் வாசனை கண்டேன்
பெண்:
என் அப்பாவைக் கேட்டால் உன் பேரைச் சொல்வேன்
சரணம் – 2
ஆண்:
உன் அறைக் கதவினில் பூட்டாக மாறிட
எனக்கொரு வாய்ப்புக் கிடைக்காதா
பெண்:
மணவறை மேடையில் இருவரும் சேர்ந்திட
நொடியொன்று உடனே முளைக்காதா
ஆண்:
கண்ணாடி பார்த்தேன் உன் முகம் தெரிந்தது
விரல்களால் தலையினைக் கோதிவிட்டேன்
பெண்:
காஃபி ஷாப்பிலும் உந்தன் நினைவால்
காசு கொடுக்கவும் மறந்துவிட்டேன்
ஆண்:
ஐஸ்போல் என்னை உருக வைத்தாயே அழகே
பெண்:
அடடா உன்னை உயிரில் வைப்பேனே அன்பே
இந்த காதல் டூயட் பாடலை செந்தில்கணேஷும் ராஜலட்சுமியும் பாடியிருக்கிறார்கள். இப்பாடலில் அவர்களின் குரல் மக்கள் இதுவரை கேளாத வண்ணத்தில் இருந்தது. இசையும் படமும் இன்னும் கவனப்படும்படியாக இருந்து வெற்றியும் பெற்றிருந்தால் என் வரிகளுக்கு வளைகாப்பு நடந்திருக்கும்.
“என் காதலி சீன் போடுறா” படத்திலேயே இன்னொரு பாடல் எனக்கு முக்கியமாகப்பட்டது காரணம், அது அண்ணன் தங்கை உறவைப்பற்றியது. தமிழ்த்திரை வரலாற்றில் இந்த உறவுக்கான பாடல் மிகக் குறைந்த அளவே வந்திருக்கின்றன. அதிலும் வெற்றியடைந்த பாடலை விரல் விட்டுக் கூட எண்ணவேண்டியதில்லை, மனக்கண்ணில் தெரிகிறதாகத் தான் சில இருக்கின்றன. அவற்றில் “மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்”, “ஒரு தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு”, “வண்டிமாடு எட்டுவச்சு முன்னே போகுதம்மா”, “உன் கூடவே நான் பொறக்கணும்” போன்றன குறிப்பிடும்படியானவை.
குழந்தைப் பருவம் முதல் நான்கு சுவருக்குள் பேசி, பழகி, உண்டு, உறங்கி, சிரித்து, அழுது, சண்டையிட்டுக் கிடந்த அண்ணனும் தங்கையும் திருமணத்தாலோ அல்லது வேறொரு காரணத்தாலோ பிரிய நேரிடும் துயரம் மிக மிக மோசமானது. தீராதது.
பல்லவி:
செல்ல நிலவே சித்திரமே
உள்ளங் கை மழையே மழையே
கிளை நானம்மா
கிளி நீயம்மா
மரம் சாய்ந்தாலும்
விழுதாகித் தாங்கிடுவேன்
ஒரு தாய்போலே உன்
விழிவாங்கித் தூங்கிடுவேன்
சரணம்:
உன்னைப் போன்ற வாசமலரை
எந்தச் செடியும் பூத்ததில்லை
கண்ணில் தீபம் எரியும் அழகை
வேறு எங்கும் பார்த்ததில்லை
தூக்கத்தில் உளரும் வார்த்தையிலே
உந்தன் பேரிருக்கும்
துணைக்கால் எழுத்தாய் உன்முகம் நாளும்
என்னுடன் தானிருக்கும்
என்றும் குழந்தை நீதான் வீட்டில்
நாங்கள் பொம்மை ஆகிடுவோம்
இருப்பவர் இருவர் இதயம் ஒன்று
என்று தானே ஆடிடுவோம்
வெற்றியடைந்த பாடல்களை விட ஏதோ ஒரு காரணத்திற்காக வெளியாகி வெளித்தெரியாமல் போன பாடல்களை வாசகர்கள் முன் எடுத்துக்காட்டவே விரும்புகிறேன். அந்த வகையில் நான் பிரியப்பட்டு குறிப்பிட்டதுதான் மேற்கூறிய இரண்டு பாடல்களும். திரைப்படங்களில் மட்டுமல்ல நான் மிகவும் நேசித்து எழுதிய தனிப்பாடல்கள் பல வெற்றியடையாவிட்டால்கூட பரவாயில்லை வெளியாகமலே முடங்கிப் போயிருக்கின்றன. அவற்றில் ஒரு பாடல் இதோ:
பல்லவி
பாண்டி ஆட்டத்தில் தொலைத்த ஒரு
அழுக்கு மூக்குத்தி
பரிசுப் பொருளாய்க் கிடைத்த பாரதி
கவிதைப் புத்தகம்
சேலைத் தலைப்பின் குஞ்சம் போலே
பனையின் ஓலை
காய்ந்த வெளிகளின் கேள்விக்குறியாய்த்
திரியும் ஏழை
கண்கள் பார்த்து இதயம் எடுத்த
தொகுப்பு – இது
பள்ளிக்கூடத்தின் வெளியே நடந்த
வகுப்பு
சரணம் – 1
தாயக்கட்டம் பச்சை குத்தி
மந்தைக் கல்லு
சாலை எங்கும் தூரம் சொல்லும்
மைல் கல்லு
பன்னிரண்டாம் வகுப்பு பெண்ணின்
வாசல் கோலம்
நெஞ்சைப் பிடுங்கித் தின்னும்
கெட்டி மேளம்
தங்கை கூப்பிடத் திண்ணை வந்திட்ட
வளையல்காரர்
நாடகம் நடத்த நன்கொடை தந்திட்ட
வசதிக்காரர்
சரணம் – 2
மங்கலான நாழிகையும்
ஒளிரும் பூக்கள்
கழுத்து மணியை இசைத்த வண்ணம்
மாட்டுக் கூட்டம்
பொட்டல்பட்டிக் காரி செத்த
புங்கை மரம்
வருசம் கடந்து பார்த்த எங்கள்
பள்ளிக் கூடம்
கோவில் வாசலில் ஆட்டுக்கறிகள்
தின்ற ஞாபகம்
கருப்பு வெள்ளையில் வீட்டில் தொங்கிடும்
குடும்ப நிழற்படம்
சரணம் – 3
கோழி அடைக்கும் பஞ்சாரத்தில்
ஜன்னல் எத்தனை
கூத்துப் பார்க்க வளர்ந்து நிக்கும்
ஊரோரப் பனை
சோளம் குத்தும் ஏழைப் பெண்ணின்
காய்த்த கைகள்
சாதி கட்சி தலைவன் பையில்
ஆயிரம் பொய்கள்
அழுக்குத் துணிகள் கழுதை முதுகில்
ஊரைக் கடக்கும்
வெள்ளைச் சுவரே கணக்கு நோட்டாய்
எழுதிக் கிடக்கும்
முந்தைய தொடர்களை வாசிக்க:
தொடர் 15: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி
தொடர் 16: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி