அந்தப் புன்னகையில் ஆதிரா கவிதை – கயல்விழி

அந்தப் புன்னகையில் ஆதிரா கவிதை – கயல்விழி




காலத்தின் நெடுஞ்சாலையில் எத்தனையோ
ஓட்டங்கள், எத்தனையோ பயணங்கள், முகம்
அறியாத பல முகங்கள், அனைத்தும் கடந்து
செல்கிறது கானல் நீராய்….. கடந்து செல்லும்
பாதையில் இவளும் பயணிக்கிறாள்.

அவள் தான் ஆதிரா. வயதான பெற்றோர், தான்
அடையாத உயரத்தை தம்பி, தங்கை அடைய
வேண்டும் என்ற எண்ணம், வலிகளோடு நிறைந்த
பாதச் சுவடுகள் அவள் செல்லும் வழி எல்லாம்
நிறைந்து கிடக்கின்றன.

கோலமிட்ட வாசல் முதல் கூட்டம் நிறைந்த
பேருந்து நிலையம் வரை ஓயாமல் நடை
போடுகின்றன பாதங்கள்.

அவள் கடக்கும் பாதையில் ஒரு ஒற்றை மாடி
கட்டடம். தன்னைத் தானே தாங்கி கொண்டு,
தனிமையில் நித்தம் ஏந்திக் கொண்டு,வேரூன்றி
நிற்கிறது, அந்த ஒற்றை மாடி கட்டடம். கூரை வீடு
எப்போது மாடி வீடாக  மாறும் என்று தன் தம்பி,
தங்கையின் கேள்விக்கு தினமும் கடந்து போகும்
அந்த கட்டடம் ஆதிராவின் பார்வையில் நீந்திக்
கொண்டே செல்லும். கட்டடத்தை மட்டும்
கவனித்த உள்ளம் அங்கு உள்ள மயில் ஜன்னல்
கம்பிகளுக்குப் பின்னால் இருக்கும் அந்த வசீகர
தோற்றத்தையும் கவனித்தது.

40 வருடங்கள் என வரைந்துவிட்ட அவள் சித்திரம்.
காலத்தின் பாதையில் எப்போதும் ஓயாது
ஓடிய கால்களை காலம் பார்த்து, காலமே பொறாமை
கொண்டு, ஓடியது போதும்  ஓய்வெடு என்று
சொல்லும் அளவிற்கு மாறியது அவள் கால்கள்.
இன்னல்களைக் கடந்து செல்லும் மனம்,
வாதத்தையும் கடந்து சென்றது.

சக்கர நாற்காலியில் வாழ்க்கை தொடங்கியது
இலட்சுமிக்கு. கணவனை இழந்த கண்ணீர்
மங்கை, குழந்தை இல்லா நங்கை. நான்கு
சுவற்றில் அடைபட்டுக் கிடக்கும் அவளுக்குத்
தனிமையில் இருந்து விடுபடக் கிடைத்தது
அவளுக்கு எழுத்துக்கள். பல பேரைக் கடந்து
செல்லும் மனம், ஆதிராவையும் கவனித்துச்
செல்கிறது.

வாடிய பூ போல அவள் முகம், இரத்தத்தை
வியர்வையாய் உறிஞ்சும் வேலை, ஓயாது ஓடி
வலுவிழந்த கால்கள்., இன்னும் ஓடியே ஆக
வேண்டும் என்ற எண்ணம். கடந்து செல்லும் ஒரே
சாலையில், இருவரும் பார்வையில் மிதந்து
செல்கின்றனர்.

ஒருநாள் பார்வை, மறுநாள் கவனிப்பு. இப்படியே
மாதங்கள் ஒட, சற்று புன்முறுவலும் வலம்
வருகிறது இருவர் பார்வையிலும். தனிமையில்
நித்தம் ஏங்கிய  இலட்சுமிக்கு, ஆதிராவின் சிறு
புன்முறுவல் தாளாத இன்பம். நாளாக நாளாக
புன்முறுவல் நீண்டு கொண்டே செல்கிறது.
எழுத்துகளோடு உறவாடிய இலட்சுமிக்கு,
ஆதிராவின் புன்முறுவலும் சில கனம் உறவாடிச்
சென்றது.

கணப் பொழுது இன்பம் காலத்திற்குப்
பொறுக்கவில்லை போலும். தொலைந்தது
ஆதிராவின் புன்முறுவல்.  பிள்ளையை
தொலைத்த அன்னை உள்ளம் போல தேடியது
இலட்சுமியின் மனம். எவ்வளவு தேடியும்
காணவில்லை.வீட்டை மட்டும் வட்டமடித்த
நாற்காலி, காலை வேளையில் தன் தெருவையும்
வட்டமடிக்கும் போது, அவள் நடை போடும்
சாலையின் சுவற்றில் எதார்த்தமாய்த்
தென்பட்டது கண்ணீர் அஞ்சலிக் காகிதம்.

கடலென பொங்கியது கண்ணீர், இறுகியது
மனம். காலம் முழுவதும் துணையாய் இருப்பேன்
என சொல்லும் நம்பிக்கை விழிகள் இமை
மறித்தன.

“சாலைகள் நீண்டன…
அவள் பாதம் பட்ட இடங்கள் பலர் பாதம்
தொட்டது…
சன்னல் அவ்வப்போது திறந்தது…

இருந்தாலும் பதட்டம் மீளவில்லை…
கண்ணீர் குறையவில்லை…
இன்றும் புன்னகை சிந்திக் கொண்டே இருக்கிறாள்…
கால்நடைகள் உண்ணாத…
சுவற்றின் மேல் கிழிந்த காகிதமாய்…
அந்தப் புன்னகையில் ஆதிரா…”

கயல்விழி
நாகை
9626552403
[email protected]

சிறுகதைச் சுருக்கம் 93: ஜி. காசிராஜனின் அண்ணனின் பனியன் சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்

சிறுகதைச் சுருக்கம் 93: ஜி. காசிராஜனின் அண்ணனின் பனியன் சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்



தமிழ் இலக்கிய உலகில் சிறுவர்களுடைய உளவியலை பலரும் பலவிதத்தில் படம் பிடித்திருந்தாலும் கரிசல் கலைஞர் காசிராஜன் காட்டும் உலகம் என்பது வேறாகத்தான் இருக்கிறது.

அண்ணனின் பனியன்
ஜி. காசிராஜன்

“கூச்சப்படக்கூடாது சம்பத்… நம்ம வீட்டுக்குள்ளேயே கூச்சப்பட்டா வெளியே எப்படிப் பேசுவே… சாப்பாடு போடுங்கன்னு தைரியமாக் கேட்கணும்.. இங்க நீ வந்து ஒரு வருஷம் ஆச்சு.. சாப்பாடு போடவா..”

“போதும்கா..”

“ஆறாம் வகுப்புல வந்து சேர்ந்தே.. நம்ம வீட்ல வசதி இல்லேன்னுதானே இங்க வந்துப் படிக்கறோம்னு நினைக்காதே.  நான்தான் நமக்கு தம்பி இல்லையேன்னு அப்பாக்கிட்டச் சொல்லி கூட்டியாரச் சொன்னேன்.. ஏங்கூட வெளாடுறதுக்கு யாரு இருக்கா.. அக்கா ஓம்மேலே எவ்வளவு பிரயமா இருக்கேன் தெரியுமா?”

“வைச்சது வைச்ச இடத்துல இருக்காதே..” பொன்ராஜ் அண்ணன் மச்சு வீட்டுக்குள்ளிருந்து அலுத்துக் கொண்டான்.

“என்னடா?” என்று சலித்து திண்ணையிலிருந்து அம்மா கேட்டாள்.

“இங்கே பனியன் வைச்சேன்.  இந்தக் கொடியிலதான் போட்டேன்.  காணோம்.”

“யாரு எடுப்பா? அங்கதான் இருக்கும், எங்க போகும்? நல்லா தேடு.”

சம்பத்துக்கு பக்கென்றது.  சொல்லவா வேண்டாமா என்று யோசித்தான்.  சொல்ல வெட்கமாகவும் இருந்தது.  பயமாக இருந்தது.  முகமெல்லாம் வேர்வை.  சொன்னா எல்லாரும் சிரிப்பாங்களே!

“குழம்பு வேணும்னா ஊத்திக்க..” என்று சொல்லிவிட்டு அக்காவும் மச்சி வீட்டுக்குள்போய் தேடினாள்.  “இந்நேரம் பனியன் எதுக்குண்ணே?”

“வெள்ளன உழுகப் போகணும்னு இப்பவே தேடிட்டிருக்கேன்.  சம்பத் நீ பாத்தியாடா?”

“இல்லண்ணே, நான் பாக்கலை.”

பொன்ராஜ் ஏதோ சொன்னான்.

“ஏன் இப்படிக் கத்தறேண்ணே?  வண்ணாத்தி வர்ற நேரம்.  வெளுக்க போட்ருப்போம்.. கேப்போம்..”

சம்பத்துக்கு இடுப்பெல்லாம் கூசியது.  பனியனை நினைத்தவுடனே உடம்புக்கு பாரம் கூடியது.  புத்தகம் எடுத்து உட்கார்ந்தான்.  மனம் செல்லவில்லை.  அப்பாவும் அண்ணனும் மனசில் தோன்றி பனியன் போட்டதுக்காக அவனை அடித்தார்கள்.  பயம் கவ்வியது.

சம்பத்துக்கு ரொம்ப நாளாக பனியன் போட வேண்டும் என்று ஆசை.  ஆனால் பனியன் இல்லை.  இவனும் பனியன் வேண்டும் என்று கேட்கவில்லை.  வீட்டிலும் எடுத்துத்தரவில்லை.  அறிவியல் வாத்தியார் பாடம் நடத்தும் போதெல்லாம் அவருடைய சட்டையையும் நன்கு வெளியே தெரியும் பனியனையும்தான் பார்ப்பான்.  சட்டையில் ஒரு பித்தானைக் கழட்டிவிட்டு முக்கோணம் மாதிரி பனியன் தெரியப் போட்டிருப்பார்.  பின்னால் திரும்பினாலும் பனியன் அப்பட்டமாகத் தெரியும்.  சம்பத்துக்கு கவர்ச்சியாக தெரியும்.

கருத்த வாத்தியாருக்கே இவ்ளோ நல்லா இருந்த நமக்கு எப்படி இருக்கும் …  எண்ணிக் கொள்வான்.

அஞ்சாம் வகுப்பு படிக்கிறவரை பின்னால் கிழிந்த கால் சட்டையும் தொளதொள மேல் சட்டையும்தான்.  அதுகூட ரெண்டு ஜோடிதான்.  எல்லாப் பையன்களும் ‘டேய் தாத்தா வாராண்டா’ என்று கேலி பண்ணுவார்கள்.  மற்றவர்களின் கேலிப் பேச்சு  சம்பத்தை ஊமையாக்கியது.  மனசில் சதா ஏக்கம்.  யாராவது நல்ல சட்டைப் போட்டுப் பார்த்தவுடனே ஏமாற்றம் இயலாமை வருத்தம்.

இவனுடன் படிக்கும் வெங்கடேஸ்வரன் டாக்டருடைய பையன்.  சாயங்காலம் விளையாட பனியன் போட்டுத்தான் வருவான்.  அது சிங்கப்பூர் பனியனாம்.  சம்பத்துக்கு தொட்டுப் பார்க்க வேண்டும் போல இருக்கும்.

அய்யா கூலி வேலை செஞ்சு பனியனா வாங்கித் தரமுடியும்.  அய்யாவே ரொம்ப நாளா சட்டை போடலை.  ஏதோ பெரியம்மா பெரியப்பா இருக்கப்  போயி படிக்கப் போடறாங்க.  பெரியப்பா வீட்டில் மூன்று அண்ணன்களும் ஒரு அக்காவும்.  இரண்டு பேர் படித்து சாத்தூரிலும் மதுரையிலும் வேலையில் இருக்கிறார்கள்.  மூன்றாவது பொன்ராஜ் அண்ணன்.  நான்காவது அக்கா.  அக்காமேல் இவனுக்கு கொள்ளைப் பிரியம்.  பிரியத்தை வெளிக்காட்டாமல் மனசுக்குளேயே வைத்திருப்பான்.

“சம்பத் படிக்கிறியா?” அக்கா கேட்டாள்.

“ம்..”

“பரீட்சை எப்படா இன்னும் ஒரு மாசம் இருக்குமில்ல.  ஆமா நீ அண்ணன் பனியனைப் பாத்தியா?”

சம்பத் அக்காவை நிமிர்ந்து பார்த்தான்.  கொஞ்சம் யோசித்து  “இல்லேக்கா” என்றான்.  அக்கா பாத்திரம் தேய்த்துக் கொண்டே “எங்க போயிருக்கும் வண்ணாத்தி சுப்பு வரட்டும் கேட்போம். நீ படி.”

“ஒண்ணுக்குப் போயிட்டு வந்த்ருறேன்கா.”

சம்பத் வெளியே ஓடினான்.  சற்று தள்ளிப் போய் சட்டையைத் தூக்கி உடம்பைப் பார்த்தான்.  உடம்பு முழுவதும் தெரிந்தது.  இரண்டு கயிறு மட்டும் புஜத்திலிருந்து தொங்க, முழங்கால் வரை வந்த பனியனை மடக்கி டவுசருக்குள் திணித்து வைத்திருந்தான்.  சம்பத்துக்கு அழுகையாய் வந்தது.  என்ன செய்யலாம்?  இன்னிக்குப் பாத்தா அண்ணன் பனியனைத் தேடணும். ஒண்ணுக்குப் போய்விட்டு வீட்டுக்கு வந்தான்.  வண்ணாத்தி சுப்பு சாப்பாட்டுக்காகக் காத்திருந்தாள்.  அக்கா சாப்பாடு போட்டுவிட்டு “சுப்பு அண்ணனோட பனியனை வெள்ளாவி வைச்சுருக்கியா?” என்றாள்.

“பனியனா? ரெண்டு வேட்டி, அம்மா சேலை, துண்டு நாலுதான் போட்டீங்க. பனியன் இல்லை தாயே.”

“இல்ல இங்க காணோம். அதுதான் ஒங்கிட்டப் போட்டோமோ என்னமோன்னு.”

“பனியன் போடலம்மா.”

“எதுக்கும் வீட்ல பாரு சுப்பு.”

சம்பத் புத்தகத்துப் பக்கத்தில் உட்கார்ந்தான்.  காலைல சீக்கிரம் எந்திரிச்சு கழட்டிப் போட்டுட்டு மூட்டைக்குக் கீழே இருந்துச்சுன்ன சொல்லிரனும் என்று எண்ணினான்.

“இங்க போட்ட பனியன் எங்க போகும்.. அண்ணன் எங்கயாச்சும் குளிக்கிற இடத்துல போட்டுருக்கும்.  மறந்து போயி   நம்மளப் போயி தொந்தரவு பண்ணிட்டு” என்று சொல்லிக் கொண்டே திண்ணையைக் கூட்டி படுக்கையை விரித்தாள்.    அங்குதான் அம்மா அக்கா சம்பத் படுத்துக் கொள்வார்கள்.  அண்ணன் பொன்ராஜ் கொஞ்ச நேரம் கழிச்சு வந்து விரிப்பானை எடுத்துப் போய் தொழுவத்தில் படுத்துக் கொள்வான்.

“சம்பத் படிக்கப் போறியா? படுக்கப் போறியா?”

“படுக்கப் போறேன்கா..” மெதுவாகச் சொன்னான்.

“ஏண்டா ஒரு மாதிரியா இருக்கே? தலைகிலை வலிக்குதாடா.”

அக்கா வந்து கழுத்தில் கை வைத்துப் பார்த்தாள் “ஏண்டா இப்படி பயந்து நடுங்கற. நான் உன் அக்காடா..”

அப்பொழுது பொன்ராஜ் அண்ணன் வந்தான்.

“என்ன பனியன் கேட்டியா? சுப்பு என்ன சொன்னா?”

“வெளுக்கப் போடலியாம், எதுக்கும் பாத்து காலைல  சொல்றேன்னு சொன்னா.”

சம்பத் படுத்துக் கொண்டான்.  தன்னையே நொந்து கொண்டான்.  இவ்ள பெரிய பனியனை யாராச்சும் போடுவாங்களா பனியன் போட்டவர்கள் அறிவியல் வாத்தியார் உட்பட ஒவ்வொருவராக மனதில் வந்தார்கள்.  சம்பத் பலவிதமாக எண்ணிக் கொண்டு தூங்குவதுபோல் கண்ணை மூடிக் கொண்டான்.  அக்கா ஏதோ சொல்லியவாறே பக்கத்தில் படுத்துக் கொண்டாள்.  அவள் பக்கத்தில் படுத்தது காதுவழி மனசில் தெரியும்.  அக்கா தன்னையேப் பார்ப்பதாக எண்ணி கண்ணை அசையாமல் வைத்திருந்தான்.

அவளுக்கு ஒரே புழுக்கமாக இருந்தது.  சம்பத்தைப் பார்த்தாள்.  “இந்தப் புழுக்கத்துல எப்ட்றா சட்டை போட்டுத் தூங்றே..” அக்கா எழுந்து அவன் சட்டையை கழட்ட ஆரம்பித்தாள்.  அவன் தூங்குவது போல கைகளை இறுக்கிக் கொண்டான்.  கழட்டிப் பார்த்தால் அவளுக்கு ஒரே ஆச்சர்யம்.  பூணூல் மாதிரி இருண்டு தோள்களிலும் இரண்டு பனியன் கயிறு.  சுருட்டி வைத்திருந்த பனியனை வெளியே எடுத்தாள்.  அவனுக்கு முழங்கால் வரை வந்தது.

அக்காவுக்கு சிரிப்புத் தாங்க முடியவில்லை. சம்பத் எழுந்து கொண்டான்.  அக்கா விழுந்து விழுந்து சிரித்தாள்.  சம்பத்தை பனியனை பிடித்து இழுத்துக் கேலி பண்ணினாள்.

“அடே படவா, திருட்டுப் பயலே, கல்லுளி மங்கா..”

சம்பத் ஓவென்று அழ ஆரம்பித்து விட்டான். விக்கி விக்கி அழுதான்.

“டேய், டேய், அழுகாதே சத்தம் போடாதே டா.  அம்மா வந்துடுவா.  கழட்டு, கழட்டு. சீக்கிரம் கழட்டு. யாருக்கும் தெரியாம வைச்சிடுவோம்.”

சம்பத் விசும்பி விசும்பி அழுதுகொண்டே கழட்டிக் கொடுத்தான்.  போர்வையால் முகத்தை மூடி வெட்கப்பட்டு அழுது கொண்டிருந்தான்.  அக்காவுக்கு சிரிப்புத் தாங்க முடியவில்லை.  அவன் முகத்தை மூடிக் கொண்டிருந்த போர்வையைப் பிடித்து இழுத்தாள்.  அவன் பலமாகப் பிடித்துக்  கொண்டிருந்தான்.

“டேய் சம்பத் அழுகாதே.  நாளைக்கு அப்பாக்கிட்டச் சொல்லி ஒனக்கு ஒரு பனியனை வாங்கித் தரச்சொல்றேன் என்ன?” என்று மீண்டும் போர்வையை இழுத்துப் பார்த்தாள்.  முகத்தை மூடிக் கொண்டு சிரித்துக் கொண்டே அழுதான்.  அக்காவுக்கு சிரிப்பு அடங்கவே இல்லை.

பின் குறிப்பு:
தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட  போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது,  அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு  ஒரு நுழைவாயிலாக  அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது. 

Thamaiyan ShortStory By Shanthi Saravanan. சாந்தி சரவணனின் தமையன் சிறுகதை

தமையன் சிறுகதை – சாந்தி சரவணன்




கையில் இருக்கும் பாகப்பிரிவினை பத்திரத்தை பார்த்தபடி அமர்ந்து இருந்த சின்ன முதலாளிகள் சிதம்பரம், பழனி, ஜீவனை பார்த்த வண்ணம் அமர்ந்து ‌இருந்தாள் காரியதரிசி  காயத்ரி.

அவர்களோ  கையில் பத்திரத்தை வைத்துக் கொண்டு இருந்தார்கள் பழனியும் மற்ற இரு சகோதரர்களும் தங்களது நினைவுகளை மனதில் அசைப்போட்டவாறே அமர்ந்து இருந்தார்

அவர்களின் ஊர் வளையாம்பட்டு. வளையாம்பட்டு  முருகன் கோவில் பழங்கால கோவில் .  அமைதியான கோவிலின் அமைப்பு நம்மை கோவிலில் அமர வைக்கும். ஆம்பூருக்கும்  வாணியம்பாடிக்கும் மத்தியில் இருக்கும் சிற்றூர்.

ஆதிலக்ஷ்மி நடராஜன் தம்பதியருக்கு   ‌4 ஆண் பிள்ளைகள்.

ஷண்முகம், சிதம்பரம், பழனி,   ஜீவன். நடராஜன் ஒரு பெட்டி கடை வைத்து இருந்தார்.  பெரும்பாலும் அந்க ஊரில் பலருக்கு விவசாயமே முதன்மைத் தொழில். ஆனால்  இவர்கள் குடும்பத்திற்கோ   சொந்தமாக ஒரு வீடு மட்டும் தான்.   அங்கேயே ஒரு கடை வைத்து இருந்தார்கள். அது தான் அவர்களின் வாழ்வாதாரம்.

பழனிக்கு நன்றாக நினைவு இருக்கிறது. 6வது படிக்கும் போது மாணவர்கள் அனைவரும் நாளை தீபாவளி இன்று மட்டுமே பள்ளி என மகிழ்ச்சியாக பேசிக் கொண்டு இருந்த போது, அண்ணன் சிதம்பரம் வகுப்பு ஆசிரியரிடம் வந்து ஏதோ சொன்னான், சற்று பதட்டமாக இருந்தான்.

வகுப்பு ஆசிரியர் சம்பத்,  “பழனி இங்கே வா”

ஆசிரியர் அருகே வந்த பழனியை கட்டி பிடித்துக் கொண்டு சிதம்பரம் அழு துவங்கி விட்டான். ஏன் என புரியாமல் அண்ணை பார்த்து வண்ணம் இருந்தான்

சக மாணவர்கள் பதட்டமானார்கள்.

சம்பத் ஆசிரியர் ஆழாதிங்க பா… வாங்க என இருவரையும் அழைத்து கொண்டு தலைமை ஆசிரியர் அறைக்குள் அழைத்து சென்றார்.

சார் பழனி அப்பா தவறிட்டாராம் என சொன்னவுடன் அதுவரை ஒன்றும் புரியாமல் அண்ணணை பார்த்துக் கொண்டு இருந்த பழனி அழ  துவங்கி விட்டான்.

இருவரையும் சமாதானம் செய்து பள்ளி வாட்ச்மென் ஒருவருடன் அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

அந்த நாளை பழனியால் மறக்கவே முடியாது.. அன்றிலிருந்து பொறுப்பை இரு அண்ணன்மார் ஏற்றுக் கொண்டார்கள். ஏற்றுக் கொண்டார்கள் என்று சொல்வதை விட அப்பாவாகி விட்டார்கள் என்றே சொல்லலாம். அம்மா ஆதிலக்ஷ்மியும் அப்பா இல்லாத பிள்ளைகள் என குறை தெரியாமல் வளர்த்தார்.

பழனியையும் ஜீவனையும் பட்டதாரி படிப்பு படிக்க  வைத்தது பெரிய அண்ணன் ஷண்முகம் தான்.

பட்டணம் சென்று வாகன  தொழிற்சாலை பணியில் சேர்ந்து கடுமையாக உழைத்து தன் குடும்பத்தை பார்த்துக் கொண்ட பெருமை ஷண்முகத்தையே சாரும்.

ஷண்முகம் உழைப்புக்கு எந்த விதத்திலும் குறைந்தது  இல்லை சிதம்பரத்தின் உழைப்பு. ஷண்முகம் ஒரு நிலை எட்டிப் பிடிக்கும் வரை  சிதம்பரத்தின் உழைப்பு தான் அவர்கள் குடும்பத்திற்கு ஆதாரம்.  உள்ளூரில் இருந்து கொண்டு கிராமத்தில்  கூலி வேலைசெய்து  குடும்பத்தை பராமரிப்பது தான் சிதம்பரத்தின் வேலை.

தம்பிகள் என்றால் உயிர். தங்களின் குடும்பத்தை ஒரு நல்ல நிலைக்கு உயர்த்த வேண்டும் என்பதை மட்டுமே லட்சியமாக கொண்டு உழைத்தார் அண்ணன் ஷண்முகம். சிதம்பரம், பழனி, ஜிவன் முவரையும் எந்த ஒரு குறையும் தெரியாமல் பார்த்துக் கொண்டார்.

ஆரம்ப காலத்தில் சென்னையில் கூடி வந்த போது ஷண்முகத்திடம் போட்டு கொள்ள ஒரே ஒரு வெள்ளை சட்டை, கருப்பு பேண்ட் மட்டுமே புதிதாக இருக்கும். வெளியே போயிட்டு  வந்தவுடன் ஈஸ்திரி போட்டு வைத்து கொள்வார்.

நண்பர்கள் என்னடா…… ஷண்முகம், ” நாளைக்கும் இண்டர்வியா…. இதே சட்டைதானா. என கேலி கிண்டல் செய்வார்கள்”

எல்லா நிகழ்வுக்கும் அதே உடை என்பதால் இந்த பரிகாசம்….

இதை எதையும் காதில் வாங்க மாட்டார் ஷண்முகம்.ஒரே ஒரு சட்டை என தெரியா வண்ணம் பளிச்சென்று வைத்து இருப்பார்.

காலை நீர் மோர் இரவு ஒரு சோம்பு தண்ணீர். மத்திய உணவு பல நாட்கள் டீயோடு சில நாட்களில் அதுவும் இல்லை.

வருடங்கள் கடந்தன.

உழைப்பு கண்டிப்பாக பலன் தரும் என்பதற்கு ஷண்முகம் ஒரு எடுத்துக்காட்டு. ஷண்முகம் ‌ சென்னையில் நல்ல நிலையை எட்டிப் பிடித்தார். ஒரு சிறிய வாகன  தொழிற்சாலை சொந்தமாக துவங்கினார்.

படிப்பை முடித்த கையோடு அண்ணனுக்கு ஒத்தாசையாக சென்னையில் வந்து சேர்ந்தார்கள்‌, தம்பிகள். சில நாட்களில் குடும்பத்தோடு சென்னையில் குடியேறினார்கள்.

சிதம்பரம், பழனி, ஜீவன், ஷண்முகம் உருவாக்கிய நிறுவனத்தில் முழுமையாக கவனம் செலுத்த ஆரம்பித்தார்கள்‌.

பம்பரம் கூட யாராவது சுற்றி விட்டால் தான் சூழலும். ஆனால்  பம்பரத்தை விட வேகமாக சூழல்பவர்கள் தான் தம்பிகள் மூவரும்.

இரு கை எட்டு  கையாக ஓன்று சேர்ந்தது. ஒரு காணி நிலம் வேண்டும் என‌ உழைக்க  ஆரம்பித்து இன்று தொழில் அதிபர்களாக உயர்ந்தார்கள் நான்கு சகோதரர்கள்.

இதற்கிடையில் ஷண்முகத்திற்கு சொந்த ‌அண்ணன் மகளையும்  சிதம்பரத்திற்கு அசலில் பெண்    பேசி திருமணம்  செய்து முடித்தார் அவர்களின் அம்மா.

கூட்டு குடும்பமாக சென்னையில் குடியேரினார்கள். பெரிய அண்ணனுக்கு பெண் குழந்தையும் சின்ன அண்ணனுக்கு ஆண் குழந்தையும் பிறந்தது.

பழனி, ஜீவன் இருவருக்கும் திருமணம் முடிக்க ஆதிலக்ஷ்மி எடுத்த முயற்சிகள் முயற்சியாகவே போயின.

“பழனி” என, அம்மாவின் குரல் காதில் விழ “என்னம்மா” என்ற பழனியிடம், “இப்படி ஓடி ஓடி என்னடா செய்ய போற.  நம்ம சொந்தத்தில் ஒரு பொண்ணு இருக்காம்.  மாமா சொன்னார்.  நல்ல படிச்சு இருக்கா. இந்த வாரம் ஊருக்கு போய் பொண்ணு பார்த்திட்டு வந்திடலாமா” என ஆர்வத்தோடு கேட்ட அம்மாவை பார்த்து, அப்புறம் சொல்றேன் மா.‌… என கைப்பேசி பேசி கொண்டே ஓடிவிடுவான்.

“ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது அந்த தாய் மனதிற்கு”.

ஓட்டத்தை மட்டுமே மணமுடித்த கணக்காய் ஷண்முகத்தை மிஞ்சியது அவனுடைய உழைப்பு.  திருமணம் என்பது நினைவில் இல்லாமல் தொழில் தொழில்…..என் ஓடினான். அவன் பின்னே ஜீவனும் ஓடினான்.

“பழனி இந்தா இந்த சீட்டை வண்டியில் போகும் போது படி”, என அம்மா பேசுவதை கேட்க கூட நேரம் இல்லாமல் சீட்டு வாங்கி கொண்டு  ஓடுவான்.

3வது மட்டுமே படித்த அம்மா கொடுத்த சீட்டு வண்டியில் ஏறும் போது பார்த்தால், கிறுக்கல்கள் கண்ணீர் வரவழைக்கும் பழனிக்கு. “கல்யாணம்” என எழுதி இருக்கும்.

ஆதிலக்ஷ்மிக்கு என்ன கவலை என்றால் பழனிக்கு திருமணம் முடித்தால் தானே ஜீவனுக்கு அடுத்து திருமணம் முடிக்க முடியும் என்று.

பிறப்பு என்று ஒன்று இருந்தால் இறப்பு என்பது கண்டிப்பாக உண்டு ‌ அதுவே இயற்கை தத்துவம் என பெரியார் கூறியது போல அவர்களின் தாயாரும் இயற்கை எய்தினார் கடைசி இரண்டு மகன்களுக்கு திருமணம் செய்யாமலே….

அம்மா பொறுப்பில் இருந்த அண்ணன் மனைவி இருவரும் அம்மாவின் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்கள்.

ஊரில் இருந்து  திருவிழாவிற்கு அழைப்பு வந்தது.   சொந்த ஊரில் திருவிழா என்றால் கொண்டாட்டம் தானே.

ஷண்முகம்  தன் மொத்த குடும்பத்தோடு ஊருக்கு சென்றார்கள். மாமா வீடு மொத்த உறவுகளின் சங்கமம் ஆனாது.  வந்து இருந்த சொந்தங்கள் இனி இந்த கடைசி இரண்டு பசங்களுக்கு திருமணம் நடக்காது.  பெரியவர்கள் கல்யாணம் முடிந்தவுடன் மாறிவிடுவார்கள் என அரசல் புரசலாக பேசிக் கொண்டது பழனி, ஜீவன் காதில் விழுந்தது. அதுமட்டுமல்ல ஷண்முகம் தான் இந்த சொத்து எல்லாவற்றையும் சம்பாதித்தார். இவர்கள் மூவரும்  ஷண்முகம் உருவாக்கிய நிறுவனத்தை தான் விரிவுபடுத்தினார்கள்.  “மூன்று தம்பிகளுக்கும் நாமம் தான் போட போறான்” என்று பேச்சு வேறு.

ஷண்முகம் காதிலும் விழுந்தது.

“எத்தனையோ வசை சொற்களை கேட்டு வளர்ந்தவன்.  அதை கண்டு கொள்ளாமல் கடந்து சென்றான். “

திருவிழா மிகவும் சிறப்பாக நடந்தது.  அனைவரிடமும் விடைபெற்று கொண்டு அடுத்த வருடம் திருவிழாவிற்கு அவசியம் வருகிறேன் என சென்னை வந்து சேர்ந்தார்கள்‌.

இரண்டு மாதங்கள் கடந்தது.  பழனிக்கும், ஜீவனுக்கும் திருமணம் என கல்யாண பத்திரிக்கையை ஊர் முழுவதும் வந்து கொடுத்தார்கள் அண்ணன் ஷண்முகமும், சிதம்பரமும்.

இராமன் லக்ஷ்மன்  பாசம் மிகுந்த சகோதரர்கள் என புராணங்களில்  கேட்கிறோம். நிஜத்தில் ஷண்முகம் குடும்பத்தார் தான் ‌பார்கிறோம் என  வசைப்பாடிய வாய் வாழ்த்தி பேசியது.

திருமணம் நல்ல படி முடிந்தது.

திடிரென்று ஒரு நாள் பெரிய அண்ணன் ஷண்முகம் 3 தம்பிகளை அழைத்து  பாகப்பிரிவினை பத்திரம் தயார் செய்து கொடுத்து படிக்கச் சொன்னார்.

மூவரும் எதற்கு அண்ணா இப்போதே என‌ கேட்ட போது. அடுத்த நொடி ஆயிரம் அதிசியங்களை கொண்டது. எழுதி வைப்பதில் தப்பு இல்லை என  சொன்னார் ‌

‌அந்த பத்திரத்தை வைத்து கொண்டு தான் அசைவற்று நின்றுக் கொண்டு இருந்தார்கள் தம்பிகள் மூவரும்.

அனைத்து சொத்துக்களையும் சரியாக நான்கு பங்குகளாக பிரித்து எழுதி வைத்த அண்ணனின் மனசை எப்படி பாராட்டுவது என தெரியாமல்…..

மரம் என்றாலும்,  செடி என்றாலும் அதனுடைய வேர்களை பூமித்தாய் தான் தாங்குகிறாள்.  அதுபோல தான் எங்கள் அண்ணன். “அன்புக்கு உண்டோ அடைக்கும் தாழ்”. என் ஒற்றை சிந்தனையோடு சிந்தித்து கொண்டு இருந்தார்கள் ஷண்முகத்தின் ஆசை தம்பிகள்.

சார் என்னாச்சு, என்ற காயத்திரியின் குரல்  இவர்கள் மூவரையும்  நிகழ்கால நினனவுக்கு திருப்பியது. அண்ணனும் அப்பா தான்.‌…

சிறுகதை: பிரதர் -இரா.இரமணன் 

சிறுகதை: பிரதர் -இரா.இரமணன் 

  “ நிறுத்து.நிறுத்து. ஓரமா நிறுத்து” கிளம்பும்போதே பயந்துகொண்டுதான் எடுத்தோம். எங்கெங்கே தடைகள் இருக்குமோ, போலீஸ்காரர் தடுத்து நிறுத்தி விடுவாரோ என்று யோசித்தோம். ஆனால் மெஷின் கொரோனா தொடங்கும்போது ரிப்பேருக்குக் கொடுத்தது. இப்ப மூணு மாசம் ஆனபிறகுதான் சரியாடிச்சுன்னு கடைக்காரர் போனில்…