நூல் அறிமுகம்: நாகூர் ரூமியின் ’மாற்றுச் சாவி’ – து.பா.பரமேஸ்வரி

நூல் அறிமுகம்: நாகூர் ரூமியின் ’மாற்றுச் சாவி’ – து.பா.பரமேஸ்வரி




இயற்கையால் உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த உடலியல் என்பது உடல் மனம் இரண்டும் ஒரு சேர வடிவமைக்கப்பட்ட அற்புதம். உடல் தனியே மனம் தனியே பிரித்துப் பகுத்துப் பார்ப்பது அறிவின்மை. மனதின் சமநிலைக் குலைவு உடலிலும் உடல் தொந்தரவுகளின் தாக்கம் மனதிலும் பிரதிபலிக்கும். இதுவே ஒருங்கிணைந்த உடலியல். மனதின் திடவடிவம் உடல். உடலின் சூட்சம அரூபம் மனம். கண்களால் பார்க்கவியலா உடல் மனம்.

மனம் அதுவொரு  ஒரு மந்திரவாதி. உடலை கையாள்வதைக் காட்டிலும் மனம் என்னும் மகானை நெறியாகக் கையாள்வதே பிரச்சனைகளற்ற வாழ்விற்கான ஒரே வழி. நம்மைத் தொடரும் அனைத்துப் பிரச்சனைகளும் பூட்டானால் தீர்வாக சாவிகள் பல உண்டு என்ற தேடலிலேயே நம் வாழ்நாள் கழிகிறது. இவ்வனைத்து பிரச்சினைகளுக்குமான தீர்வாக ஒரே ஒரு ஒற்றைச்சாவி மாஸ்டர் கீ  கிடைக்குமானால் அந்த மாஸ்டர் கீ மாற்றுச் சாவியைக் கண்டடைய நாம் எதையும் செய்யலாம்.

“மனம் செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம்..” திருமூலர் திருமந்திரம்.

நம் மனதை நாம் செம்மையாக சீர்மையாக  சிறப்பாக சமநிலையாகக் கையாளத் தெரிந்துக் கொண்டால் மனதை அடக்க நாம் மேற்கொள்ளவிருக்கும் எண்ணற்ற பயிற்சிகளும் மருத்துவங்களும் ஆன்மீகமும் பணத்தையும் நேரத்தையும் வீணடிக்கும் அவலம் ஏற்பட வாய்ப்பிருக்காது. அப்படியானால் மனதை எவ்வாறு கையாள்வது? நோயற்ற மனம் எப்படி வாய்க்கும்?

பிரச்சனைகள் தொந்தரவுகள் தான் நம் மனதை ஆட்டிப்படைக்கும் சாத்தான் என்றால் அவற்றை வெல்லும் வழி தான் என்ன?

தொடர் வெற்றிகளுக்கும் நீடித்த மகிழ்ச்சிக்குமான சாவி நம்மிடமே தான் இருக்கிறது. உடலுக்கும் மனதிற்கும் உபாதையை வழங்கும் சாத்தானை அழிக்கும் வல்லமையும் மீண்டும் அந்த சாத்தான் மனதில் ஜனிக்கா வண்ணம் மனதைப் பரிசுத்தப்படுத்தும் திறவுகோல் நம்மிடமே உள்ளது. திரு நாகூர் ரூமி அவர்களின் மாற்றுச் சாவி என்கிற இந்த நூலைக் கைக்கொண்டு கட்டுண்டுக் கிடக்கும் அனைத்து பூட்டுகளையும் மாற்றுச் சாவிக் கொண்டுத் திறந்திருங்கள். இந்த நூல் இப்படியான ஒரு மந்திரச்சாவியை உங்கள் கைகளில் வழங்கத் தயாராக உள்ளது.

நூலின் ஒவ்வொரு அத்தியாயமும் மனம் பற்றிய தெளிவான பார்வையையும் புரிதலையும், வழங்கப்பட்ட வாழ்க்கையை நமககானதாக்க வழிவகுக்கும்.

அற்புதங்களால் நிரம்பப்பட்ட மனித வாழ்வில் எதை செய்ய வேண்டும் செய்யக்கூடாது எதை மதிக்க வேண்டும் மதிக்கக்கூடாது என்ற தெளிவான மனநிலைக்குக் கரம் பற்றி அழைத்துச் செல்லும் சில பக்கங்கள், உணர்ச்சிவசப்படாத எதிர்மறை உணர்ச்சிகளின் பிடியில் சிக்காத மனமே வெற்றி பெற்ற மனம் என்கிற போதனையைக் கொண்ட பகுதியாக சில புத்தர் பரமஹம்சர் போன்ற மகான்கள் வாழ்ந்துக்காட்டி உணர்த்திச் சென்ற பொறுமையே வாழ்வின் ஆதாரம் பொறுமை இல்லாமல் நம் கஷ்டத்தை, சந்தோஷத்தை, கோபத்தை, நோயை ஆரோக்கியத்தை, பணத்தை செல்வாக்கை எல்லாம் நாம் வெளிப்படுத்தத் துடிப்பதாலும் வெளிப்படுத்துவதாலும் வரும் விளைவுகளைப் பற்றிய சம்பவங்கள் நிகழ்வுகளைப் பதிவிட்டுப் புரிதலை ஏற்படுத்திய ஒரு சில பத்திகளும், ஒரு மனிதனை தமது வாழும் காலத்தில் வாழ வைப்பதும் சாகடிப்பதும் அவனது மனமாகவே வாய்த்து விடுகிறது. மனமே வெல்லும் மனமே கொல்லும் என்கிற ஆத்மார்த்த தத்துவத்தைச் சூடியுள்ள அனேகங்களும், கவலை குழப்பம் கோபம் காமம் அச்சம் எரிச்சல் பொறாமை போன்ற எதிர்மறையான எண்ணங்களை நம் மனம் என்னும் குப்பை தொட்டிக்குள் கொட்டினால் கூட்டினால் மனம் என்னும் இந்த மாயக் குப்பைத் தொட்டி தேவையற்ற உணர்ச்சிகளைப் பல்கிப் பெருகச் செய்திடும். நம் மன சமநிலையை குலைத்து நிரந்தர நிர்பந்த நோயாளி மனநிலைக்குத் தள்ளிடும் என்கிற நிதர்சனங்கள் பலவும், தெளிவான மனதிலேயே அனைத்து தீர்வுகளுக்குமான அறியப்படாத கதவுகள் திறக்கும், உணர்ச்சிவசப்படும் மனத்தால் எந்த ஒரு பிரச்சனைகளுக்குமான தீர்வைக் கண்டடைய முடியாது, உணர்ச்சி வசத்திலிருந்து நாம் வெளியில் வர முடிந்தாலொழிய மனதில் புதிய சிந்தனைகளின் தோற்றம் நிகழும் என்கிற மனதின் படிப்பினைகள் சில வரிகளாகவும், ஒரு மனிதனின் கோபம் இன்னொரு மனிதனை காயப்படுத்தும், ஆனால் அது கோபப்படும் மனிதனுக்கு ஒருவகையில் வெற்றி என்று கருதினாலும் கோபமானது கோபப்படும் மனிதரையும் நிச்சயமாக பாதிப்புக்குள்ளாகும் என்கிற ‘பார்க் ட்வைனின்’ பதிவைச் சுட்டிக்காட்டிய சில இடங்கள், கோபம் நம்மை அதன் அடிமையாக்கி விடும் அதே சமயம் தார்மீகமான கோபமும் அவசியம் வர வேண்டும்; அநியாயத்தை அக்கிரமத்தைக் கண்டு பொங்கி எழுந்த கோபம் ஒருவகையில் நியாயமானது என்றும் இவ்விரண்டு கோபங்களுக்கும் இடையில் பாரதூரமான வித்தியாசம் உண்டு என்றும் முட்டாள்களின் இதயத்தில் தான் கோபம் குடியிருக்கும் என்கிற ‘ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின்’ சொல்லாடலோடு பற்பல பேரறிஞர்களின் பொன்மொழிகளும் தனக்குள் உள்ளொடுக்கிய நூலாக, கோபவுணர்ச்சியைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளையும், கோபம்  ஏற்படும்போது மனதையும் செயலையும் கையாலும் நெறிகளைப் பதிவுகளாகக் கொண்டும் என கொட்டிக்கிடக்கும் பொற்குவியல்களாக நூலெங்கும் மனிதவாழ்வின் துயரங்கற்ற பாடங்களும் போதனைகளும் அத்யாயம் ஒவ்வோன்றிலும் ஆண்டு வருகின்றன.

ஒவ்வோர் மனிதவாழ்விலும் மனதை சமநிலையுடன் ஆள்வதற்கான வெற்றி விதிகளாக நாம் நமது தவறுகளுக்கான தோல்விகளுக்கான காரணங்களை வெளியில் தேடிக் கொண்டும், உள்ளே அகத்தில் மாறாவிட்டால் வெளியே புறத்தே நம்மைச் சுற்றிய சூழ்நிலைகளில் எந்தவித மாற்றத்தையும் உணர முடியாது என்கிற மற்றொரு விதியுடன் நமது இந்த அற்புத வாழ்வின் நோக்கம் நமக்குத் தெரிந்து விட்டால் அதை உடன் எழுதி வைத்துக்கொண்டு தினம் அதை வாசித்தால் நமது ஆழ்மனதில் இங்கு வந்த நோக்கத்திற்கான வாழ்வு மெல்ல மெல்ல வெற்றி காணும். நம் வாழ்வின் மீதும் படைப்பின் பெரிது சார் செயலூக்கத்தின் மீதும் அடர் நம்பிக்கை வைத்து பிரபஞ்ச விதிக்குட்பட்டு வாழ்ந்தால் அந்த நம்பிக்கை பிறருக்கு சில நேரம் பைத்தியக்காரத்தனமாகக் கூட தோன்றலாம்.ஆனால் நாம் அவற்றை மனதில் அடாது ஏற்றுக் கொண்டோமேயானால் அவை நம்மைப் பொருத்தவரை உண்மையாகிவிடும்.

அவை நம் வாழ்க்கையாகவும் பரிணமிக்கும் என்ற பிரபஞ்ச நான்காம் விதிக்கும், ஒத்த விஷயங்கள் ஒத்த விஷயங்களை நோக்கி இழுத்துக்கொள்ளும் என்கிற ஈர்ப்பு விதி உருவாக காரணம் இயற்கை விதியின் வழி நடத்தலே அதாவது நல்லது நல்லதையும் கெட்டது கெட்டதையும் விரைவாகவும் இயல்பாகவும் தம்முடன் இணைத்துக் கொள்ளும் என்பதே ஐந்தாம் விதி உணர்த்துகிறது. நம்மால் முடியாது என்று நம்பி விட்டால் ஆண்டவனே உதவினாலும் நம்மால் முடியவே முடியாது. ஒரு துளி கடல் நீரில் கடலின் அத்தனை குணங்களும் இருப்பது போல நமக்குள் எல்லாம் இருக்கிறது அதை உணர்ந்துக் கொள்வது தான் நாம் யார் என்பதை புரிந்துக் கொள்ள வழி வகுக்கும்.}

ஆறாவது விதியானது மற்றவர்களை வெறுப்பதும் நம்மை நாமே வெறுப்பதும் ஒன்றுதான் என்கிற உடல் மனம் சார்ந்த படைப்பின் அடிப்படையை விரியப்படுத்துகிறது. நாம் அடுத்தவரை வெறுத்தால் நமக்குள் உள்ள கோடிக்கணக்கான செல்கள் நம்மை வெறுக்க ஆரம்பித்து விடும் என்ற உடலறிவியல் நமது முன்னோர்களின் மெய்ஞானத்தை நிரூபிக்கிறது. அதாவது பகைவரையும் நேசி என்பதே கண்ணுக்குத் தெரியாத எல்லாமே கண்ணுக்குத் தெரிபவற்றை விட கற்பனை செய்ய முடியாத அளவு சக்தி வாய்ந்ததாகவே உள்ளன. காற்று மின்சாரம் ஏன்… நாம் வணங்கும் கடவுள் உட்பட புறக்கண்களுக்கு புலப்படாத அனேகங்கள் இந்த பிரபஞ்ச வெளியில் நிரம்பப்பட்டுள்ளன. அவற்றின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்பதே இறுதியான ஏழாவது விதியாக நூலின் நடுப்பக்கங்கள்  மனித வாழ்வை எளிமைப்படுத்துகின்றன.

தொடரும் சாவிகள் மனம் பற்றி நாகூர் ரூமி அவர்களின் எளிமையான விளக்கங்கள், சாவிகளின் ஆய்வுகளும், கண்டுபிடிப்பும்,  பயன்பாடுகளும் புரிதல்களும் என அனைத்தும் மனித மனம் அதை செம்மைப்படுத்தவே ஆக்கிரமித்துள்ளன. அந்த மனதை உணர்ந்து விட்டால் நமது ஜீவிதம் அர்த்தம் கண்டு விடும். உடலை மாற்ற முடியாது; நிறத்தை உயரத்தை முகத்தை என ஒரு முறை பிரபஞ்சத்திடமிருந்து வழங்கப்பட்ட நமக்கானதை ஒருபோதும் மாற்ற இயலாது. ஆனால் ஒன்றை மாற்றினால் எல்லாமே சுற்றியுள்ள நெருக்கடியான சூழல்களை மாற்ற முடியும் என்கிறார்  ஆசிரியர்.

அதுதான் மனம்.

அப்படியான மனதை நிதானமான நிலைக்குக் கொண்டு வர வேண்டுமானால் அதற்கு தியானம் தான் சிறந்த வழி என்கிறார் நாகூர் ரூமி.

தியானம் மனதை அமைதிப்படுத்தும். உடலையும் மனதையும் நிதானம் அடையச் செய்யும். நம்மைச் சிந்திக்க விடாது. எண்ணங்களற்ற வெறுமையில் மனம் சில கணங்கள் இருக்கும். மனமற்ற நிலை சில கணங்களுக்கு உண்டாகும். இரண்டிற்கும் இடையில் வருகிற ஏதுமற்ற கணங்களை உண்டு செய்யும். நாம் யார் என்பதை உணர்த்தும். அந்த நிலைக்குப் பழகி விட்டால் நன்மைகள் நிரந்தரமாகும் என்கிறார் ஆசிரியர்.

இறுதி பக்கங்கள் தியானத்தின் வழியே அற்புதமான மாற்றுச் சாவியை வழங்கி நமது பிரச்சனைகளுக்கான பூட்டை உடைத்து மனம் என்னும் திராபகக் கதவை இலகுவாகி திறந்து விடுகிறார்.

வாழ்வில் எத்தனையோ வகையான தியானங்கள் உள்ளன.நாம் சரியான மனிதராக இருக்கும் பட்சத்தில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் தியானமாக மாறக் கூடும். மனிதன் செய்யும் எந்த காரியமும் இறைவணக்கத்திற்கு அப்பாற்பட்டது அல்ல. அதாவது எந்த காரியத்தையும் இறை வணக்கமாக ஒரு தியானமாக மாற்ற முடியும். இதையே நம் முன்னோர்கள்

“செய்யும் தொழிலே தெய்வம்.” என்று எளிமையாக நம்மை வழி நடத்தி வாழ்க்கைக்கான பாடத்தை கற்பித்தனர்.

தியானம் என்றால் பெரிதாக தவம் யோகம் வேள்வி என்பதல்ல. புத்தர் கூறியது போல மூச்சு விடுவதும், சாப்பிடுவதும், அமருவதும், நடப்பதும் இன்னும் நாம் அன்றாடம் அனிச்சையாய் மற்றும் இச்சையாய் செய்யும் இதர தியாதிகள் தியானத்திற்கு உட்பட்டவையே. அதாவது மூச்சு விடும் போது மூச்சு மட்டுமே விட வேண்டும் உட்காரும்போது உட்கார மட்டுமே சாப்பிடும் போது சாப்பிடுவது மட்டுமே நடக்கும்போது நடப்பது மட்டுமே என ஒவ்வொரு செயல் நாம் செய்யும்போது முழு ஈடுபாட்டுடன் ஒற்றை சிந்தனைக்குரிய கவனத்துடன் செயல்படுத்தினால் தனியே தியானம் என்பது ஒன்று அல்ல. இங்கு திரு மௌலானா அலாவுதீன் ரூமி அவர்களின் பொன்மொழியை சுட்டிக்காட்டும் ஆசிரியர் மனிதன் செய்வதை எல்லாம் மனிதக் குரங்கும் செய்யும். ஆனால் அதனால் அது மனிதனாகி விட முடியாது. அதேபோல் பண்படுத்தப்படாத மனம் அவிழ்த்துக் கொட்டப்பட்ட கடுகு பொட்டலம் போலத்தான் உள்ளது ஒரு நிமிஷத்துக்குக் கூட மனதை ஒரு விஷயத்தில் நிறுத்தி வைக்க முடியாது. ஒரு சில வினாடிகளில் மனதுக்குள் ஆயிரக்கணக்கான எண்ணங்கள் ஓடுகின்றன .அவற்றில் பெரும்பாலானவை எதிர்மறையான எண்ணங்கள் தான் என்கிறார் இராமகிருஷ்ண பரமஹம்சர்.
ஆக, தியானம் என்பது ஒன்றும் தனியே அவதானத்திற்குட்பட்ட மிகைப்படுத்திக் கூடிய பெரிய விஷயம் அல்ல என வலியுறுத்தும் ஆசிரியர், அதேசமயம் மனதைப் பண்படுத்த ஒரு சில எளிய பயிற்சி முறைகளையும் கற்றுத் தருகிறார். தியானத்தின் அடிப்படையான மூச்சுப் பயிற்சியே நாம் செய்ய வேண்டிய முதல் பயிற்சி என்கிறார் ஆசிரியர். அதாவது சுவாசித்தலை கவனமாக இயல்பாக கவனித்தாலே மிகப்பெரிய தியானம். அவ்வாறு நாம் மூச்சை கவனிக்கும் சமயம் எண்ணங்கள் ஓட்டங்களாக மனதில் ஓடிக் கொண்டிருக்கும். அவற்றை சற்றும் பொருட்படுத்தாது கடத்தி விட வேண்டும். மெல்ல மெல்ல மூச்சில் கவனம் செலுத்தி வரும் பட்சத்தில் அவை யாவும் வடிகட்டப்பட்டு மனம் எண்ணங்களற்ற தெளிந்த நீரோடையாக மாறும். மனதில் தோன்றும் எண்ணங்களைக் கட்டுப்படுத்தப் போராட வேண்டிய அவசியம் இல்லை. அது நமது வேலையும் அல்ல என்கிறார் நூலாசிரியர். மூச்சுப் பயிற்சி துவங்கி ரியாலத் ஒன்று முதல் 8 வரையிலான தியானத்தில் ஒவ்வொரு படி நிலையாக விளக்குகிறார் ஒன்பதாவது அத்தியாயத்தில்.
இறுதியான ரியாலத் 8 இல் முறையே ஆல்ஃபா தியான முறை என்ற நமது வாழ்க்கையில் மூச்சு, காற்று, தண்ணீர், நெருப்பு, பூமி, ஆகாயம் என இலவசமாக வழங்கிய படைப்பூக்கம் ஆல்பா என்னும் இந்த அற்புதமான மனநிலையையும் இயற்கையாகவே இயல்பாகவே இலவசமாக வழங்கியுள்ளது என்கிறார் ஆசிரியர்.
இவ்வாறாக ஆல்பா தியான முறையை நமக்கு படிப்பினையாக வழங்கும் ஆசிரியர் ஒரு முக்கியமான விஷயத்தைப் பதிவிடவும் மறக்கவில்லை. எந்த விழிப்புணர்வுடன் ஆல்ஃபா தியானத்திற்குள் நுழைந்தோமோ அதே விழிப்புணர்வுடன் அதை விட்டு வெளியில் வரவேண்டும். ஏனெனில் நாம் யாருக்கும் எதற்கும் அடிமை அல்ல. மனிதனுக்காக தான் ஆல்ஃபா. ஆல்ஃபாவுக்காக மனிதன் அல்ல. இதை மறக்காமல் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்கிறார் ஆசிரியர்.
உலகில் பிராணயாமா, கம்யமா, யோகா என பற்பல தியான முறைகள் அவரவர் வழிபாட்டு முறைக்கும் மதம் சார்ந்தும் மதம் அல்லாதும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. இவை யாவும் ஒரு மதம் சார்ந்த வழிமுறையாக அல்லாது உடல் ஆரோக்கியத்திற்கான ஒரு பயிற்சியாக இன்றைய காலகட்டத்தில் கடைபிடிக்கப்பட்டு வந்தாலும் அசலில் இதன் தாத்பரியம் என்பது வேறு. சித்தர்களும் புத்தர்களும் தியானத்தை அணுகிய முறையே அலாதியானது. மதம் என்ற மதம் எப்போது இதற்குள் நுழைந்ததோ ஒவ்வொரு மதத்தினரும் இதை அறிவியலாக உடலியலாக மன ஆரோக்கியத்திற்கான பயிற்சியாகக் கொள்ளாமல் தத்தம் இறைச்சார்ந்து அணுக முற்பட்ட போது தியானம் என்பது ஒரு கட்டாயத் திணிப்பாகவே மதம் சார்ந்த வழிபாடாகவே மாறிப்போனது. ஆனால் அதில் தியானம் என்கிற நமது ஒருங்கிணைந்த ஒத்திசைவான செயல்களை உணர்த்த செம்மை படுத்த சீராக்க ஞானிகள் ஞானம் பெற்றனர். மனித மனத்திற்கு அப்பாற்பட்ட ஒரு இயற்கையின் அசல் நிலைக்கு வந்து சேர்ந்தனர்.
தியானம் கற்றால் ஞானியாகலாம், தண்ணீரில் நடக்கலாம், காற்றில் மிதக்கலாம், பறவைகளைப் போல் பறக்கலாம் என்கிற மனித இயல்பிற்கு அப்பாற்பட்ட அசாத்தியங்கள்  செயல்கள் அற்புதங்கள்  பிரபஞ்ச இரகசியங்கள் அறிய முற்பட்டவரா ஞானிகள்…
 அல்லவே….
ஞானிகள் அற்புதங்களை ஒருபோதும் மதித்திரவில்லை என்பதை விட அற்புதங்களில் தங்கள் மனதை அவர்கள் பறிகொடுத்து விடவுமில்லை. எதை செய்ய வேண்டும் செய்யக்கூடாது எதை மதிக்க வேண்டும் மதிக்கக்கூடாது என்கிற தெளிவு அவர்களிடம் இருந்தது‌ அந்த மனம் மட்டும் நமக்கு வாய்த்து விட்டால் எல்லா பூட்டுகளுக்குமான ஒற்றை மாற்று சாவியைக் கண்டடைந்திட முடியும் என்கிறார் ஆசிரியர் நாகூர் ரூமி இந்நூல் வழியே. நமக்கு போதித்துமுள்ளார்.
இந்தப் புத்தகத்தைக் கொண்டு மனதை ஒழுங்குப்படுத்த பக்குவப்படுத்த நான் செய்யும் ஒவ்வொரு செயல்களையும் ஒரு தியானமாகவே நினைத்து செயல்படுத்தினால் வாழ்க்கையில் நிச்சயம் வெற்றி காண முடியும். சிடுக்குகளும் சிக்கல்களும் கொண்ட இந்த மனித வாழ்வை எளிமையாக இனிமையாக ஆனந்தமாக வாழ்ந்து முடித்திட முடியும் என்பதே இந்நூல் நமக்கு உணர்த்துகிறது. உடல் மட்டுமல்ல மனதையும் ஆரோக்கியமாக வைத்து இன்றிலிருந்து நமக்கான சாவியை கண்டடையும் முயற்சியில் இறங்குவோம். வெற்றியை நோக்கிய பயணத்திற்கான வாழ்த்துதலுடன்… நன்றி.
நூல் : மாற்றுச் சாவி
ஆசிரியர் : நாகூர ரூமி
விலை : ரூ. ₹120
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024