காதல் லேகியம் *******************
காமதேவன் நடத்தும் பாடத்தில்
வெற்றிக்கோட்டை தொடாதோருக்கு
கோவில் கட்டிக் கொண்டிருக்கிறான்
மன்மத லேகியம் தயாரிக்கிறவன்!
இதய ஜென்ம பந்தம்! *************************
காதல் செய்வது பாவம் என்றவளும்
காதல் என்பது பொய் என்றவனும்
சந்திக்கும்போது உருவாகும்
உள்ளக் கிளர்ச்சிக்கு
பெயர் தான் இதய ஜென்ம உறவு!
தயிர்! *******
சற்று அதிகமாகவே
அடித்து துவைத்து விட்டார்கள் போலும்!
மீண்டும் கூட முடியாமல்
அழுது கொண்டிருக்கின்றன
வெண்ணெயும் மோரும்!
காதல் அளவுகோல் ***************************
ஆக்சிலேட்டரை கூட்டிக் குறைக்க
முன்னும் பின்னுமாய் அசையும்
ஸ்பீடா மீட்டராய் உனது விழிகள்!
ஆச்சரியத்தில் விரியும்
அதன் மேல் கீழ் இமைகளின்
தூரத்தை அளவிடும் அலகு தான்
என் உதட்டு முத்தம்!
பிரசவ வலி *****************
கார்மேகக் கூட்டத்தை
முதுகில் சுமக்கும் வானம்
வலி தாங்காது
மழைநீரைக் கீழிறக்க
பனிக்குடம் உடைந்த
தாயின் அலறலாய்
கேட்கிறது இடியோசை!
இருக்கலாமோ? **********************
அமாவாசை சூரியனில்
முருங்கை மர காகத்தின்
உண்ணாவிரதம்
மகனுக்கு உணர்த்தியது
இறந்த காலத்தில்
மருமகளின் பாராமுகத்தை!
மேடு பள்ளம் ******************
ஆற்றில் மிதந்து வரும்
உதிரிப் பூக்களின்
மார்ச் பாஸ்ட்தான்
அலையின் மலையும்
அலையின் மடுவும்!
மர மனிதன் ******************
என் வீட்டுப்
புளிய மரமும்
போதி மரமானது
நான் புத்தனானதால்!
பிறப்பும் இறப்பும்! **********************
முதல் அழுகையின் பிறர் சந்தோஷம்
கிடைக்காமலேயே போயிருக்கலாம்
கடைசி மவுனத்தின்
உறவினர் அழுகையைக் காணும் போது!
அப்பாவின் நினைவு நாள்! *******************************
தன் அப்பாவின்
எச்சில் முத்தத்தை
உடனே துடைக்கும்
குமரேசனின் கைகளை
தொட்டுப் பார்த்ததில்
உணர்கிறேன் என் அப்பாவை!
மனிதனுக்கும் மனிதனுக்குமிடையில் நிலவும் உறவை சரியாக பேணுகிறது
எல்லா நதிகளும் கடலை நோக்கி பாய்வதைப் போன்று 19ஆம் நூற்றாண்டில் இறுதிப் பகுதியில் ஏற்பட்ட பௌத்த மறுமலர்ச்சி 21 ஆம் நூற்றாண்டில் பல்கிப் பெருகியது. பெரும்பாலான மக்களும் பௌத்தத்தின் பால் நம்பிக்கை கொண்டுள்ளனர். அதனால் பௌத்த தத்துவங்களைப் பின்தொடர்கின்றனர்.
புத்தம் சரணம் கச்சாமி உபாசகர் E. அன்பன் அவர்கள் எழுதிய இந்நூலில் அன்பை மட்டுமே போதிக்கச் சொன்ன புத்த பெருமானின் தத்துவங்களை மிக இயல்பாக பதிவு செய்யப்பட்டுள்ளார். இந்த நூலுக்கு ஏன் புத்தம் சரணம் கச்சாமி என்று பெயர் சூட்டினார் என்ற கேள்வி எழுகிறது. புத்தம் சரணம் கச்சாமி என்பது முன்மணிகளை குறிக்கும். மும்மணிக்கு மற்றொரு பெயர் திரி சரணம். இந்த திரிசரங்களில் சரணடைதலை பற்றி புத்தம் சரணம் கச்சாமி என்பதற்கு நான் புத்தரை சரணடைகிறேன் என்று பொருள்.
புத்தர் ஒருபோதும் யாரையும் தன்னிடமோ, பிறரிடமோ, ஏன் கடவுளிடமும் கூட சரணடையச் சொல்லவில்லை. காரணம் அவர் கடவுள் கோட்பாட்டை எங்கும் வலியுறுத்தியதும் இல்லை, ஆதரிக்கவும் இல்லை. அதன் காரணமாகத்தான் இந்த 21 ஆம் நூற்றாண்டில் பகுத்தறிவை போதிக்கும் தன்மையில் பௌத்தம் இருப்பதால் தெளிவு ஏற்பட்டவர்கள் பௌத்தத்தின்பால் ஈடுபாடு கொண்டு திரும்புகின்றனர்.
அயோத்திதாசர் பண்டிதர், பன்மொழிப் புலவர் கா. அப்பாதுரை, பேராசிரியர் லட்சுமி நரசு, டாக்டர் அம்பேத்கர் என்று பலரும் பௌத்தத்தை அதன் இயல்பு தன்மையுடன் அணுகினார்கள். இதன் காரணமாகப் பண்பாட்டு அளவில் பௌத்த புரட்சியும் ஏற்பட்டு வருவதைக் காண முடியும்.
இங்கு புத்தம் சரணம் கச்சாமி என்னும் நூல் ஒரு மாற்றத்தைத் தொடங்கி வந்துள்ளது. குறிப்பாகப் புத்தர் அன்பு ஒன்றே அனைவருக்கும் நன் மருந்து. அன்பும், கருணையும் மட்டும்தான் இவ்வுலகிற்குத் தேவை. அதனால் அனைவரிடமும் அன்பு செலுத்துங்கள் என்ற தத்துவத்தை முன்மொழிந்தார்.
இந்த நூலிலும் புத்தரின் வாழ்க்கை முதல் மகாமங்கள சுத்தம் ஈராக மொத்தம் 20 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இந்த ஒவ்வொரு தலைப்பில் அமைந்த கட்டுரையும் அத்துனை முக்கியத்துவம் வாய்ந்தவை. பௌத்தத்தை விரும்பி கற்போருக்கும், பௌத்தத்தில் ஈடுபாடு கொண்டோருக்கும் இந்த நூல் ஒரு நல்ல வழிகாட்டி. அந்த வகையில் பௌத்தம் என்பது என்ன? எனும் பத்தாவது தலைப்பில் அமைந்துள்ள கட்டுரை மிக செய் நேர்த்தியாக இப்படைப்பை ஆசிரியர் ஆக்கியுள்ளார். அதில் பௌத்தம் என்பதற்குச் சரியான பொருளை எடுத்துக் கூறி பௌத்தத்தின் புனித நூலான திர்ப்பிடத்தை பற்றி எளிமையான மொழியில் எல்லோரும் அறியும் வகையில் விவரிக்கிறார்.
அதேபோன்று அத்தியாயம் ஆறில் அமைந்த கட்டுரை உயர்வெய்திய புத்தர் தம்மத்தை எடுத்துரைக்கிறார். அதில் புத்தர் வருகை கபிலவஸ்து நகர் முழுவதும் செய்தியாக பரவியது. இல்லறத்தை துறந்து துறவறமேற்று பூரண மெய்ஞானமுற்று தனது இலக்கை அடைந்து விட்ட கபில வஸ்து நாட்டின் முன்னாள் இளவரசர் சித்தார்த்த புத்தராக அரண்மனைக்கு வருகிறார். ஒவ்வொரு இல்லத்திலும் இச்செய்தி பேசப்பட்டது. சுத்தோதனாரும், மகா பிரஜாபதியும், அவர்களின் உற்றார் உறவினர்களுடன், அமைச்சர்களுடன் செல்லும் வழியெல்லாம் புத்தராய் தர்மத்தைப் போதித்த படி கபில வஸ்துவில் உள்ள அரண்மனை அருகே வருவதை அரசர் கண்டபோது புத்தரின் பெருமைமிக்க தோற்றத்தாலும் அழகான ஈர்க்கப்பட்டு மனம் மகிழ்ந்து பேசவியலாமல் நிலையுற்றார்கள் (பக்.54) இந்த பதிவுவை படிக்கும்பொழுது நம் மனம் பரசும் அடைவதைக் காண முடியும்.
இப்படி ஒவ்வொரு பக்கங்களிலும் ஆனந்தத்தையும், பேரானந்தத்தையும் அனுபவிப்பதைப் போன்றே அதை கட்டுப்படுத்தும் விதிமுறைகளையும் கற்றுக் கொடுக்கிறார். நாம் ஒவ்வொருவரும் வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் இடையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எந்நாளும் இன்புற்று இருக்க இது போன்ற நூல்கள் பல்கி பெருக வேண்டும்.
இந்நூலை ஆக்கி தந்த பௌத்த பேரறிஞர் ஐயா அன்பன் அவர்களுக்கு நம் மனமார்ந்த நன்றிகள்.
நூல் : புத்தம் சரணம் கச்சாமி
ஆசிரியர் : உபாசகர் E.அன்பன்
விலை : ரூ. ₹100 வெளியீடு : திரபீடக தமிழ் நிறுவனம் 89,மூன்றாவது தெரு, மல்லீசுவரி நகர், மாடம்பாக்கம், சென்னை – 126 பேசி: 9445369542.
கணிதன் என்றொரு பெயரன் *********************************
மரத்தடியில்
பழம் பொறுக்கும் கிழவி
திரும்பிப் பார்த்தாள்
வரலாறு திரும்பி பார்த்தது
போலிருந்தது
குருவிகளின் சத்தம்
சட்ட சபையாக
அவள் மௌனத்தில்
உறைந்து இருக்கலாம்
கணிதன் என பெயர்
கொண்ட பெயரன்
அவளுக்கு இருக்கலாம்
கவிதை எழுதுவதும்
அகங்காரம் இல்லாததும்
அவனுடைய தகுதியாக
இருக்கலாம்
துல்லிய வேகத்தில்
அவன் இரண்டு சக்கர
வாகனத்தில் செல்கையில்
வண்ணத்து பூச்சி நிழல் போல்
வரலாறு குறுக்கிடலாம்
புத்தர் மேல் ஆசை ********************* புத்தர்
மாட மாளிகை
நவரத்தினங்கள்
சேனை படைகள் என
அரண்மனையில் வாழ்ந்தவர்
என்பதற்காகவே
இன்று வசதியை விரும்பும்
மாலில்
பீசா பர்கர்
ஐஸ் க்ரீம் சாப்பிடும்
தனி வில்லாவில்
வசிக்க விரும்பும்
தன் பிள்ளையை பெரிய பள்ளியில்
சேர்க்க விரும்பும்
உயர்தர வாகனத்தில்
போக விரும்பும்
எல்லோரும்
அவர் கதையை கேட்கிறார்கள்
பூ *** இவ்வளவு அழகான
பூக்கள் தந்த
வேர்களுக்கு
இளநீர் ஊற்றுகிறேன்
கருப்பு வெள்ளைக் கனவில்
பூக்கள் மட்டும்
நிறங்களாய் பூக்கின்றன
டேலியா பூ வைத்த உடன்
நடிகை ஆகிறாள்
பழங்குடிச் சிறுமி
நாடோடிகளின் கூடாரம்
புதிதாக பூத்த
மலர் போலிருக்கிறது
இவ்வளவு அழகானவன
சித்திரத்தை
வரைந்தது ஒரு சிட்டுக்குருவி
உதிரி பூக்கள் சிந்திய
சாலை மரம் ஓரம்
என் மரணம் நிகழ்த்தப் பட்டு விட்டது
எறும்பின் பாதை ******************* எறும்பின் பாதை
என்றும் புகழின் பாதை
வழி செல்கிறது
ரோஜா இதழ்கள்
இலை சருகு
தேநீர் துளி
சில சொற்கள் என
சுவர்க்கம் வழி செல்கிறது
அதன் பாதை
குயில் மொழியில்
சில ஞானிகளும்
எறும்பின் மொழியில்
சில ஞானிகளும்
பேசிக்கொள்கிறார்கள்
எரிமலை
பூகம்பத்திலும்
சில எறும்புகள்
பிழைத்து வருகின்றன
மனிதர்கள் போல்
பிதாமகன் சேவல் ********************* பிதாமகன் விக்ரம் போல
ஓடி வருகிறது சேவல்
நெல்லு கொத்த
வந்து பாரு
உன் மண்டை உடைச்சு
குழம்பு வைச்சு சாப்பிடுறேன்
அம்மா வையும் போது
அதே படத்தின் இடைவெளியில்
ஸ்பானரில் மண்டை ஒடைஞ்சு
சாகிற சூர்யாவின் ஞாபகம் வந்தது
இறைச்சி மலர்களாகும்
அன்பும்
முடிவில் பித்தாகும்
விக்ரமின் செம்மட்டை தலை
சேவலின் அழகியலாகவும்
தோன்றியது
மரணம் இல்லாத வீடு ************************* வெளியே போய் விட்டு
வந்தேன்
அம்மா வீட்டில்
மரணத்தை எங்கும்
ஒளித்து வைக்கவில்லை
தூசி இல்லாத
அலமாரியில்
மழை பெய்த அமைதியுடன்
பாத்திரம் அடுக்கி
வைக்கப் பட்டிருந்தது
இறந்த கரப்பான் பூச்சியை
இழுத்து செல்லும்
எறும்புகள் இல்லை
பல்லிகள் இல்லை
முகப் பூச்சு இல்லை
பறித்த மல்லிகை அரும்புகள்
பூச்சாடியும்
நிலவும் பூனையும்
மட்டும் இருந்தன
வீட்டில்
பழைய சினிமா காணும் அம்மா ************************************ அழுத்து போன
வசனங்கள் தான்
ஓட்டை டேப் ரிக்கார்டில்
கேட்டுச் சலித்த பாடல்கள் தான்
திரும்ப கேட்கும்
போர் தீம் மியூசிக் தான்
வயதான கதாநாயகன்தான்
மரத்தைச் சுற்றும் நடனம்தான்
கீறலான ஒளி பரப்பு தான்
வாழ்க்கையில்
நெறைய போராட்டங்கள்
இன்னல்கள் என
நெடிய பாதை கடந்து வந்தவள்
அம்மா
அப் பழைய திரைப்படத்தை
காணட்டும்
இரை நம்பிக்கை ************************ கோழி மேய்க்கும்
பாப்பாவின் கையில்
அட்சயப் பாத்திரம்
தானியம் போடும்
அவள் பிஞ்சு விரல்கள்
பிரபஞ்சத்தின் பேரழகு
நீல வானம் கீழ்
அவள் போடும்
ஞானம் எனும் தானியத்தை
இழுத்துச் செல்லும்
எறும்புகள்
அவள் பார்வையில்
எல்லா உயிர்களும்
இரை நம்பிக்கை உடையது
பசும் புல் தரையின் மேல் மேயும் பசு ****************************************** ஆங்காங்கே
மேய்ந்த மேகத்தை
இழுத்து வந்து
ஒரு இடத்தில் கட்டி வைத்தேன்
சோவென மழை பெய்தது
மழை பெய்து
வளர்ந்த பசும் புல் தரையில்
மேயும் பசு
மேயும் மாட்டின் மேல்
கருங்குருவியின் அலை வரிசை
ஒரே மாதிரி இருந்தது
தாழி பருகும் மாடு உடல்
மேகம் போல் உடைந்து இருந்தது
மாட்டிற்கு
புல் சேகரிக்கும் அம்மாவின்
சோடி செருப்பு
பருத்தி செடி நிழலில்
இரு மேகம் போலிருந்தது
பெரிய மரத்து நிழலில்
அமர்ந்திருக்கிறார் அரசன்
மரம் அரசமரமானது,
மனங்களின் ஆசைகளையெல்லாம்
ஆய்வு செய்த அரசன் ஆலமரத்தடியில்
அமர்ந்திருக்கிறார் அகிலமெங்கும்
கிளைகளை நீட்டியவாறு ,
குழந்தையின்
கையில் இருக்கும்
புத்தரின் பொம்மை
பேசாமல் இருக்கிறது
உலகத்திலுள்ள அனைத்து
உயிர்களை நேசித்ததால்,
குடிசை வீடெங்கும்
சிரிப்பு மழையாகவும்
ஆனந்த மழையாகவும் தினந்தோறும் பொழிகிறது
குடும்பத்தை அமைதியாக ஆசைகளில்லாமல்
வழி நடத்தி கொண்டிருக்கிறார்
அலமாரியில் தூங்குகின்ற புத்தனொருவன் “……..!!!!!!!
கவிஞர் ; ச.சக்தி, அழகு பெருமாள் குப்பம், பண்ருட்டி, 9791642986,
‘‘உன் புன்னகையிலிருந்து பூவொன்று பூக்கும் பிறப்பு இறப்பின் ஆயிரமாயிரம் உலகங்களினூடாக உன்னை நேசிப்பவர்கள் உன்னைக் காண்பார்கள்’’
Thich Nhat Hanh
குயென் ஸுவான் பாவோ (Nguyen Xuan Bao ) என்னும் இயற்பெயருடைய டிக் நாட் ஹன் (1926-1) Thich Nhat Hanh) திக் நாட் ஹன், திக் நியட் ஹன் என்றெல்லாம் உச்சரிக்கப்பட்டாலும் டிக் நாட் ஹன் என்றெல்லாம் உச்சரிக்கப்பட்டாலும் டிக் நட் ஹன் என்பதே சரியான வியட்னாமிய உச்சரிப்பாகக் கருதப்படுகிறது. வியட்னாமிய பெளத்த துறவி, கவிஞர், அமைதிச் செயல்பாட்டாளர். தற்கணப் பிரக்ஞை (Mindfulness) என்பது ஆன்மிகவாதிகளுக்கு மட்டுமின்றி, தற்போதைய உலகியல் மனிதர்களுக்கும் மாபெரும் கொடையாக விளங்கக்கூடியது என சர்வதேச அளவில் முன்னெடுத்து வருபவர். 95வது வயதிலும் சக்கர நாற்காலியில் இயங்கிவாறே, பெளத்தத்தை ஜென்னை நம் வாழ்க்கையை வளப்படுத்தும் சாதனங்களாக, அனைவருக்குமான வழிமுறையாக வற்புறுத்தி வருபவர்.
16 வது வயதில் பெளத்த மடாலயத்தில் நுழைந்து, மகாயன பெளத்தத்திலும் வியட்னாமிய தியென் வழிமுறையிலும் பயிற்சி பெற்று, 9 ஆண்டுகள் கழித்து (1951) இல் பெளத்த துறவியாகிறார். தேரவாதப்பரிச்சயம், ஜென் நாட்டம், கிறித்துவின் மேல் அபிமானம் என்னும் செல்வாக்குகளையும் இணைத்துக் கொண்டு, ஒரு மத சித்தாந்தசியாக மாறாமல், சமூகத்துடன் தொடர்ந்து கலந்துறவாடக் கூடியவராக, இப்பொழுதில் மனிதனின் அக நெருக்கடிகளையும் சமூகப் பிரச்சினைகளையும் எப்படி எதிர்கொண்டு, விழிப்புணர்வுள்ள சமுதாயத்தை உருவாக்கும் அக்கறைமிக்கவராக மலர்ந்துள்ளார். 92வது வயதில் அவர் வியட்னாம் திரும்பியபோது, முரட்டுத் தோலுடைய சாத்துக்குடி பழம் மென்தோலுடன் கனிந்த கமலா ஆரஞ்சாக மாறியிருந்தார். தன் தியான முறையினையும் ‘ஆரஞ்சுத் தியானம்’ என்பவர், ஆரஞ்சினை உண்ணும் சிலர், உண்மையில் அதனை உண்பதில்லை. அவர்கள்தம் துயரத்தை, அச்சத்தை பதற்றத்தை, கடந்த – எதிர்காலங்களையே உண்கின்றனர். உடலும் உள்ளமும் நன்றி, நிகழ்காலத்தில் இருப்பதில்லை.
‘வெயிலும் மழையும் அடிக்க, இப்பசிய காய் வளர்ந்து மஞ்சள் நிறம் பெற்று, ஆரஞ்சாக மாற, அமிலம் சர்க்கரையாகிறது. இத்தலை சிறந்த படைப்பை உருவாக்கிட ஆரஞ்சு மரத்திற்கு அவகாசம் தேவைப்படுகிறது. நீங்கள் நிஜமாகவே இங்கிருந்து, சுவாசித்தவாறும் புன்னகைத்தவாறும் ஆரஞ்சை தியானித்துக் கொண்டிருந்தால், ஆரஞ்சு, அற்புதமாகின்றது. ஏராளமான சந்தோசங்களை வாரிவழங்கும்.
‘ஆரஞ்சு மரத்திற்கு அவகாசம் தேவைப்படுவதுபோல, நமக்கு நிசப்தம் தேவைப்படும். அந்நிசப்தம் உயிரோட்டமும் ஆற்றலும் ஊட்டமும் கொண்டு உருமாற்றமடையச் செய்யும். நாம் இணைந்து இவ்வுன்னத நிசப்தத்தை உருவாக்க முடியும். அது வலுவானதால் இடுத்து முழங்கும் நிசப்தம் எனப்படும் என்பார்.
அறிவுத் தளத்தில் மட்டும் முனைப்பாக இருந்து இயங்கினால் நாம் நிம்மதி பெற இயலாது. கடந்து செல்ல வேண்டுமானால், நம் பார்வைகளையும் அறிவையும் விட்டுவிட வேண்டும் என்பதுதான் எப்போதுமே புரிதலுணர்வுக்கான பவுத்த வழிமுறையாகும்… அறிவு திடத்தன்மை வாய்ந்தது. புரிதலுணர்வுக்குச் செல்லும் வழியை அது அடைத்துக் கொள்கிறது.
புத்தரை எப்படிக் காணலாம், எங்கே காணலாம்? தேடி அலைய வேண்டாம். இருந்த இடத்திலேயே இப்போதே காணலாம். அதற்கு குவிமையம் கொள்ள வேண்டும். உடலும், மனமும் ஒன்றிணைந்து இயங்க வேண்டும். அந்தக் கணத்தில் ஆழ்ந்து போவது மட்டும் நமது யத்தனமாயிருக்க வேண்டும். ஒரு மலரைப் பார்த்து, அது சரகாயம், மேகங்கள், பூமி, வெளி, காலம் ஆகியவற்றால் உருக் கொண்டிருப்பதைக் காண்கிறோம். அதனை உணருகையில் புத்தரைப் பார்க்கிறோம். நம்மைப் பார்க்கிறோம், நமது ஆசிரியர், தந்தை, தாய், மூதாதையர், சகோதர- சகோதரியர் காய்கறிகள், தண்ணீரால் நாம் உருவாக்கப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். பரஸ்பரம் சார்ந்திருத்தலின் வெளிச்சத்தில் இவற்றை நோக்குகின்றோம். புத்தரை நோக்குகின்றோம். நமக்கென்று தனித்த சுயமில்லை என்று காண்கிறோம்.
நமக்கென்று ஒரு சுயத்தைக் கற்பித்து அதனை வளர்த்துப் பெரிதாக்கிக் கொண்டு போவதுதான் அடிப்படைப் பிரச்சனை. நாளடைவில் கற்பிதம், அழுத்தும் நிஜமாகிவிடுகிறது. யாரையும் நேசிக்க முடியவில்லை. தனது முன்னேற்றமும் வளர்ச்சியுமே பிரதானமாகின்றன. புல் பூண்டிலிருந்து வானத்துத் தாரகை வரை ஒரு பரஸ்பரச் சார்பில், இயக்கத்தில் பிரபஞ்சம் இருக்க, இதனைக் கவனத்தில் கொள்ளாமல், தன்னை மட்டும் அடிப்படை அவகாக்கிக் கொண்டு மனிதன் இயங்கினானால், இயற்கையிடமும் அவன் புகலிடம் கோர முடியாதுபோய்விடும்.
துறவியான டிக் நாட் ஹன், பாசம் பந்தம் போன்ற உணர்வோட்டங்களுக்கு உள்ளாகவில்லையா? அந்த நிகழ்வுப் போக்குகளை அவர் குறிப்பிடத் தயங்குவதில்லை.
‘‘எனது அம்மா இறந்து ஏழு வருடங்களுக்குப் பிறகு, நான் திடீரென்று நள்ளிரவில் விழித்துக் கொண்டேன். வெளியே சென்று பார்த்தபோது, நிலவு வானில் சுடர்ந்து பளபளத்தது. அதிகாலை இரண்டு, மூன்று மணிக்குக் கூட, நிலவு அத்தனை ஆழமாக, அமைதியாக, மிருதுவாக ஒரு தாய், தன் குழந்தையிடம் கொண்டிருக்கும் நேசத்தைப் போல் ஒளியைப் பரப்பிக் கொண்டிருந்தது. நான் அவளது அன்பில் நினைத்தேன். என் அம்மா இன்னும் உயிருடன் இருக்கிறார். அவர் எப்போதும் இருப்பார் என்று உணர்ந்தேன்.’’
தாய்ப்பாசம் இப்படி மலர்ச்சி கொள்ள, அவர் கொண்டிருந்த காதல் எப்படிப் பரிமாணமடைந்து விடுகிறது பரிணாமமும் கொள்கிறது என்பதை ஓரிடத்தில் குறிப்பிடுகிறார். அது ஒரு பிக்குணி மீது கொண்ட பிரியம்.
அந்தப் பிக்குணியுடன் வெகுநேரம் பேசிவிட்டு வந்த பின்னர், தூங்காமல் இருந்த இரவை அவர் நினைவு கூர்கிறார். எனக்குத் தூக்கமே வரவில்லை. அவருடன் அமர்ந்திருக்க வேண்டும்; அவரைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். அந்த இரவின் பல தருணங்களில் எழுந்து சென்று அவரது அறைக் கதவைத் தட்டி என்னுடன் பேசுவதற்கு அழைக்க வேண்டுமென்று ஆர்வமும் ஏற்பட்டது.
ஆனால் அவர் அந்த அறைக் கதவை தட்டவே இல்லை. அந்தக் காதல் இருவரையும் எப்படிப் பாதிக்கும் என்பது சுருக்கென்று தைத்திருக்கின்றது. தம்மை அறியும் பயணத்தில் அவர்கள் மேற்கொண்ட உறுதிமொழிகள் ஞாபகத்துக்கு வந்தன. புத்தரின் மொழி வாயிலாக அந்தப் பிக்குணியின் மேல்கொண்ட நேசத்தை அனைத்துயிர்கள் மீதும் மாற்றிக் கொண்டார்.
நான் அவளை எல்லா இடத்திலும் காணத் தொடங்கினேன். காலத்தில், அவர்மீது கொண்ட எனது நேசம் மறையவில்லை. ஆனால் அது ஒரு நபர் மீதானதாக இல்லாமல் போனது.’’
II
துறவியான ஹன், Vitnamese Buddhism இதழின் ஆசிரியராகிறார். ஓர் அச்சகம், ஒரு பல்கலை கழகம், சமூக சேவை அமைப்பு எனத் தொடங்குகிறார். பள்ளிகள், சுகாதாரமையங்கள் என விரிவுப்படுத்துகிறார். கிராம மறு நிர்மாணத்தில் ஈடுபட வைக்கிறார்.
1961இல் அமெரிக்கா சென்று ஒப்பியல் மதம் கற்பிக்கின்றார். கொலம்பியா பல்கலைகழகத்தில் பெளத்த மத விரிவுரையாளராகிறார். பிரெஞ்சு, சீனம், சமஸ்கிருதம், பாலி, ஜப்பானிய ஆங்கில மொழிகளில் தேர்ச்சியுடையவராகிறார். 1963இல் வியட்னாம் திரும்பி, வான் ஹன் பெளத்த பல்கலைகழகத்தில் பெளத்த உளவியலையும் ஆன்மிக இலக்கியத்தையும் போதிக்கின்றார். வடக்கு- தெற்கு வியட்னாம்களுக்கிடையிலான முரண்கள் – மோதல்களிலான சூழலில் (1966இல்) ஹன் திரும்பவும் அமெரிக்கா செல்கிறார். கார்னீல் பல்கலைக் கழகத்தில் ஒரு கருத்தரங்கம் நடத்துகிறார். மார்டீன் லூதர் கிங்கைச் சந்திக்கிறார், தாமஸ் மெர்டன் என்னும் கிறித்தவ ஆன்மிக ஈடுபாட்டாளருடன் உரையாடுகிறார். டிக் நாட் ஹன்னுக்கு நோபல்பரிசு வழங்குமாறு பரிந்துரை செய்யுமளவுக்கு மார்டின் லூதர் கிங் சென்று விடுகிறார்.
அடுத்து அவர் வியட்னாமிய பெளத்த அமைதி தூதுக் குழுவின் தலைவராக பிரான்ஸ் செல்கிறார். அப்போது (1975) வடக்கு வியட்னாமிய ராணுவம் தெற்கு வியட்னாமை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறது. வியட்னாம் திரும்ப அவருக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. வியட்னாம் யுத்த காலத்து CIA ஆவணம் ஒன்று, அவரை வியட்னாமின் அதிருப்தியாளர் குழுத் தலைவரின் நம்பகமானவர் என்கிறது. போர் சூழ்ந்துவிட்ட நிலையில், டிக் நாட் ஹன்னின் சேவைக் குழுவினர் வியட்னாம் சார்ந்து இயங்காமல், நடுநிலை காத்தனர், அனைவருக்கும் ஒரு சேர உதவினர் என்பது வியட்னாமிய அரசின் குற்றச்சாட்டு.
2005இல் தான் அவர் வியட்னாம் திரும்ப அனுமதிக்கப்பட்டார். 2014இல் மூளையின் ரத்த நாள வெடிப்பால் பாதிப்புற்று இரண்டாண்டுகள் தீவிர மருத்துவ சிகிச்சைக்கு உள்ளானார். என்றாலும் அதன் பிறகு சக்கர நாற்காலியிலேயே அவர் இயங்க வேண்டியதாயிற்று. எனினும் அவர் தனது உரைகளையும் செயல்பாடுகளையும் தொடர்ந்து கொண்டே இருக்கிறார் பேச முடியாத நடக்கமுடியாத நிலையிலும், 2018லிருந்து தன் இறுதி நாட்களை வியட்னாமில் கழிக்க வேண்டும் என்று விரும்பி, தனது மடாலயத்தில் தங்கி வருகிறார்.
III
நேசம் செலுத்த அன்பு காட்ட இன்னொருவர் இன்னொன்று தேவையில்லை என்பார் டிக் நாட் ஹன். ‘உங்களது துயரத்தைப் புரிந்து கொள்வது, மேலாக உணர்ந்து கொள்ளவும் நேசிக்கவும் உதவும், ஏனெனில் முழுமையினையும் நிறைவையும் உங்களிடத்தே உணருகிறீர்கள். ஆதலில் நேசத்தைத் தொடங்கிட இன்னொருவர் தேவையில்லை. உங்களிடமே தொடங்கிடலாம். மேலும், உண்மையான நேசம் ஒரு நபரைத் தெரிவு செய்வதில்லை. உங்களிடத்தே உண்மையான நேசமிருப்பின், உங்களைச் சுற்றியுள்ள ஒவ்வொருவரும் நன்மையடைகின்றனர் – மனிதர் மட்டுமின்றி, தாவரங்கள், தாது உப்புக்கள், மிருங்களும். அது நிஜமான நேசம். நிஜமான நேசம் சமநிலை. ஆக, இப்போது நாம் உணரும் நேசத்தை விரிவுபடுத்துவது என்பதை விடவும், நம் நேசத்தின் அடிப்படையே, தேவையிலிருந்து சுய முழுமைக்கு, நகர்த்துவதுதான் இது.
ஒரு சமயம், சிறுமியொருத்தி ஹன்னிடம் தனது நாய் இறந்துபோன சோகத்தை எப்படி, சமாளிப்பது என்று கேட்டபோது, அவரது பதில், வானில் ஒரு மேகம் மறைந்து கொண்டிருப்பதைப் பார். அம்மேகம் மடியவில்லை மாறாக மழையாக குவளையிலுள்ள தேனீராக மாறியிருக்கிறது மேகம் புது உருவில் உயிர்த்திருப்பது போலவே, நாயும்.
தியானம் என்பது துறவிகளுக்கான பயிற்சி என்னும் அபிப்பிராயத்தை மாற்றி சாதாரணமான மனிதனிலிருந்து உயர்மட்ட அலுவலர் வரை கைக் கொள்ள வேண்டிய வாழ்க்கை சாதனமாக முன்வைப்பார். அது உங்களின் சொந்த இல்லமான உங்களிடத்தே திரும்ப வைப்பது. அப்போது அகப்பார்வை கிட்டும். உங்களது சந்தோசமும் வருத்தமும் மற்றவரின் சந்தோஷத்தையும் வருத்தத்தையும் சார்ந்தது.
நீங்கள் நேசிக்கையில், உங்கள் நேசம் உண்மையாயிருக்கையில், மற்றவர் உங்களின் அங்கமாக இருக்கிறார், நீங்கள் அவரின் பகுதியாக இருக்கிறீர்கள்.
சூழலியல் என்னும் அற்புதமான கதவைத் திறந்து பார்க்க வேண்டும் என்பார். அத்துடன் அமைதியின் கதவையும் திறக்கவேண்டும் என்பார். பெண்ணியம், பாலினபாகுபாடு என அனைத்துத் தளங்களையும் பரிசீலிக்க வேண்டும் என்று வற்புறுத்துவார். சங்கத்தில் பெண்களை அனுமதித்தது புத்தரின் புரட்சிகர நடவடிக்கை என்பார்.
பலரால் வற்புறுத்தப்பட்டுள்ளது என்பதற்காக எதையும் நம்ப வேண்டாம். புகழ் பெற்ற குருவால் உச்சரிக்கப்பட்டிருக்கிறது என்பதற்காக எதையும் நம்ப வேண்டாம். புனித நூல்களில் உள்ளது என்பதற்காக எதையும் நம்ப வேண்டாம் என்னும் புத்தரின் எச்சரிக்கை சரியான விழிப்புணர்வு பெற துணை நிற்கும் என்பார்.
பெளத்தம் வற்புறுத்தும் சூன்யம், நிர்வாண நிலை என்பவை பற்றியெல்லாம் படைப்புணர்வுடன் விளக்குவார். அவர் ஒரு கவிஞர் என்பதால் தீக் குச்சியால் உண்டான கனல் தீக்குச்சியையும் விழுங்கிவிடும். ஆழமாக நோக்குவதை நடைமுறைக்கு கொண்டு வருகையில் நித்தியமின்மையின் அகப் பார்வை கொண்டு, நிலையற்ற தன்மை என்ற எண்ணத்தையும் அவித்து விடலாம்…. ஒரு நோக்கு நிலையில் சிக்கிக் கொண்டால்,
நீங்கள் உண்மையிலேயே சுதந்திரமானவரில்லை. அறுதியானது எந்நோக்கையும் கொண்டிருப்பதில்லை. எனவேதான் நிர்வாண நிலை என்பது அனைத்து நோக்குகளின் இன்மையாகும், ஏனெனில் நோக்கு நிலைகள் சந்தோசமின்மைக் கொண்டுவரும்..’’
விலங்குகளிடமிருந்து கற்றுக் கொள்ள விஷயங்கள் இருக்கின்றன என்று கூறி ஓர் எடுத்துக்காட்டை முன் வைப்பார். காயம்பட்டால், களைத்துப் போனால், சுகவீனமானால் காட்டு விலங்குகளுக்கு என்ன செய்வதென்று தெரியும் – நிசப்தமான இடத்திற்குப் போய் படுத்து ஓய்வெடுக்கும். அப்போது இரை தேடி அலையாது, பிற விலங்குகளை வேட்டையாடாது, வெறுமனே ஓய்வெடுக்கும் சில தினங்களில் குணமாகி, வழக்கமான தம் நடவடிக்கைகளில் ஈடுபடும்.
IV
அமெரிக்காவில் ஒரு கூட்டத்தில் வியட்னாம் போர் பற்றிய விவாதத்தின்போது, அமெரிக்கா போரினைக் கைவிட வேண்டும் என ஹன் வற்புறுத்தியதும், அப்படியானால் இங்கிருந்து கொண்டு ஏன் பேசுகிறீர்கள், உங்கள் நாட்டுக்குப் போய் போராடுங்கள் என்கிறார் ஒருவர் ஆவேசமாக. ஒரு கணம் அதிர்ந்துவிட்ட ஹன் இயல்பு நிலைக்குத் திரும்பி, நிதானமாகப் பதிலளித்தார். மரம் வளர வேண்டுமானால், இவைகளுக்கு நீர் தெளிப்பதில் பயனில்லை. வேருக்கு நீர் பாய்ச்ச வேண்டும். யுத்தத்தின் பல வேர்கள் இங்கே, உங்களது நாட்டில் உள்ளன. குண்டு வீசப்பட விருக்கும் மக்களுக்கு உதவிட, இத்துயரிலிருந்து பாதுகாத்திட நான் இங்கே வரவேண்டியிருக்கிறது.
ஒபாமா அதிபராகப் பொறுப்பேற்றதும், கருப்பர் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு உலக அளவிலான அமைதிக்கும் நம்பிக்கை யூட்டுபவராகக் கருதப்பட்டு, பின் ஏமாற்றமளிக்கும் சாதாரண தலைவராகிப் போனதை, ஹன் நுணுக்கமாகச் சுட்டிக் காட்டுவார்.
‘‘ஆனால் ஒபாமா பலவீனமானவரும் கூட வலுவான சமுதாயத்தால், இக்கொள்கைகளில் நம்பிக்கையுடைய அனைவராலும் ஆதரிக்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் அவரது ராணுவ பொருளியல் ஆலோசகர்கள் அவரை இன்னொரு திசையில் திருப்பிவிடலாம். எனவே தான் சமுதாயம் அவருக்குத் துணை நிற்க வேண்டும் என வற்புறுத்துகிறோம், அப்போதுதான் அவர் அவராக நீடித்து, அவரால் இயலக் கூடியவற்றை நிறைவேற்ற முடியும் அமெரிக்காவிலும் அரபு உலகிலும் காழ்ப்புணர்வுகளை அகற்றி, இனிய பேச்சுகளைப் பயன்படுத்தி செயல்பட முடியும்.
ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருந்திட, நாம் வைக்கும் காலடியிலும் அமைதியைத் தொட வேண்டும், சந்தோசத்தைத் தருவதாக இருக்க வேண்டும் என்று பூமியை முத்தமிடுங்கள் என்றும் கவிதையாக்குவார்.
‘‘ஒவ்வொரு கணத்திலும் அடியெடுத்து அமைதியைத் தொடுங்கள்.
ஒவ்வொரு கணத்திலும் அடியெடுத்து சந்தோசத்தைத் தொடுங்கள்.
ஒவ்வொரு அடியும் புதிய தென்றலைத் தருவிக்கும்.
ஒவ்வொரு அடியும் ஒரு பூவை பூக்கவைக்கும்.
உமது பாதங்களால் முத்தமிடுங்கள் பூமியை.
உமது நேசத்தையும் சந்தோசத்தையும் பூமிக்குக் கொண்டுவாருங்கள்.
பூமி பத்திரமாயிருக்கும் நம்மிடத்தே நாம் பாதுகாப்பாக உணருகையில்’’
புன்னகையாக இருங்கள், அதிசய இருப்பின் ஓரங்கமா என்னும் அவரது கவிதை வரியும் நிறைய விசயங்களைச் சாரமாக்கிச் சொல்வதுபோலிருக்கும்.
‘‘ஆழமாக நோக்குங்கள், ஒவ்வொரு விநாடியிலும் வசந்தத்தின் கிளையிலுள்ள மொட்டாக இருந்திட, நுண்மையான சிறகுகளுடன் எனது புதிய கூட்டில் பாடிட கற்கின்ற சிறியதொரு பறவையாக, மலண் மையத்திலே ஒரு கூட்டுப் புழுவாக, கல்லில் மறைந்துள்ள மாணிக்கமாக வந்து சேர்ந்து கொண்டிருக்கிறேன்.
கடற்கொள்ளையனால் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட பின் இச்சிறு படகில் அகதியாக கடலில் பாய்ந்திடும் 12 வயது சிறுமி நான். மற்றும் நானே கண்டு கொள்ளவும் நேசிக்கவும் திறனற்ற இருதயமுள்ள கடற்கொள்ளையன்’’
என்றொரு கவிதையில் அவரால் எழுத முடியுமாயின் அவரொரு உயரிய கவிஞர்தான். எனவேதான் அவர் சித்தாந்தம் பேசும் மதவாதியாக இல்லை. படைப்புணர்வுடன் உடனிகழ்கால மனிதனை, சமூகத்தை, சூழலை அணுகுகிறார். அவர் முகம் மலரென விரிகின்றது புன்னகையுடன்…
ஆதாரங்கள்: 1. The collected poems of thick Nhat Hanh/ Parallax press. 2. A Monk in Exile of Dreams of Return to vietnamGustav Niebyhr/nytimes.com-1999.10.16 3. This is Suddha Cove/Melvin Myleod / Plumvillage.org 4. Exclusive Interview with Zen haster Thick Nhat Hanh / Marianne schnall / huffpost. com 5. The conversation. com Thick Nhat Hanh, who introduced mindfulness to the west, prepares to die. 6. The Miracle of Mindfulness/Thick Nhat Hanh/ Beacon press, 1975,/76 7. Home coming for the mindfulness guru/ The Hindu Nov 21, 2018. 8. துறவியின் நேசம்/ சங்கர் இந்து தமிழ்திசை – டிச13, 2018. 9. உங்கள் வீட்டுக் கதவை உண்மை தட்டும்போது/ தமிழில்: ஆசை தி இந்து
பிரமாண்ட அரண்மனை செட்
போதி மரம் செட்
வீதியே பார்த்திராத
ராஜ வம்சம் சார்ந்த
ஒருவன்
ஒரு நாள் இரவில்
துறவி ஆகி வெளியேறும்
கதை
மனைவியைப் பிரிந்த
சோக இசை அமைப்பு
அரண்மனை ஆடைகள்
துறவி ஆடைகள்
சிறப்பான உணவு வகைகள்
அம்பு எய்த அன்னத்தின்
காயத்திற்கு மருந்திடும் சிறுவன்
சிறந்த பின்னணிக் கதை
உலகின் உயர்ந்த இசை
மௌனம் எனும்
சிறப்பு சப்தம்
முழு நிலவில்
முற்றும் உணர்ந்தவன்
புத்தர் பற்றி படமெடுக்க
எவ்வளவு பிரமாண்ட செலவாகும்…