நூல் அறிமுகம்: பேரா.க.ஜெயபாலனின் தென்னிந்தியாவில் பாபாசாகேப் அம்பேத்கர் – பேரா.எ.பாவலன்
தென்னிந்தியாவில் பாபாசாகேப் அம்பேத்கர் எனும் நூலை அண்மையில் பேரா. க. ஜெயபாலன் அவர்கள் எழுதியுள்ளார். இந்நூலை பாபா சாகேப் அம்பேத்கர் கலை இலக்கிய சங்கம் வெளியிட்டுள்ளது. இந்நூலைப் பற்றி பின் வருமாறு காணலாம்.
வரலாற்று நெடுங்கணக்கில் பாபாசாகேப் அம்பேத்கர் ஒவ்வொரு நாளும் நினைவு கூற வேண்டிய மனிதராக திகழ்கிறார். அவர் இதுவரை இந்த பூமி பந்தில் 64 ஆண்டுகள் ஆறு மாதங்கள் 8 நாட்கள் என்று தன் வாழ்நாளை அலங்கரித்தவர். இவ்வுலகில் படிப்பதற்காகவே பிறப்பு எடுத்தவர் என்று சொன்னால் டாக்டர் அம்பேத்கரை மட்டுமே குறிப்பிடவியலும். அவர் இந்த பூமியில் பிறந்த நாள் முதல் பரிவுநிப்பானம் அடைந்த நாலள்வரை ஒவ்வொரு நாளையும் நினைவுக் கூரத்தக்க வகையில் அல்லது எண்ணிப் பார்க்க வேண்டியவராக உள்ளார். குறிப்பாக அவருடைய பிறந்தநாள், பள்ளியில் சேர்ந்த நாள், படிப்பதற்காக கொலம்பியா பல்கலைக்கழகத்திற்குச் சென்ற நாள், லண்டன் ஸ்கூல் ஆப் எக்கனாமிக்ஸ், பூனா ஒப்பந்தம், லண்டனில் நடைப்பெற்ற மூன்று வட்ட மேசை மாநாடுகள், அக்டோபர் மாதம் 14ஆம் நாள் 10 லட்சம் மக்களுடன் பௌத்தம் தழுவியது, அவருடைய இறப்பு இப்படி ஒவ்வொரு நாளும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். அதேபோன்று அவர் எழுதிய ஒவ்வொரு நூலும், அவர் பேசிய ஒவ்வொரு சொல்லும் பொருள் குறித்தவை. அதனால்தான் உலகில் எந்த ஒரு தனிமனிதனுடைய வரலாற்றைவிட டாக்டர் அம்பேத்கரின் வரலாறு அத்தனை பொருள் பொதிந்தவையாகக் காண முடிகிறது.
இந்திய வரலாற்றைப் பற்றி டாக்டர் அம்பேத்கர் சொல்லும் பொழுது, பௌத்தத்திற்கும், பார்ப்பனத்திற்கும் நடந்த போர்தான் இந்திய வரலாறு என்கிறார். நவீன இந்தியாவின் தந்தையான டாக்டர் அம்பேத்கர் அந்த வரலாற்றை மாற்றியமைத்தார். எல்லா நதிகளும் கடலை நோக்கிப் பாய்வதைப் போல யார் எதைப் பற்றி ஆய்வு செய்வதாக இருந்தாலும், அவர்கள் டாக்டர் அம்பேத்கரிலிருந்து தொடங்குகின்றனர். அல்லது அவ்வாய்வு அம்பேத்கரிலிருந்து தொடங்கப்படுகிறது.
ரூபாயின் மதிப்பு, பணவீக்கம், பணப்புழக்கம், ரிசர்வ் வங்கி உருவாக்கம், இந்தியா பாகிஸ்தான் சிக்கல், எல்லைப் பிரச்சினை, சாதி ஏற்றத்தாழ்வு, சாதி ஒழிப்பு, இட ஒதுக்கீடு, 360 சட்டப்பிரிவு, வெளிநாட்டு உறவு, மத்திய மாநில அரசு உறவு, வறுமை ஒழிப்பு,கல்வி, வேலை வாய்ப்பு, சமூக நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், பெண் விடுதலை இப்படி இன்னுமின்னும் எத்தனை சட்டதிட்டங்களைப் பற்றிய தெளிவு வேண்டுமென்றால் டாக்டர் அம்பேத்கர் தான் வேண்டப்படுவராக திகழ்கிறார். காரணம்
இந்தியாவின் குறுக்கும், நெடுக்கும் பயணித்து ஆய்வு செய்தவர் டாக்டர் அம்பேத்கர். அதற்கு ஒரே சாட்சி இந்திய அரசியலமைப்புச் சட்டம். அந்த வகையில் அவருடைய தென்னிந்தியப் பயணம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.
இந்த தென்னிந்திய பயணம் குறித்து பேரா.க.ஜெயபாலன் அவர்கள் தென்னிந்தியாவில் பாபாசாகேப் அம்பேத்கர் என்ற நூலை ஆக்கியுள்ளார். இந்நூல் உருவாக்கத்தைக் கடுமையான சோதனை முயற்சி என்று கூறவியலும். டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் ஒவ்வொரு எழுத்தாளர்களும் எழுதிய வண்ணம் இருக்கின்றனர். அவற்றுள் தனஞ்செய்கீர் எழுதிய டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு (Dr. AMBEDKAR LIFE AND MISSION) குறிப்பிட தகுந்தது. அந்த நூலை படித்தால் டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்வதற்கு துணை நிற்கும். இந்நூல் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் உயிரோடு இருக்கும் பொழுது அவருடைய பார்வைக்கும் சென்றது. டாக்டர் அம்பேத்கரும் நூலைப் படித்தபிறகு, நாம்தான் நம்வரலாற்றை எழுத வேண்டும் என்பதை பதிவுசெய்துள்ளார். அதிலும் குறிப்பாக தன்னுடைய இளமைக்காலம் பற்றிய வரலாற்றை தெளிவாக எழுத வேண்டும் என்று நோக்கம் அவருக்கு இருந்தது.
அதேபோன்று இந்திய அரசாங்கம் 90களில் டாக்டர் அம்பேத்கர் அதுவரை தன் வாழ்நாளில் எழுதியும், பேசியதையும் தொகுத்து 37 தொகுதிகளாக வெளியிடப்பட்டது. இந்த 37 தொகுதிகளும் மிக முக்கியமானவையாகும். இந்நூட்கள் அனைத்தும் சமூக விடுதலைக்கும் அரசியல் அமைப்பிற்கும் ஓர் அகராதியாக திகழ்கிறது. எந்த சொல்லுக்கு பொருள் தேட வேண்டும் என்றாலும், எந்த செயலுக்கு தீர்வுகாண வேண்டும் என்றாலும், நான் முதலில் தேடிச் செல்வது டாக்டர் அம்பேத்கர் எழுதிய தொகுதிகளைத்தான் என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் பதிவு செய்துள்ளார். இதை தான் நிதி அமைச்சராக இருந்த பா.சிதம்பரம் அவர்களும் வேறொரு இடத்தில் பதிவு செய்துள்ளார். இதேபோன்று விஐடி வேந்தர் விஸ்வநாதன் அவர்களும் டாக்டர் அம்பேத்கரின் 125வது ஆண்டு பிறந்தநாள் விழாவில் நடந்த கருத்தரங்கத்தில் இதே கருத்தைப் பதிவு செய்ததில் இருந்து அறிய முடியும். டாக்டர் அம்பேத்கரின் கருத்துக்கள் எந்த அளவிற்கு முக்கியமானது என்பதற்கு மேற்சுட்டிய சான்றுகளை சாட்சி.
ஆனால் இந்த 37 தொகுதிகளிலும் இடம்பெறாத பல வரலாற்று அறிய தகவல்களை எல்லாம் அத்தனை அழகாக தமிழ் சமூகத்திற்கு மட்டும்மல்லாமல் ஒட்டுமொத்த இந்திய சமூகத்திற்கும் தென்னிந்தியாவில் பாபசாகேப் அம்பேத்கர் என்கின்ற நூலின் வாயிலாக பேராசிரியர் க.ஜெயபாலன் அவர்கள் கொண்டு சேர்த்திருக்கிறார்.
1932,1934,1944,1945,1950,1954 ஆகிய ஆறாண்டுகளில் டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாட்டுக்கு வருகை தந்துள்ளார். இதில் தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, உதகமண்டலம் உள்ளிட்ட இடங்களுக்கும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கும் வருகை தந்த வரலாற்றுப் பயணத்தைத் தேடி கண்டறிந்து தொகுத்து வெளியிட்டுள்ளார்.
சமகாலத்தில் யார் வேண்டுமென்றாலும் நூலை எழுத முடியும். அது இந்தச் சமூகத்திற்கு வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை காலம் தான் தீர்மானிக்கும். அதனால்தான் தமிழில் கண்டு அதைப் படித்தால் பண்டிதன் ஆகலாம் என்று ஒரு முதுமொழி உண்டு.
இங்கு பேராசிரியர் க. ஜெயபாலன் அவர்கள் இந்த நூலை ஏன் எழுத வேண்டும் என்று கேள்வியும் எழுகிறது?. இந்திய திருநாட்டையும், அரசியலமைப்பையும் பாபாசாகேப் அம்பேத்கரை தவிர்த்து விட்டு ஓர் அங்குலம கூட நகர்த்த முடியாது. இன்றைய காலகட்டத்திலும். 1956 அக்டோபர் மாதம் 14ஆம் நாள் சுமார் பத்து லட்சம் மக்களுடன் இந்து மதத்தை விட்டு பௌத்த மார்க்கத்தை தழுவினார். காரணம் இந்து மதம் மக்களை இழிவாக நடத்துகிறது அதிலும் குறிப்பாக பட்டின மக்கள் விடுதலை அடைய வேண்டும் என்றால் அவர்கள் பௌத்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் முழு விடுதலைக்கான வழியை தேர்வு செய்து 22 உறுதிமொழிகளுடன் பௌத்த மார்க்கத்தை தழுவினார். இந்த 22 உறுதி மொழிகளும் உலகத்தின் தலைசிறந்த உரைகளில் குறிப்பிட தகுந்தவையாக திகழ்கிறது. அதனால்தான் அவருடைய அந்த உரை முழு விடுதலைக்கான வழி என்கின்ற தலைப்பில் நூலாக வெளியாகியிருக்கிறது. அது இந்தியாவில் பல மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்து லட்சோபலட்ச பிரதிகள் மக்களிடம் சென்று சேர்ந்துள்ளது. இந்த வரலாறு எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு தென்னிந்தியாவில் பாவ சக்தி அம்பேத்கர் என்ற நூலும் முக்கியமான.
கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பாக கவர்ச்சிகரமான திட்டங்களுடன் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றிய பாரதிய ஜனதா கட்சி உள்ளபடியே மக்கள் நலனிலும் நாட்டின் முன்னேற்றத்திலும் அக்கறை கொள்ளவில்லை. மாறாக மக்களை பிளவுபடுத்துவதில்தான் கவனம் செலுத்தி வருகிறது. அதுக்கு சரியான சான்றை இந்திய அரசியலமைப்பு சட்டத்தை புறக்கணித்துவிட்டு இந்து சனாதனத்திற்கான ஒரு சட்டவரைவைக் கொண்டு வருவதற்கும் தயாராகி விட்டனர். இது ஒட்டுமொத்த நாட்டுக்கே பெரிய பாதிப்பு. இந்த 21ம் நூற்றாண்டிலும் மக்களை சாதியும், மதத்தையும் சொல்லி பிளவுபடுத்துவதை எண்ணியும் அதைக் கண்டிக்கும் நோக்கத்திலும் 14.10.2022 அன்று டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியைச் சார்ந்த கௌதம் ராஜேந்திரபால் அவர்கள் பத்தாயிரம் மக்களுடன் பௌத்தத்தை ஏற்றுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து கர்நாடகா மாநிலத்திலும் பௌவுத்தசமயத்தை தழுவினர். அதேபோன்று ஜெய்ப்பூர் உள்ளிட்ட இடங்களிலும் பௌத்தத்தை தழுவுவதற்கு சாரை சாரையாக மக்கள் தயாராகி விட்டனர்.
அக்டோபர் 5, 2022 தேதி அன்று பாம்சேக் அமைப்பு குமார் இரண்டு லட்சம் மக்கள் ஒன்று திரண்டு நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகத்தை முற்றுகை இட்டது குறிப்பிடத்தக்கது. இப்படிதான் 2500 ஆண்டு காலமாக பௌத்தத்திற்கும் பார்ப்பனத்திற்கும் போர் நடைபெற்று வந்துள்ளது.
தென்னிந்தியாவில் பாபாசாகேப் அம்பேத்கர் எனும் இந்தநூலில் மொத்தம் 50 கட்டுரைகளும் 14 பின்னிணைப்புகளும் இணைந்து மொத்தம் 64 கட்டுரைகள் 329 பக்கங்களில் எழுதி தொகுக்கப்பட்டுள்ளது.
இதில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு கட்டுரையும் அடிக்குறிப்பிட்டு அல்லது குறிப்பு எடுத்துப் படிக்க வேண்டிய ஓர் ஆராய்ச்சி நூலாக திகழ்கிறது. டாக்டர் அம்பேத்கரின் தென்னிந்திய வருகையும் சென்னை உரைகளும் எனும் முதல் தலைப்பில் அமைந்துள்ள கட்டுரையில் 1932 ஆம் ஆண்டு சென்னை வரலாற்றில் இருந்து தொடங்குகிறது. அந்தக் கட்டுரையில் தான் டாக்டர் அம்பேத்கர் பொது வாழ்க்கைக்கு வந்த வரலாற்றை பின்வருமாறு 27.1.1919 இல் சவுத்பரோ குழுவிடம் வாக்குரிமை குறித்து தன் கருத்துக்களை எடுத்துரைத்த காலத்தில் இருந்தே புரட்சியாளர் அம்பேத்கரின் பொது வாழ்க்கை குறிப்பிடத்தக்க பரிணாமத்தை அடைந்தது (ப.41) என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருடைய பொது வாழ்க்கைக்கு வந்த வரலாற்றை, வரலாற்று தரவுகளோடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னைக்கு வந்த காரணத்தைப் பற்றி 1932 இல் வாக்குரிமை குழு உறுப்பினர் என்ற முறையில் டாக்டர் பி ஆர் அம்பேத்கர் சென்னைக்கு வருகை புரிந்தார். பிப்ரவரி 28 ஆம் தேதி அன்று சென்னையில் அவருக்கு ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் பத்தாயிரம் பேர் கலந்து கொண்ட வண்ணமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பு நிகழ்ச்சியில் முஸ்லிம்கள் கிருத்துவர்கள் மற்றும் பிறபார்ப்பனர் அல்லாத மக்களும் கலந்து கொண்டனர் (ப.40) எனும் முக்கியமான காரணத்துடன் பதிவு செய்த வரலாறு.
தென்னிந்தியாவில் குறிப்பிட தகுந்த முக்கிய பயணம் ஆந்திராவின் பயணமும் முக்கியமானது. 1932,1938,1944, 1950,1953 போன்ற ஆண்டுகளில் பயணம் முக்கியத்துவம் வாய்ந்தது.
- அவுரங்காபாத்தில் டாக்டர் அம்பேத்கர் தொடங்க இருந்த கல்லூரி தொடர்பான பணியை முன்னிட்டு 1950 மே 19ஆம் நாள் வருகை புரிந்த பயணம்.
- 1953 ஜனவரி 12ஆம் நாள் உஸ்மானிய பல்கலைக்கழகம் இலக்கியத்தில் சிறப்பு டாக்டர் பட்டம் வழங்கியது.
- 1938 டிசம்பர் கடைசி வாரத்தில் அவுரங்காபாத் மாவட்டத்தில் ஒடுக்கப்பட்டோர் மாநாட்டில் தலைமை ஏற்க வருகை புரிந்தது. என்று ஒவ்வொரு பயணத்திற்கான காரணத்தை விரித்துரைக்கப்பட்ட கையேடாகவும் இந்நூல் திகழ்கிறது.
தென்னிந்திய பயணங்களில் கோலார் தங்கவயல் பயணம் அத்துணை முக்கியத்துவம் வாய்ந்தது. தொடக்கத்தில் குறிப்பிட்டதைப் போன்று டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றில் பதிவுகளில் எங்கும் கிடைக்காத தகவல்களைத் திரட்டி தந்ததில் பேரா. க.ஜெயபாலன்., ஐம்பதுகளில் டாக்டர் அம்பேத்கரின் மக்கள் கல்வி கழக பணிகளுக்காகவும், பௌத்த மறுமலர்ச்சி பணிகளுக்காகவும் ஊக்கமான ஆக்கமான உதவிகளைப் பல இந்திய அரசர்கள் செய்துள்ளனர். அவ்வகையில் மைசூர் மகாராஜா குடும்பத்தினர் டாக்டர் அம்பேத்கர் மீது உயர் நட்பும் மரியாதையும் கொண்டு பல நல்ல உதவிகளை செய்துள்ளனர். சத்ரபதி சாகு மகாராஜா போலவே மைசூர் மகாராஜாவும் பல முற்போக்குப்பணிகளை செய்திருப்பதை வரலாறுகள் காட்டுகின்றன.
1954 ஜூலை 12 கோலார் தங்க வயலுக்கு டாக்டர் அம்பேத்கரின் வருகை அவருடைய வரலாற்று புத்தகங்களையும் பதியப்படாமல் இருக்கிறது அண்மைக்காலமாகத் தங்க வயல் வருகை குறித்து பல்வேறு கட்டுரைகள் ஒளிப்படங்கள் ஆகியவை இணையதளங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன (பல.50) என்று பல அறிய தகவல்களை தேடி தொகுத்து தரப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டு அறிவியல் விஞ்ஞானி ஜி.டி.நாயுடு அவர்களுக்கு ஆதரவாக டாக்டர் அம்பேத்கர் நீதிமன்றத்தில் ஆஜராகி வெற்றி பெற்றுள்ளார். அதேப்போன்று கல்விக்காக அரும்பாடுபட்ட மகாத்மா ஜோதிராவ் ஃபுலே, அவருடைய மனைவி சாவித்திரிபாய் ஃபுலே அவர்களின் வாழ்க்கை வரலாற்றை நோபல் பரிசு பெற்ற மேரிகியூரி வாழ்க்கை வரலாற்றோடு பொருத்தி பார்த்து இச்சமுகத்திற்கு ஒரு செய்தியை தந்துள்ளார்.
அய்யன் காளி, ரெட்டமலை சீனிவாசன் எம்.சி. ராஜா, பெரியார், லட்சுமி நரசு வட்டமேசை மாநாட்டின் தரவுகள், என். சிவராஜ் உள்ளிட்ட என்னத்த தகவல்களையும் தரவுகளையும் இந்த நூலில் கொண்டு வந்து சேர்த்துள்ளார்.
இந்த நூல் தமிழ்ச் சமூகம் மட்டும் பயனுறுவதோடு அல்லாமல் அனைவரும் இதன் பயனை உணர வேண்டும். அதனால் இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் அதே சமயத்தில் ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து உலக அரங்கிற்கும் என் நூலை கொண்டு செல்ல வேண்டிய அவசியம் உள்ளது.
நூல் பற்றி
தென்னிந்தியாவில் பாபாசாகேப் அம்பேத்கர்
ஆசிரியர் : முனைவர் க.ஜெயபாலன்
வெளியீடு : பாபா சாஹிப் அம்பேத்கர் கலை இலக்கியச் சங்கம்
முல்லை அச்சகம்
சென்னை – 600 00 2
ரூபாய் ₹ 350
முனைவர் எ. பாவலன்
உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
இலயோலா கல்லூரி,
சென்னை- 34
[email protected]
டிக் நாட் ஹன் அமிலத்தை ஆரஞ்சாக மாற்றுபவர் – சா. தேவதாஸ்
டிக் நாட் ஹன்: அமிலத்தை ஆரஞ்சாக மாற்றுபவர்
‘‘உன் புன்னகையிலிருந்து பூவொன்று பூக்கும்
பிறப்பு இறப்பின் ஆயிரமாயிரம் உலகங்களினூடாக
உன்னை நேசிப்பவர்கள்
உன்னைக் காண்பார்கள்’’
குயென் ஸுவான் பாவோ (Nguyen Xuan Bao ) என்னும் இயற்பெயருடைய டிக் நாட் ஹன் (1926-1) Thich Nhat Hanh) திக் நாட் ஹன், திக் நியட் ஹன் என்றெல்லாம் உச்சரிக்கப்பட்டாலும் டிக் நாட் ஹன் என்றெல்லாம் உச்சரிக்கப்பட்டாலும் டிக் நட் ஹன் என்பதே சரியான வியட்னாமிய உச்சரிப்பாகக் கருதப்படுகிறது. வியட்னாமிய பெளத்த துறவி, கவிஞர், அமைதிச் செயல்பாட்டாளர். தற்கணப் பிரக்ஞை (Mindfulness) என்பது ஆன்மிகவாதிகளுக்கு மட்டுமின்றி, தற்போதைய உலகியல் மனிதர்களுக்கும் மாபெரும் கொடையாக விளங்கக்கூடியது என சர்வதேச அளவில் முன்னெடுத்து வருபவர். 95வது வயதிலும் சக்கர நாற்காலியில் இயங்கிவாறே, பெளத்தத்தை ஜென்னை நம் வாழ்க்கையை வளப்படுத்தும் சாதனங்களாக, அனைவருக்குமான வழிமுறையாக வற்புறுத்தி வருபவர்.
16 வது வயதில் பெளத்த மடாலயத்தில் நுழைந்து, மகாயன பெளத்தத்திலும் வியட்னாமிய தியென் வழிமுறையிலும் பயிற்சி பெற்று, 9 ஆண்டுகள் கழித்து (1951) இல் பெளத்த துறவியாகிறார். தேரவாதப்பரிச்சயம், ஜென் நாட்டம், கிறித்துவின் மேல் அபிமானம் என்னும் செல்வாக்குகளையும் இணைத்துக் கொண்டு, ஒரு மத சித்தாந்தசியாக மாறாமல், சமூகத்துடன் தொடர்ந்து கலந்துறவாடக் கூடியவராக, இப்பொழுதில் மனிதனின் அக நெருக்கடிகளையும் சமூகப் பிரச்சினைகளையும் எப்படி எதிர்கொண்டு, விழிப்புணர்வுள்ள சமுதாயத்தை உருவாக்கும் அக்கறைமிக்கவராக மலர்ந்துள்ளார். 92வது வயதில் அவர் வியட்னாம் திரும்பியபோது, முரட்டுத் தோலுடைய சாத்துக்குடி பழம் மென்தோலுடன் கனிந்த கமலா ஆரஞ்சாக மாறியிருந்தார். தன் தியான முறையினையும் ‘ஆரஞ்சுத் தியானம்’ என்பவர், ஆரஞ்சினை உண்ணும் சிலர், உண்மையில் அதனை உண்பதில்லை. அவர்கள்தம் துயரத்தை, அச்சத்தை பதற்றத்தை, கடந்த – எதிர்காலங்களையே உண்கின்றனர். உடலும் உள்ளமும் நன்றி, நிகழ்காலத்தில் இருப்பதில்லை.
‘வெயிலும் மழையும் அடிக்க, இப்பசிய காய் வளர்ந்து மஞ்சள் நிறம் பெற்று, ஆரஞ்சாக மாற, அமிலம் சர்க்கரையாகிறது. இத்தலை சிறந்த படைப்பை உருவாக்கிட ஆரஞ்சு மரத்திற்கு அவகாசம் தேவைப்படுகிறது. நீங்கள் நிஜமாகவே இங்கிருந்து, சுவாசித்தவாறும் புன்னகைத்தவாறும் ஆரஞ்சை தியானித்துக் கொண்டிருந்தால், ஆரஞ்சு, அற்புதமாகின்றது. ஏராளமான சந்தோசங்களை வாரிவழங்கும்.
‘ஆரஞ்சு மரத்திற்கு அவகாசம் தேவைப்படுவதுபோல, நமக்கு நிசப்தம் தேவைப்படும். அந்நிசப்தம் உயிரோட்டமும் ஆற்றலும் ஊட்டமும் கொண்டு உருமாற்றமடையச் செய்யும். நாம் இணைந்து இவ்வுன்னத நிசப்தத்தை உருவாக்க முடியும். அது வலுவானதால் இடுத்து முழங்கும் நிசப்தம் எனப்படும் என்பார்.
அறிவுத் தளத்தில் மட்டும் முனைப்பாக இருந்து இயங்கினால் நாம் நிம்மதி பெற இயலாது. கடந்து செல்ல வேண்டுமானால், நம் பார்வைகளையும் அறிவையும் விட்டுவிட வேண்டும் என்பதுதான் எப்போதுமே புரிதலுணர்வுக்கான பவுத்த வழிமுறையாகும்… அறிவு திடத்தன்மை வாய்ந்தது. புரிதலுணர்வுக்குச் செல்லும் வழியை அது அடைத்துக் கொள்கிறது.
புத்தரை எப்படிக் காணலாம், எங்கே காணலாம்? தேடி அலைய வேண்டாம். இருந்த இடத்திலேயே இப்போதே காணலாம். அதற்கு குவிமையம் கொள்ள வேண்டும். உடலும், மனமும் ஒன்றிணைந்து இயங்க வேண்டும். அந்தக் கணத்தில் ஆழ்ந்து போவது மட்டும் நமது யத்தனமாயிருக்க வேண்டும். ஒரு மலரைப் பார்த்து, அது சரகாயம், மேகங்கள், பூமி, வெளி, காலம் ஆகியவற்றால் உருக் கொண்டிருப்பதைக் காண்கிறோம். அதனை உணருகையில் புத்தரைப் பார்க்கிறோம். நம்மைப் பார்க்கிறோம், நமது ஆசிரியர், தந்தை, தாய், மூதாதையர், சகோதர- சகோதரியர் காய்கறிகள், தண்ணீரால் நாம் உருவாக்கப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். பரஸ்பரம் சார்ந்திருத்தலின் வெளிச்சத்தில் இவற்றை நோக்குகின்றோம். புத்தரை நோக்குகின்றோம். நமக்கென்று தனித்த சுயமில்லை என்று காண்கிறோம்.
நமக்கென்று ஒரு சுயத்தைக் கற்பித்து அதனை வளர்த்துப் பெரிதாக்கிக் கொண்டு போவதுதான் அடிப்படைப் பிரச்சனை. நாளடைவில் கற்பிதம், அழுத்தும் நிஜமாகிவிடுகிறது. யாரையும் நேசிக்க முடியவில்லை. தனது முன்னேற்றமும் வளர்ச்சியுமே பிரதானமாகின்றன. புல் பூண்டிலிருந்து வானத்துத் தாரகை வரை ஒரு பரஸ்பரச் சார்பில், இயக்கத்தில் பிரபஞ்சம் இருக்க, இதனைக் கவனத்தில் கொள்ளாமல், தன்னை மட்டும் அடிப்படை அவகாக்கிக் கொண்டு மனிதன் இயங்கினானால், இயற்கையிடமும் அவன் புகலிடம் கோர முடியாதுபோய்விடும்.
இன்னொருவருக்காக இன்னொன்றிற்காக வாழ்வது இழப்பில்லை, மாறாக இன்னொருவரை இன்னொன்றை மலர்ச்சி கொள்ள வைக்கையில் தானடையும் மலர்ச்சியும் அபரிமிதமானதே. அம்மலர்ச்சியே ஆரோக்கியமானது. அறையிலுள்ள விளக்குபோல சுற்றிலுமுள்ள இருளை அகற்றி, வெளிச்சம் தரும், தானும் பிரகாசிக்கும்.
துறவியான டிக் நாட் ஹன், பாசம் பந்தம் போன்ற உணர்வோட்டங்களுக்கு உள்ளாகவில்லையா? அந்த நிகழ்வுப் போக்குகளை அவர் குறிப்பிடத் தயங்குவதில்லை.
‘‘எனது அம்மா இறந்து ஏழு வருடங்களுக்குப் பிறகு, நான் திடீரென்று நள்ளிரவில் விழித்துக் கொண்டேன். வெளியே சென்று பார்த்தபோது, நிலவு வானில் சுடர்ந்து பளபளத்தது. அதிகாலை இரண்டு, மூன்று மணிக்குக் கூட, நிலவு அத்தனை ஆழமாக, அமைதியாக, மிருதுவாக ஒரு தாய், தன் குழந்தையிடம் கொண்டிருக்கும் நேசத்தைப் போல் ஒளியைப் பரப்பிக் கொண்டிருந்தது. நான் அவளது அன்பில் நினைத்தேன். என் அம்மா இன்னும் உயிருடன் இருக்கிறார். அவர் எப்போதும் இருப்பார் என்று உணர்ந்தேன்.’’
தாய்ப்பாசம் இப்படி மலர்ச்சி கொள்ள, அவர் கொண்டிருந்த காதல் எப்படிப் பரிமாணமடைந்து விடுகிறது பரிணாமமும் கொள்கிறது என்பதை ஓரிடத்தில் குறிப்பிடுகிறார். அது ஒரு பிக்குணி மீது கொண்ட பிரியம்.
அந்தப் பிக்குணியுடன் வெகுநேரம் பேசிவிட்டு வந்த பின்னர், தூங்காமல் இருந்த இரவை அவர் நினைவு கூர்கிறார். எனக்குத் தூக்கமே வரவில்லை. அவருடன் அமர்ந்திருக்க வேண்டும்; அவரைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். அந்த இரவின் பல தருணங்களில் எழுந்து சென்று அவரது அறைக் கதவைத் தட்டி என்னுடன் பேசுவதற்கு அழைக்க வேண்டுமென்று ஆர்வமும் ஏற்பட்டது.
ஆனால் அவர் அந்த அறைக் கதவை தட்டவே இல்லை. அந்தக் காதல் இருவரையும் எப்படிப் பாதிக்கும் என்பது சுருக்கென்று தைத்திருக்கின்றது. தம்மை அறியும் பயணத்தில் அவர்கள் மேற்கொண்ட உறுதிமொழிகள் ஞாபகத்துக்கு வந்தன. புத்தரின் மொழி வாயிலாக அந்தப் பிக்குணியின் மேல்கொண்ட நேசத்தை அனைத்துயிர்கள் மீதும் மாற்றிக் கொண்டார்.
நான் அவளை எல்லா இடத்திலும் காணத் தொடங்கினேன். காலத்தில், அவர்மீது கொண்ட எனது நேசம் மறையவில்லை. ஆனால் அது ஒரு நபர் மீதானதாக இல்லாமல் போனது.’’
II
துறவியான ஹன், Vitnamese Buddhism இதழின் ஆசிரியராகிறார். ஓர் அச்சகம், ஒரு பல்கலை கழகம், சமூக சேவை அமைப்பு எனத் தொடங்குகிறார். பள்ளிகள், சுகாதாரமையங்கள் என விரிவுப்படுத்துகிறார். கிராம மறு நிர்மாணத்தில் ஈடுபட வைக்கிறார்.
1961இல் அமெரிக்கா சென்று ஒப்பியல் மதம் கற்பிக்கின்றார். கொலம்பியா பல்கலைகழகத்தில் பெளத்த மத விரிவுரையாளராகிறார். பிரெஞ்சு, சீனம், சமஸ்கிருதம், பாலி, ஜப்பானிய ஆங்கில மொழிகளில் தேர்ச்சியுடையவராகிறார். 1963இல் வியட்னாம் திரும்பி, வான் ஹன் பெளத்த பல்கலைகழகத்தில் பெளத்த உளவியலையும் ஆன்மிக இலக்கியத்தையும் போதிக்கின்றார். வடக்கு- தெற்கு வியட்னாம்களுக்கிடையிலான முரண்கள் – மோதல்களிலான சூழலில் (1966இல்) ஹன் திரும்பவும் அமெரிக்கா செல்கிறார். கார்னீல் பல்கலைக் கழகத்தில் ஒரு கருத்தரங்கம் நடத்துகிறார். மார்டீன் லூதர் கிங்கைச் சந்திக்கிறார், தாமஸ் மெர்டன் என்னும் கிறித்தவ ஆன்மிக ஈடுபாட்டாளருடன் உரையாடுகிறார். டிக் நாட் ஹன்னுக்கு நோபல்பரிசு வழங்குமாறு பரிந்துரை செய்யுமளவுக்கு மார்டின் லூதர் கிங் சென்று விடுகிறார்.
அடுத்து அவர் வியட்னாமிய பெளத்த அமைதி தூதுக் குழுவின் தலைவராக பிரான்ஸ் செல்கிறார். அப்போது (1975) வடக்கு வியட்னாமிய ராணுவம் தெற்கு வியட்னாமை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறது. வியட்னாம் திரும்ப அவருக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. வியட்னாம் யுத்த காலத்து CIA ஆவணம் ஒன்று, அவரை வியட்னாமின் அதிருப்தியாளர் குழுத் தலைவரின் நம்பகமானவர் என்கிறது. போர் சூழ்ந்துவிட்ட நிலையில், டிக் நாட் ஹன்னின் சேவைக் குழுவினர் வியட்னாம் சார்ந்து இயங்காமல், நடுநிலை காத்தனர், அனைவருக்கும் ஒரு சேர உதவினர் என்பது வியட்னாமிய அரசின் குற்றச்சாட்டு.
2005இல் தான் அவர் வியட்னாம் திரும்ப அனுமதிக்கப்பட்டார். 2014இல் மூளையின் ரத்த நாள வெடிப்பால் பாதிப்புற்று இரண்டாண்டுகள் தீவிர மருத்துவ சிகிச்சைக்கு உள்ளானார். என்றாலும் அதன் பிறகு சக்கர நாற்காலியிலேயே அவர் இயங்க வேண்டியதாயிற்று. எனினும் அவர் தனது உரைகளையும் செயல்பாடுகளையும் தொடர்ந்து கொண்டே இருக்கிறார் பேச முடியாத நடக்கமுடியாத நிலையிலும், 2018லிருந்து தன் இறுதி நாட்களை வியட்னாமில் கழிக்க வேண்டும் என்று விரும்பி, தனது மடாலயத்தில் தங்கி வருகிறார்.
III
நேசம் செலுத்த அன்பு காட்ட இன்னொருவர் இன்னொன்று தேவையில்லை என்பார் டிக் நாட் ஹன். ‘உங்களது துயரத்தைப் புரிந்து கொள்வது, மேலாக உணர்ந்து கொள்ளவும் நேசிக்கவும் உதவும், ஏனெனில் முழுமையினையும் நிறைவையும் உங்களிடத்தே உணருகிறீர்கள். ஆதலில் நேசத்தைத் தொடங்கிட இன்னொருவர் தேவையில்லை. உங்களிடமே தொடங்கிடலாம். மேலும், உண்மையான நேசம் ஒரு நபரைத் தெரிவு செய்வதில்லை. உங்களிடத்தே உண்மையான நேசமிருப்பின், உங்களைச் சுற்றியுள்ள ஒவ்வொருவரும் நன்மையடைகின்றனர் – மனிதர் மட்டுமின்றி, தாவரங்கள், தாது உப்புக்கள், மிருங்களும். அது நிஜமான நேசம். நிஜமான நேசம் சமநிலை. ஆக, இப்போது நாம் உணரும் நேசத்தை விரிவுபடுத்துவது என்பதை விடவும், நம் நேசத்தின் அடிப்படையே, தேவையிலிருந்து சுய முழுமைக்கு, நகர்த்துவதுதான் இது.
ஒரு சமயம், சிறுமியொருத்தி ஹன்னிடம் தனது நாய் இறந்துபோன சோகத்தை எப்படி, சமாளிப்பது என்று கேட்டபோது, அவரது பதில், வானில் ஒரு மேகம் மறைந்து கொண்டிருப்பதைப் பார். அம்மேகம் மடியவில்லை மாறாக மழையாக குவளையிலுள்ள தேனீராக மாறியிருக்கிறது மேகம் புது உருவில் உயிர்த்திருப்பது போலவே, நாயும்.
தியானம் என்பது துறவிகளுக்கான பயிற்சி என்னும் அபிப்பிராயத்தை மாற்றி சாதாரணமான மனிதனிலிருந்து உயர்மட்ட அலுவலர் வரை கைக் கொள்ள வேண்டிய வாழ்க்கை சாதனமாக முன்வைப்பார். அது உங்களின் சொந்த இல்லமான உங்களிடத்தே திரும்ப வைப்பது. அப்போது அகப்பார்வை கிட்டும். உங்களது சந்தோசமும் வருத்தமும் மற்றவரின் சந்தோஷத்தையும் வருத்தத்தையும் சார்ந்தது.
நீங்கள் நேசிக்கையில், உங்கள் நேசம் உண்மையாயிருக்கையில், மற்றவர் உங்களின் அங்கமாக இருக்கிறார், நீங்கள் அவரின் பகுதியாக இருக்கிறீர்கள்.
சூழலியல் என்னும் அற்புதமான கதவைத் திறந்து பார்க்க வேண்டும் என்பார். அத்துடன் அமைதியின் கதவையும் திறக்கவேண்டும் என்பார். பெண்ணியம், பாலினபாகுபாடு என அனைத்துத் தளங்களையும் பரிசீலிக்க வேண்டும் என்று வற்புறுத்துவார். சங்கத்தில் பெண்களை அனுமதித்தது புத்தரின் புரட்சிகர நடவடிக்கை என்பார்.
பலரால் வற்புறுத்தப்பட்டுள்ளது என்பதற்காக எதையும் நம்ப வேண்டாம். புகழ் பெற்ற குருவால் உச்சரிக்கப்பட்டிருக்கிறது என்பதற்காக எதையும் நம்ப வேண்டாம். புனித நூல்களில் உள்ளது என்பதற்காக எதையும் நம்ப வேண்டாம் என்னும் புத்தரின் எச்சரிக்கை சரியான விழிப்புணர்வு பெற துணை நிற்கும் என்பார்.
பெளத்தம் வற்புறுத்தும் சூன்யம், நிர்வாண நிலை என்பவை பற்றியெல்லாம் படைப்புணர்வுடன் விளக்குவார். அவர் ஒரு கவிஞர் என்பதால் தீக் குச்சியால் உண்டான கனல் தீக்குச்சியையும் விழுங்கிவிடும். ஆழமாக நோக்குவதை நடைமுறைக்கு கொண்டு வருகையில் நித்தியமின்மையின் அகப் பார்வை கொண்டு, நிலையற்ற தன்மை என்ற எண்ணத்தையும் அவித்து விடலாம்…. ஒரு நோக்கு நிலையில் சிக்கிக் கொண்டால்,
நீங்கள் உண்மையிலேயே சுதந்திரமானவரில்லை. அறுதியானது எந்நோக்கையும் கொண்டிருப்பதில்லை. எனவேதான் நிர்வாண நிலை என்பது அனைத்து நோக்குகளின் இன்மையாகும், ஏனெனில் நோக்கு நிலைகள் சந்தோசமின்மைக் கொண்டுவரும்..’’
விலங்குகளிடமிருந்து கற்றுக் கொள்ள விஷயங்கள் இருக்கின்றன என்று கூறி ஓர் எடுத்துக்காட்டை முன் வைப்பார். காயம்பட்டால், களைத்துப் போனால், சுகவீனமானால் காட்டு விலங்குகளுக்கு என்ன செய்வதென்று தெரியும் – நிசப்தமான இடத்திற்குப் போய் படுத்து ஓய்வெடுக்கும். அப்போது இரை தேடி அலையாது, பிற விலங்குகளை வேட்டையாடாது, வெறுமனே ஓய்வெடுக்கும் சில தினங்களில் குணமாகி, வழக்கமான தம் நடவடிக்கைகளில் ஈடுபடும்.
IV
அமெரிக்காவில் ஒரு கூட்டத்தில் வியட்னாம் போர் பற்றிய விவாதத்தின்போது, அமெரிக்கா போரினைக் கைவிட வேண்டும் என ஹன் வற்புறுத்தியதும், அப்படியானால் இங்கிருந்து கொண்டு ஏன் பேசுகிறீர்கள், உங்கள் நாட்டுக்குப் போய் போராடுங்கள் என்கிறார் ஒருவர் ஆவேசமாக. ஒரு கணம் அதிர்ந்துவிட்ட ஹன் இயல்பு நிலைக்குத் திரும்பி, நிதானமாகப் பதிலளித்தார். மரம் வளர வேண்டுமானால், இவைகளுக்கு நீர் தெளிப்பதில் பயனில்லை. வேருக்கு நீர் பாய்ச்ச வேண்டும். யுத்தத்தின் பல வேர்கள் இங்கே, உங்களது நாட்டில் உள்ளன. குண்டு வீசப்பட விருக்கும் மக்களுக்கு உதவிட, இத்துயரிலிருந்து பாதுகாத்திட நான் இங்கே வரவேண்டியிருக்கிறது.
ஒபாமா அதிபராகப் பொறுப்பேற்றதும், கருப்பர் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு உலக அளவிலான அமைதிக்கும் நம்பிக்கை யூட்டுபவராகக் கருதப்பட்டு, பின் ஏமாற்றமளிக்கும் சாதாரண தலைவராகிப் போனதை, ஹன் நுணுக்கமாகச் சுட்டிக் காட்டுவார்.
‘‘ஆனால் ஒபாமா பலவீனமானவரும் கூட வலுவான சமுதாயத்தால், இக்கொள்கைகளில் நம்பிக்கையுடைய அனைவராலும் ஆதரிக்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் அவரது ராணுவ பொருளியல் ஆலோசகர்கள் அவரை இன்னொரு திசையில் திருப்பிவிடலாம். எனவே தான் சமுதாயம் அவருக்குத் துணை நிற்க வேண்டும் என வற்புறுத்துகிறோம், அப்போதுதான் அவர் அவராக நீடித்து, அவரால் இயலக் கூடியவற்றை நிறைவேற்ற முடியும் அமெரிக்காவிலும் அரபு உலகிலும் காழ்ப்புணர்வுகளை அகற்றி, இனிய பேச்சுகளைப் பயன்படுத்தி செயல்பட முடியும்.
ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருந்திட, நாம் வைக்கும் காலடியிலும் அமைதியைத் தொட வேண்டும், சந்தோசத்தைத் தருவதாக இருக்க வேண்டும் என்று பூமியை முத்தமிடுங்கள் என்றும் கவிதையாக்குவார்.
‘‘ஒவ்வொரு கணத்திலும் அடியெடுத்து அமைதியைத் தொடுங்கள்.
ஒவ்வொரு கணத்திலும் அடியெடுத்து சந்தோசத்தைத் தொடுங்கள்.
ஒவ்வொரு அடியும் புதிய தென்றலைத் தருவிக்கும்.
ஒவ்வொரு அடியும் ஒரு பூவை பூக்கவைக்கும்.
உமது பாதங்களால் முத்தமிடுங்கள் பூமியை.
உமது நேசத்தையும் சந்தோசத்தையும் பூமிக்குக் கொண்டுவாருங்கள்.
பூமி பத்திரமாயிருக்கும் நம்மிடத்தே நாம் பாதுகாப்பாக உணருகையில்’’
புன்னகையாக இருங்கள், அதிசய இருப்பின் ஓரங்கமா என்னும் அவரது கவிதை வரியும் நிறைய விசயங்களைச் சாரமாக்கிச் சொல்வதுபோலிருக்கும்.
‘‘ஆழமாக நோக்குங்கள், ஒவ்வொரு விநாடியிலும் வசந்தத்தின் கிளையிலுள்ள மொட்டாக இருந்திட, நுண்மையான சிறகுகளுடன் எனது புதிய கூட்டில் பாடிட கற்கின்ற சிறியதொரு பறவையாக, மலண் மையத்திலே ஒரு கூட்டுப் புழுவாக, கல்லில் மறைந்துள்ள மாணிக்கமாக வந்து சேர்ந்து கொண்டிருக்கிறேன்.
கடற்கொள்ளையனால் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட பின் இச்சிறு படகில் அகதியாக கடலில் பாய்ந்திடும் 12 வயது சிறுமி நான். மற்றும் நானே கண்டு கொள்ளவும் நேசிக்கவும் திறனற்ற இருதயமுள்ள கடற்கொள்ளையன்’’
என்றொரு கவிதையில் அவரால் எழுத முடியுமாயின் அவரொரு உயரிய கவிஞர்தான். எனவேதான் அவர் சித்தாந்தம் பேசும் மதவாதியாக இல்லை. படைப்புணர்வுடன் உடனிகழ்கால மனிதனை, சமூகத்தை, சூழலை அணுகுகிறார். அவர் முகம் மலரென விரிகின்றது புன்னகையுடன்…
ஆதாரங்கள்:
1. The collected poems of thick Nhat Hanh/ Parallax press.
2. A Monk in Exile of Dreams of Return to vietnamGustav Niebyhr/nytimes.com-1999.10.16
3. This is Suddha Cove/Melvin Myleod / Plumvillage.org
4. Exclusive Interview with Zen haster Thick Nhat Hanh / Marianne schnall / huffpost. com
5. The conversation. com Thick Nhat Hanh, who introduced mindfulness to the west, prepares to die.
6. The Miracle of Mindfulness/Thick Nhat Hanh/ Beacon press, 1975,/76
7. Home coming for the mindfulness guru/ The Hindu Nov 21, 2018.
8. துறவியின் நேசம்/ சங்கர் இந்து தமிழ்திசை – டிச13, 2018.
9. உங்கள் வீட்டுக் கதவை உண்மை தட்டும்போது/ தமிழில்: ஆசை தி இந்து
– நவம்பர் 23, 2017.
எழுத்தாளர் இருக்கை: பௌத்த தமிழ் இலக்கிய வரலாறு புத்தகம் குறித்து ஓர் உரையாடல் | Buddhist
#Buddhist #TamilLiterature #BookReview #Interview
பௌத்தத் தமிழ் இலக்கிய வரலாறு : [ 20ஆம் நூற்றாண்டு] – பேராசிரியர் முனைவர் க. ஜெயபாலன்
LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
Follow Us on:-
Facebook: https://www.facebook.com/thamizhbooks/
Twitter: https://twitter.com/Bharathi_BFC
To Buy Otrai Siragu Oviya Tamil Book. Visit Us Below
To Get to know more about tamil Books, Visit us Below,
https://bookday.in
நினைத்த நூல்கள்… நினைத்த நேரத்தில்…
பெற 044 2433 2924