பாலாவின் கவிதைகள்

பாலாவின் கவிதைகள்




பட்ஜெட்
**********
வருடா வருடம்
வளர்கிறது
வறட்சியும், வாக்குறுதிகளும்.

இளைஞர்கள்
***************
ரசிக்கவும் ருசிக்கவும்
நேரமின்றி – இயங்கிடும்
இயந்திரங்கள்…….

கொரானா காலம்
**********************
உயிர் காத்திரு
காத்துதவு
கடவுளாவாய்!!

சுதந்திரக் கொண்டாட்டம்
******************************
தேசியக் கொடி ஏற்றும் நேரம்
முப்படைகளும்
முச்சந்தியில்!

இயற்கை
************
முடித்து வைப்பதற்காகவே
அனைத்தையும் தொடங்குகிறது
இயற்கை!

பிட்காய்ன்…
*************
தகிக்கும் கோடை,
தார் பாலை,
கார் சாலையில்
அதோ தூரத்தில்
நீர்….

அள்ளிப் பருகச்
சென்றுகொண்டிருக்கிறேன்.

அதுவும்
அருகில்
வந்து கொண்டே

இருக்கிறது…….
விரைவு உணவு எனும் எமன்

முப்பத்தி இரண்டு
வயது முடிந்த
முன்னாள் மாணவருக்கு
இறுதித் தீர்ப்பு
எழுதினார்கள்
இருதயத்தில்
அடைப்பு என்று!

இந்தியாவே ஆடும்
கிரிக்கெட்டை ஆடி
ஓய்ந்த அவன்…

உலகம் வியந்த
உசேன் போல்ட்டை
உரசிப் பார்த்த அவன்…

கட்டுடல்
கருத்துப் போக
கடினமாய் உழைத்தவன்..

காலனை நோக்கி
கடிது செல்ல
காரணம் என்ன?

விரைவு உணவு
விஷமானதோ?

விதி என்று
விட்டுவிட
மதியில்லை….

108
*****
பல மதத்தினரும்
படையெடுத்து
வந்திருந்தாலும்
பார்த்த அனைவரும்
ஒருமித்து
உச்சரித்துக்
கொண்டிருந்தனர்
ஒரே மந்திரத்தை..

சாரை சாரையாய்
சாலையெங்கும்
நான்கு சக்கர
ஊர்திகளின்
அணி வகுப்பு
நீண்ட பாம்பு போல்..

பரபர வென்று
பறக்கும்
பட்டாம்பூச்சி போல்
இரு சக்கரங்களின்
இரைச்சல்கள்…

கலைந்த
எறும்புக் கூடு போல்
திக்கு தெரியாது
ஊசாடும் மக்கள்..

படையணித்
தலைவன் போல்
மிடுக்காய்
மிரட்டிக் கொண்டிருக்கும்
காக்கி உடை கனவான்

பிற நேரங்களில்
காணது விட்ட
கடவுளை
விழாக் காலங்களில்
கண்டுவிட்ட
திருப்தி
கண்டவர் கண்களில்..
ஏக்கம்
காணாதவர் நெஞ்சில்..

கொரானாவை
ஒதுக்கி விட்டு
ஓடி உரசிக் கொண்டு
பார்த்தால்,
சிதறிக் கிடந்தன
சித்திரை திருநாளுக்காய்
வாங்கியிருந்த
சில கனிகள்..

மாதத் தவணை
கட்டி முடிக்கப்படாது
உருக் குலைந்த வாகனம்…
உடன்
கை கால்கள்
இடம் மாறி,
தலைகீழாகக் கிடக்கும்
குருதி கொப்பளிக்கும்
ஓர் உடல்…

எதாவது சில துளிகள்
நீர் கிட்டாதா என்று
இறுதி ரயில் பிடிக்கும்
பிரயாணியாய்
நம்பிக்கையற்று….

எல்லோரும்
ஒருமித்து
உச்சரித்துக்
கொண்டிருந்தனர்

போராடும்
உயிரைக்
காப்பாற்றி விட,

கலாம் கண்டு
கொடுத்த,
108 எனும்
மகா மந்திரத்தை
அலைபேசியில்
யாரிடமோ!

-பாலா
பொள்ளாச்சி

Tamil Nadu State Finance Situation : White Paper and Budget Article By Venkatesh Athreya. Is Translated in Tamil By Prof. T. Chandraguru

தமிழ்நாடு மாநில நிதி நிலைமை : வெள்ளை அறிக்கையும் பட்ஜெட்டும் – பேரா.வெங்கடேஷ் ஆத்ரேயா



மே மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பெற்ற மாபெரும் வெற்றிக்குப் பின்திமுக அரசு அமைந்த உடன் தமிழ்நாடு மாநில சட்டமன்றத்தில் ஆளுநர் ஆற்றிய உரையில் அரசாங்க நிதி குறித்த உண்மையான நிலைமையை சட்டமன்ற உறுப்பினர்களும், மக்களும் புரிந்து கொள்ள உதவும் வகையில் தமிழ்நாட்டின் நிதி நிலைமையை விவரிக்கும் வெள்ளை அறிக்கை ஒன்று பொதுவெளியில் அரசால் வைக்கப்படும் என்று சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. அந்த வாக்குறுதியானது மாநில பட்ஜெட்டைஆகஸ்ட் 13 அன்று சட்டமன்றத்தில் தாக்கல்செய்வதற்கு முன்பாக ஆகஸ்ட் 9 அன்று சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தமிழ்நாட்டு நிதியமைச்சர் பழனிவேல்தியாகராஜன் வெள்ளை அறிக்கையை வெளியிட்டதன் மூலம் நிறைவேற்றப்பட்டது.

முக்கிய விவரங்கள்

நிதியமைச்சரின் அந்த வெள்ளை அறிக்கை 2006-07 மற்றும் 2020-2021க்கு இடையிலான காலகட்டத்தில் தமிழ்நாட்டு அரசின் நிதி நிலைமையின் போக்குகளை ஆராய்வதாக இருந்தது. குறிப்பிடப்பட்ட அந்தக் காலகட்டத்தில் 2006 முதல் 2011வரையிலும் திமுக ஆட்சியில் இருந்தது.2011 முதல் 2021 வரை அதிமுக ஆட்சி இருந்தது. 2011 முதல் 2016 டிசம்பரில் ஜெயலலிதா மறையும் வரையில் முதலமைச்சராக இருந்தார். அதன்பிறகு பழனிசாமி முதலமைச்சராக இருந்தார். மாநில நிதி மற்றும் வரவு செலவுத் திட்டங்கள் குறித்த அதிகாரப்பூர்வ தரவுகளைப் பயன்படுத்தி வெளியிடப்பட்ட அந்த வெள்ளை அறிக்கையில் 2006-2011 காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 2011-2021 காலகட்டத்தில் மாநிலஅரசின் நிதி நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தமிழக அரசின் வருவாய் வரவுகள் (மாநிலத்தின் சொந்த வரி வருவாய், ஒன்றிய அரசிலிருந்து கிடைக்கும் நிதி மற்றும் மாநில அரசின் வரி அல்லாத வருவாய் ஆகியவற்றால் ஆனது) மற்றும் வருவாய் செலவுகளுக்கு (சொத்துகளை உருவாக்காத செலவுகள்) இடையிலான வித்தியாசமாக இருக்கின்ற வருவாய் பற்றாக்குறை முழுமையான அடிப்படையிலும், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GSDP) அடிப்படையிலும் காலப்போக்கில் அதிகரித்துக் கொண்டே வந்திருப்பதாக இந்த வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 2013-14இல் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.18 சதவிகிதமாக இருந்த வருவாய் பற்றாக்குறை 2019-20இல் 1.95 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. கோவிட் தொற்றுநோய் ஆண்டான 2020-21இல் அந்தப் பற்றாக்குறை 3.16 சதவிகிதமாக மேலும் அதிகரித்தது. இந்த எண்களின் அடிப்படையில் தமிழ்நாடு நீடித்திட முடியாத நிதி நிலைமையில் இருப்பதாக வெள்ளை அறிக்கை வலியுறுத்திக் கூறுகிறது.

கேள்விக்கு உள்ளாக்கப்படாதது

Tamil Nadu State Finance Situation : White Paper and Budget Article By Venkatesh Athreya. Is Translated in Tamil By Prof. T. Chandraguru

மாநிலத்தின் நிதிப் பற்றாக்குறை குறித்த அளவுகளை முன்னிலைப்படுத்தி அதே முடிவையே வெள்ளை அறிக்கை எட்டியிருக்கிறது. இருந்த போதிலும் தேசிய அளவில் உள்ள நிதி பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை (FRBM) சட்டத்தின் தர்க்கம், அந்தச் சட்டம் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவில் இருக்க வேண்டிய நிதி பற்றாக்குறையின் அளவு குறித்து முன்வைக்கின்ற கட்டுப்பாடுகள் இந்த வெள்ளை அறிக்கையில் கேள்விக்கு உள்ளாக்கப்படவில்லை. தமிழகத்தில் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் கடன் வாங்குவதன் மூலம் அதிகரித்து வரும் வருவாய் பற்றாக்குறைகளுக்கு நிதியளிக்க வேண்டியிருந்தது. அதன் விளைவாக குறிப்பாக கடந்த ஐந்து ஆண்டுகளில் முழுமையான அடிப்படையிலும், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவிலும் தமிழக அரசின் ஒட்டுமொத்தக் கடன் வேகமாக அதிகரித்திருப்பதாக வெள்ளை அறிக்கை குறிப்பிடுகிறது. 2006-07, 2010-11க்கு இடையில் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அரசாங்கக் கடனுக்கு இருந்த விகிதம் நிலையாக இருந்தது. அதாவது 2006-07இல் இருந்த 18.37 சதவிகிதம் என்ற அளவிலிருந்து 2010-11இல் 16.68 சதவிகிதம் என்று குறைந்தது. 2011-12 முதல் 2015-16 வரையிலான காலகட்டத்திலும் அந்த விகிதம் நிலையாகவே இருந்தது. 2011-12 இல் 15.36 சதவிகிதம் என்று குறைவாகவும், 2015-16இல் 17.94 சதவிகிதம் என்று அதிகமாகவும் இருந்தது. ஆனால் அதற்குப் பிறகு அந்த விகிதம் மிகக் கடுமையாக அதிகரித்துக் கொண்டே வந்துள்ளது. 2016-17இல் 20.83 சதவிகிதம், 2020-21க்கான திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் 24.98 சதவிகிதம், கடந்த பிப்ரவரியில் முந்தைய அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்ட 2021-22க்கான இடைக்கால பட்ஜெட் மதிப்பீடுகளின்படி 26.69 சதவிகிதம் என்று அது அதிகரித்துள்ளது.

வருவாய் வரவு குறைவு

2008-09இல் 13.35 சதவிகிதமாக இருந்த மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவில் மாநில அரசின் வருவாய் வரவு 2015-16இல் 11 சதவிகிதத்திற்கு கீழே சரிந்தது. அது 2020-21இல் 8.70 சதவிகிதம் என்ற அளவிற்கு மேலும் குறைந்து விட்டது. 2016-2021 காலகட்டத்தில் சராசரியாக அது பத்துசதவிகிதத்திற்கும் குறைவாகவே இருந்துள்ளது. மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவில் மாநிலத்தின் சொந்த வரிவருவாய் (SOTR) 2013-14ல் 8.4 சதவிகிதத்தில் இருந்து 2019-20இல் 5.8 சதவிகிதம்,2020-21இல் 5.4 சதவிகிதம் என்று குறைந்துள்ளதாக வெள்ளை அறிக்கை குறிப்பிடுகிறது.மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவில் வரி அல்லாத வருவாயும் குறைந்திருப்பதை வெள்ளை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. 2006 மற்றும் 2011க்கு இடையில் 1.02 சதவிகிதம் என்றிருந்த அந்தவிகிதம் 2011 மற்றும் 2016க்கு இடையில் 0.81 சதவிகிதம் எனவும், 2016 மற்றும் 2021க்குஇடையில் 0.71 சதவிகிதம் என்றும் குறைந்தது.

மாநில வருவாயின் மற்றொரு முக்கிய ஆதாரமாக மத்திய வரிகளில் இருந்து கிடைக்கின்ற மாநிலத்திற்கான பங்கு இருக்கிறது. 2006 மற்றும் 2011க்கு இடையில் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவில் கிட்டத்தட்ட 1.95 சதவிகிதமாக இருந்த அந்த மாநிலப் பங்கு 1.67 சதவிகிதமாக குறைந்துள்ளது. வருவாய் செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வந்திருக்கின்றன. 2006 முதல் 2021 வரையிலான ஒட்டுமொத்த காலத்திற்கும் ஆண்டிற்கு 12.71 சதவிகிதம் என்றிருந்த வருவாய் செலவினங்களின் வளர்ச்சி விகிதம் வருவாய் வரவில் இருந்த 9.92 சதவிகித வளர்ச்சியை விடக் கூடுதலாகவே இருந்துள்ளது. விளைவாக மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவில் வருவாய் பற்றாக்குறையின் விகிதம் அதிகரித்தது.

செஸ், கூடுதல் கட்டண விகிதம் அதிகரிப்பு

இந்திய அரசால் விதிக்கப்படும் செஸ் மற்றும் கூடுதல் கட்டணங்களின் விகிதம் மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாதது என்பதை வெள்ளை அறிக்கை மிகச் சரியாகவே சுட்டிக் காட்டுகிறது. 2011-12இல் 10.4சதவிகிதமாக இருந்த செஸ் மற்றும் கூடுதல்கட்டண விகிதம் 2019-20-க்கான திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் 20.2 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இந்த செஸ் மற்றும் கூடுதல் கட்டணங்கள் மாநிலங்களுடன் பகிர்ந்துகொள்ள முடியாதவையாகும். தமிழ்நாட்டுக்கான மத்திய பங்களிப்பில் மானிய உதவியின் பங்கு அதிகரித்து வருவதையும், அது நிதி மற்றும் கொள்கை குறித்து மாநில அரசின் தன்னாட்சியை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் செயல்முறையாக இருப்பதுகுறித்தும் வெள்ளை அறிக்கை கவனத்தைஈர்க்கிறது. மாநில அரசுக்குச் செலுத்தப்பட வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டை ஒன்றிய அரசு செலுத்தத் தவறியிருப்பது பற்றியும் வெள்ளை அறிக்கை குறிப்பிடுகிறது.

2008-09இல் ஏற்பட்ட உலகளாவிய நிதிநெருக்கடி மற்றும் கோவிட் தொற்றுநோய் பற்றி உள்ள குறிப்புகளைச் சுட்டிக்காட்டுவதன் மூலம் தேசிய மற்றும் சர்வதேச காரணிகளும் கூட மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாக வெள்ளை அறிக்கை குறிப்பிடுகிறது. ‘தேசிய அளவில் 2016ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையிலிருந்து பொருளாதாரம் வீழ்ச்சியடையத் துவங்கியது. அவசர அவசரமாக ஜிஎஸ்டியை ஏற்றுக் கொண்டதால் அந்த வீழ்ச்சி மேலும் அதிகரித்தது…’ என்று மிகச்சரியாக வெள்ளை அறிக்கை கூறுகிறது என்றாலும் அது அதிக ஆதாரங்களை வழங்கிடாமல் ‘நிதி ஒழுக்கம் மற்றும் நிர்வாகத்தின் போதாமை எந்தவித சந்தேகத்திற்கும் இடமின்றி, இந்தியாவின் பிற பணக்கார மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, நமது பொருளாதார மற்றும் வளர்ச்சிவீழ்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது’ என்று முடிகிறது. மேலும் ‘இந்த அறிக்கையில் வழங்கப்பட்ட தரவுகளில் இருந்து நமது தற்போதைய குறிப்பாககடந்த ஏழு ஆண்டுகளில் உருவாகியிருக்கும் பிரச்சனைகளில் பெரும்பாலானவை சரியான நிர்வாகத்தின் போதாமையின் விளைவாகவே இருப்பது தெளிவாகிறது’ என்றும் அறிக்கை குறிப்பிடுகிறது.
புதிய தாராளமய அழுத்தங்களை எதிர்க்க வேண்டும்

‘இனிமேலும் வழக்கம் போல் நம்மால் தொடர முடியாது, கடன் மற்றும் வட்டி செலவுகளை அதிகரிக்கும் மோசமான சுழற்சியிலிருந்து நாம் வெளியேற வேண்டுமானால் அடிப்படையில் நமது அணுகுமுறை மாற வேண்டும். மறுபுறத்தில் இது ஒரு தலைமுறையில் சீர்திருத்தங்களைச் செய்வதற்கு கிடைத்துள்ள வாய்ப்பாகவும் உள்ளது. பொறுப்புள்ள அரசாங்கத்தால் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே பல சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்’ என்று வெள்ளை அறிக்கை அறிவிக்கின்றது.

Tamil Nadu State Finance Situation : White Paper and Budget Article By Venkatesh Athreya. Is Translated in Tamil By Prof. T. Chandraguru

வெள்ளை அறிக்கையில் உள்ள இந்த அறிவிப்பு மிக எளிதில் தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம். பெருநிறுவன ஊடகங்களிடம் அதிரடியான புதிய தாராளவாத சீர்திருத்தங்களுக்கான அழைப்பு இந்த வெள்ளை அறிக்கையில் இருப்பதாக முன்னிறுத்துகின்ற ஒருங்கிணைந்த முயற்சி இருந்தது. அவர்களுடைய பல்லவி கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். தமிழ்நாட்டின் மாநில நிதி நிலைமை குறித்து கிடைக்கக்கூடிய தகவல்களை ஒருங்கிணைப்பதில் வெள்ளை அறிக்கை பயனுள்ள பணியைச் செய்திருக்கிறது. வெளிப்படைத்தன்மைக்கான அதன் அர்ப்பணிப்பு, தற்போது உள்ள பிரச்சனைகள் குறித்து பொது விவாதத்தை ஊக்குவிப்பதில் அதற்கிருக்கும் விருப்பம் போன்றவை உண்மையில் பாராட்டத்தக்கவையாகும். இருந்தபோதிலும் அடையாளம் காணப்பட்டிருக்கும் பிரச்சனைகளை எவ்வாறு கையாள்வது என்பதில் தெளிவான, திட்டவட்டமான பரிந்துரைகளை முன்வைக்காமல் இந்த வெள்ளை அறிக்கை தவிர்த்திருப்பதை எவராலும் உணர முடியும். நிதி அடிப்படைவாதமும், நிதி பற்றாக்குறையைக் குறைப்பதற்கான புதிய தாராள மனப்பான்மையும் அதில் இருப்பதாகவே தெரிகிறது.இந்த வெள்ளை அறிக்கை நிதிபொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை சட்டம் குறித்து விமர்சனப்பூர்வமான அணுகுமுறையைக் கொண்டிருக்கவில்லை.

மாநில அரசுகளின் நிதி அதிகாரங்களைக் கட்டுப்படுத்த முயலும் ஒன்றியஅரசின் நகர்வுகள் மீது கூர்மையான விமர்சனத்தை அறிக்கை முன்வைக்கவில்லை. ஒன்றிய அரசின் இது போன்ற சில நகர்வுகளை மாற்றியமைக்கும் வகையில் மாநில நிதியை மேம்படுத்துவதில் ஒத்த எண்ணம் கொண்ட மாநில அரசுகளுடனான கூட்டுநடவடிக்கைகளுக்கான திறன், சாத்தியக்கூறுகள் போன்றவற்றை இந்த அறிக்கை முன்னிறுத்திடவில்லை. மாநில, ஒன்றியஅரசுகளால் பெருநிறுவனத் துறைக்கு வழங்கப்பட்டுள்ள ஏராளமான சலுகைகளை மதிப்பீடு செய்கின்ற பொறுப்பை வெள்ளை அறிக்கை ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும் பெருநிறுவனங்களின் அனுமானிக்கப்பட்ட மற்றும் உண்மையான மதிப்பு, அவற்றின் முதலீடுகளுக்காகஅளிக்கப்பட்டுள்ள ஊக்கத்தொகை குறித்து மக்களுக்குத் தெரிவிக்கும் வகையில் வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை. பெருநிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த சலுகைகள் நிச்சயமாக மாநில நிதி நிலைமை மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியே இருக்கின்றன!

எதிர்வினை பற்றி…

கேரளாவில் உள்ள இடது ஜனநாயக முன்னணி அரசால் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டுள்ள ஊழலை ஒழிப்பது, தூய்மையான நிர்வாகம், போதுமான தொழில்நுட்பம், சந்தைப்படுத்தலுக்கான உதவிகளை அளிப்பது போன்ற நடவடிக்கைகளின் மூலம் மாநில பொதுத்துறையில் இழப்பை உருவாக்கி வருகின்ற தொழிற்சாலைகளை மீட்டெடுப்பதற்கான சாத்தியம் இந்த வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. வெள்ளை அறிக்கையில் அடையாளம் காணப்பட்டிருக்கும் சில சிக்கல்களைக் கையாளும் போது கலப்பு மானியக் கொள்கை மற்றும் சமூக நோக்கங்களைக் கருத்தில் கொண்டு வணிக லாபத்தின் அடிப்படையில் மட்டுமே பொதுத்துறை நிறுவனங்களை மதிப்பீடு செய்யமுடியாது என்பதை அங்கீகரிப்பது என்பவைகுறித்து மாநில அரசு மேற்கொள்ளப் போகும் எதிர்வினை பற்றியும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும். அரசாங்கத்தின் கடன் மற்றும் வருவாய்பற்றாக்குறை குறித்த பிரச்சனைகள் பரந்தகண்ணோட்டத்தில் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

வெள்ளை அறிக்கையில் உள்ள எண்களைப் பார்க்கும் ஒருவர் 2020-2021க்கான புள்ளிவிவரங்கள் மட்டுமே (குறைந்த அளவில் 2019-20க்கான எண்கள்) முந்தைய ஆண்டுகளுக்கான எண்களுடன் பொருந்தவில்லை என்பதைக் காண முடியும். நிதி பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை (FRBM) சட்டத்தின்அடிப்படையில் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடனுக்கான விகிதத்தை தனித்துப் பார்க்க முடியாது. நாட்டின் செல்வத்தை உற்பத்தி செய்யும் உழைக்கும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவைப்படும் பொதுச் செலவுகளுக்கு பணக்காரர்களிடமிருந்து வளங்கள் திரட்டப்பட வேண்டும். ஆனால் அந்த வளத்தில் மிகச் சிறிய பகுதியை மட்டுமே தங்களுடைய ஊதியம் மற்றும் வருமானமாகப் பெற்று வருகின்ற உழைக்கும் மக்கள் கணிசமான மறைமுக வரிகளைச் செலுத்துபவர்களாகவும் உள்ளனர். ஒன்றியம் மற்றும் மாநிலங்களுக்கிடையிலான நிதி உறவுகளின் தன்மையால் மாநில அரசுகள் பெரிதும் கட்டுப்படுத்தப்படுகின்றன. நிதி பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை சட்டம் போன்ற கட்டுப்பாட்டுச் சட்டங்களாலேயே அவை கட்டுப்படுத்தப்படுகின்றன. இதுபோன்ற யதார்த்தங்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றாலும் கண்டிப்பாக சரணடைந்து விடத் தேவையில்லை. நியாயமற்ற, சமமற்ற விநியோகத்திற்கு எதிராக மக்களை அணிதிரட்டும் பணியையும் மறந்து விடக் கூடாது!

தமிழ்நாடு பட்ஜெட்

பழனிவேல் தியாகராஜன் ஆகஸ்ட் 13 அன்று மாநில பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். அது நடப்பு நிதியாண்டின் மீதமுள்ள மாதங்களுக்கு இருப்பதைத் தக்க வைத்துக் கொள்கின்ற நடவடிக்கையாகவே இருந்தது. வரிச்சுமையை அதிகரிக்க வேண்டும் என்ற கடுமையான புதிய தாராளவாத கோரிக்கைகளுக்கு அடிபணியாதது, அனைத்து சமூகநல நடவடிக்கைகளுக்கும் எதிரானதாக உள்ள தாராளவாத சாப வார்த்தையான ‘ஜனரஞ்சகத்திற்கு’ முற்றுப்புள்ளி வைத்திருப்பது என்று அது குறிப்பிடத்தக்க பட்ஜெட்டாகவே இருக்கிறது. பெட்ரோல் மீதான மாநில வரிகளைக் குறைத்ததன் மூலம் பெட்ரோல் விலையைலிட்டருக்கு மூன்று ரூபாய் குறைத்திருப்பது பட்ஜெட்டின் மிகவும் முக்கியமான அம்சமாகும். நிதிச் சிக்கல்களை அரசு எதிர்கொண்டு வரும் நிலைமையில் இது மிகவும் தைரியமான நடவடிக்கையாகும். இந்தநடவடிக்கை மக்களுக்குத் தேவையான நிவாரணத்தை அளிக்கும். முக்கியமான பிரச்சனையில் ஒன்றிய அரசை அது பின்னுக்குத் தள்ளும்.இதற்கு அப்பால் வெள்ளை அறிக்கையில் எழுப்பப்பட்ட பிரச்சனைகளை ஆராயும்சில குழுக்களை உருவாக்குவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அடிப்படையில் பாதி ஆண்டிற்கானதாக இருக்கின்ற இந்தவரவு செலவுத் திட்டத்தில் இன்னும் கூடுதலாகச் செய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நிச்சயம் நிதியமைச்சர் உணர்ந்திருக்க மாட்டார்.

விவசாயம் மற்றும் அது சார்ந்த நடவடிக்கைகளுக்காக தனியாக முன்வைக்கப்பட்டிருக்கும் வரவு செலவுத் திட்டத்தில் நெல், கரும்பிற்கான குறைந்தபட்ச ஆதார விலையில் அறிவிக்கப்பட்டுள்ள மிகச் சிறிய அளவிலான அதிகரிப்பு, அமைச்சகத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விவசாயிகளின் நலனுக்கான பல பரிந்துரைகள் கவனிக்கப்படாமை ஏமாற்றத்தையே அளிக்கின்றன. கிராமப்புறப் பொருளாதாரம் நெருக்கடியில் இருக்கும் இந்த நேரத்தில் விவசாயக் கூலித்தொழிலாளர்களுக்கு ஆதரவான எந்தவொரு குறிப்பு அல்லது நடவடிக்கைகள் வேளாண் பட்ஜெட்டில் இல்லாதது ஏமாற்றமே அளிக்கின்றது.

கட்டுரையாளர் : பேரா.வெங்கடேஷ் ஆத்ரேயா
பீப்பிள்ஸ் டெமாக்ரசி 2021 ஆகஸ்ட் 22
தமிழில்: தா.சந்திரகுரு