2022-23ஆம் ஆண்டு தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை ஓர் பகுப்பாய்வு - பேரா. பு. அன்பழகன் An Analysis of the Tamil Nadu Financial Statement for the year 2022-23 by Prof. P. Anbalagan

2022-23ஆம் ஆண்டு தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை ஓர் பகுப்பாய்வு – பேரா. பு. அன்பழகன்

தமிழ்நாட்டில் 2021ஆம் ஆண்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபின் திரு மு..ஸ்டாலின் தலைமையிலான அரசின் முழு முதல் நிதிநிலை அறிக்கையினை நிதிஅமைச்சர் திரு.பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அவர்களால் 18.3.2022அன்று 2022-23ஆம் ஆண்டிற்கானதை தாக்கல் செய்தார். இந்த நிதிநிலை அறிக்கையின் முக்கிய நோக்கங்களாக முதன்மைத் துறையான வேளாண்மை வளர்ச்சியினை அதிகரித்தல், சமூகப் பாதுகாப்பினை வலுப்படுத்துதல், இளைஞர்களின் வேலைவாய்ப்பு திறனை அதிகரித்தல், தொழில்முனைவோர்களை ஊக்குவித்தல், மகளிர் முன்னேற்றம், விளிம்பு நிலையில் உள்ளோரின் சமூகபொருளாதாரத் தளங்களில் முன்னேற்றம், உள்ளடக்கிய வளர்சியினை உறுதி செய்தல், வருமை ஒழிப்பு, ஆளுகையினை மேம்படுத்துதல், உள்கட்டமைப்புகளை வலுப்படுத்துதல் மற்றும் சுற்றுப்புற சூழலை உறுதிபடுத்துதல் ஆகும்

2022-23ஆம் ஆண்டு நிதிதிலை அறிக்கையின்படி மொத்த வருவாய் ரூ.2.36 லட்சம் கோடியாகவும் மொத்த செலவு ரூ.3.33 லட்சம் கோடியாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. வருவாயினைப் பொருத்தவரையில் மாநில வரிவருவாயின் பங்கு அதிக அளவாக 40 விழுக்காடும் (இதில் நான்கில் மூன்று பங்கு விற்பனை வரி மூலம் பெறப்படுகிறது). மிகக் குறைவாக 4 விழுக்காடு வரியல்லா வருவாய் மூலம் பெறப்படுகிறது. மத்திய அரசின் நிதிநல்கை மற்றும் வரி பங்காக 20 விழுக்காடு பெறப்படுகிறது. செலவினைப் பொருத்த மட்டில் அதிபட்சமாக மூலதன செலவிற்காக ரூ.43043 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கட்டமைபினை மேம்படுத்த சாலைகள் மற்றும் பாலங்களுக்கு ரூ.16311 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சமூக மேம்பாட்டிற்காக கல்வி சுகாதாரம் போன்றவைகளுக்கு ரூ.2055 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு இந்த நிதிநிலை அறிக்கையில் அரசு ஊழியர்களுக்கான ஊதியம், ஓய்வூதியம், ஓய்வூதிய பலனுக்காக மாநில வருவாயில் 30 விழுக்காடு செலவினை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அரசின் வருவாயில் ஊதியம், ஓய்வூதியம் மற்றும் வட்டி ஆகியவைகளுக்கு மாநில வருவாயில் 66 விழுக்காடு 2021-22ஆம் ஆண்டு செலவிட்டதாக தெரிகிறதுஇது மற்ற மாநிலங்களில் சராசரியாக 55 விழுக்காடு அளவிற்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. துறைவாரியான ஒதுக்கீட்டில் சுகாதாரத்துறைத் தவிற்று மற்ற துறைகளுக்கான ஒதுக்கீடு அதிகரித்துள்ளது. அதிக அளவாக தொழில்துறைக்கு கடந்த ஆண்டைவிட 51.2 விழுக்காடும் போக்குவரத்துதுறைக்கு 28.7 விழுக்காடும் நீர் ஆதாரம் 28.3 விழுக்காடும் கூடுதலாகப் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிதிஆண்டின் வருவாய் பற்றாக்குறை ரூ.7000 கோடி இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. நிதிபற்றாக்குறை 4.61 விழுக்காட்டிலிருந்து 3.80 விழுக்காடாக குறைய உள்ளது  இது அரசின் நிர்வாக திறனை வெளிப்படுத்துவதாக உள்ளது. நாட்டின் 15வது நிதிக்குழுவானது தமிழ்நாடு 2012-13ஆம் ஆண்டிற்குபின் வருவாய் உபரி மாநிலமாக இருந்தது வருவாய் பற்றாக்குறை மாநிலமாக மாறியுள்ளது என்று குறிப்பிடுகிறது. 2018-19ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.4 விழுக்காடாகும் (2013-14ஆம் ஆண்டு 0.18 விழுக்காடாக இருந்தது) இது பிற மாநிலங்களில் சராசரியாக 0.1 விழுக்காடாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  2021-22ஆம் ஆண்டு மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.85 விழுக்காடு என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது 2022-23ஆம் ஆண்டு 14.0 விழுக்காடாக அதிகரிக்கும் என எதிர்பார்கப்படுகிறது. இதுபோல் மாநிலத்தின் தலாவருமானம் ரூ.2.25 லட்சமாகும். பொருளாதார வளர்சியிலும் தலாவருமான அளவிலும் தமிழ்நாடு தேசிய அளவைக் காட்டிலும் கூடுதலாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

சமூக மேம்பாடு
சமூக மேம்பாட்டில் தமிழ்நாடு முன்னேடி மாநிலமாக உள்ளது. இதற்கு முக்கியக் காரணம் தமிழ்நாடு சமூகநலம் சார்ந்த திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்து அதற்கான நிதியினை பெருமளவில் தொடர்ந்து ஒதுக்கிவருவதாகும். சமூகநலம் மற்றும் மகளிர் மேம்பாட்டிற்கு மொத்தமாக ரூ.5922.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது இது கடந்த ஆண்டைவிட 5.8 விழுக்காடு அதிகமாகும். பல்வேறு ஒய்வூதியங்கள் மற்றும் சமூக பாதுகாப்பிற்கு ரூ.4816 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மகளிர் மேம்பாட்டிற்கு முக்கிய பங்கு வகிக்கும் சுய உதவிக்குழுக்களின் கடன் தள்ளுபடிக்காக ரூ.600 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பொது விநியோகத்தினால் ஏழை எளிய மக்கள் அதிக அளவில் பயன் அடைகின்றனர் இதற்காக உணவு மானியமாக ரூ.7500 கோடி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம்இனி மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதி திட்டமஎன மாற்றி அமைக்கப்பட்டு அதன்படி அரசு பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு பயின்று மேற்படிப்பினைத் தொடரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 நிதி உதவி செய்யப்படுகிறது. இதற்காக ரூ.698 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதர உதவி திட்டங்கள் தங்குதடையின்றி செயல்படுத்தப்படும் என உறுதி செய்யப்பட்டுளளது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்திற்கு ரூ.1949 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மேம்பாட்டிற்கு பல்வேறு திட்டங்களான தொழில் முனைவோராக்குதல், புதிய வீடுகள் கட்டுதல், உயர் கல்வி பயில கல்வி உதவித்தொகை, இலவச விடுதிகளின் கட்டமைப்பினை தரம் உயர்த்துதல் போன்ற முக்கிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுஇதுபோன்று பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டிற்கு உயர் கல்வி பயில உதவித்தொகை வழங்குதல் நடைமுறையில் உள்ள திட்டங்களை  தற்போதைய நிலைக்கு ஏற்ப மாற்றியமைத்தல் போன்றவைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள், சிறுபான்மையினர் நலன் காக்க பல முன்னெடுப்புகளை இந்த நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

மக்கள் நல்வாழ்வு
தமிழ்நாடு அரசு அனைவருக்கும் சுகாதாரம் அளிப்பதில் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் முன்னோடியாக உள்ளது. இத்துறைக்கு இந்த நிதிஆண்டில் ரூ.17901.73 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது இது கடந்த ஆண்டைவிட 12.2 விழுக்காடு குறைவாகும். கொரோனா பெருந்தொற்றினால் கடந்த ஆண்டு அதிக நிதி ஒதுக்கியிருந்த நிலையில் தற்போது இது கட்டுக்குள் வந்துள்ளதால் இதன் ஒதுக்கீடு கணிசமாக குறைந்துள்ளது. 19 மாவட்ட அரசு மருத்துவமனைகளை தரம் உயர்த்த ரூ.1019 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மனச்சிதைவினால் அன்மைக்காலமாக அதிக அளவில் மக்கள் பாதிப்படைகின்றனர் இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் என்ற அமைப்பினை உருவாக்க ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேசிய சுகாதார இயக்கம் (ரூ.1906 கோடி), டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம்  (ரூ.817 கோடி), முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் (ரூ. 1547 கோடி), அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை விரிவாக்கம் (ரூ.120 கோடி) போன்றவைகளை மேம்படுத்தவும் நடைமுறைபடுத்தவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

கல்வித் துறை
2022-23ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அதிக அளவாக கல்விக்கு ரூ.42565 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது இது கடந்த ஆண்டைவிட 13 விழுக்காடு அதிகமாகும். பள்ளிக் கல்விக்கு இந்த நிதி ஆண்டில் ரூ.36896 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்றினால் கல்வி கற்றலில் ஏற்பட்ட தடைகளை களைவதற்கு இல்லம் தேடிக் கல்விஎன்ற திட்டத்ததை 38 மாவட்டங்களில் 18 லட்சம் தன்னார்வலர்களைக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் 30 லட்சம் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். இதனை தொடர்ந்து செயல்படுத்த ரூ.200 கோடி இந்த நிதி ஆண்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 10 மாவட்டங்களில் நடைமுறைபடுத்தப்பட்ட முன்மாதிரிப் பள்ளிகள் மேலும் 15 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்த ரூ.125 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளிகளின் கட்டமைப்பை நவீனமாக்க ரூ.7000 கோடி ஒதுக்கீட்டுடன் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்துவக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் இதற்கு ரூ.1300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுநூலகங்களை மேம்படுத்த ரூ.36 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுமேலும் மாவட்டம் தொறும் புத்தக கண்காட்சி, இலக்கியத் திருவிழாக்கள் நடத்த ரூ.5.6 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நான் முதல்வன்என்ற திட்டத்தின் வழியாக பள்ளி, உயர்கல்வியில் திறனை மேம்படுத்தி வேலைவாய்ப்பு பெருக்கும் நோக்கத்தில் ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உயர் கல்வியில் தமிழ்நாடு முன்னேடியாக உள்ளது. தமிழ்நாட்டில் உயர் கல்வி மேம்பட ஆராய்ச்சி திறன் மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளித்துள்ளது. உயர்கல்வித் துறைக்கு ரூ.5668 கோடி இந்த நிதி ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உயர் கல்வியினை மேம்படுத்த அறிவு சார் நகரம்ஒன்று உருவாக்கப்பட உள்ளது. ரூ.1000 கோடி செலவில் உயர் கல்வி நிலையங்களில் கட்டமைப்பை மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுஅரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் பயின்று புகழ்பெற்ற உயர்கல்வி நிலையங்களில் சேரும் மாணவர்களின் கல்விச் செலவினை அரசே ஏற்றுக் கொள்கிறது

நகர்புற மேம்பாடு
2022-23ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் கல்விக்கு அடுத்து அதிக நிதி ஒதுக்கீடு நகர்புற மேம்பாட்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நகர்புற மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ.29138 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது இது கடந்த ஆண்டைவிட 11.7 விழுக்காடு அதிகமாகும். நகர்புற மேம்பாட்டிற்கான ஒன்றிய அரசின் தூய்மை இந்தியா திட்டம், அம்ருத் திட்டம் நடைமுறைபடுத்த மாநில அரசின் பங்காக ரூ.4299 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட ஆறு மாநகராட்சிகளின் உள்கட்டமைப்பை உருவாக்க ரூ.60 கோடியும் 28 புதியதாக உருவாக்கப்பட்ட நகராட்சிகளுக்கு ரூ.56 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கலைஞரின் நகர்புற மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னையில் எற்படும் வெள்ள பாதிப்புகளை மனதில் கொண்டு இதனை தடுக்கும் பொருட்டு ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுளளது. வானிலை தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக ரூ.10 கோடி ஒதுக்கபடப்டுள்ளது. இதுபோன்று குடிநீர் வழங்கள், நகர்புற போக்குவரத்து, நகர்புற வீட்டுவசதி போன்றவைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

ஊரக மேம்பாடு
ஊரக வளர்ச்சிக்கா இந்த 2022-23ஆம் நிதி ஆண்டில் ரூ.26647 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது இது கடந்த ஆண்டைவிட 9.8 விழுக்காடு அதிகமாகும்பிரதமரின் வீட்டுவசதி திட்டத்திற்கு ரூ.4848 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கிராமப்புற பன்முக வளர்ச்சியினை உறுதி செய்யும் திட்டமான அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்-2 நடைமுறைபடுத்த ரூ.1455 கோடி ஒதுக்கப்பட்டு 2657 கிராமங்களில் நடைமுறைபடுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டமும் சேர்த்து நடைமுறைபடுத்தப்படும் என்கிறது. பிரதமரின் கிராமப்புற சாலைத் திட்டம்-3க்கு ரூ.1012 கோடி செலவில் 1280 கி.மீ நீளமுள்ள 280 சாலைகள், 54 பாலங்கள் அமைக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் பெரும் வேலைவாய்ப்பினை உருவாக்கித்தந்த மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்பு உறுதித் திட்டத்திற்கு ரூ.2800 கோடியும், தேசிய ஊரக வாழ்வாதாரத் திட்டத்திற்கு ரூ.636 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

போக்குவரத்து கட்டமைப்பு
இந்தியாவிலேயே பொதுத்துறை போக்குவரத்தை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. 2022-23ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் இதற்காக ரூ.5376 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது இது கடந்த ஆண்டைவிட 28.7 விழுக்காடு அதிகமாகும். கடந்த பத்தாண்டுகளாக புறக்கணிகப்பட்ட 20.6 கி.மீ நீளமுள்ள மதுரவாயில்சென்னை துறைமுகம் உயர்மட்டச் சாலையை இரட்டை அடுக்கு உயர்மட்ட சாலையாக அமைக்க ரூ.5770 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காட்டுப்பாக்கம் சந்திப்பில் மேம்பாலம், சென்னை கிழக்கு கடற்கரை சாலையை ஆறுவழியாக விரிவாக்கம், வெள்ள காலங்களில் பாதிக்கப்பட்ட பாலங்களை உயர்மட்ட பாலங்களாக மாற்றுதல், சுற்றுச்சாலை திட்டம் போன்றவைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைதுறைக்காக இந்த நிதிநிலை அறிக்கையில் ரூ.18219 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது இது கடந்த ஆண்டைவிட 12.4 விழுக்காடு அதிகமாகும்மகளிர் மேம்பாடு அடைய கொண்டுவரப்பட்ட மகளிருக்கான இலவச பேருந்து பயணத்தினால் இவர்களில் பங்கு மொத்த பயணிகளில் 60 விழுக்காடாக உயர்துள்ளது. எனவே இந்த நிதி ஆண்டில் இதற்கான மானியம் ரூ.1520  கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நகர்புறங்களில் நவீன பேருந்து வசதிகளை வழங்க புதிய பேருந்துகள் (2213 பிஎஸ்-5 ரகம் மற்றும் 500 மின்சார பேருந்து) வாங்கப்பட உள்ளது

வேளாண்மை
இந்தியாவில் வேளாண்மைக்காகன தனி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும் மாநிலங்களில் மூன்றில் தமிழ்நாடு இடம்பெற்றுள்ளது. வேளாண்மை மேம்பாட்டிற்கு ரூ.15687 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது இது கடந்த ஆண்டைவிட 4.0 விழுக்காடு அதிகமாகும்பயிர்கடன் தள்ளுபடிக்காக ரூ.2531 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு வேளாண் கடன் வழங்க ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நீர் ஆதாரங்களை உருவாக்குதல் மற்றும் மேம்படுத்துதலுக்காக ரூ.7338 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நீர் மேலாண்மையினை மேம்படுத்த ரூ.2787 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக காவிரி வடிநிலப் பகுதியில் பாசன வசதியினை மேம்படுத்த ரூ.3384 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுளளது.

64 பெரிய அணைகளை புனரமைக்க ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக நீர்வளத் துறைக்கு ரூ.7338.36 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கால்நடைகளை பாதுகாக்க வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்என்னும் புதிய திட்டம் துவக்கப்பட்டுள்ளது இதற்கு ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வேளாண்மைக்கான தனி நிதிநிலை அறிக்கையின்படி வேளாண் விசாயிகளின் வருமானத்தை உயர்துவதற்கான பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது. இந்த தனி அறிக்கையின்படி வேளண்துறைக்கு ரூ.33007 கோடியும் பயிர்க் காப்பீட்டு மானியத்திற்கு ரூ.2339 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட கலைஞரின் அணைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் 3204 கிராமங்களில் நடைமுறைபடுத்த ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு, மானாவாரி நில மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.132 கோடி, பயிர் காப்பீட்டு திட்டத்திற்கு மாநில அரசின் பங்காக ரூ.2339 கோடி, இயற்கை வேளாண்மை சாகுபடி திட்டத்திற்கு ரூ.71 கோடி, கரும்பு சாகுபடிக்கு ரூ.10 கோடி, சூரிய பம்பு செட் திட்டத்திற்கு ரூ.65.34 கோடி, உழவர் சந்தைகளை சீரமைக்க ரூ.10 கோடி, மதிப்பு கூட்டல் மற்றும் சந்தைப் படுத்துதலுக்கு ரூ.95 கோடி என பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இலவச மின்சாரம், நீர் மேம்பாடு, வேளாண்சார் தொழில்கள், வேளாண் கடன், மானாவாரி மேம்பாட்டு திட்டம், ஊரக சந்தை கட்டமைப்பு, சிறுதானிய  உற்பத்தி, டிஜிட்டல் விவாசாயம் போன்றவைகளுக்கு இந்த நிதிநிலை அறிக்கையில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது

தொழில்துறை
தொழில்துறைக்கு ரூ.4179 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது இது கடந்த ஆண்டைவிட 51.2 விழுக்காடு அதிகமாகும். குறு நிறுவனங்களை மேம்படுத்த குறு நிறுவனக்குழும மேம்பாட்டுத் திட்டம்நடைமுறைபடுத்த ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேளாண்சார் தொழிலான கயிறு உற்பத்தி தொழிலை மேம்படுத்த தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாடு நிறுவனம்ரூ.5 கோடியில் கோயம்புத்தூரில் அமைக்கப்பட உள்ளது. குறு சிறு நடுத்தரத் தொழிலினை மேம்படுத்த மானியம் மற்றும் கடன் உத்தரவாதத்திற்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் ஏற்றுமதியினை ஊக்குவிக்க கட்டமைப்புகளை உருவாக்க ரூ.100 ஒதுக்கீடு, புதிய தொழில் பூங்காக்கள் அமைத்தல், சரக்கு வாகன முனையம், மின்னணுப் பொருட்கள் தயாரித்தல், புத்தொழில் மையங்கள் உருவாக்குதல் போன்றவைகள் இந்த நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்களாகும். புதிய அறிவிப்பாக ரூ.54.61 கோடியில் தமிழ்நாடு தொழில்நுட்ப மையம்வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை ஒருங்கிணைந்து செயல்படுத்த சென்னையில் உருவாக்கப்பட உள்ளது. எரிசக்தி துறைக்கு ரூ.19298 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

சுற்றுப்புறச் சுழல்
சுற்றுப்புற சுழலை மேம்படுத்த தமிழ்நாடு பசுமைக் காலநிலை மாற்ற நிதியம்”  உருவாக்கப்பட்டுள்ளதுசுற்றுச்சூழல் சுற்றுலாவை மேம்படுத்த சேத்துமடை, மணவணூர், தடியான் குடிசை, ஏலகிரி ஆகியவைகளை தனியார் பங்களிப்புடன் மேம்படுத்தப்பட உள்ளது. சுற்றுப்புறச் சூழல் மேம்பாட்டிற்கு ரூ.849.21 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

அறைகூவல்கள்
சரக்கு மற்றும் சேவை வரியினால் ஏற்படும் இழப்புகளைச் சரிசெய்ய ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு வழங்கும் இழப்பீட்டு காலவரையறை 30.06.2022அன்று முடிவடைய உள்ளது இதனால் தமிழ்நாட்டிற்காக வரவேண்டிய சுமார் ரூ.2000 கோடி நிதி இழப்பினை எதிர்கொள்ள வேண்டியுள்ளளது. மாநிலத்தின் பல்வேறு வரிகள் சரக்கு மற்றும் சேவை வரிக்கு மற்றப்பட்டதால் மாநிலம் வரியின் மூலம் வருமானத்தைப் பெருக்க குறைந்த வாய்புகளே உள்ளது. மதுபானங்கள் மீதான வரியின் மூலம் அதிக வரிவருவாயினை தமிழ்நாடு பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது (ஆண்டுக்கு சராசரியாக ரூ.3000 கோடி). 

மத்திய அரசு நிதிக்குழுவின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு கிடைக்கவேண்டிய நிதிப்பகிர்வு முழு அளவில் வழங்கப்படவில்லை. மாநிலக் கடன்மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 26.29 விழுக்காடாக உள்ளது. பண மதிப்பில் மாநிலத்தின் மொத்தக் கடன் ரூ.5.77 கோடியாகும்தமிழ்நாடு அரசு வருவாய் செலவுகளை பத்திரங்களை வெளியிடுவதன் வழியாக நிதி திரட்டப்பட்டு எதிர்கொள்கிறது. இந்திய மாநிலங்களிலே அதிகமாக பத்திரங்கள் வெளியிடுவதன் வழியாக வருவாய் திரட்டப்படும்; மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. 2022ஆம் ஆண்டு இதன் மூலம் ரூ.75400 கோடி திரட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு பெறப்படும் கடனுக்கு அதன் வருவாயில் 21 விழுக்காடு அளவிற்கு வட்டியினை 2021-22ஆம் ஆண்டு செலுத்தியது என்பது குறிப்பிடதக்கது (2011-12ஆம் ஆண்டு இது 10 விழுக்காடாக இருந்தது). 

தொடர்ந்து அதிகரித்து வரும் கடனை தீர்பதற்கான நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்க வேண்டும். தமிழ்நாட்டின் சொந்த வரிமாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதமானது தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனை அதிகரிக்க அரசு பல முயற்சிகளை எடுக்கவேண்டும். இதுபோல் வரியல்லா வருவாய் மிகவும் குறைவாக உள்ளது எனவே அரசினால் அளிக்கப்படும் சேவைகளுக்கான கட்டணங்களை உயர்த்த வேண்டும். அரசின் கடன் அளிபிற்கான வட்டியினை அதிகரித்தல், முத்திரைத்தாள் கட்டணத்தை உயர்த்துதல், பத்திரப் பதிவு கட்டணத்தை அதிகரித்தல் போன்றவைகள் வழியாக வரியல்லா வருவாய் அதிகரிக்கும்

நிர்வாக சீர்திருத்தங்களை அரசு அனைத்து மட்டங்களிலும் நடைமுறைபடுத்தப்பட வேண்டும். நிதி வளங்களை மேம்படுத்த அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும். தமிழ்நாடு மூலதன செலவிற்காக அதிக அளவில் நிதிஒதுக்கீடு செய்தாலும் இதனை உயர்த்துவதற்கான வாய்புகள் குறைவாகவே உள்ளது. சமுதாயத்தில் விளிம்பு நிலையில் உள்ள மக்கள் பயனடையும் வகையில் மானியங்கள் வழங்கப்படுவது வரவேற்கத்தக்கது அதேசமயம் அவர்களை அடையாளம் காணவதற்கான வழிமுறைகளை கடுமையாக கடைபிடிக்கவேண்டும். தமிழ்நாடு அரசின் மிக முக்கிய நோக்கமாக கொரோனா பொருந்தொற்றினால் எற்பட்ட பொருளாதாரத் தேக்க நிலையினை இயல்பு நிலைக்கு கொண்டுவரவேண்டிய கட்டாயம் தற்போது அரசுக்கு உள்ளது.