நூல் அறிமுகம்: வெள்ளி மயிலிறகு – பெரணமல்லூர் சேகரன்
ஆசிரியர்: டாக்டர் சிரி
தமிழில்: ஏ.ஆர்.பாலசுப்பிரமணியம்
பக்கங்கள்: 112
விலை: ₹110
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
புத்தகம் வாங்க இங்கே கிளிக் செய்யவும்: https://thamizhbooks.com/product/velli-mayiliragu/
இன்றைய உலகம் உயர்தொழில்நுட்ப உலகமாக உள்ளது. சிறுவர்கள் கைகளிலும் திறன்பேசிகள் தவழும் காலமிது. இந்நிலையில் வாசிப்பை வசப்படுத்த இளம் பிராயத்தில் இருந்தே துவங்க வேண்டியுள்ளது.
‘ஒரு ஊர்ல ஒரு ராஜா’ எனத் துவங்கி கதை சொல்ல வீடுகளில் மூத்த குடிமக்கள் குறிப்பாக பாட்டிகள் இல்லை. ஒன்று முதியோர் இல்லத்தில் பாட்டிகள் இருக்கும் நிலை. இரண்டு தனியாகவே வாழும் நிலை. மூன்று அபூர்வமாக பாட்டியுடன் வாழும் வாய்ப்பிருந்தாலும் பாட்டி கதை சொல்லவும் குழந்தைகள் அதைக் கேட்கவும் தயாரில்லை.
தாங்க முடியாத புத்தகச் சுமை யுடன் பள்ளிக்குச் சென்று திரும்பும் குழந்தைகள் வீட்டுக்கு வந்ததும் வராததுமாக ட்யூஷன், பாட்டுக்கிளாஸ், டான்ஸ் கிளாஸ், இந்தி கிளாஸ், கராத்தே கிளாஸ் என ஏதேனும் சிலவற்றில் குழந்தைகளைச் சேர்த்துவிட்டு பெற்றோர்கள் குழந்தைகளைப் படுத்தும் பாடு சொல்லி மாளாது.
இந்நிலையில் குழந்தைகள் பாடப்புத்தகங்களைத் தவிர்த்து கதைகளை, பாடல்களை, கட்டுரைகளை உள்ளடக்கிய நூல்களை வாசிக்க வேண்டுமெனில் பெற்றோர்கள் அக்கறை காட்ட வேண்டியது அவசியம். ஆனால் வேலைக்குப் போகும் பெற்றோர்கள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் உழைப்புச் சுரண்டலில் உழன்று வீட்டுக்கு வந்தவுடன் ஓய்வும் உறக்கமுமே தழுவும் யதார்த்த நிலை. இவற்றையெல்லாம் மீறி குழந்தைகளுக்கு வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்த கடும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். “முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்”
வார விடுமுறை தினத்திலாவது இத்தகைய பணியை மேற்கொள்ளலாம்.
நூல்களை வாசிக்கக் கொடுக்கும்போது அவை கதைகளாகவும் பாடல்களாகவும் இருப்பதே உகந்தது. அத்தகைய கதைகளை உள்ளடக்கி வந்துள்ள நூல் வரிசையில் ‘வெள்ளி மயிலிறகு’ குறிப்பிடத் தக்க சிறுவர் இலக்கியம் எனின் மிகையன்று.
இந்நூலில் உள்ள 20 கதைகளும் சிறுவர்கள் ஆர்வமாகக் கேட்கவும் படிக்கவுமானவை. வாசிக்கக் கேட்பதும் வாசிப்பதும் சிறுவர்களின் அந்தந்த வயதைப் பொறுத்தது.
அறிவுரை சொன்னாலே பிடிக்காத சமுதாயமாக இன்றைய இளைஞர்கள் சமுதாயம் உள்ளது கண்கூடு. எனினும் அப்படியே இளைஞர்களின் போக்கிலேயே விட்டுவிடவும் முடியாது. எனவேதான் கதையைச் சொல்லி அதன் மூலம் இறுதியில் நீதியையோ அறிவுரையையோ சொல்லும்போது அது ஏற்கத்தக்கதாக அமைகிறது.
அத்தகைய கதைகளைக் கொண்ட நூலாக அமைந்துள்ளது ‘வெள்ளி மயிலிறகு’.
முதல் கதையையே நூலின் தலைப்பாக்கியுள்ளார் நூலாசிரியர். அத்தகைய முதல் கதையான ‘வெள்ளி மயிலிறகு’கதை மூலம் ஒருவர் மற்றவர்க்கு உதவி செய்து அதன்மூலம் மகிழ்ந்து வாழ்வதால் ஏற்படும் நன்மையை விலங்குகள் மற்றும் பறவைகள் மூலம் பசுமரத்தாணியாய் சிறுவர்கள் மத்தியில் பதிய வைக்கிறார்.
ஒரு சமூகம் முன்னேறவும் ஒரு குடும்பம் மகிழ்வுடன் வாழவும் உழைப்பு இன்றியமையாதது. அத்தகைய உழைப்பின் அவசியத்தை உணர்த்த வேண்டிய மன்னனே உழைப்பைப் பற்றிக் கவலைப்படவில்லையென்றால் அந்நாடு வளர்ச்சி காணாது. மன்னனையும் உணரச்செய்து மக்களையும் உணரச் செய்து முன்னேற்றம் கண்டதை ‘உண்மையான அரசன்’ கதை மூலம் அறிய முடிகிறது.
நேர்மை என்பது வாழ்வின் ஓர் அங்கம். அதை சிறுவயதிலிருந்தே நேசிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும். அதைத்தான் செய்துள்ளது ‘முத்துநிலவனின் நேர்மை’ எனும் கதை.
பிறக்கும்போதே திருடர்களாய் யாரும் பிறப்பதில்லை. சந்தர்ப்ப சூழ்நிலையால் திருடனாக மாறினாலும் திருடனின் தவறை திருடனையே உணரச் செய்து திருந்தி வாழச் செய்தல் குறிப்பிடத்தக்க முக்கிய சேவை. ‘மாறிய திருடன்’ எனும் கதை அதைச் செய்து காட்டியுள்ளது.
‘இடைவிடாத பயிற்சி’ மூலம் எண்ணியதை சாதிக்கலாம் என்பதையும், ‘பட்டாம்பூச்சிகள்’ மூலம் அன்பாக இருக்க வேண்டும் என்பதையும் கற்பித்துள்ளார் நூலாசிரியர்.
கல்வி, கலை எதுவாயினும் தொடர்ந்து கற்று வர வேண்டும். அதன்மூலம் அவற்றில் சிறந்து விளங்க முடியும் என்பதை ‘உண்மையான சிற்பி’ கதை உணர்த்துகிறது.
கழுதையானாலும் அதை மதிப்பவரிடத்தில் அது மகிழ்வுடன் உழைக்கிறது என்னும் கதை மூலம் பிறரை மதித்து நடக்க வேண்டும் என்னும் நல்ல விதைகளை விதைத்துள்ளது பாராட்டத் தக்கது.
ஏட்டுக் கல்வி மட்டுமல்லாமல் அனுபவக் கல்வி, வாழ்க்கைக் கல்வி போன்றவற்றை சிறுவர்கள் கற்க வேண்டும் என்பதை ‘வெற்றிச் செல்வன் கற்ற பாடம்’ மூலம் கற்பிக்கிறார் நூலாசிரியர்.
‘கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்’ என்பது முதுமொழி. அதை ‘கண்ணுக்குத் தெரியாத உண்மை’ என்ற கதையில் போதிக்கிறார் நூலாசிரியர்.
‘நல்லதை மட்டும் கேள். தீயதாக இருந்தால் ஒரு காதில் வாங்கி மறு காதில் விட்டுவிடு’ என்பர் பெரியோர். அதைத்தான் சொல்கிறது ‘கடத்தி-கடத்தி அல்லாதது’ எனும் கதை.
மக்கள் எண்ணங்களை அறிய மாறுவேடத்தில் அரசர்கள் நகர்வலம் வருவது வழக்கம். சில கதைகளில் இது கையாளப்பட்டுள்ளது. அதில் ஒரு கதைதான் ‘அரசர்-அமைச்சர்’. அதே போன்றுதான் அரசனாக இருந்தாலும் குடியானவன் கூறிய அறிவுரையால் சாப்பாட்டுப் பிரியனாய் இருந்த அரசன் மக்கள் பிரியனாய் மாறியதை ஒரு கதையின் மூலம் உணர்த்தியுள்ளார் நூலாசிரியர்.
‘சிவநேசன் சத்திரம்’ எனும் கதை ‘உழைப்புக்கேற்ற ஊதியம்’, ‘பணிச்சுமைக்கேற்ற பணியாளர்’ அவசியம் என்னும் தொழிற்சங்க பாலபாடத்தைப் போதிக்கிறது.
இப்படியாக இருபது கதைகளும் சிறுவர்களுக்கான கதைகளாக வடித்திருந்தாலும் பெரியவர்களும் மனதிற் கொள்ள வேண்டிய கதைகளாகவே உள்ளன.
டாக்டர் சிரியின் தெலுங்கு மொழியிலான இந்நூலை ஏ.ஆர். பாலசுப்ரமணியம் சிறப்பாக மொழிபெயர்த்து வழங்கியுள்ளார். ஒவ்வொரு கதைக்கும் படங்களை இடம் பெறச் செய்து அழகிய முறையில் அச்சிட்டு வழங்கியுள்ள பாரதி புத்தகாலயம் பாராட்டுக்குரியது. இந்நூலை வாங்கி சிறுவர்களுக்கு வழங்குவதும் அவர்களை வாசிக்கச் செய்வதும் இந்நூல் வீட்டு நூலகத்தில் இடம் பெறச் செய்வதும் பெற்றோரின் தலையாய கடமை.