Eththanai Pinangalai Puthaippathu Poem By Adhith Sakthivel ஆதித் சக்திவேலின் எத்தனைப் பிணங்களைப் புதைப்பது? கவிதை

எத்தனைப் பிணங்களைப் புதைப்பது? கவிதை – ஆதித் சக்திவேல்




குளிர் காலம்
அதற்குரிய குளிர் இல்லாவிடினும்
அது குளிர் காலம் தான்

பக்கவாட்டில் போர்த்திக்கொண்ட சிற்றுந்தின்
பின் இருக்கைகள் ஒன்றில் நான்
முன் இருக்கைகள் பல யாருமின்றிப் பயணித்தன
இன்னும் தார் அணிந்து கொள்ளா
கிராமத்துச் சாலைகள்
நிர்வாணமாய்
தம் மேடு பள்ளங்களை மறைக்க முடியாமல்

விதைக்கப்பட்ட எல்லைக் கற்களுடன்
நாற்புறமும் வயல்கள்
கான்கிரீட் விளைச்சலுக்குத் தயாரானபடி
உயர்ந்து பறந்து அதைக் கொண்டாடிய
பல வண்ணக் கொடிகள்

பனிக்கிரீடம் சூடியும்
தன்னடக்கம் காத்து
தலை சாய்ந்த புற்கள் வரப்புகளில்
அந்த அதிகாலை வேளையிலும்
சிற்றுந்தை விழுங்கிய புழுதி மூட்டம்
கடைசி நிறுத்தம் வந்ததை
மூச்சுத் திணறலோடு சொன்னது

நூற்றுக்கும் குறைவான வீடுகள்
தேவைக்கும் அதிகமான தேநீர்க்கடை ஒவ்வொன்றும்
பெயர்ப்பலகை இல்லா
அரசியல் கட்சி ஒன்றின் அலுவலகம்
எந்த அரசியலையும்
சூடாக்கிடும் தேநீர்க் கடையின் இருக்கைகள்
அச்சூட்டைத் தணித்திடும் சூடான தேநீர்
காலை நாளிதழ்கள் வாசிக்கக்
காத்திருந்த மேசைகள்

குக்கிராமத் தகுதிகளைத் தாண்டிய குக்கிராமம்
வாட்ஸ் அப் வரை வளர்ந்துவிட்ட தொழில் நுட்பம்
பண மதிப்பு இழப்பு ஜிஎஸ்டி யானைகளைக்
காரசாரமாகத் தடவிக் கொண்டிருந்தவர்கள்
என்னை எளிதில் அடையாளம் கண்டனர்
என் அப்பாவின் பட்டப் பெயரோடு
நண்பனின் மறைவு பற்றியும் சொன்னார் அதில் ஒருவர்

நானும் ஒரு தேநீரை வாங்கிக் குடித்த பின்
குவளையைக் கழுவிக் கவிழ்த்து வைத்தேன்
அதற்குரிய இடத்தில்
குளிர் கண்ணாடிப் பெட்டிக்குள் நண்பன்
அவன் முகமும் ரோஜா மாலையும் வாடாமல்
நண்பனின் முகத்தை வருத்தத்தில்
வருடினேன் கண்ணாடியில்

என் கண்ணீரைத் துடைக்க
சில நேரங்களில்
கைக்குட்டை போதவில்லை
சில நேரங்களில்
அதற்குச் சாமர்த்தியம் போதவில்லை
துக்கத்தின் சுவை உப்பு எனச் சொன்னது
அதைக் கரைத்து வந்த கண்ணீர்

நண்பனை அடக்கம் செய்ய மாலை ஆனது
ஊருக்கு வெளியே
வெகு தொலைவில் தனித்து இருந்த சுடுகாட்டில்
சாதிக் கட்டுப்பாடு பிணங்களுக்கும்

“எவ்வளவு சாலைகளில் நடக்கவேண்டும் ஒரு மனிதன்
அவனை நீங்கள் மனிதன் என்று அழைப்பதற்கு?” எனத் தொடங்கும்
பாப் டிலனின் கவிதை வரிகள் நினைவுக்கு வந்தன
இரவில் நான் சிற்றுந்து ஏறுகையில்
எத்தனை (தலை)முறை நாங்கள் பயணிக்கவேண்டும்
உங்களுடன் முன் இருக்கைகளில் அமர்ந்து பயணிக்க?

எத்தனைக் குவளைகளை நாங்கள் கழுவ வேண்டும்
உங்களுடன் சேர்ந்து தேநீர் அருந்த?
எத்தனைப் பிணங்களை நாங்கள் புதைக்க வேண்டும்
உங்கள் பிணங்களோடு எங்கள் பிணங்களைப் புதைக்க?
அருகிலிருந்த ஒரு சிறு நகரம் செல்லும் வரை
பின் இருக்கைகள் ஒன்றில் நான்
முன் இருக்கைகள் பல
யாருமின்றிப் பயணித்தன………..எத்தனைப் பிணங்களைப் புதைப்பது? கவிதை – ஆதித் சக்திவேல்