சிறுகதை: என் ஜன்னலோரம் – பூ. கீதா சுந்தர்
நூல் அறிமுகம்: சுஜித் ப்ரசங்கின் ’சாமி மலை’ சிங்கள மொழி நாவல் தமிழில் எம். ரிஷான் ஷெரீப் – கருப்பு அன்பரசன்.
“எவ்வளவுதான் அதிகாரம் படைத்தவனாக இருந்த போதிலும் பெண்களின் சில தீர்மானங்களின் முன்னால் ஆண்கள் கையலாகாது போகும் தருணங்களும் பல இருக்கின்றன. அவ்வாறான தீர்மானங்களை எவராலும் மாற்ற முடியாது”
சாமிமலை வாசிக்கத் தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே மனசுக்குள்.. அடியில் கிடந்த பெரும் வலியான
நினைவுகள் இந்த இரவுப் பொழுது பெரும் துயரத்தோடு விடியற்காலையை சந்தித்து அழுது கொண்டிருந்தது.
122
திருவண்ணாமலை to சென்னை
(வல்லம் வழியாக).
இயற்கை தனக்குள் எல்லாவித சாகசங்களையும்.. சூட்சுமங்களையும் அடை காத்துக் வைத்துக் கொண்டு கண்ணாமூச்சி விளையாட்டுகளையெல்லாம் வேண்டிய பொழுதினில் தான் விரும்பியபடி நிகழ்த்திக் கொண்டேயிருக்கும்.. அது, பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே மெல்ல மெல்ல இதழ் விரிக்கும் ஏகாந்தம் மிகுந்த செம்பருத்தியின் அழகோடும்.. சூட்டின் கணப்பொழுதில் வெடித்துக் காற்றிலலையும் பருத்திக் காயின் பஞ்சாகவும்.. நிறைந்து தளும்பிக் கிடக்கும் ஏரியின் கரை உடைத்து ஊருக்குள் புகுந்து உயிர்களையும் உடைமைகளையும் அள்ளிப் போகும் காட்டாற்று வெள்ளமெனும் ஆவேசம் கொண்டும், பனிக்குடம் உடைந்து வெளியேறும் ரத்த பிசுபிசுக்கின் நீரின் வலியோடு முதல் அழுகையின் குரலுக்காக மயங்கியும் மயங்காமலும் கண்மூடி கனவுகளைச் சுமந்திருக்கும் தாயாகவும் தன்னை வடிவமைத்துக் கொண்டே மனிதர்களை மாண்பு கொண்டவர்களாகவும் தனிமனித ஒழுக்க பண்பற்றவர்களாகவும் மாறவும் விலகவும் சோதனைக்களங்களாக எல்லாவற்றையும் மாற்றத்திற்கு உட்படுத்தும் மென்மையானதும் வலிமையானதும் வலிகள் உடையதுமாகும் இயற்கையின் பேரழகும் சீற்றமும்.
சாமிமலை வாசிக்கத் தொடங்கிய சில பக்கங்களிலேயே வலிகளையும் அதிர்ச்சியையும் என்னை உணரச் செய்து, 1980களின் மத்திய காலப் பொழுது நவம்பர் மாத மழைநாட்களுக்குள்.. சொந்த ஊரான சோமாசிபாடிக்கு இழுத்துப் போனது.
தீபாவளிப் பண்டிகை நெருங்க நெருங்க வருடமெல்லாம் தனக்குள் இறுத்தி நிறுத்தி இறுக்கமாகச் சேர்த்து வைத்த ஈரத்தை கருமேகங்கள், வானத்திலிருந்து மழையாறுகளாக அனுப்பிக் கொண்டிருந்தது திருவண்ணாமலை, விழுப்புரம் தென்னார்க்காடு, வட ஆற்காடு சென்னை மாவட்டங்களின் மண் பரப்பங்கும். வானம் உடைத்தழுத மழையாறு ஏரிகளனைத்தையும் கடல்களாக மாற்றிக் கொண்டிருந்தது. பல கிராமங்களில் கடலான ஏரி கரை நொறுக்கி ஊருக்குள்ளும் புகுந்தது. வாங்கி வைத்த லட்சுமி வெடியும், யானை வெடியும், அணுகுண்டும்ம், பாம்பு மாத்திரையும் பிஜிலி வெடியும் வெள்ளத்தில் காகிதக் கப்பல்களாக
கவிழ்ந்தும் மிதந்தும்.
பல வீடுகளில் தீபாவளிக்கு மறுநாள் நோம்பு எடுப்பார்கள். நோம்பு எடுத்த வீடுகளில் சுட்டெடுத்த தின்பண்டங்கள், பலகாரங்கள் அக்கம்பக்கத்து வீட்டுப் பிள்ளைகளின் கைகளுக்கும் வாய்களுக்கும் போய்க் கொண்டிருக்கும்.
வெளியூருக்கு சில்வர் தூக்கில் பயணப்படும்.
வெளியூர்களில் இருந்து சொந்த ஊருக்கு வந்து தீபாவளியை கொண்டாடுபவர்கள் மறுநாள் வேலைக்கு செல்ல வேண்டும் என்கிற கட்டாயத்தில் அன்று இரவே பேருந்து பிடித்து மறுநாள் ஊர் போய் சேர வேண்டும் வீட்டில் செய்த பலகாரங்களோடு கலந்து இருக்கும் சொந்தங்களின் அன்பையும் பாசத்தையும் நண்பர்களுக்கு பகிர்ந்து கொடுப்பதற்காக.
அப்படித்தான் அந்தப் பெற்றோர்களும் நோம்பு எடுத்த நாளின் இரவு தங்களது இரு மகன்களை திருவண்ணாமலையிலிருந்து சென்னை செல்லும் பேருந்துக்கு அனுப்பி வைத்தனர் எங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் ஆராஞ்சி என்கிற கிராமத்திலிருந்து மழையாறு பெய்த அந்த நாளின் ராப் பொழுதில்.
மழையும் காற்றுமாய் சேர்ந்தடிக்கும் அந்த கும்மிருட்டின் நடு இரவில் சென்னை நோக்கி சென்ற அந்த பேருந்து கடும் மழையினை ஊடுறுத்து மெல்ல மெல்ல சென்று கொண்டிருக்கிறது.. நேரம் செல்லச் செல்ல மழையும் வலுத்துக் கொண்டே. பேருந்து செஞ்சியை அடுத்து வல்லம் கிராமம் வழியாக ஊர்ந்து போய்க் கொண்டிருக்கிறது.
அழகிய கிராமத்தின் எல்லையில் இருக்கக்கூடிய தொண்டி ஆற்றின் பாலத்தை கடந்துதான் அனைத்துப் பேருந்துகளும் வாகனங்களும் சென்னை செல்ல வேண்டும். பேய் மழை அடிக்கும் அந்த நாளின் ராப்பொழுதில் பாலத்தின் கீழ்ப்புறத்தில் ஓட வேண்டிய ஆற்று நீர் பாலத்தின் மேல் ஓடிக்கொண்டு. பாலத்தை எப்படியும் நம்மால் கடந்து விட முடியும் என்கிற முனைப்போடு வாகனத்தின் ஓட்டுனர் பாலத்தின் மீது வண்டியை செலுத்துகிறார் எச்சரிக்கையாகவும் கவனமாகவும்; காலதாமதம் ஆனாலும் பேருந்துக்குள் இருப்பவர்களை சென்னை கொண்டு போய் சேர்த்து விட வேண்டும் என்கிற பேராவலால். பேருந்து பாலத்தின் மேல் சென்று கொண்டிருக்கும் பொழுதே கொஞ்சம் கொஞ்சமாக ஆற்று நீர் பேருந்தை விழுங்கத் தொடங்கியது.. விபரீதம் அறிந்த ஓட்டுநர் பேருந்தை வேகப்படுத்த.. ஆனாலும் எங்கேயோ உடைந்த கன்மாயின் நீர்கும்பல் வெள்ளமாகி, மலையின் உச்சியில் இருந்து பெரும் பாறைகளின் கூட்டமொன்று ஓங்கி வளர்ந்த மரங்களை வேரோடு அருத்தெறிந்த வேகத்தின் சீற்றத்தோடு.. வெள்ளம் ஓங்கியடித்த அந்தக் கணத்தில் ஓட்டுநரும் பேருந்தும் நிலை தடுமாற, வேகம் எடுத்த வெள்ளம் வயிற்றுப் பசியோடு எல்லாவற்றையும் தின்றுமுடிக்கும் நாவின் கொலை வெறியோடு மனிதர்களை ரொப்பிக் கிடந்த வாகனத்தை குப்புறத் தள்ளி உருட்டிக் கொண்டே கொண்டு போய் தொண்டி ஆற்றின் கரை ஓரத்தில் வானுயர்ந்த சவுக்குத் தோப்பிற்கு இடையில் தலைகீழாய் படுக்க வைத்தது .
பெய்து கொண்டிருந்த பெருமழையின் சத்தத்தை ஊடறுத்து அலறியது மனித குரல்கள்.. இருட்டும் மழையும் வெள்ளமும் ஒன்றோடு ஒன்று குதித்து தாண்டவமாட அபயக் குரல்கள் அத்தனையும் எவர் ஒருவருக்கும் கேட்காமலேயே போனது. இருட்டும் பேய்க் காற்றும் குரல்கள் அனைத்தையும் மொத்தமாய் விழுங்கிக் கொண்டது.
பின்னிரவின் தொடக்கத்தில் நிகழ்ந்த இச்சம்பவத்தை இருட்டும் காற்றும் மழையும் வெள்ளமும் அது மறைத்து வைத்திருந்த பாலமும் மட்டுமே அறியும்..
பரையாட்டத்தின் உச்சத்தில் ஆடிய கால்கள் அந்தக் கடைசி கொட்டு முடிந்ததும் அமைதியில் ஆசுவாசப்படுத்தி அமைதி காண்பது போல் ஊழியாட்டத்தை நடத்தி முடித்த தொண்டி ஆறு அமைதியாக போய்க்கொண்டிருக்கிறது விடியற்காலையின் பொழுதில் ஏதும் அறியாதது போல்.
இருட்டையும் குளிரையும் இளம் சூரியன் வழி அனுப்ப கிழிந்த புடவைக்குள்ளும் வேட்டிக்குள்ளும் போர்வைக்குள்ளும் சுருண்டு கிடந்த வல்லம் கிராமத்து மனிதர்கள் ஒவ்வொருவராய் வெளியே வந்து பாலத்தின் ஓரம் நின்று
காற்றும் மழையும் வெள்ளமும் சேர்ந்து நடத்திய ஊழியாட்டத்தின் முடிவை சலசலத்து ஓடும் ஆற்றின் அழகினை அமைதியாய்ப் பார்த்து நிற்க.. ஒருவரின் விழிகள் மட்டும் சவுக்குத் தோப்பில் ஏற்ற இறக்கத்தோடு கவிழ்ந்திருக்கக் கருப்பாக தெரியும் பேருந்து சக்கரங்களை நோக்கி அலறத் தொடங்கியது.. வாய் பேசிய வார்த்தைகளை சப்தமில்லாமல் அவரின் கண்கள் ஊமைக்கி வைத்தது அதிர்ச்சியின் உச்சத்தில். வந்திருந்த மனித கண்களும் கைகளும் தற்போது பேருந்தை நோக்கி பெரும் சப்தத்தோடு.. இரைச்சலோடு.
தைரியம் மிகுந்தவர்கள் நீரின் போக்கிலேயே போய் கவிழ்ந்து நொறுங்கி ஒடுங்கிக் கிடக்கும் பேருந்தையடைய.. அங்கொன்றும், இங்கொன்றும், தொலைவில் ஒன்றுமாக மனித உயிர்கள்.. சதை கிழிந்து, மண்டை பிளந்து, எலும்புகள் உடைந்து சவுக்கு மரங்களுக்கிடையே வளைந்து ஒடிந்தும் பிணங்களாக..
வாகனத்திற்குள்ளும் வெளியேயும் சவுக்கு மரங்களின் இடைவெளிகளிலும். ஆற்றின் கரை ஓரத்திலும்.. எத்தனை பேரின் பிணங்கள் அங்கு சிதைந்து கிழிந்து ஒதுங்கி கிடந்தது என்பதை சவுக்கு மரத்தில் சதையாக தொங்கிக் கொண்டோ அல்லது ஆற்று மணலின் அடி ஆழத்தில் புதைந்து கிடந்தோ.. இன்றளவும் தேடப்பட்டு வரும் நடத்துனர் மட்டுமே அறிவார் மனிதர்களின் எண்ணிக்கையை.
தமிழகத்தின் அத்தனைத் தொலைக்காட்சி செய்திகளும் தினப் பத்திரிகைகளும் இந்த விபத்தை செய்தியாக மாற்றின.. அன்று இரவு சென்னை நோக்கி சென்றவர்கள் அவரவரின் சரியான இடம் சேர்ந்தார்களா என்பதை பலரும் பலரை விசாரித்து தெரிந்து வைத்துக் கொண்டார்கள்.. ஆனாலும் கூட பலர் அந்த விபத்தை நேரிடையாக பார்க்க வந்துவிட்டார்கள் திருவண்ணாமலை நகரின் சுற்றுவட்டாரத்தில் இருக்கக்கூடிய மக்கள்..
பெரும் சோகம் என்னவென்றால் துயரச் செய்தி அறிந்து, நடைபெற்ற அந்த விபத்தை பார்க்க வந்ததோடு மட்டுமல்லாமல் கணவனை மனைவியை சொந்தங்களை இழந்து செய்வதறியாது கண்களில் நீரும் குரலில் ஈரமும் இல்லாமல் கிடந்த பலருக்கு பல இடங்களில் சென்று உதவி செய்தவர்கள் அந்த இரு மகன்களின் தந்தை சேகர். தன்னுடைய மகன்கள் இருவரும் அம்மா செய்து கொடுத்த பலகாரங்களோடு பத்திரமாக சென்னை போய் சேர்ந்து விட்டார்கள் என்று நினைத்துக் கொண்டு.
நிகழ்வு நடந்த இரண்டாம் நாள் சென்னையில் இருந்தவர்கள் சேகரை தொடர்பு கொண்டு கிராமத்தில் மழை வெள்ளம் எப்படி இருக்கிறது.? மகன்கள் எப்படி இருக்கிறார்கள்.? எப்பொழுது சென்னைக்கு கிளம்பி வருகிறார்கள் என்று விசாரிக்கும் பொழுது தான் இடியும் மின்னலும் சேர்ந்து தலையில் இறங்கியது சேகருக்கு. கிளம்பிய மகன்கள் என்னவானார்கள் எங்கு இருக்கிறார்கள் ?.. மனதில் அச்சம் சூழ சென்னையில் இருக்கக்கூடிய உறவினர்கள் அனைவரின் வீட்டிலும் விசாரிக்கிறார்கள். மாணவர்களின் நண்பர்களிடம் விசாரிக்கிறார்கள் ஒருவரிடம் இருந்து கூட உங்கள் பிள்ளைகள் சென்னைக்கு வந்து விட்டார்கள் என்ற பதில் வராதது அவர்களுக்குள் பெரும் அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்த, எந்தெந்த இடங்களில் எல்லாம் சென்று மற்றவர்களுக்கு உதவினார்களோ.. அதே செஞ்சி திண்டிவனம் காவல் நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு சென்று பார்க்கிறார்கள்.. விசாரிக்கிறார்கள்.. எங்கும் அவர்களின் மகன்கள் காணப்படவில்லை பிணங்களாகக் கூட.
இந்த நாள் வரையிலும் கூட அவர்களுக்கு தங்களின் இரு மகன்களும் எங்கு இருக்கிறார்கள் என்பது தெரியாது.
நோன்பு முடித்து வீட்டை விட்டு சென்றவர்கள் சென்றவர்கள்தான். புத்திர சோகம் என்பது எத்தனை பெரியது என்பதை அந்த ஆராஞ்சி கிராமமே அன்று உணர்ந்தது.
அடையாளம் தெரியாத.. எவரும் வந்து உரிமை கோறாத மனித பிணங்கள் அரசு செலவிலேயே இறுதி ஊட்டப்பட்டதாக தகவல் கிடைத்தது பத்து நாட்கள் கழித்து.
கடைசியாக தெரிந்தவர்கள் வழியாக ஒரு செய்தி மட்டுமே அந்தப் பெற்றோர்களுக்கு வந்து சேர்ந்தது. மழை இரவில் நீண்ட நேரம் நின்று இருந்தும் பல பேருந்துகளில் இடம் கிடைக்காததால் அவர்களின் மகன்கள் சென்னை செல்லும் கடைசி பேருந்தையும் விட்டுவிடக்கூடாது என நினைத்து விபத்தில் சிக்கிய அதே பேருந்தில் ஏறி நின்று கொண்டே சென்றதாக..
“ஆராஞ்சி சேகரும்” அவரது மனைவியும் உயிரோடு பிணங்களாக
வீட்டுக்குள்ளேயும்.
கி
“சிலோன் டீ” என்று உலகம் முழுவதும் பிரசித்தி பெற்ற இலங்கை தேயிலை தூளின் ஒவ்வொரு துகளிலுமிருந்தும் வெளியேறும் நறுமணம் தென்னிந்தியாவிலிருந்து இழுத்துச் செல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் பிணங்களில் இருந்தும் இரத்த பிசுபிசுகிலிருந்தும் வியர்வையின் உவர்ப்பில் இருந்தும் வெளியேறும் வலியும் வேதனையும் மிகுந்த மலையகத் தமிழர்களின் வாசமே. மலையகத் தமிழர்களின் வாழ்நிலை என்பது இதுவரை தமிழர்கள் மத்தியில் கூட பெருமளவு கவனிக்கப்படாத பொழுது சிங்கள மொழியில் பேசப்பட்டு எழுதப்பட்டு வந்து இருக்க கூடிய துயரத்தின் அடையாளம் முழுவதுமாய் தாங்கியே புதினமே
சாமிமலை.
பரம்பரை பரம்பரையாக மலையகத்தின் பல எழில் கொஞ்சும் தேயிலை தோட்டத்து கொழுந்துகளோடவும் ரத்தம் உறிஞ்சும் அட்டைப் பூச்சிகளோடவும் மடியும்.. தொடரும் மலையகத் தமிழர்களின் வாழ்முறையை, வாழ் நிலையை இலங்கையின் காட்போர் மலை பிரதேசத்தின் டன்மோர் தேயிலை தோட்ட லயன்களில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகளில் இருந்து புதினத்தை தொடங்கி இருக்கிறார் ஆசிரியர்.
மரணம் ஒவ்வொருவருக்கும் நிச்சயமான ஒன்றுதான்.. எவர் ஒருவரையும் மரணம் எப்பொழுது வாரி அனைத்துக் கொள்ளும் என்பதை எவருமே அறிய மாட்டார்கள்.. எதிர்கால சந்ததியர்களின் முடிச்சு அறுபடாமல் இருக்க தொடரும் ரகசியம் அறிந்தவர்கள் மனிதர்கள்.. அந்த ரகசியமே காத்திருந்த பிறப்பை கொண்டாடும் மனநிலையையும் எதிர்பாராத இழப்பை ஏற்றுக்கொண்டே கடந்து செல்ல வேண்டிய துயரம் மிகுந்த மனத் துயரத்தையும் அல்லது “இது எப்படா போய் சேரும்” என்கிற எண்ணத்தினையும் பிறந்த அவர் சக மனிதர்களோடு வாழ்ந்த வாழ்வையும் இணைத்தே யோசிக்க வைக்கிறது, யோசித்ததை பேச வைக்கிறது. நவீனத்தின் வளர்ச்சிக்காக பூர்வ குடிகளின் அடையாளங்களை சிதைத்தும் அவர்களின் வாழ்விடங்களை சூறையாடியும்.. அம்மக்களின் வாழ்வினை சின்னாபின்னப்படுத்தியும் நிர்மூலமாக்கியும் அவர்களின் வயிற்றுப் பசி கொடுமையின் மீதமர்ந்து தங்களின் சதைத் தேவையை நிவர்த்தி செய்து கொண்ட அதிகாரத்தின் ஈனச் செயலை இன்றளவும் தொடர்கின்ற இழி மனிதர்களை தனது புதினத்தில் அடையாளப்படுத்தி இருக்கிறார் ஆசிரியர். அதிகாரத்தின் குறியீடு எளியவர்களை எதிர்கொள்ள முடியாமல் தூக்குக் கயிற்றுக்குள் சரணாகதி அடைகிறது. தன் நெற்றிப்பொட்டின் ரத்தத்தை கைகளில் இருக்கும் துப்பாக்கித் தோட்டாவின் நாவிற்கு நக்கக் கொடுக்கிறது.. தற்கொலைக்குள் தஞ்சம் புகுகிறது. எளிய மக்களின் ஒடுங்கிய கண்களில் இருந்து வெளியேறும் நீர்த்துளிகள் அதிகார திமிரின் அடையாளங்களையெல்லாம் கரைந்து போகச் போகிறது.. அழித்தொழிக்கிறது.
பேரழிவு ஒன்றினை கணத்தில் எதிர்கொண்டு செய்வதறியாது இருக்கும் இலங்கையின் காட்மோர் மலை பூர்வகுடி தமிழ் மக்களை இலங்கையின் அதிகாரம் எப்படி அணுகி சமவெளி மக்கள் திரளோடு வலுக்கட்டாயமாக அனுப்பி வைக்கிறது;
சமவெளி மக்களோடு தங்களை பிணைத்துக் கொள்ள முடியாமல் வாழ வேண்டிய நிர்பந்த வாழ்நிலைக்குள்
தள்ளிவிடுகிறது என்பதை நாவலுக்குள் பேசி இருட்டுக்குள் இருந்த பல நிஜங்களின் மீது வெளிச்சம் பாய்ச்சி இருக்கிறார் ஆசிரியர்.
உலகம் முழுவதும் பெண்களும் அவர்களின் உடலும் ஆண்களின், குடும்பங்களின் அன்றாடத் தேவைகளை வேலைகளை பூர்த்தி செய்வதற்காகவே என்று கட்டமைத்து வைத்திருக்கக்கூடிய குடும்ப அமைப்பு முறை, அதற்கு எதிராக கேள்வி கேட்பவர்களாக, “எங்களின் நிலைக்கு காரணமே நீங்கள்தான்” என்று ஆள்காட்டி விரல் நீட்டி சுட்டுபவர்களாக, ராணுவ அதிகாரியாக வரக்கூடிய சரோத்தின் மனைவி வஜ்ரா, மற்றும் ஒடுக்கப்பட்ட பெண்களின் அடையாளமாக இருக்கக்கூடிய லலிதா என்கிற கதாபாத்திரங்கள்.
மலையக தமிழ் மக்கள் இன்றளவும் அங்கே இருக்கக்கூடிய தேயிலை தோட்ட எஜமானர்களுக்கு ஏற்றதொரு வாழ்வினை தங்களின் மகிழ்ச்சியை இழந்து கொண்டாட்டத்தை தாங்களே அழித்து பெரும் துயரங்களை துன்பங்களை சுமந்து வாழ்ந்து தங்களை இழந்து கொண்டு வருகிறார்கள் என்கிற மெய்யான உண்மைகளை புதினமாக்கி இருக்கிறார் சாமிமலையாக. எளிய மக்களின் பெண்களின் வாழ்வினை, உலக பணக்கார நாடுகள் அனைத்தும் நல்லதொரு உடைக்கும்.. சில இனிப்பு பொட்டலங்களுக்கும் ஈடாக்கி சூறையாடிடும் தொடரும் நிஜங்களை நாவலுக்குள் பெரும் வலியோடும் காத்திரமாகவும் பேசியிருக்கிறார்.
ஆண்களின் அதிகாரத்தின் அரசாங்கத்தின் மொத்தக் குறியீடாக இங்கு ராணுவ வீரன் சரோத் எழுதப்பட்டிருக்கிறார். வார்த்தைகளில் நடிப்பு கலந்து பேசுவது ஏற்றுக் கொள்ளாத பொழுது வன்முறையை பிரயோகிப்பது வாழ்வினை சூறையாடுவது இதுதான் சரோத் என்கிற பாத்திரத்தின் அடையாளம். இந்த அடையாளம்தான் உலகம் முழுவதிலும் இருக்கக்கூடிய எளிய மக்களுக்கு எதிராக தொடர்ந்து எதிர் நிறுத்தப்படுகிறது இன்றைக்கும் அதிகாரத்தின்.. அரசின் அடையாளமாக.
சாமிமலை முழுக்க முழுக்க தென்னிந்தியாவிலிருந்து வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்ட தமிழ் மக்களின் துயரம் பொருந்திய வாழ் நிலையை வாழ்வு முறையை பேசுகிறது.
நிறத்தின் காரணமாகவும் இனத்தின் காரணமாகவும் பேசும் மொழியின் காரணமாகவும் வாழும் முறையின் காரணமாகவும் பின்பற்றும் பழக்கவழக்கங்களின் காரணமாகவும் செயல்படும் அரசியலின் காரணமாகவும் உலகம் முழுவதிலும் தொடர்ந்து ஒடுக்கப்பட்டு சிதைக்கப்பட்டு வரும் உலகத்தின் எளிய மனிதர்களின்.. சிறுபான்மை மக்கள் அனைவரின் வாழ்வோடு சாமிமலை பொருந்தி போகிறது.
உலகம் முழுவதும் நிறைய வஜ்ராக்களும் லலிதாக்களும் தீபாக்களும் ராஜேஸ்வரிகளும் இன்னும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு எதிரான வன்மத்தை நிறைய சரோத்துகள் செய்து கொண்டே தான் இருக்கிறார்கள். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இருப்பதைப் போன்று அவர்களின் ஏழ்மை நிறைந்த வாழ்முறையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் அபுசாலிகளும்.. ப்ராஸ்களும் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் உலகப் பணக்கார நாடுகளெங்கும் . இவர்களுக்கு இடையே எளிய மக்களின் நிஜம் நிறைந்த நேசமும் அன்பும் காதலும் அக்கறையும் பணப் பரிவர்த்தனைக்குள் உயிர் வாழும் நிர்பந்தத்திற்குள் முடிந்து போய் விடுகிறது. அதனையும் மீறி எளிய மக்களின் உணர்வுக்குள் காதலின் ஈரம் சுரந்து கொண்டே தான் இருக்கும்.
இலங்கை தேயிலை தோட்டத்தில் பணி புரியும் பூர்வகுடி மக்களோடு வாழ்ந்து இந்த நாவலை புனைவுகள் கலந்து கொடுத்திருக்கிறார் நாவலாசிரியர் சுஜித் ப்ரசங்க.. மொழிபெயர்ப்பு நாவல்தான் வாசிக்கிறோம் என்கிற எண்ணம் சிறிதேனும் வாசகனுக்கு வந்து விடக்கூடாது என்று நாவலின் வலியை முழுவதுமாக உள்வாங்கி அழகியலோடு இலக்கியத் தரம் வாய்ந்ததாக தமிழ் சமூகத்திற்கு அளித்திருக்கிறார் மொழிபெயர்ப்பாளர் பேரன்பு எம். ரிஷான் ஷெரிப் அவர்கள். வலியை சுமந்திருக்கும் அட்டைப் படத்தை வடிவமைத்து எதிர் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.
அனைவருக்கும்
பேரன்பும் வாழ்த்துக்களும்.
சாமி மலை ஒடுக்கப்பட்ட மக்களின், பூர்வகுடிகளின், இலங்கை மலையக தமிழ் மக்களின் வாழ்முறையை வாழ்நிலையை சந்திக்கும் சவால்களை எதிர்கொள்ளும் இடர்பாடுகளை பேசுகிறது. எளிய மனிதர்களின் அன்பினை காதலை பிரியத்தை உயிர்கள் மேல் கொண்ட நேசத்தை பேசுகிறது.
அவசியம் வாசியுங்கள்.
சாமிமலை.
நூல் : சாமிமலை
ஆசிரியர் : சுஜித் ப்ரசங்க (சிங்கள மொழி நாவல்)
தமிழில்: எம்.ரிஷான் ஷெரிப்
விலை : ரூ.₹250/-
பக்கங்கள்: 176
வெளியீடு : எதிர்_வெளியீடு
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
கருப்பு அன்பரசன்.
வேலை கவிதை – மு.அழகர்சாமி
அண்டை வீட்டுச்
சேவலையும்
அசந்து படுத்திருக்கும்
மனைவியையும்
எழுப்பிவிட்டு.
அவசர கதியில்
தொலைதூர
அலுவலகப்பணிக்காக
பயணம் தொடர்கிறது
ஒவ்வொருநாளும்..
எங்க ஊருக்கு வரும்
முதல் பேருந்தை பிடித்தால்தான்
அலுவலகத்திற்குப்
பத்து மணிக்குப்
போகமுடியும்..
அதையும் விட்டுவிட்டு
மூன்று நாள் அனுமதி போட்டு
அரைநாள் விடுப்பையும்
இழந்தது உண்டு..
பிள்ளைகள்
தூங்கும் போது
கிளம்பி வருவதும்..
இரவில் அவர்கள்
தூங்கும் போது
நான் செல்வதுமான
வாழ்க்கை தொடர்கிறது..
நிறுத்தம் வந்ததும்
பேருந்தை விட்டு இறங்கி
ஐந்தாவது தளத்திற்கு
இருக்கைக்கு வந்தால்
அதற்குள்
நிரம்பி வழியும்
அலுவலக மின்னஞ்சல்
அறிக்கை கேட்டு
அனைவருக்கும் வணக்கம்
சொல்லி..கேட்ட அறிக்கைக்கு
பதில் கொடுத்துக்கொண்டே
இருந்தால்..
திறமைக்கு
சவால் விடுவதாய்
அடுத்தடுத்து
தலைமை இடத்திலிருந்து
வந்து கொண்டே
இருக்கும்..
நம்மை
பரபரப்பிலேயே!
வைத்துக்கொள்வதில்
அவர்களுக்கு
அவ்வளவு
ப்பிரியம்..
மதிய உணவும்
எனக்கு
இன்னொரு
அறிக்கையாகவே!
தெரியும்..
பகல்நேரங்களை
முழுவதுமாக திண்றுவிடும்
முழுநேர அறிக்கைகள்
அலுவலகம் முடிந்தால்
அர்ஜுனனுக்கு தெரியும்
பறவையைப்போல
வீடு தெரியும்..
இடைநில்லாப் பேருந்தாய்
வீடு சென்றால்..
அண்டை வீட்டு
சேவலும் மீண்டும்
தூங்கிடும் …
என்
மனைவி
பிள்ளைகள்
மட்டும்
விதிவிலக்கா???….
மு.அழகர்சாமி
கடமலைக்குண்டு
கண்ணீர்த் துளிகளின் கதை சிறுகதை – நந்தகுமார்
அன்றொரு நாள் ஞாயிற்றுக்கிழமை, விடுமுறையில் ஊருக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பினேன். வீட்டிற்கு கிளம்பும் முன்பே பழம், காய் என்று மூட்டையை நிரப்பிக் கொடுத்து விட்டனர். மூட்டை பைகளைத் தூக்கிக்கொண்டு பேருந்து நிலையம் வருவதற்குள்ளேயே போதும் போதும் என்றாகிவிட்டது. பேருந்து நிலையம் மக்கள் கூட்ட மிகுதியோடு காணப்பட்டது.
என் ஊருக்கான பேருந்து வரும் வரை பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தேன். வெகு நேரமாகியது, பேருந்து வரவே இல்லை. என்னைப் போலவே பலர் பேருந்தின் வரவை எதிர்பார்த்து, கன்னத்தின் மேல் கை வைத்து உட்கார்ந்திருந்தனர்.
பேருந்து வராததைக் கண்டு பலரும் உலக அரசியலையும், உள்ளூர் அரசியலையும் பேச ஆரம்பித்துவிட்டனர், பாட்டிகள் வெற்றிலை போட்டு மென்று கொண்டிருந்தனர்” பேருந்து எப்ப வரும்? எப்ப வரும்? என்று மாறி மாறி கேட்டுக் கொண்டிருந்த வேளையில் பேருந்து ஹாரன் சத்தம் காதைக் கிழித்துக்கொண்டு பேருந்து நிலையத்திற்குள்ளே வந்தது.
பேருந்து நின்றதும், சக பயணிகள் கையில் வைத்திருந்த மஞ்சள்பை, துண்டு, வாட்டர் கேன் என்று இருக்கைக்கு இடம் பிடிக்க ஜன்னல் வழியாக வீசினர். இறங்குபவர்களுக்கு வழி விடாமல் முண்டியடித்துக் கொண்டு ஏறினர். “இறங்கியபின் ஏறுங்களேன்! என்ன அவசரம்? என்று பலரும் முணுமுணுத்தபடியே இறங்கினார்.
நடத்துனர் செல்லமுத்து, ‘எல்லோரும் கொஞ்சம் பொறுமையாக இருங்கள் இறங்குபவர்கள் இறங்கட்டும். பெறவு ஏறுவீங்க!’ என்று அவர் செல்லமாக சொல்லியும் யாரும் கேட்பதாக இல்லை. சற்றே கடிந்து கொண்டு “பஸ் என்ன பறந்தா போகுது. இப்பிடி ஏறுறீங்க” என கூற, ‘அப்படியே பறந்துட்டாலும், நேரத்துக்கு பஸ் வருமா?’ என கூட்டத்தில் இருந்தவர் பேருந்து நிலையமே சிரிக்க ஆரம்பித்துவிட்டது.
இறங்குபவர்கள், ஒருபுறம் சிரமப்பட, ஏறுபவர்கள் ஒரு வழியாக ஏறி அமர்ந்து விட்டனர். பெண்களுக்கு இலவசம் என்பதால் பெண் பயணிகளின் கூட்டம் ஆரவாரமாக காணப்பட்டது. பெண்களுக்கு மட்டும் பேருந்து பயணம் இலவசம். ஆண்களுக்கு பயணம் இலவசம் இல்லையே என்று எனக்கு ஒரு ஆதங்கம். ஆனாலும், என் அம்மாவும் அக்காவும் தங்கையும் இலவசமாக செல்வார்களே என்று மகிழ்ந்து கொள்வேன்.
எப்படியோ ஒரு வழியாக பேருந்தில் கூட்டத்தில் ஒருவனாக ஏறி விட்டேன். ஒருவர் எனக்கு பெருந்தன்மையுடன் உட்கார இருக்கையை தந்தார். அவருக்கு நன்றியை கூற வாயைத் திறந்தேன், அதற்குள் ஒரு பாட்டி என் முன் வந்து, “கண்ணா எனக்கு முட்டி வலி என்னால் நிக்க முடியாது, கொஞ்சம் உட்கார இடம் கொடுப்பா” என்றது.
அப்போதுதான் என் கல்லூரி பேராசிரியர் ஐயா ஒருவர் நினைவுக்கு வந்தார். அவர் ஒருநாள் பாடம் நடத்தும் போது ஏ பாசிட்டிவ் இரத்த வகை கொண்ட நபர்களுக்கு உதவும் பண்பு குறைவாக இருக்கும் என்றார். எனக்கோ ஏ பாசிட்டிவ் பிரிவு. அவர் கூறியது உண்மையோ, பொய்யோ ஏ பாசிட்டிவ் இரத்த வகை பிரிவு உடையவர்களும் உதவும் பண்பு கொண்டவர்கள் என்பதை நிரூபிக்க, அந்தப் பாட்டிக்கு இருக்கையை விட்டு விட்டேன்.
கூட்ட நெரிசலில் வியர்வை ஒருபுறமும், தலைவலி ஒருபுறமாகவும் தவித்துக் கொண்டிருந்தேன். தோளில் மாட்டி இருந்த பேக்கை கழற்றிக் கீழே வைத்தேன். சற்றே நிம்மதியாக இருந்தது. கூட்டத்தில் கண்டக்டர் ஒவ்வொருவரிடமும் டிக்கெட் எடுத்துக் கொண்டு வந்தார். அப்போதுதான் எந்த வேலையும் எளிமையல்ல என்பது புரிந்தது. பேருந்து மெதுவாக கிளம்பியது. சிறைப்பட்ட காற்று நீங்கி, புது காற்று உள்ளே நுழைந்தது. அந்நிமிடம் ஆழ்கடலில் மூழ்கியவன், கரை சேர்ந்து பெருமூச்சு விட்டதைப் போன்று இருந்தது
சற்றே நின்றபடி கண்ணை மூடினார். “ஏப்பா தம்பி! எங்க போற?” என்று கண்டக்டர் எழுப்பி விட்டார். பின் சில்லறையைக் கொடுத்து பயணச்சீட்டை வாங்கினேன். ஒவ்வொரு நிறுத்தத்திலும் கூட்டம் சற்று குறைந்து கொண்டு வந்தது. எப்படியோ உட்கார ஒரு இருக்கை கிடைத்துவிட்டது. அவ்விரவின் குளிர்ச்சி நிறைந்த காற்றுடன் 90களின் இசை ஒலித்தது. எப்போது வீட்டைச் சென்றடைவோம் என்று மனம் ஏங்கியது
ஒரு நிறுத்தத்தில் பேருந்து நின்றது. பேருந்தில் இருந்தவர்களின் இரைச்சலால் இளையராஜாவின் இசை மங்கியது. என்ன சத்தம்? ஏன் வெகு நேரமாகியும் பேருந்து நிற்கிறது? என்று எண்ணிக் கண் விழித்தேன்.
“சீக்கிரம் ஏற்று நேரமாகுது” என்று ஒருவரும், “நாங்கல்லாம் ஊடு போய் சேர வேணாமா” என்று மற்றொருவரும் கூறினார்.
ஏன் அப்படி பேசுகிறார்கள் என்று படிக்கட்டிற்கு சென்று பார்த்தேன். அங்கு ஒரு குடிகாரனை, அவனுடைய மனைவியும் மகனும் பேருந்தில் ஏற்ற சிரமப்பட்டு கொண்டிருந்தனர். பேருந்தில் இருந்தவர்கள் அவசரப்பட்டு கொண்டிருந்தார்களே தவிர யாரும் உதவி செய்வதாக இல்லை.
“யாராச்சும் உதவி பண்ணுங்கப்பா நேரமாகுது” என்று டிரைவர் கூற, நால்வரின் கைகளோடு என்னோடு கையும் உதவிக்கரம் நீட்டியது. அன்று நான் செய்த இரண்டாவது உதவி என்று பெருமிதம் கொண்டேன்.
படிக்கட்டிற்கு அருகிலேயே இருக்கை காலியாக இருந்தது. அதில் அவர்கள் அமர்ந்து கொண்டார்கள். சிறுவன் கம்பியைப் பிடித்துக் கொண்டு மௌனமாக நின்று கொண்டிருந்தான்.
எனக்கு அவர்களை முன்பே தெரியும். அந்த நபர் தினக்கூலியாக வேலைக்குச் செல்லும் கட்டிடத் தொழிலாளி, அவனுடைய மனைவி வீட்டைக் காக்கும் சாமானியப் பெண். அதனாலோ என்னவோ கணவனைக் காக்க வந்துவிட்டாள். பள்ளிச் சீருடை கூட மாற்றாமல், அவனது மகன் தன் தந்தையை அழைத்துச் செல்ல அம்மாவுடன் வந்து விட்டான். தந்தையின் தோளில் ஏறி சுற்றும் குழந்தைகளில், தந்தையையே தோளில் சுமக்கும் சிறுவன் அவன்.
“குடிகாரனை, கவுர்மெண்ட் பஸ்ஸில தா கூட்டி வரணுமா? வேற பஸ்ஸே இல்லையா?’ என்று பலரும் பல படியாக பேசியது, அவளுடைய காதில் விழுந்தது. எதையும் பேசாமல் கண்ணை கசக்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். பின் கண்டக்டர் அவளுக்கு மகளிர் சீட்டையும், கணவனுக்கும் மகனுக்கும் டிக்கெட்டையும் கொடுத்தார். அவள் தன் முந்தானையில் முடித்து வைத்திருந்த 50 ரூபாயை கொடுத்து மீதி சில்லறையை வாங்கி மீண்டும் முந்தானையிலேயே முடித்துக் கொண்டாள்.
பேருந்து வேகமாகச் சென்றது. ஸ்பீடு பிரேக்கில் தூக்கி போட்டது. குடிகார கணவன் ‘குவாக்’என்று வாந்தி எடுத்துவிட்டான். பிறகு என்ன செய்வாள் அவள், தன் முந்தானையிலேயே இருக்கையை சுத்தம் செய்தாள். பல அவமானங்களையும் தாங்கிக்கொண்டு கணவனை தோளில் சாற்றி நிறுத்தத்தில் இறங்கினாள்.
‘ஒரு வழியா குடிகாரன் போய் தொலைந்து விட்டான்’ என்று பலருடைய சிந்தையும் பேச்சும் கேட்டது. சற்றே தூரத்தில் என் வீட்டிற்கான பேருந்து நிறுத்தம் இறங்கிய பின் வீட்டிற்கு சென்று விட்டேன். ஆனாலும், அந்த குடிகாரனும் அவனுடைய குடும்பமும் என் சிந்தையில் வந்து கொண்டே இருந்தது.
நாட்கள் கடந்தன. அன்றொரு நாள் அதைப்போலவே, பேருந்து தாமதமாக வந்தது. கூட்ட மிகுதியும் குறையவில்லை இரைச்சல் சத்தத்திற்கு இடையே இளையராஜாவின் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.
திடீரென்று இசை மங்கியது. அந்த நிறுத்தத்தில் (ஒயின் ஷாப்) குடிகாரன் ஏறினான். அவனுடன் யாரும் இல்லை. சற்றே தெளிவாக இருந்தான். அழுது புலம்பிக்கொண்டே பேருந்தில் ஏறினான்.
அவன் பேசிய வார்த்தைகள் சற்றும் விளங்கவில்லை. என்னவோ என்று இருக்கையில் அமர்ந்து கொண்டு இருந்தேன். குடிகாரனின் நிறுத்தம் வந்தது. திபுதிபுவென்று இறங்கி ஓடி, ஒரு சுவரின் முன் மண்டியிட்டுக் கொண்டு, “ஐயோ! என்ன விட்டுப் போயிட்டியே ” என்று தலையை அடித்துக் கொண்டு அழுதான்.
“ஏன் சுவரை நோக்கி அழுகிறான்” என்ற சுவரை உற்று நோக்கினேன். சுவரில் அவனது மனைவியின் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. பேருந்து மெதுவாக கிளம்பியது. கண்களில் கண்ணீர் வடிந்தது.
– நந்தகுமார்
க.பாண்டிச்செல்வியின் கவிதைகள்
ஒரு நடுசியில்
நெடுந்தூரப் பேருந்துப் பயணமொன்றில்
சிறு நீர் கழிக்கும் உபாதையில் அவள்!.
பயணத்தின்போதெல்லாம் நீர் அருந்துவதை தவிர்ப்பாள்
நிறுத்துமிடங்களிளோ,
நிறுத்தச் சொல்லியோ ,
போய்விடுவார்கள்
அவர்கள்.
தாகமும், தவிப்புமாய்
அவஸ்தை கடக்க முயலுகிறாள்
எப்படி முடியும்
ஆத்திரத்தை அடக்கலாம்.,
வேறு வழியின்றி
ஒரமாகப் பேருந்து நிற்க வேண்டுகிறாள்.
முணுமுணுத்தவாறே அவர்கள்.
அகன்ற எட்டுவழிச்சாலையில்,
அடர்ந்த இருளைத் தேடுகிறாள்
ஒதுங்க,.
நாலாப் பக்கமும் ஒளிச்சிதறல்கள் ஒலிப்பான்களோடு
அவளை நோக்கியாவாறு விரைகின்றன
சிற்றின்பத்துடன்.
நின்ற பேருந்து ஜன்னல்களோ
இவளின் அசைவைக்
கண்காணிக்கிறது
கள்ளத்தனமாக.
அவளும் நின்றவாறே
தன் ஆடையை ஈரமாக்கினாள்
ஈரங்கெட்டவர்களின் பார்வையை விட
மூத்திர வாடையே மேலானாது.
********************
இணைந்து வாழ்தல் வரமென்று
மெனக்கெட்டு விதவைக்கு பொட்டிட்டாய்.!
முந்திய தழும்புகளை
காயப்படுத்தி
எச்சில் இலையென்றாய்
சுவைத்துண்டு,
– க.பாண்டிச்செல்வி
பேருந்து பயணம் கவிதை – ச.சக்தி
ஜன்னல் ஓர இருக்கையில்
அமர்ந்த குழந்தைகள்
ஜன்னல் கம்பிகளை பிடித்தவாறு
எட்டிப் பார்க்கின்றன
மரங்களும் செடிகளும்
பின்னோக்கியே
எங்கே செல்கின்றன என்பதை கான,
பேருந்தின் முகப்பில்
பொழிந்த மழைத் துளிகள்
ஜன்னல் வழியாக ஒழுகி
குழந்தைகளின் ஆடைகளை ஈரப்படுத்துகின்றன
கதவுகள் இல்லாத ஜன்னல்களால்,
உடைந்து போன
ஜன்னல் கம்பிகள்
“கர் கர்”என்று ஒலியை
எழுப்புகின்றன பள்ளம் மேடுகளில்
ஏறி இறங்கும் பேருந்தின்
உருண்டை சக்கரங்களால்,
பேருந்தின் ஒலிக்கருவிகள்
பாம் பாம் என ஒலியை எழுப்புகின்றன
சாலை வளைவுகளில்
சாரை சாரையாக
அணிவகுத்து போகும்
மாட்டு வண்டிகளை கடந்து செல்ல,
பேருந்தில் அசந்து
தூங்கிய குழந்தைகளை
தட்டி எழுப்புகின்றன விசில் சத்தமும்
ஒலி எழுப்பும் கருவிகளும்,
கவிஞர் ச.சக்தி ,
அழகு பெருமாள் குப்பம்,
பண்ருட்டி,
வசந்ததீபன் கவிதைகள்
சாத்தியங்களைப் பின் தொடர்ந்து…
******************************************
விற்பது லாபத் தேட்டம்
வாங்குவது தேவைகளின் வெற்றிடம்
பொருள்வயின் பிழைப்பது
பெரும் பிழை
மரணத்திற்குப் பிறகு
மனிதனை நினைத்துத்தான் பார்க்கமுடியும்
ஆயிரங்கால் மண்டபத்தில்
இறந்த என் நண்பனைப் போல
ஆங்கிலேயர் ஒருவர்
நானாகி இருக்கமாட்டேன்
நானை மறக்கமாட்டேன்
நானாக வாழமாட்டேன்
வளைந்து வளைந்து போகிறது மலைப்பாதை
நெளிந்து நெளிந்து
விரைகிறது பேருந்து
ஒடிந்து ஒடிந்து பயணிக்கிறேன் நான்
படித்துக் களித்து உறங்குவதற்கல்ல
வெடித்து கிளர்ந்து உக்கிரமாவதற்கே
கலை கவிதை எழுத்து எல்லாம்
மீதி சில்லறை வாங்கும் நான் அற்பம்
கொடுக்கத் தயங்கும் நீ மேன்மை
சல்லிக்காசானாலும் என்னுடமை ஏய்க்க அனுமதியேன்
பறக்கும் மனது
தவக்கும் உடல்
ஊரோ ரெம்ப தூரம்
எனக்கும் உனக்குமான இடைவெளி குறுகியது
யாராலும எதாலும் அதனை நிரப்பமுடியாது
நானும் நீயும் வேண்டுமானால் வார்த்தைகளால் இல்லாது செய்யலாம்.
மூடுதிரை
*************
எழுதும் மெளனத்துள்
பிரளய சப்தம்
திணறுகிறது
விடுபட
புல்லாங்குழல் ஏந்தியவன்
மனதில் பூந்தோட்டம்
மூங்கில் காட்டின்
மரண ஓலம் காற்றில்
மெளனமாய் இருக்கிறீர்களே !
பிணங்களா நீங்கள் ?
உயிர் உள்ளதென்று
சப்தமிடுங்கள் உரத்து
உழுதவனுக்கு மிச்சமாய்
பட்டினியும் பசியும்
உழைத்தவனுக்கு மீதியாய்
நோயும் நொம்பலமும்
சூடும் சுரணையும் ஆறிப்போச்சு
கொதிப்பும் ஆவேசமும் தணிஞ்சு போச்சு
சீக்கிரம் போயி முன்னால க்யூல நிக்கணும்
இசையும் கவிதையும் பணத்தை விளைவிக்கின்றன
கதையும் நாடகமும் காசுகளைத் தருவிக்கின்றன
நெல்லோ? புல்லோ?
மாடுகள் மேய்கின்றன
மது நெடியில் கவியரசர்கள் பிறந்தனர்
கஞ்சாப்புகையில் மகாகவிகள் உதயமாயினர்
வேர்வை வாசத்தில் மனிதக்கலைஞர்கள் உதித்தெழுந்தனர்.
நூல் அறிமுகம்: பா. ஜோதி நரசிம்மனின் அத்தியூர் விஜயா – கருப்பு அன்பரசன்
தில்லியில் ஒரு பணிப் பொழுதின் இரவினில் பேருந்து ஒன்றினுள் இளம்பெண்ணுக்கு நிகழ்த்தப்பட்டபாலியல் கொடூரம் என்பது இந்திய நாட்டையே உலுக்கி எடுத்தது.. இந்திய மாநிலங்களின் தலைநகர் எங்கிலும் மெழுகுவத்திகள் ஏற்றப்பட்டது..
குற்றவாளிகளை கைது செய்யக்கோரி ஊர்வலங்கள் நடத்தப்பட்டது; சமூக வலைத்தளங்கள் தொடங்கி காட்சி ஊடகங்கள் என இந்தியா முழுவதிலும் பரவலாக பேசப்பட்டது. சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட பொழுது தமிழகமே கொதித்து எழுந்தது..
அதே தில்லி மாநகர் காவல் துறையின் பெண் அதிகாரி ஒருவர் பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்டு திமிர் எடுத்து ஆண்களால் 57 இடங்களில் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பொழுது பத்திரிகைகள் கூட இந்த விஷயங்களை செய்தியாகக் கூடப் பேச மறுத்தது; அவர் முஸ்லிம் என்கிற ஒரே காரணத்திற்காகவே.
இப்படி இந்தியாவெங்கிலும் பல பெண்கள் பெண் குழந்தைகள் பாலியல் சீண்டலுக்கு ஆதிக்க அதிகார சக்திகளால் சீரழிக்கப்பட்டு கொலை செய்யப் படும்போதெல்லாம் ஒரு குறிப்பிட்ட படுகொலைகள் மட்டுமே பெரிய அளவிற்கு பேசப்படுவதாக மாறுவதின்சூட்சமம் என்ன..?
இங்கு பெண்களின் பாலியல் சீண்டல் கூட.. படுகொலைகள் கூட சாதி வெறி கொண்டே.. மத துவேஷத்தோடே பார்க்கப்படுகிறது.. பேசப்படுகிறது.. நெருப்பு பற்ற வைக்கப்படுகிறது..
சமூக வலைத்தளங்களில் ஆன்மீகம் சமூக விஞ்ஞானம் பொருளாதார அரசியல் விஷயங்கள் என அனைத்தும் விவாதத்திற்கு உள்ளாக்கப்படும் பொழுதே இப்படியான நிலை என்றால் சமூக ஊடகங்கள் வளர்ச்சி பெறாத அக்காலத்தில் தமிழகத்தில் நடைபெற்ற பாலியல் சீண்டல்கள் பேச படாமலேயே அல்லது ஒரு குறிப்பிட்ட சிலரால் மட்டுமே பேசப்பட்டு தொடர் போராட்டங்கள் நடைபெற்ற பொழுதும் சிலவற்றில் நீதி வழங்கப்பட்டும் பலவற்றில் நீதி மறுக்கப்படுவதும் நடந்தே வந்திருக்கிறது..
பெரும் சோகம் நிறைந்த நிஜ வரலாறுகள் நிறையவே இருக்கிறது இங்கு. சமூக வலைதளங்கள் வளர்ச்சியுற்ற இக்காலத்திலும் கூட பெண்கள்.. பெண் குழந்தைகள் பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலைகளாக அரியலூர் நந்தினி தொடங்கி இன்னும் பல வழக்குகளில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் இன்னும் பல பல்வேறு மக்கள் நல அமைப்புகளும் தொடர்ந்து வழக்குகளையும் போராட்டங்களையும் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
முதலாளித்துவ அரசியல் கட்சிகளும் இன்னும் பல அமைப்புகளும் பெரும்பாலான நேரங்களில் வாய்மூடி மவுனமாக கடந்து சென்றிருக்கிறார்கள்.. கடந்துதான் சென்று கொண்டு இருக்கிறார்கள் இன்றும்.
பெண்களுக்குள்ளும் ஆண்களுக்கு இருக்கக்கூடிய சாதித் திமிர் என்பது பல நேரங்களில் பெண்களின் பாலியல் சீண்டல்களையும் பாலியல் கொடுமைகளையும் பாலியல் கொலைகளையும் மூடி மறைத்துக் கொண்டே தான் இருக்கிறது.. எப்போதாவது பேசினாலும் கூட ஒரு கட்டத்திற்கு மேல் பேச மறந்து விடுகிறார்கள் அல்லது வேறு செய்திகளில் தன்னை உட்படுத்தி மடை மாற்றிக்கொள்கிறார்கள்.
ஆனால் இது ஒடுக்கப்பட்ட மக்கள் சமூகத்தின் அத்தனை நிலைகளில் இருந்தும் ஒடுக்கப்பட்டே இருந்து வரக்கூடிய இருளர்கள், திட்டமிட்டே மலையில் இருந்து சமவெளிக்கு துரத்தி விரட்டியடிக்கப்பட்ட மலைவாழ் மக்கள் இவர்களின் பெண்கள் என்றாகிற போதோ செய்தியாகக் கூட பல நேரங்களில் வருவது கிடையாது.. பெரும்பாலும் அரசு அதிகாரங்களும் காவல்துறையும் ஆதிக்க சக்திகளும் பணம் படைத்தவர்களும் தொடர்ந்து மூடிமறைக்க செய்யவே எத்தனித்து இருக்கிறார்கள் அம்மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்களையும் அநீதிகளையும்.
அனைத்து தடைகளையும் உடைத்தெறிந்து மீறி வெளி உலகிற்கு கொண்டுவரப்பட்டதென்னவோ சிதம்பரம் பத்மினி, கம்மாபுரம் பார்வதி, அத்தியூர் விஜயா. காவல்துறையினரின் கூட்டு பலாத்காரம் என்கிற பெரும் கொடூரம் நிகழ்ந்த வாச்சாத்தி மலை மக்கள்..
இவைகள் அனைத்துமே இடதுசாரி அமைப்புகளும் குறிப்பாக மார்க்சிஸ்டுகள், மலைவாழ் மக்களின் சங்கங்களும் பழங்குடி மக்களின் பாதுகாப்பு அமைப்புகளும் முன்னின்று விடாப்பிடியாக தொடர்ந்து போராடியதன் விளைவே சமவெளி மக்களின் பேசு பொருளாக மாறியது.
வாச்சாத்தி என்கிற பெயரில் கிராமமே இல்லை என்று சட்டமன்றத்தில் பேசிய அமைச்சர் ஒருவரின் முகமூடி கிழித்தெறியப்பட்டது மார்க்சிஸ்டுகளால். பாதிக்கப்பட்ட பலரின் மரணத்திற்குப் பிறகே அம் மக்களுக்கு நீதி வழங்கப்பட்டது நம்முடைய நீதித்துறையால்.
சொந்தமாக இடம் இல்லாதவர்கள்.. கிடக்கும் இடங்களில் வேலைக்கு செல்லக் கூடியவர்கள்.. ஊருக்கு பத்து அல்லது பன்னிரண்டு குடும்பங்கள் மட்டும்தான்.. இந்த குடும்பங்கள் அனைத்துமே அந்த கிராமத்தில் இருக்கும் நிலங்கள் எல்லாவற்றையும் தங்களின் கைகளில் வைத்திருக்கும் மற்ற ஆதிக்க சாதியை சார்ந்தவர்களின் தயவை எதிர்பார்த்து தான்..
இவர்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் இவர்களுக்காக நியாயம் கேட்க நீதி கேட்க எவரும் கிடையாது, நாதியற்றவர்கள் இவர்கள் என்கிற எண்ணத்தோடு, அவர்களின் பரம்பரையே குற்றப்பரம்பரைதான் என்று பழக்கப்படுத்தப்பட்ட அதிகாரச் சாதித் திமிர் காவல் துறையினராக இருந்துவிட்டால்! அவர்கள் தினவெடுத்து ஆடும் ஆட்டத்தின் புகலிடமாக இருளர்களின் குடிசைகளும் அதில் வாழும் எளிய மக்களும், எல்லோராலும் எல்லாக் காலத்திலும் ஒடுக்கப்பட்டு வரும் பெண்களுமே ஆவார்கள்.
சமூகத்தில் நடைபெறும் கிரிமினல் குற்றங்களின் பின்னணியை தேட வக்கில்லாமல் துப்பில்லாமல் அதை முடித்து வைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக, கல்வி அறிவு மறுக்கப்பட்டதால் எலி, பாம்பு பிடித்தும்; செங்கல் சூளைகளில் கொத்தடிமைகளாக உழைத்தும் கிடைக்கும் வருவாயில் வாழ்க்கை நடத்தி வரும் இருளர்கள் மற்றும் பழங்குடிகள் குடும்பத்தில் இருக்கும் அத்தனை பேரையும் மிரட்டியும் அடித்தும் துன்புறுத்தியும் அவர்களின் பெண்களை பாலியல் துன்பத்திற்கு உள்ளாக்கியும் தாங்கள் அணிந்திருக்கும் காக்கிச்சட்டையில் நேர்மைக்கு கஞ்சி போட்டு விரைப்பாக வைத்துக்கொண்டார்கள் அம்மக்களின் உடல் அவயங்களின் இருந்து வெளியேற்றப்பட்ட ரத்தத் சூட்டினால்.
தெறித்து விழும் எளிய மனிதர்களின் குருதி சுவடுகள் ஏதும் வெளியே தெரியாமல் மிகக் கவனமாகவே பார்த்துக் கொண்டார்கள் உடன் இருக்கும் ஆதிக்க சாதி அதிகாரக் கூட்டத்தோடு கைகோர்த்து காவல்துறையினர். இவை அனைத்தையும் உடைத்தெறிந்து தெறித்து வெளியே வந்தவள் தான் அத்தியூர் விஜயா.
ராசா கண்ணுவின் துயரத்தை.. பார்வதியின் போராட்டத்தை.. அவர்களுக்கு துணையாக இருந்த கம்யூனிஸ்டுகளின் நேர்மையை..
காவல் துறையோடு சாதிவெறியும் நடத்திட்ட அட்டூழியத்தை திரைமொழியில் காட்சிப்படுத்தி வெளியே வந்து இருக்கும் ஜெய் பீம் திரைப்படத்தை தொடர்ந்து எழுத்தில் ஆவணமாக, நாவலாக வெளிவந்து இருக்கிறது அத்தியூர் விஜயா. நாவலை எழுத்தாளர் பத்திரிக்கையாளர் பா.ஜோதி நரசிம்மன் அவர்கள் சாதாரண எழுத்துக்களால் வலியும் துயரமுமாக பதிந்திருக்கிறார். பேசப்படாத மக்களின் வாழ்நிலையை எல்லோரும் பேசும் காலமாக இன்றைய சூழலை உருவாகியிருக்கிறது. ஜெய் பீம் திரைப்படம் அதற்கு களம் அமைத்துக் கொடுத்திருக்கிறது.
எளிய மனிதர்களின் வாழ்வினை சூறையாட தமிழக காவல்துறையும் பாண்டிச்சேரி காவல்துறையும் எப்படி ஒரு சேர கைகோர்த்து இருக்கிறார்கள்.. கைகோர்க்கும் புள்ளியாக பாண்டிச்சேரி சாராயம் எப்படி இருந்தது என்பதையும்.. அத்தியூர் விஜயா எவ்வாறெல்லாம் மிரட்டப்பட்டு பாலியல் கொடூரத்திற்கு உட்படுத்தப்பட்டார் பாண்டிச்சேரி காவல்துறையினரால் என்பதனையும் அதற்குத் தமிழ்நாடு காவல்துறை ஏவல் ஆளாய் இருந்து சேவை புரிந்த அவலத்தையும் நீசத்தனத்தையும் சாதாரண வார்த்தைகளால் நம்மிடையே பேசுகிறது அத்தியூர் விஜயா நாவல். காவல் துறைக்கு ஆள் காட்டியாக இருந்த மாசி குடும்பம் எப்படி அதே காவல்துறையால் சின்னாபின்னப்படுத்தப்பட்டு சீரழிக்கப்படும் நயவஞ்சகத்தை நாவலுக்குள் பேசியிருக்கிறார் ஜோதி நரசிம்மன்.
சம்பந்தமே இல்லை என்றாலும் திருட்டு வழக்குகளில் இருளர் குடும்பத்தின் ஒவ்வொரு ஆணும் பெண்ணும் காவல்துறையினரால் தொடர்புபடுத்தி வழக்கினை முடித்து வைக்கும் எண்ணம் அவர்கள் மனதில் வழிவழியாக பழக்கப்படுத்தி வந்ததற்கான சமூக சூழலையும் காரணங்களையும் நாவலுக்குள்
ஆதாரங்களோடு பதிவாக்கி இருப்பார்.
பாண்டிச்சேரி காவல்துறையினரால் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப் பட்டு சீரழிக்கப்பட்ட அத்தியூர் விஜயாவின் வழக்கு பதிமூன்று ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வெளியானது..
விழுப்புரம் மாவட்டத்தில் புதியதாக அமைக்கப்பட்ட நீதிமன்றத்தில் முதல் தீர்ப்பாக அது இருந்தது. அத்தியூர் விஜயாவின் வாழ்வினை சூறையாடிய நான்கு காவலர்களுக்கும்
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதாக நீதிபதி தீர்ப்பை வாசித்து முடித்தார்.
இத்தகைய தீர்ப்பு வேண்டி அத்தியூர் விஜயாவின் இடைவிடாத மன வலிமை மிகுந்த போராட்டம்.. அவருக்கு இடையூறாக அவர் கிராமத்தைச் சேர்ந்த ஆதிக்க சாதி ஆண் பெண்கள் என அனைவரும் ஒன்று திரண்டு ஏளனம் செய்ததோடு மட்டுமல்லாமல் “எங்கேயும் நடக்காததா நடந்துவிட்டது, யாருக்கும் வராத ரோஷம் இவளுக்கு எப்படி” என்கிற திமிர் தனத்தையும் எதிர்த்து; இப்படியான ஒரு தீர்ப்பிற்கு அத்தியூர் விஜயாவோடு சேர்ந்து பேராசிரியர் பிரபா கல்விமணி.. இப்படி அனைவரின் போராட்டத்தோடு ஒரு தீர்ப்பு கிடைக்கப்பெற்றது அத்தியூர் விஜயாவிற்கு.
ஆனால் அந்த தீர்ப்பு எப்படி சென்னை உயர்நீதிமன்றத்தால் மாற்றி அமைக்கப்பட்டு அந்த நான்கு காவலர்களும் ஜாமீனில் வெளி வந்தார்கள் என்பதுதான் நம்மை சுற்றி இருக்கும் சமூகத்திலும் அரசு அதிகாரத்திலும் காவல்துறையிலும் நீதித்துறையிலும் எளிய மக்களுக்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக வலுவான மனநிலை கட்டமைத்து வைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் இந்த நாவல் பேசியிருக்கிறது.
குற்றவாளிகள் மூன்றே மாதத்தில் ஜாமீனில் வெளிவர பெற்றாலும் இந்த வழக்கு நடக்கும் காலம் முதலே தனி ஒரு மனுஷியாக இருந்து இவ்வாறு பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் ஆதரவாக ஒரு போராளியாக எப்படி உருவானார் என்பதை இந்த நாவல் வழியாக அத்தியூர் விஜயா என்கிற போராளியை நமக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார் ஆசிரியர் ஜோதி நரசிம்மன்.
ஜெய்பீம் திரைப்படத்தின் வெற்றி இந்த நாவலை கொண்டுவர ஆசிரியருக்கு உத்வேகத்தை கொடுத்திருந்தாலும் கூட அந்த வெற்றியின் களிப்பில் இந்த நாவல் பலரால் பேச படாமலேயே கிடக்கிறது. நாவலாக வெளிவந்து இருக்கக்கூடிய அத்தியூர் விஜயாவின் வாழ்வு சமூகத்தில் மாற்றம் காண வேண்டி போராடிக்கொண்டிருக்கும் நம் அனைவருக்கும் மன உரத்தைக் கொடுக்க கூடியதாகும்..
நாவலின் வடிவமைப்பில் இன்னும் கூடுதலாக கவனத்தை செலுத்தி இருக்கலாம்.. எழுத்தின் அளவை (font size) குறைத்திருக்கலாம்.. பக்கங்கள் குறைந்தால் என்ன..? அது ஒன்றும் வாசிப்பவருக்கு பிரச்சனையாக இருக்காது.. பக்கங்களில் பேசப்படும் நிஜம் மட்டுமே வாசிப்பவன் மனதை தொட்டுச்செல்லும் அவனை யோசிக்க செய்யும் அவனை மடைமாற்றச் செய்யும்..
நாவல் எந்தவிதமான புனைவும் இன்றி நேரடியாக விஷயங்களை பேசியிருக்கிறது.. நாவலுக்குள் உரையாடும் அனைவருமே உண்மையான கதாபாத்திரங்கள்.. எளிமையான வார்த்தைகள்.. நாவல் என்று வருகிற பொழுது அந்த கதாபாத்திரங்கள் வாழும் நிலம் சார்ந்த சூழலையும் அதன் அழகியலையும் விவரிப்பது இன்னும் சரியாக இருக்குமோ என்று எனக்கு யோசிக்க தோன்றுகிறது.
ஆனாலும் கூட ஒரு போராளியின் வாழ்வினை தமிழ்ச்சமூகம் அறிந்திட முனைப்பு காட்டி வெளியிட்ட ஆசிரியார் பா. ஜோதி நரசிம்மன் அவர்களுக்கும்; தமிழ் எழிலன் வெளியீட்டகத்திற்கும் எளிய ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பில் நன்றி கூறுவது அவசியம் எனவே நினைக்கிறேன்.
இருவருக்கும் பேரன்பும் வாழ்த்துக்களும்.
தோழர் அத்தியூர்_விஜயா நம் மனதை உரமேற்றுவார்.
வாசியுங்கள் ஒருமுறையேனும்.
அத்தியூர்_விஜயா
பா_ஜோதி_நரசிம்மன்
தமிழ்எழிலன்_வெளியீட்டகம்
விலை.₹.150/-
பக்கம் 152.