தொழிற்கல்வி கவிதை – செ.கார்த்திகைச்செல்வன்
உலகு செழிக்கும் கலைகள் யாவும்
கற்றல் அழகு!
களைகள் அறுத்து நிலைகள் உயர்த்தும்
கற்பித்தலும் அழகு!
தொய்வின்றித் தோழமை போற்றும்
அந்நியர்தேசம் அழகு!
அங்குச் செழித்தோங்கும் தொழில்கள்
யாவும் மானிடர்க் கழகு!
கடலையும் காற்றையும் ஆவியாக்கும்
சுடும்வெப்பம் அழகு!
ஆவியைக் குளிர்வித்து நன்னீர்பெறும்
தொழில்நுட்பம் அழகு!
தொழிலுக்கு மட்டுமே தோள்கொடுத்தால்
வெற்றி வாராது!
தொழிலோடு நுட்பமும் சேர்ந்தால்
தோல்வி நேராது!
தொழிலென்பது உடலானால்
நுட்பமென்பது உயிராகும்!
தொழில்நுட்பம் உருவானால்
தொழிற் கல்வியே கருவாகும்!
உலகமென்பது மிகப்பெரிதென்றால்
உள்ளங்கையில் கொடுப்பது நுட்பம்!
வானில் அந்நியன் முற்றுகையிட்டால்
அவனை விரட்டியடிப்பது நுட்பம்!
நாளை பூமி பிளவுற்றால் அதை
இன்றே சொல்வதுதான் நுட்பம்!
செவ்வாய் அடையும் செயற்கைக் கோளை
புவியில் இயக்குதலே நுட்பம்!
தொழிலும் நுட்பமும் சந்திக்கிறபோது
தொழிற்கல்வி அவசியமாகிறது!
தொழிற்கல்வி அவசியமாகிறபோது
கற்றல் கற்பித்தல் அத்தியாவசியமாகிறது!
இடையூறின்றி இவ்வையம் இயங்க
தொழிற்கல்வியே எரிபொருள்!
தொழிற்கல்வி வழியே தொழிற்சாலை
மலர மறைந்திடுமிங்கே காரிருள்!
நாட்டின் முதுகை நிமிரச்செய்ய ஏட்டுக்
கல்வி மட்டுமே போதாது!
வீட்டின் வறுமை துடைத்தெறிய
தொழிற்கல்விக்கு இங்கே ஈடேது!
வருமானத்துடன் தன்மானம் தந்திடும்
மூலதனம்தான் தொழிற்கல்வி!
மூடத்தனத்திலே மூழ்கவிடாது கற்றல்
கற்பித்தல்தான் தொழிற்கல்வி!
தொழில்கள் கற்றால் உற்பத்தி பெருகி
தேவைகள் யாவும் பூர்த்தியாகும்!
வேற்றார்களிடம் கைகள் ஏந்தாமலே
வேலைவாய்ப்பும் நேர்த்தியாகும்!
துறைகள்சார்ந்து தொழிலை வளர்த்தால்
குறைகள்இன்றி கோலோச்சலாம்!
இளந்தலைமுறைகள் கற்றுக் கொண்டால்
வரும்தலைமுறைகள் வாழ்வில் வெல்லலாம்!
மானிடர் மிரளும் பேரிடர் ஒழிந்திட
தொழிற்கல்விதானே ஆணிவேர்!
கற்றலும் கற்பித்தலும் கொண்டு
நலம்பேணுவதே நம் ஆதிவேர்!
– செ.கார்த்திகைச்செல்வன்