Thanges Poems 31 தங்கேஸ் கவிதைகள் 31

தங்கேஸ் கவிதைகள்




கவிதை 1
நினைவின் வெளியில் குதித்தவன்
மீண்டும் திரும்புவதேயில்லை
மீன்களுக்குப் புழுப் போல
சொற்களுக்கு இவன்

ஆட்காட்டி விரலையும் பெருவிரலையும் குவித்து
தெருவில் பட்டாம் பூச்சி பிடித்துப் போகின்றவனை
புன்னகையில் கடந்து போகும் உதடுகள்
பிறகு குற்றவுணர்வு கொள்கின்றன

சுழன்று வரும் பிரபஞ்சமென
உதிரும் அரசமரத்திலை ஒன்று
முகத்தை வருடிச் செல்கிறது

பால் பேதமற்ற வெளியில்
ரூபத்திற்கும் அரூபத்திற்குமான
மங்கிய ஒளியில்
நிற்கும் அவன் மீது
இலைகளென உதிரும் பொழுதுகள்
தங்களைப் புதைத்துக் கொள்கின்றன

பிரக்ஞைக்கும் வெளியே
அறியாமையால் பிதற்றும் இவனை
இரவும் மன்னித்துக் கொண்டேயிருக்கிறது
தன் பங்கிற்கு.

கவிதை 2
மூடிய கண்களுக்குள் .
கணநேரம் சுழன்றாடுகிறது குழந்தமையின் சுடர்
நான்குகால் பாய்ச்சலில்
எல்லையற்ற வெளியில் பறந்து போகின்றேன்
பின்னோக்கிப் பாயும் குதிரைக்கு
கடிவாளம் ஏதும் பூட்டப்படவில்லை

தூக்கக் கலக்கத்தில்
உள்ளங்கையைக் கால்சாராய்
பையிலிருந்து எடுக்கிறான்
அப்பாவிச் சிறுவன்
கையோடு வருகிறது
வரையாடு தீப்பெட்டிக் கூடு

உள் கூட்டை
வலது கை ஆட்காட்டி
விரலால் தள்ளித் திறக்க
நிரப்பப்ட்ட பசும் கருவேல இலைகளுக்கு மத்தியில்
அசைகின்றன
மரகதப்பொன் வண்டுகள்

அருகில் பனித்துளி வடிவ
வெண்முட்டைகள்
வெண்முட்டைகளின் வெது வெதுப்பை
உள்ளங் கைகளுக்குள் உருட்டிப் பார்க்கிறான்

காலம் முதுமைக்கும் பால்யத்திற்கும்
இடையில் சோழியாக
உருண்டோடிக் கொண்டிருக்கிறது