Suthanthira Katru Poem By R. Sivakumar சுதந்திர காற்று கவிதை - ரா.சிவக்குமார்

சுதந்திர காற்று கவிதை – ரா. சிவக்குமார்

பெண்ணே நீ வலிகளால்
உருவாக்கப்பட்டவள் அல்லள்
வழிகளை உருவாக்கப் பிறந்தவள்.

சுவாசக் காற்றை
சிறைவைத்த சரித்திரம் உண்டா
உன் சுதந்திரமும், உன் உரிமையும்
உன் சுவாசக் காற்றென்பதை
உணர்ந்து கொள்.

வண்ணப்பூக்கள் மலர்வதற்கோ
வண்ணத்துபூச்சிகள் சிறகடிக்கவோ
யாரிடத்தேனும் அனுமதி கோருமா?

விழிநீரில் சரித்திரம் எழுதாதீர்கள்
விண்மீனாய் வெளிச்சமிடுங்கள்
நட்சத்திரப் பிழம்பாய் மனச்சிறகை விரி
சிறகின் தகதகப்பில் தடையெல்லாம்
தகர்ந்துபோகட்டும்.

உன் பாதம் படும் இடம் எல்லாம்
பாதைகள் தான்
முதல் அடியைப் பதித்துவிடு
உன் பாதை தேடி இலட்சம் பாதங்கள்.

தடைகளின் தோள் மீதேறி
தொடுவானம் பார் தோழி
எல்லாம் எட்டிவிடும் தூரம்தான்…