வில்லியம் ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜுலியட் நாடகம் (இன வெறி அறியா காதல் – பாகம்1) : தமிழில் – தங்கேஸ்
இடம் : வெரேனா வீதி
பொழுது – பகல்
பாத்திரங்கள்
கேபுலட் குடும்பத்தின் வேலைக்காரர்கள்
சாம்சன் மற்றும் கிரிகரி
கேபுலட்அவர் மனைவி திருமதி கேபுலட்
மற்றும் உறவினன் டைபால்ட்
மூத்த மாண்டேக் அவர் மனைவி திருமதி மாண்டேக்
மற்றும் அவர்களின் உறவினர் பென்வாலியோ மற்றும் ரோமியோ ,
மாண்டேக்கின் வேலைக்காரர்கள் ஆப்ரம் மற்றும் செர்விங்கம்
பொதுமக்கள் மற்றும் வெரோனாவின் அரசன் எஸ்கேலஸ் ஆகியோர்
, Shakespeare’s
Romeo and Juliet
தமிழ் மொழியாக்கம்
முன்னுரை
கதை சூழல் :
வெரோனா ஒரு அழகிய இனிய நகரம் .அங்கே இரண்டு பெரும்
குடும்பங்களுக்கு இடையே தீராப் பகை எப்போதும் கொழுந்து விட்டு
எரிந்து கொண்டிருக்கிறது.ஒன்று மாண்டேக் (ரோமியோ குடும்பம்)
மற்றொன்று கேபுலட் (ஜூலியட் ). இந்தப் பிரபுக்கள் குடும்பங்களின்
குலப்பகை அந்த நகரத்தையே ஆட்டிப்படைக்கிறது.
இன வெறி அறியா காதல் :
ரோமியோ மாண்டேக் குடும்பத்தை சேர்ந்த பதினாறு வயது இளைஞன்
அழகன் வீரன். இவன் ரோசலின் என்ற அழகி மீது காதலில் விழுகிறான்.
அவள் கேபுலட் குடும்பத்தின் உறவினள். ஆனால் ரோசலின்
ரோமியோவின் காதலை அங்கீகரிக்கவில்லை. அவளது அன்பை பெறாத
ரோமியோ ஒரு பைத்தியம் போல புலம்பிக் கொண்டு திரிகிறான். அவன்
பெற்றோர்களுக்கு அது கவலையளிக்கிறது. காரணத்தை கண்டுபிடி என்று
ரோமியோவின் நண்பர்களை வேண்டுகிறார்கள். ரோமியோவின்
நண்பர்கள் ரோசலின் என்ற அழகி தான் காரணம் என்று
கண்டுபிடிக்கிறார்கள்.
காட்சி தொடங்குகிறது
( கேபுலட் குடும்பத்தின் வேலைக்காரர்கள் சாம்சன் மற்றும் கிரிகரி
ஆகிய இருவரும் மாண்டேக்கின் குடும்பத்தைப் பற்றியும் அவர்களின்
குடும்பத்துப் பெண்கள் பற்றியும் மிகவும் தரக்குறைவான கொச்சையான
மொழியில் பேசிக்கொண்டே வீதியில் நடந்து சென்று
கொண்டிருக்கிறார்கள் )
சாம்சன் : நான் உண்மையை சொல்றேன் அவங்க குப்பையை
நாம சுமக்க முடியாது
கிரிகரி: ஆமா அப்படி சுமந்தா நாம குப்பைக்காரங்களா மாறிடுவோம்
சாம்சன் : நான் என்ன சொல்ல வர்றேன்னா அவங்க நம்மளை
வெறுப்பேத்துனா உடனே நாமளும் நம்மை வாளை உருவிடனும்
கிரிகரி நீ வாளை உருவறதெல்லாம் இருக்கட்டும். முதல்ல
சட்டைக்காலர்ல இருந்து உன் கழுத்தை உருவு.
அது உள்ள முங்கிப்போய் கிடக்குது.
சாம்சன் : இதோ பாரு எனக்கு கோபம் வந்தா உடனே அடிச்சிருவேன்.
கிரிகரி : ஆனா உனக்குத்தான் கோபமே வராதே
சாம்சன் : யாரு சொன்னா எனக்கு பயங்கரமா கோபம் வரும்.
மாண்டேக் வீட்டு நாயைப்பார்த்தாக் கூட போதும்
அப்படியே……..
கிரிகரி : பயந்துகிட்டு அப்படியே ஓடிப்போயிருவ அதுதான சொல்ல வர்ற?
சாம்சன் : இல்லை எனக்கும் பயங்கரமா கோபம் வரும்னு சொல்ல
வர்றேன்
கிரிகரி : உனக்கு பயங்கரமாகோபம் வருமா ? கோபம் வந்தா எப்படி
வரணும் தெரியுமா ? கர்ண கொடூரமா வரனும் கடைசி
வரைக்கும் எதிர்த்து நிக்கனும் முடியுமா உன்னால ?
சாம்சன் : அட உனக்கு இன்னும் புரியலையா ? அந்த வீட்டு
நாயைப்பார்த்தாக்கூட போதும் அடங்காத கோபத்துல அப்டியே
நின்னுடுவேன்.
நாயைப் பார்த்தாலே அப்படின்னா அப்ப மனுசங்களைப்
பார்த்தா எப்படின்னு நீ புரிஞ்சுக்கோ
எதிரியோட ஆளுங்க அது ஆணோ பொண்ணோ எதிர்ல
பார்த்துட்டேன் அவ்வளவு தான் என்ன செய்வேன்னு எனக்கே
தெரியாது.
கிரிகரி : என்ன செய்வ ?
சாம்சன் : அப்படியே சுவரோரம் மறிச்சு நின்னுகிட்டு அவங்களை
சாக்கடையில தான் நடக்க விடுவேன்
கிரிகரி : இதுலயிருந்தே நீ சோதாப்பயன்னு தெரியுதா ?
சொத்தைப் பயல்கள் தான் எப்பவும் இப்படி சுவரோரம்
ஒதுங்குவாங்க
முழிக்காத சுவரோரம் ஒதுங்குனா நாம வீக்குன்னு அர்த்தம்
தெரியும்ல
சாம்சன் : ( கிண்டலாக ) அதனால தான் அந்த வீட்டுப் பொம்பளைங்க
எல்லாம் சுவர் பக்கம் ஒதுங்குறாங்களா ?
ஆனா எனக்கு அதெல்லாம் தெரியாதுப்பா அந்த வீட்டு
ஆம்பளங்களப் சுவரோரமாப் பார்த்தா ஆக்ரோஷமா மோதி
அப்படியே தெருவுல தள்ளி விடுவேன் ஆனா அதுவே
பொம்பளங்கன்னு வச்சுக்கோ அப்படியே அந்தப் பக்கம்
தள்ளிட்டுப் போயி …..
கிரிகரி : இதோ பார் சண்டை நம்ம எசமானர்களுக்குள்ள தான்
நாமெல்லாம் அவங்களோட வேலைக்காரங்க அதப்புரிஞ்சுக்கோ
சாம்சன் : ஆனா எனக்கு எல்லாமே ஒண்ணு தான். நான்
ஆம்பளைகளோட சண்டை போட்டா அப்படியே புயல் மாதிரி
பொங்குவேன் ஆனால் சண்டையே
பொம்பளைகளோடன்னு வச்சுக்கோ பூ மாதிரி குளிருவேன்
ஆனால் ஒண்ணு பொம்பளையா இருந்தாலும் கோபம்
வந்திருச்சா அவங்க தலையை சீவாம விடமாட்டேன்
கிரிகரி : என்னது அவங்களுக்கு தலை சீவி விடுவியா ?
சாம்சன் : தலையையும் சீவுவேன் சில நேரம் தலை முடியையும்
சீவி விடுவேன் அது அப்ப அப்ப மாறும் என் மனநிலையைப்
பொறுத்தது .
நீ எடுக்க வேண்டிய அர்த்தத்துல எடுத்துக்கோ எனக்கு அதப்
பற்றி கவலை இல்லலை
கிரிகரி : ( சனங்களைப் பார்த்து ) பெண்களே உஷார் இவனை
கொஞ்சம் கவனிச்சுக்கோங்க
சாம்சன் : ( இரட்டை அர்த்தத்தில் ) அவங்க என்னை கவனிக்க
ஆரம்பிச்சிட்டாங்கன்னா அப்புறம் கவனிக்கிறதை
நிறுத்தவே மாட்டாங்க. கடைசில என்னை ஒரு கம்பீரமான
ஆண் அப்டின்னு சொல்லிட்டுத்தான் போவாங்க
கிரிகரி : நல்ல வேளை அவங்க உன்னைய நல்ல ஆண்ணு
சொன்னாங்க நல்ல மீன்னு சொல்லியிருந்தா யாராவது உப்பு
மசாலாவை உன் மேல தடவி அப்படியே பொறிச்சு
சாப்பிட்டிருப்பாங்க
( அப்போது மாண்டேக்கின் வேலைக்காரர்கள் ஆப்ரம் மற்றும் செர்விங்கம்
இருவரும் எதிரே வந்து கொண்டிருக்கிறார்கள் )
கிரிகரி : உன்னேட ஆயுதத்தை உடனே உருவு . அதோ மாண்டேக் வீட்டு
வேலைக்காரங்க எதிர்ல வர்றாங்க
சாம்சன் : ( சட்டென்று பயந்து போய் ) அடடா இப்பா பார்த்து நான்
நிராயுதபாணியா நிக்கிறேனே. பரவாயில்லை நீ அவங்களோட
போயி மோது. நான் உனக்கு உதவுறேன்.
கிரிகரி : (கிண்டலாக ) எனக்கு எப்படி உதவுவ அவங்க பக்கத்துல வந்த
உடனே அப்படியே தலைதெறிக்க ஓடிப்போயிருவ அதானே ?
சாம்சன் : நீ என்னைப் பத்தி எதுவும் கவலைப்படாத
கிரிகரி : என் கவலையே உன்னைப்ப்ற்றித்தான்
சாம்சன் : சரி சரி நாமளா முதல்ல சட்டத்தை மீற வேண்டாம் .
சண்டையை முதல்ல அவங்களே ஆரம்பிக்கட்டும்.
கிரிகரி : கேட்டுக்கோ அவங்க நம்ம பக்கத்துல வரும்போது அவங்களைப்
பார்த்து நான் என் கட்டை விரலை கடிப்பேன் .அத அவங்க
எப்படி வேணாலும் எடுத்துக்கட்டும் அதப் பற்றி எனக்கு கவலை
இல்லை.
சாம்சன் : இல்லை நான் என் கட்டை விரலை அவங்களைப் பார்த்து
கடிக்கப் போறேன்.அது அவங்களுக்கு பயங்கரமான
அவமானம்., அத மட்டும் அவங்க பொறுத்துகிட்டாங்கன்னா
அவங்க ஆம்பளங்களே கிடையாது
( சாம்சன் அவர்களைப் பார்த்து கட்டை விரலை கடிக்கிறான் )
ஆப்ரம் : (சாம்சனைப் பார்த்து ) எங்களைப் பார்த்து உன் கட்டை விரலை
கடிச்சியா ?
சாம்சன் : என் கட்டை விரலை நான் கடிச்சேன்
ஆப்ரம் : (சாம்சனைப் பார்த்து ) எங்களைப் பார்த்து உன் கட்டை விரலை
கடிச்சியா ?
சாம்சன் (கிரிகரியைப் பார்த்து ) இந்தக் கேள்விக்கு நான் ஆமான்னு பதில்
சொன்னா சட்டம் நம்ம பக்கம் இருக்குமா இல்ல அவங்க பக்கம்
இருக்குமா
கிரிகரி : அவங்க பக்கம் தான்
சாம்சன் (ஆப்ரமைப் பார்த்து ) நான் என் கட்டை விரலை கடிச்சேன்
ஆனா உன்னைப் பார்த்து கடிக்கலை
கிரிகரி : (ஆப்ரமைப் பார்த்து ) இதுக்காக நீங்க சண்டையை ஆரம்பிக்கப்
போறீங்களா ?
ஆப்ரம் : இல்லையே
சாம்சன் : ஆரம்பிச்சாலும் அதப் பத்தி எங்களுக்கு கவலை இல்லை.
நாங்க யார்னு அப்பத்தான் உங்களுக்குத் தெரியும்
ஆப்ரம் : எங்களுக்குப் பயமில்ல
சாம்சன் : பார்க்கலாமா ?
( அப்போது மாண்டேக்கின் உறவுக்காரன் பென்வாலியோவும் மறுபுறம்
கேபுலட்டின் உறவுக்காரம் டைபால்ட்டும் அங்கே உள்ளே நுழைகின்றனர் )
கிரிகரி : ( சாம்சனிடம் ) இதோ நம்ம முதலாளியோட உறவுக்காரர்
சாம்சன் : ( ஆப்ரமிடம் ) மோதிப் பார்க்கலாமா ?
ஆப்ரம் : பொய் சொல்லாத
சாம்சன் (ஆப்ரமைப் பார்த்து ) நீ ஆம்பளையா இருந்தா வாளை உருவு
( கிரிகரியைப் பார்த்து ) எப்படி அடிச்சு நொறுக்கப்போறேன்னு
வேடிக்கை பாரு
பென்வாலியோ : ( வாளை உருவியபடியே ) நிறுத்துங்க அப்படியே
தள்ளிப்போங்க முட்டாள்களே நீங்க என்ன செய்றீங்கன்னு
உங்களுக்கே தெரியலை
( அப்போது கேபுலட்டின் உறவுக்காரன் டைபால்ட் அங்கே வருகிறான் )
டைபால்ட் (பென்வாலியோவைப் பார்த்து ) பென்வாலியோ போயும்
போயும் இந்தப் புள்ளைப் பூச்சிகள்ட்ட மோதப் போறியே உனக்கு
வெக்கமாவே இல்ல . இங்க திரும்பு உன்னை கொல்லப்போறவன்
இங்க நிக்கிறேன்.
பென்வாலியோ : ( டைபால்ட்டைப் பார்த்து ) நான் இவங்களை
அமைதிப்படுத்திக்கிட்டுத்தான் இருக்கேன். ஒண்ணு உன் வாளை
அந்தப்பக்கம் வீசு . இல்லை இவங்களை அமைதிப்படுத்துறதுக்கு
எனக்கு உதவி செய்
டைபால்ட் (பென்வாலியோவைப் பார்த்து ) என்னது வாளை வச்சுகிட்டு
சமாதானம் பேசுறியா ?
நரகம்ங்கற வார்த்தையை நான் எப்படி வெறுக்கிறோனோ அது
போலத்தான் சமாதானம்அப்டிங்கற வார்த்தையையும் நான்
வெறுக்கிறேன்- அது போலத்தான் மாண்டேக் அனைவரையும்
நான் வெறுக்கிறேன். இன்னும் மோதாம நின்னுகிட்டே
இருக்கிற ஒரு கோழை
( அங்கே ஒரு பயங்கரமான சண்டை ஆரம்பிக்கிறது )
( பொதுமக்கள் நிறையப்போர் உள்ளே நுழைந்து சண்டையில் பங்கேற்க
ஆரம்பிக்கிறார்கள் )
பொதுமக்கள் ( களேபரமான குரலில் ) கம்புகளை எடுங்கள் . கழிகளை
எடுங்கள். வாட்களை உருவுங்கள் வேட்களை வீசுங்கள்.
கேபுலட்டுகளை வீழ்த்துங்கள் மாண்டேக்குகளை மண்ணோடு
சாயுங்கள் ..
( அப்போது மூத்த கேபுலட் கவுண் உடையிலும் அவர் மனைவி திருமதி
கேபுலட்டும் சாரட் வண்டியில் வருகிறார்கள். அங்கே நடக்கும்
நிகழ்வுகளைப் பார்தது மூத்த கேபுலட் கோபமடைகிறார்
மூத்த கேபுலட் ( தன் மனைவியிடம் ) என்ன அங்கே ஒரே கூச்சல்
உடனே என் வாளை எடு
திருமதி கேபுலட் : இப்ப உங்களுக்தேவை ஊன்று கோல் தான் வாள் அல்ல
( அப்போது அங்கே மாண்டேக்கும் மாண்டேக்கின் மனைவியும்
வருகிறார்கள் )
மாண்டேக் ( தன் மனைவியிடம் ) உடனே என் வாளை எடு அதோ
முதிய கேபுலட் தன் வாளை உருவி வீசிக் கொண்டிருக்கிறான்,
அதைப்பார்தத்தால் எனக்குப் பைத்தியம் பிடித்துவிடும் போல் இருக்கிறது.
( கேபுலட்டைப் பார்த்து ) வாடா என் எதிரியே
( மாண்டேக்கின் மனைவி தடுக்கிறாள் அவளைப் பார்த்து ) உடனே
என்னைப் போகவிடு அந்த கூட்டத்தோடு மோத விடு
மாண்டேக்கின் மனைவி : உங்கள் எதிரியை நோக்கி இன்னும் ஒரு எட்டு
கூட நீங்கள் எடுத்து வைக்க கூடாது.
( அப்போது அந்த நாட்டின் அரசன் எஸ்கேலஸ் தன் அவையோரோடு
அங்கே வருகிறான் )
அரசன் எஸ்கேலஸ் : ( கோபத்தில் கலவரக்காரர்களை நோக்கி
கத்துகிறான் )
அமைதிக்கு எதிரிகளே முதலில் அடங்குங்கள் .
உங்கள் ஆயுதங்களை அடுத்தவன் கழுத்திலா பாய்ச்சுவது ?
மனிதர்களா அல்லது விலங்குகளா நீங்கள் ? நான் கத்துவது
உங்களுக்கு கேட்கிறதா இல்லையா ?
உங்கள் கோபத்தின் தாகத்தை தீர்த்துக்கொள்ள அடுத்தவனின் இரத்த
நாளத்தை கீறி அங்கே நீறுற்று போல பீறிடும் குருதியை அள்ளி அள்ளி
குடிப்பீர்களா ?
உங்கள் கரங்களை பாருங்கள். இரத்தக்கறை படிந்த ஆயுதங்கள்
அடுத்தவர்களுக்கு வலியை மட்டுமே வழங்கிக் கொண்டிருக்கும்
அவைகளை உடனே விட்டெறியுங்கள்
உடனே அதை தூக்கியெறியுங்கள் அல்லது அதிகபட்ச தண்டனையை
வழங்க நேரிடும்
( அனைவரும் ஆயுதத்தை கீழே போடுகிறார்கள் )
மூன்று முறை இந்த நகரத்தில் கலவரம் வெடித்துவிட்டது. காரணம்
உங்கள் அலட்சியம் தான்.
கேபுலட் மாண்டேக் மூன்று முறை நீங்கள் இருவரும் இந்த நகரத்தின்
அமைதியை குலைத்திருக்கிறீர்கள்.
இந்த நகரத்தின் மிக மேன்மையாக குடிமக்கள் தங்கள் கண்ணியமான
ஆடைகளை களைந்து விட்டு போருக்கு புறப்படும் ஆடைகளை
பூட்டிக்கொண்டு, வாள் கேடயங்களோடு வந்து உங்கள் சண்டையை
விலக்கி விட வேண்டியதிருந்தது.
இன்னும் ஒரு முறை இந்த நகரத்தில் நீங்கள் கலவரத்தை
தோற்றுவித்தீர்களானால் உங்கள் உயிர்களை நீங்கள் இழக்க
வேண்டியதிருக்கும் என்பதை நீங்கள் மறந்து விடாதீர்கள்.
உங்கள் வெறுப்பை விழுங்கி விழுங்கி அமைதியின் நகரமே தன்
புனிதத்தை இழந்து விட்டது.
(கேபுலட்டைப் பார்த்து ) கேபுலட் உடனே நீ என்னுடன் அவைக்கு
வரவேண்டும்
( மாண்டேக்கைப் பார்த்து ) மாண்டேக் நீ மாலை என்னுடைய பழைய
அரசவைக்கு வரவேண்டும், என்னுடைய தீர்ப்பை நான் அங்கே
உரைப்பேன். உனக்காக அங்கே உத்தரவுகள் காத்திருக்கின்றன. மறக்க
வேண்டாம்
( கேபுலட் மாண்டேக் இருவரையும் பார்த்து ) இன்னொரு முறை இங்கே
கலவரத்தை விளைவித்தால் உங்கள் உயிர்களுக்கு இங்கே
உத்தரவாதமில்லை. உயிர்களை வாதை செய்யும் இந்த இடத்திலிருந்து
உடனே எல்லோரும் கலைந்து செல்லுங்கள்
( அனைவரும் அந்த இடத்தை விடடு கலைந்து செல்கிறார்கள் )