நூல் அறிமுகம்: அ.கரீம் முகாம் இ.பா.சிந்தன்
நூல் : முகாம்
ஆசிரியர் : அ.கரீம்
விலை : ரூ. ₹300
வெளியீடு : எதிர் வெளியீடு
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]
அவருடைய முதல் நாவல் என்னும் அடைமொழியுடன் வந்து சேர்ந்த நூல் என்பதாலேயே ஒரு நாவலுக்குத் தேவையான அனைத்தும் சரியாக இருக்கின்றனவா என்று வாசிக்கத் துவங்கியதில் இருந்தே மனது தன்னிச்சையாக சரிபார்க்கத் துவங்கிவிடுகிறது. ஆனால் அதெல்லாம் கொஞ்ச நேரம் தான். அதன்பின்னர் போகப்போக அந்த பரிசோதனை தானாகவே நின்றுவிடுகிறது. அவர் ஒரு நாவலாசிரியராக வெற்றிபெற்றுவிட்டார் என்பதை வாசக மனம் ஏற்றுக்கொள்வதே அதற்குக் காரணம்.
ஹிட்லர் காலத்தில் ஐரோப்பா முழுவதிலும் வதைமுகாம்களை பாசிஸ்ட்டுகளும் நாஜிக்களும் உருவாக்கி இருந்தனர். அந்த வதைமுகாம்களை நேரில் சென்று பார்வையிட்டிருக்கிறேன். நினைத்துப் பார்க்கவே முடியாத கொடூர மனம் படைத்தவர்களால் தான் அப்படியான முகாம்களை உருவாக்கி இருக்கமுடியும். யூதர்கள் மட்டுமல்லாமல், பாசிஸ்ட்டுகளை எதிர்த்துக் குரல் எழுப்பிய கம்யூனிஸ்ட்டுகளும் ஏராளமாக அந்த வதைமுகாம்களில் கொடுமைப்படுத்தப்பட்டும் கொல்லப்பட்டும் இருக்கின்றனர். அந்த கம்யூனிஸ்ட்டுகளில் பெரும்பாலானோர் யூதரல்லாதோர் என்பது தான் பெரிய ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. அமைதியாக பாசிஸ்ட்டுகளின் நடவடிக்கைகளைக் கண்டுகொள்ளாமல் இருந்திருந்தால் உயிர் பிழைத்திருக்கக்கூடிய அவர்கள், தாங்கள் கொண்ட கொள்கைக்காக துன்பங்களை அனுபவித்தும் உயிரைவிட்டும் இருக்கின்றனர்.
ஹிட்லர் வதைமுகாமில் பிறந்த ஒரு குழந்தையை சந்தித்து நேரில் பேசியபோது அவருடைய கதையைச் சொன்னார். அவருடைய அம்மாவும் அப்பாவும் கம்யூனிஸ்ட்டுகளாக இருந்திருக்கின்றனர். ஹிட்லரின் படைகளைக் கண்டித்து மக்களைத் திரட்டி தெருவில் போராடி இருக்கின்றனர். ஏராளமான யூதர்களும் கலந்துகொண்ட அப்போராட்டத்தில், யூதர்களை பின்னால் நிற்கவைத்து, யூதரல்லாத கம்யூனிஸ்ட்டுகள் முன்வரிசையில் நின்று ஹிட்லருக்கு எதிராக உரக்கக் குரல் எழுப்பியிருக்கின்றனர். நாஜிப்படைகளின் துப்பாக்கி குண்டுக்கு நான் சந்தித்தவரின் அப்பா போராட்டக்களத்திலேயே இரத்தவெள்ளத்தில் சரிந்துவிழுந்து இறந்திருக்கிறார். அவருடைய மனைவி அந்த பிணத்தின் அருகே நின்றுகொண்டு போராட்டத்தைத் தொடர்ந்திருக்கிறார். கொண்டு வந்த குண்டுகளே தீர்ந்துபோனதால், உயிரோடு மிச்சமிருந்த அனைவரையும் கொடூரமாக அடித்துத் துன்புறுத்தி கைதுசெய்து வதைமுகாமில் அடைத்திருக்கிறார்கள். இந்த போராட்டத்திற்கு வரும்போது அவர் வயிற்றில் குழந்தை இருந்திருக்கிறது. அக்குழந்தை வதைமுகாமில் தான் பிறந்தது. அக்குழந்தையையும் அவரது அம்மாவையும் விஷவாயுவிற்கு நடுவே இருத்திக் கொல்வதற்கு ஒரு இரயிலில் கொண்டு சென்றிருக்கிறார்கள். அந்த இரயிலை வழிமறித்து கம்யூனிசப் போராளிகள் ஒருசிலரைக் காப்பாற்றியிருக்கின்றனர். அப்போது நடந்த சண்டையில் அந்த அம்மா இறந்திருக்கிறார். அந்தக் குழந்தை தப்பிப்பிழைத்திருக்கிறது. அக்குழந்தையுடன் பேசிதான் இந்த வரலாற்றைத் தெரிந்துகொண்டேன். இதுபோல ஏராளமானோரின் கதைகளைக் கேட்டறிந்திருப்பதால், வதைமுகாம்களைப் பற்றிய ஓரளவுக்கான புரிதல் இருக்கிறது.
ஐரோப்பாவில் வாழும் ஒவ்வொரு குடும்பத்திலும் போர் தொடர்பாகவும் வதைமுகாம்கள் தொடர்பாகவும் ஏதோவொரு பழங்கதை இருக்கிறது. எந்த வீட்டிற்குச் சென்றாலும் அங்கே தொங்கும் பழைய புகைப்படத்திற்குப் பின்னால் மிகக்கொடூரமான ஏதோவொரு வரலாறு இருக்கிறது. இந்த வரலாற்றினையும், வதைமுகாம்களைப் பற்றிய கதைகளையும் இன்றைக்கும் ஐரோப்பா முழுவதும் சொல்லிக்கொண்டே இருக்கின்றனர். பள்ளிப் பாடத்திட்டங்களிலும் அவை இடம்பெற்றிருக்கின்றன. ஆண்டுக்கு ஒருமுறை வதமுகாம்களுக்கு பள்ளி மாணவர்கள் அழைத்துச்செல்லப்பட்டு காண்பிக்கப்படுகின்றனர். அப்போது தான் இனி எந்தக்காலத்திலும் பாசிஸ்ட்டுகள் தலையெடுக்கமாட்டார்கள் என்று நம்புகிறார்கள்.
ஆனால் இந்தியா இதுவரையில் இப்படியான வதைமுகாம்களையோ சுதந்திரப் போராட்டம் தவிர வேறெந்த பெரிய உள்நாட்டுப் போரையோ பார்த்ததில்லை என்பதாலோ என்னவோ, பாசிசம் குறித்த கொடூரங்களை நம் மக்களுக்கு பெரிதாக சொல்லிவிடவே இல்லை. ஆனால் அதனைச் சொல்லவேண்டிய அவசியம் இப்போது வந்திருக்கிறது. பாசிசத்தைவிடவும் கொடூரமான பிரிவினைக் கொள்கையினைக் கொண்டிருக்கிற மிகப்பழமையான தத்துவமான பார்ப்பனியம், நம்மை ஆளும் நிலைக்கு வந்திருக்கிறது. இன்றைக்கு ஜனநாயகக் கட்டமைப்பில் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக ஜனநாயக அம்சங்களை நீக்கிவிட்டு, பார்ப்பனிய சர்வாதிகாரத்தை அமல்படுத்தும் பணியினை இந்த அரசு அதிவேகமாக செயல்படுத்திவருகிறது. சர்வதேச முதலாளித்துவமும் இன்னொரு புறம் வேகமாக வளர்ந்துவருகிறது. அதற்கு பணிவிடை செய்ய அடிமை உழைப்பாளிகள் அதிகமாகத் தேவைப்படுகின்றனர். மக்களாட்சியில் எவரும் படிக்கலாம், முன்னேறலாம் என்பதால், முதலாளித்துவத்திற்கு தேவையான அளவிற்கான அடிமை உழைப்பாளிகள் கிடைப்பதும் கடினமாகிறது. ஆக, பார்ப்பனியம் உருவாக்கும் பிரிவினையால், சிறுபான்மையாக இருக்கிற ஒருசாரார் அடிமைகளாக்கப்பட்டு முகாம்கள் என்கிற கட்டமைப்பிற்குள் கொண்டுவரப்பட்டு முதலாளித்துவத்திற்கு கூலியின்றி உழைக்கும் கட்டாயத்திற்குத் தள்ளப்படுவார்கள். பார்ப்பனியமும் முதலாளித்துவமும் இணைந்து கைகோர்க்கும் புள்ளியும் இதுதான். இதனை எதிர்த்துக் கேள்விகேட்கும் முற்போக்காளர்களும் கூட அதே வதைமுகாம்களில் தள்ளப்படுவார்கள், அல்லது கொல்லப்படுவார்கள். ஹிட்லர் காலத்தில் நிகழ்ந்ததும் ஓரளவுக்கு இதுதான்.
இதனை செயல்படுத்துவதற்கான முதல் படிதான் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்த சிஏஏ சட்டம். அதுகுறித்து பெரும்பான்மையான மக்களுக்கு சரியாக இப்போதும் புரியவில்லை. அப்படியென்றால் எப்படிப் புரியவைப்பது? அதற்கான ஒரு வழியைக் கண்டுபிடித்து இந்நாவலை எழுதியிருக்கிறார் தோழர் அ.கரீம்.
முகாம் நாவலைப் பொறுத்தவரையில், ஒரு கற்பனையான உலகை உருவாக்கி, அதில் வாழ்கிற மக்களின் வாழ்க்கையில் ஏற்படுகிற மாற்றங்களைப் பேசும் நாவலாக எழுதப்பட்டிருக்கிறது. பொதுவாக ஒரு கற்பனை உலகை உருவாக்கி, அந்த கற்பனை உலகில் மனிதர்களை உலவவிட்டு, அவர்களுடைய வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை இருவகையான இலக்கியப் படைப்புப் பிரிவில் எழுதுவார்கள். ஒன்று உட்டோப்பிய இலக்கிய முறை. இரண்டாவது டிஸ்டோப்பிய இலக்கிய முறை. உட்டோப்பிய இலக்கிய முறையில், எல்லோரும் நல்லவர்களாகவும் எல்லாமும் நல்லதாகவும் இருக்கும். பொதுவாக கம்யூனிசம் உலகில் இப்படியான நல்ல சமூகம் உருவாகும் என்று சொல்லப்பட்டு உட்டோப்பிய இலக்கியங்கள் எழுதப்படுகிறது. கிரேக்கத்தின் நிதி அமைச்சராக இருந்த யானிஸ் சமீபத்தில் “அனதர் நவ்” என்று ஒரு நூல் எழுதியிருக்கிறார். முதலாளித்துவம் ஒழிந்தபின்னர் வரப்போகிற சமூகம் எப்படியாக இருக்கும் என்பதை உட்டோப்பிய இலக்கிய முறையில் எழுதியிருக்கிறார். ஆங்கிலத்தில் மிகப்பிரபலமான நூலாக அது மாறியிருக்கிறது.
இரண்டாவது வகையான டிஸ்டோப்பிய முறையென்பது, உட்டோப்பிய முறைக்கு நேர் எதிரானது. ஒரு மிகமோசமான சட்டமோ ஆட்சியோ விதிமுறையோ சூழலோ உலகில் உருவாகிறபோது, மக்கள் என்னென்ன மாதிரியான துயரங்களை அனுபவிப்பார்கள் என்பதைப் பேசும் இலக்கிய முறை தான் டிஸ்டோப்பிய முறை. டாக்டர் சூஸ் எழுதிய தி லோராக்ஸ் நூலானது, டிஸ்டோப்பிய வகையின் உதாரணம். செடி, கொடி, மரங்களே இல்லாத ஒரு உலகம் உருவாகும்போது, அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை எப்படியிருக்கும் என்று அந்நூலில் சொல்லப்பட்டிருக்கும். அதேபோல மாத்ருபூமி என்கிற ஒரு திரைப்படம் எடுக்கப்பட்டது. அந்தப் படத்தில், பெண் குழந்தைகளே பிறக்காத ஒரு சமூகத்தில் ஆண்களுக்கு திருமணத்திற்கு பெண்ணே கிடைக்காத சூழல் உருவாகும். பெண் குழந்தைகளை கருவிலேயே கொல்லும் ஒரு சமூகத்தில் பெண்களே இல்லாமல்போனால் என்னாகும் என்பதை அப்படம் பேசியிருக்கும். டிஸ்டோப்பிய இலக்கிய முறைக்கு அது ஒரு சிறந்த உதாரணம்.
டிஸ்டோப்பிய வகையின் சமீபத்திய சிறந்த உதாரணமென்றால் லைலா என்கிற நூல் தான். இந்தியா முழுவதும் இந்துத்துவ ஆட்சியின் கீழ் வந்துவிட்டபிறகு, 2040 ஆம் ஆண்டில் என்ன நடக்கிறது என்பது தான் கதை. சாதியோ மதமோ மாறி கல்யாணம் செய்தவர்களையும், முஸ்லிம்களையும் கைதுசெய்து ஒரு வதைமுகாமில் அடைத்துவிடுவார்கள். பார்ப்பனிய பாசிச இந்தியா எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்வதற்கு இந்நூலைப் படித்தாலே போதும். அந்த வதைமுகாமில் இருப்பவர்களை வைத்து, கார்ப்பரேட் பெருநிறுவனங்களின் அடிமைத் தொழிலாளர்களாக உற்பத்தி செய்ய அந்த அரசு பயன்படுத்தும். ஒவ்வொரு சாதிக்கும் தனி குடியிருப்பு அமைக்கப்பட்டிருக்கும். ஒரு குடியிருப்பில் இருந்து இன்னொரு குடியிருப்புக்குப் போகமுடியாத அளவிற்கு வானத்தைத் தொடும் சுவர் எழுப்பப்பட்டிருக்கும். 2017 இல் வெளியான இந்நூலை அடிப்படையாகக் கொண்டு பின்னர் ஒரு வெப்சீரிஸ் கூட தயாரிக்கப்பட்டது. அதனை எதிர்த்து ஆர்எஸ்எஸ் கூட்டத்தினர் நீதிமன்றம் வரை சென்றதெல்லாம் நடந்தது.
இன்றைய ஆர்எஸ்எஸ் கூட்டத்தினரின் நடவடிக்கைகள் நம்மையெல்லாம் எங்கே கொண்டு சென்று விடப்போகிறது என்பதைப் புரிந்துகொள்ள அந்த நூல் உதவும்.
அந்த வரிசையில் காலங்காலமாக இந்திய மண்ணில் வாழ்ந்துவரும் முஸ்லிம் மக்களை அடிமைகளாகவும் நாடற்றவர்களாகவும் மாற்றும் சிஏஏ என்கிற குடியுரிமைச் சட்டம் இந்தியா முழுவதிலும் கொண்டுவரப்பட்டு அமல்படுத்தப்பட்டால் மக்களின் வாழ்நிலை எப்படியாக மாறிப்போகும் என்பதைப் பேசும் நாவல் தான் முகாம். அந்த முகாம்களில் அடைக்கப்படும் மக்களை வைத்து பெருநிறுவனங்களின் உற்பத்திக்கு வேலை செய்யும் அடிமைகளாக மாற்றிவிடும் அவலம் அரங்கேற்றப்படும். இதற்குள் சிக்கிக்கொள்ளும் மைமூன் மற்றும் ஷாகிரா ஆகிய இருபெண்களின் கதை தான் முகாம் நாவல்.
மைமூனும் ஷாகிராவும் ஒரு நேர்கோட்டில் பார்ப்பனிய பாசிசம் உருவாக்கிய முகாமில் தங்கியிருக்கிற வாழ்க்கையைப் பேசினாலும், இடையிடையே வரும் கதாப்பாத்திரங்களின் பின்னணிக் கதைகளை பின்னோக்கிப் பேசுவதாக நாவல் எழுதப்பட்டிருக்கிறது. ஆக பார்த்திபனின் மொழியில் செல்வேண்டுமென்றால், உலகின் முதல் ‘நான் லீனியர் பார்ப்பனிய பாசிச எதிர்ப்பு நூல்’ என்றும் முகாம் நூலைச் சொல்லலாம்.
இந்த நாவலில் இருக்கிற கிளைக்கதைகளையும் கதாப்பாத்திரங்களின் கடந்தகால வாழ்க்கையினையும் முழுவதுமாக நீக்கிவிட்டாலும், முகாம் என்கிற ஒரு அழகான சிறுகதையாகவும் இது மாறிவிடும். அந்த வடிவில் தான் எழுதப்பட்டிருக்கிறது.
நாவலில் எனக்கு மிகவும் பிடித்ததென்றால், நாவல் முழுவதும் மிக இயல்பாக வருகிற இந்து-முஸ்லிம் மக்களின் பின்னிப்பிணைந்த வாழ்க்கை. எங்கேயும் திணிப்பின்றி, இருமதத்தைச் சேர்ந்த மக்களும் ஒருங்கிணைந்த வாழ்க்கையை வாழ்வதை மிக அழகாகவும் இயல்பாகவும் நாவல் பேசியிருக்கிறது. பொதுவாக இதுபோன்ற நூல்களில் முஸ்லிம் மக்கள் தனித்த ஒரு வாழ்க்கை வாழ்வதாகக் காட்டிவிடுவார்கள். அப்படிக் காட்டும்போது அவர்களின் மீது பரிதாபம் ஏற்படக்கூடும், ஆனால் தீர்வினை நோக்கி நகர்த்தாது. முகாம் நாவலிலோ இந்து-முஸ்லிம் மக்களின் வாழ்க்கையை தனித்தனியே காட்டாமல் கூடிவாழும் வாழ்க்கையாகக் காட்டியிருப்பதால், இது எல்லோருக்குமான பிரச்சனை தான் என்று மத அடையாளத்தைத் தாண்டி எல்லோரையும் சிந்திக்கத் தூண்டும் என்று நம்புகிறேன்.
பார்ப்பனியத்திற்கு எதிராக இன்றைய நிகழ்காலத்தில் பேசுகிற உண்மையான மனிதர்கள் பலரும் இந்நாவலில் கதாபாத்திரங்களாக வருகிறார்கள். பார்ப்பனியத்தையும் அதன் சிஏஏ திட்டத்தையும் அடையாளங்களைக் கடந்து நாம் அனைவருமாக ஒன்றிணைந்து குரல் கொடுக்கவில்லையென்றால், அவர்களையும் நாம் இழக்க நேரிடும்.
முகாம் மிகமுக்கியமான நாவலாகவும் சரியான நேரத்திலும் வெளியாகி இருக்கிறது. வாசித்து விவாதிக்க வேண்டியது நம் அனைவரின் கடமை.
இ.பா.சிந்தன்