கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 6 : வெளியே கடவுள், உள்ளே மிருகம் ! – இரா. சிந்தன்
1953 ஆம் ஆண்டில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 3 வது மாநாடு மதுரையில் நடந்தது. அதற்கு முன்பாக நடைபெற்ற பொதுத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சிறப்பான இடத்தை பெற்றிருந்த போதிலும், அரசின் தன்மையைப் பற்றிய விவாதங்கள் தொடர்ந்தன.
வெளியே கடவுள், உள்ளே மிருகம் !
ஆளவந்தான் திரைப்படத்தில் தனது இரட்டை நிலையினைப் பற்றி நாயகன் பாடும் வரிகளை உல்டா செய்து படித்தால், அதுதான் அப்போது இந்திய அரசின் தன்மையாக இருந்தது. உலக அரங்கில் அவர்கள் ஏகாதிபத்திய முகாமிற்கு மாற்றினை முன்வைத்தார்கள். ஆனால், உள்நாட்டில் முதலாளித்துவ பாதையில் சென்றார்கள்.
இந்த நிலைமை பலருக்கும் விளங்கிக்கொள்ள முடியாததாக இருந்தது. மூன்றாவது மாநாட்டில், ஒரு சகோதர பிரதிநிதியாக பங்கேற்று பேசிய பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஹேரி பொலிட், ‘நேரு தலைமையிலான இந்திய அரசு ஏகாதிபத்திய எதிர்ப்பு அணி ஒன்றை உருவாக்குவதில் பங்கு வகிப்பதாக புரிந்து கொண்டிருந்தார்’. எனவே இந்தியா உட்பட உலகம் ழுவதும் உள்ள கம்யூனிஸ்ட்டுகள் நேரு அரசை ஆதரிக்க வேண்டும் என்றார். அயல்துறைக் கொள்கையில் ஒரு முற்போக்கான நிலை எடுத்த காங்கிரஸ் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வைத்து, முற்போக்கு சக்தியாக மதிப்பீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
நடந்தது என்ன?
இந்திய விடுதலைக்கு பிறகு நேரு அரசாங்கம் முன்வைத்த முதல் ஐந்தாண்டு திட்டம், ஆளும் வர்க்கங்களின் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியது. அயல் துறை கொள்கையிலும் ஏகாதிபத்தியங்களுடன் ஒத்துழைக்கும் போக்கினையே முன்னெடுத்தார்கள். ஆனால் அது பலன் கொடுக்கவில்லை என்பதாலேயே கூட்டுச் சேராக் கொள்கையை முன்னெடுத்தார்கள். இந்த மாற்றத்தை கம்யூனிஸ்ட் கட்சி முற்போக்கான ஒன்றாக பார்த்தது. ஆனால், இது உள்நாட்டு அணுகுமுறைகளிலும் மாற்றத்தை கொண்டுவருமா என்பதுதான் கேள்வி.
1949 ஆம் ஆண்டில்தான் மக்கள் சீனம் உருவாகியிருந்தது. கொரிய அமைதி ஒப்பந்தம் 1953 ஜூலை 27 ஆம் தேதி கையெழுத்தானது. இப்படியான உலக சூழலில்தான், இந்திய அரசாங்கம் தனது நிலைப்பாட்டை எடுத்தது. அணுகுண்டுகளுக்கு எதிராகவும், சோசலிச நாடுகளுடன் கலாச்சார பரிவர்த்தனை, தொழில்நுட்ப பரிவர்த்தனை, வணிக தொடர்புகள் என்று பல்வேறு கவனிக்கத்தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டது. (இந்த சமயத்தில்தான், அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது ராணுவத்தளத்தை பாகிஸ்தானில் அமைத்தது)
உள்நாட்டில் இந்திய அரசாங்கம் கடைப்பிடித்த கொள்கைகள் நிலப்பிரபுத்துவ-முதலாளித்துவ சக்திகளின் நலன்களை முன்னெடுப்பதாக அமைந்தன. தொழில்துறையும், வேளாண் துறையும் சந்தித்த நெருக்கடிகள் அதிகரித்தன. நிலவுடைமைக்கு முடிவுகட்டுவதில் இந்திய அரசிற்கு விருப்பமே இல்லை. வகுப்புவாதமும் ஒரு முக்கியமான பிரச்சனையாக எழுந்தது. இவற்றிற்கு எதிராக ஒரு புரட்சிகர திட்டம் தேவைப்பட்டது.
மேலே சொன்னது ஒரு இரட்டை நிலையாகும். உலக அரங்கில் முற்போக்கு, உள்நாட்டு சூழலில் பிற்போக்கு என்று தோற்றமளித்த இந்திய அரசின் நிலைப்பாடு அதில் இருந்துதான் எழுந்தது. இதனைப் பற்றி குறிப்பிடும் இ.எம்.எஸ் – இந்திய ஆளும் வர்க்கத்திற்கு ‘ஏகாதிபத்தியத்தோடு முரண்பாடுகள் இருந்தன. உள்நாட்டில், இந்திய மக்களுடனும் அதற்கு முரண்பாடுகள் உள்ளன’ – என்று விளக்குகிறார்.
ஆரம்பத்திலேயே மேற்சொன்ன புரிதல் கட்சிக்குள் வரவில்லை. “அயல்துறைக் கொள்கையில் ஒரு முற்போக்கான நிலையை ஏற்கெனவே மேற்கொண்டுவிட்ட அரசு, காலப்போக்கில் படிப்படியாக அதன் உள்நாட்டுக் கொள்கைகளிலும் முற்போக்காக மாறும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது…” என்பதையும் இ.எம்.எஸ் குறிப்பிடுகிறார். அயல்துறைக் கொள்கையில் காணப்பட்ட முற்போக்கான அம்சங்களுக்கு ஆதரவளிப்பதில் கட்சிக்குள் கருத்துவேறுபாடு ஏற்படவில்லை…” ஆனால் இந்த “முற்போக்குத் தன்மை அரசின் உள்நாட்டுக் கொள்கையிலும் பிரதிபலிக்கும் என்ற வாதத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.” என்கிறார்.
அனைத்தையும் விவாதித்த மாநாட்டு, இந்தியாவின் உள்நாட்டுச் சூழலை கணக்கில் கொண்டு, தனது மதிப்பீட்டையும் நிலைப்பாட்டையும் மேற்கொண்டது. அதாவது, அயல்துறைக் கொள்கைகளை வரவேற்கும் அதே சமயத்தில், உள்நாட்டு நிலைமைகளுக்கு ஏற்ற சுயேட்சையான நிலைப்பாட்டை மேற்கொண்டது.
முதலாளித்துவ நலன்கள்
முதலாளித்துவ வர்க்கத்தினர், நிலப்பிரபுக்களோடும் இதர பிரிவினரோடும் முரண்பட்டார்கள். நாட்டை வேகமாக தொழில்மயமாக்க வேண்டும் என்று விருபினார்கள். ஆனால், பிற்போக்கு சக்திகள் இதற்கு எதிராக நின்றார்கள். கம்யூனிஸ்ட் கட்சி ‘நிலவுடைமை எதிர்ப்பில் அரசோடு ஒத்துழைக்க முடியும். ஆனால், அரசுக்கு ஒரு புரட்சிகரமான எதிர்ப்பு என்பதே கட்சியின் நிலையாக இருந்தது.’
‘அதாவது புரட்சிகர தொழிலாளி வர்க்கத்துக்கும் ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு நிலை எடுக்கக்கூடிய முதலாளித்துவ பிரிவினருக்கும் இடையே கூட்டு என்ற லெனினிய நடைமுறையை கம்யூனிஸ்ட் கட்சி மூன்றாவது அகில இந்திய மாநாட்டிலும் அதற்குப் பிறகும் கடைப்பிடித்தது’ என்கிறார் இ.எம்.எஸ். மாநாட்டின் பெரும்பான்மையான பிரதிநிதிகள் மேற்சொன்ன நிலைப்பாட்டை ஏற்றார்கள்.
‘இந்திய அரசியல் பற்றி வெளிநாட்டுத் தோழர்கள் தமது கருத்துக்களை வெளிப்படுத்தினாலும் கூட, இந்திய கட்சி இங்கே கடைப்பிடிக்க வேண்டிய கொள்கையை, தானே உருவாக்கிக் கொண்டது’
1952 கல்கத்தா பிளீனம்:
கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் தங்கள் வருவாயில் இருந்து ஒரு சதவீதத்தை கட்சிக்கு லெவியாக வழங்குவார்கள். அதே போல கட்சி உறுப்பினர்களுக்கென்று உரிமைகளும், கடமைகளும் உள்ளன. கட்சியில் ஒருவர் உருப்பினராகும் முன்பு அடிப்படைகளை கற்றுக்கொடுக்க வேண்டும். இதுபோன்ற உட்கட்சி விசயங்களை 1952 கல்கத்தா பிளீனம் (சிறப்பு மாநாடு) விவாதித்தது. கட்சி விரிவாக்கத்தையும், கட்சி ஒற்றுமையும், தத்துவார்த்த – அரசியல் புரிதலை வலுவாக்க வேண்டிய அவசியத்தையும் மனதில் கொண்டு இந்த மாநாடு நடைபெற்றது. இதில்தான் மேற்சொன்ன உட்கட்சி நடைமுறைகளைப் பற்றிய விரிவான விவாதமும் முடிவுகளும் மேற்கொள்ளப்பட்டன. மேலும் அதில் தோழர் இ.எம்.எஸ், ரன்னென் சென் மற்றும் ராமமூர்த்தி ஆகிய தோழர்களை உள்ளடக்கிய குழு, அமைப்பு சட்ட திருத்தங்கள் பற்றிய பரிந்துரைகளை வழங்க பணிக்கப்பட்டது. மூன்றாவது மாநாட்டில் தோழர் இ.எம்.எஸ் முன்வைத்த பரிந்துறைகள் விவாதிக்கப்பட்டு ஏற்கப்பட்டன.
முந்தைய தொடர்களை வாசிக்க :
கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 1 – இரா. சிந்தன்
கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 2 : தனி நபர்கள், செயல் திட்டம், தத்துவம் ! – இரா. சிந்தன்
கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 3 : பாசிச எதிர்ப்பும், தேசிய இன உரிமைகளும் ! – இரா. சிந்தன்
கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 4 : குழப்பங்கள் அலையடித்த காலம் ! – இரா. சிந்தன்
கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 5 : இந்தியாவின் புரட்சிப் பாதை ! – இரா. சிந்தன்