சமகால நடப்புகளில் மார்க்சியம் தொடர் 6 – என்.குணசேகரன்
மார்க்ஸ் ஆங்கிலேய ஆட்சிக்கு “உதவி” செய்தாரா?
என்.குணசேகரன்
தமிழகத்தில் தோன்றிய பல சான்றோர்கள், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பசி, பட்டினி இல்லாத உலகை கனவு கண்டனர்.
“உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு.”
இது வள்ளுவர் கண்ட கனவு.
சிறந்த நாட்டுக்கான அடையாளம், நீங்காத பசித் துன்பமும், நீங்காத நோயும் , அழிவு செய்யும் பகையும் இல்லாமல் இருப்பதே என்பது வள்ளுவரின் இலட்சிய நோக்கு. இது இன்று வரை நிறைவேறவில்லை.
வள்ளுவர் உள்ளிட்ட நமது மனிதநேய ஆன்றோர்கள் கண்ட கனவுகள் நிறைவேற, நவீன தத்துவமான மார்க்சியமே வழிகாட்டுகிறது.
முதலாளித்துவ சமூக அமைப்பு நிறைவான மனித வாழ்க்கைக்கு தடையாக இருக்கிறது. இதனை மார்க்ஸ் ஆதாரப்பூர்வமாக நிறுவினார்.
ஐ.நா.எச்சரிக்கை
ஐக்கிய நாட்டு சபை பசித்துன்பம் என்பது ஒரு பொது சுகாதார பிரச்சனை என்று அறிவித்துள்ளது. ஏனெனில் பசிப்பிணி, பல நோய்களுக்கு மூல காரணமாக அமைந்துள்ளது.
உலக நிறுவனங்கள் 2030-க்குள் பசி, உணவுப் பாதுகாப்பு இல்லாதது, ஊட்டச்சத்து குறைவு போன்ற பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்கிற இலக்கினை முடிவு செய்தனர். ஆனால் இந்த நோக்கம் நிறைவேறாமல் போய்விடும் என்று ஐ.நா சபை சமீபத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆசியக் கண்டத்தில் உள்ள மொத்த ஜனத்தொகை சுமார் 450 கோடி. இங்கு வாழும் பெரும் பகுதி மக்களை பசித்துன்பம் வாட்டிக் கொண்டிருக்கிறது.
ஏற்கெனவே பசியினால் வாடிக் கொண்டிருந்த மக்கள் எண்ணிக்கையோடு, கூடுதலாக சுமார் 60 இலட்சம் மக்கள் கொரோனா காலத்தில், பசிக்கொடுமைக்கு ஆளானார்கள். ஊட்டச்சத்துக் குறைவும் ஏழை நாடுகளில்தான் அதிகம்.
தெற்காசிய நாடுகளில் 15.7 சதவீத மக்கள் உணவுப் பற்றாக்குறையால் வாடுகின்றனர். சுமார் 10 சதவீத மக்கள் ஊட்டச்சத்து குறைவினால் அவதிப்படுகின்றனர்.
குழந்தைகள் நிலை மிக மோசமானது. சுகாதாரமான உணவு கிடைக்காமல், எடை குறைவு ஏற்படுவது போன்ற பிரச்சனைகளால் குழந்தைகள் அவதிப்படுகின்றனர். இதன் காரணமாக, ஐந்து வயதைக் கூட எட்டாமல் மடிந்து போகும் துயரம் தொடர்ந்து வருகிறது.
குழந்தைகளின் பெற்றோர்களுக்கு வருமான வீழ்ச்சி, வாங்கும் சக்தி குறைவு நீடிப்பதால் நிலைமை மோசமாகி வருகிறது.
விவசாயத்தில் பெரும் கார்ப்பரேட் மூலதன ஆதிக்கம், தனியார் கொள்ளைக்கான நவீன தாராளமயக் கொள்கைகள் என அனைத்தும் ஏழை, நடுத்தர மக்களிடையே உணவு பாதுகாப்பின்மையை ஏற்படுத்துகிறது. இந்தக் கொள்கைகள் பின்பற்றப்படுகிற முதலாளித்துவ அமைப்பு முறை பசிப் பிணிக்கு அடிப்படை காரணமாக உள்ளது.
இந்த நிலைமையை மாற்றிட மார்க்சிய கோட்பாடுகள் வழிகாட்டுகின்றன.
*நிலம், தொழில் உள்ளிட்ட அனைத்துத் துறை சார்ந்த உற்பத்தி சாதனங்களில் தனி உடைமை ஒழிக்கப்பட வேண்டும்.
*உற்பத்தி சாதனங்கள் சமூகத்தின் பொது உடைமையாக மாற வேண்டும்.
*பெரும் தனி மூலதன உடைமை அகற்றப்பட வேண்டும்.
*மூலதனம், உற்பத்தி அனைத்திலும் பாட்டாளி வர்க்கத்தின் கட்டுப்பாடு, அதிகாரம் நிலை நாட்டப்பட வேண்டும்.
*இவற்றையெல்லாம் சாதிக்க, உலகத் தொழிலாளர்கள் ஒற்றுமை உருவாக வேண்டும். ஒவ்வொரு நாட்டு முதலாளித்துவத்தையும் வீழ்த்திட, அந்நாட்டு பாட்டாளி வர்க்கம் அணி திரள வேண்டும்.
இந்தக் கோட்பாடுகள் நாம் வாழும் பூமியை ஒரு பொன்னுலகமாக மாற்றுவதற்கான கோட்பாடுகள்.ஆனால், இவை மார்க்சிய எதிரிகளின் கடும் கண்டனத்திற்கு ஆளாகி வந்துள்ளன.
இந்தியா பற்றி மார்க்ஸ் :
காலம்காலமாக நமது சமூகம் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருந்து வந்துள்ளது. ஒரு சிறு கூட்டம், பெரும் பகுதி மக்களை அடிமைத்தனத்திற்கு ஆளாக்கி, உழைப்பினை சுரண்டி, செல்வத்தை குவித்துக் கொள்கிற சமூக அமைப்பாக இது இருக்கிறது.
இவ்வாறான ஏற்றத்தாழ்வான சமூக அமைப்பு தமிழகம் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இருந்து வந்துள்ளது. குறிப்பாக, ஆசியாவில் காலனியாதிக்கம் நாடுகளின் செல்வங்களை சூறையாடி, அந்த நாடுகளை வறுமையில் தள்ளியது.
இந்தக் கொடுமைகளை ஆழமாக ஆராய்ந்தவர், மார்க்ஸ். காலனியாதிக்கத்திலிருந்து அந்த நாடுகள் விடுதலை பெற வேண்டும் என அழுத்தமாக மார்க்ஸ் வலியுறுத்தினார்.
இந்தியாவைப் பற்றியும், காலனியாதிக்கத்தால் கடும் துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருந்த ஆசிய நாடுகள் பற்றியும், அக்கறையோடும், ஏராளமான ஆதாரங்களோடும் மார்க்ஸ், ஏங்கல்ஸ் எழுதியுள்ளனர்.
ஆனால், இந்த எழுத்துக்களை திரித்து, முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்று “ஆங்கிலேய ஆட்சிக்கு மார்க்ஸ் உதவி செய்தார்” என்று தமிழக ஆளுநர் பேசினார்.
மார்க்ஸ், ஆங்கிலேய ஆட்சிக்கு ஆதரவாக கட்டுரைகள் எழுதினார் என்று ஆளுநர் அடிப்படையற்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறார்.
தனது பேச்சில்,..“மார்க்ஸ், பிரிட்டிஷ் பேரரசு வலுப்படும் வகையில் சுமார் 20 கட்டுரைகளை நியூயார்க் டெய்லி ட்ரிப்யூன் பத்திரிக்கைக்கு எழுதினார்” என்று மார்க்ஸினை அவதூறு செய்யும் வகையில் ஆளுநர் பேசினார்.
“இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியால் எதிர்காலத்தில் ஏற்படப் போகும் விளைவுகள்” என்ற மார்க்ஸின் பிரசித்தி பெற்ற கட்டுரையை ஆளுநர் ஆழமாக வாசிக்கவில்லை.
அந்தக் கட்டுரையில் மார்க்ஸ் குறிப்பிடுகிறார்:
“பிரிட்டனில் இன்று அதிகாரத்தில் இருக்கும் ஆளும் வர்க்கங்கள் ஒழிக்கப்பட்டு அந்த இடத்தில் தொழில் துறை பாட்டாளி வர்க்கம் பதவியில் அமர்த்தப்படும் வரையிலும், அல்லது ஆங்கிலேய அடிமை நுகத்தடியை இந்தியர்கள் முற்றாக தூக்கி எறியும் அளவிற்கு வளர்ந்து வலிமை பெறும் வரையிலும், பிரிட்டிஷ் முதலாளி வர்க்கத்தினரால் சமுதாயத்தில் பரவலாக உருவாகியுள்ள புதிய சக்திகளின் பலன்களை இந்தியர்கள் அனுபவிக்க முடியாது”.
எனவே, பிரிட்டனில் உள்ள ஆளும் முதலாளித்துவ அதிகார வர்க்கம் தூக்கி எறியப்பட்டு, பாட்டாளி வர்க்கம் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பது மார்க்ஸின் கருத்தாக இருந்தது.
அத்துடன், இந்தியாவில் இருந்த பிரிட்டிஷ் ஆளுகிற வர்க்கங்கள் இந்திய மக்களால் தூக்கி எறியப்பட வேண்டும் என்பதும் மார்க்சின் பார்வையாக இருந்தது.
இது நடக்கவில்லை என்றால் அந்நிய ஆட்சி இந்திய செல்வங்களைச் சுரண்டி கட்டமைத்திருக்கிற ரயில்வே போன்ற வளர்ச்சி அத்தனையும் அந்நியர்களுக்குத்தான் பயன்படுமே தவிர, இந்தியர்களுக்கு பயன்படாது என்பதையும் மார்க்ஸ் நுட்பமாக எழுதியுள்ளார்.
மார்க்ஸ் ஆங்கிலேயருக்கு ஆதரவு தெரிவித்தார் என்ற கட்டுக்கதையை யார் நம்புவார்கள்?
(தொடரும்)