நூல் : எம். எஸ் சுப்புலட்சுமி உண்மையான வாழ்க்கை வரலாறு
ஆசிரியர் : ச.சுப்பாராவ்
விலை : ரூ.₹220
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]
தன்னுடைய பாடும் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்த எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்று நூல் இது.
பத்திரிகையாளர் டி.ஜே.எஸ்.ஜார்ஜ் ஆங்கிலத்தில் எழுதிய இந்நூலை ச.சுப்பாராவ் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். தமிழில் எழுதப்பட்டதைப் போன்ற உணர்வைத் தருகிறது இவரின் மொழிபெயர்ப்பு.
‘உண்மையான வாழ்க்கை வரலாறு’ என்று ஒருவித பூடகத் தன்மையுடன் தலைப்பு இருந்தாலும், எம்.எஸ் என்ற ஆளுமையின் சிறப்புக்கு மாசு கற்பிக்கும் நோக்கம் எதுவுமின்றி மிகுந்த கவனமும், உண்மையை உரைக்கும் ஆர்வமும், அர்ப்பணிப்பும் கொண்டு இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
பதின்மூன்று தலைப்புகளில் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை விவரிக்கப்பட்டுள்ளது.
நூலாசிரியர் எம்.எஸ் -இன் வரலாற்றை இப்படித் தொடங்குகிறார்,
“எம்.எஸ்.சுப்புலட்சுமி மதுரை நகர், சண்முகவடிவு என இரு அம்மாக்களுக்குப் பிறந்தார். தமிழ்ப் பண்பாட்டின் மனசாட்சியையும், இதயத்துடிப்பையும் பிரதிபலித்த இரு அன்னையர்!”
“எம்.எஸ்.என்பதில் எம் என்பது வெறும் புவியியல் ரீதியான அடையாளமல்ல, அது தொப்புள்கொடி உறவு “என்பதற்கான காரணங்களை விவரித்துள்ளார்.
மதுரை என்னும் தூங்கா நகரத்தின் எண்ணற்ற பக்கவாட்டுச் பந்துகளில் ஒன்றான மேலக்கோபுரத்தெரு, அனுமந்தராயர் தெருவில் எம்.எஸ்.பிறந்தது முதல் ‘பாரத ரத்னா’ விருது பெற்றது வரையிலான வாழ்க்கைச் செய்திகளைக் கொண்டுள்ளது இந்நூல்.
வாழ்க்கை நிகழ்வுகளை மட்டும் அடுக்கிக் கொண்டு போகாமல் கர்நாடக இசையின் தோற்றம்,தொடர்ச்சி, கச்சேரிகளில் நிகழ்ந்த மாற்றங்கள், தேவதாசி முறை, மகத்தான பெண் கலைஞர்களின் வரவு, தனித்தன்மையுடைய ஆசிரியர்கள், கலைஞர்கள், தமிழிசையின் வரலாறு , இசையின் அழகியல், இரசனைத் திறன் ஆகியவற்றை எம்.எஸ் -இன் கதையோடு ஊடும்பாவுமாகக் கூறிச் செல்கிறார் ஆசிரியர்.
அந்தக்கால ஆசிரியர்களின் அடி தாங்க முடியாமல் படிப்பை பாதியில் (ஐந்தாம் வகுப்பு) விட்டிருக்கிறார் எம்.எஸ்.(நல்லவேளை!)
தனது பத்தாவது வயதில்,மதுரையில் ஆரம்பிக்கப்பட்ட சைக்கிள் கம்பெனி திறப்பு விழாவில்(பின்னாளில் மாபெரும் டி.வி.எஸ் குழுமம்)பாடியதிலிருந்து எம்.எஸ்-ன் கலைவாழ்வு தொடங்குகிறது.
எம்.எஸ் ஒரு பாடகியாக வளர்ந்தது, சினிமாவில் நடித்தது, திருமணம் செய்தது, கர்நாடக இசையை உலகம் முழுமைக்கும் கொண்டு சென்றது, இசையால் பக்தி செய்தது எனப் படிப்போரைக் கரைத்துச் செல்கிறது இந்நூல்.
எம்.எஸ் -க்கும் அவரது கணவர் சதாசிவத்துக்கும் இடையேயான ஆத்மார்த்தமான உறவு பற்றி ஆசிரியர் இப்படிக் கூறுகிறார்,
“இசை எம்.எஸ் இன் வாழ்க்கை என்றால், சதாசிவத்திற்கு எம்.எஸ் தான் வாழ்க்கை. சதாசிவமும் எம்.எஸ்-ம் போல எந்தக் கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் நன்றிக்கடன் பெற்றிருக்கமாட்டார்கள்.”
வழக்கமாகப் புகழ்பெற்றவர்களைப் பற்றிப் பொதுவெளியில் பரப்பப்படும் புனைவுகளுக்கு எம்.எஸ் -ம் தப்பவில்லை. அவை பற்றிய விவாதங்கள் இந்நூலில் இருந்தாலும் அவை எம்.எஸ் என்னும் பேரொளிக்கு முன் வந்து மறையும் பனித்துளிகளாகவே தெரிகின்றன.
தியாகையரைப் போல இறைவனை நாடும் பக்திபூர்வமான இசையை தமிழகத்தில் இருந்து உலகெங்கும் பரப்பிய இசையரசியின் வரலாற்றை, இசை ரசிகர்களுக்கு மட்டுமன்றி எல்லோருக்குமானதாகத் தந்திருக்கிறது இந்நூல்.
மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி தனக்குப் பிடித்தமான அடர்நீல நிறப் பட்டுப்புடவையை அணிந்திருக்கிறார். மடிசார் புடவையின் முந்தானை அவரது வலது தோள் வழியாகச் சுற்றப்பட்டிருக்கிறது. அவருக்கு மிக விருப்பமான மதுரை மல்லிகையைச் சூடியிருக்கிறார். மஞ்சள் பூசிய நெற்றியில் வட்டமான குங்குமப்பொட்டு,அவர் அணிந்திருக்கும் வைரத்தோடு, மூக்குத்தியின் பிரகாசத்தில் இசை உலகின் சூரியனாய் தகதகக்கிறது. பக்தியில் கரைந்து எம்.எஸ் பாடத் தொடங்குகிறார். உலகம் தன்னிலை மறந்து கேட்டுக் கொண்டிருக்கிறது. என்றென்றும்….