தங்கேஸ் கவிதைகள் thangesh kavithaikal

தங்கேஸ் கவிதைகள்

இந்த அற்புதமான அந்தி வானத்தை தொலைக்காட்சிக்கு பலி கொடுத்தது எத்தனை அபத்தம்? ஓஷோவும் லாவோட்ஷும் நீந்திக் குளித்த இந்த மஞ்சள் நதியில் தானே இந்த செம்பருத்தியும்  ஈரம் படிந்ததலையுடன் குளித்து வந்திருக்கிறது  மனதை சுமந்தலையும் உனக்குத்தான்  ஒரு பில்லியன் டன் பாரம்…
நூல் அறிமுகம்: என். சரவணனின் ”அறிந்தவர்களும் அறியாதவைகளும்” – பொன் விஜி

நூல் அறிமுகம்: என். சரவணனின் ”அறிந்தவர்களும் அறியாதவைகளும்” – பொன் விஜி




வாசிப்பு நண்பர்களே,
ஊடகத்துறை , பத்திரிகைத்துறை, வாசித்தல், கட்டுரைகள் எழுதுதல், விமர்சனங்கள், நாவல்கள், தேடுதல், இவை எல்லாவற்றையும் தாண்டி, *ஆவணப்படுத்துதல் * என்பது ஒரு கலையாகவும் இருக்கலாம், ஒரு கொடையாகவும் இருக்கலாம், இடைவிடாத தேடலாகவும் இருக்கலாம், சலிப்புத்தட்டாத ஒரு உற்சாகமாகவும் இருக்கலாம். இவை அனைத்தையும் செய்து முடிக்கும் ஆற்றல் பலருக்கும் இருக்கலாம், (பல ஐரோப்பிய, ரஷ்ய, வட மற்றும் தென் அமெரிக்க, ஆசிய நாட்டவர்கள்) இவற்றில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர்களில் ஒருவர் தான்
*என். சரவணன் *
 என்ற படைப்பாளி.

அவரது *வரலாறு, அரசியல்* சார்ந்த இந் நூலில் அவர் முழுக்க முழுக்க *தேடலின்* அடிப்படையில் பல அறிந்திராத  *இலங்கையில் * வாழ்ந்து மறைந்த ஆளுமைகளைப் பற்றி மிக நுட்பமான ஆதாரங்களுடன் நமக்கு அறியத்தருகிறார். அதற்காகவே அவர் பல காலம் செலவு செய்திருப்பது இதில் காணக்கூடியதாக உள்ளது. அதற்காக அவரை மிகக் கடுமையாக *வாழ்த்துகிறேன்*

ஆசிரியர் *என். சரவணன் அவர்கள் தனது முன்னுரையில், பத்திரிகைத்துறையிலும் ஊடகத்துறையிலும் தன்னை மேம்படுத்தியவர்களை மிக ஆழமாக நினைவு கூர்வது, அவரது திறந்த மனதைக் காட்டுவது கவனிக்கத்தக்கது. மிகக் குறுகியகாலத்தில் *முகப்புத்தகத்தின் * மூலமாக அறியப்பட்ட அவரது எழுத்துக்களை வாசிக்கத் தூண்டியது.  *இலங்கை*சார்ந்த பொக்கிஷங்களை அறிய, நண்பர்களே தேடுங்கள் அவரது வரிகளை.

இங்கே 25 வேறுபட்ட மனிதர்களின் வரலாறுகளை முன்வைக்கும் ஆசிரியர், அவர்களது பிறப்பு, தொழில், அது சார்ந்த அவர்களது உழைப்பு, அதனால் மக்களுக்கு ஏற்பட்ட நன்மை, தீமைகளை ஆராய்கிறார். இதில் *விஜேசிங்க முதலியார் * என்பவரைத் தவிர மற்றைய 24 நபர்களும் அயல் தேசத்தை உடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

*சாதி, சமய * ஒடுக்கு முறைகள் இன்றோ, நேற்றோ தோன்றியது அல்ல. அது பண்டைய காலம் தொட்டு *நீண்ட கயிறு * போல் பல தலைமுறையாகத் தொடரும் ஒரு சீர்கேட்டை இங்கு பதிவாக்குகிறார். அதிலும் குறிப்பாக *ரொடியர்* என்ற ஒடுக்கப்பட்ட மக்களின் அவலங்களையும், அவர்களை அதிலிருந்து விடுபடக்கூடாது என்று பல வகைகளிலும் எதிர்ப்பு நடந்ததையும், பின்னர் அவர்கள் எப்படி அதிலிருந்து படிப்படியாக விடுதலையானார்கள், அதற்கு வித்திட்டவர் யார் என்பதனைத் தேட, நண்பர்களே நூலை வாசியுங்கள், ஆச்சரியப்படவைக்கும் அரிய செய்திகளைக் காணலாம்.

*பதூதா* என்ற *மொறக்கோ* நாட்டைச் சேர்ந்த கல்வியாளர் (1341ல் இலங்கைக்கு வந்தார்) தொடக்கம், போத்துககேயர், ஒல்லாந்தர், இவர்களைத் தொடர்ந்து ஆங்கிலேயர், இவர்களது வருகையும் அதனால் ஏற்பட்ட மாற்றங்களையும், அதில் இடம்பெற்ற மிகப் பெரிய அறிவு, கல்வி, சீர்திருத்த வாதிகளின் வரலாறுகளை இங்கே ஆசிரியர் எம் கண்முன் கொண்டுவருகிறார்.

*பிலிப்பு பால்டேஸ் * ஒரு டச்சு நாட்டு அமைச்சர், பின் அவர் ஒரு பாதிரியானார். ஒல்லாந்தர் இலங்கையைக் கைப்பற்றியதும் அவரை இங்கே அனுப்பியது. அதன்பின்னர் ஏற்பட்ட மதமாற்றம், சாதிய வேறுபாடுகள், ஒரு சாதி இன்னொரு சாதியை அடிமைப்படுத்திய விதம், குடும்ப இணைப்புகள் போன்றவற்றை இவரது காலகட்டத்தில் அறியக்கூடிய அருமையான தகவல்கள்

*19 வருடங்கள்* இலங்கையில் ஒரு கைதி போலவே வாழ்ந்த *ரொபர்ட் நொக்ஸ்* எப்படி அங்கிருந்து இங்கிலாந்துக்குத் தப்பிப் போனார், அதற்குரிய திட்டங்கள் என்ன? இடைப்பட்ட காலங்களில் அவரது வளர்ச்சி எப்படி, அவரது ஆரம்ப கடல்பயணங்களில் ஏற்பட்ட ஆபத்துக்கள், போன்ற வரலாற்றுச் சம்பவங்களை ஆசிரியர் தெழிவு படக் கூறுகிறார்.

கல்கிசையிலுள்ள *மவுன்ட் லெவினியா* என்ற பெயர் வரக் காரணமென்ன, அதற்கும் *தேசாதிபதி மெயிற்லண்ட்* க்கும் என்ன தொடர்பு, இவர் மூலமாக *ரொடியர் * சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், போன்ற *அறிந்திராத பல * தகவல்களை ஆசிரியர் தருகிறார்.
*1815* ல் *கண்டி இராச்சியம் * ஆங்கிலேயர் வசம் பலத்த எதிர்ப்புகள் இன்றி வீழ்ந்தது. அதற்குரிய சூத்திரகாரன் யார்? கண்டி இராச்சியத்தைக் கைப்பற்ற என்னவெல்லாம் தந்திரங்களைச் (உளவாளிகள் உட்பட) செய்தார், கடைசிக் கண்டி மன்னன் *விக்கிரமசிங்கன்* குடும்பத்தைக் கொழும்பில் வீட்டுக்காவலில் வைத்தபின்னர், பத்திரமாக இந்தியாவிலுள்ள வேலூருக்கு அனுப்பியது யார்? இலங்கையிலுள்ள பாரம்பரிய மன்னர் சொத்துக்களையும் இங்கிலாந்துக்குக் கொண்டு சென்றது யார்? இன்னும் பல முக்கிய காரணங்களுக்குப் பொறுப்பாய் இருந்தவர் *சாட்சாத் * அந்த மனிதன் *டொய்லி*(Mr. John D’Oyly) தான்.

டொய்லியைப்பற்றி குறிப்பிடும் ஆசிரியர், இப்படியாக முடிக்கிறார், *இலங்கையில் வரலாற்றில் டொய்லி ஒரு நயவஞ்சகன். ஆங்கிலேயர்களுக்கோ அதிக இரத்தம் சிந்தாமல் இலங்கையைக் கைப்பற்றக் காரணமாய் இருந்த சாணக்கியன் **

மேலும், *பெர்கியூசன், வில்லியம் ஸ்கீன் ஹென்றி மார்ஷல் பிளாவ்ட்ஸ்கி, ஓல்கொட், மேரி ரட்ணம், * இவர்களைப்போல் இன்னும் பல நிர்வாகத் திறமையுடையவர்களைப் பற்றியும் இன் நூல் சிறப்பிக்கின்றது என்றே சொல்லலாம்.

இங்கே மிக முக்கியமாக ஆசிரியர் *என். சரவணன் அவர்கள், இந்த ஆளுமைகள் இலங்கையில் இருந்தபோதும், வெளியே சென்றபோதும் பல *நூல்களை * எழுதியுள்ளார்கள். அவற்றையெல்லாம் வரிசைப்படுத்தி, எந்த நோக்கத்திற்காக, மேற்கொண்டும் பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதுவதற்குப் பயன்படுத்தியமை பற்றிக் குறிப்பிடத் தவறவில்லை.

இங்கே அதிகமான நூல்களை சிங்கள மொழியில் அப்பப்போ மொழிமாற்றம் செய்யப்பட்டதுபோல், தமிழ் மொழியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதா? என்ற கேள்வி என்னைக் கொஞ்சம் சிந்திக்க வைத்தது. இருந்த போதிலும், இவ்வளவு சிறப்பாக பல விடயங்களை வாசிப்பாளர்களுக்குக் கொடுத்ததையிட்டு ஆசிரியர் என். சரவணன் அவர்களுக்கு நன்றியையும் பாராட்டுக்களையும் மீண்டும் தெரிவிப்பதோடு, *அறியப்படாத பல வரலாற்று நாயகர்களை * அறிந்து கொள்வது நமது கடமை என்று சொல்லி, வாசிப்பாளராகிய நீங்களும் கண்டிப்பாக வாசிக்க வேண்டும் என்று கோரி நிறைவு செய்கிறேன்…

புத்தகத்தின் பெயர்: அறிந்தவர்களும் அறியாதவைகளும்
ஆசிரியர் : என். சரவணன் 
விலை: 700/- (இலங்கை ரூயாயில்)
பக்கம்: 221
நூல் வெளியீடு : குமரன் புத்தக இல்லம்
பெறுவதற்கு : பாத்திமாபுக்ஸ் 0094775494977

தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924

நன்றிகள்
பொன் விஜி – சுவிஸ்

நூல் அறிமுகம்: திருக்குமரன் கணேசனின் ’கறி விருந்தும் கவுளி வெற்றிலையும்’ – பாவண்ணன்

நூல் அறிமுகம்: திருக்குமரன் கணேசனின் ’கறி விருந்தும் கவுளி வெற்றிலையும்’ – பாவண்ணன்




உரையாடலுக்கான வாசல்

கடந்த நூற்றாண்டில் நிலவிய சாதியப்பார்வைக்கும் இந்த நூற்றாண்டில் இப்போது நிலவும் சாதியப்பார்வைக்கும் நுட்பமான அளவில் சில வேறுபாடுகள் உள்ளன. கொரானா வைரஸ் போல அதுவும் தன்னை   காலந்தோறும் உருமாற்றிக்கொண்டே இருக்கிறது. தீண்டாமையின் பெயரால் முன்னொரு காலத்தில் சொன்னதுபோல யாரும் யாரையும் தெருவுக்குள் வராதே, கோவிலுக்குள் வராதே, குளத்துக்குள் இறங்காதே என இன்று தடுத்துவிட முடியாது. அனைவரும் கலந்து நடமாடுவது இன்று இயல்பாக மாறியிருக்கிறது. இந்த மாற்றத்துக்குத் தகுந்தபடி தம்மைத் தகவமைத்துக்கொண்டு தம் சாதியப்பற்றை உதறியும் சாதியக்கோட்டைக் கடந்தும் வந்தவர்கள் நம்மிடையே பலருண்டு. அதே சமயத்தில் தம்மை அறியாமலேயே ஆழ்மனத்தில் இன்னும் சாதியப்பார்வையைச் சுமந்து வாழ்கிறவர்களும் இருக்கிறார்கள். சாதியப்பார்வையை முற்றிலுமாகக் கடந்து அனைவரும் நல்லிணக்கப்பார்வையுடன் இணைந்திருக்கும் ஒரு வாழ்க்கைமுறை எதிர்காலத்தில் சாத்தியமாக வேண்டும். அதற்கு, சாதியத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பாதிப்புகளை உருவாக்கியவர்களுக்கும் இடையில் ஓர் உரையாடல் நிகழ்ந்தாக வேண்டியிருக்கிறது. அது காலத்தின் கட்டாயம். அந்தப் புள்ளியை நோக்கி அனைவரும் நகர்ந்துவர வேண்டும்.

அந்த உரையாடலுக்கான ஒரு வாசலை இளம் எழுத்தாளரான திருக்குமரன் கணேசன் தன் சுயசரிதைக்குறிப்புகள் வழியே திறந்துவைத்திருக்கிறார். கசப்புகள் மண்டிய பல கணங்களை அவர் தம் இளம்பருவத்தில் கடந்துவந்திருக்கிறார். சாதி என்னும் நெருப்பு அவரை தொடர்ந்து சுட்டுக்கொண்டே இருந்திருக்கிறது. அத்தகு பல தருணங்களை அவர் தேர்ந்தெடுத்த சிற்சில நிகழ்ச்சிகள் வழியாக இத்தொகுதியின் மூலம் நம்மிடம் பகிர்ந்துகொண்டுள்ளார். சாதியினால் சுட்ட வடு எத்தகைய வலி மிகுந்தது என்பதை நம்மை உணர்ந்துகொள்ள வைத்திருக்கிறார்.

வடுக்களை ஏற்படுத்தியவர்கள் யாரும் வேற்றுக் கிரகத்திலிருந்து வந்தவர்கள் அல்லர். ஒவ்வொரு நாளும் அவரைச் சுற்றி வாழ்ந்தவர்களே. பெரும்பாலும் ஆசிரியர்கள். கூடப் படித்த நண்பர்கள். நண்பர்களின் குடும்பத்தார்கள்.  தெருவில் வசிப்பவர்கள். அன்பொழுகப் பழகுகிறவர்களின் நெஞ்சத்தில் கூட சாதியத்தின் நஞ்சுக்கொடி சுற்றியிருக்கிறது. தன்னிரக்கம், குற்ற உணர்ச்சி ஆகிய இரு உணர்வுகளும் கலந்துவிடாதபடி கச்சிதமான மொழியில் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் முன்வைத்திருக்கும் திருக்குமரனின் எழுத்தாற்றல் பாராட்டுக்குரியது.

எதிர்காலத் தலைமுறையினரான மாணவ மாணவிகளின் நெஞ்சிலிருந்து சாதியப்பார்வையை அழிக்கவேண்டிய பொறுப்பை ஏற்றிருக்கும் ஆசிரியர் பெருமக்களே சாதியத்தை விதைப்பவர்களாக இருக்கிறார்கள் என்னும் எதார்த்தம் நெருப்பெனச் சுடுகிறது. தம் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர்களே அத்தகு பார்வையுடன் நடந்துகொண்டதை சொந்த அனுபவங்களை முன்வைத்து வெளிப்படுத்தியுள்ளார் திருக்குமரன். சாதி இரண்டொழிய வேறில்லை என வகுப்பறையில் சொல்லிக்கொடுக்கும் பாடத்தின் வரிகள் அந்த ஆசிரியர்களுடைய நெஞ்சில் பதியாமலேயே போய்விட்டதை காலக்கொடுமை என்றே சொல்லவேண்டும்.

அந்நிகழ்ச்சியை விவரிக்கும் அத்தியாயத்தைப் படிக்கும்போது அந்த ஆசிரியர்மீது அருவருப்புணர்வே எழுகிறது. பள்ளிக்கூடத்தில் ஒரு சுற்றுலாவுக்கு ஏற்பாடு நடக்கிறது. மாணவ மாணவிகளைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் பொறுப்பை ஆசிரியரொருவர்  ஏற்றிருக்கிறார். முதன்முதலாகப் பள்ளிக்கூடம் ஏற்பாடு செய்திருக்கும் சுற்றுலாவில் கலந்துகொள்ளும் ஆவலோடு அப்பாவிடமிருந்து பணத்தை வாங்கிச் சென்று செலுத்திவிட்டு, பயணம் தொடங்கும் நாளுக்காக காத்திருக்கிறான் ஒரு சிறுவன். குறிப்பிட்ட நாளில் ஒரு பகல் வேளையில் சுற்றுலாவுக்கு பேர் கொடுத்த அனைவரையும்  பள்ளி வளாகத்துக்கு வருமாறு அறிவிக்கிறார் ஆசிரியர். ஆவலின் காரணமாக, சொன்ன நேரத்துக்கு முன்பாகவே பள்ளிக்குச் சென்று காத்திருக்கிறான் சிறுவன். பதிவு செய்திருந்த மற்ற மாணவர்களும் மாணவிகளும் ஒவ்வொருவராக வந்து சேர்கிறார்கள். சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்த இரண்டு வாகனங்கள் வந்து சேர்கின்றன. 

மாணவ மாணவிகளின் பெயர்ப்பட்டியலை கையில் வைத்திருக்கும் ஆசிரியர் அவர்களை வாகனங்களில் அமரவைக்கும் விதத்தில் அவர் கையாளும் தந்திரம் அவருடைய உள்ளப்போக்கைப் புலப்படுத்திவிடுகிறது. முதலில் சன்னதித் தெருவிலிருந்து வரும் பிள்ளைகளின் பெயர்களை மட்டும் தேர்ந்தெடுத்துச் சொல்லி அழைத்து அவர்களை இரு வாகனங்களிலும் முதல் இரு வரிசைகளில் அமரும்படி சொல்கிறார். அதன் பிறகு நடுத்தெருப் பிள்ளைகள். அடுத்து மேலத்தெருவைச் சேர்ந்த பிள்ளைகள். அவர்களை அடுத்திருக்கும் இரு வரிசைகளில் அமரும்படி சொல்கிறார். அதற்குப் பிறகு மாரியம்மன் கோயில் தெரு பிள்ளைகளின் பெயர்களைப் படிக்கிறார். இறுதியாக வடக்குத்தெரு, தெற்குத்தெருவைச் சேர்ந்த பிள்ளைகளை அழைத்து இறுதி வரிசைகளில் அமர்ந்துகொள்ளும்படி அறிவிக்கிறார். வகுப்பறை வருகைப்பதிவேட்டில் கடைபிடிக்க முடியாத சாதிப் பிரிவினையை சுற்றுலா வாகன இருக்கை வரிசைகளில் கடைபிடித்து நிறைவேற்றுகிறார் அந்த ஆசிரியர். சுற்றுலா முடிந்து திரும்பும்வரை ஒருவரும் இடம் மாறி அமரக்கூடாது என்று எச்சரிக்கிறார். 

அந்த ஆசிரியரிடம் வெளிப்படும் சாதிவெறி நோக்கும் தன் சாதி மேட்டிமைப்பார்வை வெளிப்படையாக வெளிப்பட்டுவிடாதபடி செயல்படும் தந்திரமும் அருவருப்பூட்டுகின்றன. இன்று சமூக ஊடகங்களில் வெளிப்படுவதும் கூட இத்தகைய மனநிலைதான். 

வகுப்பறையிலேயே ஓர் ஆசிரியரிடம் வெளிப்பட்ட சாதியப்பார்வையை இன்னொரு அத்தியாயத்தில் பதிவு செய்திருக்கிறார் திருக்குமரன். ஒருநாள் தேசத்தலைவர்களின் படங்களை வகுப்பறையில் மாட்டுவதற்காக சுவரில் நேர்க்கோட்டில் ஆணியடிக்கச் சொல்கிறார் ஓர் ஆசிரியர். காந்தி, நேரு, திலகர் என மூன்று படங்களை ஒரே நேர்க்கோட்டில் தொங்க வைத்துவிட்டு, நான்காவதாக அம்பேத்கர் படத்துக்கான ஆணியை படவரிசையிலிருந்து சற்றே கீழே தாழ்த்தி அடிக்கச் சொல்கிறார். விவரம் புரியாமல் “அந்த படத்தையும் நேரா மாட்டியிருந்தா அழகா இருக்கும் சார்” என்கிறான் சிறுவன். அப்படி சுட்டிக்காட்டியதற்காக கோபம் கொண்ட ஆசிரியர் அச்சிறுவனை கையை நீட்டச் சொல்லி குச்சியால் அடிக்கத் தொடங்குகிறார். 

இன்னொரு அத்தியாயத்தில் மற்றோர் ஆசிரியரின் சுயரூபத்தை அம்பலப்படுத்தியிருக்கிறார் திருக்குமரன். வகுப்பில் படிக்கும் மாணவியை தொட்டுப் பேசும் மகிழ்ச்சிக்காக பக்கத்தில் அழைத்து நிற்கவைத்துக்கொள்ளும் அற்பமனம் கொண்டவர் அந்த ஆசிரியர். ஒருநாள் அம்மாணவியை அழவைத்து, பிறகு அமைதிப்படுத்திப பேசுவதுபோல தொடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்கிறார் அவர். அதற்காகவே திருத்தப்பட்ட தேர்வுத்தாளைக் கொடுக்கும் தினமன்று பதினைந்தாவது ரேங்க் வாங்கிய மாணவனை முதல் ரேங்க் என்று அறிவித்துவிட்டு, முதல் ரேங்க் வாங்கிய அம்மாணவியை பதினைந்தாவது ரேங்க் என அறிவிக்கிறார். அவர் எதிர்பார்த்ததுபோல தேர்வுத்தாளை கைநீட்டி வாங்கும் அவள் அழத் தொடங்குகிறாள். உடனே அவள் தோளைத் தொட்டுத் திருப்பி காதைப் பிடித்தித் திருகி “பறையன் கூட பர்ஸ்ட் ரேங்க் வந்துட்டான். உனக்கு என்னடி ஆச்சு?” என்று அவளை மேலும் கலங்கவைத்து அழவைக்கிறார். பிறகு மெல்ல மெல்ல அமைதிப்படுத்திவிட்டு அவளே முதல் ரேங்க் வாங்கியிருப்பதாக அறிவிக்கிறார். 

ஆசிரியர் தொடர்பாக இன்னொரு காட்சி. பள்ளிப்படிப்பை முடித்து பட்டப்படிப்புக்காக கல்லூரியில் சேர்ந்திருந்த நேரம். புதிய ஆசிரியர் ஒருவர் வகுப்பறைக்கு வந்து மாணவ மாணவிகளிடம் ஒவ்வொருவராக எழுந்து நின்று தன் பெயர், ஊர், படித்த பள்ளிக்கூடம், இலட்சியம், குலதெய்வத்தின் பெயர் எல்லாவற்றையும் வரிசையாகச் சொல்லி அறிமுகம் செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறார். பெயர், ஊர், பள்ளி, இலட்சியம் எல்லாம் சரி.

குலதெய்வத்தின் பெயர் எதற்காக என்று புரியாமல் குழம்புகிறான் அவன். அதற்கான விடை அடுத்த நொடியே அவனுக்குப் புரிந்துவிடுகிறது. முதல் வரிசையில் அமர்ந்திருந்த ஒரு மாணவி எழுந்து நின்று தன் குலதெய்வத்தின் பெயரைச் சொன்னதுமே, அவள் சாதியை ஊகித்து அறிந்துகொள்ளும்  அவருடைய அற்பமனத்தை அவன் எளிதாகப் புரிந்துகொண்டான். அதனால் வரிசைப்படி தன் முறை வந்த போது, தன் குலதெய்வம் பகுத்தறிவுப்பகலவன் பெரியார் என்று தெரிவிக்கிறான். அவரால் மேற்கொண்டு எந்தக் கேள்வியும் கேட்கமுடியாமல் போய்விடுகிறது. கடுகடுப்புடன் அடுத்த மாணவனிடம் தம் கேள்விகளை முன்வைக்கச் சென்றுவிடுகிறார் அவர்.  

மற்றொரு காட்சி. மேல்நிலைப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் விடுதியில் தங்கியிருக்கிறான் திருக்குமரன். வீட்டிலிருந்து தொலைவான ஊரில் பள்ளிக்கூடம் இருந்தது என்பதுதான் காரணம். அப்போது பாரதி என்பவன் அவனுக்கு நண்பனாக அமைகிறான். அவனோடு சேர்ந்து பாரதியின் வீட்டில் மதிய உணவு உண்பது எப்படியோ பழகிவிட்டது. பாரதியின் அம்மாவும் அவனிடம் பாசமாகவே இருக்கிறார். தினமும் இருவரையும் ஒன்றாக உட்காரவைத்து உணவு பரிமாறுகிறார் அவர். ஒருநாள் அவன் வரவில்லையென்றாலும் அதற்காக ஆதங்கப்படுகிறார் அந்த அம்மா. ஒருமுறை இருவருக்கும் வழக்கம்போல கறிக்குழம்பு ஊற்றி சாப்பாடு பரிமாறுகிறார் அவர். அப்போது எதிர்பாராத விதமாக ஏதோ ஒரு வேலையாக பாதி சாப்பாட்டில் எழுந்து போகிறான் பாரதி. அவன் இல்லாத தருணத்தில் தன் மகனைப்பற்றி அறிந்துகொள்ளும் ஆவலில் சில கேள்விகளை திருக்குமரனிடம் கேட்கிறார் அந்த அம்மா. அவள் மனம் நிறைவு கொள்ளும் வகையில் அவனைப்பற்றி பெருமையாகவே சொல்கிறான் திருக்குமரன். இறுதியில் அந்த அம்மா அங்கலாய்ப்புடன் ”எல்லாம் சரிதான் தம்பி. ஆனா திடீர்திடீர்னு இந்த பறப்பசங்கள வீட்டுக்குள்ள அழச்சிட்டு வந்துடறான். அத நினைச்சாதான் வருத்தமா இருக்குது” என்று சொல்கிறார். அதற்குப் பிறகு அவனால் தொடர்ந்து சாப்பிடமுடியாமல் எழுந்துவிடுகிறான். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவனால் பாரதியின் வீட்டுக்குச் செல்ல அவனுக்கு மனம் வரவில்லை. அவன் தாயார் சொன்ன சொற்களை நண்பனிடம் சொல்லவும் அவனுக்கு மனம் வரவில்லை. நல்ல அம்மாவின் மனத்திலும் இந்த மேட்டிமைப் பார்வை பதுங்கியிருப்பதை வேதனையுடன் தாங்கிக்கொள்கிறான். உண்மையை வெளிப்படுத்தாமலேயே அந்த நட்பைத் துண்டித்துக்கொள்கிறான்.  

அன்பின் ஈரத்துடன் தொடங்கி பாதியிலேயே முறிந்துபோன மற்றொரு நட்பு பற்றிய காட்சியும் இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது. ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது இணைபிரியாத தோழனாக இருக்கிறான் ஒரு சிறுவன் அவன் பெயர் கார்த்திகேயன். உயர்சாதியைச் சேர்ந்தவன். ஆனால் அதுசார்ந்த எவ்விதமான வேறுபாடான பார்வைகளும் இல்லாதவன். ஒருநாள் தன் வீட்டுத் தோட்டத்தில் இருக்கும் கொய்யாமரத்தில் பழுத்திருக்கும் பழங்களைப் பறிக்க திருக்குமரனையும் அழைத்துச் செல்கிறான் அவன். மரம் வீட்டுக்குப் பின்னால் இருக்கிறது. வீட்டின் எல்லா அறைகளையும் கடந்துதான் பின்கட்டுக்குச் செல்லவேண்டும். வழியில் அமர்ந்திருந்த அவன் தாத்தா “அவாள்லாம் நம்ம ஆத்துக்குள்ள வரக்கூடாதுன்னு நோக்கு தெரியாதா என்ன? போகச் சொல்லுடா வெளியில” என்று தாத்தா சத்தம் போடுகிறார். அதைப் பொருட்படுத்தாத நண்பனை மரம் வரைக்கும் அழைத்துச் சென்று பழங்களைப் பறிக்கவைக்கிறான். இருவரும் ஓடோடி பள்ளிக்குத் திரும்பி வந்துவிடுகிறார்கள். தொடக்கப்பள்ளிக்குப் பிறகு இருவரும் ஆளுக்கொரு திசையில் போய்விடுகிறார்கள். பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்செயலாக ஒரு பேருந்தில் இருவரும் இளைஞர்களாக சந்தித்துக்கொள்கிறார்கள். பழைய நண்பனைப் பார்த்த மகிழ்ச்சியில் “டேய், கார்த்தி, எப்படிடா இருக்க? பார்த்து எவ்ளோ வருஷமாச்சி?” என்று ஆவலோடு பேசுவதற்கு நெருங்கிச் செல்கிறான். ஆனால் கோவில் பூசாரி கோலத்தில் இருந்த அவன் பேருந்து இருக்கையில் ஜன்னலோரமாக உடல் நசுங்க நகர்ந்து உட்கார்ந்தபடி ஓரிரு வார்த்தைகள் மட்டும் பேசிவிட்டு அமைதியாகிவிடுகிறான். 

நட்பை மட்டுமல்ல, பல ஆண்டுகளாகத் தொடர்ந்த காதலையும் ஒருநாள் துறந்துவிட நேர்ந்ததை மற்றொரு அத்தியாயம் வழியாக உணர்ந்துகொள்ள முடிகிறது. காதல் காலம் முடிவடைந்து திருமணம் செய்துகொள்ள வேண்டிய காலம் வந்தபோது அந்தப் பெண் தன் காதலை ஏற்றுக்கொள்ளும்படி தன் பெற்றோரிடம் பேசி ஏற்றுக்கொள்ள வைத்துவிடமுடியும் என்று நம்பிக்கையோடு சொல்கிறாள். தொடர்ந்து, அடுத்த கணமே காதலனைத்தான் ஏற்றுக்கொள்ள வைக்கமுடியுமே தவிர, காதலனுடைய பெற்றோரையோ, அவர்கள் வாழும் சூழலையோ ஏற்றுக்கொள்ள வைக்கமுடியாது என்றும் அதனால் திருமணமானதும் தனியாக வந்துவிடவேண்டும் என்றும் அவள் ஒரு வேண்டுகோளை வைக்கிறாள். அந்தக் காதல் தோல்வியடைய அதுவே காரணமாகிவிடுகிறது. இப்படி சாதிவெறுப்பு நோக்கினை எதிர்கொள்ள நேர்ந்த பல்வேறு தருணங்களை சின்னச்சின்ன கட்டுரைகள் வழியாக பதிவு செய்திருக்கிறார் திருக்குமரன் 

திருக்குமரன் தன் தாத்தா மொட்டையன் பற்றியும் தந்தை கணேசன் பற்றியும் தீட்டியிருக்கும் சொற்சித்திரங்கள் இத்தொகுதியின் மிகமுக்கியமான பகுதிகள். இரு பகுதிகளுமே காவியத்தன்மையுடன் உள்ளன. இருவரும் இருவேறு தன்மை கொண்டவர்கள். அமைதியாக இருக்கவேண்டிய தருணங்களில் அமைதி காத்தும் எதிர்ப்பைப் புலப்படுத்தவேண்டிய தருணங்களில் துணிவுடன் எதிர்த்தும் சாதியத்தைக் கடந்த தன் சுயத்தை வெளிப்படுத்துகிறார் தாத்தா மொட்டையன். ஆனால், ஊராட்சிமன்றத் தலைவராக வெற்றி பெறுவதற்கான எல்லா வாய்ப்புகளும் இருந்தும் கூட, கட்சி மேலிடம் தன்னை தொடர்ச்சியாக மூன்றுமுறை ஒதுக்கிவைக்கும் நிலையில் கூட அமைதி காத்து தன் எல்லையை தானே சுருக்கிக்கொள்கிறார் தந்தை கணேசன். எந்த நிலையிலும கட்சித்தலைமையை எதிர்த்து கசப்புடன் ஒரு சொல் கூட சொல்ல அவர் மனம் துணியவில்லை.  அவருக்கு இருந்த ஒரே ஆசை தலைவர் உயிர்துறப்பதற்கு முன்னால் தன் உயிர் பிரிந்துவிடவேண்டும் என்பதுதான். வியப்பூட்டும் வகையில், அவர் விரும்பிய விதமாகவே அவருடைய மரணம் அமைந்துவிட்டது. தன் இறுதிமூச்சு வரைக்கும் தன்னை தன் கட்சி ஓர் அடியாளாகவே நடத்தியது என்பதை அறியாமலேயே அவர் மறைந்துவிட்டார். 

கணேசனின் நெஞ்சில் நிறைந்திருந்த உணர்வை ஆழமும் உறுதியும் நம்பிக்கையும் நிறைந்த கட்சிப்பற்று என்று குறிப்பிடலாம். ஆனால், காலமெல்லாம் அவரை தவறான வழியில் பயன்படுத்திக்கொண்டு, ஒரே ஒரு அங்குலம் கூட வாழ்வின் ஏணிப்படியில் ஏறிவிடாதபடி என்றென்றைக்குமாக அவரைத் தரையிலேயே தடுத்து நிறுத்திவைத்திருந்த கட்சிக்காரர்களின் நயவஞ்சகத்தையும் நம்பிக்கை துரோகத்தையும்  அப்பட்டமான சுயநலத்தையும் குறிப்பிட தமிழில் சொல்லே இல்லை.  

இந்நூலில் உள்ள பெரும்பாலான நினைவுச்சித்திரங்களில் சாதிப்பெயர் சாதி அடையாளத்தைக் குறிக்கும் சொல்லாக பயன்படுத்தப்படவில்லை. மாறாக, இழிவுக்குறிப்பு, அழகின்மை, முரட்டுத்தனம், கரிய உடல் என வெவ்வேறு பண்புகளோடு இணைத்துப் பயன்படுத்தப்படுகிறது. நெஞ்சின் ஆழம் வரைக்கும் சென்று படிந்துவிட்ட சாதியப்பார்வைதான் இதற்குக் காரணம்.  இது நெருக்கமான நண்பர்களிடமும் வெளிப்படுகிறது. நட்பே இல்லாத மனிதர்களிடமும் வெளிப்படுகிறது. நட்புச்சக்திகளுக்கு அந்தப் பிழையைச் சுட்டிக்காட்டி நட்பைத் தக்கவைத்துக்கொள்வது மிகமுக்கியம். நட்புச்சக்திகளின் வட்டம் விரிவடையும் தோறும் நல்லிணக்கச் சமூகத்தின் எல்லைகளும் விரிவடையும்.

– பாவண்ணன்

நூல்: கறி விருந்தும் கவுளி வெற்றிலையும் – தன்வரலாறு
ஆசிரியர்: திருக்குமரன் கணேசன்
விலை: ரூ. 175/-
வெளியீடு: காலச்சுவடு,
669, கே.பி.சாலை,
நாகர்கோவில் -629001.
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924

நூல் அறிமுகம்: என். சரவணனின் ‘தலித்தின் குறிப்புகள்’ – பொன் விஜி

நூல் அறிமுகம்: என். சரவணனின் ‘தலித்தின் குறிப்புகள்’ – பொன் விஜி




*நம் கடவுள் சாதி காப்பாற்றும் கடவுள்*
*நம் மதம் சாதி காப்பாற்றும் மதம்*
*நம் அரசாங்கம் சாதி காப்பாற்றும் அரசாங்கம்*
*நம் இலக்கியம் சாதி காப்பாற்றும் இலக்கியம்
*நம் மொழி சாதி காப்பாற்றும் மொழி*

நண்பர்களே இதை நான் கூறவில்லை, பெரியார் கூறியதாக *ஆசிரியர் சரவணண்*அவர்கள் இக்கட்டுரையில் கோடிட்டுக் காட்டுகிறார்.

ஆசிரியர் சரவணன் அவர்கள் தான் சொல்ல வந்த விடயத்தை வாசிப்போர் ஆகிய எங்களை தனது சிந்தனைக்குள் இழுத்துச் செல்வதை இந்த நூல் மிக அழகாக எடுத்துச் செல்கின்றது

இன்று நான் ஒரு *பூப்புனித நீராட்டு* விழாவுக்குச் சென்று வந்தேன். அங்கே சில ஆண்டுகள் தவறவிட்ட எனது நண்பனின் *மச்சானைக் * கண்டேன். அவர் ஒரு *மீன்பிடி* த் தொழிலைக் கொண்ட *சாதிப் பரம்பரையில் வந்தவர். அவரிடம் வழக்கம் போல் உரையாடினேன். அவரோடு சேர்ந்து. *டீ * யும் குடித்தேன். ஒரு சிலர் எங்களை ஒரு மாதிரியாகப் பார்த்துச் சென்றனர். அதைப் பொருட்படுத்தாது நாம் உரையாடினோம். நான் எனது *சாதியை * அவரிடம் கூறிவிட்டே தொடர்ந்தோம்.
அவர் கூறிய வார்த்தை என்னைக் கொஞ்சம் சிந்திக்க வைத்தது. *சக நண்பர்களுடனோ அல்லது ஏனைய நமது மொழி பேசும் மக்களிடமோ* நான் கதைக்கும் போது மிகவும் பயந்து பயந்து தான் கதைக்கிறேன் என்றார். *ஏன்*என்று கேட்டேன்,அதற்கு அவர், *எங்கே எனது சாதியைத் தெரிந்துவிட்டால் ** மிகவும் தொலைவில் வைத்துவிடுவார்களோ என்று எண்ணியே அவர் தனது நட்பைப் பாதுகாப்பதாக ஆதங்கப்பட்டார்.
இலங்கையைப் பொறுத்தமட்டில் ஒரு மனிதனின் பிறப்பிடம் எங்கு என்று தெரிந்துவிட்டால், அவன் இன்ன *சாதி * தான் என்று தெரிவதற்குத் தீயைவிட வலுவான *வேகம்* கொண்டு பரப்பக்கூடிய மக்கள் கூட்டம் அலைமோதுவதை அவதானிக்கலாம்.
இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டுப் போருக்கு முன், பின், மற்றும் இன்றைய சூழ்நிலையில், *சாதியின் * கொடுமைகளில் பெரிதாக மாற்றம் இருப்பதாகத் தெரியவில்லை. (விடுதலைப் புலிகள் காலத்தில் நிகழ்ந்த மாற்றமாகக் கூறப்படுவது ஒரு சார்பு நிலை என்றே அறியப்படுகிறது).
உலக வளரும் நாடுகளில் *சாதி யின் பங்கு, இலங்கையில் வெளிப்படையாகச் சொல்லப்படாமல் விட்டாலும், இன்றும் கூட அதன் தாக்கம், பூமியின் நடுப்பகுதியில் தகதகவென்று கொதித்துக்கொண்டிருக்கும் குழம்பு பேன்ற மனநிலையில் தான் *ஆதிக்க* சாதியினர் இருப்பதாகக் கூறப்படுகிறது. அது சங்கிலி போல் புலம்பெயர்ந்த நாடுகளிலும் கொடிகட்டிப் பறப்பதை உணரமுடிகிறது.
நண்பர்களே,
# *தலித் – தலித்தியம்* என்றால் என்ன?
# *அருந்ததியர்* என்று குறிப்பிடுவது யாரை?
# *இலங்கையில் வாழும்* அருந்ததியரின் பூர்வீகம் எங்கே?
# *சாதி வசைபாடல் * லின் வடிவம் எப்படி?
# *பஞ்சமரை* விடத் தாழ்த்தப்பட்டவர்கள் யார்?
# *சாதியூறிய* மொழியின் வடிவம் எப்படி?

# *தமிழனுக்குக்* கொடுக்பப்பட்ட நிறம் என்ன?

இது போன்ற 32 வகையான சிறு தலையங்கங்களை உள்ளடக்கி ஆராய்கிறார் ஆசிரியர் *என். சரவணன் அவர்கள்.

*அருந்ததியர் * என்ற ஒரு இனம் *இலங்கையில் * இருப்பதாக இப் புத்தகத்தின் மூலம் அறிந்து ஆச்சரியப்பட்டேன். இதுவரை காலமும் *பஞ்சமரைத் தான், *கிட்ட வராதே * அங்கேயே விலகிநில் என்று ஆதிக்க சாதியினரால் ஒதுக்கப்பட்டவர்கள் என்பதனை, அதனைக் காட்டிலும் மிகக் கீழ்மையான *நீ துப்பரவு செய்யும் வேலைக்குத்தான் லாயக் * என்று போற்றப்படும் இனமான இந்த *அருந்ததியர்* இருந்துள்ளமையும், ஏன் தற்போது கூட அவர்களது அடுத்த நேர சாப்பாட்டிற்குப் *பிச்சை* எடுக்கும் நிலையிலேயே வாழ்ந்து (இலங்கையில்) வருவதை ஆசிரியர் *என். சரவணன்* அவர்கள் தனது மிக நீண்ட தேடலுக்குப் பின் இங்கே பதிவு செய்கிறார்.

குறிப்பாக *சக்கிலியன்* யார்? அவர்கள் *தலித்துக்களில்* இருந்து வேறுபட்டவர்களா?
இது போன்ற கேள்விகளை நாம் எங்களுக்குள்ளே கேட்கும்போது, எங்கள் உள்ளத்தை அது குடைந்து எடுக்கின்றது .
ஆசிரியர் *என். சரவணன் அவர்கள், இங்கே இலங்கையில் மூன்று விதமான *சாதியை * அடிப்படையாகக் கொண்டு, அதனை *வடகிழக்கு, மலையகம், சிங்களமக்கள் * ஆகிய பகுதிகளில் ஏற்பட்டு, நடைமுறை வாழ்க்கையில் அதன் வீரியத்தைப் பல கோணங்களில், பல உதாரணங்களுடன், தனது நேரடி உரையாடல் மூலம் அதனைத் தெளிவாக்குகிறார்.
*சக்கிலியன்* என்ற சொல்லாடல் இந்த உலகத்தைவிட்டு அறவே ஒழித்துக் கட்ட வேண்டும் என்றே ஆசிரியர் கடுமையாக விமர்சிப்பதையும், அதனால் *அருந்ததியர்* தமது வாழ்க்கையில் அனுபவித்துவரும் துன்பங்களை அறிந்து கொள்ள, நண்பர்களே கண்டிப்பாக வாசியுங்கள்.
*தலித்தின் குறிப்புகள் * என்று கொடுத்தாலும், இப் புத்தகத்தில் பலதரப்பட்ட, இந்தக் கூட்டுக்குள் இருந்து வெளியே வரமுடியாதா? எனத் துடிக்கும் அவர்களது நிலமையை, ஏன் அவர்கள் *அகமணத்தை * இன்றும் கைவிடாமல் பின்பற்றுகிறார்கள், அவர்களது *குலதெய்வங்கள் * எவரால் *இந்துக் கோயிலாக* மாறியது, எங்கு சென்றாலும் மற்றவர்களால் அரவணைக்கும் *செயலைத் தாங்கிய வண்ணம் நடப்பது, இது போன்ற பல முக்கிய குறிப்புகளை நீங்களும் உற்று நோக்குங்கள் என்று தருகிறார் ஆசிரியர்.
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட *அருந்ததியர் * அவர்கள் தொடர்ந்தும் தங்களது தாய்மொழியான *தெலுங்கையே* பேசுகிறார்கள். (தமிழும் கதைப்பார்கள்) தங்கள் சமூகத்திலிருந்து வெளியே வருவதற்கான அவர்களது முயற்சிகளை ஆசிரியர் இங்கே எடுத்துக் கூறத் தவறவில்லை. அதன் ஒரு பகுதியாக, அவர்கள் *சிங்கள மொழியைக் * கற்றல், *கிறிஸ்தவ * சமயத்தில் இணைதல், தங்களுக்கென்று சங்கங்கள் அமைத்து அதன் மூலம் தமது உரிமைகளைப் பெற, மாற்ற முயற்சித்தல், இது போன்ற அறியாப்படாத அதிக செய்திகளை ஆவணப்படுத்தியுள்ளார் ஆசிரியர். அவருக்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
இதிலே *வெள்ளைத் திமிரும் வெள்ளாளத் திமிரும் * என்ற தலையங்கத்தில் 3 பிரிவுகளாகத் தந்துள்ளார் ஆசிரியர். கண்டிப்பா இதற்காவுதல் வாசிப்பாளர்கள் அறிந்து கொள்வது அவசியம் என்றே தோன்றுகின்றது.
உண்மையில் எமது சில உதாசீனமான வார்த்தைகளை *என். சரவணன் அவர்கள் நினைவு படுத்துவது இங்கே குறிப்பிடத்தக்கது.
(உண்மையும் தான்).
குறிப்பாக, இலங்கை மக்கள் *சாதியை* எப்படியெல்லாம் பயன்படுத்துகிறார்கள், எதில் எல்லாம் அது ஊடுருவி நிற்கின்றது, புலம்பெயர் வாழ்விலும் அதன் ஆட்டம் எப்படி ஆடுகிறது, இனி வரும் அடுத்த *சந்ததியினரின் * உள்ளங்களில் எப்படி விதைக்கின்றார்கள், வெளியே சொல்லிக் கொள்வது *சாதியாவது மண்ணாங்கட்டியாவது * என்று சொல்லுவார்கள், ஆனால் தங்களது சொந்த வாழ்க்கையில் *உடும்புப்பிடி* போல் இருப்பார்கள். இது போன்ற விடயங்களை உதாரணங்களுடன் வாசிக்கக் கூடியதான ஒரு சிறந்த நூல் என்றே சொல்லலாம்..நான் இங்கு குறிப்பிட்டதைத் தவிர இன்னும் அதிக, உறுதியான பதிவுகளை நீங்களும் கண்டிப்பாக வாசிக்க வேண்டும் என்று கூற ஆசைப்படுகிறேன் நண்பர்களே…
இங்கே நான் எல்லாவற்றையும் குறிப்பிட்டு விட்டால் புத்தகத்தை வாசிப்பது போல் ஒரு அனுபவம் ஏற்பட்டு விடும், அதனால் மேற்கொண்டு அதிலுள்ள பல உன்னதமான சிந்திக்கக்கூடிய பகுதிகளை இதிலே நான் குறைத்துக் கொள்கின்றேன்.
நன்றிகள்.
பொன் விஜி – சுவிஸ்.
நூல் : தலித்தின் குறிப்புகள்
ஆசிரியர்கள் : என். சரவணன்
விலை: ரூ. 180/-
பக்கம் : 196

வெளியீடு : எழிலினி பதிப்பகம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
[email protected]
நூல் அறிமுகம்: ஜனநேசனின் ‘எலோ..லம்’ நாவல் – சு.பொ. அகத்தியலிங்கம்

நூல் அறிமுகம்: ஜனநேசனின் ‘எலோ..லம்’ நாவல் – சு.பொ. அகத்தியலிங்கம்




நூல் : ஏலோ…லம்
ஆசிரியர் : ஜனநேசன்
விலை : ரூ.₹360/-
பக்கங்கள் – 384
வெளியீடு : பாரதி புத்தகாலயம்

தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]

ஏலக்காட்டின் வாழ்க்கை ஸ்கேன்: நேற்றும் இன்றும்.

“என்னய்யா, உங்காளுக முதலாளிமாருக வர்றாகன்னு மட்டுமரியாதை வேணாம்? பள்ளு , பறைக, மாதாரி , கீதாரி குடியானதுகன்னு ஒரு ஈக்குஞ்சுகூட எந்திரிக்கல, விலகி நிக்கல! குமிச்சு வச்ச சாணி கணக்கா கிடக்குதுக! சரி! முதலாளி மேல கோவம்னுகூட வச்சுக்க! லட்சுமி ஆத்தாளுக்கு மணி அடிச்சு சாமி கும்பிடறோம்ல …அப்பவாது எழுந்திரிச்சு நிக்கலாமுல்ல? சாமிக்கு உடைச்ச சிதறு தேங்காய்ச் சில்லுகளைக்கூட நண்டு சிண்டுகளாகத் திரிகிற பிள்ளைகள் எடுக்கலைன்னா அதுகளுக்கு எவ்வளவு திண்ணம் பாரு !……..

ஏலக்காய் டீ யின் மணம் மூக்கைத் துளைக்கும். ருசி நாக்கை ஈர்க்கும் பாயாசம், பிரியாணி என பல்வேறு சமையல்களில் ஏலக்காயைப் பயன்படுத்தி மகிழ்வோம்! ஆயின் அந்த ஏலக்காயின் பின்னிருக்கும் வலியை அறிவோமா?

மலைக் காடுகளில் காபி, தேயிலை, ஏலக்காய் தோட்டங்களில் செடியின் மரத்தின் தூரில் உறைந்திருக்கும் இரத்தத்தை, கண்ணீரை பேசும் புதினங்கள் சிலவேனும் வாசித்திருக்கிறீர்களா?.

என் நினைவுக்கு எட்டிய சிலவற்றின் பெயர்களை கீழே நினைவூட்டுகிறேன். வாசித்தவர்கள் அசைபோடுவீர்! வாசிக்காதவர்கள் தேடி வாசிப்பீர்!

டி.செல்வராஜின் ‘தேநீர்’ , இரா. முருகவேள் மொழியாக்கத்தில் பி.எச்.டேனியலின் ‘எரியும் பனிக்காடு’, கொ மா கோதண்டம் எழுதிய ‘ஏலச்சிகரம்’, ‘குறிஞ்சாம் பூ’, ‘ஜன்ம பூமிகள்’, கு.சின்னப்பபாரதியின் ‘சங்கம்’ , ஜானகி ராமச்சந்திரன் மொழிபெயர்ப்பில் கோதாவரி பாருலேகர் எழுதிய ‘மனிதர்கள் விழித்துக்கொள்ளும் போது’ , இரா சடகோபனின் மொழிபெயர்ப்பில் கிறொஸ்டின் வில்சன் எழுதிய ‘கசந்த கோப்பி’ [ bitter berry] , அமல்ராஜின் ‘தேரிக்காடு’ உள்ளிட்ட புதினங்கள் மலைக்காடுகளில் பஞ்சம் பிழைக்க வந்தோர்கள் படும்பாட்டை, வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு சூழல்களில் விவரித்திருக்கும்; ஆயின் அடிநாதமாய் சுரண்டலும் ஒடுக்குமுறையும் பேசப்பட்டிருக்கும், அவரவர் அரசியல் சமூகப் புரிதலுக்கு ஏற்ப. [ நான் சொல்ல மறந்த நூல்களையும் இந்தப் பட்டியலில் இணைத்துக் கொள்க ]

அந்த வரிசையில் இடம் பிடிக்க வந்திருக்கிறது “ஏலோ… லம்”. ஆசிரியர் ஜனநேசன். ஏலத்தோட்டங்களின் வாழ்க்கைப் பாட்டை மையம் கொண்டு எழுதப் பட்டிருப்பதுதான் இப்புதினத்தின் சிறப்பு .

“இப்புதினத்தின் நிகழ்வுகள் எண்பது விழுக்காடு உண்மையானவை. இவர்களை ஒருங்கிணைக்கவே இருபது விழுக்காடு புனைவைக் கொண்டு நெய்தேன்.” என வாக்கு மூலம் தருகிறார் ஜனநேசன். ஏற்கனவே சிறுகதைகள், குறுநாவல்கள் தந்துள்ளார். இரா.வீரராகவன் என்பது இயற்பெயர். ஓய்வுபெற்ற அரசு கல்லூரி நூலகர்.

இந்நாவலில் சுமார் அறுபது அறுப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முந்தைய ஏலக்காட்டு வாழ்க்கையையும், 2019 -20 பணமதிப்பீட்டு கால வாழ்க்கையையும் இரண்டு பாகங்களாய் இரண்டு ஸ்கேன் ரிப்போர்ட்டுகளாய் 384 பக்கங்களில் தந்துள்ளார் .

பொதுவாய் தேயிலை, காப்பி, ஏலக்காய் என எதைத் தொட்டு எழுதினாலும் அட்டைக்கடியையும், சீட்டுகட்டுக் கணக்கான டப்பா போன்ற வீடுகளையும் சொல்லாமல் கதை நகராது; பெரும்பாலும் பஞ்சம் பிழைக்க வந்தவர்களே இங்கே வயிற்றுப்பாட்டுக்காய் அட்டைக்கடியுடனும் கடினமான பணிச்சூழலிலும் மல்லுக்கட்டி கிடப்பார்கள். ஆம், வாழ்ந்தார்கள் எனச் சொல்லவே முடியாது. ஆயினும் அச்சூழலிலும் காதலும் காமமும் சாதியும் மதமும் அறிவும் அறியாமையும் என வாழ்வின் எல்லா கூறுகளும் அங்கே விரவியே கிடக்கும். இப்புதினமும் அந்த வரையறைக்கு விதிவிலக்கல்ல.

கேரள மாநில இடுக்கி மாவட்டத்தில் உள்ள வட்டப்பாறை ஏலத்தோட்டத்துக்கு பஞ்சம் பிழைக்க தந்தையை இழந்த தன் மகன் ரவியை ஒண்பதாம் வகுப்பு முடிக்கும் முன்பே பொன்னுத்தாய் அழைத்துச் செல்லும் காட்சியில் நாவல் தொடங்குகிறது. ரவி வழியே புதினம் விரிகிறது.

அந்த தோட்டம் கிருஷ்ணராஜா என்பவருக்குச் சொந்தம்; அவர் எப்போதாவது வந்து போகிறவர். மேனஜர் வைரம் செட்டியார் வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டுமே வருபவர், கணக்குப் பிள்ளை துரைசாமி கிட்டத்தட்ட ஆல் இன் அழகுராஜாவாய் ஆட்டம் காட்டுபவர். அவரின் உதவிக்கு குப்பய்யா .

இங்கே கங்காணிகள் பழனிச்சாமி கவுண்டர், சீனி மாதாரி, பரமன், சின்னாத்தேவர், இராமர், குரங்கு விரட்டி ரெங்கசாமி ஆகியோரின் கீழ் பொன்னுத்தாய், சிவனம்மா, மாரியம்மா உள்ளிட்ட பெண்கள், கோட்டி நாய்க்கர், மாரிமுத்து, முனுசாமி என ஒரு பட்டாளம் ஏலத்தோட்டத்தின் வேரில் தம் செந்நீரைப் பொழிந்து கொண்டிருந்தனர் .

“இல்லம்மா! என் கணுக்கால்ல அட்டைகள் ரத்தம் குடிச்சப்போ, சக்கிலிய வீட்டுப் பழனிதான் அட்டையைப் புடுங்கிப் போட்டான்; அண்ணாந்து காபி பழம் பறிக்கையில் நான் கீழே விழ இருந்தப்போ பள்ளவீட்டு செத்த குழலு இருளன்தான் காப்பாற்றினான்.! ஏம்மா, சக்கிலி பறையன்னா என்னம்மா?” என சிறுவன் ரவியின் வெள்ளந்தியான கேள்வி, நிலவிய யதார்த்தத்தைச் சொல்லும். ரவி மாடு மேய்க்கப் போன இடத்தில் அறிமுகமாகும் சித்திரன் எனும் ஓர் முதியவர் மூலம் மேலும் பல செய்திகளையும் பொது விஷயங்களையும் ரவி அறிந்தான். .

கள்ளர், தேவர், சக்கிலியர், பள்ளர், பறையர், நாய்க்கர், செட்டி இன்னும் பல சாதியாகத்தான் ஏலத்தோட்டத்துக்கு பஞ்சம் பிழைக்க வந்தார்கள். சாதி அவ்வளவு சீக்கிரம் தலைமுழுகுகிற சமாச்சாரமா? இல்லையே! ஆனால் வாழ்க்கைப் போராட்டமும் வர்க்கப் போராட்டமும் சாதியை மீறி அவர்களை ஒன்றுபட வைத்ததை இப்புதினம் வலுவாகவே பதிவு செய்கிறது.

“கங்காணிகள் செய்கிற அட்டூழியத்தை சிவனம்மா சாமியாடுகிற மாதிரி முதலாளி காதில் போட்டிருச்சு! முதலாளி என்ன நடவடிக்கை எடுப்பார்னு பார்ப்போம்!” என்று பெண்கள் பேசிக்கொண்டனர் .

லட்சுமி அம்மன் ஒரு கடவுளாய் வழிபடும் கோயிலாய் மட்டுமில்லை. அவர்களின் ஆற்றாமையை, கோபத்தை, எரிச்சலை, அன்பை, வெறுப்பை கொட்டும் இடமாகவும் இருந்தது. “ இதயமற்றவர்களின் இதயமாக, ஏக்கப் பெருமூச்சாக” என மார்க்ஸ் சொன்னது போல் இருந்தது.

தோட்டத்தில் பிரச்சனை முற்றிய ஓர் நாளில், கணக்குப் பிள்ளை துரைசாமி சாதிக்கலவரத்தைத் தூண்ட பயன்படுவார் என கணக்குப் போட்டு தன் சக ஊழியராய் ஏற்கெனவே சேர்த்துக் கொண்ட குப்பய்யாவிடம், லட்சுமி அம்மன் பூஜை முடிந்ததும் கடுகடுப்புடன் வார்த்தைகளைக் கொட்டினார்..

“என்னய்யா, உங்காளுக முதலாளிமாருக வர்றாகன்னு மட்டுமரியாதை வேணாம்? பள்ளு, பறைக, மாதாரி, கீதாரி குடியானதுகன்னு ஒரு ஈக்குஞ்சுகூட எந்திரிக்கல, விலகி நிக்கல! குமிச்சு வச்ச சாணி கணக்கா கிடக்குதுக! சரி! முதலாளி மேல கோவம்னுகூட வச்சுக்க! லட்சுமி ஆத்தாளுக்கு மணி அடிச்சு சாமி கும்பிடறோம்ல… அப்பவாது எழுந்திரிச்சு நிக்கலாமுல்ல? சாமிக்கு உடைச்ச சிதறு தேங்காய்ச் சில்லுகளைக்கூட நண்டு சிண்டுகளாகத் திரிகிற பிள்ளைகள் எடுக்கலைன்னா அதுகளுக்கு எவ்வளவு திண்ணம் பாரு! எம் முப்பது வருஷ அனுபவத்தில் இம்புட்டு திமிர் பிடிச்ச ஆளுகளைப் பார்த்ததில்லை! இதுக்கெல்லாம் காரணம் நீங்கதான்… … மக்கா மக்கான்னு அவங்களோடு ராத்திரி பகலா இணையுறீங்களே… அவங்கள வைக்கிற இடத்தில் வைக்கணும்..” என்று பேசி கிழட்டு மாடு போல் புஸ் புஸ்ஸுன்னு மூச்சுவிட்டார் துரைச்சாமி .

வில்லனாக காட்டப்பட்டிருக்கும் இதே துரைச்சாமி செத்த பிறகு எடுக்கப்பட்ட அவரின் கடிதம் அவருக்குள்ளும் ஈரம் இருந்ததை காட்டுகிறது. நூலாசிரியரின் இப்பதிவு நுட்பமானது .

யானை மிதித்து செத்த கோட்டி நாய்க்கர், பாம்பு கடித்து செத்த மாரியக்கா மரணங்கள் பல கேள்விகளை எழுப்பின; முளைவிட்டிருந்த சங்கத்தை போராடுகிற சங்கமாக மாற்றியது; வீரமிக்க போராட்டம் மூன்று உயிர்களைப் பலி வாங்கியது. போராட்டம் வென்றது. அடியாள், வஞ்சகம், சதி எல்லாம் காட்சியாகிறது. ஆனால் முதலாளியின் போக்காலும் அரசின் பொருளாதாரக் கொள்கைகளாலும் எல்லாம் பறிபோனது. தலைகீழானது .

51 அத்தியாயங்களைக் கொண்ட முதல் பாகத்தில் சுமார் அறுப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முந்தைய ஏலத்தோட்டத்தின் சமூக, அரசியல்,
பொருளாதார சித்திரம் கதையாக்கப்பட்டிருக்கிறது. இதைத்தான் என்னுரையில் நூலாசிரியரும் ஒப்புக் கொண்டிருக்கிறார். கதா பாத்திரங்கள் பெரும்பாலும் நிஜத்தை சார்ந்து இருப்பதால் நாவலுக்கு உயிர்துடிப்பு தானே வந்துவிடுகிறது.

ஆயினும், எனக்கு சில ஐயங்கள் இங்கே வருவதை தவிர்க்கவே முடியவில்லை. ஒன்று மலைக்காடுகளில் நான் இதுவரை வாசித்தது போல் கேட்டறிந்தது போல் கங்காணிகள் கொடூரமானார்களாய் பொதுவாய்ச் சித்தரிப்பு இல்லையே விதிவிலக்குகள் தவிர! இது என் புரிதல் கோளாறா? இடதுசாரி போராட்டங்கள் விளைவாக ஏற்பட்ட சூழல் மாற்றமெனில் அதுகுறித்த தகவல்கூட போகிற போக்கில்கூட சொல்லப்படவில்லையே! ஏன்? அல்லது எழுத்தாளர் கண்டறிந்த உண்மை எனில் கேள்வி வாபஸ் !

இரண்டு, போலீசும், அரசு நிர்வாகமும் யார் ஆட்சியிலும் ஒடுக்குமுறைக் கருவிதானே! இடதுசாரி அரசு இருந்ததால் கொஞ்சம் வித்தியாசமாக பிரச்சனையைக் கையாண்டு இருக்கலாம். ஆயின் இப்புதினத்தில் விவரிப்பதுபோல் நேர்மையும் கண்ணியமும் உள்ளவர்களாக இருப்பார்களா?

மூன்று, ஐஎன்டியுசியிலிருந்து சிஐடியுக்கு கைமாற்றிவிட்டது போல் இப்புதினத்தில் சொல்லப்பட்டிருப்பது யதார்த்ததுக்கு நெருக்கமானதா?

11 அத்தியாயம் கொண்ட இரண்டாவது பாகம் கிட்டத்தட்ட ஓர் அரசியல் சமூக அறிக்கையே. தோட்டங்களின் குவிமையம் உடைந்து சிறு உடைமையாளர்கள் தோற்றம், வட இந்திய தொழிலாளர் வருகை, அவர்கள் படும்பாடு அவர்களின் பலம், பலவீனம், அரசு கொள்கையால் ஏற்பட்ட சரிவு, பண்வீக்கம் தொடுத்த தாக்குதல் என எல்லாம் பாத்திரங்கள் வழி சொல்லப்பட்டிருக்கிறது .

“காலையில ரொட்டி சுட்டு சாப்பிட்டுக்கிறாங்க. உப்பை தொட்டு பச்சை மிளகாய் வெங்காயத்தை கடிச்சுகிட்டு திங்கிறாங்க.. அதில் என்ன ருசியோ என்ன சத்தோ தெரியலை! கருமாயப்பட்ட பொழப்பு….. சாயந்திரத்தில குடிக்கிற பெண்ணுகளும் இருக்காங்க…” இப்படி அவர்களின் வாழ்க்கைப் பாட்டையும் அரசியல் சமூக விழிப்புணர்வற்ற அவர்களின் அறியாமையையும் ஆங்காங்கு நூலாசிரியர் சொல்லிச் செல்கிறார் .

புலம் பெயரும் தொழிலாளர்களுக்காய் அரசு என்ன பாதுகாப்பு வைத்திருக்கிறது. ஒன்றுமில்லை. மாறாக கூலியைக் குறைக்க நேரம் காலமின்றி சுரண்ட சட்டத்தை காலில் போட்டு மிதிக்க முதலாளிக்கு சர்வசுதந்திரத்தை தந்துள்ளது. அது இப்புதினத்தில் சாத்தியமான அளவு சொல்லப்பட்டிருக்கு .

பணவீக்க நடவடிக்கையின் போது நோட்டை மாற்ற கமிஷன் பெற்ற பாஜகவினர் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. அது பெரும் உண்மை.

சிறுகதை எழுதுவதில் கொடிகட்டியவர் ஜனநேசன், நெடுங்கதை எழுத 2004ல் தொடங்கி அப்போது ஓர் கள ஆய்வு, 2019 ல் ஓர் கள ஆய்வு என இரண்டு கள ஆய்வுகள் செய்து இந்நாவலை 15 ஆண்டுகாலமாக நெய்துள்ளார். கதைக் களத்திற்கு ஏற்ப தேவையான மலையாளம் கலந்த தமிழ் நடையும், புரிகிற மாதிரியான உரையாடலுமாய் கதையை நகர்த்துவதில் ஜனநேசன் வெற்றி பெற்றுள்ளார்.

கள ஆய்வு செய்து புதினம் எழுதுவது மேற்கத்திய உலகில் அதிகம். தமிழில் மிகக்குறைவு. ராஜம் கிருஷ்ணன் இதில் கிட்டத்தட்ட முன்னத்தி ஏராய் தடம் பதித்தார். அவ்வழியில் ஜனநேசனும் பயணப்பட்டிருப்பது மிக நன்று. பாராட்டுக்கள். தொடரட்டும் இப்பணி!

சு.பொ.அகத்தியலிங்கம்.
20/8/2022.

சாதி மயிர் அகவி கவிதை – விநாயக மூர்த்தி

சாதி மயிர் அகவி கவிதை – விநாயக மூர்த்தி




மனிதர்களுக்குள் கோயில் எல்லை
வேறுவேறாய்
கட்டப்பட்டது
அப்பட்டமாய் புலப்படும்
கிராமத் திருவிழாக்களில்

அரசாங்கக் கவனிப்பில்
அசலூர்களில்
பெருங்கோயில்களில்
குடும்ப சகிதமாய்ப் போய்
மொட்டை போட்டு
கவுரவமாய் செலுத்துவர்
காணிக்கை
அங்கெல்லாம் மொட்டை போடும் மயிர்
எந்த சாதியென
எவனுக்கும் தெரியாது

திருவிழா வரும்போதெல்லாம்
பூஜை போக்குவரத்து
வெற்றுச் செயல்தான்
அர்த்த ராத்திரி
ஆடல் பாடலே
பிரதானம்
நன்கொடை
கொடுக்க விரும்பினாலும்
வாங்குவதில்லை நம்மிடத்தில் அவர்கள்

மாடி வீடு படிப்பு பதவி
நிலபுலம்
வளர்ந்து நிற்பவனையும்
பொருட்படுத்துவதில்லை

நாளுக்கொரு நாட்டியம் வகையறாக்களின் பங்களிப்பு
கச்சேரி
கரகாட்டம் கதா காலட்சேபம்
சனங்களும்
ஊரில் திருவிழா என்று
கறிகாய் ஆக்கி
அருகாமை உறவுகளை அழைக்கின்றனர்
போன மாதந்தான் முயல்வேட்டை திருவிழா கொண்டாடினாலும்
பெரிய தெரு திருவிழா என்றால்
சனங்களுக்கும் இருப்பு கொள்ளாது
நீலா அண்ணி
நெற்றி நிறைய நீருடன்
சும்மாடு கோலி
சடச்சுட பொங்கல் பானையை
தூக்கி வருவதைப்பார்த்து
நான் தான் கேட்டேன்
கோயிலுக்குள் போகலாமா நாம் என
நமக்குஅங்க வேலை இல்ல
‘நமக்கு இடம் இருக்கு தம்பி’
கோயிலத் தள்ளி
சனங்க அங்க தான் பொங்க வைக்கும்’
கோயிலுக்குள் மட்டுந்தான்
உடமாட்டாங்க
தெருவுக்கு சாமி வராதே ஒழிய
அங்கனையே ஒதுங்கி நின்னு
படைக்கலாம்’
மாரியாத்தா அருள் ஒளிர
அண்ணி சொன்னார்கள்
‘முயல் வேட்டை மாரியம்மனை
கும்புட்டதோட நிக்க வேண்டியதுதானே
திரும்ப என்ன
பெரிய தெரு மாரியம்மன் மயிறு தெரு மாரியம்மன்’
என்று சொல்ல
வாய் வரைக்கும்
வார்த்தை வந்தது சொல்லவில்லை

இந்த ஊரில்
மாவட்டம்
ஒன்றியம்
சட்டமன்றம்
பாராளுமன்றமென
அரசியல் மயிருக்குக்
குறையொன்றுமில்லை.

– விநாயக மூர்த்தி

நூல் அறிமுகம்: ஜனநேசனின் எலோ..லம் நாவல் – விசாகன்

நூல் அறிமுகம்: ஜனநேசனின் எலோ..லம் நாவல் – விசாகன்




நூல்: எலோ..லம் 
ஆசிரியர்: ஜனநேசன்
விலை: ₹384
பக்கங்கள்: 384

வெளியீடு: பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
[email protected]

தமிழகத்தில் “மாபெரும்” அல்லது “ஒட்டுமொத்த – தலைகீழ்” அரசியல் மாற்றம் நிகழ்ந்திருந்த வருடமான 1969ல், தேனி மாவட்டத்தின் எல்லைப் பகுதியான கேரள மலை வனப்பகுதியில், தேனி மாவட்டத்திலிருந்தும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்தும் ஏல விவசயாக் கூலியாகப் போய், அங்கேயே தங்கி தலைமுறைகளைக் கழித்த ஒரு கூட்டத்தின் தொடக்கம் முதல் முடிவு வரையில் அங்கு சற்றேறக்குறைய பத்தாண்டுகாலம் கழித்த, கனத்த, அடர்ந்த, வறண்ட பொழுதுகளையும், பாடுகளையும் இண்டு இடுக்கு விடாமல் அங்குலம் அங்குலமாக அலசியாராய்ந்து எழுதி அதை *“ஏலோ…லம்” என்ற பெயரில் நமக்குப் புதினமாகத்  தந்திருக்கிறார் எழுத்தாளர் ஜனநேசன்.

கணவன் இறந்தபின்பு பிழைப்புக்காக ஏல விவசாயியாகச் செல்ல முடிவெடுக்கும் பொன்னுத்தாய், அவளது சிறார் வயதுப் பையன் ரவியை அழைத்துக்கொண்டு வட்டப்பாறை ஏலத்  தோட்டத்திற்கு இடம்பெறும் இடத்திலிருந்து துவங்குகின்றது கதை. இடைச்சாதியனருடன், கீழ்ச்சாதியாகக் கருதப்பட்டிருந்த சக்கிலியர், பள்ளர், பறையர் உள்ளிட்ட அனைத்து சாதியினரும் பஞ்சம் பிழைக்க ஏல மலை ஏறிவரும் காலமாக அது இருந்தது. ஆண்பள், பெண்கள், வயதானவர்கள், சிறுவர்கள் என பாரபாட்சமின்றி, பணிப்பாதுகாப்பற்ற, உயிர்பாதுகாப்பற்ற, உழைப்புக்கேற்ற கூலியற்ற, அரைவயிற்றுக் கஞ்சி மட்டுமே உறுதியாகத் தென்படுகின்ற, குருதி உறிஞ்சும் அட்டைக்கடி, பெரும்பெரும் கொசுக்களின் கடி, காட்டு யானைகளின் அச்சுறுத்தல், பாலியல் சுரண்டல் இவைகளுக்கிடையே ஒரு முறைசாரா தொழிலாளர்களாகவும், கடும் உழைப்பினைக் கோருகின்ற இடத்திலும் இவர்கள் தங்கள் வாழ்வை ஒப்புக் கொடுக்கிறார்கள்.

ஓய்வற்ற அடக்குமுறைகளுக்கிடையே அந்த குளிர்மிகு அடர்ந்த வனப்பகுதியில் இறுக்கமாக நகரும் இவர்களின் வாழ்க்கையின் பின்னணியிலும், உழைப்பின் ஆதாரத்திலும் வட்டப்பாறை ஏலத் தோட்டத்தின் ராஜபாளையத்து முதலாளியின் சொகுசு வாழ்க்கை பொதிந்துகிடந்தது என்பது அந்த கேட்பாறற்ற கூலிகளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

பணி நேரத்தின்போது மலை யானையைக் கண்ட கோட்டிநாயக்கம் மிரண்டு விழுந்து காயம் பட்டு இறந்து போகும் சமயத்தில் அந்தோட்டத் தொழிலாளர்களின் ஆழ்மனத்தில் அவர்களையறியாது பற்றிக்கொண்ட எதிர்ப்பு அரசியல், குரங்கு விரட்டியின் அலட்சியத்தால் குரங்கு மேலெ விழுந்து இறந்துபோகின்ற மாரியம்மாள் என்ற ஒரு பெண்ணின் மரணத்திற்குப் பின்னர் அவர்கள் அறிந்தே வெளிப்படத் தொடங்குகிறது.

அந்த சமயத்தில், அத்தோட்ட முதலாளி, சர்வதேச ஏல விவசாயியாக மாற வேண்டும் என்பதால், தொழிற்சங்கம் தனது விவசாயப் பகுதியில் இருக்க வேண்டும் என்ற அதற்கான நிபந்தனையின் படி, காங்கிரஸ் தொழிற்சங்கத்தை தனது தொழிலாளர்கள் மத்தியில் ஊடுறுவச் செய்திருந்ததால், இவ்விரண்டு மரணப் பிரச்சனையையும் அத் தொழிற்சங்கம் கையாள்கிறது.

சிறுசிறு அளவிலான போராட்டங்கள், சமரசம், போதாமை,  மீண்டும் பேச்சுவார்த்தை என்று சங்கத்தாருக்கும், தொழிலாளர்களுக்கும், முதலாளிக்குமிடையே நடந்து வருகின்றது.

எதிலும் தீர்வற்ற, பிரச்சனைகளையும், தேவைகளையும் தள்ளிப்போடுகின்ற நிலையே தொடர்கிறது.

இதனுடாக தொழிலார்களின் வாழ்வு நகர்கிறது என்பதை கதை அதன் போக்கில் சொல்லிச் செல்கிறது.

தொழிற்சங்கம் இருந்தும் பிரச்சனைகள் தீர்வதில் இருக்கின்ற சுணக்கத்தைக் கண்டுகொண்ட தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகளுக்கு அழுத்தம் கொடுக்க, அவர்கள் தங்களுக்குத் தரப்படுகின்ற அரசியல் நெருக்கடியை தொழிலாளர்களிடம் வெளிப்படையாகச் சொல்லி, அவர்களை சிஐடியு சங்கத்தில் சேந்து செயல்பட வலியுறுத்துகிறார்கள்.

தொழிலாளர்களும், தோழமை உணர்வு கொண்ட சிஐடியு சங்கத்தில் தங்களை ஐக்கியப் படுத்திக் கொள்கிறார்கள்.

அதன்பின்னர் அவர்களின் பிரச்சனைகளுக்கான தீர்வை அருகில் வரத் தொடங்குகிறது.

வேலை நிறுத்தம், பேரணி, கலவரம், உயிரிழப்பு எனத் தொடரும் நாட்கள், ஒரு கட்டத்தில் அரசின் உதவியோடு முத்தரப்புப் பேச்சுவார்த்தையில் தொழிலாளர்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப் படுகிறது.

இறந்தவர்களுக்கு நிவாரணத் தொகை, தொழிலாளர்களுக்குப் பணி நிரந்தரம், குளிர்காலப் படி, மழைக்காலப் படி உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் வரையறுக்கப்படுகிறது. இதற்கிடையில் முதலாளி மற்றும் அவருக்குக் கீழே பணியாற்றுகின்ற மேலாளர், கணக்குப்பிள்ளை போன்றோரின் சூழ்ச்சிகளையும் முறியடிக்கும் முயற்சிகளிலும் தொழிலாளர்கள் வெற்றி பெறுகிறார்கள்.

தொழிலாளர்களை மிரட்டுவதற்காக முதலாளியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாண்டியன் வகையறா ரவுடிகளின் தொல்லைகளிலிருந்தும் தொழிலாளர்கள் தங்களைத் தற்காக்கின்றார்கள்.

இதுபோன்ற எச்சரிக்கை உணர்வுகள் தொழிற்சங்கம்தான் கற்றுத் தந்தது என்பதில் அவர்கள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.

இதுபோன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கிடையிலும், தொழிலாளர்கள் குடும்பத்திற்குள் நடக்கின்ற காதல் உணர்வுகள், காமக் களியாட்டங்கள், உறவுமுறைக் கொண்டாட்டங்கள், குலதெய்வ வழிபாடுகள் என அனைத்தும் வந்து கடக்கிறது அவர்களுடைய அந்த வாழ்வில்.

ஒருக்கட்டத்தில், ரவுடியான பாண்டியன் வகையறாக்கள் கஞ்சாச் செடிகளை சட்டவிரோதமாக வளர்ப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து சிறைக்கு அனுப்ப்ப்படுகின்றார்கள்.

அதனால் வந்துவிட்ட விசாரணைக் கிடுக்கிப்பிடிகளைக் காரணம் காட்டி, ஒரு சில கூலித் தொழிலாளர்களைத் தவிர அனைவரையும் 200 ரூபாய் பொங்கல் பணம் கொடுத்து, பொங்கலைக் கொண்டாடிவிட்டு வருமாறு அனுப்புகிறார் முதலாளி.

ஏமாந்த கூலிகள், பணம் கிடைத்த மகிழ்ச்சியில் தங்களது ஊரைப் பார்க்கக் கிளம்புகிறார்கள். அந்த இடைவெளியைப் பயன்படுத்தி முதலாளி தன்னுடைய பெரும்பகுதி நிலங்களை விற்றுவிடுவதால் ஊருக்கு வந்திருந்த கூலித் தொழிலாளிகள் மீண்டும் ஏலமலை விவசாயப் பகுதிக்குத் திரும்ப முடிவதில்லை என்பதோடு முதல் அத்தியாயம் முடிகிறது.

294 பக்கங்களைக் கொண்ட முதல் அத்தியாயத்தின் பலம் தேனி மாவட்டத்து வட்டார மொழி.

அக்காலத்து மக்களின் அதுவும் கடைநிலைக் கூலித் தொழிலாளர்களின் வாய்மொழி அப்படியே அச்சு அசலாக எழுத்தாக வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்டுச் சொல்ல இயலாத வகையில் ஒவ்வொரு வரியுமே வட்டார மொழியின் மணத்தைப் பரப்புகிறது.

வாசிக்க வாசிக்க அத்தனை இன்பம்.

மேலும், “இருண்ட காட்டில் பொழுது பார்ப்பது என்பதே மகிழ்ச்சியான விசயம்! தங்கத்தினால் உருக்கிண தண்ணி மாதிரி பொழுது மரக்கிளைகளுக்கிடையே விழும்! அது விடும் இடத்தில் நிற்கும்போது உடல் சிவந்து சூடேறி உடம்பெல்லாம் பரவுவது இதமாக இருக்கும்.

ஈரத்தில் பத்தத மேனியில் வெயில்படும்போது சுருங்கிய தோல் எல்லாம் விரிவது தொட்டாச்சினுங்கி இலை விரியறதைப் பார்க்கிற மாதிரி இருக்கும்” மற்றும் “வானத்தில் மறைக்க மறைக்க வரும் கருமேகக் கூட்டத்தில் நழுவி நழுவிவரும் நிலவின் விளையாட்டு அவர்களின் நடப்பு வாழ்க்கை நிகழ்வுகளோடு ஒத்துப்போவதாக இருந்தது” என்பது போன்ற இயற்கைக்கும் மனிதனுக்குமான உறவை, அந்த தருணத்தை விளக்குவதாகட்டும், “ஞாயிற்றுக்கிழமை என்பதால் தேயிலைப்புதர்கள் தீண்டுவாரில்லாமல் சிலிர்த்துக் கிடந்தன” என்று உவமைப்படுத்துவதாகட்டும், இதுபோன்றவைகள் நாவல் முழுமைக்குமே  விரவிக்கிடக்கின்றதைப் பார்க்கும்போது மனதுக்கு அத்தனை நெருக்கமான உணர்வை அம்மக்கள் மீது கொண்டு வருகிறது.

தொழிற்சங்க வரவிற்குப் பின்னர் தொழிலாளர்கள் மனதிலும், நடைமுறை வாழ்விலும் ஏற்படுகின்ற மாற்றத்தை அழகாக விளக்கியிருக்கிறார் எழுத்தாளர் ஜனநேசன்.

“சிதறி பரவலாக இருக்கின்ற சூரிய வெளிச்சத்தைக் கண்ணாடி வில்லை வழியா ஒன்று சேர்த்தால் தீப்பத்த வைக்க முடியும்னா சிதறிக் கிடக்கிற நாம ஒன்றுசேர்ந்தா நாம ஜெயிச்சிடலாமில்ல” என்ற ரவியின் கருத்தினை புரிந்து உள்வாங்கிய தொழிலாளர்களாக அவர்கள் மிளிர்வதை நாம் காணமுடிகிறது.

ரத்தம் தோய உழைப்பது, ஏமாற்றப்படுவது, போராடுவது, முதலாளிகளின் சூழ்ச்சிக்குப் பலியாவது, மீண்டும் போராடுவது, தனது இருப்பை அந்தப் போராட்டத்தின் மூலம் தெளிவுப்படுத்துவது என இவர்களின் வாழ்க்கை நீள்கிறது என்பது கண்கூடு.

சிவனம்மா, பங்கஜம் போன்றவர்களின் நெஞ்சைக் கிழிக்கின்ற கதைகளினுடாகவும், சித்திரக்கிழவன், ரவியின் உறவு மற்றும் உரையாடல்களாளும் புதினத்தை மெருகேற்றியிருக்கிறார் ஆசிரியர்.

எளிய மனிர்களின் வாழ்க்கை எண்ணிப் பார்த்துவிட முடியாத அளவிற்கு எத்தனை கடுமையானது என்பதன் காலத்தின் கண்ணாடியாகக் காட்டுகிறது இந்த ஏலோ…லம் என்கிற புதினம்.

ஏலத் தொழிளார்களின் வாழ்கையுடன் தொடங்கும் இப்புதினத்தில் இம்மியளவுகூட அவர்களின் வாழ்வைத் தாண்டிய வரிகள் வந்துவிடக்கூடாது என்பதிலும், எழுத்தாளரின் மூக்கு உள்ளே நுழைந்துவிடக் கூடாது என்பதிலும் மிகப்பிடிவாதமாகக் கவனம் செலுத்தியிருக்கும் எழுத்தாளர் ஜனநேசன்,

எந்தவொரு இடைச்செருகலும் இல்லாது அவர்களின் அந்தக் குறிப்பிட்ட கால வாழ்க்கையை அப்படியே தனது எழுத்துகளின் வாயிலாக நமக்கு உரித்துக்

காட்டியிருப்பதன் மூலம் வாசிக்கும் நமக்கும் அதைத் தவிர வேறு எந்த சிந்தனையும் வரவிடாமல் தடுப்பதில் வெற்றியும் கண்டிருக்கிறார்.

அந்த வகையில் இது ஒரு அசாத்தியமிக்கதும், பொறுமையின் உச்சத்திலிருந்தும் உருவாகியிருக்கின்ற படைப்பு என்பதில் மாற்றுக்கருத்திருக்காது.

ஏமாந்து தனது ஊரிலேயே தங்க நேருகின்ற பொன்னுத்தாய் மற்றும் அவளது மகன் ரவியின் அடுத்தக்கட்ட வாழ்க்கையையும், ரவி படித்து அரசின் உயர் அலுவலராகப் பொறுப்பேற்று பணிபுரிந்து ஓய்வு பெறுவதையும் நமக்கு உணர்த்திவிட்டு, 2016 வாக்கில் ஓய்வைப் பெறும் அவர், மீண்டும் தான் சிறார் பருவத்தில் கழித்த வட்டப்பாறை ஏலத் தோட்டப் பகுதிக்குச் சென்று பார்வையிடுவதையும், அங்கிருக்கின்ற மனிர்களைச் சந்தித்து உரையாடுவதையும், தற்போதைய தொழிற்சங்க நிலையை அலசியாராய்வதினுடாக, மோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளையும் உள்ளடக்கி இரண்டாவது அத்தியாத்தை ஒரு 85 பக்கங்களில் சொல்லி புதினத்தை முடிக்கிறார்  ஜனநேசன்.

ஆனால், ஏலத்தோட்ட கூலிகளின் பாடுகளைச் சொல்லிவரும் உயிர்ப்பான பகுதிகளினூடாக, பணமதிப்பிழப்பு அரசியலைச் சேர்த்திருப்பது உணர்வுப்பூர்வமாக அதனுடன் ஒட்டவில்லை என்பதை மறுக்கமுடியாது.

இருப்பினும், பிரதி வெளிவந்தபின்பு அதை நாம் புறக்கணிக்க முடியாது என்பதால், அன்றைய கால அரசியல் நிலைமையைப் பதிவு செய்கின்ற ஒரு பகுதியாக நாம் அந்த விசயத்தைக் கடக்க வேண்டியிருக்கிறது.

ஏலச் செடி நடுவது, களை எடுப்பது, பழமெடுப்பது என ஒவ்வொன்றும் துளயளவிறகும் விட்டுவிடாமல் அது குறித்த செய்திகளை சிரத்தையோடு பதிவு செய்திருப்பது அந்த ஏல மணத்தைவிட வாசிக்கும்போது நாம் அனுபவிக்கின்ற அற்புத மணம் ஒப்பற்றது. அதிகாரவர்க்கத்தின் வரலாறு மட்டுமே பதியப்படுகிறது என்ற நிலையில், சமகாலத்தில் விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கைப் பாடுகளும், வரலாறும் ரத்தமும் சதையுமாக அப்படியே பதிவு செய்யப்பட்டு வருகிறதன் வரிசையில் இந்த ஏலோ…லம் நாவலும் மிக முக்கியமாக கவனத்தை ஈர்க்கிறது.

“நம்மில் தோன்றும் நிறபேதங்கள் தற்காலிம், கற்பிதமானவை! இயற்கையில் சமத்துவமானவை! பேதத்தைக் கைவிடுவோம் என்ற ஞானம் வந்தால் மோதலில்லை! சாதலுமில்லை! இதை எப்போது புரிவோம்! எப்போது தெளிவோம்!” என்ற ஆசிரியரின் ஏக்கப் பெருமூச்சு கொண்ட வாக்கியம் நம்முள் சிந்தனையைக் கிளர்த்துகிறது.

வாசகனின் சிந்தனையைக் கிளர்த்துவதுதானே படைப்பிலக்கியத்தின் ஆகப்பெரும் செயல்.

எழுத்தாளரின் செயல் மீண்டும் மீண்டும் தொடர வேண்டும் என்பது என்னைப் போன்றவர்களின் எதிர்பார்ப்பு!

நன்றி :
எழுத்தாளர் விசாகன்
தேனி

தொடர் 29: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 29: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி




உன்னைப் போன்றோ அல்லது உன்னைவிட அழகாகவோ என் உடலுறுப்புக்கள் இருக்கின்றன. உன்னைப் போன்றோ அல்லது உன்னைவிட இனிமையாகவோ பேசுகிறேன் இசைகிறேன். இந்த அல்லதுக்கு அவசியமற்று நான் மட்டுமே உழைக்கிறேன். என்னை நீ கீழ் சாதிக்கார நாயே என்கிறாய். என்னை மட்டுமா நாயையும் சேர்த்து நீ கீழ்த்தரமாகப் பார்க்கிறாய். முதலில் நான் நாயிலிருந்தே தொடங்குகிறேன். உன்னால் நாய் துணையின்றி வாழமுடிகிறதா, நாய் பயமின்றி நடமாட முடிகிறதா. பிறகு என் துணையின்றி உன்னால் நகர முடிகிறதா. நடக்க முடிகிறதா. இந்த லட்சணத்தில் எதற்கு இந்த ஏற்றத்தாழ்வு. முதலில் சீவராசிகளில் நீ கீழ் நான் மேல் என்கிற மகா மட்டமான போக்கை நிறுத்து.

உன்னைப் பொருத்தவரை தலையில் இருக்கும் கிரீடம் உயர்ந்தது, பாதம் அணியும் செருப்புத் தாழ்ந்தது. நன்றாகச் சிந்தித்துப் பார் கிரீடத்தை நீ சுமக்கிறாய் செருப்பு உன்னைச் சுமக்கிறது. ஆனால் உன்னைச் சுமக்கும் செருப்பைத்தான் நீ கீழானதாகப் பார்க்கிறாய். அந்த செருப்பைத் தைக்கும் தொழிலாளிகளைக் கீழானவர்களாகப் பார்க்கிறாய். ஒன்று தெரியுமா உன் கிரீடத்தையும் உன் செருப்பையும் நானே உருவாக்குறேன். உன் மயிரை நானே சிரைத்து சுத்தம் செய்கிறேன். நீ ஆண்ட வம்சமென முறுக்கித் திரியும் மீசையை நான் தான் உன் முகத்திற்கு ஏற்றாற்போல் வடிவமைக்கிறேன். நீ என்னை மலக் கழிவு அள்ளுகிறவனென இமையிறக்கிப் பார்க்கிறாய். இப்போதும் கூட நீ மேலே உண்ணுகிறதை கீழே கழிவாக அள்ளுவதை கீழ்மை என்று தான் பார்க்கிறாய், ஆனால் நான் உன் கீழ் கழிவை அள்ளுகிறவன் மட்டுமல்ல  நீ மேல் உண்ணும் உணவை விளைய வைப்பவனும்தான். நான் இத்தனை உனக்குச் செய்தும் நீ என்னை ஏறி மிதிப்பதைத் தவிர வேறு என்ன செய்திருக்கிறாய். சக மனிதனை தாழ்ந்தவனாகப் பார்ப்பதாலும், சக மனிதனின் வாயிக்குள் மலத்தைத் திணித்துக் கொடுமை செய்வதாலும், சக மனிதன் காதலித்தால் அவனை வெட்டிச் சாய்ப்பதாலும் தீயிட்டுக் கொளுத்துவதாலும் நீ தான் கீழ்சாதி. சக உயிரை சமமாகப் பாவிக்காதவன். சக உயிரின் மேல் அன்பு செலுத்த வக்கில்லாதவன் நிச்சயமாக கீழ்சாதி தான். நான் கோபப்படவில்லை என்பதற்காக என்னைக் கோழை என்று நினைப்பது உன் அறியாமையே.

இயக்குநர் சுதா கோங்கரா அவர்களின் “இறுதிச்சுற்று”  படத்திற்கு நான் தீவிர விசிறி. பெண் பிள்ளைகளின் மேன்மையைப் பற்றி மிகவும் அழகாகச் சொல்லியபடம் அது. அவரின் இயக்கத்தில் சூர்யா அவர்கள் தனது 2D நிறுவனத்தின் சார்பில் தயாரித்து நடித்த “சூறரைப் போற்று” படத்தில் ஒரு பாடல் எழுத அழைத்தார்கள். ஜி.வி. பிரகாஷ்குமார் இசை. இயக்குநரும் நானும் பாடலை எப்படி எழுதப்போகிறோம் என்பது பற்றிய விவாதத்தில் இருக்கும் போது அவருக்கு எனது “ஒத்த சொல்லாலே” பாடலுக்கு நான் விசிறி என்று அவர் சொன்னபோது மகிழ்ந்தேன். பாடலின் சூழலை அவர் சொன்ன போதே துள்ளிக் குதிக்க ஆரம்பித்தேன். காரணம் பேச வேண்டிய பொருள். ஒரு தலித்தின் பிணம் எடுக்கபட்டு தேரில் ஊர்வலமாக வருகிறதெனவும் அதில் உயர்குடி வகுப்பைச் சேர்ந்த சூர்யா ஆடி வருகிறார் எனவும் சொன்னார்கள். சும்மாவே ஆடுவோம். கொட்டுக் கெடச்சா குமுற மாட்டோமா. அதுவும் இந்த சூழல் திரைப்படத்தில் நடக்கிறது என்பதில் எனக்கு இரெட்டிப்பு மகிழ்ச்சி. இதற்கான மெட்டை அமைப்பதில் ஜி.வி.பிரகாஷ்குமாரும் இயக்குநரும் பேருழைப்பைச் செலுத்தினர். ஓர் உதவி இயக்குநர், தம்பி கருமாத்தூர் அருளானந்தத்தின் உதவியுடன் ஏராளமான கூத்துக் கலைஞர்களின் பாடல்களை உசிலம்பட்டி பகுதி முழுக்கச் சேகரித்தார். இவையின் வாசத்தை எடுத்துக்கொண்டு மெட்டமைத்த போது தம்பி செந்தில்கணேஷின் குரல் அதை புயலாய் மாற்றி கேட்பவர் மனதைச் சுழற்றி அடித்தது.

Paadal Enbathu Punaipeyar Webseries 29 Written by Lyricist Yegathasi தொடர் 29: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

பேதமற்று வீசும் காத்து பேதமற்றுப் பெய்யும் மழை ஆனால் மனித சமூகம் அப்படியா இருக்கிறது. தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் செகத்தினை அழித்திடுவோம் என்றான் பாரதி. ஆனால் ஒரு சமூகமே   மிகக் கீழ்த்தரமாக நடத்தப் படுதலுக்காக எதை அழிப்பது.

பல்லவி
மண்ணுருண்ட மேல இங்க
மனுசப் பய ஆட்டம் பாரு
கண்ணு ரெண்டும் மூடிப் புட்டா
வீதியிலே போகும் தேரு
அண்டாவுல கொண்டுவந்து
சாராயத்தை ஊத்து
ஐயாவோட ஊர்வலத்தில்

ஆடுங்கடா கூத்து ஏழை பணக்காரன் இங்கு
எல்லாம் ஒன்னு பங்கு
கடைசியில மனுசனுக்கு
ஊதுவாங்க சங்கு

Paadal Enbathu Punaipeyar Webseries 29 Written by Lyricist Yegathasi தொடர் 29: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

சரணம்-1
நெத்தி காசு ஒத்த ரூபா
கூட வரும் சொத்துதானே – ஐயா
கூட வரும் சொத்துதானே
செத்தவரும் சேர்ந்து ஆட
வாங்கிப்போட்டு குத்துவோமே

சாராயம் குடிச்சவங்க
வேட்டி அவுந்து விழுமே
குடம் உடைக்கும் இடம் வரைக்கும்
பொம்பளைங்க அழுமே

ஆயிரம் பேர் இருந்தாலும்
கூட யாரும் வல்லடா
அடுக்குமாடி வீடிருந்தும்
ஆறடிதான் மெய்யடா

சரணம்-2
கீழ்சாதி உடம்புக்குள்ள
ஓடுறது சாக்கடையா – ஐயா
ஓடுறது சாக்கடையா
அந்த மேல் சாதிக்காரனுக்கு – அந்த
மேல் சாதிக்காரனுக்கு
கொம்புருந்தா காட்டுங்கய்யா – ரெண்டு
கொம்புருந்தா காட்டுங்கய்யா

உழைக்கிற கூட்டமெல்லாம்
கீழ்சாதி மனுசங்களாம்
உட்கார்ந்து திங்கறவனெல்லாம்
மேல்சாதி வம்சங்களாம்

என்னங்கடா நாடு – அட
சாதியத் தூக்கிப் போடு
என்னங்கடா நாடு – அட
சாதியப் பொதைச்சு மூடு

இந்தப் பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியான போது உலகத் தமிழர் கொண்டாடினர். படத்தின் ரிலீஸ் டேட் அறிவிக்கப்பட்டது. தர்மபுரியைச் சேர்ந்த நண்பர் ஒருவர் இந்த படத்தை  வெளியிட தடை கோரி புகார் அளித்ததன்பேரில் கோர்ட் படத்தை சில மாதங்கள் தடை செய்தது. புகாரில் மனுதாரர் படத்தில் எனது பாடல் ஜாதிய வன்முறையைத் தூண்டும் விதமாக உள்ளதெனக் கூறியிருக்கிறார். என்னைப் பலபேர் தொலைபேசியில் மிரட்டினர். எனக்கு உருட்டல் மிரட்டலுக்கு எப்போதும் பயமில்லை. போராட்டக் களம் ஒன்றும் எனக்குப் புதிதில்லை. பேட்டிகளிலெல்லாம் கூறினேன் இது சாதிய வன்முறைக்கு எதிரான பாடல் என்று. ஆனாலும் விவாதத்துக்குறிய அந்தப் பாடலின் இரண்டாவது சரணம் நீக்கப்பட்டே படம் ரிலீஸானது. வருத்தம் தான் எனினும் அந்தக் குறிப்பிட்ட வரிகளுக்கு என் தம்பிகளும் அண்ணன்களும் டிக் டாக் பண்ணிருயிருப்பதில் தெரிந்த வெறித்தனமே என் பாடலுக்குக் கிடைத்த வெற்றியாகக் கொண்டேன். மேல் சாதிக் காரனுக்குக் கொம்பிருந்தா காட்டச் சொன்னேன் பாடலில், ஆனால் பிரச்சனையைக் கிளைப்பியவர் அனைவருமே இடைசாதி வகுப்பினரே.

சாதியும் மதமும் சீர்கெட்டுக் கிடக்கும் சூழலில் நாம் பிறர் வலி உணர்ந்தோ உணராமலோ உண்டு உடுத்தி உறங்கி வாழ்கிறோமே என்கிற குற்ற உணர்ச்சியின் வெளிப்பாடுதான் கீழ் வரும் ஒரு தனி இசைப்பாடலும்.

பல்லவி
மேல் சாதி கீழ் சாதி ஒண்ணுமில்லடா
ஓந்தேதி முடிஞ்சாக்கா மண்ணுக்குள்ளடா
திங்குற சோத்துல சாதி மணக்குதா
போடுற செருப்புல சாதி கனக்குதா… (2)

ரெண்டையும் தந்ததெல்லாம் நாங்கதான்
சண்டை மட்டும் போடுறீங்க நீங்கதான்

சரணம் 1
தோளுமேல துண்டுபோட்டுப் போகக் கூடாதா – நாங்க
காலுலதான் செருப்புமாட்டி நடக்கக் கூடாதா
டீக்கடை பெஞ்சுலதான் உக்காரவும் கூடாதா – அட
எங்கபுள்ள பள்ளியில இங்கிலீசுப் பேசாதா.. (2)

சரணம் 2
மாட்டுக்கறி திங்கிறவன் மட்டம் இல்லடா
நீயும் மனுசனத்தான் திங்கிறியே நியாயம் சொல்லடா
மலத்த கக்கூசுல ஒங்க கையி அள்ளாதா – அட
நாங்க போடும் ஓட்டு என்ன எலக்சனில செல்லாதா.. (2)

சரணம் 3
வேர்வ சிந்தி வெளைய வச்ச அரிசி வெள்ளடா – நாங்க
வெளுத்து வந்து தேச்சுத் தரும் வேட்டி வெள்ளடா
எல்லாத்துக்கும் நாங்க வேணும் பக்கத்தில ஒனக்கு – எங்கள
தொட்டா மட்டும் உங்கமேல ஒட்டிக்குமா அழுக்கு..(2)

திரை விமர்சனம் : நெஞ்சுக்கு நீதி – பா.ஹேமாவதி

திரை விமர்சனம் : நெஞ்சுக்கு நீதி – பா.ஹேமாவதி




ஆதிக்க வெறியர்களிடம் அதிகாரம் இருந்தால் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நீதி என்பதே பெரும் சவால்…
நெஞ்சுக்கு நீதி திரைப்பட விமர்சனம்…

தலித் பெண் சமைத்ததால் சமைத்த உணவு கொட்டி வீணாக்கப்படுகிறது. அதைத் தட்டிக்கேட்கும் மாணவர்கள் சிறுவர்கள் என்று கூடப் பார்க்காமல் துன்புறுத்தப்படுகிறார்கள். இதுதான் படத்தின் முதல் காட்சி. தொடக்கப் பாடலிலேயே துப்புரவுத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் துயரங்களைச் சித்தரித்து, அவர்களின் இந்த நிலைக்கு நாமும் ஒரு காரணம் என்ற குற்றவுணர்வைப் பார்வையாளர்களுக்கு ஏற்படுத்துகிறது ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படம். நாடு முழுதும் வரவேற்பைப் பெற்ற ‘ஆர்டிகிள் 15’ எனும் பாலிவுட் படத்தின் தமிழ் ரீமேக்தான் இப்படம்.

விடுதலை விடுதலை விடுதலை

பறையருக்கும் இங்குத் தீயர்

புலைய ருக்கும் விடுதலை

பரவ ரோடு குறவருக்கும்

மறவ ருக்கும் விடுதலை..”

-என்று பாடினார் மகாகவி பாரதி.

தமிழகத்தில் அரைப் படி நெல் கூலி உயர்வு கேட்டு சங்கம் வைத்துப் போராடியதற்காக கீழவெண்மணியில் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் பெண்கள், குழந்தைகள் என 44 உயிர்கள் தீக்கிரையாக்கப்பட்டன. அந்தக் கொடூர சம்பவம் நடந்து 50 ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்தியாவில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

ஒரு கிராமத்திற்குக் கூடுதல் ஆணையராகப் பணியேற்று வருகிறார் விஜயராகவன்.. இயற்கை அழகைக் கொண்ட இந்த கிராமத்தில் மேலாதிக்க வாதிகளால் ஒடுக்கப்பட்டவர்கள் துன்புறுத்திக் கொல்லப்படுவது சகஜம் என்று சொல்லும் அளவிற்குச் சாதி வெறியாட்டம் நடைமுறையில் உள்ளது.

3 இளம் பெண்கள் 30 ரூபாய் கூலி அதிகம் கேட்டு அனைவரையும் ஒருங்கிணைக்கிறார்கள் என்ற காரணத்தினால் அவர்களைக் கடத்தி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி இரண்டு பேரைக் கொடூரமாகக் கொன்று பொதுமக்கள் பார்க்கும்படி தூக்கில் தொங்க விட்டு, இனி கூலி உயர்வு கேட்டால் இதுதான் நிலை என்று உணர்த்தப்படுகிறது. இரண்டு பெண்களும் ஓரின சேர்க்கையாளர்கள் என்றும், அதனால் தகப்பன்கள் ஆணவக் கொலை செய்துவிட்டனர் என்றும் வழக்கை முடிக்க நினைக்கச் சதி செய்கிறார் காவல்துறை ஆய்வாளர். இந்த வழக்கு என்னவாகிறது என்பதுதான் கதை.

இந்தியச் சமுதாயத்தில் சமத்துவத்திற்காக எல்லாக் களங்களிலும் போராட்டம் நடந்து வந்திருக்கிறது. ஆணுக்கு பெண் அடிமையாகவும், சாதிப்படிநிலையின் மேல் தட்டுகளில் இருப்போருக்கு கீழ்த்தட்டுகளில் வைக்கப்பட்டிருப்பவர்கள் அடிமையாகவும் வாழ்ந்து வந்துள்ளனர். இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். மேலாதிக்கச் சாதியினரிடம் அதிகாரமும் சேர்ந்துகொள்கிறபோது அந்தத் திமிரால் ஒடுக்கப்பட்ட மக்கள் எப்படியெல்லாம் நசுக்கப்படுகிறார்கள் என்ற எதார்த்தத்தைப் பளிச்செனப் பதிவு செய்கிறது படம்..

வெளிநாட்டிலிருந்து வந்தவரான விஜயராகவன் இங்கே சாதி ஏற்றத்தாழ்வால் மனிதனை மனிதன் இழிவுபடுத்துவதைக் கண்டு வியப்படைகிறார். பொதுக் கிணற்றில் தாழ்த்தப்பட்டவர்கள் தண்ணீர் எடுத்ததால் தீட்டு என்று சொல்லித் தண்டிக்கப்படுவதைக் கண்டு உடன் வரும் காவலர்களிடம் தீட்டு என்றால் என்ன என்று கேட்பார்.

தலித் மக்கள் பொதுக் கிணற்றில் நீர் எடுத்தால் தீட்டு, தெய்வக் குற்றம் என்று ஒரு காவலர் சொல்வார். கூடுதல் ஆணையர் ஒரு காவலரைப் பார்த்து “சார் நீங்க தலித்து தான,” என்று கேட்பார். “ஆமா சார்,” என்பார் காவலர். “அப்ப அந்தப் பசங்களும் நீங்களும் ஒரே சாதியா,” என்று அடுத்த கேள்வியைக் கேட்க, “அய்யோ இல்ல சார். நான் தலித்துதான் ஆனா, அவர்களை விட உயர்ந்த சாதி….” “அவரு எம்கிசி,. ஆனா அவரை விட நாங்க கொஞ்சம் மேல,”.“ நான் பிராமின் சார்… ஆனா சார்தான் நம்ம எல்லாரையும்விட உயர்ந்த பிராமின்… நான் அவர விட கொஞ்சம் கீழ இருக்குற பிராமின்,” என்று பதில்கள் வரும்.. சாதியின் பெயரால் மக்களை பிரித்தாளப்படுவதை அறியும் கூடுதல் கமிஷ்னர் மனம் நொந்து ‘வாட் இஸ் ஃபக் ஹெப்பன் ஹியர் மேன்,” (…த்தா என்னய்யா நடக்குது இங்கே) என்று கேட்பார். இந்தக் காட்சி பார்வையாளர்களுக்குச் சாதியத்தின் அசிங்கமான முகத்தை எடுத்துக்காட்டுகிறது. அதைக் கண்டு கொதிக்கும் கூடுதல் ஆணையர் விஜயராகவனாகப் பக்குவமான நடிப்பை வழங்கியிருக்கிறார் உதயநிதி.

சாதி என்ற சாக்கடையில் மூழ்கி உள்ள காவலர்களிடம் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதைச் சொல்லும் விதத்தில், இந்திய அரசமைப்பு சாசனத்தின் சட்ட உரை (ஆர்ட்டிகிள்) 15-ஐ அச்சிட்டு காவல் நிலைய அறிவிப்புப் பலகையில் ஒட்டுவது சிறப்பானதொரு காட்சி. சாதி, மதம், இனம், பால், பிறந்த இடம், வாழ்விடம் என்ற பெயரால் குடிமக்களின் அடிப்படை உரிமைகளில் எந்தப் பாகுபாடும் காட்டப்படக்கூடாது என்பதுதான் அந்தச் சட்ட உரை.

அரசமைப்பு சாசனம் அனைவருக்கும் சமத்துவத்தைப் பறைசாற்றினாலும் நடைமுறையில் அதற்கு நேர்
எதிராகத்தான் இருக்கிறது. அதை இப்படத்தில் வரும் சம்பவங்கள் வலுவாகக் காட்டுவதோடு, சமுகத்தில் நிலவும் சமத்துவமின்மைக்கு எதிராக எழும் கேள்விகளின் நியாயத்தை உணர்த்துவதாகவும் அமைந்துள்ளன.

உதாரணத்திற்கு, “எரிக்கத்தான் விடுவாங்க… எரிய விடாமாட்டாங்க,” என்று மயானப் பணியாளரான ஒரு தலித் தன் மகன் கேட்கும் கேள்விக்குப் பதில் கூறுவார்.

“பன்றி மேயும் இடம். இங்கே நாம டீ குடிக்கக் கூடாது,” என்று ஒரு காவலர் சொல்லும்போது கதாநாயகன், “வெளிநாடுகளில் பன்றி விற்பவன்தான் பெரும் பணக்காரன்,” என்று கூறுவது உரிய கைத்தட்டல்களைப் பெறுகிறது. இறுதி காட்சியில் அதே இடத்தில் சாதி ஏற்ற தாழ்வு இல்லாமல் அனைவரும் அமர்ந்து டீ குடிப்பதைக் காட்சிப்படுத்தியிருப்பது நயம்.

படத்தில் மொழி திணிப்பு பற்றி ஒரு காட்சி வரும். ஒரு மொழியைக் கற்றுக்கொள்வது ஆர்வம். திணிப்பது ஆணவம் என்ற வசனம் திணிப்பாளர்களிடையே உரக்க ஒலிக்க வேண்டும்..

“எல்லாருமே சமம் என்றால் யாருதான் இங்க ராஜா?” -இப்படியொரு கேள்வி. “எவனொருவன் எல்லோரையும் சமம் என்று நினைக்கிறானோ அவன்தான் ராஜா.” என்ன அருமையான பதில்!.

“சட்டமா… எங்களுக்கும் அதுக்கும் இந்த நாட்டுல மரியாதை இருக்கா,” என்று ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர் கேட்பது ஆழமான, அர்த்தமுன்ன கேள்வி.. இத்தகைய உரையாடல்கள் ‘இன்னும் எத்தனை காலம்தான் குட்டக் குட்ட குனிந்தே கிடப்பது, இனி நிமிர்ந்து நில்’ என்று பார்வையாளர்களே சொல்லும் அளவிற்கு எழுதப்பட்டுள்ளன..

கதாநாயகன் சமத்துவத்தை தன் மனைவியிடம் கடைப்பிடிப்பதும், சின்ன சின்ன விஷயங்களில் கூட மனைவியின் கருத்தைக் கேட்டு முடிவெடுப்பதும் அழகு.

மறக்கப்பட்டு வரும் தெருக்கூத்துக் கலையை உயர்த்திப் பிடிக்கும் வகையில் தெருக்கூத்துப் பாடல் ஒன்று வைக்கப்பட்டிருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை நிலையை எடுத்துச் சொல்கிற அந்தப் பாடலுக்கு உயிரோட்டமான இசையமைத்திருக்கிறார் திபு. கிராமத்திற்குள் இட்டுச் செல்லும் தினேஷ் ஒளிப்பதிவு, வினோத் ராஜ்குமார், லால்குடி என். இளையராஜா கூட்டணியின் கலை, விறுவிறுப்பாகப் படத்தைக் கொண்டுசெல்லும் ரூபன் படத்தொகுப்பு எல்லாமே சிறப்பு.

காவல்துறை ஆய்வாளராக வரும் சுரேஷ் சக்ரவர்த்தி அதிகாரவர்கத்தை எதிர்த்துப் போராடுகிற தலைவராக ஆரி ஆகியோர் நடிப்பும் குறிப்பிடத்தக்கது. இளவரசு, மயில்சாமி, ஷிவானி ஆகியோரும் தங்களின் கதாபாத்திரங்களுக்கு நியாயம் செய்துள்ளனர்.

அனைவரது பங்களிப்பையும் சிறப்பாக ஒருங்கிணைத்து, மறக்க முடியாத ஒரு படத்தை வழங்கியிருக்கிறார் இயக்குநர் அருள் ராஜா காமராஜ்.

ஆதிக்கவாதிகளிடம் அதிகாரம் கிடைத்தால் என்ன நடக்கும் என்பதைப் படம் அப்பட்டமாகக் காட்சிப்படுத்தியிருப்பதைப் பார்க்கும்போது வருங்காலத்தில் ஒடுக்கப்பட்ட இன்னும் எத்தனை கொடுமைகளைச் சந்திக்க நேரிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

ஒரு வழக்கை நேர்மையாக முடிக்க வேண்டும் என்று நினைக்கும் உயர் அதிகாரிக்கு இவ்வளவு பிரச்சனை என்றால், ஒன்றிய ஆட்சியின் அனைத்துத் துறைகளிலும் சாதி மதவாத சக்திகளும் இந்தி, சமஸ்கிருத வாதிகளும் பணியமர்த்தப்பட்டு அதிகாரம் வழங்கப்படும் இன்றைய சூழலில் எப்படி சமுக நீதியை நிலைநாட்டி ஒடுக்கப்பட்ட மக்களைப் பாதுகாப்பது என்பதே நம் முன் நிற்கும் மிகப் பெரிய சவால். அந்தச் சவாலை எதிர்கொள்ளும் மன உறுதியை ஏற்படுத்த உதவும் இந்தப் படம் எல்லா மொழிகளிலும் ரீ மேக் செய்யப்பட வேண்டும்.

-பா.ஹேமாவதி