அனைத்து சாதியினரும் அர்ச்சகர்…. சாதி எதிர்ப்பு மரபின் தொடர் பயணம் – சைதை. ஜெ
“ஒவ்வொரு மனிதனும் செத்துப்போவது உண்மைதான். என்றாலும், அவனோடு அவனுடைய முயற்சிகளும், அவன் துவக்கிய காரியங்களும் செத்துப்போய் விடுவதில்லை. ”
சமூகநீதிப் போராளி தந்தை பெரியார் எதிர்காலத்தின் மீது நம்பிக்கை வைத்து மொழிந்த சொற்கள் இவை.
அதற்கு உயிரூட்டிய நிகழ்வொன்று இந்த ஆண்டு விடுதலை நாளுக்கு முந்தைய நாள்- ஆகஸ்ட் 14, சனிக்கிழமை நடந்தேறியது. மாண்புமிகு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி தமிழ்நாட்டில் பொறுப்பேற்ற 100 வது நாளில், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், சாந்தலிங்க மருதாசல அடிகள், குமரகுருபர சுவாமிகள், அறநிலையத்துறை அமைச்சர் பி. கே. சேகர்பாபு புடைசூழ முதலமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சி அது.
அந்த நிகழ்வில், கோவில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் பயின்று தேர்வு செய்யப்பட்ட அனைத்து சாதியினைச் சார்ந்த 24 அர்ச்சகர்கள், இதர பாடசாலையில் பயிற்சி பெற்ற 34 அர்ச்சகர்கள், பூசாரிகள், பட்டாச்சாரியார்கள், 20 ஓதுவார்கள், 17 பரிசாரகர், 23 திருவலகர்கள், 25 காவல், நந்தவனம் பராமரிப்பாளர்கள், 28 தவில், நாதஸ்வரம் ( மேளம் செட்) சுருதி ஊழியர்கள், கருணை அடிப்படையில் 12 பேர் உட்பட மொத்தம் 208 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்குவதற்கு அடையாளமாக 75 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் மு. க. ஸ்டாலின் கலந்து கொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தனது வாழ்த்துரையில், ‘நான் கடவுளை ஏற்றுக் கொள்கிறோனோ இல்லையோ, கடவுள் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் – நான் செயல் படுகிறேனா என்பது தான் முக்கியம்’ எனும் கலைஞர் கருணாநிதியின் உரையை நினைவு கூர்ந்து , இன்றைய நம்முடைய தமிழக முதலமைச்சர் கடவுளும் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் செயல்படுவதாகப் பாராட்டினார். இத் திட்டத்தின் மூலம் அப்பர் பெருமான் எண்ணிய கனவு, ராமானுஜர் எண்ணிய கனவு, தமிழ்நாட்டின் ஆன்மீக உள்ளங்கள், குன்றக்குடி அடிகள் எண்ணிய கனவு நனவாகியதாக நெஞ்சுருகி மகிழ்ந்தார்.
தமிழ்நாட்டின் முதலமைச்சரோ முக்கிய அமைச்சர்களோ உரை நிகழ்த்தாமல் தாங்கள் ஏற்கெனவே வழங்கியிருந்த வாக்குறுதியை செயல் படுத்திய எளிய நிகழ்ச்சி அது. பட்டியல் சாதியைச் சார்ந்த 5 பேர் உட்பட பல்வேறு சாதிகளைச் சார்ந்தவர்கள் தமிழ்நாட்டிலுள்ள வெவ்வேறு திருக்கோயில்களில் அர்ச்சகர்களாக அரசுப் பணியாற்றப் பணிக்கப்பட்டனர். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் விசயத்தில் தந்தை பெரியாரின் நெஞ்சில் தைக்கப்பட்ட முள் அகற்றப்பட்டது.
‘சாதி ஒடுக்குமுறைக்கு புனிதம், தீட்டு என்று போடப்பட்ட பல இரும்புத் திரைகளை உடைத்து இம் முடிவு அமலாகி உள்ளது. கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு இத்தகைய முடிவை 2017 ஆம் ஆண்டிலேயே எடுத்து அமலாக்கியது. இம் முடிவின் வாயிலாக தமிழ்நாடும் கேரளாவும் இன்று இந்தியாவுக்கே வழி காட்டுகின்றன. சமூகநீதிக்கான பயணத்தில் மைல் கல்’ – என்ற தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் வரவேற்பு சாலப் பொருத்தமானதாகும்.
சாதி ஒழிப்பிற்கான போராட்டத்தில் சமூக நீதிப் பயணம் மிக முக்கியப் பங்காற்றுகிறது. அர்ச்சகர் தொழில் பரம்பரையாக வருவதை நிறுத்த வேண்டும் என்பதும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வழி செய்வதன் மூலம் அர்ச்சகர் தொழில் ஜனநாயகப்படுத்தப்பட வேண்டும் என்பதும் மிக நீண்ட கால கோரிக்கையாகும். இக் கோரிக்கையின் வளமார்ந்த வரலாற்று மரபை அறிந்து கொள்வது அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக பணி நியமனம் செய்த நிகழ்வின் கன – பரிமாணத்தைப் புரிந்து கொள்ள உதவும்.
“முதலாளித்துவ உலகுக்கு கம்யூனிஸ்ட் அறிக்கை எவ்வாறானதோ அதைப்போன்றதே ‘சாதியை அழித்தொழித்தல்’ இந்தியாவுக்கு ” என்றார் சமூக உரிமைப் போராளி பேராசிரியர் ஆனந்த் டெல்டும்ப்டே. பஞ்சாப் லாகூரில் ஜாத்-பட் தோடக் மண்டல் (சாதி பேதத்தை உடைக்கும் குழு) என்ற இந்து சீர்திருத்த அமைப்பு இயங்கி வந்தது. 1936 ல் அதன் வருடாந்திர மாநாட்டில் உரை நிகழ்த்த வருமாறு டாக்டர் அம்பேத்கரை அழைத்தது. மாநாட்டு உரையை அச்சடித்து வழங்கிட வேண்டுமெனக் கோரி அவரது உரையை முன்னதாகவே கேட்டுப்பெற்றது. மாநாட்டு ஏற்பாட்டாளர்களுக்கும் அம்பேத்கருக்கும் இடையே நடந்த கடிதப் போக்குவரத்து, மாற்றுக் கருத்துக்களை முன்வைத்த விவாதங்களுக்குப் பிறகு அந்த உரையின் உள்ளடக்கத்தின் வெக்கையைத் தாங்க முடியாமல் அந்த வருடாந்திர மாநாடே கைவிடப்பட்டது. நிகழ்த்தப்படாத – ‘சாதியை அழித்தொழித்தல்’ – உரை, நூலாக அச்சாக்கம் பெற்று எல்லா இந்திய மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டு அதிகமான வாசகர்களால் தொடர்ந்து வாசிக்கப்பட்டு வருகிறது.
சாதியை அழித்தொழித்தல் நூலில் சாதி குறித்து பல்வேறு கருத்துக்களை விவாதிக்கும் அம்பேத்கர் சாதியை ஒழிப்பதற்கான முன்னெடுப்புகளில் ஒன்றாக ‘புரோகிதத் தொழில்’ ஜனநாயகப்படுத்தப்பட வேண்டும் என்கிற கருத்தை முன் வைக்கிறார். பாபா சாஹேப் டாக்டர் அம்பேத்கர், நூல் தொகுப்பு : தொகுதி 1 ல் உள்ள அந்தப் பகுதி சற்று நீளமாக இருப்பினும் தேவை கருதி வாசகர் முன் வைக்கப்படுகிறது.
“24 விதிகளின் தொகுப்பாக அமைந்த மதத்தை நான் கண்டனம் செய்வதனால் மதமே தேவையில்லை என்று நான் கூறுவதாகக் கருதக் கூடாது……
2) இந்துக்களிடையே புரோகிதர்கள் இல்லாமல் அழித்து விடுவது நல்லது, ஆனால் இது இயலாது என்று தோன்றுவதால், புரோகிதத் தொழில் பரம்பரையாக வருவதை நிறுத்த வேண்டும். இந்து என்று கூறிக் கொள்ளும் ஒவ்வொருவரும் புரோகிதராக வர அனுமதிக்க வேண்டும். இதற்கென அரசு நிர்ணயிக்கும் தேர்வில் தேர்ச்சி பெற்று, புரோகிதராக இருப்பதற்கு அரசின் அனுமதிப் பத்திரம் பெறாத எந்த இந்துவும் புரோகிதராக இருக்கக்கூடாது.
3) அனுமதிப் பத்திரம் இல்லாத, பெறாத புரோகிதர் நடத்தும் சடங்குகள் செல்லாது என்று அறிவிக்க வேண்டும். அனுமதிப் பத்திரம் பெறாதவர் புரோகிதராகச் செயல் படுவதைத் தண்டனைக்குரியதாக்க வேண்டும்.
4) புரோகிதர் அரசின் பணியாளராக இருக்க வேண்டும். ஒழுக்கம், நம்பிக்கைகள், வழிபாடு ஆகிய விஷயங்களில் அரசின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் எல்லா குடிமக்களையும் போல அவரும் நாட்டின் பொதுவான சட்டத்துக்கு உட்பட்டவராயிருக்க வேண்டும்.
5) புரோகிதர்களின் எண்ணிக்கையை தேவையின் அடிப்படையில், ஐ. ஸி. எஸ். அதிகாரிகளின் விஷயத்தில் செய்யப்படுவது போல, அரசு வரையறை செய்து நிர்ணயிக்க வேண்டும்.
இவையெல்லாம் சிலருக்கு மிகத் தீவிரமான யோசனைகளாகத் தோன்றலாம். ஆனால் என்னுடைய கருத்துப்படி இதில் புரட்சிகரமானது ஒன்றும் இல்லை. இந்தியாவில் ஒவ்வொரு தொழிலும் முறைப்படுத்தப் பட்டிருக்கிறது. எஞ்சினியர்கள், டாக்டர்கள், வழக்குரைஞர்கள் ஆகிய அனைவருமே தங்கள் தொழிலைச் செய்ய அனுமதிக்கப்படுவதற்கு முன் அதில் தாங்கள் தேர்ச்சி பெற்றிருப்பதைக் காட்ட வேண்டும். அவர்கள் தொழில் நடத்தும் காலம் முழுவதிலும் அவர்கள் நாட்டின் சட்டத்துக்கு உட்பட்டு நடப்பதுடன், தங்களுடைய தொழில்களுக்குரிய விஷேச நடத்தைக் கோட்பாடுகளுக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.
புரோகிதர் தொழில் ஒன்று தான் தேர்ச்சி தேவைப்படாத தொழிலாக உள்ளது. இந்து புரோகிதர் தொழிலுக்கு மட்டும் தான் குறிப்பிட்ட நடத்தைக் கோட்பாடுகள் இல்லை. ஒரு புரோகிதர் அறிவில் சூனியமாக, உடம்பில் ஸிஃபிலிஸ், கொனோரியா போன்ற நோய்கள் பீடித்தவராக, ஒழுக்கத்தில் அதமனாக இருக்கலாம். என்றாலும் புனிதமான சடங்குகளை நடத்தி வைக்கவும் இந்து கோயிலின் மூலஸ்தானத்தில் நுழையவும், இந்து கடவுளுக்கு பூஜை நடத்தவும் அனுமதிக்கப்படுகிறார். இவையெல்லாம் இந்துக்களிடையே சாத்தியமாயிருப்பதற்குக் காரணம் புரோகிதராயிருப்பதற்கு புரோகித சாதியில் பிறந்திருந்தால் போதும் என்று இருப்பதுதான். இது முற்றிலும் வெறுக்கத்தக்க நிலை. இந்துக்களின் புரோகிதர் வகுப்பு, சட்டத்திற்கோ ஒழுக்க நெறிக்கோ கட்டுப்பட்டதில்லை என்பது தான் இதற்கு காரணம். தனக்கு எந்த கடமைகளும் இருப்பதாகவும் அது ஒப்புக்கொள்வதில்லை. அதற்கு தெரிந்ததெல்லாம் உரிமைகளும் தனிச் சலுகைகளும் தான். சாதாரண மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட ஒரு நாசக்கும்பலைப் போல் இவர்கள் தோன்றுகிறார்கள். புரோகித வகுப்பு, நான் மேலே குறிப்பிட்டது போன்ற சட்டங்கள் மூலம் ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டும். அந்த வகுப்பு, விஷமங்கள் செய்யாமலும் மக்களுக்கு தவறான வழி காட்டாமலும் தடுப்பதற்கு இது உதவும். எல்லோரும் புரோகிதராக வர வழி செய்வதன் மூலம் அதில் ஒரு ஜனநாயகத்தன்மை ஏற்படும்…… ”
டாக்டர் அம்பேத்கர் முன் வைக்கிற இந்த புரோகிதத் தொழிலை ஜனநாயகப்படுத்துவதை ஏற்கனவே சிலர் செய்து பார்த்துள்ளனர். தென் திருவிதாங்கூர் குமரிப்பகுதியில் வைகுண்டரும் திருவிதாங்கூர் கேரளப் பகுதியில் நாராயணகுருவும் வட தமிழ்நாட்டில் வள்ளலாரும் குறிப்பிடத் தகுந்தவர்கள். அவர்கள் உருவாக்கிய வழிபாட்டிடங்களில் பார்ப்பன புரோகிதர்கள் அனுமதிக்கப்படவில்லை. அதையே தொடர்ந்து கடைப்பிடித்தும் வருகின்றனர். இவற்றின் தொடர்ச்சியாக சாதி எதிர்ப்பு அறிவு மரபின் வரலாற்றுச் சாரத்தை உள்வாங்கி கூர்மைப்படுத்தப்பட்ட கோரிக்கை முழக்கமாக அம்பேத்கர் எழுத்து அமைந்துள்ளது.
அக்கோரிக்கை தமிழ்நாட்டில் தந்தை பெரியாரால் முன்னெடுக்கப்பட்டது. 1970 ஆம் ஆண்டு ஜனவரி – 26 குடியரசு தினத்தன்று இதற்காக கிளர்ச்சிப் போராட்டம் ஒன்றை அறிவித்தார். தமிழ்நாட்டின் முக்கிய கோயில்களில் இந்தப் போராட்டம் நடக்கும் என்றார். திருநீறுபூசித்தான் கோயில்களுக்குள் நுழைய முடியும் என்றால் தொண்டர்கள் பூசிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்திருந்தார். இந்த கிளர்ச்சிப் போராட்ட அறிவிப்பையடுத்து அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் வகையில் சட்டம் இயற்றப்படும் என்றும் எனவே பெரியார் போராட்டத்தை ஒத்தி வைக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
அதனடிப்படையில் கலைஞர் கருணாநிதி அரசு 02-10-1970 ல் புதிய சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தது. 1959 ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட, தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையக் கட்டளைகள் சட்டத்தின் பிரிவு – 55 ல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு கோயில்களில் பரம்பரை பரம்பரையாக அர்ச்சகர்கள் நியமிக்கப்படுவதை ஒழித்து அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக நியமிக்க வழி செய்தது. இச்சட்டம் செல்லாது என அறிவிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் 12 வழக்குகள் மடாதிபதிகளாலும் மற்றவர்களாலும் தாக்கல் செய்யப்பட்டன. தமிழ்நாடு அரசு சட்டப் போராட்டத்தை தொடங்கியது.
சேஷம்மாள் வழக்கு என்று அறியப்படும் இவ்வழக்கை உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து 14-03-1972 ல் தீர்ப்பு வழங்கியது. அர்ச்சகர்கள் ஆலயப் பணியாளர்கள் தான், கோயில் ஊழியர்கள் தான். அரசால் நியமிக்கப்படும் அர்ச்சகர் தவறு செய்தால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும். அர்ச்சகர்கள் பரம்பரையாக வந்தார்கள் என்றால், அவர்கள் தகுதியோடு ஆயத்தமாக இருந்ததால் நியமிக்கப்பட்டார்களே தவிர மற்றவர்கள் வரக்கூடாது என்பது வழக்காறு அல்ல. எனத் தீர்ப்பெழுதிய உச்ச நீதிமன்றம், பரம்பரை பரம்பரையாக அர்ச்சகர்கள் நியமிக்கப்படுவதை ஒழித்து கொண்டு வரப்பட்ட சட்ட திருத்தத்தை அனுமதித்தது. அதேவேளையில் குறிப்பிட்ட இனம், உட்பிரிவு, குழுவிலிருந்தே அர்ச்சகரை நியமிக்க வேண்டும் என சுட்டிக் காட்டி – ஆகமங்களை மீறி அர்ச்சகர்களை நியமிக்க மாட்டோம் என அரசிடமிருந்து உறுதி பெற்று புகார்தாரர்களின் மனுக்களை தள்ளுபடி செய்தது. உச்ச நீதிமன்றத்தின் இத்தீர்ப்பால் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் எனும் தமிழ்நாடு அரசின் முன்னெடுப்பு தற்காலிகமாக நின்று போனது.
தமிழ்நாட்டில் தி. மு. க., அ. தி. மு. க. கட்சிகளின் ஆட்சி மாறி மாறி நடந்து வருகிறது. அ. தி. மு. க. ஆட்சியிலிருந்த போதெல்லாம் இதற்கான முயற்சிகள் எடுக்கப்படவே இல்லை. ஆனால் பொதுவுடைமை இயக்கங்கள், திராவிட இயக்கங்கள், தலித் அமைப்புகள், ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட ஆன்மீகத் தலைவர்கள், மடாதிபதிகள் இக் கோரிக்கையை உயிர்ப்புடன் எழுப்பிக் கொண்டே இருந்தனர்.
இந்நிலையில் கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள கொங்கோரபள்ளி நீரிக்கோடே சிவன் கோயிலில் ஈழவச்சாதியைச் சார்ந்த ராஜேஷ் என்பவர் திருவிதாங்கூர் தேவசம்போர்டால் அர்ச்சகராக நியமிக்கப்பட்டார். இதற்கு எதிராக பார்ப்பனர் ஒருவர் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை ஆணை பெற்றார். வழக்கின் இறுதி விசாரணையில் தடையாணைத் திரும்பப் பெறப்பட்டது. வழக்கம், வழக்காறு ஆகியவற்றை சட்டம் அங்கீகரித்தாலும் அவை சாதியை அடையாளம் காட்டுவதாகக் கொள்ள முடியாது, அரசியல் சட்டத்திற்கு எதிராக அதைப் பயன்படுத்த முடியாது என்றும், தீண்டாமை அரசியல் சட்டத்தின் மூலம் ஒழிக்கப்பட்டுவிட்டதையும் சுட்டிக் காட்டி ஈழவ சாதியைச் சார்ந்த ராஜேஷ் அர்ச்சகராக நியமிக்கப்பட்டதை அனுமதித்தது.
கேரள உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்த உச்ச நீதிமன்ற மேல் முறையீட்டு மனுவை இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை 2002 ல் வழங்கியது. தீர்ப்பில், கண்மூடித்தனமான சடங்குகளிலிருந்து சமூகத்தை விடுவிப்பது என்ற நோக்கில் தான் தீண்டாமை ஒழிப்பு அரசியல் சட்டத்தில் ஏற்றப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டது. மேலும், எது முக்கியம் என்றால் கருவறைக்குள் நுழைந்து விக்ரகத்தைத் தொடவேண்டிய அவசியம் அர்ச்சகர்களுக்கு இருப்பதால், அப்படிப்பட்ட பணியை மேற்கொள்ளும் அர்ச்சகர்கள் முறையான பயிற்சியும் வழிபாட்டு முறைகளும் குறிப்பாக குறிப்பிட்ட கோயில் பற்றியும் தெரிந்திருக்க வேண்டும்….. குறிப்பிட்ட சாதியைச் சார்ந்தவராக இருக்க வேண்டும், அந்தச் சாதியின் பெற்றோருக்கு பிறந்திருக்க வேண்டும் என்று வற்புறுத்துவது மத பழக்கவழக்கங்கள், பூசைகள், சடங்குகள் அல்லது வழிபாட்டு முறைகள் முதலியவற்றிற்கு மிக அத்தியாவசியமானது அல்ல. அத்தியாவசியம் என்று சொல்வதற்கு அடிப்படையும் இல்லை – என்று தெளிவுபடுத்தியது. மனித உரிமைகள், மரியாதை, சமூக சமத்துவம் ஆகியவை சட்டத்தால் உறுதிப்படுத்தபட்டுள்ள போது அதற்கு எதிராக வேறு உரிமை கிடையாது. சட்டத்தை அரிக்கின்ற மறுதலிக்கின்ற பொதுக்கொள்கைக்கு எதிரான, சமூக ஒழுங்கிற்கு எதிரான எந்த பழக்க வழக்கத்தையும் இந்த நாட்டின் நீதி மன்றங்கள் சரி என்று சொல்ல முடியாது. என்ற சிறப்புவாய்ந்தத் தீர்ப்பைத் தந்தது.
இத்தீர்ப்பினால் உந்துதல் பெற்ற கலைஞர் கருணாநிதி அரசு அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கானப் பணிகளை மீண்டும் தொடங்கியது.
23-05-2006 ல் இதற்கென அரசாணை எண் 118 ஐ பிறப்பித்தது. அந்த அரசாணையின் அடிப்படையில் நீதிபதி ஏ. கே. ராஜன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் பரிந்துரையின் பேரில் அர்ச்சகர்களுக்கான பயிற்சிப் பள்ளிகள், பாடதிட்டங்கள் உருவாக்கப்பட்டன. சென்னை பார்த்தசாரதி கோயில், திருவரங்கம் ஆகிய இரண்டு இடங்களில் வைணவ அர்ச்சகர்களுக்கான பயிற்சிப் பள்ளிகளும் மதுரை, திருவண்ணாமலை, பழனி, திருச்செந்தூர் ஆகிய நான்கு இடங்களில் சைவ அர்ச்சகர்களுக்கான பயிற்சிப் பள்ளிகளும் தொடங்கப்பட்டன. மாணவர் சேர்க்கைக்காக அரசு விளம்பரம் செய்து, நேர்காணல் நடத்தி ஒரு பயிற்சிப் பள்ளிக்கு 40 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு பயிற்சியில் அமர்த்தப்பட்டனர். இந்த 240 பேரில் பார்ப்பனரல்லாத பட்டியல் சாதியினர் உள்ளிட்ட பிற சாதியினரும் இடம் பெற்றிருந்தனர். பல்வேறு சிரமங்களுக்கிடையே பதிமூன்று மாதங்கள் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழும் தீட்சையும் வழங்கப்பட்டது.
ஆனால் அரசாணை 118 ற்கு எதிராக மதுரையிலுள்ள ஆதிசிவாச்சாரியர்கள் சங்கம் உச்ச நீதிமன்றத்தை அணுகி தடையாணை பெற்றனர். பயிற்சியிலுள்ள மாணவர்களின் அர்ச்சகர் பணி நியமனம் இவ்வழக்கின் முடிவிற்கு கட்டுப்பட்டது எனும் நிபந்தனைக்குள்ளானது. தமிழ்நாடு அரசு தனது சட்டப் போராட்டத்தைத் தொடர்ந்தது. 2015 , டிசம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கேரள மாநில வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பு இரண்டு நீதிபதிகள் கொண்ட சிறு அமர்வு தந்த தீர்ப்பென்றும் அதனால் சேஷம்மாள் வழக்கில் ஐந்து நீதிபதிகள் அமர்வு தந்த தீர்ப்பையே அடிப்படையாகக் கொள்ள வேண்டுமென்றும் கூறியது. இந்துவாகப் பிறந்து தகுந்த பயிற்சியும் தேர்ச்சியும் இருக்குமானால் ஒருவரை அர்ச்சகராக நியமிக்கலாம் என்று தமிழக அரசு பிறப்பித்த ஆணையில் கூறப்பட்டுள்ளது இதனை புறக்கணிக்க முடியாது. அதே நேரத்தில் ஆகம விதிகளின்படி அர்ச்சகர்களை நியமிப்பதை தடுக்கவும் முடியாது..என்று கூறிய உச்ச நீதிமன்றம், அர்ச்சகர்கள் சேஷம்மாள் வழக்கின் அடிப்படையில் ஆகம விதிப்படி நியமிக்கப்பட வேண்டும் என்றது. அந்த நியமனம் அந்தந்த கோயிலுக்கு உரிய அடையாளத்தோடும் நடைமுறைகளோடும் அரசமைப்புச் சட்ட ஆணைகள், கோட்பாடுகள் முதலியவற்றிற்கு பொருந்திய நிலையிலும் இருக்க வேண்டுமென்றது. மேற்கண்ட உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பின்படி, அனைத்து சாதியினரும் அர்ச்சகராலாம் என்ற தமிழக அரசின் சட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் ஏற்கனவே விதித்திருந்த தற்காலிகத் தடை நீங்கிவிட்டது. அர்ச்சகர்கள் நியமனப் பிரச்சினை ஏற்படும் போது ஒவ்வொரு தனிப்பட்ட கோயிலிலும் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தை அணுகி தீர்த்துக்கொள்ள வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. இவ்விவகாரத்தில்
ஆட்சியிலிருந்த அ. தி. மு. க. பெரிதாக ஆர்வம் காட்டிக் கொள்ளவில்லை.
இச்சூழலில் 2018 ம் ஆண்டு மதுரை அழகர் கோயில் கட்டுப்பாட்டிலுள்ள ஒரு சிறிய ஐயப்பன் கோயிலில் மாரிமுத்து என்ற பயிற்சி பெற்ற அர்ச்சகர் பணி நியமனம் செய்யப்பட்டார். 2020 ல் மதுரை நாகமலை புதுக்கோட்டையிலுள்ள பிள்ளையார் கோயில் ஒன்றில் தியாகராஜன் என்ற பயிற்சி பெற்ற அர்ச்சகர் பணி நியமனம் செய்யப்பட்டார். இவ்விருவரும் பார்ப்பனரல்லாத சாதியைச் சார்ந்தவர்கள் தான். அதிகாரத்திலிருந்த அ. தி. மு. க. அரசு இந்த வரலாற்றுச் சாதனையை தனதாக்கிக் கொண்டு மேலும் முன்னெடுத்துச் செல்ல முன்வரவில்லை. அதற்கு அவர்கள் ஒன்றிய ஆட்சியாளர்களுக்குள் ஒண்டிய ( அடங்கிய) நிலை காரணமாயிருக்கலாம்.
2021 ல் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது தி. மு. க., பொதுவுடமைக் கட்சிகள், வி. சி. க. போன்ற அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்குவோம் என வாக்குறுதி வழங்கின. தி. மு. க. ஆட்சிக்கு வந்த நூறு நாட்களில் என கால வரையறை செய்தது. தேர்தலில் தி.மு.க. கூட்டணி வென்று ஆட்சி அமைத்தது. தனது ஆட்சியின் 100 வது நாளில் பயிற்சி பெற்றுக் காத்திருந்த வயது வரம்பு தகுதிக்குட்பட்ட அனைத்து சாதியினைச் சார்ந்தவர்களும் அர்ச்சகர்களாக பணி நியமனம் செய்யப்பட்டனர். தமிழ்நாட்டு மக்கள் வரவேற்று மகிழ்ந்தனர். சனாதனத்திற்கு எதிரானப் போரில் முன்செல்ல நம்பிக்கையும் ஓர் பிடிமானமும் கிடைத்திருக்கிறது. புதிய முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களும் அவரது சகாக்களான அமைச்சர்களும் அரசு நிர்வாகிகளும் மெச்சுதலுக்குரியவர்கள். எனினும் நீதிமன்றங்களில் சட்டப்போர் இன்னும் நிறைவு பெறவில்லை. தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றன. அதற்கு அரசும், முற்போக்கு இயக்கங்களும், சிகரம் ச. செந்தில்நாதன், சத்தியவேல் முருகனார் போன்ற அறிஞர்களும் பெரும் பங்காற்றிக் கொண்டிருக்கின்றனர்.
கி. மு. 200 – 100 வாக்கில் பௌத்தர்கள் சாதியை உடைத்துக் கொண்டு சங்கம் அமைத்து , சாதி வேறுபாடின்றி அனைவரையும் அதில் சேர்த்துக் கொண்ட போது தொடங்கிய சாதி எதிர்ப்பு மரபின் தொடர்ச்சியாக அனைத்து சாதியினரும் அர்ச்சகர் நிகழ்வை அவதானிக்க வேண்டும். கிட்டத்தட்ட 2300 ஆண்டு கால அச்சமரில் இன்று கூட இறுதியில் சாதியத்திற்குள்ளேயே நாம் சுற்றிச் சுற்றி வரவேண்டியுள்ளது. உயர்நிலையாக்கத்திற்கான தொடர் போராட்டத்தின் மூலம் சாதியப் படிநிலையில் சில முன் நகர்வுகளையே பெற்றிருக்கிறோம். எனினும் கீழ்த்தளத்திலிருந்து எழும் உயர்நிலையாக்கத்திற்கான முயற்சிகள் பெரும் விளைவுகளை சாத்தியமாக்குபவை. பார்ப்பனரின் சமய ஆச்சார நெறியின் உயர்நிலையை நிலைகுலைய வைக்கும் தன்மையுடையவை. நேர்குத்துக்கோடு நிலையிலுள்ள சாதியப் படிநிலையை கிடைக்கோடு நிலைக்கு சாய்க்க உறுதுணை புரிபவை.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் விசயத்தில் தமிழ்நாடு அரசின் முன்னெடுப்பு சுயதிருப்தியோடு தேங்கிவிடக்கூடாது. அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் தொடர்ந்து இயங்க வேண்டும். அனைத்து அரசுப் பயிற்சிப் பள்ளிகள் போல தகுதியான ஆசிரியர் நியமனம், இட ஒதுக்கீடு உள்ளிட்ட விதிமுறைகள் அமலாக வேண்டும். பயிற்சி பெறுபவர்களுக்கு வேலை உண்டு என்கிற நிலை உருவாக வேண்டும். இவற்றைப் பாதுகாக்க கருத்துப் பிரச்சாரமும் களச்செயல்பாடுகளும் அமைப்புகளால் உயிர்துடிப்புடன் தொடரவேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தில் தேவையான திருத்தம் கொண்டு வந்து அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் சட்டம் இயற்ற ஒன்றிய அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். ஒடுக்கப்பட்ட, உழைக்கும் மக்களின் அடிப்படை கோரிக்கைகளில் ஒன்றாக உருமாற்றம் பெற்று போர் தொடர வேண்டும்.
தெலுங்கு கவி சிவசாகர் அவர்களின் எழுச்சியூட்டும் ஓர் கவிதையோடு முடிக்கலாம்.
புன்சிரிப்புடன்
ராமனைக் கொல்கிறான் சம்புகன்.கோடாரியால்
துரோணரின் கட்டை விரலை
வெட்டி எறிகிறான் ஏகலைவன்.தன் சிறிய பாதத்தால்
வாமனனை பாதாள உலகத்திற்கே
தள்ளுகிறான் மகாபலி.ஊசி குத்தப்பட்ட கண்களுடன்
வெட்டப்பட்ட நாக்குகளுடன்
ஈயம் காய்ச்சி ஊற்றப்பட்ட காதுகளுடன்
இடுகாட்டில் புரண்டு கொண்டிருக்கிறான்
மநு.காலத்தின் கொலை வாளின் மீது
நின்று கர்ஜித்தபடி
சங்கரனின் மீது
நான்கு வெறிநாய்களை
ஏவி விடுகிறான் சண்டாளன்.இதுதான் நடப்பு வரலாறு
சண்டாள வரலாறு.
(தமிழில் வெ. கோவிந்தசாமி).
உதவியவை
பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்
நூல் தொகுப்பு: தொகுதி 1.
இந்திய அரசமைப்புச் சட்டம் (விளக்கங்கள் – விமர்சனங்கள் – தீர்ப்புகள்) – சிகரம் ச செந்தில்நாதன்.
சாதியம் – முனைவர் கோ கேசவன்.
டாக்டரும் புனிதரும் – அறிமுகம்
அருந்ததி ராய்.
நாளிதழ்கள் :
தினத்தந்தி, தீக்கதிர். (15-08-2021).
பிபிசி தமிழ்
முரளிதரன் காசிவிஸ்வநாதன்
(14-08-2021).