மனிதர்களின் ஒரு சிறிய புன்னகைக்குப் பின்னால் பிரியம் காட்டும் நேசம் இருக்கிறதா? வன்மம் இருக்கிறதா? வஞ்சம் இருக்கிறதா என்பதை யோசித்து முடிப்பதற்குள் இழப்போ அல்லது கூடுகையோ நடந்து முடிந்து விடுகிறது. அத்தனை வேகம் மிகுந்த வாழ்க்கையாக நகர்ப்புறத்தின் வாழ்க்கை நம்மை இயந்திரமாக மாற்றி வைத்திருக்கிறது.
இழப்பை பெரும் வலியோடும், கூடுகையை கொண்டாட்டாத்ததோடும் மனம் பழகி வைத்துக் கொண்டாலும், வலி என்பது எங்கேயாவது ஒரு மூலையில் அரித்துக்கொண்டே இருக்கும். அந்த வலி என்றாவது ஒருநாள் வன்மமாக.. வஞ்சமாக அந்த வலியை விட பேரன்பு கொண்டதாகவும் மாறிட வாய்ப்பு இருக்கும்.
கடந்த நவம்பர் மாதத்தில் வழக்கத்திற்கு மாறாக 80 சதமான கூடுதல் மழை சென்னையை மூழ்கடித்துக் கொண்டிருக்கிறது. பெரும் நகரங்களின் சாலைகள் அனைத்தும் மழைநீரால் சூழப்பட்டிருக்கிறது.. அந்த சூழலில் முகநூலில் பதிவு ஒன்றினை பார்க்க நேர்ந்தது.. சென்னை அசோக் நகரில் சாலையோரம் தனது உயிர் பிடித்திருந்த முதியவர் ஒருவர் கடும் மழை நாளொன்றில் வெள்ளத்தில் பிணமாக கிடந்தார் என்கிற படத்தோடு.. செய்தியாகவே அது.
பலரின் பின்னூட்டங்கள் “ஐயோ” என்கிற அழுகை அடையாளத்தோடு முடிந்துபோனது. பலர் அப்பதிவை பார்த்தும் கடந்து போய்க் கொண்டிருந்தார்கள். அப்படி கடந்து போவதுதான் இயல்பு என்பதை நுகர்வுக் கலாச்சாரம் இன்றைக்கு மனித மனங்களை கட்டமைத்து வைத்திருக்கிறது. இவைகளை மீறி தனிநபரோ அமைப்போ இறந்த அந்த உடலை அடக்கம் செய்ய நினைப்பதும் செயல்படுவதும் என விதிவிலக்காகவும் பல இடங்களில் பலர் இருந்து கொண்டே வந்திருக்கிறார்கள். மனிதத்தின் அடையாளமான அவர்கள் எண்ணிக்கையில் மிகச் சொற்பமே.
சென்னை போன்ற பெருநகரங்களில் தன் உயிரிழை எப்பொழுது வேண்டுமானாலும் அறுந்து போகும் எனத் தெரிந்தும், வாழ்வின் மேல் கொண்ட தீராக் காதலால்; எவரேனும் ஒருவர் பரிதாபத்தின் நிமித்தமாக உதவுவதால் குடும்ப ஆதரவில்லாத வயதானவர்களாக வாழ்ந்த பலர் கணக்கில் வராமலேயே இறந்து போயிருக்கலாம்; இறந்துபோனது மறைக்கப்பட்டு இருக்கலாம் அல்லது பேசப் படாமலேயே போயிருக்கலாம், அது மக்கள் தொகையின் எண்ணிக்கை ஒன்றினை குறைந்திருக்கலாம்.
பெரு மழை, கடும் கோடை காலங்களில் வாழ இடம் இன்றியும் உண்ண உணவின்றியும் எவரொருவர் ஆதரவும் மறுக்கப்பட்டு வீதியிலே விடப்பட்டவர்களே இப்படியானவர்கள். எண்ணிக்கை மிகக் குறைந்த அளவே இருந்தாலும் கூட செத்துப் போவது என்பது ஒரு மனித உயிர்.. சிரித்து, அழுது, கோபம் கொண்டு, வெட்கப்பட்டு வாழ்ந்த, நல்லவர்கள் எவர், கெட்ட எண்ணம் கொண்டவர்கள் எவர் என்பதை அவர்களின் செய்கையின் வழியாக குறைந்தபட்சம் சீர்தூக்கி யோசிக்கும் மனித உயிர்களுக்கு இப்படியான நிலை என்றால்.. இவைகள் எதுவுமே அறியாத எவராலும் சொந்தம் கொண்டாடப் பட முடியாத தெருவில் திரிந்து வரும் பூனைகளையும் நாய்களையும் நாம் எப்போதாவது யோசித்து இருக்கிறோமா..?
பெரும் தொற்று காலத்தில் இறந்து போன தன் குடும்பத்தினரையும் கைதொட்டு உடல் தொட்டு தூக்க முடியாது பயத்தில் நம்மை நாம் நிறுத்தி வைத்துக் கொண்டு, இறந்து போன உடல்களை கூட அவர்களுக்கான இடுகாட்டில் அடக்கம் செய்ய முடியாது ஒரு அவல நிலைக்கு நம்முடைய மனித மனங்கள் பாதுகாப்பின் பெயரால் கட்டமைக்கப்பட்டு விட்டது. தன் உயிர் மீது கொண்ட காதல்; காதலித்த பிரியம் கொண்ட மனித உயிர்களை மலிவு படுத்தி வைத்தது.
பெரும் தொற்று நமக்குள் இருக்கும் மனிதாபிமானங்களை கேள்விக்குள்ளாக்கியது. மனிதர்களே சக மனிதனை நேருக்கு நேர் எதிர் கொண்டு பேசமுடியாத வீதியில் திரிய முடியாது ஒரு சூழலில் வாழ்ந்து கிடந்த பொழுது மனிதர்களின் ஈகையாலேயே மட்டும் உயிர் வாழக்கூடிய தெருவில் திரிந்து வரும் நாய்களைப் பற்றி அதன் வாழ்வினை பற்றி எப்பொழுதாவது நம்மால் யோசிக்க முடிந்திருக்குமா..? யோசித்திருக்க வேண்டும் ஏனென்றால் நாம் ஆறறிவு படைத்த சிரிக்கத் தெரிந்த மனிதர்கள்.
அப்படி யோசிக்கத் தெரிந்த மனிதனாக. எல்லா உயிர்களிலும் அன்பு செலுத்தக்கூடிய மனிதனாக “நானும் என் பூனைக்குட்டி களும்” என்கிற நாவலை எவரும் எழுதாத தளத்தில் நின்று தன்னுடைய ஒவ்வொரு நாளின் அனுபவங்களையும் தன் குடும்பத்தோடு எப்படி இச்சமூகத்தின் தெருக்களில், தாம் வாழும் பகுதிகளில் பூனைகளோடும் நாய்க்குட்டிகளோடும் வாழ்ந்து வரும் பொழுது எதிர்கொள்ள நேரிட்டது எப்படி என்பதை எல்லோரும் வாசிக்கக்கூடிய எளிய எழுத்துக்களில் தமிழ் சமூகத்திற்கு; மனித சமூகத்திற்கு கொடுத்திருக்கிறார் எழுத்தாளர் தரணி ராசேந்திரன்.
குட்டிகள் ஈன்று எடுக்கும் காலத்தில் மனிதர்களை விட பாதுகாப்பான இடத்தை தாய் பூனையும் பெண் நாயும் மிக சரியாக தேர்வு செய்யும் மனிதர்கள் வாழும் ஆனால் மனித நடமாட்டம் குறைந்து காணப்படும் இடங்களை.. அப்படியான ஒரு இடமாக ஒருநாள் பொழுதினை ஒரு தாய் பூனை பாலா வீட்டினை தேர்வு செய்கிறது.
தாய் பூனைக்கும் மூன்று குட்டிகளுக்கும் ஆதரவளித்த பாலா குடும்பத்தினர் பிறகு தெரு நாய் ஒன்றிற்கு உணவளிக்க அது 50க்கும் மேற்பட்ட நாய்களுக்கும் உணவளிக்கும் பேரன்பாக பரிணாமம் அடைந்தது எப்படி என்பதையும்.. அதே நேரத்தில் அந்த நாய்களின் வரவால் அந்த தெருவில் வசிக்கும் மனிதர்களின் அடாவடி செயல்களும் அரசல் புரசல் பேச்சுக்களும்.. தினம் தோறும் நடைபெறும் வாய் சண்டைகளும்.. ராணி நாய் மற்றும் அதன் குட்டிகளை பாதுகாக்க பாலா எடுக்கும் முயற்சிகளும்.. குடியிருப்பு வாசிகளின் நிர்பந்தத்தால் தாம் குடியிருக்கும் வீடு வேறு ஒரு இடத்திற்கு மாற்றம் செய்யப்படும் பொழுது வெள்ளையால் அந்த மாற்றத்தை ஏற்க முடியாமல் படும் அவஸ்தையும்.. அதன் அவஸ்தைகள் சிக்கித் தவிக்கும் பாலா அவன் அம்மா இருவரின் மன நிலையையும்..
நாவலுக்குள்மென்மையாகவும் வலிமிகுந்த சொல்லி இருக்கிறார் ஆசிரியர்.
பிறந்தது முதல் தன் மார் மீதும் தோள் மீதும் தூக்கி வளர்த்த மகனோ மகளோ சாதி மாறி இன்னொரு மனிதரை நேசிக்க முற்படும் பொழுது அதனை ஏற்றுக்கொள்ள முடியாத சாதி உணர்வு தான் பெற்றெடுத்த உயிர்களை பலி வாங்கிக் கொண்டிருக்கிறது தினமும் வெறிகொண்டு இந்தியா முழுவதிலும். ஆனால் நாவலுக்குள் தான் உரிமையோடு குடியிருக்கும் வீட்டினுள் இன்னொரு உயிராக தெருநாய் ஒன்று வரும்பொழுது அதனோடு எந்தவிதமான பேதமும் இன்றி அவற்றிற்கும் இடம் கொடுத்து நேசம் காட்டும் பூனைக்குட்டிகள் கண்களின் வழியாக பல சேதி சொல்கிறது நாவலாசிரியரின் எழுத்துக்கள்.
நாவலுக்குள் பல இடங்கள் நம்மை நெகிழச் செய்கிறது.. தெரு நாய்களின் மனதாக இருந்து நாவலுக்குள் அவைகளின் வாழ்வியலை பேசியிருக்கிறார் ஆசிரியர்.
மனித வாழ்வியலை பேசும் பல நாவல்களுக்கு மத்தியில் இப்படி விலங்குகளின் வாழ்வியலையும் வீதியில் பசிக்காக உணவு கேட்டு அலைந்து திரியும் விலங்குகளுக்கும் மனிதனுக்குமான உறவுகளையும் பேச முற்பட்டு இருக்கிறது “நானும் என் பூனைக்குட்டிகள்” நாவல்.
எதார்த்தமாக நடைபெறும் பல சம்பவங்களை நீங்கள் வாசிக்கும் பொழுது அறியலாம்; அந்தச் சம்பவங்கள் எப்படி மனித உளவியலுக்குள் தெரு நாய்கள் குறித்து சித்தரிக்கப்பட்டு இருக்கிறது என்பதை.
நாம் வசிக்கும் பகுதி எங்கும் அழுக்குகளையும் துர்நாற்றம் களையும் நம்முடைய கழிவுகளால் தொற்று நோய்களாக வளர்த்தெடுக்கும் நாம்தான் தெருக்களிலும் வீதிகளிலும் அலைந்து திரியும் நாய்களினால் மனித உடலுக்கு தொற்று நோய் பரவுகிறது என்கிற புகாரினை அரசுக்கு அனுப்பி அவைகளை பிடித்து கொடுத்து ஜம்பம் காட்டுகிறோம். கடந்த 2 மாதங்களில் மட்டும் சுமார் 300க்கும் மேற்பட்ட நாய்கள் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.
இயற்கையால்படைக்கப்பட்ட அனைத்து உயிர்களுமே இன்னொரு உயிரின் வாழ்வியல் தேவைக்காக படைக்கப்பட்டதுவே..பசி இருக்கும் வரை வாழ்வியல் தேவைகளும் இருக்கும்.. அதற்காக ஒவ்வொன்றும் இன்னும் ஒன்றிணைத் தேடி ஓடிக்கொண்டே இருக்கும்.. மனித உயிர்கள் மட்டுமே தமக்கு உகந்தது எது என்பதை தேர்ந்தெடுத்து அதனை தனதாக்கிக் கொள்ளும்.. அப்படியான ஒரு தேவை மனித உயிர்களுக்கு தெருநாய்கள் வழியாக கிடைக்கிறது என்கிற ஒரு புதிய விஞ்ஞானம் அறிவித்தால் மட்டுமே தெரு நாய்களுக்கு நம்மைப் போன்ற மனிதர்களால் பாதுகாப்பு கிடைக்கும்.. அதுவரை அந்த தெரு நாய்கள் வீதிகளிலே அடிபட்டு சாகும் அன்பில்லாத மனிதர்களால் கல்லால் அடித்து கொலை ஆகும்.. அரசும் தன் பங்கிற்காக வெறிநாய்கள் பட்டியலில் தெருநாய்களை இணைத்து சத்தமில்லாமல் கொலை செய்யும்.
இந்த நாவலை வாசித்து முடித்தவுடன் நிச்சயம் வாசித்தவர் தான் தெருவில் அலையும் நாய்க்கு ஒரு பிஸ்கட் செய்வது வாங்கிப் போடுவார்.. சிறு பிள்ளைகள் தெரு நாய்கள் மீது கல் எடுத்து வீச முற்படும் பொழுது அதை தடுக்க முயற்சி செய்வார்.. தேநீர் கடைகளுக்கு அருகில் இருக்கும் ஏதாவது ஒரு நாய்க்கு ஒரு காய்ந்த ரொட்டி ஒன்றினை வாங்கிப் போடுவார்.. நாளை இதே நேரத்தில் நீங்கள் அந்த தேனீர் கடை அருகே செல்லும் பொழுதிலா அல்லது வேறு எங்கேயாவது அந்த நாயை நீங்கள் கவனிக்கும் பொழுதிலோ அது உங்களை பார்த்து வாலை குழைத்துக்கொண்டே வந்து நிற்கும்.. அதனுடைய கண்களில் நீங்கள் அன்பினை பார்க்கலாம்.
அன்புவலியை மட்டுமல்ல வலிமையையும் சேர்த்து தருகிறது என்பதனை நாவலுக்குள் வலியோடும் வலிமையோடும் சொல்லியிருக்கிறார் நாவலாசிரியர் தரணி ராசேந்திரன்.
உயிர்களிடம் அன்பு செய்வோம்.
வாழ்த்துக்கள் தரணி ராஜேந்திரன்!
நீங்களும் ஒரு முறை வாசியுங்கள்
“நானும் என் பூனைக்குட்டிகளும்”
நானும்_என்_பூனைக்குட்டிகளும்
தரணி_ராசேந்திரன்
எழுத்து_வெளியீடு.
விலை ரூபாய்.150/-