Sakthiyin Kavithaigal 6 சக்தியின் கவிதைகள் 6

சக்தியின் கவிதைகள்

ஆணின் அன்பு
******************
பல ஆண்டுகள் ஆன பின்னும்
என் மன எண்ணங்களுக்கு வார்த்தை கூற முடியாத
ஊமை தான் நான்…

எனக்காக நீ வாழ்ந்த போதும்
உன் மனநிலை அறிய விரும்பாத
மானுடன் தான் நான்…

விட்டுக்கொடுத்தலிலும்…
விரல் பிடித்து நடப்பதிலும்…
உன் விருப்பம் அறியாமல்
விலகிச்சென்றே…என்
எண்ணங்களை மதிப்பவன்
தான் நான் …

பிறந்த நாளுக்கோ…
திருமண நாளுக்கோ…
வாழ்த்து கூறினால்…என்
கர்வம் குறைந்திடுமோ…என்னமோ…
அதனாலேயே…அனைத்தும்
மௌனமாய் கடந்தவன்
தான்…நான்…

புதிதாய்…ஆடையோ…நகையோ
நீ அணிந்து…நல்லாயிருக்கா…
என்று மனதார கேட்ட போதும்…
ம்ம்…என்ற ஒற்றை வார்த்தைக்குள்
உன் அழகையும்…உன் எதிர்பார்ப்பையும்…உடைத்தவன்
தான்…நான்…

சின்னதாய் உடல்நலக்குறை…
எனக்கோ ஏற்பட்டாலும்…உன்
உயிர் நோக துடிக்கும்…காதலுக்கு
ஒரு போதும் கடனாய்…ஒன்றும்
செய்யாமல் தவிக்க விட்டவன்
தான்…நான்…

நான்…நானாக வாழ…வழி
கொடுத்தவள் நீ தான்…
உன் வலி மறைத்தவளாய்…

எனினும்…இந்த மௌனமொழி
ஊமையனுக்கு…சொல் கோர்க்க
முடியவில்லை எனினும்…
எழுத்துகளை கோர்த்து…காகிதமாக
மடித்துள்ளேன்…
வெளிக்காட்டாமல் இருந்த அன்பின்
அடையாளமாய்…

யாதுமாகி நின்றாள்
************************
ஞாலம் முழுதும் உள்ள வேள்வியை…
தன் ஞானம் கொண்டே கடத்திடுவாள்…

அன்பென்ற விதையில்…
பல விருட்ச மரங்கள்…வேரூன்றி
கனி சுவைக்க காரணமாக
இருந்திடுவாள்…

ஆறுதலாய் சாய…தோள்
கொடுக்கும் தோழியாய் இருந்திடுவாள்…
அதர்மம் கொண்ட குணங்களுக்கோ
ஆத்திரமாய் அகன்ற விழி கொண்டே
அதட்டிடுவாள்…

திறம் அறிந்தும் அறம் காக்க
போரிடுவாள்…
அறத்தினுள்ளே பல்துறை அறிவை
வளர்த்திடுவாள்…
நாள் முழுதும் ஓடோடி உழைத்திடுவாள்
உழைப்பில் ஓய்வை கொஞ்சம்
எதிர்பார்த்திடுவாள்…

சுற்றம் சூழ குற்றம்
உரைப்பினும்…தன் மனம்
எண்ணுவதை செய்திடுவாள்…அவள்
செய்கையிலே பல அர்த்தங்கள்
உள்ளதை மௌனமாய் உணர்த்தி கடந்திடுவாள்…

இன்னல் அனைத்தும் இனிமையாய்
மாற்றவே துணிந்திடுவாள்…
மகிழ்ச்சியின் உச்சம் வந்த போதிலும்
தன்னடக்கத்தில் தலை சிறந்திடுவாள்…

பிறர் நலனில் அக்கறை கொண்டே வாழ்ந்திடுவாள்…சுயத்தின்
சூட்சமம் உணர்ந்தே விலகிடுவாள்…

கண்ணின் கருவிழியாலே…காதல் வார்த்தை பேசிடுவாள்…காதலுக்கோர்
கட்டுப்பாட்டை கொள்கையாகவே
விதைத்திடுவாள்…

பிறவியிலே உயர்பிறவியாய்…
தன் பிறப்பை போற்றி சிறந்திடுவாள்…
பிறப்பொக்கும் எல்லா உயிரும்
சமமென எண்ணி உரிமைப்படுத்திடுவாள்…

வாழ்வு முழுதும் எல்லாமுமாகி…
வழிநடத்தி சென்றிடுவாள்…
வழிப்போக்கருக்கும் பாதை அமைத்தே
தன் வழியில் எல்லை சேர்ந்திடுவாள்…

வாழ்வும்…இவளும்
இரண்டறக்கலந்த…ஓர் உணர்வாய்
வாழ்க்கை முழுதும்…யாதுமாகி
நிற்பவள் இவள் தானே…
பெண் எனும் வடிவில் உலகைக் காக்க
வந்த உன்னதமானவள் பெண் தானே…!!

Mathivendhan's Poem மதிவேந்தனின் கவிதை

மதிவேந்தனின் கவிதை




பொங்கலன்று
இனாம் காசு, புதுத்துணி என்று வாங்கி வரும்
அப்பாவிடம் எப்படிக் கேட்பது
“ஏன்ப்பா அவங்க வீட்டு வாசல்ல
ரொம்ப நேரமா நின்னுகிட்டு இருந்தன்னு”

உன் வீட்டு
மாட்டுக்கொட்டாவைக் கேட்டுப் பார்
என் தாத்தனின் பாதச்சுவடுகளையும்
என் அப்பனின் வியர்வைத் துளிகளையும்
உன் தாத்தன், அப்பனின்
அதட்டல், மிரட்டல் மொழிகள்
தோற்றுப் போனதையும்

எப்போது ஊருக்குப் போனாலும்
உங்க பையன் மெட்ராசுலையா படிக்குறான்?
என்ன படிக்குறான்? எனக் கேட்டுவிட்டு,
‘உங்க ஆளுங்களுக்கு’ எப்படியும் வேல கெடச்சிடும்
நல்லா படிக்கச் சொல்லு,
எம் பையன் தான் படிக்காம போயிட்டான்
ம்ம்ம்… என்று கரிசனம் காட்டும்
‘அவர்களை’ என்ன பெயர் சொல்லி
உங்களிடம் அறிமுகம் செய்வது

Kaviyoviyathodar Yuthageethangal - Oru Kondattam Irandu Voorvalangal 29 by Na ve Arul நா.வே.அருளின் கவியோவியத் தொடர் யுத்தகீதங்கள்- ஒரு கொண்டாட்டம் இரண்டு ஊர்வலங்கள் 29

கவியோவியத் தொடர் யுத்த கீதங்கள்: ஒரு கொண்டாட்டம் இரண்டு ஊர்வலங்கள் 29 – நா.வே.அருள்




ஒரு கொண்டாட்டம் இரண்டு ஊர்வலங்கள்
*****************************
அதிகாரம்
தனது இறுதி ஊர்வலத்தை நடத்திக் கொண்டிருந்த போது
அமைதி
தன் முதல் ஊர்வலத்தை நடத்தத் தொடங்கியது.

இராவணனுக்குச் சமமாக
சுருட்டிவைத்திருந்த சொந்த ஆசனத்திலமர்ந்த
அநுமனைப் போல
அதிகாரங்களின் ஊர்வலத்திற்கு எதிராக
அமைதியின் முதல் ஊர்வலம்!

கருப்பையிலிருந்து வெளிவருகிற குழந்தையைப்போல
புரட்சி
விவசாயியின் கருப்பையிலிருந்து
இந்திய மண்ணை முகர்ந்து பார்க்கிறது.

அதிகாரம் –
தனது இறுதி முடிவை
சட்டங்களின் மூலமாக எழுதுகிறது
வன்முறையின் மூலமாக அமல்படுத்துகிறது
அமைதியின் காவலர்களோ
சமாதானப் புறாக்களை வானில் பறக்கவிட்டு
மனித குலத்தைப் பாதுகாக்கிறார்கள்.

விவசாயி
காட்டின் மகன்
அவன் கர்ப்பத்தில் காடு
மரங்களை நாற்காலியாக்கியவர்கள்
ஒரு காட்டையே அழிக்கிறார்கள்
மேலும் அந்த நாற்காலியைச் சுடுகாட்டில்
சிதையைப்போல அலங்கரிக்கிறார்கள்.

எரிமலைகள்
டிராக்டர்களில் ஊர்வலம்போகப் பழகிக் கொண்டன
எரிமலைக்குள்
அக்கினியின் வரலாறு
ஏற்கெனவே எழுதப்பட்டுவிட்டது.

கவிதை – நா.வே.அருள்
ஓவியம் – கார்த்திகேயன்