நூல் அறிமுகம்: ந.பெரியசாமியின் கடைசி பெஞ்ச் இளையோருக்கான கவிதைகள் – வே.சங்கர்
நூல் : கடைசி பெஞ்ச் இளையோருக்கான கவிதைகள்
ஆசிரியர் : ந.பெரியசாமி
விலை : ரூ. ₹30
வகை : கவிதை
பக்கங்கள் : 32
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]
எந்தவித விகல்பமும் இல்லாமல் ஓடியாடித் திரியும் பெண்பிள்ளைகளின் குழந்தைப் பருவம் எதிர்பாராத தருணத்தில் பதின்பருவத்திற்குள் உந்தித்தள்ளப்படுவது, இயற்கைதானே என்று எல்லோரும் நினைத்தாலும் அது அப்படியல்ல என்பதை ”கடைசி பெஞ்ச் இளையோருக்கான கவிதைகள்” என்ற நூல் உரக்கச்சொல்கிறது.
பதின் பருவத்தினரைக் குறிவைத்து எழுதப்பட்ட அல்லது பேசப்பட்ட கவிதைகள் எல்லாமே ஏதோ ஒரு இடத்தில் ‘பாலியல் வேட்கையை மனதிற்குள் வெளிப்படும் உளவியல் சிக்கலைக்’ கோடிட்டுக்காட்டும். ஆனால், அதற்கு மாறாக ந.பெரியசாமியின் கவிதைகள் பதின்பருவத்தினரின்மேல் இச்சமூகம் கொண்டுள்ள வன்மத்தை, எதார்த்தத்தை, எதிர்வினையை போகிறபோக்கில் சொல்ல முயன்றிருக்கிறது.
அது ஆணோ பெண்ணோ, பதின் பருவத்தினரின் உள்ளத்தில் தோன்றும் ஆர்வக்கோளாறு, அளவுகடந்த ஆசைகள், நீண்டு செல்லும் கனவுகள், பதற்றத்தோடு கூடிய பரவசம், குழப்பத்தில் துளிர்க்கும் கண்ணீர்த்துளிகள் மாறிமாறி முளைவிடும் விருப்பு வெறுப்புக்கள் ஆகிய எல்லாமே இயற்கை தூவிச்செல்லும் விதைகள்தானே என்று ஆறுதலாய் சொல்லித் தலைகோத ஒரு ’மாயக் கை’ வேண்டுமல்லவா! அது மொத்தமாய்க் கவிதைக்குள் ஒளித்துத் தரப்பட்டதுதான் கடைசி பெஞ்ச் இளையோருக்கான கவிதைகள்.
மொத்தம் 25 கவிதைகளைக் கொண்ட இக்கவிதைத் தொகுப்பில் பெரும்பாலான கவிதைகள் இளையோருக்கானதாகவும் சிலகவிதைகள் வளர்ந்த இளையோருக்கானதாகவும் புனையப்பட்டுள்ளது. இது உண்மையில் கவிதையா? அல்லது உரைநடையா? என்ற கேள்வி அவ்வப்போது எழுத்தான் செய்கிறது. இருக்கட்டுமே!, சொல்லவேண்டியதைச் சொல்லவேண்டிய விதத்தில் சொல்லத்தக்க சமயத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்பதாலேயே கவிஞர் பெரியசாமி வெற்றிபெற்றிருக்கிறார்..
செல்போனைப் பார்த்தால் கண் கெட்டுவிடும் என்று சொல்லும் பெற்றோரே ஆன்லைன் வகுப்பிற்கு வந்து .செல்போனைக் கொடுத்துப் பார்க்கச்சொல்வதும், யார் யாரோ இட்டுச்செல்லும் ’லைக்’ கிற்காக பதின் பருவக்குழந்தைபடும் ஆனந்தத்தையும், தன்னை மற்றவர்களோடு ஒப்பிடுவதைச் சகித்துக்கொள்ள இயலாத மனதையும், கவிதையில் சாதுரியமாகச் சொல்லிச் செல்வதற்கு அசாத்தியத் துணிச்சல்வேண்டும்.
அதுமட்டுமல்ல, வலிய வரும் அன்பைக்கூட இனி அடையாளம் காணவேண்டும் என்று சொல்லும் கரிசனமான வார்த்தைகளையும், வகுப்பறையில் ரகசியமாய் கைமாறும் நாப்கின்னின் மகத்துவத்தையும், பெற்ற தாயே சிலசமயங்களில் மகளுக்கு ஆதரவாகவும், பலநேரங்களில் சந்தேகக் கண்கொண்டு பேசும் வார்த்தைகளையும் கூர்ந்து கவனிப்புக்கு உள்ளாக்கிக் கவிதையாக்கப்பட்டிருக்கிறது.
கடிதம் தரும் உயிர்ப்பை இன்றைய செல்போனில் வரும் குறுஞ்செய்திகள் தரத்தவறிவிட்டதை ஏக்கத்தோடு பதிவுசெய்கிறது ஒருகவிதை.
கொரானா காலத்தில் எதிர்கொண்ட அனுபவத்தைச் சிலகவிதைகளும், வகுப்பறையில் கவனக்குறைவாய் இருந்ததற்குத் தண்டனை இன்னும் வாழ்வில் முன்னேறாமல் இருக்கும் போதாமையையும் தன் வயதொத்த குழந்தைகள் செய்யும் சேட்டையையும் ரசிக்கும்படி கவிதைகள் ஒளித்துவைத்திருப்பது சிறப்பு.
ஒற்றைக்கருவை மையமாகக்கொண்டு எல்லா கவிதைகளும் இல்லை என்பது வாசிப்பாளருக்கு ஏமாற்றம்தான் என்றபோதும், இப்படிப்பட்ட கவிதைகளும் இடையிடையே தேவைதான் என்பதை வாசித்து முடித்தபிறகுதான் உணரமுடிகிறது.
சில கவிதைகள் இன்னும் செப்பப்பட்டுத் திரும்பவும் எழுதப்படவேண்டும் அல்லது மெல்லிய மொழி நடையை அழகியல் வார்த்தைகொண்டு புனையவேண்டும் என்பதே என்போன்ற வாசகரின் கருத்தாக இருக்கமுடியும்.
அழுத்தமாகச் சொல்லவேண்டிய கருத்தைப் பட்டும் படாமல் சொல்வதால் பயனேதும் இருக்கப்போவதில்லை. எதார்த்தமான விசயங்களை ஏனோதானோ என்று எழுதிச்செல்வதால் எந்தவித எதிர்பார்ப்பையும் கூட்டிவிடப்போவதில்லை என்பதை மனதில் கொண்டு இனிவரும் கவிதைகள் எல்லா கோணங்களிலும் எதிரொலிக்கட்டும்.
வாழ்த்துகளும் பேரன்பும். நன்றி.
நூல் அறிமுகம் : இ.பா.சிந்தனின் அரசியல் பேசும் அயல் சினிமா – இரா.சண்முகசாமி
நூல் : அரசியல் பேசும் அயல் சினிமா
ஆசிரியர் : இ.பா.சிந்தன்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
ஆண்டு : முதல் பதிப்பு 2014;
இரண்டாம் பதிப்பு 2015
விலை : ரூ.140
தொடர்பு எண் ; 044 24332924
புத்தகம் வாங்க இங்கு க்ளிக் செய்யவும்: thamizhbook.com
18.05.2022 அன்று சென்னை கிண்டி CITU அலுவலகத்தில் நடைபெற்ற, தோழர் இ.பா.சிந்தன் அவர்கள் எழுத்தில் வெளியான பாரதி புத்தகாலயத்தின் ‘உக்ரைனில் என்ன நடக்கிறது?’ என்னும் நூல் வெளியீட்டு விழாவின்போது வாங்கிய நூல்தான் இது.
அப்போது வரை இந்நூல் எப்படி என் கண்ணில் படாமல் போனது என்று யோசித்துப் பார்க்கிறேன். வாங்கிய பிறகு ஏன் வாங்கினேன் என்று படிக்க ஆரம்பித்தவுடனேயே பதற்றமடைகிறேன்.
ஆம் என் செல்போனில் நான் இந்நூல் குறித்து தட்டச்சு செய்யும்போதே போனில் ரத்தம் கசிந்து வழிந்து ஓடுவதைக் காண்கிறேன். ஆம் அந்த ரத்தம் எங்கிருந்து வந்தது என்று எனக்கு இப்போது தெரிய ஆரம்பித்தது. அது காங்கோவில் சுரங்கத்திலிருந்து நோக்கியோ செல்போன் உதிரிப் பாகத்திற்காக கேசிட்ரைட் (Cassiterite), கோல்டன்(Coltan) என்னும் கனிம வளங்களைச் சுரண்டுவதற்காக 30 சதவீத பெண்களை வன்புணர்வு செய்த; குழந்தைகளைச் சுரங்கத்தில் இறக்கி ரத்தம் பார்த்த; 90 கி.மீ தூரம் 50 கி.கி. கனிமத்தை இரண்டு நாட்கள் தலையில் சுமந்து விமானத்தில் ஏற்றிய மக்களின் ரத்தம் குடித்த; வழியில் ராணுவ அடாவடி, மாஃபியா ரவுடிக் குழுக்களின் சுரண்டலில் என மக்களின் ஒட்டுமொத்த ரத்தத்தையும் வழிந்தோடச் செய்து உற்பத்தி செய்த போனில், ரத்தம் வழிந்தோடுவதை நான் மட்டுமல்ல நீங்கள் வாசித்தாலும் உங்களுடைய செல்போனிலும் ரத்தம் கசிவதை நீங்கள் அழுதுகொண்டே பார்க்க முடியும்.
தோழர்களே, சினிமா என்றால் நமக்கு நம்மூரில், நம் மூளையில் திணிக்கப்படுவதெல்லாம் மூளைச்சலவை திரைப்படங்கள் தான். ஆனால் தப்பித் தவறியும் அரசியலைப் பேசிவிடக்கூடாது என்கிற திட்டமிடலோடு எடுக்கப்படுகிற சினிமாக்கள் தான் நம்மை ஆதிக்கம் செலுத்துகின்றன. போதும் இத்தோட நிறுத்திக்கிறேன். நேரா விசயத்திற்கு வருகிறேன்.
அயல் நாடுகளில் எடுக்கப்பட்ட சினிமாக்களை தொடர்ந்து இணையதளத்தில் பார்த்து அதிலிருந்த அனுபவங்களைத் தொகுத்து தோழர் இ.பா.சிந்தன் அவர்கள் மிகச்சிறப்பாக எழுதிய நூலைத்தான் வாசித்தேன், வாசிக்கிறேன்.
இனி அவர் பார்த்த அயல் சினிமாக்களை இணையத்தில் விரல் கொண்டு தேடவேண்டியது தான் பாக்கி.
ஆம் தோழர்களே, ‘blood in mobile, The Coca Cola Case, The Dark side of Chocolate’ என 16 அயல் திரைப்பட பட்டியலை நமக்கு இந்நூல் வழியாகக் காண்பிக்கிறார் எளிய நடை எழுத்தாளர் தோழர் இ.பா.சிந்தன் அவர்கள்.
வாசிப்போம்!
விவாதிப்போம்!!
கார்பரேட்டுகளின் மனிதத் தன்மையற்ற மூலதன வெறியை விரட்டுவோம் தோழர்களே!!!
இரா.சண்முகசாமி
புதுச்சேரி
9443534321