நூல் அறிமுகம் : தங்க. முருகேசனின் “வெப்பம் பூக்கும் பெருநிலம்” மானுடத்தின் பெருங்குரலக ஒலிக்கும் கவிதைகள் – கவிஞர் கோவை காமு
நீண்ட இடைவெளிக்குப் பிறகு கவிஞர் தங்க. முருகேசனின் இரண்டாவது கவிதைத் தொகுப்பான ‘’வெப்பம் பூக்கும் பெருநிலம்’’ வெளிவந்திருக்கிறது. இவரது முதல் கவிதை நூலான ’’தழும்புகளின் விசாரணை’’ வெளிவந்து கால் நூற்றாண்டு கடந்துவிட்டன. இருப்பினும் இவர் மானிடவியல், இலக்கியம், இயக்கம் என பெருவானம் விரித்து பறந்துகொண்டிருப்பவர்.
இவருடைய கவிதைகளில் நுட்பமான சமூக உணர்வும் , விமர்சனமும் இருப்பதைப் பார்க்க முடிகிறது. எல்லாக் கவிதைகளிலும் அரசியல் இருக்கிறது. அதுவும் வெற்றுக் கோஷமாக இல்லாமல் கவிதைக்குரிய அழகியலோடு இருப்பது தனிச்சிறப்பு.
தேர்தல் ஜனநாயகம் பற்றிய ‘நிகழ்வு’ என்று ஒரு கவிதை, கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்தாலும் காட்சிகள் மாறவில்லை ; கவலைகள் தீரவில்லை என்பதைச் சொல்லும் கவிஞர் ,
எத்தனை முறைதான்
வரிசையில் நிற்பது
கைவிரல் கரும்புள்ளிக்காக…
என்று பேசுகிறார். தேர்தல் விபரீதம் இப்படி இருக்கும் அதே நேரத்தில், அதே கவிதையில் வேறு ஒரு ஆபத்தையும்,
சலசலப்பின் ஊடே
சத்தம் இல்லாமல்
இந்தியப் பெருங்கடலில்
நவீனக் கப்பல்
நகர்ந்து வருகிறது
என்று சுட்டிக்காட்டி எச்சரிக்கவும் செய்கிறார்.
இவருடைய கவிதைகளில், ஆங்காங்கே பகடியும் எள்ளலும் கைகோர்த்து வருகிறது. பருவம் தப்பிப்போன மழையை இப்படிச் சொல்கிறார் :
மழையே
நீ தென்னாட்டைத் திரும்பிப் பார்க்காத
மத்திய அரசா
தெற்கே வர மறுக்கிற
பிரதமர் பதவியா ?
கவிதையில் சரியான முறையில் வெளிப்படும் இது போன்ற பகடியும், எள்ளலும் வாசிப்பு சுவையைக் கூட்டுகின்றன.
இப்போதெல்லாம், ஆண்ட பரம்பரை என்னும் அலட்டல்கள் ஆங்காங்கே கேட்கின்றன. இதை இப்படிப் பகடி செய்கிறார்.
ஆண்ட பரம்பரைகள் அனைத்தும்
ஆரியச் சூத்திரத்தில்
அடங்கிக் கிடக்கிறது.
ஐயோ, பாவம் !
இவர் கவிதைகளில் நேரடித் தன்மை இருக்கிறது. சொற்சேர்க்கையின் கட்டமைப்பு, வாசிக்க எளிமையாகவும் இனிமையாகவும் இருக்கிற அதேநேரத்தில், வரிகளைத் தாண்டியும் மனம் வேறு வேறு சிந்தனைத் தளங்களில் பயணிக்க வைக்கிறது. அதுதான் இவருடைய கவிதையின் நுட்பம்.
பாலியல் தொழிலாளியின் மகன் படும் மன அவஸ்தைகளை ‘பகலின் மறுபக்கம்’ என்று ஒரு கவிதை இப்படி பேசுகிறது.
ஏதேதோ மொழியில்
சரளமாகப் பேசுகிறாய்
தாயே !
எனக்குத் தந்தை மொழி உண்டா ?
என்று கேட்கும் போது இனம் புரியாத சோகம் நெஞ்சைக் கவ்வுகிறது. அதனுடைய உச்சம் இந்த வரிகளில் வெளிப்படுகிறது.
இப்படி மனிதப் பாடுகளை விதவிதமான அவதானிப்பில் கவிதைகள் ஆக்கியிருக்கிறார் தங்க. முருகேசன். கவிஞர் தன்னுடைய அரசியல் உணர்வுகளை , பார்வையை வெகு நுட்பமாக பதிவு செய்கிறார். தன் கருத்தியலை கவிதைப் போக்கிலேயே கதாபாத்திரங்களின் உணர்வுகளாக கட்டமைப்பதில் வல்லவர் என்பதைப் பல கவிதைகளில் உணர முடிகிறது.
படைப்பாற்றலும் , தெளிவான சமூக சிந்தனையும், மனித நேயமும் கொண்ட கவிஞர் தங்க. முருகேசனின் ’’ வெப்பம் பூக்கும் பெருநிலம் ’’ எனும் கவிதைத் தொகுப்பு மானுடத்தின் காலக் குரலாக ஓங்கி ஒலிக்கிறது.
– கவிஞர் கோவை காமு
நூல் : வெப்பம் பூக்கும் பெருநிலம்
ஆசிரியர் : தங்க. முருகேசன்
விலை : ₹ 70
வெளியீடு : கயல் வெளியீட்டகம்
24 எ, ராமச்சந்திரா நகர்,
எண் : 4 வீரபாண்டி,
கோவை – 641019.
8838882414
“அக்னிபாத்” திட்டம் கட்டுரை – கவிதா ராம்குமார்
வருங்கால இந்தியாவின் பலமா? பலவீனமா?
வாங்க பேசலாம்….
ஒரு தலைமுறை உயர் பொறுப்புகளுக்கு செல்வது தடைபட்டு சமூக படிநிலை உடையும் அபாயமும். இந்திய ராணுவத்தில் தேசத்திற்காக தனது உயிரையும் பொருட்படுத்தாமல் நாட்டின் பாதுகாப்பிற்காக தன்னை அர்ப்பணிக்கும் இளைய தலைமுறைகளின் கனவு இத்திட்டத்தின் மூலம் சிதைந்துவிடும் என்ற அச்சமும் ஏற்படுகின்றது.
அக்னிபாத் குறித்து மத்திய அரசு சொல்வது என்ன ?
“அக்னிபாத்” திட்டம் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் என்றும் இந்திய ராணுவத்தை உலகத்தரம் வாய்ந்த ராணுவம் ஆக மாற்றவும். “அக்னிபாத்” திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தை இந்திய மக்களைப் போலவே இளமையாக ஆக்கிடவும். சேவையின் போது பெற்ற திறன்கள் மற்றும் அனுபவங்கள் இளைய தலைமுறைகளுக்கு பல்வேறு துறைகளிலும் வேலைகளை வழங்கும் என்று கூறப்படுகிறது.
அக்னிபாத் திட்டத்தின் விவரங்கள்…..
அக்னிபாத் திட்டம் இந்திய ராணுவத்தின் முப்படைகளிலும் 4 ஆண்டு காலத்திற்கு குறுகிய கால வீரராக இளைஞர்கள், இளம்பெண்களை சேர்க்கும் திட்டம் ஆகும். பணியில் சேர்வதற்கு முன்பு 6 மாத காலத்திற்கு பயிற்சி வழங்கப்படும். 17.5 வயது முதல் 21 வயதிலான ஆண், பெண் இருபாலரும் இத்திட்டத்தில் இணையலாம். இந்த வருடத்தில் இணைபவர்களுக்கு மட்டும் வயது வரம்பு 23 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் அவர்கள் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம் ஆகும். உடற்தகுதியை பொறுத்தவரை ராணுவத்தில் சேருவதற்கு இப்போது நிர்ணயிக்கப்பட்டிருக்கும் உடற்தகுதிகளே அக்னிபாத் திட்டத்தில் சேருபவர்களுக்கும் பொருந்தும். அக்னிபாத் திட்டத்தின் கீழ் தேர்வாகும் வீரர்களுக்கு முதலாம் ஆண்டில் மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளமும், கடைசி, அதாவது 4-வது ஆண்டில் மாதம் ரூ.40 ஆயிரம் சம்பளமும் வழங்கப்படும்.இந்த சம்பளத்தில் 30% பிடித்தம் செய்யப்பட்டு, சேவா நிதியாக மத்திய அரசின் பங்களிப்புடன் (அதே 30% அளவிலான தொகை) பணி நிறைவின் போது ஒவ்வொரு வீரர்களுக்கும் தலா ரூ. 11.7 லட்சம் வரிப்பிடித்தமின்றி வழங்கப்படும்.
இராணுவ ஆர்வலர்கள் ஏன் இந்த திட்டத்திற்கு பலத்த எதிர்ப்பினை தெரிவித்து வருகிறார்கள்…..
பாதுகாப்புப் படையில் 4 ஆண்டுகள் பணியாற்றும் இளைஞர்களில் 25 சதவீதம் பேருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், பணி நீட்டிப்பு செய்யப்படாமல், 21 அல்லது 23 வயதில் ராணுவப் பணியிலிருந்து வெளியேறும் தங்களது எதிர்காலம் என்னவாகும் என்று கேட்டு இளைஞர்கள் கொதித்தெழுகிறார்கள்.17.5 வயதில் ராணுவத்தில் வேலை என்று மத்திய அரசு அறிவித்திருப்பதால், 10 அல்லது பனிரெண்டாம் வகுப்பு முடித்ததுமே, இந்தப் பணியில் சேரும் இளைஞர்களின் மேற்படிப்பு என்ற வாய்ப்பு / கனவு பறிக்கப்படும். ஏற்கெனவே, உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை நாட்டில் குறைவு. இந்த திட்டத்தால் உயர் கல்வி பயிலாத இளைஞர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் கணிசமாக கண்ணெதிரே அதிகரிப்பதைப் பார்க்க முடியும். காரணம் மத்திய அரசின் ‘அக்னிபத்’ திட்டமாக இருக்கும்.
மறுபக்கம், ராணுவ வேலை என்பதால், பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையிலிருக்கும் பெற்றோர் உயர்கல்வி படிக்க வைக்காமல் பிள்ளைகளை அக்னிவீரர்களாக மாற்றும் அபாயமும் உருவாகலாம்.
ஒவ்வொரு ஆண்டும் 46 ஆயிரம் பேர் அக்னிவீரர்களாகத் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்களில் 25 சதவீதம் பேருக்கு மட்டுமே நிரந்தரப் பணி வழங்கப்படும். எஞ்சிய 75 சதவீதம் பேரும் கையில் சேவா நிதியுடன் மீண்டும் வேலையில்லா இளைஞர்களின் கூடாரத்துக்கே அனுப்பி வைக்கப்படுவார்கள். உயர் கல்வியும் கிடைக்காமல், நாட்டு நடப்புக்கு எந்த தொடர்பும் இல்லாத ராணுவப் பயிற்சி முடித்த இவர்கள் எந்த வேலைகளுக்கு அமர்த்தப்படுவார்கள்? இதனால் வேலையில்லாத் திண்டாட்டம் குறையுமா? கூடுமா? என்ற கேள்விகளுக்கு பதில் கிடைக்குமா பொறுத்திருந்து பார்க்கலாம்.
– கவிதா ராம்குமார்
நான் மண்டியிட்டிருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பே சிலரிடம் இருக்கிறது – நீதிபதி அகில் குரேஷி | தமிழில்: தா.சந்திரகுரு
நாட்டின் மிக மூத்த தலைமை நீதிபதியாக இருந்த போதிலும் உச்சநீதிமன்ற நீதிபதி பதவி மறுக்கப்பட்ட ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியான அகில் குரேஷி சாதாரண குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் சுதந்திரமான நீதித்துறையின் பங்கு குறித்து கடந்த சனிக்கிழமையன்று (மார்ச் 05) தனக்கு நடத்தப்பட்ட வழியனுப்பு விழாவில் ஆற்றிய உரையில் வலியுறுத்தினார். மாற்றுக் கருத்துகளைக் கொண்டிருப்பவர்களைக் குறிவைத்து தேசத்துரோகச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதையும் அவர் தன்னுடைய உரையில் சுட்டிக்காட்டினார்.
பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு நீதிபதி குரேஷி உச்சநீதிமன்ற நீதிபதியாவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் நீதிபதி ரோஹிண்டன் நாரிமன் மற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகளின் நியமனத்திற்கும் ஒப்புதல் அளிக்க மறுத்த போது கொலிஜியத்தில் முட்டுக்கட்டை ஏற்பட்டது. அதற்கு முன்னதாக மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக குரேஷியை நியமிக்கவும் அரசு மறுத்திருந்தது.
தண்டனைக்குரிய நடவடிக்கைகளாக பலராலும் பரவலாகக் காணப்பட்ட அவரது பணியிடமாற்றங்கள் பற்றிய குறிப்புகளும் நீதிபதி குரேஷியின் உரையில் மிகவும் கண்ணியமாக இடம் பெற்றிருந்தன.
’சமீபத்தில் இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி ஒருவர் தனது சுயசரிதையை எழுதியிருக்கிறார். அதைப் படிக்கவில்லை என்றாலும் ஊடகங்களில் வெளியான செய்திகளைப் பார்த்து சில கருத்துகளை அவர் வெளியிட்டிருப்பதை நான் அறிந்து கொண்டேன். மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நியமனத்திற்காக என்னைப் பரிந்துரைத்திருந்ததை மாற்றி திரிபுரா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிப்பது குறித்து நீதித்துறைக் கருத்துகளின் அடிப்படையில் அரசாங்கம் என்னைப் பற்றி சில எதிர்மறையான கருத்துக்களைக் கொண்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். குடிமக்களின் அடிப்படை உரிமைகளை, மனித உரிமைகளைப் பாதுகாப்பதே முதன்மைக் கடமையாகக் கொண்டிருக்கின்ற அரசியலமைப்பு நீதிமன்றத்தின் நீதிபதியாக அவரது கருத்துகளை என்னுடைய சுதந்திரமான செயல்பாட்டிற்கான சான்றிதழாகவே நான் கருதுகிறேன்’ என்று முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோயின் சுயசரிதையைப் பற்றி குறிப்பிட்டு நீதிபதி குரேஷி பேசினார்.
முன்னாள் தலைமை நீதிபதி கோகோய் தலைமையிலான கொலிஜியம் திரிபுரா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நீதிபதி குரேஷியை நியமிப்பது என்ற தன்னுடைய ஆரம்பப் பரிந்துரையை மாற்றிக் கொண்டது. கொலிஜியம் எடுத்த அந்த முடிவு குறித்து கருத்து தெரிவித்த நீதிபதி குரேஷி ‘மத்திய அரசுக்குப் பிடிக்காத நீதித்துறை சார்ந்த தன்னுடைய கருத்துக்கள் குறித்த ‘நீதித்துறையின் கருத்து’ பற்றி ‘அதிகாரப்பூர்வமாக’ தனக்குத் தெரிவிக்கப்படவில்லை என்பதே தன்னைப் பொறுத்தவரை ‘மிகவும் முக்கியத்துவம்’ வாய்ந்ததாக இருந்தது’ என்று கூறினார்.
‘அகில்’ தொடங்கி ‘நீதிபதி குரேஷி’ வரையிலான தனது பயணம் குறித்து பேசிய போது இந்திராகாந்தியின் நெருக்கடி நிலை காலத்தின் போது பள்ளி மாணவனாக இருந்த தான் கண்ட சம்பவத்தை அவர் பின்வருமாறு விவரித்தார்:
‘குஜராத் உயர்நீதிமன்ற வளாகத்தில் ஏராளமானோர் கூடியிருந்தனர். காவல்துறையின் பலத்த பாதுகாப்பு அங்கே போடப்பட்டிருந்தது. காவல்துறையினர் அங்கிருந்த கூட்டத்தின் மீது தடியடி நடத்தி விரட்டியடித்து ஒருவரைக் கைது செய்து வேனில் ஏற்றிய போது அந்தப் பகுதியில் மிகுந்த பரபரப்பு காணப்பட்டது. இன்னும் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன் அந்த நிகழ்வுகளை மூச்சுத் திணறப் பார்த்துக் கொண்டிருந்தான். அந்த நிகழ்வு 1974ஆம் ஆண்டு நடைபெற்றது. அப்போது விலைவாசி உயர்வு, அரசாங்கத்தில் நடைபெறுகின்ற ஊழல் ஆகியவற்றிற்கு எதிராக நவநிர்மாண் இயக்கம் சார்பில் நடைபெற்ற மாணவர்களின் போராட்டம் உச்சக்கட்டத்தில் இருந்தது. செயல்பாட்டாளர்களுக்கு எதிராக உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் (மிசா) கீழ் தடுப்புக்காவல் உத்தரவுகளை நிறைவேற்றுவதன் மூலம் நிர்வாகம் பதிலடி கொடுத்தது. தங்களிடம் கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருந்தவர்களை அமைதிப்படுத்துவதற்கு தேசத்துரோகச் சட்டத்தைப் பயன்படுத்தலாம் என்பதை அன்றைய ஆட்சியாளர்கள் கண்டறியாமலே இருந்தனர்.
செயல்பாட்டாளர்கள் தலைமறைவாகினர். அவர்களில் ஒருவரான ஸ்ரீகிரிஷ்பாய் படேல் வெளியில் வந்து தடுப்புக்காவல் உத்தரவுகளை எதிர்த்து ஆட்கொணர்வு (ஹேபியஸ் கார்பஸ்) மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். விரைவிலேயே அவர் கைது செய்யப்பட்டார். அங்கிருந்து அகற்றப்படுவதற்கு முன்பாக காவல்துறையின் வேனுக்குள் இருந்தவறு சுருக்கமான உரை ஒன்றை அவர் நிகழ்த்தினார். அரசு இயந்திரத்தின் ஆதரவுடன் நடைபெறுகின்ற சர்வாதிகார ஆட்சியின் வலிமைக்கு சவால் விடுவதாக அவரது பேச்சு அமைந்திருந்தது. ஊழல் நிறைந்த அரசியல் வர்க்கத்தின் அட்டூழியங்களுக்கு அடிபணிய வேண்டாம் என்று மக்களைத் தூண்டுகின்ற வகையில் இருந்த அவரது வார்த்தைகள் இன்னும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. அவை மிகவும் சுவாரசியமான நாட்களாக இருந்தன. நேர்மையான தீர்ப்பிற்காக சமூகம் நடத்துகின்ற போராட்டத்தைப் பார்த்த அதே வேளையில் அந்த செயல்முறைகளுக்கு உதவுகின்ற வகையில் நீதிமன்றங்களிடம் இருந்த மகத்தான அதிகாரத்தையும் நான் கண்டேன். அந்த தருணமே சட்டத்தின் மீதான எனது ஆர்வத்தை தூண்டி விட்டது’
2010ஆம் ஆண்டு குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த போது, சொராபுதீன் போலி என்கவுன்டர் வழக்கில் அப்போதைய மாநில உள்துறை அமைச்சரும், பாஜக தலைவருமான அமித்ஷாவை சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட போது நீதிபதி குரேஷி முதன்முதலாக அனைவரது கவனத்திற்கும் வந்தார். பின்னர் லோக்ஆயுக்தா நியமன வழக்கில் நரேந்திர மோடி தலைமையிலான குஜராத் அரசுக்கு எதிராக அவர் தீர்ப்பளித்தார். 2002ஆம் ஆண்டு வகுப்புவாத கலவரத்தின் போது நடைபெற்ற நரோடா பாட்டியா படுகொலை தொடர்பான வழக்கில் குஜராத் முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானி செய்த மேல்முறையீட்டில் அவரைத் திரும்பப் பெற வேண்டும் என்று மாநில அரசு கோரியிருந்தது.
அரசுக்கு எதிராக நீதிபதி குரேஷி வழங்கிய பாதகமான தீர்ப்புகள் கறை எதுவுமற்ற அவரது நீதித்துறை வாழ்க்கை மீது அதிகம் பாதிப்புகளை ஏற்படுத்தின. 2018ஆம் ஆண்டில் குஜராத் உயர்நீதிமன்றத்தின் தற்காலிகத் தலைமை நீதிபதி பதவியை ஏற்கவிருந்த சமயத்தில் பம்பாய் உயர்நீதிமன்றத்தில் இருந்த அதைவிடக் குறைவான பதவிக்கு நீதிபதி குரேஷி மாற்றப்பட்டார். குஜராத் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் அந்த இடமாற்ற உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து 2018ஆம் ஆண்டு ஒருமனதாகத் தீர்மானம் ஒன்ற நிறைவேற்றியது என்று லைவ் லா இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
நீதிபதி குரேஷியை மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உயர்த்துவதற்கான பரிந்துரையை 2019 மே மாதம் கொலிஜியம் வழங்கிய போது, தன்னுடைய ஆட்சேபணையைத் தெரிவித்த ஒன்றிய அரசு கொலிஜியம் செய்திருந்த மற்ற மூன்று பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளிக்கத் தவறவில்லை. அரசின் அழுத்தத்திற்கு அடிபணிந்த கொலிஜியம் இறுதியில் குரேஷியை திரிபுரா உயர்நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதியாக அனுப்புவது என்று தன்னுடைய பரிந்துரையை மாற்றிக் கொண்டது.
பிரியாவிடை பேச்சு
‘இந்தியாவில் இதுவரை நாற்பத்தியெட்டு தலைமை நீதிபதிகள் இருந்துள்ளனர். ஆனால் குடிமக்களின் உரிமைகளை நிலைநிறுத்துவதற்கான தைரியம், தியாகம் குறித்து பேசுகின்ற வேளையில், நாம் எப்போதும் இந்தியாவின் தலைமை நீதிபதியாக இருந்திருக்க வேண்டிய ஒருவரையே நினைவுகூருகிறோம். ஜபல்பூர் மாவட்ட கூடுதல் நீதிபதி வழக்கில் தன்னுடைய தனித்த எதிர்ப்புக் குரலுக்காக நீதிபதி எச்.ஆர்.கன்னா எப்போதும் நினைவு கூரப்படுகிறார்’ என்று நீதிபதி குரேஷி கூறினார். இந்திராகாந்தி அரசாங்கத்தால் தலைமை நீதிபதியாகப் பதவி உயர்வு மறுக்கப்பட்ட நீதிபதி எச்.ஆர்.கன்னாவைப் பற்றியே அவர் குறிப்பிட்டுப் பேசினார்.
‘குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதுவே நீதிமன்றங்கள் இருப்பதற்கான ஒரே காரணமாகும். எந்தவொரு நேரடி அவமதிப்புகளைக் காட்டிலும், குடிமக்களின் ஜனநாயக விழுமியங்கள், உரிமைகள் மீது கள்ளத்தனமாக நடத்தப்படுகின்ற அத்துமீறல்களே நம்மைக் கவலையடையச் செய்ய வேண்டும்’ என்று அவர் கூறினார்.
மேலும் அவர் உயர்நீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரைகளை நிராகரித்து வருவதாக உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் போக்கு அதிகரித்து வருவது குறித்து உயர்நீதிமன்றங்களில் எழும் கவலைகள் குறித்தும் பேசினார். ‘உயர்நீதிமன்றங்களால் பரிந்துரைக்கப்படுகின்ற வழக்கறிஞர்கள் பட்டியல் உச்சநீதிமன்றத்தால் மோசமாக சீரமைக்கப்படுவதைப் பார்ப்பது ஆச்சரியம் அளிப்பதாக இருக்கிறது. உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் ஆகியவற்றிற்கு இடையே உள்ள கருத்து வேறுபாட்டிற்கான காரணம் எதுவாக இருந்தாலும் அது சரி செய்யப்பட வேண்டும். இல்லையேல் மிகச் சிறந்த வழக்கறிஞர்களை நீதிமன்ற அமர்வில் சேர வற்புறுத்துவது மிகவும் கடினமாகி விடும்’ என்று அன்றைய தினம் நீதிபதி குரேஷி ஆற்றிய உணர்ச்சிபூர்வமான பிரியாவிடை பேச்சு அவரது சட்டத்துறை சகாக்களின் பாராட்டைப் பெறுவதாக அமைந்திருந்தது.
‘அதில் எனக்கு ஏதாவது வருத்தம் உண்டா என்று கேட்டால் அவ்வாறு எதுவும் இல்லை என்றே கூறுவேன். நான் எடுத்த ஒவ்வொரு முடிவுகளும் என்னுடைய சட்டப்பூர்வ புரிதலின் அடிப்படையிலேயே அமைந்திருந்தன. நான் தவறு செய்திருக்கலாம். பல சந்தர்ப்பங்களில் நான் தவறிழைத்திருப்பதாக நிரூபித்திருக்கிறார்கள். ஆனால் ஒருமுறை கூட என்னிடமுள்ள சட்டப்பூர்வமான நம்பிக்கைக்கு மாறான முடிவுகளை நான் எடுத்ததே இல்லை. தீர்ப்புகள் ஏற்படுத்தப் போகின்ற பின்விளைவுகளின் அடிப்படையில் எந்தவொரு முடிவையும் எடுத்ததில்லை என்ற பெருமையுடன் நான் விடைபெறுகின்றேன். என்னுடைய தனிப்பட்ட முன்னேற்றத்திற்காக அவர்களிடம் நான் மண்டியிட்டிருக்க வேண்டும் என்ற நம்பிக்கை சிலரிடம் இருக்கிறது. ஆனால் முன்னேற்றம் என்று நீங்கள் எதைக் கருதுகிறீர்கள் என்பதைப் பொறுத்ததாகவே அது இருக்கிறது. நான் எங்கே சென்றாலும் வழக்கறிஞர்கள், சக ஊழியர்களிடமிருந்து எனக்குக் கிடைத்த ஆதரவு, அன்பு, பாசம் போன்றவையே கண்ணுக்குப் புலனாகின்ற எந்தவொரு முன்னேற்றத்தைக் காட்டிலும் சிறந்தவையாக உள்ளன. இதை வேறு எந்தவொரு முன்னேற்றத்திற்காகவும் நிச்சயம் நான் மாற்றிக் கொள்ளவே மாட்டேன். வேறு எதையும் பெறுவதற்காக இவற்றை நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்’ என்றார்.
குரேஷி மேலும் ‘நீங்கள் அனைவரும் என் மீது வைத்திருக்கும் பாசம் மற்றும் முன்னேற்றம் என்று சொல்லப்படுவதற்கு இடையே ஒன்றை நான் தேர்வு செய்து கொள்ள வேண்டும் என்ற நிலைமை வந்தால் மிகவும் மகிழ்ச்சியுடன் உங்கள் பாசத்தையே நான் தேர்ந்தெடுத்துக் கொள்வேன்… வாழ்க்கை பின்னோக்கிச் சுழன்று பழையவற்றை மீண்டும் பார்க்க அனுமதிக்கும் என்றால் – அதே குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் எனக்கு அதே நீதிபதி பதவி மீண்டும் வழங்கப்படுமானால், மீண்டும் மீண்டும் அதையே நான் ஏற்றுக்கொள்வேன்’ என்று கூறினார்.
நீதிபதி குரேஷியின் புகழ்பெற்ற நீதித்துறை வாழ்க்கை குஜராத் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக அவர் நியமிக்கப்பட்ட 2004ஆம் ஆண்டில் தொடங்கியது. பின்னர் இறுதியாக 2021 அக்டோபரில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்படுவதற்கு முன்பாக கிட்டத்தட்ட இருபதாண்டுகள் தன்னுடைய நீதித்துறை வாழ்க்கையில் அவர் பல்வேறு பொறுப்புகளில் இருந்தார்.
https://thewire.in/law/i-leave-with-my-pride-intact-rajasthan-chief-justice-kureshi-who-ruled-against-modi-and-shah
நன்றி: வயர் இணைய இதழ்
தமிழில்: தா.சந்திரகுரு
கூட்டாட்சித் தத்துவத்திற்கும், விடுதலைப் போராட்டத்தின் விழுமியங்களுக்கும் அவமதிப்பு – வீரமணி
ஜனவரி 26 அன்று குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்பதற்காக சில மாநில அரசுகள் அனுப்பிய அலங்கார ஊர்திகளை ஒன்றிய பாஜக ஆட்சியாளர்கள் நிராகரித்திருக்கும் விதம், அவர்களின் மனோநிலையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது.
கேரளம், மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில அரசாங்கங்களின் அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப்பட்டிருப்பது கூட்டாட்சித் தத்துவத்திற்கும், விடுதலைப் போராட்டத்தின் சமூக-கலாச்சாரப் பாரம்பர்யங்களுக்குமான ஆழமான அவமதிப்பையே காட்டுகிறது.
இந்த ஆண்டு அணிவகுப்பு சுதந்திர தினத்தின் 75ஆவது ஆண்டைக் குறிப்பதால், அதற்கேற்ற விதத்தில் மேற்கு வங்க அரசு நேதாஜி சுபாஷ் சந்திர போசையும், விடுதலைப் போராட்டத்தில் இந்திய தேசிய ராணுவத்தின் பங்களிப்பையும் சித்தரிக்கும் விதத்தில் அலங்கார ஊர்தியை அனுப்பியிருந்தது. இது நிராகரிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு, மாநிலத்தின் முக்கிய விடுதலைப் போராட்ட வீரர்களாக விளங்கிய வ.உ.சிதம்பரனார், விடுதலைப் போராட்டத்தின் தேசியக் கவி, சுப்பிரமணிய பாரதியார் மற்றும் சிலரை அலங்கார ஊர்தியில் சித்தரித்திருந்தது. இதனையும் ஒன்றிய அரசு ஏற்கவில்லை.
கேரளாவின் அலங்கார ஊர்தியில் மாபெரும் சாதி ஒழிப்புப் போராளியும், மறுமலர்ச்சி இயக்க வீரருமான ஸ்ரீ நாராயண குருவின் சிலை வைக்கப்பட்டிருந்தது. இதனையும் ஒன்றிய அரசு நிராகரித்திருப்பது மிகவும் அதிர்ச்சியளிப்பதாகும். அலங்கார ஊர்திகளை அனுமதித்திடும் வல்லுநர் குழுவானது, ஸ்ரீ நாராயண குருவின் சிலைக்குப் பதிலாக ஆதி சங்கராச்சாரியார் சிலை வைக்கப்பட வேண்டும் என்று விரும்பியதாகக் கூறப்படுகிறது. ஆயினும் கேரள அரசு ஸ்ரீ நாராயண குருவின் சிலையை அப்புறப்படுத்த மறுத்ததன் காரணமாக, கேரள அரசின் அலங்கார ஊர்தியும் நிராகரிக்கப்பட்டது.
20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சமூக சீர்திருத்தவாதியாக இருந்து, விடுதலை இயக்கத்திற்கும், மறுமலர்ச்சி இயக்கத்திற்கும் பங்களிப்பினைச் செய்தவரைவிட, எட்டாம் நூற்றாண்டில் பிராமண தர்மத்தை மீட்டமைத்திட்ட ஒரு சாமியார், எப்படிப் பொருத்தமாக இருக்க முடியும்? இதனை இந்துத்துவா சித்தாந்தத்தின் அடிப்படையில் இயங்கிடும் ஒன்றிய ஆட்சியாளர்கள்தான் விளக்கிட முடியும். கேரளாவின் அலங்கார ஊர்தியில் ஆதி சங்கராச்சார்யாவின் சிலையை வைத்திட வேண்டும் என்று ஒன்றிய அரசின் வல்லுநர் குழு வற்புறுத்தியதன்மூலம் அது ஸ்ரீ நாராயண குருவை மட்டும் அவமதித்திடவில்லை, கேரளாவின் ஒட்டுமொத்த முற்போக்கு சமூக-கலாச்சாரப் பாரம்பர்யத்திற்கும் ஏற்படுத்தப்பட்ட அவமதிப்பாகும்.
தங்கள் மாநில அலங்கார ஊர்திகளை விலக்கிவைத்திருப்பதனை எதிர்த்துக் கடிதம் எழுதிய மேற்கு வங்க மற்றும் தமிழ்நாடு அரசு முதல்வர்களின் கடிதங்களுக்குப் பதில் அளித்துள்ள ஒன்றிய ராணுவ அமைச்சர், ராஜ்நாத் சிங், அவ்வாறு விலக்கியிருப்பதை நியாயப்படுத்தி இருக்கிறார். அவரின் கூற்றுப்படி, அலங்கார ஊர்திகளை அனுமதித்திடும் வல்லுநர் குழுவில், கலை, கலாச்சாரம், இசை, கட்டிடக்கலை முதலானவற்றில் புகழ்பெற்ற நபர்கள் அங்கம் வகிக்கிறார்கள் என்பதாகும். இந்த 75ஆம் ஆண்டு சுதந்திரதினத்தைக் கொண்டாடும் குடியரசு தின அணி வகுப்பிற்கு மிகவும் பொருத்தமான நபராக ஆதி சங்கராச்சார்யாவைக் கருதிய வல்லுநர் யார் என்று தெரிந்துகொள்ளவே ஒருவர் விரும்புவார்.
ராஜ்நாத் சிங், மேற்கு வங்க முதல்வருக்கு எழுதியிருக்கும் பதிலில், மத்தியப் பொதுப் பணித்துறையும் ஓர் அலங்கார ஊர்தியைப் பெற்றிருப்பதாகவும் அதில் சுபாஷ் சந்திர போசுக்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில் அந்த அலங்கார ஊர்தி அமைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இவர் கூறும் கூற்றுப்படி, ஒரு மாநிலஅரசின் அலங்கார ஊர்தியைவிட ஒன்றிய அரசின் ஒரு துறை அளித்துள்ள அலங்கார ஊர்தி முக்கியத்துவம் பெற்றுவிடுகிறது என்பதாகும்.
மோடி அரசாங்கத்தின் ஒருதலைப்பட்சமான மற்றும் குறுங்குழுவாதக் கண்ணோட்டத்தின் காரணமாக நடைமுறையில் தென்னிந்திய மாநிலங்கள் அனைத்தின் அலங்கார ஊர்திகளும் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கவில்லை. இது, அரசாங்கத்தின் கூட்டாட்சித்தத்துவத்திற்கு எதிரான அணுகுமுறையையே காட்டுகிறது. ஜனவரி 26 இந்தியக் குடியரசு உருவானதையும், இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியம் என வரையறுத்திடும் அரசமைப்புச்சட்டம் பிரகடனம் செய்யப்பட்டதையும் குறிக்கும் தினமாகும். மோடி அரசாங்கம், இவ்வாறு அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படை நெறிமுறைகளையே மீறிக் கொண்டிருக்கிறது.
(ஜனவரி 19, 2022)
நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி
2021-ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் பால சாகித்திய புரஸ்கார் விருது பெற கவிஞர் மு.முருகேஷ் தேர்வு
புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணத்தில் பிறந்த கவிஞர் மு.முருகேஷ், தற்போது வந்தவாசியில் வசித்து வருகிறார். கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து படைப்பிலக்கியத் தளத்தில் தீவிரமாக இயங்கி வருகிறார்.
இவர் 10 புதுக்கவிதை, 9 ஹைக்கூ கவிதை, 18 குழந்தை இலக்கியம், 9 கட்டுரைகள், ஒரு சிறுகதை நூல் உட்பட 47 நூல்களை எழுதியுள்ளார். மேலும், 3 புதுக்கவிதை, 5 ஹைக்கூ கவிதை, 5 சிறுவர் இலக்கிய நூல்களையும் தொகுத்துள்ளார்.
மனித நேயத்தையும், வாழ்வின் மீதான தீராத காதலையும் முன்நிறுத்தும் படைப்புகளை எழுதிவரும் மு.முருகேஷ், தமிழில் ஹைக்கூ கவிதைகளை ஒரு இயக்கம் போல் பரவலாக கொண்டுசென்றதிலும், குழந்தைகளுக்கான படைப்புகளை எழுதுவதிலும் 30 ஆண்டுகளாக கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்.
மு.முருகேஷ் எழுதிய 16 சிறார் கதைகள் கொண்ட தொகுப்பு, 2017-ஆம் ஆண்டு அகநி வெளியீடாக ‘அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’ எனும் நூலாக வெளிவந்தது. இன்றைய தலைமுறை குழந்தைகளின் பார்வையில் மறுவாசிப்பு செய்து எழுதப்பட்ட இந்த நூல், 2021-ஆம் ஆண்டிற்கான பால சாகித்திய புரஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகையுடன் கூடிய செப்புப்பட்டயமும் வழங்கப்படவுள்ளது.
கவிஞர் மு.முருகேஷ் தனது படைப்புகளுக்காக 20-க்கும் மேற்பட்ட பரிசுகளையும் விருதுகளையும் வென்றவர். இலங்கை, சிங்கப்பூர், குவைத், மலேசியா ஆகிய நாடுகளில் நடைபெற்ற இலக்கிய நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார். இவரது படைப்புகள் இந்தி, மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம், ஜப்பான் உள்ளிட்ட மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. பல்கலைக்கழக அளவிலும், கல்லூரிகளிலும் பாடத்திட்டத்தில் கவிதைகள் இடம் பெற்றுள்ளன. இவரது ஹைக்கூ மற்றும் புதுக்கவிதைகளை 10-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் முனைவர் மற்றும் இளமுனைவர் பட்ட ஆய்வுசெய்து, பட்டம் பெற்றுள்ளனர். இவரது ஹைக்கூ கவிதைகள் எல்.பி.சாமி மொழிபெயர்ப்பில் மலையாளத்தில் ’நிலா முத்தம்’ எனும் நூலாகவும், தற்போது பால சாகித்திய புரஸ்கார் விருதுபெற்ற நூல் பள்ளி மாணவி வி.சைதன்யா மொழிபெயர்ப்பில் ஆங்கிலத்தில் ’The first story told by a daughter to her mother’ எனும் நூலாகவும் வெளிவந்துள்ளன.
2009-இல் பெங்களூருவில் நடைபெற்ற 9-ஆவது உலக ஹைக்கூ கிளப் மாநாட்டில் பங்கேற்று, உலக அளவிலான ஹைக்கூ கவிதைப் போட்டியில் பரிசு வென்றதும், தமிழக அரசின் சமச்சீர்ப் பாடத்திட்ட நூல் தயாரிப்புக் குழுவில் இடம்பெற்றதும், ஹைக்கூ செயல்பாடுகளுக்காக குவைத் நாட்டில் ‘குறுங்கவிச் செல்வன்’ விருதினைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கன.
பால சாகித்திய புரஸ்கார் விருது கிடைத்திருப்பது குறித்து கவிஞர் மு.முருகேஷ் கூறுகையில், “தற்போது தமிழில் ஏற்பட்டுள்ள சிறார் இலக்கிய மறுமலர்ச்சிக்கு புதிய உத்வேகத்தை தரும் வகையில் இந்த விருது அறிவிப்பு உள்ளது. இன்றைய குழந்தைகளே படைப்பாளர்களாக மாறி எழுதி வருகிறார்கள். இந்த விருதினை இலக்கியத்தின் புதிய தளிர்களாகச் சுடர்முகம் காட்டி எழும் இளைய சிறார் படைப்பாளிக்கு சமர்ப்பிக்கிறேன்” என்றார்.
விருதாளர் செல்பேசி : 94443 60421
பெண்களின் திருமண வயது 21 – ஒன்றிய அரசின் போலி நாடகம் – பிருந்தா காரத் | தமிழில்: தா.சந்திரகுரு
பெண்களின் திருமண வயதை இருபத்தியொன்று என்று உயர்த்துகின்ற மசோதாவை ஒன்றிய அரசு கொண்டு வரவிருக்கின்றது. பாஜகவிற்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருப்பதால் அந்த மசோதா சட்டமாக மாறும் என்றாலும்கூட, மிகவும் ஆழமான பரிசீலனைகள் தேவைப்படுகின்ற பல முக்கியமான சிக்கல்கள் அதில் உள்ளன. மசோதாவை நிறைவேற்றுவதற்குப் பதிலாக அதை தொடர்புடைய நிலைக்குழுவிற்குப் பரிந்துரைப்பதே அரசாங்கம் மேற்கொள்ளும் சிறந்த வழியாக இருக்கும்.
ஒரு பெண் தன்னுடைய பதினெட்டாவது வயதில் வயதிற்கு வந்தவள் என்று கருதப்படுகிறாள். குற்றவியல் சட்டங்கள் உட்பட வயதுக்கு வந்த குடிமக்களுக்குப் பொருந்துகின்ற அனைத்துச் சட்டங்களும் ஒரு பெண்ணின் பதினெட்டாவது வயதில் அவளுக்குப் பொருந்துகின்றன. பதினெட்டு வயதிற்குப் பிறகு தான் செய்யும் செயல்களுக்கு அவளே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். வயதுக்கு வந்தோருக்கான சிறைச்சாலையில் சிறைத்தண்டனை விதிக்கப்படும் அளவிற்கான வயது ஒரு பெண்ணுக்கு 18-21 வயதிற்கு இடையில் வந்து விடுகின்ற போதிலும், முன்மொழியப்படவிருக்கின்ற மசோதாவின்படி, அந்த வயதில் திருமணம் செய்து கொள்வதற்கான விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியாத அளவிற்கு அந்தப் பெண் இளமையானவளாகவே இருப்பாள்.
உத்தேசிக்கப்பட்டுள்ள சட்டம் பெண்களுக்கு அளிக்கப்படும் அதிகாரமாக இல்லாமல், அவர்களைக் குழந்தைகளாக்குவதாகவே உள்ளது. முதிர்வயது என்பது பிரித்துச் சொல்ல முடியாதது. திருமணம் தொடர்பான முடிவுகளில் வயதுக்கு வந்த பெண்ணின் விருப்பத்தை மறுப்பது தவறாகும். பெரும்பாலும் இந்த மசோதா சாதி மற்றும் சமூக தடைகளை உடைத்தெறிந்து இளம் வயது தம்பதிகள் தாங்களாகத் தேர்வு செய்து கொள்கின்ற திருமணங்களைச் சட்டவிரோதமாக்கி விடும். இந்த மசோதா வயதுக்கு வந்த பெண் ஒருவள் அனுபவித்து வருகின்ற தனிப்பட்ட விருப்பம் குறித்த விஷயங்களில் இன்றைக்கு இருந்து வருகின்ற சட்டத்தின் கீழ் அவளுக்கிருக்கும் சுதந்திரம் குறித்ததாக நீதித்துறை வழங்கியுள்ள தீர்ப்புகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள கொள்கைக்கு எதிரானதாகவே இருக்கும்.
மேலும், இந்தியாவில் உள்ள இளம் பெண்கள் தங்கள் வாழ்வு குறித்த முடிவுகளில் முன்பிருந்ததைக் காட்டிலும் அதிக சுதந்திரத்துடனான மாற்றத்தை இப்போது கொண்டு வந்திருக்கின்றனர். அவர்களிடையே இளம் வயது திருமணம் குறித்து அதிக கேள்விகளும், எதிர்ப்புகளும் எழுந்துள்ளன. பெற்றோர்கள், சமூகம் தருகின்ற அழுத்தங்களுக்கு எதிராக இளம் பருவத்தினர் கிளர்ந்தெழுந்துள்ள பல நிகழ்வுகள் தலைப்புச் செய்திகளாகியுள்ளன.
திருமணத்திற்கான சராசரி வயது 22.2 ஆக (MOSPI 2019) இந்தியாவில் அதிகரித்திருப்பதற்கு இளம் பெண்களிடம் இதுபோன்று உருவாகியுள்ள எண்ணமும் ஒரு காரணமாக உள்ளது. உண்மையில் தன்னார்வத்துடன் திருமணத்திற்கான வயது கணிசமாக அதிகரித்து வந்திருக்கும் வேளையில், அவர்களுக்கு தண்டனை தரும் வகையிலான நடவடிக்கைகளை ஏன் இப்போது மேற்கொள்ள வேண்டும்? 18-21 வயதுக்குட்பட்ட பெண்களின் திருமணத்தைக் குற்றமாக்குவதைக் காட்டிலும், தாங்களாக தேர்வுகளைச் செய்து கொள்ளும் வகையிலான சூழலை உருவாக்கித் தருகின்ற உத்தரவாதமான வேலை வாய்ப்புகள், கல்விக்கான அணுகல் போன்றவற்றை இளம் பெண்களுக்கு வழங்குவதே சிறந்த நடவடிக்கையாக இருக்கும். பெண்கள் கருவுறும் விகிதம் ஏற்கனவே குறைந்து வரும் நிலையில், திருமண வயதை உயர்த்தும் இதுபோன்ற நடவடிக்கை மக்கள்தொகைக் கட்டுப்பாட்டிற்காக பாஜக தலைமையிலான சில அரசாங்கங்களால் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் கொடூரமான சட்டங்களுக்குப் பின்னால் உள்ள பகுத்தறிவற்ற தன்மையைப் போன்றதாகவே இருக்கும்.
திருமண வயதை உயர்த்துவதில் என்ன தவறு உள்ளது என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். ஆனால் உண்மை நிலை என்ன? பதினெட்டு வயதுக்குட்பட்ட குழந்தை திருமணங்கள் கணிசமான அளவில் இந்தியாவில் இன்னும் நடைபெற்று வருகின்ற நிலையில், அதற்கான காரணங்களைக் கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்வதே அரசின் முன்னுரிமையாக இருக்க வேண்டும். கடந்த ஐந்தாண்டுகளில் குழந்தை திருமணங்களின் எண்ணிக்கை 27 சதவீதத்தில் இருந்து 23 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. ஆயினும் இந்தக் குறைப்பு நகர்ப்புறங்களிலேயே மிக அதிகமாக உள்ளது என்றும், கிராமப்புற இந்தியாவில் 20-24 வயதில் உள்ள நான்கில் ஒரு பெண்ணுக்கும் அதிகமானவர்கள் பதினெட்டு வயதிற்குள்ளாகவே திருமணம் செய்து வைக்கப்படுகிறார்கள் என்றும் தேசிய குடும்ப சுகாதார ஆய்வு கூறுகிறது. அதற்கான காரணங்கள் நன்கு அறியப்பட்டவையாகவே இருக்கின்றன.
இப்போதைய தொற்றுநோய் பொருளாதார நெருக்கடிக்கும், குழந்தைகள் பாதிக்கப்படும் அளவிற்கு பேரழிவை ஏற்படுத்தியிருக்கும் சமூக விளைவுகளுக்கும் இடையே உள்ள நேரடித் தொடர்புகளை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது. கடந்த ஆண்டு மார்ச் முதல் மே மாதம் வரை பொதுமுடக்க காலத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் உதவியுடன் இயங்கி வந்த குழந்தைகள் உதவி எண்ணுக்கு குழந்தை திருமணம் குறித்து 5,200க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்திருந்தன.
பெரும்பாலும் ஏழ்மையில் இருப்பவர்களின் பெண் குழந்தைகளுக்கே பதினெட்டு வயதுக்கு முன்பாகத் திருமணம் செய்து வைக்கப்படுகிறது. வறுமை, அதிகரித்து வருகின்ற வரதட்சணைக் கோரிக்கைகள், பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை குறித்த அச்சம் போன்றவற்றைச் சமாளிக்கும் தீர்வாகவே அந்த திருமணங்கள் கருதப்படுகின்றன. ஒருவரின் செல்வத்தை தானமாக (பரய தான்) கொடுப்பது, பெண்களை அடுத்தவருக்கு கைப்பிடித்துத் தர வேண்டிய புனிதக் கடமை பெண்களின் பாதுகாவலர்களுக்கு இருக்கிறது என்பது போன்ற ஆணாதிக்கக் கருத்துக்களை ஊக்குவிக்கின்ற வகையிலே குழந்தை திருமணங்களுக்கான கலாச்சார அங்கீகாரமும் தொடர்ந்து இருந்து வருகிறது.
அத்தகைய கலாச்சாரங்களுடன் தற்போதைய ஆட்சிக்காலம் மிகவும் நெருக்கமாக இருந்து வருகிறது. பெண் குழந்தைகளின் கல்விக்கான அணுகலை அதிக அளவிலே உறுதி செய்திருக்கின்ற கேரளா போன்ற மாநிலங்கள் குழந்தை திருமணங்கள் விடுக்கின்ற சவாலை வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளன. சட்டப்பூர்வ திருமண வயதை பெண்களுக்கு பதினைந்து வயதிலிருந்தும், ஆண்களுக்கு பதினெட்டு வயதிலிருந்தும் முறையே பதினெட்டு மற்றும் இருபத்தியொன்று என்று 1978ஆம் ஆண்டில் இந்தியா மாற்றியது. எந்தவொரு தனிப்பட்ட சட்டமும் குழந்தை திருமணங்களைத் தடைசெய்யும் சட்டங்களை மீற முடியாது என்று நீதிமன்றங்கள் பலமுறை தீர்ப்பு வழங்கி வந்துள்ளதால், இந்தச் சட்டங்கள் அனைத்து சமூகங்களுக்கும் பொருந்துபவையாகவே இருந்து வருகின்றன. இந்த நாற்பத்தி மூன்று ஆண்டுகளாக பதினெட்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் திருமணங்களை ஒழிக்கத் தவறியுள்ள நிலை நீடித்து வருகின்ற நிலைமையில், திருமணத்திற்கான பெண்களின் தகுதி வயதை இருபத்தியோரு ஆண்டுகளாக உயர்த்துவது என்பது மக்கள்தொகையில் பெரும் பகுதியினர் – முக்கியமாக ஏழைகள் – சட்டரீதியான தண்டனைகளை எதிர்கொள்வதற்கே வழிவகுத்துக் கொடுக்கும்.
மிகக் குறைந்த வயதிலேயே தாயாகின்ற இளம் பெண்களின் உடல்நலம் மீதான அக்கறையே இந்த நடவடிக்கையின் பின்னணியில் இருப்பதாகவும், திருமண வயதை இருபத்தியொன்று என்று உயர்த்துவதன் மூலம் குழந்தை பிறப்பைத் தடுத்து இலம் பெண்களின் உடல்நலத்தைப் பாதுகாக்க முடியும் என்றும் அரசாங்கம் கூறுகிறது. இது முற்றிலும் போலித்தனமான வாதம். தாய் மற்றும் சிசு இறப்பு, ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பிரச்சனைகள் பொதுக்கொள்கையுடன் தொடர்புடையவை. பொதுசுகாதாரத்திற்கான நிதியைக் குறைத்துக் கொண்டே வருகின்ற அரசாங்கம் மறுபுறத்தில் சுகாதாரத் துறையை தனியார்மயமாக்கிக் கொண்டிருக்கிறது. உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்து வருகின்ற நிலையில் உணவுப் பாதுகாப்பு முறையை விரிவுபடுத்தவும் அரசாங்கம் மறுக்கிறது. ஆனால் அதே நேரத்தில் பெண்களின் உடல்நலம் மீதான தன்னுடைய அக்கறையை அது இவ்வாறு வெளிப்படுத்திக் கொள்ளவும் செய்கிறது. சுகாதாரம் மற்றும் கல்விக்கான செலவினங்களை அதிகரிப்பதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ள முன்வராத அரசாங்கம், இனப்பெருக்க உடல்நலம் என்ற பெயரில் வயதுக்கு வந்த பெண்களின் உரிமைகளைக் கட்டுப்படுத்தவே விரும்புகிறது.
பெண்களின் திருமண வயதை இருபத்தியொன்றாக உயர்த்துவதன் மூலம், ஆண்கள் மற்றும் பெண்களின் திருமண வயது சமன் செய்யப்படுவது பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான ஒரு படியாகும் என்ற அரசின் கூற்றை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்-பெண் சமத்துவம் குறித்து உண்மையிலேயே இந்த அரசு ஆர்வமுடன் இருக்குமென்றால், ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமணத்திற்கான தகுதியான வயதை பதினெட்டு என்று வைத்திருக்க வேண்டும் என்று 2008ஆம் ஆண்டில் அளிக்கப்பட்ட சட்ட ஆணையத்தின் பரிந்துரையை ஏன் அது ஏற்றுக் கொள்ளக் கூடாது?
தனிப்பட்ட உறவுகளில் பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் உண்மையிலேயே இந்த அரசாங்கம் அக்கறை கொண்டிருக்குமானால், ‘ஆணவக் குற்றங்களுக்கு’ எதிரான தனிச் சட்டம், திருமண உறவில் ஏற்படுகின்ற பலாத்காரத்தை குற்றமாக அங்கீகரிக்கும் சட்டம் என்பது போன்ற மிக முக்கியமான, அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் குடும்ப வன்முறைகளுக்கு எதிரான சட்டங்களை நீர்த்துப் போகச் செய்வதற்கான தன்னுடைய முயற்சிகளுக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்கலாம்.
உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான நாடுகளில், வயதுக்கு வருகின்ற வயதிற்கும், திருமணத்திற்கான தகுதிக்கான வயதிற்கும் இடையில் வேறுபாடுகள் எதுவும் இருக்கவில்லை. வயதுக்கு வரும் வயதை பதினெட்டு என்று பரிந்துரைத்து 1989ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தில் இந்தியா கையொப்பமிட்டுள்ளது. உலகளாவிய ஒருமித்த கருத்துக்கு எதிராகச் செல்வதற்கு இந்த அரசாங்கம் கூறுகின்ற காரணங்கள் எதுவும் உண்மையில் நம்பத்தகுந்தவையாக இல்லை. அவை எதிர்விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவையாகவே இருக்கின்றன.
https://www.ndtv.com/opinion/centres-hypocrisy-in-raising-marrying-age-for-women-to-21-2660378
நன்றி: என்டிடிவி
தமிழில்: தா.சந்திரகுரு