கரக்பூர் ஐ.ஐ.டி வெளியிட்டிருக்கும் நாட்காட்டி குறித்த சில கருத்துக்கள் – வி.முருகன்
சமீபத்தில் கரக்பூர் ஐ.ஐ.டி நிறுவனத்தின் சார்பில் 2022 ஆம் ஆண்டுக்கான நாட்காட்டியை வெளியிட்டுள்ளது. அது வெறுமென நாட்காட்டியாக வரவில்லை. அது பல கருத்துக்களுடன் கூடிய நாட்காட்டி. அதை வெளியிடப்பட்டதின் முக்கிய நோக்கம் என்ன வென்று அவர்களே கூறுவது: (i) ஆரியர்கள் என்பவர்கள் வெளியில் இருந்து இந்தியாவிற்கு வந்தவர்கள் அல்ல. அவர்கள் இங்கேயே காலம்காலமாக இருந்த மூத்த குடியினர். (ii) சிந்து சம வெளி நாகரீகத்திற்கு முன்னரே இந்தியாவில் ஆரியர்கள் இருந்துள்ளார்கள். எனவே சிந்து சமவெளி நாகரிகமும் ஆரிய நாகரிகமே ஆகும். இதற்கு மாறாக, ஆரியர்களைப் பற்றி ஆரியப் படையெடுப்பு என்ற தவறான கருத்து ஒன்று பொதுவெளியில் உள்ளது. இதன் படி, மத்திய ஆசியாவில் இருந்த ஆரியர்கள் இந்தியாவிற்கு படையெடுத்து வந்து சிந்து சமவெளி நாகரிகத்தை வீழ்த்தி ஏற்கனவே இங்கிருந்த பூர்வகுடியினரான திராவிடர்களை வென்றனர். ஆரியப் படையெடுப்பு என்ற கருத்தை ஆதாரங்களுடன் முறியடிப்பதே இந்த நாட்காட்டியின் பிராதன நோக்கம் என்று அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
இது தொடர்பாக எனக்கு தோன்றிய சில கருத்துக்களை இங்கு நான் பகிர்ந்துள்ளேன். எனக்கு வரலாற்றிலோ அல்லது ஆரியர்களின் தோற்றம் குறித்தோ அல்லது மரபியிலிலோ அதிக பரிச்சயம் இல்லை. இணையதளத்தில் நான் படித்து அறிந்ததின் அடிப்படையில் இதை எழுதியுள்ளேன்.
இந்த நாட்காட்டியில் சில கருத்துக்கள் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. பல சொற்றொடர்கள் அர்த்தமற்ற முறையில் எழுதப்பட்டுள்ளன. பல jargonகள் அள்ளித்தெளிக்கப்பட்டுள்ளன. அவற்றை விட்டு விட்டு அவர்கள் நமக்குப் புரியும்படி எழுதப்பட்ட வாதங்களை மற்றும் நாம் காண்போம்.
ஒரு வாதம் Gnosticism என்ற கருத்தின் அடிப்படையில் கூறப்படும் வாதம். இது நாம் எப்படி அறிவைப் பெறுவது என்பதைப் பற்றிய கருத்து. Gnosticism என்பது உள்ளுணர்வின் மூலம் அறிவைப் பெறமுடியும் என்று சொல்வது ஆகும். நமது ரிஷிகள் இப்படித்தான் கடவுளின் அருளால் ஞானத்தைப் பெற்றார்கள் என்றும் அதனாலேயே அது மிகவும் உயர்ந்தது என்றும் இங்கு கூறப்படுகிறது. இது இந்தியாவிற்கே உரிய முறை. உலகில் வேறு எங்கும் இந்த முறை இல்லை. எனவே ஆரியர்கள் வெளிநாடுகளில் இருந்து வந்திருக்க முடியாது.
முதலில் இது தவறான விஷயம். இந்தக் கருத்து அனைத்து நாகரிகங்களிலும் உள்ளன. அனைத்து மதங்களிலும் உள்ளன. இந்தியாவிற்கு மட்டும் உரிய கருத்தல்ல. அதனால் இந்த வாதம் செல்லக்கூடியதல்ல. இந்த வாதத்தில் ஆரியப் படையெடுப்பை மறுப்பதற்கான ஆதாரம் எங்கே உள்ளது?
மற்றொரு வாதம் Palingenesis என்ற கருத்தின் அடிப்படையில் ஆனது. ஒரு மாற்றமும் இல்லாமல் அப்படியே மீண்டும் மீண்டும் உருவாவது என்பதுPalingenesis என்பதின் பொருளாகும். அது இந்தப் பிரபஞ்சத்தைப் பற்றியதாக இருக்கலாம். அல்லது மறுபிறப்பைப் பற்றியதாக இருக்கலாம். இந்த நாட்காட்டி முதலில் மறுபிறப்பைப் பற்றிதான் கூறுகிறது. இதுவும் இந்தியாவிற்கே உரித்தானது. ஐரோப்பிய மதங்களில் இது இல்லை. எனவே,இது ஆரியப்படையெடுப்பை மறுப்பதற்கான ஆதாரமாகும்.
இந்த வாதத்திலும் தவறான தகவல்கள் உள்ளன.Palingenesis என்பது பழைய நாகரிகங்கள் அனைத்திலும் உள்ளன. கிறிஸ்தவ மதத்திலும் இஸ்லாமிய மதத்திலும் மறுபிறவி என்ற கருத்து இல்லை என்பது சரிதான்.
இந்த வாதத்தில் ஆரியப் படையெடுப்பை மறுக்கும் என்ன ஆதாரம் உள்ளது என்று எனக்குத் தெரிய வில்லை ஒரு வேளை, உங்களுக்குத் தெரிகிறதா என்று பாருங்கள்.
இந்த நாட்காட்டியில் கொடுக்கப்படும் அனைத்து வாதங்களும் ஒரே அமைப்பைக் கொண்டுள்ளன.
Major Premise: ஒரு குறிப்பிட்ட பண்பு இந்தியாவில் உள்ளது.
Minor Premise: இது இந்தியாவில் மட்டும் உள்ளது. ஐரோப்பிய சிந்தனைகளில் இல்லை.
Conclusion: எனவே, ஆரியப் படையெடுப்புக்கு ஆதாரம் இல்லை.
இது தர்க்க இயலில் எப்போதும் கொடுக்கப் படும் கீழ்க்கொண்ட உதாரணத்தை போன்றது.
Major Premise: அனைத்து மனிதர்களுக்கும் மரணம் உண்டு
Minor Premise: சாக்ரட்டீஸ் ஒரு மனிதர்.
Conclusion: எனவே சாக்ரட்டீஸிற்கு மரணம் உண்டு.
இந்த முடிவு சரியான முடிவு. சாதரணமாக இந்த வகை வாதத்தில் Major Premise என்பது Universal ஆக இருக்கும். Minor Premise என்பது Particular ஆக இருக்கும். அப்போது முடிவில் ஒரு பிரச்சனையும் இல்லை. யதார்த்த உலகில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு இந்த வாத அமைப்பை உபயோகிப்பது அவ்வுளவு எளிமையானது அல்ல. குறைந்த பட்சம் இரண்டு Premiseகளும் சரியாக இருக்க வேண்டும். அப்படி இல்லையானால் அந்த வாதத்தில் தவறான முடிவுகளுக்கு நாம் செல்ல அதிக வாய்ப்பு உண்டு. இந்த நாட்காட்டியில் வரும் வாதங்கள் அந்த அமைப்பில் இல்லை. இரண்டாவது premise தவறானது.அதனால் இந்த முடிவுகளுக்கு ஒரு மதிப்பும் இல்லை என்பது என் கணிப்பு.
இந்த நாட்காட்டியில் யாராலும் புரிந்து கொள்ள முடியாத வகையில் எழுதப் பட்ட பல கூற்றுகள் உள்ளன. இது பெரிய தத்துவங்கள் கூறுவது போன்ற பொய்தோற்றத்தை உருவாக்கும் யுக்தி. பின் நவீனத்துவத்தில் எழுதப்பெற்ற புத்தகங்கள் இதற்கு நல்ல உதாரணங்கள் ஆகும். ஆலன் சோக்கால் என்பவரும் ஜீன் பிரிக்மாண்ட்(Alan Sokal and Jean Bricmont) என்பவரும் இணைந்து எழுதிய Fashionable Nonsense: Postmodern Intellectuals’ Abuse of Science என்ற புத்தகத்தைப் பார்க்கவும்.
ஆரியர்கள் மத்திய ஆசியாவில் இருந்து இந்தியாவிற்கு வந்தவர்கள் என்பதை மறுப்பதற்கான ஒரு ஆதாரமாக ஒரு மேற்கோளை கொடுத்துள்ளார்கள்.அந்த மேற்கோளில் உள்ளவை விவேகானந்தர் கூறியவை. ஒரு துறவி கூறுவதைக் காட்டும் மேற்கோள்கள் மூலம் ஒரு கருத்துக்கு ஆதாரம் தருவது அறிவியலில் உள்ள நடைமுறையல்ல.
இந்த நாட்காட்டியில் பயன்படுத்தப் படும் முறைகளை அறிவியல் உலகம் நீண்ட காலத்திற்கு முன்னரே நிராகரித்து விட்டது.உதாரணத்திற்கு கலிலீயோ எழுதிய புகழ் பெற்ற Letter to Grand Duchess Christiana என்ற கட்டுரையில் (https://web.stanford.edu/~jsabol/certainty/readings/Galileo-LetterDuchessChristina.pdf)இந்தக் கருத்துக்களை விவாதித்துள்ளார். இது ஹீலியோசென்ட்ரிக்கோட்பாட்டை ஆதரித்தற்காக அவர் மீது மதவிரோதக் குற்றச்சாட்டு எழுந்த போது எழுதிய கடிதம். அறிவியல் பிரச்சனைகளில் மத நூல்களையோ அல்லது புனித துறவிகள் கூறுபவைகளையோ ஆதாரங்களாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று வாதிடுகிறார். ஐம்புலன்கள் மூலம் பெரும் (நாம் அறிந்த அறிவியல் முறை) முடிவுகளைத்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வாதிடுகிறார். ஞானக்கண் மூலம் பெறும் அறிவை (Revealed Knowledge) அறிவியல் பிரச்சனைகளில் கொண்டுவரக் கூடாது என்று வாதிடுகிறார். இந்தக் கருத்துக்கள் அவர் தனது கடவுள் நம்பிக்கைக்கு எதிரானவை அல்ல என்று வாதிடுகிறார். இந்தக் கருத்துக்கள்தான் அறிவியலுக்குரிய இன்றைய நடைமுறையில் உள்ளன.
கரக்பூர் ஐ.ஐ.டி. என்ற புகழ்பெற்ற அறிவியல் மற்றும் தொழி்ல்நுட்ப நிறுவனத்தின் பெயரால் நாட்காட்டியை வெளியிட்டு இந்த நாட்காட்டியில் கூறப்பட்டுள்ளவை அறிவியல் பூர்வமானவை என்ற தோற்றம் கொடுக்கப் படுகிறது என்ற காரணத்தால் இவ்வுளவு விரிவாகப் பேச வேண்டியுள்ளது. அவர்களது வாதங்கள் அறிவியல் பூர்வமானவை அல்ல.
வரலாறும் அதன் ஆய்வுமுறைகளும்.
இந்தியாவில் ஆரியர்களின்தோற்றம் பற்றிய ஆய்வு என்பது மிகவும் சிக்கலானது. இதில் பல கருத்துக்கள் உள்ளன. இயற்கை அறிவியலில்(Natural Sciences) ஆராய்வதை விட வரலாறில் ஆராய்வது(தரமான ஆய்வு) கடினமானது. இயற்கை அறிவியலில் இருப்பதைப் போல் வரலாறிலும் அத்துறைக்கே உரிய பல ஆய்வு முறைகள் உள்ளன. இயற்கை அறிவியலில் பயன்படுத்தப்படும் ஆய்வுமுறைகளில் பல புதிய ஆய்வுமுறைகள் வந்து கொண்டே இருப்பது போல் வரலாறிலும் பல புதிய ஆய்வுமுறைகள் வந்தவண்ணம் உள்ளன. இயற்கை அறிவியலிலும் வரலாறு ஆராய்ச்சியிலும் இது தொடர்ந்து நடந்து கொண்டே உள்ளன. ஆரியர்கள் பற்றிய ஆய்வில் நீண்ட காலமாக மொழி இயலும்(Linguistics) அகழ்வாரய்ச்சிகளும்தான் (archaeology) பயன்படுத்தப்பட்டன. இந்த ஆய்வுமுறைகளில் அதிக அளவு நிச்சயமின்மைகள் (uncertainties) உள்ளன.
சமீப காலங்களில் இந்தக் கேள்வியைப் பொருத்த வரையில் மரபணுவியல் பெரிய அளவில் பயன் படுத்தப்படுகிறது. மரபணு முறையைப் பயன்படுத்துவதால் கிடைக்கும் முடிவில் அதிகநம்பிக்கை உள்ளது. முதலாவதாக, மரபணுவியல் என்பது இயற்கை அறிவியலில் நல்ல நம்பிக்கைதன்மையோடு செயல்படும் துறை. இரண்டவாதாக ஆரியர்களைப் பற்றிய ஆய்விலும் தரவுகள் சேர்க்கப்படும் முறை, அவற்றை பகுத்தாயும் முறை, விளக்கும் முறை (interpretation) ஆகிய அனைத்தும் இயற்கை அறிவியலுக்கே உரிய வலுவான துல்லியத்துடன்(scientific rigour) செய்யப்படுகின்றன. இந்த முறையிலும் நிச்சயமின்மைகள் உண்டு. ஆனால் ஆராய்ச்சிகள் வளர வளர இங்கு நிச்சயமின்மைகள் குறையும். இது எல்லா அறிவியலுக்குமான பொதுப்பண்பு ஆகும். வரலாறு சம்பந்தமான அனைத்துக் கேள்விகளுக்கும் மரபணு இயல் மூலம் பதில் பெற முடியாது என்பதை நாம் உணர வேண்டும். ஆனாலும் வரலாறு பற்றிய ஆய்வில் மரபணு இயல் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆரியர்களைப் பற்றிய மரபணுக்கள் பயன்படுத்துவதைப் பற்றி விமரிசனங்கள் உண்டு. புகழ்பெற்ற வரலாற்று இயல் நிபுணர் ரோமிலா தாப்பர் 2014 இல் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். (https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC4413229/). இந்தக் கேள்விக்கு மரபணு முறை எந்த அளவிற்குப் பயன் தரும் என்று சற்று ஐயப்படுகிறார். ஆனால் இதை,தான் நிராகரிக்க வில்லை என்று தெளிவாகக் கூறியுள்ளார். சமீபத்திய முடிவுகள் பற்றி என்ன கூறுகிறார் என்று தெரிய வில்லை.
காந்திநகர் ஐ.ஐ.டியை சார்ந்த மைக்கேல் டானினோ என்ற அறிஞர் கடுமையாக இதை விமரிசிக்கிறார். அவை மிகவும் நுணுக்கமானவை. மற்ற ஆராய்ச்சியாளர்கள்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும். ஆனால் ஆங்கில ஹிந்து நாளிதலில் 2017ல் அவர் எழுதியிருக்கும் கட்டுரையில் RSS கருத்துக்களை ஒட்டிதான் பேசுவதாகத் தெரிகிறது
(https://www.thehindu.com/opinion/op-ed/the-problematics-of-genetics-and-the-aryan-issue/article19165320.ece) “இந்தியாவின் கடந்த கால வரலாறு என்று ஏதேனும் ஒன்றிருந்தால், அது அனைத்தும் இந்தியா அடுத்தடுத்து வெல்லப்பட்ட நிகழ்வுகளின் வரலாறுதான்” என்று மார்க்ஸ் கூறியதை டோனி ஜோசஃப் எதிரொலிக்கிறார் என்று ஒரு இடத்தில் அவர் எழுதுகிறார். டோனி ஜோசஃப் கூறியதை மார்க்ஸிஸம் என்று முத்திரையிட்டு அவரை மறுக்கிறார். மார்க்ஸை ஏன் இங்கு இழுக்க வேண்டும்? இது இந்தக் கட்டுரை அறிவியல் பூர்வமானதா என்று சந்தேகிக்க செய்கிறது. இங்கிலாந்தை சார்ந்த நான்கு அறிஞர்கள்டானினோவின் ஆராய்சிக் கட்டுரை ஒன்றை விமரிசிக்கும் போது அவரது கருத்துக்கள் அறிவியல் பார்வையற்றவை என்று கூறுகிறார்கள்.(டானினோ ஆங்கில ஹிந்து நாளிதழில் எழுதியக் கட்டுரையில் டோனி ஜோசஃபையும் இவர்களையும் கடுமையாக விமரிசிக்கிறார்)
ஆரியர்கள் பற்றி பல கருத்துகள்
இந்தியாவில் ஆரியர்கள் பற்றி பல கேள்விகள் உள்ளன. ஆரியர்கள் என்பவர்கள் யார்? இந்தியாவிற்கு வெளியே உள்ள உலகின் பிற பகுதிகளில் இருந்து இங்கு வந்தவர்களா அல்லது இந்தியாவிலேயே நீண்ட காலமாக இருந்த மூத்தகுடியினரா? சிந்து சமவெளி சமுதாயத்தில் இருந்த மக்கள் யார்? திராவிடர்கள் யார்? வெளியில் வந்த ஆரியர்கள் சிந்து சமவெளி நாகரிகத்தை வீழ்த்தி ஏற்கனவே இங்கிருந்த மக்களை வென்றார்களா?
இந்தக் கேள்விகளுக்கான விடையாக நான்கு விதமான கருத்துக்கள் உள்ளன.
1. ஆரியப்படையெடுப்பு:
மத்திய ஆசியாவில் இருந்த ஆரியர்கள்படையெடுத்து சிந்து சமெவெளி நாகரிகத்தையும் இங்கிருந்த மற்ற பழங்குடியினையும் வென்றனர். ஆங்கிலேயர்களும் மற்ற ஐரோப்பியர்களும் 19ம் நூற்றாண்டில் இந்தக் கருத்தை உருவாக்கினார்கள். இன்று பெரும்பான்மையான வரலாற்றறிஞர்கள் இதை விட்டு விட்டார்கள்.
2. ஆரியர்கள் புலம்பெயர்ந்தவர்கள்:
சிந்து சமவெளியின் வீழ்ச்சிக்குப் பின் மத்திய ஆசியாவில் இருந்து ஆரியர்கள் புலம்பெயர்ந்து வந்தார்கள். இந்தக் கருத்துதான் இன்று பெரும்பான்மையான வரலாற்றறிஞர்களிடம் நிலவும் கருத்து. இது வட இந்தியர்கள் வட இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு புலம்பெயர்வது போன்றதாகும். இது நீண்டகாலமாக நடைபெற்ற நிகழ்வு
3. பண்பாட்டு பரவல்:
ஆரியர்கள் என்று யாரும் பெருமளவில் இங்கு வரவில்லை. ஆனால் அவர்களுடைய பண்பாடு இங்கு பரவியது. இந்தக் கருத்தை வெகுசிலரே நம்புகின்றனர். இது சமீப காலங்களில் ஆங்கிலப் புத்தாண்டை ஆரவாரத்துடன் வெடி வெடித்து வானவேடிக்கையுடன் கொண்டாடுவது போன்றது. இது மேற்கத்திய நாடுகளுக்குரிய செயல். ஆனால் மேற்கத்தியர்கள் இங்கு வராமல் அந்த விழா மட்டும் நமக்கு வந்துள்ளது.
4. ஆரியர்கள் முற்றிலும் இந்தியர்களே:
ஆரியர்கள் சிந்து சமவெளி நாகரிகத்திற்கு முன்னரே இந்தியாவில் இருந்தவர்கள். சிந்து சமவெளி நாகரிகம் ஆரிய நாகரிகமே. திராவிடர்கள் எனப்படும் கருத்தே தவறானது. ஒரு காலத்தில் சில ஆரியர்கள் இந்தியாவில் இருந்து மத்திய ஆசியாவிற்கு சென்றுள்ளார்கள்.
இது ஆர்.எஸ்.எஸ் கருத்து. உலகிலேயே இந்தக் கருத்தை ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்கள் தவிர யாரும் இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்தக் கருத்தில் ஆர்.எஸ்.எஸிற்கு அரசியல் ஆதாயங்கள் உண்டு.
ஆர்.எஸ்.எஸைப் பொருத்தவரை ஆரியப் படையெடுப்பு என்ற கருத்தும் ஆரியர்கள் மத்திய ஆசியாவிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் என்ற கருத்தும் ஒன்றுதான். இந்த கரக்பூர் ஐ.ஐ.டி. நாட்காட்டியில் இந்த கருத்துக்களிடையே உள்ள வேறுபாட்டைப் பற்றி ஒரு சொல் கூட இல்லை.
இது புரிந்து கொள்ளக் கூடியதுதான். இரண்டு கருத்துக்களும் ஒரே அரசியல் விளவுக்கு கொண்டு செல்லலாம். ஆரியர்கள் மத்திய ஆசியாவிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் என்ற கருத்தின் அடிப்படையில் நமது கற்பனையை ஓடவிட்டால் நமக்கு அது புரிந்து விடும். ஆயிரம் ஆண்டுகளாக நடந்த இந்த நிகழ்வில் முதலில் வந்த ஆரியர்களுக்கும் இங்கிருந்தவர்களுக்கும் ஒரு பிரச்சனையும் இல்லாமல் இருந்திருக்கக் கூடும். காலப்போக்கில் அவர்களிடையே உறவும், பிரிவும், பல விதமான கூட்டணிகளும், மோதலும் சமரசங்களும் தொடர்ந்து நடைபெற்று இறுதியில் ஒரு பிரிவினர் மற்றவர்கள்மீது ஆட்சிபுரியும் நிலை வந்து விடும். இப்படி நடந்திருக்கக் கூடும் என்ற கருத்து இந்துத்துவ அரசியலுக்கு பெரும் சவாலாகிவிடும்.
ஆதலால்தான் ஆரியர்கள் முற்றிலும் இந்தியர்களே என்றகருத்தை கரக்ப்பூர் ஐ.ஐ.டி. நாட்காட்டி வலியுறுத்துகிறது. ஆரியர்கள் வெளியில் இருந்து இந்தியாவிற்கு வந்தார்கள் என்று சொல்வது மேற்கத்திய நாடுகளின் சதி என்று ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்கள் சொல்கிறார்கள்.
ஆதிகாலத்தில் மக்கள் உலகத்தின் எந்தெந்தப் பகுதிகளில் இருந்து எங்கெங்கு சென்றார்கள் என்பதைப் பற்றி உலகம் முழுவதும் பெரிய அளவில் எண்ணற்ற ஆராய்ச்சியாளர்கள் ஆராய்கிறார்கள். அதன் ஒரு சிறிய பகுதிதான் இந்தியாவிற்கு ஆரியர்கள் எப்படி வந்திருக்கக் கூடும் என்ற ஆராய்ச்சி. மத்திய ஆசியாவில் இருந்து ஆரியர்கள் புலம் பெயர்ந்தவர்கள் என்ற கருத்து மென்மேலும் வலுவடைந்து கொண்டே உள்ளது. உலகின் அனைத்து ஆராய்ச்சியாளர்களும் இந்தக் கருத்தில் எதற்கு சதி செய்ய வேண்டும்என்று தெரியவில்லை. இந்தக் கருத்து மூலம் மேல் நாடுகளுக்கு அரசியல் ரீதியாகவோ அல்லது பொருளாதார ரீதியாகவோ என்ன ஆதாயங்கள் கிடைக்கும் என்று தெரிய வில்லை.
மரபணு ஆய்வு மூலம் பெறப்படும் முடிவுகள்
டேவிட் ரேய்ச் (David Reich) என்ற பேராசிரியர் Harward medical School என்ற பிரபல மருத்துவ துறையில் மரபணு துறையில் ஆராய்ச்சியாளராக உள்ளார். அவர்தான் மரபணுவியலைப் பயன்படுத்தி இந்தியாவிற்கு ஆரியர்கள் வருகை பற்றிய ஆய்வுக்குழுவின் தலைவர். இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் NATURE என்ற புகழ்பெற்ற அறிவியல் ஆய்விதழ் ஒவ்வொரு வருடமும் தலைசிறந்த 10 அறிவியல் வல்லுனர்கள் என்ற பட்டியலை வெளியிடுகிறது. அப்படி 2015இல் வெளியிடப்பட்ட பட்டியலில் டேவிட் ரேய்ச் இடம் பெற்றுள்ளார். அவரது அறிவியல் சாதனைகளை புரிந்து கொள்ள இது போதுமானது.
இந்தியாவில் ஆரியர்களின் வருகை குறித்து டேவிட் ரேய்ச் அவர்கள் நீண்ட காலமாக ஆராய்ச்சி செய்து வருகிறார். இந்தியாவில் ஆரியர்களின் வருகை குறித்து 2019 ஆண்டு அவரும் அவருடைய குழுவினரும் வெளியிட்ட ஆராய்ச்சி கட்டுரைகள் மிகவும் முக்கியமானவை. அவரும் மற்றும் 117 அறிவியல் அறிஞர்களும் இணைந்து அமெரிக்காவில் இருந்து வெளிவரும் SCIENCE என்ற அறிவியல் இதழில் (https://www.science.org/doi/10.1126/science.aat7487) ஒரு கட்டுரையை எழுதியுள்ளார்கள். (https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC6822619/pdf/nihms-1053677.pdf) அவரும் மற்றும் 27 அறிஞர்களும் இணைந்து CELL என்ற அறிவியல் இதழில் மற்றொரு கட்டுரையை எழுதியுள்ளார்கள்.
(https://www.cell.com/cell/pdf/S0092-8674(19)30967-5.pdf)
இந்த இரண்டு அறிவியல் இதழ்களும் Peer-Reviewed அறிவியல் ஆய்வு இதழ்கள் ஆகும். ஒரு அறிவியல்ஆராய்ச்சியின் முடிவுகள் ஒரு Peer-Reviewed அறிவியல் ஆய்வு இதழில் பிரசுரிக்கப்பட்டால் அந்த முடிவுகளின் அறிவியல் பூர்வமான நம்பகத்தன்மைக்கு அறிவியல் உலகின்(Scientific Community) அங்கீகாரம் கிடைத்துள்ளது என்று சொல்லலாம். இதன் பொருள் இதை மறுக்க முடியாது என்பதல்ல. ஆனால் இந்த முடிவை மறுப்பதற்கு அதிக முயற்சிகள் தேவை என்பது இதன் பொருள்.
இந்த ஆய்வுக் குழுவில் இருப்பவர்கள் அறிவியலில் நல்ல சாதனை படைத்தவர்கள். இதில் பல துறையை சேர்ந்தவர்கள் உள்ளனர். இந்தக் குழுவில் 7 இந்தியர்கள் உள்ளனர். இந்தியாவில் உள்ள புகழ் பெற்ற Center for Cellular and Molecular Biology என்ற ஆய்வு நிறுவனத்தில் பணி புரியும் கே.தங்கராஜ் என்பவர் இந்தக் குழுவின் co-dirctor ஆவார்.
இந்தக் கட்டுரைகள்மிகவும் நுணுக்கமானவை. எனக்கு அவை சுலபமாக இல்லை.பல பத்திக்கைகளில் இந்த ஆய்வுகளின் முடிவுகள் பற்றிய சுருக்கமான விளக்கங்கள் வந்துள்ளன. இதில் அவரவரது சொந்தக் கண்ணோட்டங்களும் கலந்திருக்கும். இது தவிர்க்க முடியாது. இவற்றில் என்னைக் கவர்ந்தது THE DIPLOMAT என்ற ஆங்கிலப் பத்திக்கையில் அகிலேஷ் பில்லாலமாரி (Akilesh Pillalamari)(இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்கர்) எழுதிய கட்டுரைகள்.அவற்றின் சுருக்கங்களின்(சுருக்கங்களின் சுருக்கம்!) இங்கே தந்துள்ளேன். (https://thediplomat.com/2019/01/unraveled-where-indians-come-from-part-1/), (https://thediplomat.com/2019/01/where-indians-come-from-part-2-dravidians-and-aryans/)
ஆதி காலத்தில் இருந்து இது வரை நான்கு குழுக்கள் வெளியில் இருந்து இந்தியாவிற்கு வந்துள்ளன.
(i) 50,000 ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவில் இந்தியாவிற்கு வந்துள்ளார்கள். இந்தியா முழுவதும் இவர்கள்தான் நீண்ட காலமாக இருந்தவர்கள். இவர்கள் தொல் பழங்குடியினர் (aborigines) என்று குறிக்கப் படுகிறார்கள்.
(ii)கி.மு 7000-5000 என்ற காலங்களில் ஈரானில் இருந்து விவசாயிகள் புலம் பெயர்ந்த வந்தார்கள். இவர்கள் பெரும்பாலும் சிந்து சமவெளியில் இருந்தார்கள். ஓரளவிற்கு இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கும் சென்றார்கள். இவர்களுக்கும் தொல் பழங்குடியினருக்கும் கலப்பு ஏற்பட்டது.
(iii) தென்கிழக்கு ஆசியாவிலிருந்தும் சைனாவிலிருந்தும் ஒரு குழு இந்தியாவிற்கு கி.மு 2000 வாக்கில் புலம் பெயர்ந்தார்கள். இவர்கள் அதிக அளவில் வரவில்லை. ஆனால் இவர்கள் கொணர்ந்த அரிசி இந்தியா முழுவதும் பரவியது.
(iv) மத்திய ஆசியாவில் இருந்து இந்தோ- ஆரியர்கள் (இந்தோ-ஐரோப்பியர்களின் ஒரு உட்பிரிவு) கி.மு. 2000 வாக்கில் இந்தியாவிற்கு புலம் பெயர்ந்தார்கள்.
இதில் சிந்து சமவெளியில் வாழ்ந்தவர்கள் ஈரானிய விவசாயிகள் மற்றும் பழங்குடியினர் ஆகியவர்களின் கலப்புகள்(mixture) ஆவார்கள்.
திராவிடர்கள் என்பவர்கள் சிந்து சமவெளியில் இருந்து மற்ற இந்தியப் பகுதிகளுக்கு புலம் பெயர்ந்தவர்களும் பழங்குடியினரும் கலந்தவர்கள்.
ஆரியர்கள் என்பவர்கள் ஈரானிய விவசாயிகளும் இந்தோ ஆரியர்களும் கலந்து உருவானவர்கள். திராவிடர்களுக்கும் ஆரியர்களுக்கும் கலப்பு ஏற்பட்டது. அனைவருக்குள்ளும் கலப்பு ஏற்பட்டது. மரபணுவியல் ஆரியர்களை மத்திய ஆசியாவில் வந்து புலம் பெயர்ந்தவர்கள் என்ற கருத்தை ஆதரிக்கின்றது. மரபணுவியலில் இருந்து கிடைக்கப்பட்ட கருத்துக்களின் படி கரக்பூர் ஐ.ஐ.டி நாட்காட்டியில் கூறப்பட்டுள்ள கருத்துக்களுக்கு ஆதாரம் இல்லை. ஆரியர்களைப் பற்றிய ஆர்.எஸ்.எஸ் கருத்துக்களும் அதில் அறிவியல் அறிஞர்களின் பங்கும்.
கரக்பூர் ஐ.ஐ.டி யில் Centre of Excellence for Indian Knowledge systems என்று ஒரு புதிய மையம் 2021 டிசம்பரில் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. அதனுடைய நோக்கங்களும் அது ஆராயப் போகும் விஷயங்களும் இந்த நாட்காட்டியில் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த மையத்திற்கான ஆலோசனைக் குழுவில் பல அறிவியல் அறிஞர்கள் உள்ளனர். அவர்கள் அவரவர் துறையில் நல்ல வல்லுனர்கள். அறிவியல் ஆய்வு முறையில் நன்கு பயிற்சி பெற்றவர்கள். அறிவியலில் நன்கு ஆராய்ச்சி புரிந்தவர்கள் பகுத்தறிவிற்கும் அறிவியலுக்கும் புறம்பான கருத்துக்களை எப்படி அவர்கள் ஆதரிக்க முடியும்? இது எப்படி நடக்கிறது?
இந்தக் கேள்வியின் பின் அறிவியல் அறிஞர்களைப் பற்றி ஒரு தவறான பிம்பம் பொதுமக்கள் மனதில் உள்ளது. அறிவியல் செய்வதற்கு objectivity, rational analysis, free from prejudices and biases போன்ற பண்புகள் அவசியமானவை. எனவே அறிவியல் அறிஞர்கள் இயற்கையாகவே எல்லா விஷயங்களிலும் இந்தப் பண்புகளுடன் இருப்பார்கள் என்று நாம் நம்புகிறோம். இது தவறான எண்ணம். அறிவியல் அறிஞர்களுக்கு அவர்களுக்குரிய அறிவியல் ஆராய்ச்சிக்களத்தில் இந்தப் பண்புகள் இருக்கும். Prejudices, biases ஆகியவற்றை மிகவும் சிரமப்பட்டு தவிர்ப்பதற்கு பல முயற்சிகள் செய்வார்கள்.(சில அறிவியல்களில் Prejudices, biases கலந்திருக்கும். இது வேறு விஷயம்). ஆனால் அனைத்து விஷயங்களிலும் இதே பண்புகளுடனும் செயல்படுவார்கள் என்று எதிர்பார்ப்பது தவறு. அவர்களுடைய specialisationஐத் தாண்டி வெளியே வந்து விட்டால் அவர்களிடம் சராசரி மனிதர்களுக்குரிய அத்தனை குறைபாடுகளும் இருக்கும்.பகுத்தறிவுக்கு புறம்பான நம்பிக்கைகள், மத வெறி,இன வெறி,போன்ற அனைத்து குறைபாடுகளையும் காணலாம்.
இது புதிதல்ல. தொன்றுதொட்டு நீண்டகாலமாக இருக்கும் விஷயம். உதாரணத்திற்கு ஷாக்லியையும் வெய்ன்பெர்க்கையும் எடுத்துக் கொள்ளலாம். வில்லியம் ஷாக்லி (William Shockley)இயற்பியலில் 1956 இல் நோபல் பரிசு பெற்றவர். இயற்பியலில் நல்ல அறிஞர். அவர் மனித இனத்தில் “பின் நோக்கும் பரிணாமம்(retrogressive evolution)” நடப்பதாகக் கூறினார். அறிவாற்றல்(Intellectual capacity) குறைவாக உள்ள கருப்பர்களின் மக்கள்தொகையின் வளர்ச்சி என்பது அறிவாற்றல் அதிகமாக உள்ள வெள்ளையர்களின் மக்கள்தொகையின் வளர்ச்சியை விட அதிகமாக உள்ளது என்று கூறினார். இது மனித இனத்தயே அறிவாற்றல் ரீதியாக பின்நோக்கி கொண்டு சென்று விடும். எனவே,மரபணுரீதியாக குறைபாடுள்ள அவர்களுக்கு நலத்திட்டத்தில் அரசு செலவிடுவதை விட அவர்கள் கருத்தடை செய்துகொள்வதற்கான ஊக்கத்தொகையில் செலவிட வேண்டும் என்று கூறினார். இந்தக் கருத்துக்களை கூறுவதற்கு உயிரியலையும் மரபணுவியலையும் அவர் பயன் படுத்தினார். உயிரியல் வல்லுனர்கள் இந்தக் கருத்தை நிராகரித்தனர்.ஒரு அறிவியலை தெரிந்து வைத்திருப்பது வேறு. அதில் நிபுணத்துவம் பெற்றிருப்பது வேறு. ஷாக்லி இயல்பியலில்தான் நிபுணத்தவம் பெற்றவர்.
சமீபத்தில் இறந்த வெய்ன்பெர்க்(Weinberg) மற்றொரு உதாரணம். அவரும் இயற்பியலில் நோபல் பரிசு பெற்றவர். இயற்பியலில் மிகப்பெரிய ஆளுமையப் பெற்றவர். கடவுள் நம்பிக்கையைம் மதங்களையும் தீவிரமாக விமரிசத்தவர்.அறிவியலின் வரலாற்றில் அதிக புலமை வாய்ந்தவர். அவர் ஒரு யூதர் ஆவார். அவர் யூதர்கள்-இஸ்லாமியர்கள் பிரச்சனைகள் சம்பந்தமாக கூறிய பல வாதங்கள் இந்து-முஸ்லிம் பிரச்சனையில் இந்துத்வா கூறும் வாதங்களாக இருக்கும்.
ஒரு எச்சரிக்கையுடன் இதை நாம் பார்க்க வேண்டும். அறிவியல் அறிஞர்களை இழிவுபடுத்துவது என் நோக்கமல்ல. அறிவியல் அறிஞர்கள் இல்லாமல் ஒரு சமுதாயம் வாழ முடியாது. அறிவியலையும் அறிவியல் அறிஞர்களையும் நாம் நம்ப வேண்டும். கொரோனாவை ஆராயும் அறிவியல் வல்லுனர்கள் கொரோனாவைப் பற்றி கூறுபவற்றை நாம் நம்ப வேண்டும். அதுதான் சரியானது. மற்ற விஷயங்களில் அவர்கள் சொல்லும் கருத்துக்களை நாம் கவனத்துடன் பரிசீலிக்க வேண்டும்.
ஏன் கரக்புர் ஐ.ஐ.டி.?
ஆரியர்கள் பற்றிய பிரச்சனைக்கும் கரக்பூர் ஐ.ஐ.டிக்கும் என்ன சம்பந்தம்? ஆரியர்கள் இந்தியாவிலே தோன்றியவர்கள் என்ற கருத்துக்கு நம்பகத்தன்மை(credibility) முற்றிலும் இல்லாத காரணத்தல் அது எடுபடாது என்று ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு நன்கு தெரியும். கரக்பூர் ஐ.ஐ.டி பெரும் மதிப்புக்கு உரிய ஒரு கல்வி நிறுவனம். இது, 70 வருடங்களுக்கு மேல் உலக அளவில் மிகுந்த தரத்துடன் செயல்பட்ட கரக்பூர் ஐ.ஐ.டியின் நம்பகத்தன்மையை வைத்து ஆரியர்கள் இந்தியாவிலே தோன்றியவர்கள் என்ற கருத்துக்கு நம்பகத்தன்மை பெற எடுத்த முயற்சி. இது அறிவியலை வைத்தே அறிவியலுக்கு புறம்பாக போவது என்பதாகும்.
இப்படி நடப்பது புதிதல்ல. ஏற்கனவே அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இப்படி பல முறைகள் நடந்துள்ளன. இப்போதும் இது நடைபெறுகிறது. அமெரிக்காவில் புகையிலை தொழில் நிறுவனங்கள்(Tobacco Industries) செய்ததுதான் சிறந்த உதாரணம். 1930களில் இருந்து புகைபிடிப்பதற்கும் புற்றுநோய்க்கும் தொடர்பு உள்ளது என்று மருத்துவ ஆராய்ச்சியில் காண ஆரம்பித்தார்கள். சிகரட் விற்பனையில் பெரும் அளவில் லாபம் சம்பாதித்துக் கொண்டிருந்த புகையிலை தொழில் நிறுவனங்களுக்கு இந்த கண்டுபிடிப்பு பிடிக்கவில்லை. முறையான அறிவியல் (mainstream science) மீது புகையிலை தொழில் நிறுவனங்கள் ஒரு போரே தொடுத்தன என்று சொல்லலாம்.
முறையான அறிவியலுக்கு எதிராக பல வியூகங்களில் புகையிலை தொழில் நிறுவனங்கள் செயல்பட்டன. அதில் ஒரு வியூகம் நன்கு புகழ் பெற்ற அறிவியல் அறிஞர்களை வாங்கி விடுவது. ஆர்.எஸ்.எஸ். அதே வியூகத்தை இங்கு செயல் படுத்துகிறது.
ஆர்.எஸ்.எஸின் வியூகங்களுக்கும் புகையிலை தொழில் நிறுவனங்களின் வியூகங்களுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன.புகையிலை தொழில் நிறுவனங்கள் முதலில் பிடித்த அறிவியல் அறிஞர்கள் இயற்பியலில் நல்ல ஆராய்ச்சி செய்து பெயர் பெற்றவர்கள். இவர்களுக்கு புற்று நோய் ஆராய்ச்சியில் நிபுணத்துவம் கிடையாது. இது பிரபஞ்சத்தை பற்றி ஆராய்வதில் அனுபவம் பெற்றஅண்டவியல் (Cosmology) நிபுணர்கள் கொரோனாவிற்கான மருத்துவ சிகிச்சைகளை விமரிசிப்பது போன்றது. யார் வேண்டுமானாலும் எதைப் பற்றியும் கருத்து தெரிவிக்கலாம். ஆனால் அண்டவியல் நிபுணருக்கும்கொரோனாவில் ஆராய்ச்சி செய்தவருக்கும் இடையில் கொரோனாவிற்கான சிகிச்சை பற்றி முரண்பாடு வந்தால் கொரோனாவில் ஆராய்ச்சி செய்த அறிஞரை நம்புவதுதான் விவேகம். அதை விட்டு அண்டவியல் நிபுணரை கொரோனாவிஷயத்தில் நீங்கள் நம்பினால் உங்களுக்கு எப்படி உதவ முடியும்?இந்த நாட்காட்டியை உருவாக்கிய ஜாய் சென் (Joy Sen) வரலாற்றியலில்(History Discipline) முறைப்படி ஆராய்ச்சி அனுபவம் பெற்றவர் அல்ல.