தாய்ப்பால் எனும் ஜீவநதி பாகம் – ΙΙ : தொடர் 14 – டாக்டர் இடங்கர் பாவலன்
தாய்ப்பால் எனும் ஜீவநதி ΙΙ
பாடம் – 11
சிசேரியன் செய்து கொண்ட தாய்மார்களுக்காக…
அன்புக்குரிய தாய்மார்களே! இப்போது நாம் பிரசவ அறையின் முதலாம் வகுப்பிலிருந்து தேர்வாகி இரண்டாம் வகுப்பறையாகிய வார்டுக்கு வந்துவிட்டு எத்தனையோ தாய்ப்பால் பால பாடங்களைப் படித்துவிட்டோம். ஆனால் சிசேரியன் செய்து கொண்டவர்களுக்கு முதலாம் வகுப்பறையில் படிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்காமலே போய்விட்டது. அறுவை அரங்கின் அவசரநிலைச் சூழலில் மார்பில் போடுவது பற்றிய குழப்பமான போக்கு நிகழும் போதே அங்கு பிறந்தவுடன் தொப்புள்கொடி துண்டிப்பதற்கு இடைப்பட்ட முதல் தாய்ப்பாலூட்டுவதே கேள்விக்குறியாகிவிடுகிறது. ஆனாலும் படிப்பில் படுசுட்டியான நம் பிள்ளைகளை ஒரு வகுப்பு புரமோசன் செய்து பள்ளியில் சேர்ப்பதைப் போல உங்களையும் பிள்ளையும் சேர்த்து நேரடியாகவே இரண்டாம் வகுப்பில் சேர்த்துவிடுவோம், சரியா?
சிசேரியன் செய்து கொண்ட தாய்மார்களெல்லாம் கூடுதல் ஆர்வத்துடனும் கவனத்துடனும் வகுப்பில் படிக்க வேண்டியிருக்கிறது. மேலும் அவர்கள் தாய்ப்பால் புகட்டுவதைப் பற்றி தீவிரமாக கற்றுக் கொள்ளும் ஆர்வத்தோடு இருக்க வேண்டியதும் அவசியமாகிறது. சிசேரியன் செய்யப்பட்ட அடிவயிற்றின் வலி, படுக்கையிலிருந்து எழுந்து பால் கொடுக்க முடியாத அசௌகரியம், பால் புகட்டும் போது வயிற்றில் எட்டி உதைக்கிற பிள்ளைகள், அறுவை சிகிச்சை செய்த மயக்கம், சீம்பால் புகட்டியிருக்க வேண்டிய துவக்க காலத்தின் தாமதம், அவசரப்பிரிவில் அனுமதிக்கப்படுகிற அம்மாவுடன் அடிக்கடி பாலருந்த தங்க வைக்கப்படாத பச்சிளம் குழந்தைகளின் சூழலென அத்தனை வேகத்தடைகளையும் தாண்டித்தான் ஒரு அம்மாவும் தடகள வீராங்கனையைப் போல பிள்ளைக்குத் தாய்ப்பால் ஊட்ட வேண்டியிருக்கிறது.
ஆனாலும் நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம் தாய்மார்களே! சிசேரிரியன் செய்தவர்களுக்கென்றே இருக்கிற தாய்ப்பாலூட்டும் முறைகளைத் தனியே கற்றுத் தேர்ந்து நம் பிள்ளையை கூடிய சீக்கிரத்திலேயே அரவணைத்துக் கொள்ள முடியும். ஆரம்பத்தில் பிள்ளையைத் தாங்கி பிடித்துக் கொள்ள முடியாத, அடிவயிற்றில் தையலிட்ட இடத்தில் பிள்ளைகள் உதைத்துவிடாத பிடிமானத்தில் அவர்களுக்குப் பாலூட்டுவதற்கு உடனிருப்பவர்களின் உதவி தேவையாயிருக்கும். அவர்கள் தான் நமக்குப் பதிலாக பிள்ளையைக் கையில் தூக்கிக் கொண்டு வந்து நம் மார்பருகே வைத்து பாலருந்த வைக்க வேண்டியிருக்கும். இப்படி அடிக்கடி அழுகிற பிள்ளைக்காக இரண்டு மணி நேரத்திற்கொருமுறை எழுந்து போய் பிள்ளையைத் தூக்கி பசியாற்ற வேண்டியிருக்கிறதே என்று உடனிருப்பவர்கள் அசௌகரியப்பட்டுவிடக் கூடாது என்பதும் இங்கே மிக மிக முக்கியமானது. ஏனென்றால் தாய்ப்பால் தொடர்பாக நமக்கு நாமே சலுகைகளை கொடுத்துக் கொள்கிற ஒவ்வொரு பொழுதும் நம் பிள்ளையின் வளர்ச்சி தொடர்பாக, ஆரோக்கியம் தொடர்பான விசயங்களில் இடையூறை நாமே ஏறபடுத்திவிட முடியுமே!
நாம் ஏற்கனவே சொன்னபடி கால்பந்து முறையைப் பயன்படுத்தி தாய்மார்கள் எவ்வளவு சீக்கிரமாக தாங்களே பிள்ளையைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு தாய்ப்பால் புகட்ட முடியுமோ அவ்வளவு விரைவிலே முயற்சி செய்து அவர்களுக்குப் பசியாற்றலாம். இதனால் முழுவதுமான தன்னம்பிக்கையுடன் தாய்ப்பால் தொடர்பான எவ்வித எதிர்கருத்துமில்லாமல் தொடர்ந்து பிள்ளைக்கு தாய்ப்பால் கிடைக்க வழிவகுக்கிறது.
அதேசமயம் சிசேரியன் சிகிச்சையின் போது அடிவயிற்றில் அறுவை செய்வதற்கு வயிற்றுப் பகுதி மற்றும் கால்கள் மரத்துப் போகிற அளவில் மட்டுமே மயக்க மருந்தின் அளவைச் செலுத்தியிருப்பார்கள். அப்போது நமது நினைவில் எந்த குழறுபடியோ இல்லாமல் சுற்றி நடக்கிற விசயங்கள் பற்றிய தெளிவோடு தான் அறுவை அரங்கிலே படுத்திருப்போம். அப்போது மருத்துவர்கள் பேசுவது உள்ளிட்ட, குழந்தை பிறந்து வெளிவந்த உடனே அவர்களைப் பார்ப்பது உள்ளிட்டவை எல்லாத்தையுமே நாம் முழு தன்னுணர்வோடு தான் அங்கே புரிந்து கொள்ள முடியும். இதனால் மயக்க மருந்து கொடுத்த பின்னால் மயக்கத்தோடு நாங்கள் எப்படி பாலூட்டுவது என்றெல்லாம் குழப்பிக் கொள்ளத் தேவையில்லை. இத்தகைய மயக்க மருந்தினால் வயிற்றுப்பக்கம் மற்றும் கால்கள் தான் மரத்துப் போயிருக்குமே தவிர நாம் முழுவதும் சுயநினைவோடுதான் இருப்போம் என்பதையும் மனதிலே நன்றாக பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.
அதேபோல மயக்க மருந்து கொடுத்து நாம் தெளிவுற்று எழுந்துவிட்ட கணமே உடலிலிருந்து அம்மருந்தும் வெளியேற்றப்பட்டிருக்கும். மருந்து வெளியேறிவிட்டதா என்பதற்கு நம்முடைய கால்விரல்களை அசைத்துப் பார்ப்பதை வைத்தே, அடிவயிற்றில் பளிச்சென்று தோன்றுகிற குத்தலான வலியினை வைத்தே நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். அப்படியிருக்க பாலருந்துகிற குழந்தைக்குத் தாய்ப்பால் வழியே மயக்க மருந்தும் போய்விடும் என்றெல்லாம் யோசித்துக் கொண்டு தாய்ப்பால் புகட்டுவதைத் தள்ளிப் போட்டுவிடக்கூடாது என்பதையும் நாம் மனதிலே புரிந்து கொள்ள வேண்டும். அதேசமயம் வலி மருந்துகளால் அறுவைச் சிகிச்சைக்குப் பின்பான காலங்களில் தாய்மார்கள் பீடிக்கப்பட்டிருக்கும் போது அத்தகைய மருந்தின் மீச்சிறு விளைவால் பிள்ளைகள் அடிக்கடி தூங்கிக் கொண்டிருப்பதற்கான வாய்ப்பிருப்பதால் குழந்தைகள் எழுந்தவுடனே பாலருந்த வைக்கலாம் என்றில்லாமல், இரண்டு மணிநேர இடைவெளியில் அவர்களை எழுப்பி நாமே பாலருந்த வைக்க வேண்டியிருக்கும் என்கிற விசயத்தில் நாம் தெளிவாகிக் கொள்ள வேண்டும்.
பொதுவாக மகப்பேறு மருத்துவமனைகளில் சிசேரியன் செய்யப்பட்ட தாய்மார்களை அவசரச் சிகிச்சையின் கூடுதல் கவனிப்பிற்காக அடுத்த 24 மணி நேரத்திற்குத் தங்க வைத்துவிடுவதால் அவர்களை குழந்தையிடமிருந்து இயல்பாக பிரித்து வைத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிடுகிறது. ஆனால் அந்த முதல் 24 மணி நேரத்தில் தான் குழந்தைக்கு அதிகமாக அம்மாவின் நெருக்கம் தேவைப்படும், அப்போதுதான் சீம்பால் சுரந்து கொடுக்க வேண்டியிருக்கும், தாய்ப்பால் அதிகம் சுரக்க வைப்பதற்கான தூண்டுதலைச் செய்ய வேண்டியிருக்கும். மேலும் அடிக்கடி பசிக்குப் பால் கேட்டழுகிற பிள்ளைக்கு இரண்டு மணி நேரத்திற்கொருமுறை அம்மாவின் அருகாமை கட்டாயம் தேவையாயிருக்கும்.
ஆனால் பெரும்பாலான மருத்துவமனைகளில் அம்மாவுடன் அவசரப்பிரிவில் குழந்தையை அனுமதிப்பதில்லை. அவசரப்பிரிவில் தங்கியிருக்கிற மற்ற நோயாளிகளால் பிள்ளைக்கு நோய்த் தொற்றாகிவிடும் என்று அனுமதிக்க மறுத்துவிடுகிறார்கள். ஆனால் இப்படியான பிரச்சனைகள் மற்ற சுவாசக்கோளாறு உள்ள நோயாளிகளோடு பிள்ளை பெற்ற தாய்மார்களையும் ஒரேசேர அனுமதிக்கும் போதுதான் ஏற்படுமே தவிர, மகப்பேறு சிகிச்சை பெற்றவர்களுக்கென்றே தனித்து இருக்கிற அவசரச் சிகிச்சைப் பிரிவில் இத்தகைய சிக்கல் ஏற்படுவதற்கு வாய்ப்பென்பது மிகவும் குறைவுதான். அதே சமயத்தில் இரண்டு மணிநேரத்திற்கு ஒருமுறை பிள்ளையைத் தூக்கிக் கொண்டு அடிக்கடி அவசரச்சிகிச்சைப் பிரிவின் உள்ளே வெளியே பால் புகட்டுவதற்கு உறவினர்கள் வந்துபோனபடி இருப்பதைத் தவிர்க்கவும், தாய்ப்பால் மற்றும் குழந்தையின் தொடர்ந்த அழுகை தொடர்பாக கேள்விகள் கேட்டு அடிக்கடி உறவினர்கள் வருவதைத் தவிர்க்கவும் சில மருத்துவமனைகளில் அவர்களாகவே பால்பவுடர்களை பரிந்துரை செய்வதும் நடக்கத் தான் செய்கிறது.
நாம் இத்தகைய பிரச்சனைகளையெல்லாம் தாண்டித்தான் நம் பிள்ளைக்கு சீம்பால் கொடுக்க வேண்டியிருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அவசரச்சிகிச்சைப் பிரிவிலும் பிள்ளையை உடனிருக்க அனுமதிப்பதன் மூலமாகவும், சிசேரியன் செய்யப்பட்டவர்களுக்கென்று தனித்த பகுதியை உருவாக்கி அங்கே இருவரையும் ஒன்றாக தங்க வைத்துப் பராமரிப்பதன் வழியாகவும் மேற்கண்ட பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும். இப்படியான சின்னசின்ன காரணங்களால் ஆரம்பத்தில் சீம்பால் கிடைப்பது தடைபடுவதும், தொடர்ந்து தாய்ப்பால் கிடைப்பதற்கான தூண்டுதல் சரிவர கிடைக்கப் பெறாத காரணத்தினாலும் பிரசவ வார்டுக்குச் சென்ற பின்பாக தாய்ப்பால் மார்பில் சுரப்பதில் கொஞ்சம் சிரமங்கள் இருந்தாலும் நம்முடைய விடாபிடியான பிடிவாதம் மற்றும் முயற்சியால் கட்டாயம் நம் பிள்ளைக்குத் தொடர்ந்து தாய்ப்பால் சுரக்க வைக்கக்கூடிய நிலையை ஏற்படுத்திக் கொள்ள முடியும். ஆக, சுகப்பிரசவம் ஆகிய ஏனைய தாய்மார்களோடு ஒப்பிட்டுக் கொண்டு நமக்குத் தாய்ப்பால் சீக்கிரம் வரவில்லையே என்று வருத்தப்பட்டுக் கொண்டு இருந்துவிடக்கூடாது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
மேலும் இக்காலத்திலே நம்மிடம் இருந்து தாய்ப்பால் சுரக்க வைப்பதற்காக எவ்வளவு முயற்சிகளைச் செய்கிறோமோ அதேபோல நம் பிள்ளைக்கு தாய்ப்பால் மட்டுமே கிடைப்பதற்கான எல்லா வகையான முயற்சியையும் எடுக்க வேண்டும். அதாவது பிரசவித்தவுடனே தாய்ப்பால் சுரப்பதில், அவர்களுக்குப் புகட்டுவதில் சிரமங்கள் இருக்கையில் அருகாமையில் பாலூட்டிக் கொண்டிருக்கிற அம்மாக்களிடம் கேட்டு நம் பிள்ளைக்கும் பாலூட்டச் செய்யலாம். ஒருவேளை மார்பில் பிள்ளையைப் போடுவதற்குத் தான் சிரமமாயிருக்கிறது, ஆனால் தாய்ப்பால் நன்றாகத்தான் வருகிறதென்றால் தாய்ப்பாலை மார்பிலிருந்து பாலாடையில் கறந்தெடுத்து பிள்ளைக்குச் சங்கு அல்லது ஸ்பூன் வழியாகப் புகட்டலாம். அதேபோல இப்போதெல்லாம் மாவட்டம் வாரியாக வந்துவிட்ட மருத்துவக் கல்லூரிகளில் இருக்கிற தாய்ப்பால் வங்கிகளில் கேட்டு பிள்ளைக்கான தாய்ப்பாலைக் கொடுத்து வளர்த்தெடுக்கலாம். ஆக, எப்பேர்ப்பட்டாவது நம் பிள்ளைக்குத் தாய்ப்பால் மட்டுமே கிடைக்க வேண்டிய விசயத்தில் நாம் உறுதிப்பாட்டோடு இருக்க வேண்டும் என்பதை மனதிலே நன்றாகப் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.
ஆக, எனதருமை நேசத்திற்குரிய தாய்மார்களே! சிசேரியன் செய்து கொண்ட காரணத்தால் கூடுதலாக ஏழு நாட்கள் வரையிலும் நம்மை மருத்துவமனையிலே தங்க வைத்திருக்கிற காலங்களில் அதையெல்லாம் நமக்குச் சாதகமான நாட்களாக மாற்றிக் கொண்டு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் நல்வழி காட்டலின் வழியே நன்றாக நாம் தாய்ப்பாலூட்டிப் பழகிக் கொள்ளலாம் தானே!
– டாக்டர் இடங்கர் பாவலன்
தாய்ப்பால் எனும் ஜீவநதி பாகம் – ΙΙ : தொடர் 2 – டாக்டர் இடங்கர் பாவலன்
தாய்ப்பால் வகுப்பறை பாடத்திட்டம்
மருத்துவமனைப் பள்ளியறையில் | வீடுகளில் | |||
வகுப்பறை | I. பிரசவ மேசையில் | II. பிரசவத்திற்குப் பின்பான வார்டில் | III. டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு சென்ற பிறகு | |
சுகப்பிரசவம் | சிசேரியன் | |||
படிப்புக் காலம் | பிரசவித்த முதல் இரண்டு மணி நேரத்தில் | 0 முதல் 3 நாட்கள் | 0 முதல் 7 நாட்கள் | 3-7 முதல் 42 நாட்கள் வரை |
பாடமுறை | மருத்துவ பள்ளிப்பாடம் | வீட்டுப்பாடம் | ||
கற்றல் பாடங்கள் | பிரசவித்த உடனேயே மார்பில் பிள்ளையைப் போட்டுத் தவழவிட்டு தாய்ப்பால் புகட்டுவதைப் பற்றி கற்றுத் தேர்தல் | 1.தாய்ப்பால் பற்றிய விழிப்புணர்வை வளர்த்துக் கொள்ளுதல். 2.தாய்ப்பால் புகட்டுவது பற்றி நேரடி பயிற்சி எடுத்துக் கொள்ளுதல். 3.தாய்ப்பால் புகட்டும் பலதரப்பட்ட முறைகளைப் பற்றி அறிந்து கொள்ளுதல். 4.வீடு செல்லும் முன்பாக முழுவதுமாக கற்றுத் தேர்தல். | 1.சிசேரியன் செய்தும் அதன் சிரமமின்றி தாய்ப்பால் குடுக்கும் முறையைக் கற்றுத் தேர்தல் 2.சிசேரியன் கால மருந்துகள், மயக்கநிலை, தாமதமாகும் முதல் தாய்ப்பால் பாலூட்டல் நிகழ்வுகளைப் பற்றி முழுவதுமாகப் புரிந்து கொள்ளுதல். | 1.மருத்துவமனையில் கற்றுக் கொண்டதை, எவர் உதவியுமின்றி சுயமாக பிள்ளைக்குப் புகட்டி வீட்டிலேயே பயிற்சி எடுத்தல் 2.குழந்தைகள் தொடர்பாக, தாய்ப்பால் புகட்டுதல் தொடர்பாக எழும் சந்தேகங்களை குறித்து வைத்துக் கொண்டு உடனடியாக அதைக் களைந்து கொள்ளுதல். 3.வீட்டில் உள்ளோரின் மூடநம்பிக்கைகளுக்கு செவிசாய்க்காமல் குழந்தைகளை வளர்த்தெடுத்தல். 4. நாற்பது நாட்கள் முடிந்த பின்பு அல்லது முதல் தவணைத் தடுப்பூசி போட மருத்துவமனைக்கு வருகையில் தாய்ப்பால் புகட்டிய சந்தேகங்களைக் கேட்டுத் தெளிந்து கொள்தல். |