நூல் அறிமுகம்: ஜெயராணியின் உங்கள் குழந்தை யாருடையது? – அன்புச்செல்வன்
மனிதகுலம் வேட்டை சமூக நிலையில் இருந்து விலகி ஆற்றங்கரை நாகரீகங்களாக நிலைபெற்று நிலவுடைமை சமுதாய உருவாக்க காலகட்டத்தில் தொடங்கி, குடும்பம் – தனிச்சொத்து தோற்றவாயில் உறுதிப்பட்டு, நாளது தேதி வரை ஒவ்வொரு மனிதனின் குழந்தையையும் தனது சொத்து – சேமிப்பு முதலியவற்றுக்கான உடைமை வாரிசாகவே கருதி வருகிறது. அதிலும் குடும்பம் என்ற நிறுவனமயப்பட்ட அமைப்பு இறுகி கெட்டி தட்டிப் போன இந்திய/தமிழக சூழலில் தங்களின் குழந்தைகளை ஒரு தனி உயிரியாகப் பார்க்கவோ/கருதவோ நாம் (எந்தப் பெற்றோரும்) முயல்வதில்லை. விரும்புவதில்லை.
நூலாசிரியர் தோழர் ஜெயராணி சொல்வது போல கலீல் ஜிப்ரானின் ‘உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்லர்” என்ற கவிதை ஏற்படுத்திய அதிர்ச்சியையும் அதில் உள்ள உண்மையையும் அதன் விரிவான தளத்தில் நடைமுறை செயலாக்க நிரல்களாகவும் உரையாடல் முகிழ்க்கும் களமாகவும் சிந்தனா வெளியாகவும் நம்முன் வைக்கிறது இந்நூல். 13 கட்டுரைகளும் குழந்தை வளர்ப்பென்ற பெயரில் நாம் தற்போது மேற்கொள்ளும் குழந்தைகள் மீதான அடக்குமுறையையும் குழந்தை வளர்ப்பில் உட்பொதிந்துள்ள ஆதிக்க மனோபாவத்தையும் நமக்கு உறைக்கும் வகையில் எடுத்துக் கூறி, அதில் பெற்றோராகிய நாம் தவறும், தடம் மாறும் கணங்களையும் இடங்களையும் சுட்டிக்காட்டி அதற்கான மாற்று நடைமுறைகளையும் முன்வைக்கிறது இந்நூல்.
கட்டுரைகள்வழி இந்நூல் பேசும் உண்மைகள் நம்மை முகத்தில் அறைகிறது. நம் குழந்தைகளை பாதுகாக்கிறோம் – நான் அனுபவித்த கஷ்டங்களை என் பிள்ளைகள் அனுபவிக்கக்கூடாது – போன்ற சால்ஜாப்புகளை சொல்லியபடி> குழந்தைகளை ‘சவலை”ப் பிள்ளைகளாக்கி – அதன் வழியே – எதிர்கால சமூகத்தையே ‘சவலை” சமூகமாக்கிவிடும் ‘சமூகவிரோத” நடவடிக்கையே நமது தற்போதைய குழந்தை வளர்ப்பு முறை என்று விரிவாக முன்வைப்பதோடு> நம் வளர்ப்பு முறை எதை நோக்கி – எவ்வழி இருக்கவேண்டும் என்ற வழிமுறையையும் காட்டிச் செல்கிறது பிரதி.
இப்பிரதியில் முக்கியமான புள்ளிகளாக நான் கருதுவது – ஒரு தேர்ந்த மருத்துவராக/சிறந்த மனநல உளவியல் ஆலோசகராக முக்கியமான மாற்று வளர்ப்பு முறைகளை அறிமுகப்படுத்தும் நூலாசிரியர் – பகுத்தறிவு, சமூகநீதி, பால், இனம், சாதி, மதம், மொழி முதலிய அனைத்துக் கூறுகளிலும் சமத்துவம் ஆகிய கருத்தியல்களையும் வாழ்வியல் நடைமுறைகளையும் எவ்வாறு குழந்தைகளிடையே விதைப்பது போன்ற செயல்முறைகளையும் நம்மை உலுக்கி எடுத்து உரைத்துச் செல்கிறது. இதுவே பிற குழந்தை வளர்ப்பு நூல்களுக்கும் இப்பிரதிக்குமான முதன்மையான வேறுபாடாக முன்னின்று இதனை அறம் சார்ந்த நூலாகவும் உருமாற்றுகிறது.
குழந்தைமையைத் தாண்டிய/பதின்பருவத்தை தாண்டிய குழந்தைகளைக் கொண்டிருக்கும் பெற்றோர்களும் கூட கண்டிப்பாக வாசித்துணர வேண்டிய நூலிது. வாசிப்பது மட்டுமின்றி குழந்தை வளர்ப்பில் செயல்படுத்தப்படவேண்டிய நடைமுறைகளை தன்னுள் கொண்டிருக்கும் தவிர்க்கவியலா வாழ்வியல் நூலாகும்.
– அன்புச்செல்வன்
நூல் : உங்கள் குழந்தை யாருடையது?
ஆசிரியர் : ஜெயராணி
விலை : ரூ. ₹180.00
வெளியீடு : தமிழ்வெளி
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]