தனித்து ஒரேயொரு நிருபராக பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அனுபவம் : ஏ.எம்.ஜிகீஸ் – தமிழில்: தா.சந்திரகுரு
விவாதங்களில் ஈடுபடும் ஆர்வத்துடன் கல்லூரிக்கு வந்த என்னால் அங்கே சுய தணிக்கையை மட்டுமே காண முடிந்திருக்கிறது – எம்மா கேம்ப் | தமிழில்: தா. சந்திரகுரு
வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் சீனியராக உள்ள எம்மா கேம்ப் ‘கல்வியில் தனிநபர் உரிமைகளுக்கான அறக்கட்டளை’யில் பயிற்சி பெற்றவர். கல்வி வளாகத்திற்குள்ளே சுதந்திரமான பேச்சு குறித்து பல்கலைக்கழகத்திலிருந்து வெளியாகின்ற ‘தி கவாலியர் டெய்லி’ என்ற மாணவர்களுக்கான செய்தித்தாளில் அவர் கட்டுரைகள் எழுதியுள்ளார்.
ஒவ்வொரு வாரமும் நான் பாலினம், பாலுறவு குறித்த பாடத்தில் எழுகின்ற அறநெறி சார்ந்த சிக்கலான கேள்விகளை என்னுடன் விவாதிக்கத் தயாராக இருக்கின்ற தத்துவவியல் துறைப் பேராசிரியரின் அலுவலக நேரத்திற்காகக் காத்துக் கிடப்பேன். நாங்கள் பேசுவதை எவரேனும் ஒட்டுக் கேட்டு விடக் கூடாது என்பதைப் போன்று பெரும்பாலும் குரலைத் தாழ்த்தியே நாங்கள் பேசிக் கொள்வோம். இறுதிக்கட்ட படிப்பை நான் முடித்துக் கொண்டிருக்கும் அந்த வர்ஜீனியா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறுகின்ற பல உரையாடல்களையும் மிகவும் அமைதியான குரல்களும், கவலையான தோற்றங்களுமே இப்போது ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன.
மாணவர் மன்றத்தில் நடைபெறுகின்ற பன்முகத்தன்மை பயிற்சியின் போது மிகவும் பொருளுள்ளதாக ஆனாலும் லேசாகப் புண்படுத்தும் வகையில் ஏதோவொன்றைச் சொன்ன மாணவனை ஒதுக்கி வைத்ததற்காக வருத்தப்பட்ட என்னுடைய தோழி தன் குரலைத் தணித்துக் கொள்ள வேண்டியிருந்தது. சமகாலத்து விமர்சனத்திலிருந்து தாமஸ் ஜெபர்சனைப் பாதுகாக்கும் வகையிலான விரிவுரை பற்றி குறிப்பிட்ட போது தன்னுடைய படுக்கையறை கதவை மூடி வைத்த என்னுடைய மற்றொரு நண்பர் ‘நாம் பேசுவதை என்னுடைய ரூம்மேட் கேட்டு விடப் போகிறார்’ என்று விளக்கம் கூறினார்.
பேராசிரியர்கள், சகமாணவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆவலுடனே நான் இந்தக் கல்லூரிக்கு வந்தேன். அறிவார்ந்த பன்முகத்தன்மை, கடுமையான கருத்து வேறுபாடுகளை வென்றெடுக்கும் சூழல் குறித்து உண்மையில் எனக்கு மிகுந்த மரியாதை இருந்தது. ஆனால் என்னுடைய கல்லூரி அனுபவமோ முற்றிலும் மாறாக மிகவும் கடுமையான கருத்தியல் இணக்கம் கொண்டதாகவே வரையறுக்கப்பட்டது. அனைத்து அரசியல் சார்புடைய மாணவர்களும் – தங்களுடைய வகுப்பறை விவாதங்களில், நட்பு உரையாடல்களில், சமூக ஊடகங்களில் – தாங்கள் உண்மையில் என்ன நினைக்கிறோம் என்பதைச் சொல்வதை மறைத்துக் கொள்ளவே செய்கிறார்கள். கருக்கலைப்பு உரிமைப் போராட்டங்களில் கலந்து கொண்டவளாக, இனவெறிக்கு எதிராக நிற்க வேண்டியது பற்றி எழுதிய தாராளவாதியாக இருந்த போதிலும் சில சமயங்களில் நானும் என் மனதில் இருப்பவற்றை அப்படியே முழுமையாகப் பேசுவதற்கு அச்சப்படுபவளாகவே இருந்து வருகிறேன்.
பெரும்பாலும் விரும்பப்படாத கருத்துக்களுக்கு வகுப்பறைகளுக்குள் ஏற்பட்டிருக்கின்ற பின்னடைவு மிகவும் சாதாரணமானதாகவே உள்ளது. மாணவர்கள் பலரும் அதுபோன்ற கருத்துகளுக்கான ஆதரவு அளிப்பதை நிறுத்திக் கொண்டு விட்டனர். தங்களுடைய பேச்சுகளைத் தணிக்கை செய்து கொள்ளாவிட்டால் குறைவான மதிப்பெண்கள் (கிரேடுகள்) வழங்கப்பட்டு விடும் என்று அவர்கள் சில சமயங்களில் அச்சப்படவும் செய்கிறார்கள்.
‘காலேஜ் பல்ஸ்’ மூலம் 159 கல்லூரிகளில் 37,000க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்டு 2021ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் எண்பது சதவிகித மாணவர்கள் குறைந்தபட்சம் சில நேரங்களிலாவது தங்களை இவ்வாறு சுய-தணிக்கை செய்து கொள்கிறார்கள் என்று தெரிய வந்திருக்கிறது. சர்ச்சைக்குரிய தலைப்பில் தங்களுடைய கருத்துக்களை வெளிப்படுத்திய போது ‘சற்று சங்கடமாக’ அல்லது ‘மிகவும் சங்கடமாக’ இருப்பதை வகுப்பறைகளில் உணர்ந்தோம் என்று நாற்பத்தெட்டு சதவிகித இளங்கலை மாணவர்கள் விவரித்திருந்தனர். அதுபோன்ற கருத்துடன் வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் கணக்கெடுக்கப்பட்டவர்களில் ஐம்பத்தியேழு சதவிகிதம் பேர் இருந்தனர்.
என்னைப் பொறுத்தவரை ஒரு வகுப்பறை விவாதம் மோசமாக இருக்கும்போது அதை என்னால் சொல்ல முடியும். இரண்டாம் ஆண்டு பெண்ணியக் கோட்பாடு வகுப்பில் இந்திய விதவைகள் மேற்கொள்கின்ற தற்கொலையாக உள்ள ‘சதி’ எனப்படுகின்ற சடங்கின் வரலாற்று நடைமுறையை இந்தியரல்லாத பெண்கள் விமர்சிக்கலாம் என்று நான் கூறினேன். அதுபோன்ற சிந்தனை கல்வி விவாதத்திற்காக ஏற்றுக் கொள்ளத்தக்கதாகவே இருக்கிறது என்றாலும் அது என்னுடைய வகுப்புத் தோழர்கள் பலருக்கும் ஆட்சேபணைக்குரியதாகவே இருந்தது.
எனது கருத்தைக் கேட்ட அந்த வகுப்பறை பதற்றமானது. அங்கிருந்தவர்கள் தங்கள் இருக்கைகளில் இருந்து மாறி அமர்ந்து கொள்வதைக் கண்டேன். யாரோ ஒருவர் மிகவும் கோபமடைந்தார். அதற்குப் பின்னர் அங்கிருந்த அனைவருமே கோபமடைந்தனர். பேராசிரியர் அந்த விவாதத்தை முன்னகர்த்த முயன்ற போது நான் மிகவும் சங்கடமாக உணர்ந்தேன். தொடர்ந்து அதுகுறித்து பேசுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதைக் காண முடிந்தது. சொந்தக் கருத்துகளின் மீதே நம்பிக்கையிழந்தவளாக நான் மாறியிருந்தேன்.
உண்மையில் அதிர்ந்து போனேன் என்றாலும் பேசாமல் இருக்கக்கூடாது என்றே நான் தீர்மானித்தேன். சகமாணவர்களின் வெறுப்பு என் மீது தொற்றிக் கொண்டது. அந்தக் குழுவில் வரவேற்கத்தக்க உறுப்பினராக இருந்த என்னால் அதற்குப் பின்னர் அவ்வாறாக இருக்க இயலவில்லை.
மற்ற மாணவர்களின் கருத்துகளுக்கு எதிர்வினையாற்றுவதிலும் அதே போன்ற எதிர்வினைகளையே அந்த செமஸ்டர் முழுவதும் என்னால் காண முடிந்தது. மிகவும் குறைவான வகுப்புத் தோழர்களே பேசுவதைக் கேட்க முடிந்தது. இறுதியில் எங்களுடைய விவாதங்கள் அனைத்தும் ஒரே மாதிரியான குரலை எதிரொலிக்கின்ற வகையிலே மாறிப் போயின. செழுமையான, உறுதியான விவாதங்கள் இல்லாததால் நாங்கள் சமூக ரீதியாக மிகவும் பாதுகாப்பான கருத்துகளுக்குள்ளாக மட்டுமே மூழ்கிப் போனோம்.
மிகவும் கடினமான விவாதங்களின் போது விமர்சிக்கப்படுவது – அது மிகவும் கடுமையாக இருந்தாலும்கூட – என்னை ஒருபோதும் தொந்தரவு செய்ததில்லை. ஆற்றல்மிக்க விவாதங்கள் நிறைந்த வகுப்பறைகளே நமக்குத் தேவைப்படுகின்றன. ஆனால் விமர்சனம் என்பது பொதுவெளியில் அவமானப்படுத்துவது என்று மாறும் போது அது கற்றல் செயல்பாட்டை முடக்குவதாகி விடுகிறது.
தங்கள் வகுப்பறைகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை பேராசிரியர்களும் கவனித்துள்ளனர். இவ்வாறான சுய-தணிக்கை மாணவர்களிடம் பரவியிருப்பதற்கு இரண்டு காரணிகள் காரணமாக இருப்பதாக தான் நம்புவதாக இங்குள்ள சமூகவியல் பேராசிரியரான பிராட் வில்காக்ஸ் என்னிடம் கூறினார். ‘முதலாவதாக சமூக ஊடகங்களில் தங்கள் சகாக்களால் விமர்சிக்கப்படுவது குறித்து மாணவர்கள் பயப்படுகிறார்கள்’ என்று கூறிய அவர் ‘இரண்டாவதாக, ஆசிரியர்கள், நிர்வாகிகள், ஊழியர்களிடமிருந்து மாணவர்கள் கேள்விப்படுகின்ற பெரும்பாலான செய்திகள் முற்போக்கானவையாக இருப்பதால், வகுப்பறை மற்றும் வளாக உரையாடல்கள், விவாதங்களில் அவ்வாறான செய்திகளுக்கு இணக்கமாக இருக்க வேண்டும் என்ற மறைமுக அழுத்தத்தை அவர்கள் உணர்கிறார்கள்’ என்றார்.
விதிமுறைக்குப் புறம்பாக எதையாவது சொல்வதால் ஏற்படும் விளைவுகள் மிகவும் மோசமாகவே இருக்கும். எங்கள் விவாதக் கழகத்தில் ஸ்டீபன் வீசெக்கை நான் சந்தித்தேன். படித்து முடித்து வெளிச்செல்கின்ற, முதலாம் ஆண்டு வலுவாக விவாதம் செய்பவராக இருக்கும் அவர் கூட்டங்கள் முடிந்த பிறகு சுத்தம் செய்ய அடிக்கடி உதவுவார். அவரும் பழமைவாதிதான். தங்களை வலுவான குடியரசுக் கட்சிக்காரர் அல்லது பலவீனமான குடியரசுக் கட்சிக்காரர் என்று வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் கணக்கெடுக்கப்பட்ட மாணவர்களில் ஒன்பது சதவிகிதம் பேர் மட்டுமே விவரித்துக் கொண்டிருப்பது அவரை மிகவும் சிறுபான்மையினராகவே இனம் காண்கிறது.
சில நேரங்களில் ஒரு விருந்தில் அல்லது கேப்பெல்லா ஒத்திகையில் அல்லது வகுப்பறையில் மோதலைத் தவிர்ப்பதற்காக தன்னுடைய நம்பிக்கைகள் குறித்து நேரடியான பொய்களை அடிக்கடி தான் சொன்னதாக அவர் என்னிடம் கூறினார். அரசியல் என்று வரும்போது ‘அதிலிருந்து தப்பிக்கும் வழிக்கே நான் சென்றிருக்கிறேன்’ என்று கூறிய அவர் ‘விஷயங்களை எந்த வார்த்தைகளில் சொல்வது என்பது பற்றி மிகவும் கவனமாக சிந்திக்க வேண்டும் என்பதால் நான் எப்போதும் மிகுந்த பதட்டத்துடனே இருந்திருக்கிறேன். அது கவலையைத் தூண்டுவதாக இருக்கிறது’ என்றார்.
அதுபோன்ற கவலைகள் பழமைவாதிகளை மட்டுமே பாதிப்பதில்லை. முற்போக்கான நான்காம் ஆண்டு மாணவியான அபி சாக்ஸுடன் பேசினேன். ஊடகங்களில் பாலினப் பாகுபாடு குறித்து நடைபெற்ற வகுப்பறை விவாதத்தின் போது எல்லோருமாகச் சேர்ந்து கொண்டு நியாயமற்ற வகையில் தன்னை விமர்சித்ததை தான் அனுபவித்ததாக அவர் என்னிடம் கூறினார். கேப்டன் மார்வெல்’ திரைப்படத்தை பெண்ணியத் திரைப்படம் என்று கூறிய தன்னுடைய பேராசிரியருடன் அவரால் உடன்பட முடியவில்லை. திரைப்படத்தின் தலைப்புக் கதாபாத்திரத்தின் உள்மோதல், உணர்வுகளுக்குப் பதிலாக அந்தக் கதாபாத்திரத்தின் உடல் வலிமையையே அந்தப் படம் வலியுறுத்தியது என்ற கருத்தே சாக்ஸிடம் இருந்தது. தன்னுடைய கருத்து தனது பேராசிரியையை விரக்தியடையச் செய்ததாகவே தனக்குத் தோன்றியது என்று சாக்ஸ் கூறினார்.
அபி சாக்ஸ்
தன்னுடைய வகுப்புத் தோழர்கள் அதைக் கவனித்ததாகக் கூறிய சாக்ஸ் ‘என்னுடன் உடன்படுவதை ஒருவர் பின் ஒருவர் என்று தொடர்ச்சியாக அங்கிருந்த பலரும் மிகவும் தீவிரமாக மறுக்கத் துவங்கினர்’ என்றார். தான் திணறுவதை சாக்ஸ் உணர்ந்தார். ‘அனைவரும் ஒன்று சேர்ந்தது அந்த அறையை உற்சாகப்படுத்தியது. அவர்கள் அனைவரும் சரியான கருத்து கொண்ட குழுவின் ஒரு பகுதியாக இருக்க விரும்பினர்’ என்று கூறிய சாக்ஸ் அந்த அனுபவம் தன்னை மீண்டும் வகுப்பிற்குச் செல்ல விருப்பமற்றவளாக்கியது என்றார். வகுப்பில் தொடர்ந்து கலந்து கொண்ட போதிலும் விவாதங்களில் மிகவும் குறைவாகவே தான் பங்கேற்றதாகவும், கண்ணுக்குத் தெரியாதவளாகி விட்டதைப் போல தன்னை உணர்ந்ததாகவும் அவர் சொன்னார்.
இதே போன்று மற்ற வளாகங்களும் போராடியவாறே இருக்கின்றன. சாரா லாரன்ஸ் கல்லூரியின் அரசியல் துறைப் பேராசிரியரான சாமுவேல் ஆப்ராம்ஸ் என்னிடம் ‘கருத்துகள் குறித்த பன்முகத்தன்மை கொண்ட பார்வை இப்போது உயர்கல்வியில் மிகவும் புனிதமான, முக்கியமான விழுமியமாகக் கருதப்படுவதில்லை’ என்று கூறினார். அதை நேரில் உணர்ந்தவராகவும் அவர் இருக்கிறார். பல்கலைக்கழக நிர்வாகிகளுக்கிடையே கருத்தியல் பன்முகத்தன்மை இருக்கவில்லை என்று தான் கருதியதைக் கொண்டு விமர்சித்து 2018ஆம் ஆண்டில் தி டைம்ஸுக்கு அவர் கட்டுரையொன்றை எழுதினார். அதற்குப் பிறகு, அவரது அலுவலகக் கதவு உடைத்து நொறுக்கப்பட்டது. அவரது பதவிக்காலத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடைய முயற்சிகள் தோல்வியுற்ற போதிலும் சக ஆசிரியர்களின் எதிர்வினைகளால் மிகுந்த அதிருப்தியுடனே டாக்டர் ஆப்ராம்ஸ் இருந்து வருகிறார். அந்தச் சம்பவத்திற்கு பதிலளிக்கும் விதமாக கருத்து சுதந்திரத்தை ஆதரிக்கும் விதத்தில் தயாரிக்கப்பட்ட அறிக்கையில் அந்தக் கல்லூரியில் உள்ள ஆசிரியர்களில் பத்து சதவிகிதத்திற்கும் குறைவாக இருபத்தியேழு ஆசிரியர்கள் மட்டுமே கையெழுத்திட்டிருந்தனர்.
டாக்டர் ஆப்ராம்ஸ் இன்றைய வளாகங்களில் உள்ள சூழல் தன்னுடைய இளங்கலை படிப்பு அனுபவத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருக்கிறது என்கிறார். தன்னுடைய இளங்கலை படிப்புகளின் போது சக மாணவர்களுடன் நடந்த இரவு நேர விவாதங்களை நினைவு கூர்ந்த அவர், அந்த விவாதங்கள் சில சமயங்களில் தன்னைக் காயப்படுத்தினாலும் அவையே தன்னுடைய மனதைப் புதிய சிந்தனைகளுக்குத் திறந்து விட்ட பரவசத்திற்கு வழிவகுத்துக் கொடுத்தன என்கிறார். அதுபோன்ற சூழலை இந்த சுய-தணிக்கை அச்சுறுத்திக் கொணடிருக்கிறது என்று கவலைப்படுகின்ற ஆப்ராம்ஸ் கல்லூரி நிர்வாகங்கள் ‘கீழ்ப்படிதல் மற்றும் பயம் சார்ந்த கலாச்சாரத்தை’ மாணவர்களிடம் உருவாக்கி நடைமுறைப்படுத்தி வருகின்றன என்ற வாதத்தை முன்வைக்கிறார்.
மேலும் தைரியமாக இருங்கள் என்று மாணவர்களை ஊக்குவிப்பது மட்டுமே சுய- தணிக்கைக்கான தீர்வாக இருக்கப் போவதில்லை. பலராலும் விரும்பத்தகாத ஒன்றைச் சொல்லி சமூக நிலையைப் பணயம் வைப்பது தைரியமாகுமா? ஆமாம் – கல்லூரி மாணவர்களிடம் – எங்களில் நாற்பத்தியெட்டு சதவிகிதம் பேர் எங்களுடைய கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதை மிகவும் சங்கடமான காரியமாகவே உணர்கின்றோம் – நீங்களே இந்தப் பிரச்சனையைச் சுதந்திரமாகத் தீர்த்துக் கொள்ளுங்கள் என்று எங்களிடம் கேட்டுக் கொள்வது நியாயமானதா? அதுகுறித்த முயற்சிகளை மேற்கொண்டு பார்த்திருக்கிறேன் என்பதால் அவ்வாறு இருக்க முடியாது என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும் – என்னை நம்புங்கள்.
தங்கியிருக்கும் அறைக் கதவுகளில் ஒட்டக் கூடிய சுவரொட்டிகளின் அளவு குறித்து எடுக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் கொள்கை முடிவை அரசியலமைப்பின் முதல் திருத்தம் குறித்திருந்த மிகப் பெரிய தாளை கதவில் ஒட்டி வைத்ததன் மூலம் நான் எதிர்த்து நின்றேன். நான் ஒட்டிய அந்த தாளை பல்கலைக்கழகம் அகற்றியது. அதற்குப் பதிலளிக்கும் விதமாக நிர்வாகிகளுடன் இணைந்து குறைவான கட்டுப்பாடுகள் கொண்ட கொள்கையை உருவாக்கும் வகையில் நான் பணியாற்றினேன். பல்கலைக்கழகப் பத்திரிகையின் கட்டுரையாளர் என்ற முறையில் கருத்துச் சுதந்திரத்தைத் தழுவிக் கொள்ளுமாறு மாணவர்களிடம் கேட்டுக் கொண்டேன். அதற்கு எதிர்வினையாக நண்பர்களை இழந்ததுடன் ட்விட்டரில் அதிக விமர்சனங்களையும் நான் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. மிகவும் தைரியமாகவே இருந்தேன் என்றாலும் ஆதரவு எதுவுமில்லாத என்னைப் போன்ற ஒரு சில மாணவர்களின் செயல்பாடுகள் ஓரளவிற்கு மாறவே செய்திருக்கிறது.
நம்மிடையே உள்ள சமூகத் தொடர்புகளை பல்கலைக்கழகங்களால் மாற்ற முடியாது என்றாலும் அவற்றால் கல்விச் சூழல்களில் கருத்தியல் பன்முகத்தன்மையை வளர்த்தெடுக்க முடியும். கருத்துச் சுதந்திரத்தை ஆதரிக்கும் பொது அறிக்கைகளை வெளியிடுவதைக் காட்டிலும் பல்கலைக்கழகங்கள் செய்ய வேண்டியவை அதிகம் இருக்கின்றன. கருத்தியல் பன்முகத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்கின்ற வளாக கலாச்சாரமும், வகுப்பறையில் கருத்து வெளிப்பாட்டைப் பாதுகாக்கிற வலுவான கொள்கைகளுமே நமக்குத் தேவைப்படுகின்றன.
சர்ச்சைக்குரிய பேச்சாளர்களை ரத்து செய்ய அல்லது நியாயமற்ற மாணவர் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ள பல்கலைக்கழகங்கள் மறுக்க வேண்டும். வகுப்பறை விவாதங்களில் அறிவுசார் பன்முகத்தன்மை, இணக்கமின்மைக்கு வெகுமதி அளிக்குமாறு அவை பேராசிரியர்களை ஊக்குவிக்க வேண்டும். மிக முக்கியமாக பேச்சுகள் மீது கட்டுப்பாடுகளை விதிக்கின்ற விதிகளை, கருத்தியல் மோதலை அசாதாரணமாகக் கருதுகின்ற ஒரு சார்பு எதிர்வினைக் குழுக்களை அவை உடனடியாக நிராகரித்திட வேண்டும்.
எங்களுடைய கருத்துக்கள் மீதான – எங்களை வளர அனுமதிக்கும் வழிகளில் – எதிர்ப்புகள் இல்லாமல் பல்கலைக்கழகக் கல்வியின் முழுப் பலன்களையும் எங்களால் அனுபவிக்க முடியாது. சாக்ஸ் என்னிடம் கூறியதைப் போல் ‘நம்முடைய கருத்துகளுக்காக ஒருவரையொருவர் தண்டித்துக் கொள்ளாமல் இந்தப் பிரச்சனைகள் குறித்த உரையாடல்களை நடத்திட வேண்டும்’.
https://www.nytimes.com/2022/03/07/opinion/campus-speech-cancel-culture.html
நன்றி: நியூயார்க் டைம்ஸ்
தமிழில்: தா.சந்திரகுரு
நான் மண்டியிட்டிருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பே சிலரிடம் இருக்கிறது – நீதிபதி அகில் குரேஷி | தமிழில்: தா.சந்திரகுரு
நாட்டின் மிக மூத்த தலைமை நீதிபதியாக இருந்த போதிலும் உச்சநீதிமன்ற நீதிபதி பதவி மறுக்கப்பட்ட ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியான அகில் குரேஷி சாதாரண குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் சுதந்திரமான நீதித்துறையின் பங்கு குறித்து கடந்த சனிக்கிழமையன்று (மார்ச் 05) தனக்கு நடத்தப்பட்ட வழியனுப்பு விழாவில் ஆற்றிய உரையில் வலியுறுத்தினார். மாற்றுக் கருத்துகளைக் கொண்டிருப்பவர்களைக் குறிவைத்து தேசத்துரோகச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதையும் அவர் தன்னுடைய உரையில் சுட்டிக்காட்டினார்.
பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு நீதிபதி குரேஷி உச்சநீதிமன்ற நீதிபதியாவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் நீதிபதி ரோஹிண்டன் நாரிமன் மற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகளின் நியமனத்திற்கும் ஒப்புதல் அளிக்க மறுத்த போது கொலிஜியத்தில் முட்டுக்கட்டை ஏற்பட்டது. அதற்கு முன்னதாக மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக குரேஷியை நியமிக்கவும் அரசு மறுத்திருந்தது.
தண்டனைக்குரிய நடவடிக்கைகளாக பலராலும் பரவலாகக் காணப்பட்ட அவரது பணியிடமாற்றங்கள் பற்றிய குறிப்புகளும் நீதிபதி குரேஷியின் உரையில் மிகவும் கண்ணியமாக இடம் பெற்றிருந்தன.
’சமீபத்தில் இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி ஒருவர் தனது சுயசரிதையை எழுதியிருக்கிறார். அதைப் படிக்கவில்லை என்றாலும் ஊடகங்களில் வெளியான செய்திகளைப் பார்த்து சில கருத்துகளை அவர் வெளியிட்டிருப்பதை நான் அறிந்து கொண்டேன். மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நியமனத்திற்காக என்னைப் பரிந்துரைத்திருந்ததை மாற்றி திரிபுரா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிப்பது குறித்து நீதித்துறைக் கருத்துகளின் அடிப்படையில் அரசாங்கம் என்னைப் பற்றி சில எதிர்மறையான கருத்துக்களைக் கொண்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். குடிமக்களின் அடிப்படை உரிமைகளை, மனித உரிமைகளைப் பாதுகாப்பதே முதன்மைக் கடமையாகக் கொண்டிருக்கின்ற அரசியலமைப்பு நீதிமன்றத்தின் நீதிபதியாக அவரது கருத்துகளை என்னுடைய சுதந்திரமான செயல்பாட்டிற்கான சான்றிதழாகவே நான் கருதுகிறேன்’ என்று முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோயின் சுயசரிதையைப் பற்றி குறிப்பிட்டு நீதிபதி குரேஷி பேசினார்.
முன்னாள் தலைமை நீதிபதி கோகோய் தலைமையிலான கொலிஜியம் திரிபுரா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நீதிபதி குரேஷியை நியமிப்பது என்ற தன்னுடைய ஆரம்பப் பரிந்துரையை மாற்றிக் கொண்டது. கொலிஜியம் எடுத்த அந்த முடிவு குறித்து கருத்து தெரிவித்த நீதிபதி குரேஷி ‘மத்திய அரசுக்குப் பிடிக்காத நீதித்துறை சார்ந்த தன்னுடைய கருத்துக்கள் குறித்த ‘நீதித்துறையின் கருத்து’ பற்றி ‘அதிகாரப்பூர்வமாக’ தனக்குத் தெரிவிக்கப்படவில்லை என்பதே தன்னைப் பொறுத்தவரை ‘மிகவும் முக்கியத்துவம்’ வாய்ந்ததாக இருந்தது’ என்று கூறினார்.
‘அகில்’ தொடங்கி ‘நீதிபதி குரேஷி’ வரையிலான தனது பயணம் குறித்து பேசிய போது இந்திராகாந்தியின் நெருக்கடி நிலை காலத்தின் போது பள்ளி மாணவனாக இருந்த தான் கண்ட சம்பவத்தை அவர் பின்வருமாறு விவரித்தார்:
‘குஜராத் உயர்நீதிமன்ற வளாகத்தில் ஏராளமானோர் கூடியிருந்தனர். காவல்துறையின் பலத்த பாதுகாப்பு அங்கே போடப்பட்டிருந்தது. காவல்துறையினர் அங்கிருந்த கூட்டத்தின் மீது தடியடி நடத்தி விரட்டியடித்து ஒருவரைக் கைது செய்து வேனில் ஏற்றிய போது அந்தப் பகுதியில் மிகுந்த பரபரப்பு காணப்பட்டது. இன்னும் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன் அந்த நிகழ்வுகளை மூச்சுத் திணறப் பார்த்துக் கொண்டிருந்தான். அந்த நிகழ்வு 1974ஆம் ஆண்டு நடைபெற்றது. அப்போது விலைவாசி உயர்வு, அரசாங்கத்தில் நடைபெறுகின்ற ஊழல் ஆகியவற்றிற்கு எதிராக நவநிர்மாண் இயக்கம் சார்பில் நடைபெற்ற மாணவர்களின் போராட்டம் உச்சக்கட்டத்தில் இருந்தது. செயல்பாட்டாளர்களுக்கு எதிராக உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் (மிசா) கீழ் தடுப்புக்காவல் உத்தரவுகளை நிறைவேற்றுவதன் மூலம் நிர்வாகம் பதிலடி கொடுத்தது. தங்களிடம் கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருந்தவர்களை அமைதிப்படுத்துவதற்கு தேசத்துரோகச் சட்டத்தைப் பயன்படுத்தலாம் என்பதை அன்றைய ஆட்சியாளர்கள் கண்டறியாமலே இருந்தனர்.
செயல்பாட்டாளர்கள் தலைமறைவாகினர். அவர்களில் ஒருவரான ஸ்ரீகிரிஷ்பாய் படேல் வெளியில் வந்து தடுப்புக்காவல் உத்தரவுகளை எதிர்த்து ஆட்கொணர்வு (ஹேபியஸ் கார்பஸ்) மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். விரைவிலேயே அவர் கைது செய்யப்பட்டார். அங்கிருந்து அகற்றப்படுவதற்கு முன்பாக காவல்துறையின் வேனுக்குள் இருந்தவறு சுருக்கமான உரை ஒன்றை அவர் நிகழ்த்தினார். அரசு இயந்திரத்தின் ஆதரவுடன் நடைபெறுகின்ற சர்வாதிகார ஆட்சியின் வலிமைக்கு சவால் விடுவதாக அவரது பேச்சு அமைந்திருந்தது. ஊழல் நிறைந்த அரசியல் வர்க்கத்தின் அட்டூழியங்களுக்கு அடிபணிய வேண்டாம் என்று மக்களைத் தூண்டுகின்ற வகையில் இருந்த அவரது வார்த்தைகள் இன்னும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. அவை மிகவும் சுவாரசியமான நாட்களாக இருந்தன. நேர்மையான தீர்ப்பிற்காக சமூகம் நடத்துகின்ற போராட்டத்தைப் பார்த்த அதே வேளையில் அந்த செயல்முறைகளுக்கு உதவுகின்ற வகையில் நீதிமன்றங்களிடம் இருந்த மகத்தான அதிகாரத்தையும் நான் கண்டேன். அந்த தருணமே சட்டத்தின் மீதான எனது ஆர்வத்தை தூண்டி விட்டது’
2010ஆம் ஆண்டு குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த போது, சொராபுதீன் போலி என்கவுன்டர் வழக்கில் அப்போதைய மாநில உள்துறை அமைச்சரும், பாஜக தலைவருமான அமித்ஷாவை சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட போது நீதிபதி குரேஷி முதன்முதலாக அனைவரது கவனத்திற்கும் வந்தார். பின்னர் லோக்ஆயுக்தா நியமன வழக்கில் நரேந்திர மோடி தலைமையிலான குஜராத் அரசுக்கு எதிராக அவர் தீர்ப்பளித்தார். 2002ஆம் ஆண்டு வகுப்புவாத கலவரத்தின் போது நடைபெற்ற நரோடா பாட்டியா படுகொலை தொடர்பான வழக்கில் குஜராத் முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானி செய்த மேல்முறையீட்டில் அவரைத் திரும்பப் பெற வேண்டும் என்று மாநில அரசு கோரியிருந்தது.
அரசுக்கு எதிராக நீதிபதி குரேஷி வழங்கிய பாதகமான தீர்ப்புகள் கறை எதுவுமற்ற அவரது நீதித்துறை வாழ்க்கை மீது அதிகம் பாதிப்புகளை ஏற்படுத்தின. 2018ஆம் ஆண்டில் குஜராத் உயர்நீதிமன்றத்தின் தற்காலிகத் தலைமை நீதிபதி பதவியை ஏற்கவிருந்த சமயத்தில் பம்பாய் உயர்நீதிமன்றத்தில் இருந்த அதைவிடக் குறைவான பதவிக்கு நீதிபதி குரேஷி மாற்றப்பட்டார். குஜராத் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் அந்த இடமாற்ற உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து 2018ஆம் ஆண்டு ஒருமனதாகத் தீர்மானம் ஒன்ற நிறைவேற்றியது என்று லைவ் லா இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
நீதிபதி குரேஷியை மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உயர்த்துவதற்கான பரிந்துரையை 2019 மே மாதம் கொலிஜியம் வழங்கிய போது, தன்னுடைய ஆட்சேபணையைத் தெரிவித்த ஒன்றிய அரசு கொலிஜியம் செய்திருந்த மற்ற மூன்று பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளிக்கத் தவறவில்லை. அரசின் அழுத்தத்திற்கு அடிபணிந்த கொலிஜியம் இறுதியில் குரேஷியை திரிபுரா உயர்நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதியாக அனுப்புவது என்று தன்னுடைய பரிந்துரையை மாற்றிக் கொண்டது.
பிரியாவிடை பேச்சு
‘இந்தியாவில் இதுவரை நாற்பத்தியெட்டு தலைமை நீதிபதிகள் இருந்துள்ளனர். ஆனால் குடிமக்களின் உரிமைகளை நிலைநிறுத்துவதற்கான தைரியம், தியாகம் குறித்து பேசுகின்ற வேளையில், நாம் எப்போதும் இந்தியாவின் தலைமை நீதிபதியாக இருந்திருக்க வேண்டிய ஒருவரையே நினைவுகூருகிறோம். ஜபல்பூர் மாவட்ட கூடுதல் நீதிபதி வழக்கில் தன்னுடைய தனித்த எதிர்ப்புக் குரலுக்காக நீதிபதி எச்.ஆர்.கன்னா எப்போதும் நினைவு கூரப்படுகிறார்’ என்று நீதிபதி குரேஷி கூறினார். இந்திராகாந்தி அரசாங்கத்தால் தலைமை நீதிபதியாகப் பதவி உயர்வு மறுக்கப்பட்ட நீதிபதி எச்.ஆர்.கன்னாவைப் பற்றியே அவர் குறிப்பிட்டுப் பேசினார்.
‘குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதுவே நீதிமன்றங்கள் இருப்பதற்கான ஒரே காரணமாகும். எந்தவொரு நேரடி அவமதிப்புகளைக் காட்டிலும், குடிமக்களின் ஜனநாயக விழுமியங்கள், உரிமைகள் மீது கள்ளத்தனமாக நடத்தப்படுகின்ற அத்துமீறல்களே நம்மைக் கவலையடையச் செய்ய வேண்டும்’ என்று அவர் கூறினார்.
மேலும் அவர் உயர்நீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரைகளை நிராகரித்து வருவதாக உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் போக்கு அதிகரித்து வருவது குறித்து உயர்நீதிமன்றங்களில் எழும் கவலைகள் குறித்தும் பேசினார். ‘உயர்நீதிமன்றங்களால் பரிந்துரைக்கப்படுகின்ற வழக்கறிஞர்கள் பட்டியல் உச்சநீதிமன்றத்தால் மோசமாக சீரமைக்கப்படுவதைப் பார்ப்பது ஆச்சரியம் அளிப்பதாக இருக்கிறது. உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் ஆகியவற்றிற்கு இடையே உள்ள கருத்து வேறுபாட்டிற்கான காரணம் எதுவாக இருந்தாலும் அது சரி செய்யப்பட வேண்டும். இல்லையேல் மிகச் சிறந்த வழக்கறிஞர்களை நீதிமன்ற அமர்வில் சேர வற்புறுத்துவது மிகவும் கடினமாகி விடும்’ என்று அன்றைய தினம் நீதிபதி குரேஷி ஆற்றிய உணர்ச்சிபூர்வமான பிரியாவிடை பேச்சு அவரது சட்டத்துறை சகாக்களின் பாராட்டைப் பெறுவதாக அமைந்திருந்தது.
‘அதில் எனக்கு ஏதாவது வருத்தம் உண்டா என்று கேட்டால் அவ்வாறு எதுவும் இல்லை என்றே கூறுவேன். நான் எடுத்த ஒவ்வொரு முடிவுகளும் என்னுடைய சட்டப்பூர்வ புரிதலின் அடிப்படையிலேயே அமைந்திருந்தன. நான் தவறு செய்திருக்கலாம். பல சந்தர்ப்பங்களில் நான் தவறிழைத்திருப்பதாக நிரூபித்திருக்கிறார்கள். ஆனால் ஒருமுறை கூட என்னிடமுள்ள சட்டப்பூர்வமான நம்பிக்கைக்கு மாறான முடிவுகளை நான் எடுத்ததே இல்லை. தீர்ப்புகள் ஏற்படுத்தப் போகின்ற பின்விளைவுகளின் அடிப்படையில் எந்தவொரு முடிவையும் எடுத்ததில்லை என்ற பெருமையுடன் நான் விடைபெறுகின்றேன். என்னுடைய தனிப்பட்ட முன்னேற்றத்திற்காக அவர்களிடம் நான் மண்டியிட்டிருக்க வேண்டும் என்ற நம்பிக்கை சிலரிடம் இருக்கிறது. ஆனால் முன்னேற்றம் என்று நீங்கள் எதைக் கருதுகிறீர்கள் என்பதைப் பொறுத்ததாகவே அது இருக்கிறது. நான் எங்கே சென்றாலும் வழக்கறிஞர்கள், சக ஊழியர்களிடமிருந்து எனக்குக் கிடைத்த ஆதரவு, அன்பு, பாசம் போன்றவையே கண்ணுக்குப் புலனாகின்ற எந்தவொரு முன்னேற்றத்தைக் காட்டிலும் சிறந்தவையாக உள்ளன. இதை வேறு எந்தவொரு முன்னேற்றத்திற்காகவும் நிச்சயம் நான் மாற்றிக் கொள்ளவே மாட்டேன். வேறு எதையும் பெறுவதற்காக இவற்றை நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்’ என்றார்.
குரேஷி மேலும் ‘நீங்கள் அனைவரும் என் மீது வைத்திருக்கும் பாசம் மற்றும் முன்னேற்றம் என்று சொல்லப்படுவதற்கு இடையே ஒன்றை நான் தேர்வு செய்து கொள்ள வேண்டும் என்ற நிலைமை வந்தால் மிகவும் மகிழ்ச்சியுடன் உங்கள் பாசத்தையே நான் தேர்ந்தெடுத்துக் கொள்வேன்… வாழ்க்கை பின்னோக்கிச் சுழன்று பழையவற்றை மீண்டும் பார்க்க அனுமதிக்கும் என்றால் – அதே குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் எனக்கு அதே நீதிபதி பதவி மீண்டும் வழங்கப்படுமானால், மீண்டும் மீண்டும் அதையே நான் ஏற்றுக்கொள்வேன்’ என்று கூறினார்.
நீதிபதி குரேஷியின் புகழ்பெற்ற நீதித்துறை வாழ்க்கை குஜராத் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக அவர் நியமிக்கப்பட்ட 2004ஆம் ஆண்டில் தொடங்கியது. பின்னர் இறுதியாக 2021 அக்டோபரில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்படுவதற்கு முன்பாக கிட்டத்தட்ட இருபதாண்டுகள் தன்னுடைய நீதித்துறை வாழ்க்கையில் அவர் பல்வேறு பொறுப்புகளில் இருந்தார்.
https://thewire.in/law/i-leave-with-my-pride-intact-rajasthan-chief-justice-kureshi-who-ruled-against-modi-and-shah
நன்றி: வயர் இணைய இதழ்
தமிழில்: தா.சந்திரகுரு
இந்திய கூட்டாட்சி முறையை நரேந்திர மோடி ஐந்து வழிகளில் பலவீனப்படுத்தியிருக்கிறார் – ராமச்சந்திர குஹா | தமிழில்: தா சந்திரகுரு
இந்திய கூட்டாட்சி முறை சமீபகாலமாகவே செய்திகளில் அடிபட்டு வருகிறது. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்க அரசுகளால் வடிவமைக்கப்பட்ட குடியரசு தினப் பேரணி அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப்பட்டது பாரதிய ஜனதா கட்சியைத் தவிர மற்ற கட்சிகளால் ஆளப்படுகின்ற மாநிலங்களின் மீதான அடையாளத் தாக்குதலாகவே கருதப்பட்டது. வெறுமனே குறியீடு என்பதிலிருந்து மாறி பொருள் சார்ந்ததாகி இருக்கின்ற நாடாளுமன்றத்தின் தற்போதைய கூட்டத்தொடர் விவாதங்களில் கலந்து கொண்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலரும் அரசியலமைப்பு விதிமுறைகள், கொள்கைகள் அனைத்தையும் மீறி மாநிலங்களின் உரிமைகளைத் துச்சமென மத்திய அரசு மதித்து வருவதாக கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
1959ஆம் ஆண்டு அரசியலமைப்பின் 356ஆவது பிரிவின் மூலம் கேரளாவில் கம்யூனிஸ்ட் அரசாங்கம் பதவி நீக்கம் செய்யப்பட்டதே இந்திய கூட்டாட்சியின் மீது நடத்தப்பட்ட முதலாவது பெரிய தாக்குதலாக இருந்தது. அந்த நடவடிக்கையைத் தூண்டியவர்களாக காங்கிரஸ் தலைவராக இருந்த இந்திரா காந்தி, உள்துறை அமைச்சரான கோவிந்த் பல்லப் பந்த் ஆகியோர் இருந்தனர். ஆனாலும் அந்தக் குற்றச்சாட்டில் இருந்து அப்போது பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேருவால் தப்ப முடியவில்லை. அந்தச் செயல் ஜனநாயகம் குறித்து நேருவிடமிருந்த நற்சான்றிதழ்கள் மீது ஒரு கறையாகவே படிந்து போனது.
நேரு பிரதமராக இருந்த நீண்ட காலகட்டத்தில் 356ஆவது பிரிவு எட்டு முறை நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. இந்திரா காந்தி பிரதமரான பிறகு அவர் அந்த விதியை அடிக்கடி பயன்படுத்திக் கொண்டார். தான் பிரதமராகப் பணியாற்றிய இரண்டு காலகட்டங்களில் (1966 முதல் 1977 வரை; 1980 முதல் 1984 வரை) அந்தப் பிரிவை இந்திராகாந்தி ஐம்பது முறை – சராசரியாக ஓராண்டிற்கு மூன்று முறைக்கும் சற்று அதிகமாகவே – பயன்படுத்தியிருந்தார்.
திருமதி.காந்தியால் இரண்டு கட்டங்களில் 356ஆவது பிரிவு குறிப்பாக 1970-71ல் காங்கிரஸ் கட்சியைப் பிளவுபடுத்தி மாநில அரசுகளில் தன்னுடைய பிரிவு ஆதிக்கம் செலுத்த விரும்பிய போதும், 1980ஆம் ஆண்டில் மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு தன்னுடைய கட்சியைத் தவிர மற்ற கட்சிகளால் ஆளப்பட்ட பல மாநில அரசுகளை டிஸ்மிஸ் செய்வதற்கும் பயன்படுத்தப்பட்டது.
கூட்டு மனப்பான்மை
இந்திராகாந்தியின் மகன் ராஜீவ்காந்தி பிரதமராக பதவி வகித்த போது நடைபெற்ற தேர்தலில் தோல்வியடைந்த போது இந்திய அரசியலில் இந்திரா காந்தி சகாப்தம் 1989ஆம் ஆண்டு முடிவிற்கு வந்தது. பின்னோக்கிப் பார்க்கும் போது இந்திய கூட்டாட்சியின் பொற்காலமாக இப்போது தோன்றுகின்ற காலகட்டம் அப்போது தொடங்கியிருந்தது. லைசென்ஸ் ராஜ் அகற்றப்பட்டது, பொதுத்தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மையை வழங்காத குடிமக்களின் புத்திசாலித்தனம் போன்றவை பொருளாதார வளர்ச்சியின் எழுச்சி மற்றும் நிர்வாகத்தில் கூட்டு மனப்பான்மையை வளர்ப்பதற்கான வழியை வகுத்துக் கொடுத்தன. மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையே பரஸ்பர மரியாதை இருந்த சூழல் மலர்ந்தது. அதற்கான பலன்களும் கிடைத்தன.
ஆயினும் 2014 மற்றும் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் பாஜக பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்த பிறகு இந்திய கூட்டாட்சி மீண்டும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியது. நரேந்திர மோடி பதவியேற்று இந்த ஏழரை ஆண்டுகளில், 356ஆவது சட்டப்பிரிவு எட்டு முறை அதாவது ஆண்டிற்கு ஒருமுறை என்ற அளவிலே செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த அளவுகோலை மட்டும் வைத்து மதிப்பிடுகின்ற போது இந்திராகாந்தியைக் காட்டிலும் மோடி மாநிலங்களின் உரிமைகளை மதிப்பவராக இருந்திருக்கிறார் என்று சொல்ல முடியும் என்றாலும், வேறு பல வழிகளில் மோடி தனக்கு முந்தைய எந்தப் பிரதமரையும் காட்டிலும் இந்திய கூட்டாட்சி முறையைத் துச்சமென மதித்து அதனை மிகவும் பலவீனமே படுத்தியுள்ளார். அவரது அந்தச் செயல்பாடுகள் குறித்து இங்கே பார்க்கலாம்.
மாநிலங்கள் மீது திணிக்கப்படும் சட்டங்கள்
முதலாவதாக – உருவாக்கப்படுகின்ற முக்கியமான கொள்கைகள் குறித்த்தாக உள்ள மிகவும் முக்கியமான சட்டங்கள் – அந்தச் சட்டங்களைச் செயல்படுத்த வேண்டிய மாநிலங்களைக் கலந்தாலோசிக்காமலேயே இயற்றப்படுகின்றன. இந்த நிலைமை (இப்போது திரும்பப் பெறப்பட்டுள்ள) வேளாண் சட்டங்களைப் பொறுத்தவரை மிகவும் குறிப்பிடத்தக்க வகையில் உண்மையாகவே இருந்திருக்கிறது. கல்வி, கூட்டுறவு, வங்கி போன்ற முக்கியமான விவகாரங்கள் தொடர்பான கொள்கைகளும், சட்டங்களும் ஒன்றிய அரசால் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டு பின்னர் மாநிலங்கள் மீது திணிக்கப்பட்டு வருகின்றன.
சட்டம் ஒழுங்கு அதிகாரத்தைப் பறித்துக் கொண்ட ஒன்றிய அரசு
இரண்டாவதாக – சட்டம் ஒழுங்கு மாநிலம் தொடர்பான விவகாரமாக இருந்த போதிலும், தங்கள் சட்டப்பூர்வ அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதிகளில் தங்களுடைய சட்டங்களை அமல்படுத்துவதற்கான மாநில அரசுகளின் திறனையும், மாநிலங்களுக்கான சுயாட்சியையும் குறைத்து மதிப்பிகின்ற வகையிலேயே மோடி அரசாங்கம் அனைத்தையும் செய்து வந்துள்ளது. சட்ட விரோதச் செயல்பாடுகள் (தடுப்பு) சட்டத்தை (ஊபா) உண்மையான பயங்கரவாதிகளை அடையாளம் கண்டு அவர்கள் மீது பிரயோகிப்பதற்குப் பதிலாக மிகவும் தாராளமாக, பொறுப்பற்ற முறையில் தன்னுடைய அரசியல் அதிருப்தியாளர்களை நசுக்குவதற்காக அமல்படுத்துவது, வரையறுக்கப்பட்ட குறிப்பிட்ட நோக்கத்துடன் 2008ஆம் ஆண்டு மும்பை தாக்குதலைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட தேசிய புலனாய்வு முகமையை அடுத்தடுத்து ஒவ்வொரு மாநிலத்திற்கும் தொடர்ந்து அனுப்பி வைப்பது போன்ற செயல்பாடுகள் மோடி அரசாங்கம் தண்டனையளிக்கும் அதிகாரங்களைத் தனக்குள்ளாக மையப்படுத்தி வைத்துக் கொள்ள முயல்வதை எடுத்துக்காட்டுவதாகவே இருக்கின்றன.
மாநிலங்களுடன் தீவிரமாக ஆலோசனை செய்வதன் மூலம் நாட்டை ஒன்றிணைப்பதற்கான மிகச் சிறந்த வாய்ப்பை கோவிட்-19 தொற்றுநோய் வழங்கியது. ஆனால் அதற்கு முற்றிலும் மாறாக தொடக்கத்தில் இருந்தே மோடி அரசு ஒருதலைப்பட்சமாகவே செயல்பட்டது. பெருந்தொற்றுநோய் என்று அந்த தொற்றுநோயை அங்கீகரிப்பதற்கு முன்பாக மத்தியப் பிரதேசத்தில் புரட்டு வேலைகள், வற்புறுத்தல்களை மேற்கொண்டு பாஜக அரசாங்கம் பதவியேற்றுக் கொள்ளும் வரை மோடி அரசாங்கம் காத்திருந்தது. அந்த வேலை முடிந்த பின்னர் மாநிலங்களையோ அல்லது ஒன்றிய அமைச்சரவையில் உள்ள சகாக்களையோ கலந்தாலோசிக்காமல், நான்கு மணி நேர இடைவெளியில் நாடு முழுவதற்குமான பொதுமுடக்கம் பிரதமரால் அறிவிக்கப்பட்டது.
மாநிலங்களுடன் எந்தவொரு ஆலோசனையையும் மேற்கொள்ள முயலாமல் பொதுமுடக்கத்துடன் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டமும் (NDMA) செயல்படுத்தப்பட்டது. ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அரசாங்கம் வைரஸை வீழ்த்தி விட்டது என்ற பெருமைப் பேச்சுகள் அனைத்தையும் மீறி, அந்தச் சட்டம் இன்னும் நடைமுறையில் இருந்து வருகிறது. மக்கள், பொருட்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் வகையில் அசாதாரணமான அதிகாரங்களை ஒன்றிய அரசிற்கு வழங்குகின்ற அந்தச் சட்டம் இன்னும் சிறிது காலத்திற்கு நடைமுறையில் தொடரக்கூடும்.
குறிப்பிட்ட சில பேரழிவுகளை குறிப்பிட்ட காலக்கட்டத்தில் கையாள்வதற்காக வடிவமைக்கப்பட்ட தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம் இந்த அரசாங்கத்தின் கைகளில் மாநிலங்கள் மீதான தன்னுடைய அதிகாரங்களை அதிகரித்துக் கொள்கின்ற மற்றுமொரு கருவியாக மாற்றமடைந்துள்ளது.
புலனாய்வு அமைப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளல்
மூன்றாவதாக – மத்திய புலனாய்வு அமைப்பு, அமலாக்க இயக்குநரகம் போன்ற புலனாய்வு அமைப்புகளை தன்னை எதிர்க்கின்ற கட்சிகளையும், மாநில அரசுகளையும் பலவீனப்படுத்தவும். அச்சுறுத்தவும் மோடி அரசு பயன்படுத்தி வருகிறது. சிவசேனா, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் போன்ற கட்சிகளில் இருந்த ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட அரசியல்வாதிகளை பாஜகவில் இணைத்துக் கொள்வது அவர்கள் மீதிருந்த கறையைத் தூய்மைப்படுத்துகிற கங்கா ஸ்னானம் போன்று இருக்கிறது என்று சில காலமாகவே சமூக வலைதளங்களில் ஒரு மீம் பரவி வருகிறது.
ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை விசுவாசிகளாக்குவது
நான்காவதாக – தன்னை எதிர்க்கின்ற மாநில அரசாங்கங்களை திட்டமிட்டுத் தாக்கி வருகின்ற மோடி அரசு தனக்கான விசுவாசத்திற்கான தேர்வுகளை இந்தியக் காவல் பணி, இந்திய நிர்வாகப் பணி அதிகாரிகளிடம் மேற்கொள்ள முற்படுகிறது. நவீன ஐஏஎஸ், ஐபிஎஸ் அமைப்புகளை உருவாக்கிய இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான வல்லபாய் படேல், அந்த அமைப்பில் உள்ள அதிகாரிகள் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையில் திறமையான, பயனுள்ள, முக்கியமான பாலமாக இருப்பார்கள்; அரசியல்வாதிகள் இடுகின்ற தவறான உத்தரவுகளைப் பின்பற்றாமல், எப்போதும் அரசியலமைப்பை மனதில் கொண்டு முடிவுகளை எடுப்பவர்களாக இருப்பார்கள் என்றும் கருதினார்.
ஆனால் பட்டேலின் நாற்காலியில் இன்றைக்கு அமர்ந்திருக்கும் அமித்ஷா, தனது அதிகாரிகளிடம் இருந்து தனிப்பட்ட முறையிலான, சித்தாந்த ரீதியிலான கீழ்ப்படிதலைக் கோருபவராக இருக்கிறார். மேற்கு வங்கம், மகாராஷ்டிரா போன்ற பாஜக ஆட்சியில் இல்லாத முக்கியமான மாநிலங்களில் உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மத்தியில் உள்ள ஆளும் ஆட்சிக்கு தாங்கள் விசுவாசமாக இருப்பதாக அறிவிக்க வேண்டிய அழுத்தத்தில் உள்ளனர். இதுபோன்று அரசு ஊழியரை நடத்துகின்ற வக்கிரமான பக்கச்சார்பு கொண்ட பார்வை மத்திய-மாநில உறவுகள், அரசியலமைப்பு சார்ந்த நிர்வாகம் போன்ற சிந்தனைகளுக்கு எதிரானதாகவே அமைந்துள்ளது.
எதிர்க்கட்சிகள் ஆளுகின்ற மாநில அரசுகளைப் பலவீனப்படுத்த மோடி-ஷா ஆட்சி ஆளுநர் அலுவலகங்களையும் தவறாகப் பயன்படுத்திக் கொள்கிறது. இந்தச் செயல் குறிப்பாக மேற்கு வங்கம், மகாராஷ்டிரா மாநிலங்களில் வெளிப்பட்டுள்ளது. குடியரசு வரலாற்றில் இதற்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் தங்கள் கட்சி சார்பை மாநில ஆளுநர்கள் வெளிப்படையாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
தனிநபர் ஆளுமை வழிபாட்டு முறை
ஐந்தாவதாக – அதீத நிறுவன அதிகாரங்களைப் பயன்படுத்தி பிரதமரின் ஆளுமை வழிபாட்டு முறையை விரிவுபடுத்திக் கொண்டிருக்கும் செயல் மாநிலங்களும் மையமும் சம பங்காளிகளாக இருக்கின்ற கூட்டாட்சி குடியரசாக இந்தியா இருக்கின்றது என்ற எண்ணத்தைப் பலவீனப்படுத்தியிருக்கிறது. கல்வி, சுகாதாரம், சமூக நலன் தொடர்பாக மாநிலங்களில் செயல்படுத்தப்படுகின்ற திட்டங்களில் நரேந்திர மோடியின் புகைப்படத்துடன் இருக்கின்ற தனிப்பட்ட முத்திரை அவர்களிடமுள்ள ஆழ்ந்த சர்வாதிகார மனநிலையையும், மாநிலங்களுடன் பாராட்டைப் பகிர்ந்து கொள்வதில் உள்ள அச்சத்தையுமே பிரதிபலிக்கிறது.
பிரதமரைச் சுற்றி இருந்து வருகின்ற ஆளுமை வழிபாட்டு முறை மாநிலங்கள் மீது அங்கீகரிக்கப்படாத நிதிச் சுமையைச் சுமத்தியுள்ளது. இது தொடர்பாக பிஎம்-கேர்ஸ் நிதியின் கட்டமைப்பைக் கவனியுங்கள். ரகசியமாக மறைக்கப்பட்டு, பொறுப்பேற்பு எதுவுமில்லாத அந்த நிதி கூட்டாட்சிக் கொள்கையை மீறுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்களின் சமூகப் பொறுப்பேற்பு என்ற அடிப்படையில் பிஎம்-கேர்ஸ் நிதிக்கு அளிக்கப்படுகின்ற பங்களிப்புகளை வரிச் சலுகைகளாகக் கருதி தள்ளுபடி செய்யலாம் என்றிருக்கின்ற நிலையில் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு பங்களிக்க விரும்புபவர்களுக்கு அந்தச் சலுகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இறுதியாக இந்திரா காந்தியுடன் ஒப்பிடுகையில் நரேந்திர மோடி 356ஆவது சட்டப்பிரிவை ஒப்பீட்டளவில் மிக அரிதாகவே பயன்படுத்தியிருக்கிறார் என்றாலும், சட்டப்பூர்வமாக உருவாக்கப்பட்ட மாநிலத்தை ஒழித்த ஒரே பிரதமர் என்ற பெருமை அவருக்கு மட்டுமே சொந்தமாகியுள்ளது. கோவா, அருணாசலம், நாகாலாந்து, மணிப்பூர், திரிபுரா, ஹிமாச்சல் பிரதேசம் போன்றவை யூனியன் பிரதேசங்களாக இருந்து இறுதியில் மாநிலங்களாக மாறியவை. ஆனால் மோடி ஆட்சியின் சட்டப்பூர்வ சாமர்த்தியம் (மக்களின் விருப்பத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் ஆளுநர் கூறிக் கொண்டார்) ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகத் தரம் தாழ்த்தும் வகையில் பயன்படுத்திக் கொள்ளப்பட்ட போது ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநில நிலைமை முற்றிலும் மாறாக வேறு வழியிலே செல்ல வேண்டியிருந்தது. மதவெறித் தொனியுடன் ஆணவம், தற்புகழ்ச்சி கொண்ட இந்தச் செயல் நிச்சயமாக இந்தியப் பிரதமர் ஒருவரால் இந்திய கூட்டாட்சிக் கொள்கையின் மீது நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதலாகவே உள்ளது.
ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு வெளியே மாநிலங்களின் உரிமைகளைப் பலவீனப்படுத்துவதற்காக 356ஆவது பிரிவைக் காட்டிலும் நுட்பமான கருவிகளை மிகத் தெளிவான வெற்றியுடன் நரேந்திரமோடியும் அமித்ஷாவும் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். ஊடகங்களின் ஒத்துழைப்புடன் நமது சிறந்த பொதுப் பல்கலைக்கழகங்களை அழித்தல், ஆயுதப் படைகளை அரசியல்மயமாக்குதல், பெரும்பான்மையினரின் நெறிமுறைகளுக்கு ஊக்கமளித்தல், நமது குடியரசின் கூட்டாட்சி கட்டமைப்பின் மீது நடத்தப்படுகின்ற பன்முனைத் தாக்குதல்கள் ஆகியவையே புதிய இந்தியாவின் முக்கியமான சாதனைகளாக இருக்கின்றன.
https://scroll.in/article/1017231/ramachandra-guha-five-ways-in-which-narendra-modi-is-weakening-indian-federalism
நன்றி: ஸ்க்ரோல் இணைய இதழ்
தமிழில்: தா.சந்திரகுரு
தமிழ்நாட்டில் தோல்வி காணும் ஆர்எஸ்எஸ்சின் வகுப்புவாத திட்டங்கள் – சசிகாந்த் செந்தில்
மாவட்ட நீதிபதி என்ற முறையில் முதன்முதலாக மங்களூரு மாவட்டச் சிறைச்சாலையில் நான் மேற்கொண்ட ஆய்வு என்னுடைய கண்களைத் திறந்து விட்டது. அந்தச் சிறையிலிருந்த இரண்டு பகுதிகள் ஒன்றிலிருந்து மற்றொன்று முழுமையாகத் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டிருந்தன. சிறைக்குள்ளிருந்த அனைத்து வகையான கைதிகளையும் முஸ்லீம்கள், ஹிந்துக்கள் என்று அந்த இரண்டு பகுதிகளும் தங்களுக்குள்ளாகப் பிரித்து வைத்துக் கொண்டிருந்தன. வகுப்புவாத வெறி மட்டுமே அந்த இரண்டு பகுதிகளுக்கிடையில் பொதுவானதாக அந்தச் சிறைக்குள்ளாக நிறைந்திருந்தது. அங்கிருந்த சில பகுதிகள் மிகவும் தீவிரமான களமாக சிறை அதிகாரிகளால்கூட அணுக முடியாதவையாக இருந்ததால் அந்த அதிகாரிகள் என்னை மிகவும் எச்சரித்தனர். ஆனாலும் விடாப்பிடியாக அங்கிருந்த மனிதர்களின் கதைகளையும், வகுப்புவாத திட்டங்கள் காஸ்மோபாலிட்டன் பன்மைக் கலாச்சாரத்தை சிதைத்து எவ்வாறு செழித்து வருகின்றன என்பதையும் அறிந்து கொள்வதில் நான் மிகுந்த ஆர்வம் கொண்டவனாகவே இருந்தேன்.
பல்வேறு நபர்களுடன் தொடர்புகளை உள்ளடக்கி அந்த மாவட்டத்தில் எனக்கு கிடைத்த அந்த இரண்டு ஆண்டு நீண்ட பதவிக்காலம் வகுப்புவாதப் பிரச்சனை குறித்த முறையான புரிதலை என்னிடம் கொண்டு வந்து சேர்த்தது. இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வகுப்புவாதத் திட்டங்களின் தோற்றம், தக்க வைத்தல் என்று அனைத்தும் ஒரு குறிப்பிட்ட வடிவத்துடனே இருந்து வருகின்றன. அதிலிருந்து கிடைக்கின்ற படிப்பினைகள் இன்று தாக்குதலைச் சந்தித்துக் கொண்டிருக்கும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களைப் பொறுத்தவரை குறிப்பிடத்தக்கவையாகவும் இருக்கின்றன.
அதை இங்கே நேரடியாகவே முன்வைக்கிறேன்: குறிப்பிட்ட இடத்தை வகுப்புவாதமயமாக்குகின்ற செயல்பாடுகள் மக்களைத் துருவமயப்படுத்துவது, தேர்தல் ஜனநாயகச் செயல்முறை மூலமாக அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்று ஒற்றை நோக்கத்துடனே மேற்கொள்ளப்படுகின்றன. அந்தச் செயல்பாடுகள் ஒருபோதும் பெரும்பான்மையினரைப் பாதுகாப்பது அல்லது சிறுபான்மையினரைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் நோக்கங்களுடன் மேற்கொள்ளப்படுவதில்லை. மூடிய அறைகளுக்குள்ளாக வலதுசாரி தீவிரவாதிகளுடன் பலமுறை நடைபெற்ற உரையாடல்கள் ஒரு விஷயத்தை எனக்குத் தெளிவுபடுத்திக் காட்டியிருந்தன. ‘தர்மம்’ பாதுகாக்கப்பட வேண்டும் என்று அவர்களிடமிருந்த ஆர்வம் உண்மையில் கேலிக்கூத்தாகவே இருந்தது. மக்களை துருவமயப்படுத்துவதை தங்களுக்கான அதிகாரத்தைப் பெறுவதற்கான கருவி என்று அவர்கள் நன்கு கண்டறிந்து கொண்டுள்ளனர். அதைத் தவிர வேறு நோக்கம் எதுவும் அவர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை.
ஹிந்து வலதுசாரி அமைப்புகள் மூன்று அடுக்குகளைக் கொண்டுள்ளன. ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (RSS) என்பது அறிவுசார்ந்து இயங்கக் கூடியவர்களை மற்றும் நேரடியாகக் களத்தில் வேலை செய்பவர்களைக் கொண்டது. பாரதிய ஜனதா கட்சி என்பது அதன் அரசியல் பிரிவு. மேலும் அதன் பல துணை அமைப்புகள் முன்னணியில் நின்று செயல்படுகின்ற அமைப்புகளாக இருக்கின்றன.
அவர்களிடம் இருக்கின்ற வகுப்புவாத திட்டம் ஒன்றன் பின் ஒன்று என்று நான்கு தனித்தனி நிலைகளைக் கொண்டதாக இருக்கின்றது.
நிறுவன அமைப்புகளை உருவாக்குதல்
இந்த நிலை அனைத்து நிலைகளிலும் முதன்மையானதாக, தனக்கென்று தேவைப்படுகின்ற காலத்தை எடுத்துக் கொண்டு நிகழக்கூடியதாக உள்ளது. இதைத்தான் ஆர்எஸ்எஸ் அமைப்பு 1925ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட போது அடுத்த நூறு ஆண்டுகளில் அமைதியாகச் சாதித்துக் கொள்ள நினைத்தது. இளைஞர்கள் சிலர் உள்ளூர்ப் பள்ளி மைதானங்களில் பானை வயிற்றுடன் இருக்கின்ற சிலரைத் தவறாமல் சந்தித்து வருவதைக் கவனித்திருக்கலாம். இந்த அமைப்புதான் அதுபோன்ற இடங்களில் கட்டப்படுகிறது. சேவை, ஒழுக்கம், தேசியவாதம் என்ற பெயரில் வகுப்புவாத வெறியர்களை உருவாக்குவதற்கான களமாக ‘ஷாகாக்கள்’ (கிளைகள்) என்றழைக்கப்படுகின்ற அமைப்பு அவர்களிடம் இருக்கின்றது. ஷாகாவில் கலந்து கொண்ட எவருடனும் பேசிப் பார்த்தால் ‘அது வகுப்புவாத வெறுப்பு கொண்டதாக இருக்கவில்லை. சேவை, தேசபக்தி பற்றி மட்டுமே பேசுவதாக உள்ளது’ என்று உறுதியுடன் அவர்கள் கூறுவதைக் கேட்க நேரிடும். இது போன்ற விஷயங்களில் அறிவார்ந்த உரையாடலை உருவாக்குவது, சமூக-பொருளாதார ரீதியாக அதிகம் பாதிக்கப்பட்டிருப்பவர்களை தங்களுடைய வெளிப்படையான நடவடிக்கைகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள துணை அமைப்புகளில் நியமித்துக் கொண்டு செயல்படுவது போன்றவையே ஷாகா என்ற அந்த அமைப்பின் செயல்பாடுகளாகும்.
இந்தக் கட்டமைப்பின் இரண்டாம் கட்டமாக ‘ஹனுமன் சேனா’, ‘ஹிந்து முன்னணி’, ‘ஹிந்து ஜாக்ரன் வேதிகே’ போன்ற துணை அமைப்புகளின் வளர்ச்சி அமைந்துள்ளது. இதுபோன்ற துணை அமைப்புகள் அனைத்தும் தங்களை நேரடியான நடவடிக்கைகளில் ஈடுபடுத்திக் கொள்கின்ற முன்னணி அமைப்புகளாகும். அவை அரசு நிர்வாகத்தையும், மக்களையும் இலக்காகக் கொண்டு வகுப்புவாதச் சாயல் கொண்ட பிரச்சனைகளை உருவாக்குகின்றன. ‘உயர்தட்டில்’ இருப்பவர்களால் புதிய அடையாளம், ஏற்றுக்கொள்ளல் போன்றவை உறுதியளிக்கப்பட்டுள்ள மிகவும் தாழ்த்தப்பட்ட சாதி, வர்க்கத்தைச் சார்ந்தவர்களாலேயே இந்த துணை அமைப்புகள் அனைத்தும் நிரப்பப்பட்டுள்ளன. அவர்களால் நிகழ்த்தப்படுகின்ற வன்முறையின் பெரும்பகுதி இந்த துணை அமைப்புகளிடமே விடப்பட்டுள்ளதால் ஆர்எஸ்எஸ் எந்தவொரு வன்முறையையும் பரப்புவதில்லை என்ற கருத்து ஓரளவிற்கு உண்மை என்பதாகவே பலருக்கும் தோன்றும். அவர்களால் வழக்கமாக நடத்தப்படுகின்ற கூட்ட அமர்வுகளில் நேரடி நடவடிக்கைக்கான நிகழ்வுகள் குறித்து விவாதிக்கப்படுகின்றன. தங்களுக்கான கணிசமான நிதியுதவி, ஆதரவை ஆர்எஸ்எஸ், பாஜகவிடம் இருந்தே இந்த துணை அமைப்புகள் பெற்றுக் கொள்கின்றன.
மக்களிடையே ஆர்எஸ்எஸ்சின் இத்தகைய நிறுவனக் கட்டமைப்பு ஏற்படுத்தப்படுவதை தமிழ்நாடு போன்ற மாநிலங்களால் தடுத்து நிறுத்த முடிந்திருக்கிறது. மாநிலத்தில் முதலமைச்சராக இருந்த, பக்தி நிறைந்த ஹிந்துவான ஜெயலலிதா அவர்களுடைய இந்தக் கட்டமைப்பை அனுமதிக்கக் கூடாததன் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டவராகவே இருந்தார். தன்னுடைய பதவிக்காலத்தில் ஆர்எஸ்எஸ் வழக்கமாக நடத்துகின்ற அனைத்து ஊர்வலங்களுக்கும் தடை விதித்திருந்த அவர் 2014ஆம் ஆண்டில் ஆர்எஸ்எஸ் நிறுவனர் தினத்தைக் கொண்டாடுவதற்காகக் கூடியிருந்த ஆர்எஸ்எஸ் மாநாட்டை தடுத்தும் நிறுத்தினார். அவரது மறைவிற்குப் பிறகு ஆர்எஸ்எஸ் உடனடியாகச் செயல்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளில் ஆர்எஸ்எஸ் தனது ஷாகாக்களின் எண்ணிக்கையை 1,355ல் இருந்து 2,060 என்று அதிகரித்துக் கொண்டிருப்பதாகவும், தமிழ்நாட்டில் மட்டும் ஷாகாக்களில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்திலிருந்து இருபத்தைந்தாயிரமாக அதிகரித்துள்ளது என்றும் கூறப்படுகிறது.
அவர்களுடைய அமைப்பு ரீதியிலான கட்டமைப்பு தமிழ்நாட்டில் உச்சக்கட்டத்தை எட்டாமலிருப்பதே ‘வேல் யாத்திரை’ (ரத யாத்திரை போன்றது) போன்று மாநிலத்தில் துருவமுனைப்பை ஏற்படுத்த அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி பெறாததற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. ஆனாலும் ஆர்எஸ்எஸ் அமைப்பு உள்நாட்டில் கணிசமான வேலைகளைச் செய்து வருவதோடு தொடர்ந்து அதில் தீவிரமாக ஈடுபட்டும் வருகிறது. போதுமான நிறுவன பலத்தை அடைகின்ற போது அவர்களுடைய அமைப்பு ‘துருவமுனைப்பு நிலை’ என்ற இரண்டாவது நிலைக்கு நகர்கிறது.
துருவமுனைப்பை உருவாக்குதல்
தாங்கள் ‘பாதிக்கப்பட்டவர்கள்’ என்ற பொதுவான உணர்வை பெரும்பான்மை சமூகத்தினரிடையே உருவாக்குவதைச் சுற்றியே இந்த அடுத்த கட்டம் அமைகின்றது. நிர்வாகம் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய கட்டாயத்தை உருவாக்கும் வகையில் பிரச்சனைகளை ஏற்படுத்துவதன் மூலம் இந்தக் கட்டம் எட்டப்படுகிறது. ஹிந்து மத நூல் குறித்து தரக்குறைவான கருத்துக்களை வெளியிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட ‘கறுப்பர்கூட்டம்’ என்ற யூடியூப் சேனலைச் சுற்றி தமிழ்நாட்டில் பாஜகவால் உருவாக்கப்பட்ட சர்ச்சை; மனுஸ்மிருதி குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரான தொல்.திருமாவளவன் வெளியிட்ட கருத்துகளைச் சுற்றி உச்சஸ்தாயியில் எழுப்பப்பட்ட குரல்கள் இந்தக் கட்டத்தை எட்டுவதற்கான அவர்களுடைய முயற்சிகளுக்கான எடுத்துக்காட்டுகளாக இருக்கின்றன.
கால்நடைகளைக் கொண்டு செல்வதற்குத் தடை, தார்மீகக் கண்காணிப்பு, கட்டாய மதமாற்றம் குறித்த புகார்கள், பொது இடங்களில் காவிக் கொடிக்கம்பங்களை நிறுவுவது என்று நிர்வாகத்தைத் தலையிடத் தூண்டுகின்ற பிரச்சனைகளை எழுப்புவதிலேயே அவர்களுடைய துணை அமைப்புகள் தங்களைத் தொடர்ந்து ஈடுபடுத்திக் கொள்கின்றன. அவர்கள் நிர்வாகம் எடுக்கின்ற நடவடிக்கைகளை – பெரும்பான்மைச் சமூகத்திற்கு எதிராக ஒருசார்புடையதாக நிர்வாகம் இருக்கிறது, அது தங்களுடைய வகுப்புவாத உணர்வுகளுக்கு ஆதரவாக இருக்கவில்லை என்று நிர்வாகத்திற்கு எதிரான உணர்வை பொதுமக்களிடையே உருவாக்குகின்ற வகையிலேயே பயன்படுத்திக் கொள்கின்றனர். நிர்வாகம் ‘சிறுபான்மையினரைத் திருப்திப்படுத்துகின்ற’ வகையில் தன்னை எவ்வாறு ஈடுபடுத்திக் கொள்கிறது என்பதைக் காட்டுகின்ற பிரச்சாரமும் அவர்களால் முன்னெடுக்கப்படுகிறது.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சமீபத்தில் அரியலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவி ரேஷ்மாவின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மரணம் கட்டாய மதமாற்றத்தின் காரணமாக நடந்தது என்று குற்றம் சாட்டினார். மக்களைத் துருவமயப்படுத்துவதற்கான அவர்களுடைய முயற்சிகளுக்கான எடுத்துக்காட்டாகவே அவரது அந்தச் செயல்பாடு அமைந்திருந்தது. அந்தச் சிறுமியின் வீடியோ மற்றும் பிற விவரங்களை வெளியிடுவது போக்சோ (POCSO) மற்றும் சிறார் நீதிச் சட்டங்களின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் என்ற உண்மையை முற்றிலுமாகப் புறக்கணித்தே முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை செயல்பட்டிருந்தார்.
‘இந்த வழக்குடன் தொடர்புடைய சிறுபான்மை கிறிஸ்தவ நிறுவனத்தை மூட வேண்டும், மாநிலத்தில் கட்டாய மதமாற்றங்களைத் தடுக்கும் சட்டம் இயற்றப்பட வேண்டும்’ என்ற கோரிக்கைகளை முன்வைத்த அவர் முழுக்க முழுக்கப் பொய்களின் அடிப்படையில் அந்த மரணத்தைச் சுற்றி மாபெரும் பிரச்சாரத்தை உருவாக்கினார். அந்தக் கட்சி மதரீதியான சிந்தனைகள் குறித்து சமூகத்திற்குள் இருந்து வருகின்ற ‘அலட்சியத்தை’ சீர்குலைப்பது குறித்து மட்டுமே கவலைப்படுவதை இதுபோன்ற விவகாரங்கள் அவர்களால் பெரும்பாலும் தர்க்கரீதியான முடிவுக்கு எடுத்துச் செல்லப்படாமல் இருப்பதிலிருந்தே நம்மால் அறிந்து கொள்ள முடியும். சமூகத்தில் உள்ள அந்த அலட்சியம் நீங்கிய பிறகு அவர்களுடைய கட்சி அடுத்த பிரச்சனைக்குச் சென்று விடும். ஆயினும் அவர்களுடைய பிரச்சாரம் சமூகத்திற்குள் வகுப்புரீதியாக துருவமயப்படுத்தப்பட்ட கிருமிகளைச் செலுத்தி, தொடர்ந்து சமூகத்தில் அதற்கான பலனை அவர்களுக்கு ஏற்படுத்தித் தருவதாகி விடும்.
வெளித்தோற்றத்தில் தங்களை யாருக்கும் தீங்கு விளைவிக்காதவர்களாகக் காட்டிக் கொள்ளும் ஷாகா உறுப்பினர்கள் நேரடியாக வீடுகளுக்கே செல்வதன் மூலம் இதுபோன்ற நடவடிக்கைகளை அதிகரித்துக் கொள்கின்றனர். தாம்பூலம் (ஹிந்துக்கள் பின்பற்றுகின்ற மங்களகரமான வாழ்த்து) வழங்குவதன் மூலமாக ஆர்எஸ்எஸ் அமைப்பு கடந்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டில் சேரிகளில் உள்ள பதினெட்டு லட்சம் வீடுகளில் மக்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டிருப்பது நன்கு அறிந்த ஒன்றாகவே உள்ளது. பிரச்சாரப் பொருட்களும் அதிக அளவிலே அச்சிடப்பட்டு அவர்களால் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் ஆர்எஸ்எஸ் பிரச்சார இதழான ‘ஹிந்து சங்க செய்தி’ நாற்பதாயிரம் பிரதிகளுக்கு மேல் விநியோகிக்கப்பட்டுள்ளது.
ஆர்எஸ்எஸ்சின் அரசியல் பிரிவான பாஜக இதுபோன்ற நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபடாமல், தேவைப்படுகின்ற பொருட்கள், நிதி உதவியை மட்டுமே வழங்கி வருகிறது. துணை அமைப்புகளில் உள்ளவர்கள் சட்டச் சிக்கல்களில் மாட்டிக் கொள்கின்ற போது அவர்களைப் பாதுகாப்பதில் பாஜகவின் தீவிரமான பங்கு இருப்பதைக் காண முடிகிறது. அனைத்து குற்றச் செயல்களிலிருந்தும் தன்னைத் தனியாக விடுவித்துக் கொள்கின்ற பாஜக இந்த மும்முனை அணுகுமுறையின் மூலமாக நடத்தப்படுகின்ற துருவமுனைப்புத் திட்டத்தின் பலனை அரசியல் ரீதியாக அறுவடை செய்து கொள்கின்ற நிலையில் தன்னை இருத்திக் கொள்கிறது.
துருவமுனைப்பிற்காக மிகச் சாதாரணமாக மேற்கொள்ளப்படுகின்ற எளிமையான முயற்சிகளாக இருக்கின்ற இதுபோன்ற செயல்கள் சிறுபான்மை சமூகத்திடம் பழிவாங்கும் செயல்களைச் தூண்டிவிடுவதன் மூலமாக தங்களை இயல்பானவையாக்கிக் கொள்ளும் வரையிலும் தொடர்கின்றன. சிறுபான்மை சமூகத்திடம் உருவாகின்ற பழிவாங்கும் செயல்கள் மூலமாக துருவமுனைப்பு இயல்பாக்கப்பட்ட பிறகு துருவமுனைப்பு சுழற்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் வகையிலே கிடைக்கின்ற ஒவ்வொரு வாய்ப்பையும் அவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்கின்றனர். பின்னர் அது இரண்டு சமூகங்களுக்கிடையில் நேரடியாகத் தாக்கிக் கொள்வது, கொலைகளைச் செய்வது என்ற கட்டத்தை நோக்கித் தள்ளப்படுகிறது. நிகழ்கின்ற ஒவ்வொரு மரணமும் அடுத்த நகர்விற்கான ஆதாரப் புள்ளியாகப் பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றது. இறந்த உடல்களைக் கொண்டு நடத்தப்படும் ஊர்வலங்கள் பெரும்பான்மையினரிடம் உள்ள ‘தாங்கள் பாதிக்கப்பட்டவர்கள்’ என்ற உணர்வை அதிகரிக்கவும், நிர்வாகத்திற்குப் புதிய பிரச்சனைகளை ஏற்படுத்தவும் பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றன. இதுபோன்ற திட்டங்களே 2002ஆம் ஆண்டு குஜராத்திலும், அதற்குப் பிறகு 2008 ஆகஸ்ட் மாதத்தில் கந்தமாலிலும் அவர்களுடைய கீழ்த்தரமான, கொலைகாரத் திட்டங்களுக்காக வேலை செய்தன. அவர்களுடைய பிரச்சாரத்தைப் பெருக்கிக் காட்டுவதில் ஒற்றைத்தன்மை கொண்ட சமூக ஊடகத்தின் பங்கு நன்கு அறியப்பட்டதாகவே இருக்கிறது. அது குறித்து ஏற்கனவே மிகவும் விரிவாக எழுதப்பட்டுள்ளது.
அதிகாரத்தைக் கைப்பற்றுதல்
துருவமுனைப்புக் கட்டம் சாதகமான நிலைமையைக் களத்தில் உருவாக்கித் தரும் போது, தேர்தல்கள் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்ற வகுப்புவாதப் பிரச்சனைகளை அவர்கள் முன்னிலைப்படுத்திப் பயன்படுத்திக் கொள்கின்றனர். சிறுபான்மை சமூகத்தினருடன் இணைந்து கொள்வது, ஊழல்களில் ஈடுபடுவது, பெரும்பான்மை சமூகத்தின் உணர்வுகளைப் பாதுகாக்க அரசாங்கமும், நிர்வாகமும் தவறியுள்ளது என்பது போன்ற பிரச்சாரங்களே அவர்களால் தேர்தல்களுக்காக மேற்கொள்ளப்படுகின்றன. இதுபோன்றதொரு மிகவும் ஆபத்தான கலவையான பிரச்சாரத்திற்கு பெரும்பான்மை சமூகத்தில் உள்ள தாராளவாதிகள்கூட இரையாகி விடும் போது அந்தப் பிரச்சாரம் அவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் சென்று முடிவடைகிறது.
மனிதவளம் சார்ந்த ஆதரவை ஆர்எஸ்எஸ் அமைப்பு வழங்கிட, தேர்தல்கள் குறித்த நுண்ணிய மேலாண்மை, கருத்துகளை உருவாக்கும் கலையை பாஜக மிகவும் கச்சிதமாக உருவாக்கி வைத்திருக்கிறது. சங்பரிவாரத்தைக் கொண்டு வாக்குச்சாவடி நிர்வாகம் மிக விரைவிலேயே தொடங்கி விடுகிறது. ஒரு வாக்குச்சாவடிக்கான வாக்காளர் பட்டியலை அவர்கள் மூன்று வகைகளாகப் பிரித்துக் கொள்கின்றனர். ஏ-பட்டியலில் பொதுவாக வலதுசாரி சக்திகளுக்கு வாக்களிக்கும் வாக்காளர்களும், சி-பட்டியலில் எந்தவகையான பிரச்சாரத்தையும் பொருட்படுத்தாது வாக்கே அளிக்காதிருப்பவர்களும் இருக்கின்றனர். அந்தப் பட்டியலில் பெரும்பாலும் பிற சமூகங்கள், மதங்களைச் சேர்ந்தவர்களே இருப்பார்கள். பி-பட்டியலானது எந்த முடிவும் எடுக்காது இருப்பவர்களைக் கொண்ட பட்டியலாக இருக்கும். இந்த பி-பட்டியலில் இருக்கின்ற பலரையும் ஏ-பட்டியலில் இருப்பவர்களாக மாற்றும் பொறுப்பு ஆர்எஸ்எஸ்காரர்களிடம் அளிக்கப்படுகிறது.
வாக்குச்சாவடி நிர்வாகத்தை தேர்தல்களின் போது நடைபெறுகின்ற வாக்குப்பதிவு கண்ணோட்டத்தில் மட்டுமே பயன்படுத்துபவையாக மற்ற அரசியல் கட்சிகள் இருந்து வருகின்றன. ஆனால் அதேவேளையில் வலதுசாரிகள் வாக்குச்சாவடி நிர்வாகத்தை கருத்து திணிப்பு மற்றும் உருவாக்கத்திலிருந்து தொடங்கி பின்னர் வெளிப்படையான துருவமுனைப்பு என்பதாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். அதுவே இவர்கள் இருவருக்கும் இடையே உள்ள முக்கியமான வேறுபாடாக உள்ளது. வாக்குச் சாவடிகளில் எத்தனை பேர் ஏ-பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்ற கணிப்புகளைக் கணக்கிடுவதற்காக பாஜகவின் அனைத்து முகவர்களும் வாக்கு எண்ணிக்கையின் போது கடைசி வாக்கு எண்ணப்படும் வரை அங்கேயே தங்கியிருப்பதைக் காண முடியும்.
நிறுவனங்களின் மீதான தாக்குதல்
ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியதும், பெரும்பான்மை சமூகத்தின் மீதான தங்களுடைய வெளிப்படையான சார்புநிலையை வெளிப்படுத்துவதற்காக ஜனநாயக நிறுவனங்களை முற்றிலுமாகக் கைப்பற்றிக் கொள்ளும் வகையில் அவர்களால் அரசு இயந்திரம் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது. சிறுபான்மையினரை அச்சுறுத்துவதற்கும், சிறுபான்மை மதத்தவரில் தீவிரமாக இயங்குபவர்களை பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வைக்கும் வகையிலும் அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இந்த இடத்தில்தான் அதிகாரத்துவ அமைப்பு ஒருபக்கச்சார்பற்ற நிர்வாகத்தை வழங்குவது, அரசியலமைப்பு விழுமியங்களைப் பாதுகாப்பது போன்ற செயல்களைச் செய்யத் தவறுகின்ற அமைப்பாக மாறுகின்றது.
வெளிப்படையான ஆதரவை வழங்குவதற்காக எதிர்மறையான, நேர்மறையான ஊக்கங்களை அளிப்பதன் மூலம் ஊடகங்கள் போன்ற பிற நிறுவனங்களும் கைப்பற்றப்படுகின்றன. ‘சிறுபான்மையினர் குற்றவாளிகள்’ என்ற கோட்பாட்டைப் பிரச்சாரம் செய்ய கூடுதல் முயற்சிகளை எடுத்துக் கொள்வதன் மூலம் ஆளும் கட்சியிடம் தனக்குள்ள விசுவாசத்தை நிரூபித்துக் கொள்ள அதிகாரத்துவ அமைப்பு முயல்கிறது. இவ்வாறு நிறுவனங்கள் கைப்பற்றப்பட்ட பிறகு அமைப்பின் மீது தங்களுக்குள்ள நம்பிக்கையை இழந்து போகின்ற சிறுபான்மைச் சமூகம் சுயமாகச் செயல்பட முயல்கின்றது. அதன் விளைவாக அதுபோன்ற நிலைமைகள் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகி விடுகின்றன.
இந்த நான்கு நிலைகளையும் கடந்த பிறகு, சிறுபான்மையினரைக் கட்டுக்குள் வைத்திருக்கும் வகையிலே பல்வேறு சம்பவங்களைப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் அந்தச் சுழற்சி நீட்டித்து வைத்துக் கொள்ளப்படுகிறது. இரு குழுக்களிடமும் பாரபட்சமற்ற முறையில் செயல்பட்டு அதிகாரத்துவ அமைப்பு நிலைமையை மீட்டெடுக்கும் வரை இந்த சுழற்சி ஒரு வகையில் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது. ஆயினும் அது சமூக கட்டமைப்பிற்கு, குறிப்பாக இளைஞர்களிடம் சேதத்தை ஏற்படுத்தி விடுகிறது. வகுப்புவாதமானது தனிப்பட்ட குடும்பங்களை, மாவட்டம் அல்லது மாநிலத்தின் பொருளாதாரத்தைப் பாதிக்கின்றது என்பதை நினைவில் கொள்வது மிகவும் அவசியம். தார்மீக எதேச்சாதிகாரத்தை நோக்கிய ஆபத்தான இந்தச் சுழல் மிக விரைவில் பரவி பெரும்பான்மை சமூகத்தின் மீதும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. இதன் விளைவாக எந்தவிதமான மனச்சஞ்சலமும் இல்லாமல் அப்பட்டமான ஆணாதிக்க கருத்துகளை வெளிப்படுத்துகின்ற புதிய தார்மீகக் காவலர்கள் உருவாக்கப்படுவார்கள். சந்தேகம் மற்றும் அவநம்பிக்கை நிறைந்த சூழ்நிலையால் ஏற்படுத்தப்படும் அதிகபட்ச சுமையை பெண்களும், பொருளாதாரமுமே தாங்கும் நிலை ஏற்படும்.
தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் மிக வேகமாக முன்னேறி வருகிறது. தற்போது சமூக-பொருளாதார அடிப்படையில் மிகவும் வளர்ந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருந்து வருகிறது. வகுப்புவாதத் திட்டம் மிகவும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டிருக்கும் பிற இடங்களிலிருந்து இந்த மாநிலம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளமாக உள்ளன. தங்களுடைய துருவமுனைப்பு முயற்சிகளுக்கு அதிக ஆதரவை தமிழ்நாட்டில் இதுவரையிலும் பெற முடியாத வலதுசாரிகள் தமிழ் மொழி, தமிழ்க் கடவுளர்கள் தொடர்பாக புதிய கதைகளுடன் தங்களுடைய முயற்சிகளை மீண்டும் ஆரம்பித்துள்ளனர். அவை அம்பேத்கரிய-பெரியாரிய திராவிட சிந்தனை கொண்ட தலைவர்களுக்கு எதிராக அறிவுஜீவித்தனமற்ற தோரணைக்கான எடுத்துக்காட்டாகவே இருக்கின்றன.
முடிவெடுக்காது இருப்பவர்களை ஹிந்துத்துவா எல்லைக்குள் கொண்டு வருவதே அவர்களுடைய நோக்கமாக இருக்கிறது. தமிழ்நாடு இதுபோன்ற சமிக்ஞைகளை முன்கூட்டியே எதிர்பார்த்து இந்த பிற்போக்குச் சக்திகளை அண்ட விடாமல் தொலைவிலேயே வைத்திருக்க வேண்டும். தேர்தல்களில் வலதுசாரி சக்திகளுக்கு ஏற்படுகின்ற அரசியல் தோல்வியைக் கொண்டு தமிழ்நாடு தன்னுடைய விழிப்புணர்வை முடிவுக்குக் கொண்டு வந்து விடக்கூடாது. மாநிலத்திற்குள் ஆர்எஸ்எஸ், அதன் துணை அமைப்புகளின் வளர்ச்சி தொடர்ந்து கண்காணித்து வரப்பட வேண்டும். ஒவ்வொரு தனிநபரும் ஆர்எஸ்எஸ்சின் துருவமுனைப்படுத்தும் திட்டம் தங்கள் குழந்தைகள், குடும்பங்கள் மீது ஏற்படுத்தப் போகின்ற நீண்டகால விளைவுகளைப் பற்றி அவசியம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
முதன்முதலாக மங்களூர் சிறையில் நான் பார்த்த அங்கே அடைக்கப்பட்டிருந்த இரு சமூகத்தினர்களில் எழுபது சதவிகிதம் பேர் நமது குடும்பங்களில் உள்ள வாலிபர்களைப் போல வயதில் மிகவும் சிறியவர்களகவே இருந்தனர். கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெற்றுள்ள நிலையில், தமிழ்நாடு போன்ற சில மாநிலங்களில் மட்டுமே துருவமுனைப்பை ஏற்படுத்துவது அந்தக் கட்சிக்கு மிகவும் சிரமமான காரியமாக உள்ளது.
எனவே அந்தக் கட்சி தன்னுடைய வியூகத்தை மறுசீரமைத்துக் கொண்டுள்ளது. கடலோர கர்நாடகாவில் இந்த அரசியலைப் பார்த்திருந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை (உடுப்பியில் ஒரு முறை காவல்துறைக் கண்காணிப்பாளராகப் பதவி வகித்தவர்) தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளது. கர்நாடகாவில் இருந்து அவர்களுடைய பாணி, முறையை இறக்குமதி செய்து கொள்வதற்கான வாய்ப்பை இழந்து விடாமல் மாநிலத்தை வகுப்புவாதமயமாக்குவதில் இரவு பகலாக அவரும் உழைத்துக் கொண்டிருக்கிறார்.
இதுவரையிலும் சங்பரிவாரம் மேற்கொண்டிருக்கும் வகுப்புவாத முயற்சிகள் அனைத்தையும் தமிழ்நாடு முறியடித்துக் காட்டியுள்ளது. தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்ட தாழ்த்தப்பட்டவர்களுக்கான சமூக இயக்கத்தால் சித்தாந்த ரீதியாக உந்தப்பட்டு இயங்கி வருகின்ற இந்த மாநில அரசு பாஜகவை கட்டுப்படுத்துகின்ற வீரனாக இருக்கும் என்றே நம்புகிறோம்.
நன்றி: நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் அமைப்பு
தமிழில்: தா.சந்திரகுரு
மறைந்து போகும் ஹிஜாப் எவ்வாறு கருத்து வேறுபாட்டை அறிவிக்கும் அடையாளமாக மீண்டும் தோன்றுகிறது என்பது குறித்த வரலாறு – அஜாஸ் அஷ்ரப் | தமிழில்: தா.சந்திரகுரு
இஸ்லாமியப் பெண்கள் கட்டாயம் அணிந்து கொள்ள வேண்டும் அல்லது கழற்ற வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படும் போதெல்லாம் ஹிஜாபிற்கான அர்த்தங்கள் மாறிக் கொண்டே இருக்கின்றன
மாசசூசெட்ஸில் உள்ள கேம்பிரிட்ஜில் ஹிஜாப் (தலையில் முக்காடு) அணிந்த பெண்கள் குழு ஒன்றை 1990களின் பிற்பகுதியில் ஒருநாள் மாலை நேரத்தில் ஹார்வர்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர் லீலா அகமதுவும், அவரது தோழியும் கண்டனர். கேம்பிரிட்ஜில் முக்காடு அணிந்திருந்த அந்தப் பெண்கள் ‘அமெரிக்காவில் அடிப்படைவாதம் வேரூன்றுகிறதோ!’ என்ற ஆச்சரியத்தையே கெய்ரோவில் 1940களில் பிறந்து, முக்காடு எதுவும் அணிந்து தன்னை மறைத்துக் கொள்ளாமலேயே பள்ளிப்படிப்பை முடித்திருந்த அகமதுவிடம் ஏற்படுத்தியிருந்தனர்.
அகமதுவிடம் எழுந்த அந்தக் கேள்வியே முக்காடைக் கழற்றுதல், மீண்டும் போட்டுக் கொள்ளுதல் என்று முஸ்லீம்கள் உலகில் கடந்த காலங்களில் எழுந்த மாற்றங்கள் குறித்த ஆய்வை மேற்கொள்வதற்கான ஆவலைத் தூண்டியது. அதற்குப் பின்னர் ‘ஓர் அமைதிப் புரட்சி: முக்காடின் மறுமலர்ச்சி – மத்திய கிழக்கிலிருந்து அமெரிக்கா வரை’ என்ற புத்தகத்தை அவர் எழுதுவதற்கான காரணமாகவும் அது அமைந்தது.
அகமது எழுதியுள்ள அந்தப் புத்தகம் ஹிஜாப் மறுப்பு மற்றும் எதிர்ப்பிற்கான அடையாளம், இணக்கம் மற்றும் ஒப்புதலுக்கான அடையாளம் என்று பல அர்த்தங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது என்று குறிப்பிடுகிறது. ஹிஜாப் அணிய வேண்டுமென்று பெண்களை வற்புறுத்துவது அல்லது அதனைக் கழற்றி வீசச் சொல்வது வெறுப்பையே தூண்டும் என்பதை ஹிஜாபிற்கு எதிராகப் பொங்கி எழுந்திருக்கின்ற ஹிந்துத்துவ அடிவருடிகள் புரிந்து கொள்ள வேண்டும். நீதித்துறைக்கும் ஓரளவு பொருந்திப் போகின்ற உண்மையாகவே அது இருக்கின்றது.
அரபு உலகின் அறிவுசார் தலைநகரான கெய்ரோவில் முக்காடைக் கழற்றிய நிகழ்வு உச்சத்தை எட்டியது குறித்து முதலில் காணலாம்.
அகற்றப்பட்ட முக்காடு
‘மறையும் முக்காடு – பழைய ஒழுங்கிற்கு விடப்பட்டிருக்கும் சவால்’ என்ற தலைப்பில் 1956ஆம் ஆண்டு எழுதிய கட்டுரையில் மத்திய கிழக்கிலிருந்து முக்காடு வெளியேறி விடும் என்று வரலாற்றாசிரியர் ஆல்பர்ட் ஹூரானி கணித்திருந்தார். காசிம் அமின் எழுதி 1899ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த ‘பெண் விடுதலை’ என்ற புத்தகமே முக்காடை அகற்றும் போக்குகளுக்கான காரணமாக அமைந்தது என்று அந்தக் கட்டுரையில் ஆல்பர்ட் ஹூரானி குறிப்பிட்டிருந்தார்.
முக்காடு போடப்பட்டு வீட்டிற்குள்ளேயே பெண்கள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாலேயே எகிப்து பின்தங்கியுள்ளது என்ற வாதத்தை முன்வைத்த அமின் எகிப்து ஐரோப்பாவைப் போல ஆக வேண்டும் என்ற நம்பிக்கை கொண்டவராக இருந்தார். அமின் ‘எகிப்தில் இருக்கின்ற நிலைமையே மாறி வருகின்ற உலகில் குழந்தைகள் சமூகமயமாகிட முடியாதவாறு வைத்திருக்கிறது’ என்று கூறினார். ஐரோப்பாவுடனான தொடர்பு அதிகரித்தது, பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் வெற்றிகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் போன்ற காரணங்களால் ஏற்கனவே எகிப்தில் நிலவி வந்த கருத்துக்களையே அவர் வெளிப்படுத்தியிருந்தார்.
ஐரோப்பாவுடன் ஏற்பட்டிருந்த தொடர்பு தொழில்நுட்ப அற்புதங்களை – எடுத்துக்காட்டாக ரயில்கள், டிராம்களை – மட்டுமல்லாது எகிப்தியர்களிடம் சமத்துவம், ஜனநாயகம், தகுதியின் அடிப்படையிலான அதிகாரம் போன்ற கருத்துகளையும் அறிமுகப்படுத்தியிருந்தது. எகிப்தில் முக்காடு அணியாத ஐரோப்பிய பெண்கள் மிகவும் சாதாரணமாகக் காணப்பட்டார்கள். ஐரோப்பியத் தாக்கம் எகிப்தியப் பெண்களை – ஆரம்பத்தில் உயர் வகுப்பினரையும், பின்னர் நடுத்தர வர்க்கத்தினரையும் – வெளியில் வரத் தூண்டியது. சமகாலத்தில் நடந்துள்ளவற்றை மேற்கோள் காட்டுவதன் மூலம் முக்காடை அகற்றிக் கொள்வது எந்த அளவிற்கு விரைவாகப் பரவியது என்பதை தனது புத்தகத்தில் அகமது சுட்டிக்காட்டியுள்ளார்.
மிகமுக்கியமான பெண் உரிமை ஆர்வலராக பின்னர் மாறிய பாலஸ்தீனியரான அன்பரா காலிடி எகிப்தியப் பெண்கள் ‘அகற்றப்பட்ட திரை’ மூலம் இந்த உலகைப் பார்க்கின்றனர் என்று 1910ஆம் ஆண்டு மிகவும் உற்சாகத்துடன் குறிப்பிட்டிருந்தார். அதே ஆண்டில் பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் முக்காடிட்டுக் கொள்ளாத பெண்கள் என்ன ‘வானத்திலிருந்து’ விழுந்தவர்களா என்ற கேள்வியை எழுப்பியிருந்தார். அல்-சுஃபுர் அல்லது முக்காடை அகற்றுதல் என்ற பெயரில் 1914ஆம் ஆண்டில் தேசிய செய்தித்தாள் ஒன்று தொடங்கப்பட்டது. அந்த செய்தித்தாளின் ஆசிரியர் ‘எகிப்தில் முக்காடு போட்டுக் கொண்டிருப்பது பெண்கள் மட்டுமல்ல… நமது தேசமே முக்காடு போட்டுக் கொண்டிருக்கும் தேசமாத்தான் இருக்கிறது’ என்று எழுதியிருந்தார்.
பெண்கள் முக்காடை அகற்றிக் கொண்ட வேகம் உண்மையில் ஆச்சரியப்படும் வகையிலே இருந்தது அகமதுவின் சுயசரிதையில் இருந்து தெளிவாகத் தெரிய வருகிறது: ‘அந்தக் காலகட்டத்தில் வயதான பெண்களில் பெரும்பாலானோர் (1908ஆம் ஆண்டு பிறந்த எனது தாயின் தலைமுறையைச் சார்ந்த பெண்கள், அதே போல எனது தலைமுறையைச் சார்ந்த பெண்கள்) தங்கள் முக்காடை அகற்றிக் கொண்டிருக்கவில்லை. ஏனெனில் அவர்கள் யாரும் ஒருபோதும் முக்காடு போட்டுக் கொண்டதே இல்லை’ என்று அகமது எழுதியுள்ளார்.
ஜனநாயகம், சமத்துவம், தகுதியின் அடிப்படையிலான அதிகாரம் போன்ற கொள்கைகளின் அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட்ட சமூகமாக மாறுவதற்காக எகிப்திடமிருந்த தேடலி உருவகமாகவே முக்காடை அகற்றுவது இருந்தது. பெண்களைப் பொறுத்தவரை தாங்கள் விரும்பும் விதத்தில் வாழ்வதற்கு, ஆடையணிந்து கொள்வதற்கு அவர்களிடம் இருந்த விருப்பத்தின் வெளிப்பாடாகவும் அது அமைந்தது என்று அகமது குறிப்பிடுகிறார்.
முக்காடு அகற்றப்படுவதை எதிர்த்தவர்கள்
முக்காடு அகற்றப்படுவதை எதிர்த்தவர்களும் அப்போது இருந்தனர். தேசியவாத பத்திரிகை ஒன்றின் உரிமையாளரின் மனைவியான பாத்திமா ரஷீத் ‘முக்காடு என்பது நம்மைத் தடுத்து நிறுத்துகின்ற நோயில்லை. மாறாக அதுவே நம்முடைய மகிழ்ச்சிக்கான காரணமாக இருந்து வருகிறது…’ என்று 1908ஆம் ஆண்டு எழுதியிருந்தார். முக்காடு போடாத பெண்களுக்குச் சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்குமாறு மத அறிஞர்கள் 1914ஆம் ஆண்டு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
‘எகிப்து முன்னேற்றத்தைக் காண்பது இஸ்லாத்திற்கு மாறுவதன் மூலமாக நடக்குமே தவிர ஐரோப்பாவைப் பின்பற்றுவதால் அல்ல’ என்ற சிந்தனைப் பள்ளியைச் சேர்ந்தவர்களாக அவர்கள் இருந்தனர். எகிப்தை இஸ்லாமியமயமாக்குவதன் மூலம் எகிப்திய மனங்களில் உள்ள காலனித்துவம் அகற்றப்பட வேண்டும் என்றே அவர்கள் விரும்பினர். ஹசன் அல்-பன்னா அவர்களில் மிகவும் முக்கியமானவராக இருந்தார். முஸ்லீம் சகோதரத்துவம் என்ற அமைப்பை 1928ஆம் ஆண்டு ஹசன் அல்-பன்னா நிறுவினார். அந்த அமைப்பு எகிப்தை இஸ்லாமியமயமாக்கும் திட்டத்திற்காக எகிப்தியர்களை அணிதிரட்டக் கூடிய வகையில் பள்ளிகள், மருத்துவ வசதிகள், தொழிற்சாலைகள் கொண்ட வலையமைப்பை நிறுவியது.
ஆனால் மன்னர் ஃபாரூக்கின் ஆட்சி முஸ்லீம் சகோதரத்துவ அமைப்பை 1948ஆம் ஆண்டு கலைத்து படுகொலைகளைச் செய்யுமாறு தன்னுடைய ஆயுதப் பிரிவை தூண்டியது. ஃபாரூக் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிறகு முஸ்லீம் சகோதரத்துவம் அமைப்பு 1954ஆம் ஆண்டு அதிபர் கமல் அப்துல் நாசரைக் கொலை செய்வதற்கான முயற்சிகளில் இறங்கியது. சோசலிசக் கொள்கைகள், அனைத்து அரபு தேசியவாதம், எகிப்தை இஸ்லாமிய நாடாக மாற்ற மறுத்தது போன்ற நாசரின் செயல்பாடுகளுக்கு எதிராக முஸ்லீம் சகோதரத்துவம் அமைப்பு அவரிடம் பகைமை பாராட்டி வந்தது.
சகோதரத்துவ அமைப்பை ஒடுக்குமாறு நாசர் உத்தரவிட்டார். அதற்குப் பின்னர் ஆயிரக்கணக்கானோர் சிறைகளில் அடைக்கப்பட்டனர். ‘அனைத்து முஸ்லீம்களும் தங்கள் அடையாளத்தை இஸ்லாத்துடன் பிணைத்துக் கொள்ள வேண்டுமே தவிர தேசியம் அல்லது இனத்துடன் அல்ல’ என்று சகோதரத்துவ அமைப்பிடம் இருந்த நம்பிக்கையுடன் இருந்த சவூதி அரேபியாவிற்குப் பலரும் தப்பிச் சென்றனர். உள்ளூர் அணிதிரட்டல்கள், ‘வெளிநாட்டு’ தாக்கங்களை வேரறுப்பதன் மூலம் ‘தூய இஸ்லாத்தை’ மீட்டெடுக்க முயன்ற வஹாபிசத்தை ஏற்றுமதி செய்வதற்காக சகோதரத்துவ அமைப்டைச் சார்ந்த அறிவுஜீவிகளை சவூதி அரேபியா தன்னுடன் வைத்துக் கொண்டது. அமெரிக்காவின் ஆதரவை அவர்களும், சோவியத் யூனியனின் ஆதரவை நாசரும் பெற்றனர்.
முக்காடை அகற்றுவது என்று பெரும்பாலாக இருந்து வந்த போக்குக்கு எதிரான சவால் தவிர்க்க முடியாத வகையிலேயே இருந்தது. உண்மையில் முக்காடு எகிப்திலிருந்து முற்றிலுமாக மறைந்து போய் விடவில்லை. கெய்ரோவை ஒட்டிய வறுமை நிறைந்த மாவட்டங்களில் இருந்த பெண்கள் ‘மிலாயா லாஃப்’ எனப்படும் தலை மற்றும் உடலை மறைக்கும் வகையில் ஆடைகளின் மேல் அணிந்து கொள்ளும் கருப்பு உறையால் தங்களை மறைத்துக் கொண்டிருந்தனர். நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த பழமைவாதிகள் பெரும்பாலும் தலையை மறைக்கும் அளவுக்கு நீளமாக, நாடியில் கட்டப்படும் வகையில் இருந்த வண்ணமயமான ஐரோப்பிய பாணி முக்காடை அணிந்தனர்.
மீண்டும் திரும்பி வந்த முக்காடு
இஸ்ரேல் 1967ஆம் ஆண்டு நடந்த போரில் எகிப்தைத் தோற்கடித்த போது, மறைந்து போயிருந்த முக்காடு விவகாரத்தில் குறிப்பிடத்தக்கதொரு திருப்பம் ஏற்பட்டது. தோல்விக்குப் பிறகு எகிப்து முழுவதும் பரவியிருந்த விரக்தி அலை நாசர் இஸ்லாத்தை விட்டு விலகியதாலேயே எகிப்து தோல்வியடைந்தது என்று எண்ணத்தை எகிப்து மக்களிடம் தூண்டி விட்டிருந்தது. மக்களைத் திருப்திப்படுத்துவதற்காக ‘புதியதொரு சமுதாயத்தை உருவாக்க முயன்ற எகிப்துக்கு பாடம் கற்பிக்க அல்லா முயன்றிருக்கிறார்’ என்று மத நம்பிக்கையை பகிரங்கமாக உறுதிப்படுத்தும் வகையிலே நாசர் பேசிய பேச்சும் அதுபோன்றதொரு பார்வை மக்களிடையே உருவாகக் காரணமானது. அதற்குப் பிறகு முஸ்லீம் சகோதரத்துவ அமைப்பின் செயற்பாட்டாளர்களை நாசர் சிறையிலிருந்து விடுவித்தார்.
அமெரிக்காவைக் கவர்வதற்காக நாசரின் வாரிசான அன்வர் சதாத், அரசியலில் இருந்து விலகி இருக்கும் வரையில் சகோதரத்துவ அமைப்பு தங்களுடைய இஸ்லாமியப் பரப்பலை மீண்டும் தொடங்குவதற்கு அனுமதித்தார். பல்கலைக்கழக வளாகங்களில் இடதுசாரிகளை ஒடுக்குவதற்காக அந்த அமைப்பினருக்கு அவர் ஆயுதங்களையும் வழங்கினார். இடதுசாரிகள் அப்போது முதலாளித்துவத்திற்கு ஆதரவாக சதாத் திரும்பியிருந்ததைக் கடுமையாக விமர்சித்து வந்தனர்.
முதன்முதலாக 1970களின் முற்பகுதியில் பல்கலைக்கழக வளாகங்களில் ஹிஜாப் மீண்டும் தோன்றியதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. பழமைவாதப் பிரிவினர் முன்னர் விரும்பிய வகையிலே தலை, கழுத்தை மூடி, நாடியுடன் கட்டப்பட்டிருக்கும் வகையில் அணிந்து கொள்வது என்று ஹிஜாப் அணியும் வழக்கம் மறுசீரமைக்கப்பட்டது. ஆனால் அது முன்பு போல வண்ணமயமாக இல்லாமல், ‘கில்பாப்’ என்ற நீண்ட, தளர்வான அங்கி, பரந்த நீண்ட கைகளை உடைய சட்டைகளுடன் இருந்தது. அது ‘சகோதரத்துவ அமைப்பின் அதிகாரப்பூர்வமான ‘ஜியா இஸ்லாமி’ என்ற உடை போன்று வடிவமைக்கப்பட்டிருந்தது.
எகிப்திய மாணவிகளில் ஒரு சிறிய பகுதியினரே தங்களுடைய ஆடையை மாற்றிக் கொண்டிருந்தனர் என்றாலும், ஃபத்வா எல் கிண்டி, ஜான் ஆல்டன் வில்லியம்ஸ் போன்ற அறிஞர்கள் புதிய ஹிஜாப்பை அணிந்தவர்களை நேர்காணல் செய்திருந்தது கவனிக்கத்தக்கது. மேற்குலகைப் பின்பற்றுவது பயனற்றது என்ற உணர்வுகளை 1967ஆம் ஆண்டு போர் அவர்களிடம் தூண்டியது என்பதைக் குறிப்பிடும் வகையிலேயே அவர்களுடைய நேர்காணல்கள் இருந்தன என்று அகமது தெரிவிக்கிறார். இஸ்ரேலுடன் 1973ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் எகிப்திற்கு கிடைத்த ஆதாயங்கள் மிகவும் குறைவாக இருந்த போதிலும், நாடு இஸ்லாத்தின் பக்கம் திரும்பியதற்கான ஆதாரமாக அவை மேற்கோள் காட்டப்படுகின்றன.
முக்காடை அகற்றுவது நம்பிக்கையின் அடையாளம் என்று இருந்ததற்கு மாறாக ஹிஜாப் அணிந்து கொள்வது நம்பிக்கையின் அடையாளமானது.
ஹிஜாப் பரவியதால் ஏற்பட்ட அதிர்ச்சி
மீண்டும் ஹிஜாப் திரும்பி வந்தது குறித்து எழுதிய பத்திரிகையாளர் அமினா அல்-சைத் அதை ‘இறந்து போனவர்களின் கவசம்’ என்று குறிப்பிட்டார். ஹிஜாப்பின் மறுபிரவேசம் குறித்து திகைப்படைந்த பெற்றோர்கள், தாத்தா பாட்டிகள் சில சமயங்களில் எல் கிண்டி, வில்லியம்ஸ் குறித்த அச்சத்தையும் வெளிப்படுத்தினர்.
1971ஆம் ஆண்டில் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவராக இருந்த எக்ரம் பெஷீர் குறித்து அகமது வெளிக்கொணர்ந்த தகவல்களிலிருந்து ஹிஜாப் அணிந்த பெண்களுக்கும், பெரியவர்களுக்கும் இடையே நடந்த விவாதம் தெளிவாகத் தெரிய வருகிறது. பெரும்பாலும் குட்டைப் பாவாடை உடை அணிந்திருந்த பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் பெஷீர் மட்டும் ஹிஜாப் அணிந்து தனித்து நின்றார். பெஷீரின் அத்தை ‘விளையாட்டுத்தனமாக இருக்காதே’ என்று அவரிடம் அடிக்கடி கேட்டுக் கொள்வார்; அவருடைய மாமா ‘இதுபோன்று உடையணிந்த’ அவர் கணவனை எப்படி கண்டுபிடிக்கப் போகிறார் என்று கவலைப்படுவதுண்டு; பேராசிரியர் ஒருவரும் அடிக்கடி அவரது ஆடை குறித்து கருத்து தெரிவித்து வந்திருக்கிறார். அதிக வெப்பமாக இருந்த ஒரு நாளில் அதை ஏன் ஆடையின் மீது பெஷீர் அணிந்திருக்கிறாய் என்று கேள்வியெழுப்பிய அந்தப் பேராசிரியருக்கு ‘ஏனென்றால் நான் ஒரு முஸ்லீம்’ என்று பெஷீர் உடனடியாகப் பதிலளித்தார். மிகுந்த சீற்றத்துடன் அந்தப் பேராசிரியர் ‘நான் முஸ்லீம், என் மனைவி முஸ்லீம், இவர்கள் [மாணவர்கள்] முஸ்லீம்கள்’ என்று எதிர்வினையாற்றினார்.
இஸ்லாமிய அடிப்படைவாதிகள் இல்லாமால் – குறிப்பாக சரியான உடை அல்லது இஸ்லாமிய ஆடை என்று அதனை முன்னிறுத்தி சமூகத்தை இஸ்லாமியமயமாக்கிய சகோதரத்துவ அமைப்பு இல்லாமல் – ஹிஜாப் மீண்டும் திரும்பி வந்திருக்க முடியாது. கீழ்தட்டு வகுப்பினர் செல்ல முடிந்த அந்த அமைப்பினரிடமிருந்த பள்ளிகள், மருத்துவமனைகளின் வலையமைப்பின் மூலமாகவே அவர்களுக்கான செல்வாக்கு பெறப்பட்டது. நாட்டை இஸ்லாமியமயமாக்குகின்ற வகையில் அந்த மக்களை மூளைச்சலவைக்கு ஆட்படுத்த அந்த வலையமைப்பே உதவியது.
1990களில் மக்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகின்ற ஆடை அணியும் முறையாக ஹிஜாப் மாறியிருந்தது. அந்தக் காலகட்டமே தன்னுடைய கல்வி முறையை இஸ்லாமிய-நீக்கம் செய்வதற்கு அரசாங்கத்தைத் தூண்டிய வகையில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் வன்முறையில் ஈடுபட்ட காலமாகவும் இருந்தது. அப்போது முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான சிறுமிகள் ஹிஜாப் அணிந்து வருவது தடை செய்யப்பட்டது. மூத்த மாணவிகளைப் பொறுத்தவரை பாதுகாவலர்களிடம் இருந்து ஒப்புதல் கடிதத்தைப் பெற்றுக் கொண்டு வருபவர்கள் மட்டுமே ஹிஜாப் அணிந்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டது.
தங்களுடைய சக மாணவிகள் பள்ளிகளுக்குள் அனுமதிக்கப்படாததைக் கண்டு பள்ளி மாணவிகள் பீதியடைந்தனர். அதுவரையிலும் ஹிஜாப் அணிந்திராத பெண்களும்கூட தங்கள் ஒற்றுமையைக் காட்டுகின்ற விதத்திலே அதை அணிந்து கொள்ளத் துவங்கினர். போராட்டங்கள் வெடித்தன. ஊடகங்கள் விமர்சனம் செய்தன. பெற்றோர்கள் கண்டனம் தெரிவித்தனர். அது தொடர்பாக தொடரப்பட்ட பல வழக்குகளில் அரசு தோல்வியடைந்தது. இன்றும்கூட உயர்தர உணவகங்களும், ஓய்வு விடுதிகளும் ஹிஜாப் அணிந்து வரும் பெண்களை தாழ்த்தப்பட்ட வகுப்பினராகக் கருதி உள்ளே நுழைய அனுமதிப்பதில்லை. அதுபோன்ற நடைமுறைக்கு எதிராக சமூக ஊடகப் பிரச்சாரங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஹிஜாப் வர்க்கப் பரிமாணம் மட்டுமல்லாது அடையாளக் குறியீட்டையும் கொண்டுள்ளது.
வெவ்வேறு நிலைகளில் ஈரான், பிரான்ஸ்
ஈரானிய ஆட்சியாளர் ரேசா ஷா பஹ்லவி 1936ஆம் ஆண்டு ஜனவரி 8 அன்று பொது இடங்களில் முக்காடு, சாதர் போன்ற ஆடைகளைத் தடைசெய்கின்ற காஷ்-இ-ஹிஜாப் ஆணையை வெளியிட்டார். அதுபோன்ற ஆடைகளை அணிந்துள்ள பெண்களிடமிருந்து காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அவற்றை அகற்ற வேண்டும் என்று அந்த ஆணையில் குறிப்பிடப்பட்டிருந்தது. பெண்கள் பலரும் வெளியில் செல்வதையே நிறுத்திக் கொண்டனர். வீட்டிலேயே தங்கள் குழந்தைகளுக்கு கல்வி அளிக்க பழமையான குடும்பங்கள் முன்வந்தனர். அப்போது ஈரான் அரசியலின் ஒருங்கிணைந்த அங்கமாக முக்காடு மாறியிருந்தது.
முக்காடு போடலாமா, வேண்டாமா என்பதை பெண்களே தீர்மானித்துக் கொள்ள அனுமதித்த மகன் முகமது ரேசா ஷாவிற்கு ஆதரவாகப் பதவி விலகுமாறு ரேசா ஷா பஹ்லவியை ஆங்கிலேயர்கள் 1941ஆம் ஆண்டு கட்டாயப்படுத்தினர். பின்வந்த காலங்களில் புதியதொரு பொதுக் கலாச்சாரம் உருவானது. சமூகக் கூட்டங்களில் காலத்துக்கேற்ற உடையணிந்து, தலையில் எதுவும் அணியாதிருந்த பெண்கள் சாதர் அணிந்திருந்த பெண்களுடன் கலந்தே காணப்பட்டனர். ஆயினும் ஷாவின் எதேச்சதிகார ஆட்சி ஈரானியர்களை தெருக்களுக்கு அழைத்து வந்தது. மதம் சார்ந்தவர்களாக இல்லையென்றாலும் அதைப் பொருட்படுத்தாமல் அவர்களுடன் சேருவதற்காக பெண்கள் அப்போது சாதர் அணிந்து கொண்டனர். ஷாவின் மேற்குலக ஆதரவிற்கு எதிராக இருந்த ஈரானின் வெறுப்பை அடையாளப்படுத்தும் வகையிலேயே அவர்கள் அணிந்த அந்த சாதர் இருந்தது.
அதிகாரத்திலிருந்து ஷாவை வெளியேற்றிய 1979ஆம் ஆண்டுப் புரட்சிக்குப் பின்னர் அவர் நாடுகடத்தப்பட்டார். அதற்குப் பின்னர் பெரும் தலைவரான ஆயதுல்லா ருஹோல்லா கொமேனி பெண்கள் கட்டாயம் முக்காடு அணிய வேண்டும் என்று கட்டளையிட்டார். ஆயிரக்கணக்கான பெண்கள் சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8 அன்று அதற்கு எதிராகத் திரண்டு போராட்டம் நடத்தினர். ஹிஜாப் சட்டத்தைச் செயல்படுத்துவதற்காக காஷ்ட்-இ-எர்ஷாத் எனப்படும் ஆயிரக்கணக்கான ரகசிய முகவர்களை ஈரானிய ஆட்சி நியமித்தது. 1993 மற்றும் 2003க்கு இடைப்பட்ட பத்தாண்டு காலத்தில் முப்பதாயிரம் பெண்கள் முறையாக ஹிஜாப் அணியாததற்காகக் கைது செய்யப்பட்டனர் என்று ‘ஈரானுக்கான நியாயம்’ (ஜஸ்டிஸ் ஃபார் ஈரான்) என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹிஜாபிற்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. பத்து லட்சம் கையெழுத்துக்களைப் பெறுவதற்கான ‘பாரபட்சமான சட்டங்களை நீக்குவது’ எனும் சமத்துவத்திற்கான மாற்றம் என்ற இயக்கம் 2006ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அந்த அமைப்பின் முக்கிய அமைப்பாளர்களை அரசாங்கம் கைது செய்தது. ஆனாலும் அவர்கள் அதற்கு முன்பாகவே தங்கள் இயக்கத்தின் இலக்குகளை விளக்குவதற்கான கூட்டத்தைக் கூட்டியிருந்தனர். ஓராண்டு கழித்து அதிபர் அலுவலகத்தின் ஒரு பிரிவான ‘செயல்நெறிசார் ஆய்வுகளுக்கான ஈரானிய மையம்’ சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் ஹிஜாப் அணிவதைக் கட்டாயப்படுத்துவதை நாற்பத்தியொன்பது சதவிகித ஈரானியப் பெண்கள் எதிர்க்கின்றனர் என்று கண்டறியப்பட்டிருந்தது.
ஒவ்வொரு புதன்கிழமையும் ஆண்களும் பெண்களும் வெள்ளை ஆடைகள், வெள்ளை முக்காடு அணிந்து கொள்ளும் ‘வெள்ளைப் புதன்’ பிரச்சாரம் 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அந்தப் பிரச்சாரத்தில் கலந்து கொள்ளும் பெண்கள் தங்களுடைய முக்காடுகளைக் கழற்றி, குச்சிகளில் பொருத்தி மேலுயர்த்திப் பிடித்து அசைக்கவோ அல்லது அமைதியாக நின்று கொண்டிருக்கவோ செய்வார்கள். விடா மோவாஹெட் என்ற முப்பத்தியொரு வயதுப் பெண் டிசம்பர் 27 அன்று ஒரு பெட்டியின் மேல் ஏறி நின்று, தனது ஹிஜாபைக் கழற்றி குச்சியில் மாட்டி அசைத்தார். சில மணி நேரங்களில் கைது செய்யப்பட்ட அவரது போராட்டம் குறித்த புகைப்படம் அதிகமாகப் பகிர்ந்து கொள்ளப்பட்டது.
‘பெண்களின் அதிகாரம், தாங்கள் அணிய விரும்புவதைத் தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரத்தை சட்டத்திற்கு கீழ்ப்படியாமையைப் பயன்படுத்திப் பெறுவது’ ஆகியவற்றையே இத்தகைய எதிர்ப்புகள் குறித்தன என்று கல்வியாளர் பாஹே சிராஜி கருத்து தெரிவித்தார்.
உடை அணிவதற்கான தேர்வை அதற்கு முற்றிலும் மாறான வழியில் பிரான்ஸ் கட்டுப்படுத்தியது. பொதுப் பள்ளிகளுக்கு மாணவர்கள் மதச் சின்னங்களை அணிந்து வருவதை பிரான்ஸ் 2004ஆம் ஆண்டு தடை செய்தது. அந்த நடவடிக்கை முஸ்லீம் மாணவிகள் தலையில் முக்காடு அணிந்து வருவதைத் தடுப்பதற்காக எடுக்கப்பட்டது என்றே கருதப்பட்டது. பொது இடங்களில் புர்கா அணிவதை பிரான்ஸ் 2010ஆம் ஆண்டு தடை செய்தது. பிரெஞ்சு அரசாங்கம் வெளியிட்ட ஒரு பிரச்சாரத்தில் ‘குடியரசு மறைக்கப்படாத முகத்துடன் வாழ்கின்றது’ என்று அறிவிக்கப்பட்டது.
பிரெஞ்சு அரசாங்கம் மற்றுமொரு சட்டத்தையும் கடந்த ஆண்டு நிறைவேற்றியது. அந்தச் சட்டத்தின் மூலம் அரசு ஊழியர்கள் மதச் சின்னங்களை அணிவதைத் தடைசெய்கின்ற சட்டம் தனியார் பொதுச்சேவை ஒப்பந்ததாரர்கள் அனைவருக்கும் நீட்டிக்கப்பட்டது. மதச்சார்பின்மையைக் காரணம் காட்டி முஸ்லீம்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்டப்படுகிறது என்று அதிபர் இமானுவேல் மக்ரோனுக்கு எதிராக இடதுசாரிகள் தாக்குதலை மேற்கொண்டனர். அது மட்டுமல்லாமல், #HandsOffMyHijab என்ற ஹேஷ்டேக்குடன் தீவிரமான சமூக ஊடகப் பிரச்சாரமும் அப்போது முளைத்தெழுந்தது.
நாவலாசிரியரான மர்ஜானே சத்ராபி ஈரானில் பிறந்து அங்கேயே பள்ளிப்படிப்பை முடித்தவர். இன்று அவர் பாரிஸில் வசித்து வருகிறார். ஈரானில் இஸ்லாமியப் புரட்சி நடந்தபோது சத்ராபிக்கு பத்து வயது. தி கார்டியனில் வெளியான கட்டுரையில் ஹிஜாப் அணிய வற்புறுத்தப்பட்டதால் தான் வெறுப்படைந்ததாக சத்ராபி கூறியுள்ளார். ‘மதத்தை வெளிப்படுத்திக் கொள்வதை நோக்கித் தள்ளப்படுவது எவ்வாறு இருக்கும் என்பதை நான் அறிவேன். அதனால் மதச்சார்பற்ற நிலைக்குத் தள்ளப்படுவதும் எவ்வாறு இருக்கும் என்று எனக்கு நன்றாகவே தெரியும். ஈரானியப் பெண்களிடம் வெறியர்கள் செய்த தவறை நாம் செய்ய வேண்டாம். மதச்சார்பின்மை என்ற பெயரில் நடத்தப்படும் இதுவும் அதேபோன்ற வன்முறைதான்’ என்றும் சத்ராபி கூறியிருந்தார்.
அல்ஜியர்ஸ் போர்
ஹிஜாப் மீது பிரான்ஸ் கொண்டிருந்த அணுகுமுறை அதன் காலனித்துவ வரலாற்றுடன் பின்னிப் பிணைந்ததாகும். 1958ஆம் ஆண்டு அல்ஜீரிய சுதந்திரப் போரின் போது, பெண்களின் முக்காடை அகற்றுவதற்காக பெருந்திரளான பொது விழாக்களை பிரெஞ்சு காலனித்துவ ஆட்சி நடத்தியது. தங்களை விடுவிப்பது என்ற கொளகிஅயுடன் இருந்த பிரெஞ்சுக்காரர்களை அல்ஜீரியப் பெண்கள் ஆதரித்ததை உணர்த்துவதற்காகவே அவ்வாறு செய்யப்பட்டது. பிந்தைய ஆண்டுகளில் பெரும்பாலான பெண்கள் ஏழைகளாக இருந்ததுவும், முக்காடை அகற்ற கட்டாயப்படுத்தப்பட்டனர் என்பதுவும் கண்டறியப்பட்டது.
புகழ்பெற்ற காலனித்துவ எதிர்ப்பு அறிவுஜீவியான ஃபிரான்ட்ஸ் ஃபானன் அந்த பிரெஞ்சுக் கோட்பாடு பற்றி ‘அல்ஜீரிய சமுதாயத்தின் கட்டமைப்பை, அதன் எதிர்ப்பாற்றலை அழிக்க விரும்பினால், முதலில் நாம் பெண்களை வென்றெடுக்க வேண்டும்; தங்களை மறைத்துக் கொண்டிருக்கும் திரைக்குப் பின்னால் உள்ள அவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும்…’ என்று கூறினார்.
முக்காடை அகற்றிய நிகழ்விற்கு எதிர்ப்பைத் தெரிவிக்கின்ற வகையிலே அல்ஜீரியப் பெண்கள் பலரும் முக்காடு அணிந்து கொள்ளத் தூண்டப்பட்டனர். ஆனால் முக்காடு அணியாத மேற்கத்திய பெண்களைப் போன்று இருக்குமாறு அவர்கள் அதனைப் பயன்படுத்திக் கொள்வதற்கும் உதவி செய்தது. மேற்கத்திய உடையணிந்திருந்த பெண்களை சோதனைகள் எதையும் மேற்கொள்ளாமலேயே உடனடியாகச் சோதனைச் சாவடிகளைக் கடந்து செல்ல பிரெஞ்சு காவலர்கள் அனுமதித்தனர். அவ்வாறு சோதனைகளின்றி சோதனைச் சாவடிகளை விட்டு வெற்றிகரமாக வெளியேறிய பெண்கள் ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் பிரெஞ்சு துருப்புக்கள் மீது சில சமயங்களில் தாக்குதல்களை நடத்தி வந்த எதிர்ப்புப் போராட்டம் நடத்தி வந்தவர்களுக்கு கொண்டு சென்று கொடுத்தனர்.
அல்ஜீரியாவில் 1962ஆம் ஆண்டு பிரெஞ்சு ஆட்சி வீழ்ந்த பிறகு, நகர்ப்புறங்களில் இருந்த அல்ஜீரியப் பெண்கள் பலரும் முக்காடு அணிவதை நிறுத்திக் கொண்டனர். இருந்தாலும் 2019ஆம் ஆண்டு ஐந்தாவது முறையாகத் தேர்தலில் போட்டியிடுவது என்று அதிபர் அப்தெலாசிஸ் பௌட்ஃபிலிகா எடுத்த முடிவிற்கு எதிராக வீதிகளில் இறங்கிய பெண்கள் எதிர்ப்புச் சின்னமாக ஹிஜாப் குறித்த தங்களுடைய நினைவுகளை வலியுறுத்தியே போராடினர். போராடிய அந்தப் பெண்கள் அல்ஜீரிய முக்காடை அணிந்திருந்தனர். போராடிய அந்தப் பெண்களிடம் காலனித்துவ எதிர்ப்புப் போராட்டத்தின் போது ஹோட்டல் ஒன்றின் மீது குண்டுவீசித் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை (பின்னர் சிறைவாசமாக மாற்றப்பட்டது) விதிக்கப்பட்ட டிஜமிலா பௌஹிரெட் உரையாற்றினார்.
இந்தியாவிற்கான படிப்பினைகள்
உலக வர்த்தக மையத்தின் மீதான 9/11 தாக்குதலுக்குப் பிறகு தங்களுக்கு இழைக்கப்படுகின்ற அவமானங்கள், வன்முறைகளைத் தவிர்ப்பதற்காக முஸ்லீம் பெண்களில் சிலர் ஹிஜாப் அணிவதை நிறுத்திக் கொண்டனர். 9/11க்குப் பிறகு அந்த பிரச்சனைக்குரிய மாதங்களில் முஸ்லீம்கள் அல்லாத பெண்கள் தாங்கள் விரும்புவதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமை முஸ்லீம் பெண்களுக்கு இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியது மிகவும் குறிப்பிடத்தக்க செயலாக இருந்தது என்று தனது புத்தகத்தில் லீலா அகமது குறிப்பிட்டுள்ளார். வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் 2002ஆம் ஆண்டு வெளியான எமிலி வாக்ஸின் அறிக்கையில், பல்கலைக்கழக வளாகங்களில் ஹிஜாப் அணிந்த முஸ்லீம் மாணவிகளின் அதிகரிப்பு குறிப்பிடத்தக்க அளவிலே இருந்தது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஹிஜாப் அணிந்து கொள்வதன் மூலம் தங்களுடைய பெருமிதத்தை – முஸ்லீம்கள் என்பதாக உணர்வதில் தங்களுக்குள்ள பெருமிதத்தை தாங்கள் வெளிப்படுத்திக் கொள்கிறோம் என்று அந்த மாணவிகள் வாக்ஸிடம் கூறினார்கள்.
வாக்ஸ் போன்றவர்களின் அறிக்கைகளை மேற்கோள் காட்டி அகமது ‘வெவ்வேறு சமூகங்களில் [ஹிஜாப்] அணிந்து கொள்பவர்கள் அதுகுறித்து வெவ்வேறு பொருளில் வெளிப்படுத்துகின்ற கருத்துகளில் தெளிவான தொடர்ச்சி உள்ளது’ என்று எழுதியுள்ளார். ‘பெரும்பான்மை சமூகத்தின் கருத்துக்களுக்கு எதிராக தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்துகின்ற திறனை ஹிஜாப் கொண்டிருக்கின்றது; வெளிப்படையாக எதிர்ப்பைப் பதிவு செய்கின்ற சிறுபான்மையினர் என்று தங்களை அடையாளப்படுத்திக் காட்டிக் கொள்வதன் மூலம் பிரதான சமூகத்திடமிருந்து வருகின்ற சமத்துவமின்மை, அநீதிகளுக்கு எதிராகச் சவால் விடும் வகையிலே தங்களுடைய பாரம்பரியம், விழுமியங்களை உறுதிப்படுத்திக் கொள்வதாக ஹிஜாபை அணிவது இருக்கிறது என்பதே அனைத்து சமூகங்களிலும் ஹிஜாப் அணிவது குறித்து இருந்து வருகின்ற பொதுவான கருத்தாகும்’ என்று அகமது முடிக்கிறார்.
அகமதுவின் அந்த முடிவு இன்று கர்நாடகாவில் நடக்கின்ற ஹிஜாப் சர்ச்சையின் மையப்பகுதிக்கு இட்டுச் செல்கிறது. வகுப்புகளுக்கு பெண்கள் ஹிஜாப் அணிந்து வருவது சமத்துவத்தைக் குறைத்து மதிப்பிடுவதாக இருக்கும் என்று சொன்னால், பிரதமர் நரேந்திர மோடி புதிய பாராளுமன்றம், அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை என்று பங்கேற்பதும் அவ்வாறாகவே இருக்கும். ஒவ்வொரு மாதமும் பொது இடங்கள் ஹிந்துமயமாக்கப்படுவது ஏமாற்றத்தைத் தருவதாகவே இருக்கிறது.
ஹிஜாப் அணிந்து போராடுகின்ற பெண்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆதரவு அளிக்கிறதா என்பது இங்கே முக்கியமல்ல. ஹிஜாப் அணிவதன் மூலம் அதனை அணிந்து கொள்பவர்கள் தங்களை கருத்து மாறுபாடுள்ள சிறுபான்மையினர் என்று பார்த்துக் கொள்கின்றனர் என்ற அகமதுவின் முடிவில்தான் ஹிஜாப் அணிவதன் முக்கியத்துவம் இருக்கின்றது. நாவலாசிரியர் சத்ராபி கூறியதைப் போல – பெண்களைக் கட்டாயப்படுத்தி ஹிஜாபை கழற்றச் சொல்வது அல்லது அணிந்து கொள்ளச் சொல்வது என்று இரண்டுமே பெண்கள் மீது ஏவப்படுகின்ற வன்முறையாகவே இருக்கும்.
https://www.newsclick.in/History-how-Hijab-Vanished-Reappeared-Symbol-Dissent
நன்றி: நியூஸ்க்ளிக்
தமிழில்: தா.சந்திரகுரு
உங்களைக் கைகூப்பி வணங்கிக் கேட்டுக் கொள்கிறேன் அன்புள்ள ஆசிரியரே! தயவுசெய்து இதைமட்டும் செய்யாதீர்கள் – ரவீஷ் குமார் | தமிழில்: தா.சந்திரகுரு
இன்று பள்ளி மாணவி ஒருவர் அனுப்பி வைத்திருந்த செய்தி என்னை மிகவும் குற்ற உணர்வுக்குள்ளாக்கியது. வேறொருவரின் செயல்களுக்காக நான் ஒருபோதும் இதுபோன்று குற்ற உணர்வுக்கு உள்ளானதாக என்னுடைய நினைவில் எதுவுமில்லை. நம்மிடையே இருக்கின்ற வெறுப்புணர்வை விதைக்கின்ற வியாபாரிகளை அடையாளம் கண்டு, அவர்கள் மூலமாகப் பாதிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த நாம் கற்றுக் கொள்ளவில்லை என்றால், நம்முடைய குழந்தைகளை நேருக்கு நேர் நம்மால் பார்க்க முடியாது போய் விடும். அந்த மாணவி எனக்கு அனுப்பி வைத்திருந்த செய்தியில் பாதிப்பேர் ஹிந்துக்கள், பாதிப்பேர் முஸ்லீம்களாக இருக்கின்ற தங்கள் வகுப்புக்கென்று இருக்கும் குழுவிடம் வகுப்புவாதம் கொண்ட செய்தியொன்றை ஆசிரியர் ஒருவர் பகிர்ந்து கொண்டார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த ஹிந்தி ஆசிரியர் மனதைப் பாதிக்கின்ற வீடியோ ஒன்றை மக்களைப் பிளவுபடுத்துகின்ற செய்தியுடன் இணைத்து தங்களுடைய குழுவில் பகிர்ந்து கொண்டிருந்தார் என்றும் அந்தச் சிறுமி குறிப்பிட்டிருந்தார்.
‘ஆசிரியரால் பகிரப்பட்ட அந்த வீடியோவில் சிறுவன் ஒருவன் சிறுமி ஒருவளின் தொண்டை மீது கத்தியை வைத்திருப்பதைக் காண முடிந்தது. அந்த வீடியோவை நன்கு கவனித்த என்னால் முஸ்லீம் பையன் ஒருவன் மீது தவறுதலாகக் குற்றம் சாட்டும் வகையில் அது இருப்பதைக் காண முடிந்தது. உண்மையில் போலிச் செய்தியொன்றைப் பரப்பி மாணவர்களுக்கிடையே வகுப்புவாத மோதலை உருவாக்க அந்த ஆசிரியர் முயன்றுள்ளார். இதில் நீங்கள் தலையிட வேண்டும் என்று விரும்புகிறேன்’ என்று அந்தச் செய்தி வேண்டுகோளுடன் இருந்தது. ஆசிரியர்களை வணங்கி, ஆண்டுதோறும் ஆசிரியர் தினத்தைக் கொண்டாடி வருகின்ற நாட்டில் ஆசிரியர் ஒருவர் தன்னுடைய மாணவர்களிடம் ஹிந்து-முஸ்லீம் என்ற விவாதத்தைப் பரப்புவதைப் பற்றி என்ன சொல்ல?
வீடியோவில் உள்ள சிறுவன் முஸ்லீம் என்றும், இஸ்லாம் மதத்திற்கு மாற மறுத்த அந்தச் சிறுமியை அவன் கொல்ல முயற்சி மேற்கொள்வதாகவும் வீடியோவைப் பகிர்ந்திருந்த அந்த ஹிந்தி ஆசிரியர் குறிப்பிட்டிருந்தார். பகிரப்பட்ட அந்த வீடியோவுடன் ‘ஜாகோ (எழுந்திரு) ஹிந்து, இது நாம் ஒன்றுபட வேண்டிய நேரம். நம்முடைய குழந்தைகளின் எதிர்காலத்தை நாம் காப்பாற்றியாக வேண்டும்’ என்ற வேண்டுகோளும் இணைந்திருந்தது.
ஆசிரியர் அனுப்பி வைத்த வாட்ஸ்ஆப் செய்தியின் ஸ்கிரீன்ஷாட்டை நான் பார்த்தேன். குஜராத்திலிருந்து வெளியான அந்த வீடியோ வகுப்புவாத தொனியுடன் தில்லி பள்ளிகளில் பகிரப்பட்டுள்ளது. அந்த வீடியோவானது உண்மையா அல்லது போலியா என்று ஆய்வு செய்ய முனைந்துள்ள அந்தச் சிறுமியின் மனதில் அந்த வீடியோ ஏற்படுத்தியிருக்கின்ற விளைவை சற்றே கற்பனை செய்து பாருங்கள். வீடியோவைப் பகிர்ந்து கொண்ட ஆசிரியரால் அந்த வீடியோ குறித்த ஆய்வை மேற்கொண்டிருக்க முடியாதா? எந்தவொரு கொடூரமான செயலும் இரண்டு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபடுவதாகவே இருக்கும் என்பதை குழந்தைகளிடம் பாதிப்பை ஏற்படுத்துகின்ற வகையில் இப்படித்தான் பயன்படுத்திக் கொள்வதா?
சிறிது நேரம் கழித்து அந்த ஆசிரியர் பகிர்ந்து கொண்ட வீடியோ குறித்து பள்ளி முதல்வர் ‘ஒரு தவறு நடந்து விட்டது, இனிமேல் மீண்டும் அதுபோன்று நடக்காது’ என்று கருத்து தெரிவித்திருந்தார். அந்த ஆசிரியரும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படலாம் என்றே நினைக்கிறேன். குழந்தைகளிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்ட அந்த ஆசிரியரை நம்பவேண்டும் என்றே நான் விரும்புகின்றேன். நாம் அனைவருமே தற்செயலாக தவறான குழுக்களுக்கு செய்திகளை அனுப்பி வைத்திருக்கின்றோம் என்பதால் மன்னிப்பு கேட்டுக் கொள்வதே நமக்குப் போதுமானதாகும்.
ஆனாலும் இதுபோன்று பகிரப்படுகின்ற செய்திகள் நன்கு சரிபார்க்கப்பட வேண்டும். அந்த ஆசிரியர் கடந்த காலங்களில் இதுபோன்ற வகுப்புவாதக் கருத்துகள் அல்லது பரிந்துரைகள் ஏதேனும் செய்திருக்கிறாரா என்பதை மாணவர்களுடன் கலந்து பேசி பள்ளி முதல்வர் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். மற்ற ஆசிரியர்கள் யாராவது இதுபோன்ற செய்திகளை தங்கள் பள்ளிக் குழுக்களிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்களா என்பதையும் அவர் கண்டறிய வேண்டும். ஆசிரியர்களின் மனநிலை குறித்த அறிக்கை தயார் செய்யப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்.
இங்கே அந்த ஆசிரியர், மாணவி, அவரது தந்தை அல்லது தில்லியில் உள்ள அந்தப் பள்ளியின் பெயர்களை தவிர்த்திருக்கிறேன் என்றாலும் அந்த மாணவி அனுப்பி வைத்த செய்தியில் இருந்த ‘நீங்கள் தலையிட வேண்டும் என்று விரும்புகிறேன்’ என்ற கடைசி வரியைத் தவிர்ப்பது உண்மையில் மிகவும் கடினமான காரியமாகவே உள்ளது.
அன்புள்ள ஆசிரியரே, தயவுசெய்து உங்களுக்கு இது போன்ற வெறுப்பு நிறைந்த செய்திகளை அனுப்பி வைப்பவர்களிடமிருந்து – அது உங்களுடைய கணவராக இருந்தாலும்கூட – நீங்கள் விலகியே இருங்கள். மற்றவர்களை மிகவும் மோசமாக வெறுக்கின்ற ஒருவரால் நிச்சயம் உங்களையும் நேசிக்க முடியாது. இந்த மாணவர்கள் – அவர்கள் ஹிந்துக்கள், முஸ்லீம்கள் அல்லது வேறு எந்த மதத்தினராக இருந்தாலும் சரி – உங்களுடைய குழந்தைகள். அவர்களை உங்கள் இதயத்திற்கு நெருக்கமாக இறுகப் பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். எட்டு அல்லது ஒன்பதாவது வகுப்பு மாணவர்களின் வயது என்னவாக இருக்கும்? உங்களிடம் அவர்களை அரவணைத்துக் கொள்ள வேண்டும் என்ற மனம் இருக்க வேண்டாமா?
ஆசிரியர்கள் மீது மாணவர்கள் வைத்திருக்கும் அன்பு வாழ்நாள் முழுவதும் நிலைத்து நீடித்திருக்கும். பாட்னாவில் உள்ள எனது பள்ளியில் முன்னர் கற்பித்து வந்த உதய்ப்பூரைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் என்னுடைய ஆசிரியர்கள் இருக்கின்ற பழைய புகைப்படம் ஒன்றை இன்று எனக்கு அனுப்பி வைத்திருந்தார். அந்தப் புகைப்படத்தில் எனது ஐந்தாம் வகுப்பு ஆசிரியரான கிரேசி மைக்கேலும் இருந்தார். அவரைப் பார்த்த ஒரேயொரு பார்வையே என்னிடம் புன்னகையை வரவழைக்கப் போதுமானதாக இருந்தது. அதுதான் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் உள்ள உறவு. அந்தப் புகைப்படத்தில் இருந்த ஆசிரியர்கள் – அப்போது என்னிடம் கடுமையாக நடந்து கொண்டவர்களும்கூட – என்னை உணர்ச்சிவசப்பட வைத்தனர். அதனால்தான் இதுபோன்ற செயல்களில் இருந்து விலகி இருக்குமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி: என்டிடிவி
தமிழில்: தா.சந்திரகுரு
வரலாற்று பாடப்புத்தகங்களை மாற்றி எழுத பாஜக அரசு மேற்கொண்டிருக்கும் முயற்சிகள் – வரலாற்றிற்கு இழைக்கப்படுகின்ற அவமானம் – ஆர்.மகாலட்சுமி | தமிழில்: தா.சந்திரகுரு
அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரலாறு தொடர்பான பள்ளிப் பாடப்புத்தகங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய ‘சீர்திருத்தங்கள்’ குறித்த நாடாளுமன்றக் குழுவின் அறிக்கையானது ஏற்கனவே நன்கு நிறுவப்பட்டுள்ள அறிவுப்புலத்தின் மீதான தாக்குதல்களை மட்டுமல்லாது, வரலாற்றை மாற்றி எழுதுவது என்று அரசிடம் இருந்து வருகின்ற சந்தேகத்திற்கிடமான திட்டங்களுக்கு இணங்கிப் போகின்ற வகையிலான சர்ச்சைக்குரிய உள்ளடக்கங்களையும் பரிந்துரைப்பதாக உள்ளது.
நவீன, முற்போக்கான சமுதாயத்தைப் பொறுத்தவரை வரலாற்றில் யார், எதை விட்டுச் சென்றிருக்கிறார்கள், எப்படிப்பட்ட வரலாற்று உணர்வு மக்களிடம் புகுத்தப்பட வேண்டும் என்பது குறித்து நிதானித்து சிந்திக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் அவசியம் தேவைப்படுகின்றன. சலுகை பெற்ற ஒரு சிலர் பெரும்பான்மையான மக்கள் மீது மேலாதிக்கம் செய்வது, தலித்துகள், பழங்குடியினர், பெண்களை ஒடுக்குகின்ற வகையில் வரலாறு, பாரம்பரியம், கடந்தகால நடைமுறைகளைப் பயன்படுத்துவது, போலி நாட்டுப்பற்றுடன் பெரும்பான்மை ஹிந்து அடையாளத்தை பிணைத்துக் கொள்வது, சமூக உறவுகளின் மீது வர்க்கம், சாதி, பழங்குடி, மதம், பாலினம் போன்ற அடையாளங்கள் தொடர்ந்து செல்வாக்கு செலுத்தி வருவது என்று இருந்து வருகின்ற இந்தியச் சூழலில் அவ்வாறான சிந்தனைகள் குறிப்பாகத் தேவைப்படுவதாகவே இருக்கின்றன.
ஆனாலும் வரலாற்றை சமூகத்துவவாதக் கோரிக்கைகள் அல்லது அவற்றின் தேவைகளுடன் கொண்டு சென்று இணைக்க முடியாது. மற்ற துறைகளைச் சார்ந்தவர்களுக்கு இருப்பதைப் போலவே வழிகாட்டக் கூடிய வழிமுறைக் கருவிகளும், பகுப்பாய்விற்கான கட்டமைப்புகளும் வரலாற்றாசிரியர்களுக்கும் இருப்பதால் அத்தகைய நிபுணத்துவத்தைக் கொண்டிராதவர்களால் வரலாறு எது என்பதை நிச்சயமாகத் தீர்மானித்து விட முடியாது. எனவே வரலாறு குறித்ததாக இருக்கின்ற எந்தவொரு பள்ளி, கல்லூரி அல்லது பல்கலைக்கழகப் பாடத்திட்டமும் வரலாற்றாசிரியர்களுக்கு மத்தியில் இருந்து வருகின்ற ஒழுங்குமுறை வரையறைகளை, பரந்த பொதுவான புரிதலை நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம்.
இவ்வாறான சூழலில் கல்விக்கான நாடாளுமன்ற நிலைக்குழு சமர்ப்பித்துள்ள ‘பாடப்புத்தகங்களின் உள்ளடக்கம் மற்றும் வடிவமைப்பில் சீர்திருத்தங்கள் குறித்த வரைவறிக்கை’யில் உள்ள பரிந்துரைகள் மீது நாம் அதிக அளவிலே கவனத்தைச் செலுத்த வேண்டியுள்ளது. நாற்பத்தியாறு பக்கங்களுடன் உள்ள அந்த வரைவறிக்கையில் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுமம் (NCERT), புனேவில் உள்ள மகாராஷ்டிரா மாநில பாடநூல் தயாரிப்பு மற்றும் பாடத்திட்ட ஆராய்ச்சி பணியகம் மற்றும் மகாராஷ்டிரா மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுமம் (SCERT) போன்ற மாநில அளவிலான நிறுவனங்கள், ஏழு தனியார் நிறுவனங்கள், நான்கு பாட நிபுணர்கள் என்று அனைவராலும் வழங்கப்பட்டிருக்கும் பதிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஏற்கனவே முன்மொழியப்பட்டிருந்த சீர்திருத்தங்கள் தொடர்பாக மின்னஞ்சல் மூலமாக வரைவறிக்கை தயாரிப்புக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்த இந்திய வரலாற்று காங்கிரஸின் (IHC) கருத்தும் அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.
அரசு நிறுவனங்களால் பள்ளி மாணவர்களுக்கென்று தயாரிக்கப்படுகின்ற பாடப்புத்தகங்களை ‘அரசியலமைப்பு விழுமியங்களை ஊக்குவிப்பது, தேசிய ஒருமைப்பாடு மற்றும் ஒற்றுமையை மேம்படுத்துவது’ என்ற வகையில் இருக்குமாறு சீர்திருத்தம், மறுவடிவமைப்பு செய்வதே அந்தக் குழுவின் பரிந்துரைகளின் நோக்கம் என்று வரைவறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. படங்கள், கிராபிக்ஸ், QR குறியீடுகள். பிற ஒலி-ஒளி சார்ந்த பொருட்களின் மேம்படுத்தப்பட்ட பயன்பாடு ஆகியவற்றுடன் விளையாட்டுகள், நாடகங்கள், பட்டறைகள் ஆகியவற்றுடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், அருங்காட்சியகங்களுக்குச் செல்வது போன்ற புதுமையான கல்வியியல் பயன்பாடுகளை உள்ளடக்குகின்ற வகையில் பாடப்புத்தக வடிவமைப்பில் மாற்றங்களை அந்தக் குழு முன்வைத்துள்ளது.
வரலாற்றை மாற்றி எழுதும் முயற்சி
வரைவறிக்கையின் உள்ளடக்கத்தின் அடிப்படையில் விவாதத்தைக் கிளப்பியுள்ள ஒரே பாடநூலாக வரலாற்றுப் பாடநூல் மட்டுமே இருப்பது மிகவும் வேடிக்கையாக உள்ளது. அதுவொன்றும் தற்செயலானது அல்ல என்பதால் அதுகுறித்து வரலாற்றாசிரியர்கள் அதிக கவனம் செலுத்துவது முக்கியமாகிறது.
வரலாற்றைத் திரித்து காவிமயப்படுத்துகின்ற பாஜக அரசின் முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் 2017 ஆகஸ்ட் 12 அன்று மும்பையில் நடத்திய ஆர்ப்பாட்டம்
‘தேசிய வரலாறு, உள்ளூர் மற்றும் பிராந்திய வரலாறு, ‘போற்றப்படாத ஹீரோக்கள்’, வரலாற்றில் பெண்கள் போன்ற சில விஷயங்கள் மீண்டும் மீண்டும் வரைவறிக்கையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன. தேசம் என்பது நவீனக் கருத்தாக இருப்பதாலும், கடந்த காலத்தை மிகவும் எளிமையான முறையில் முன்வைக்க முடியாது என்பதாலும் அறிக்கையில் உள்ள ‘தேசிய வரலாறு’ என்ற வார்த்தைப் பயன்பாடு வரலாற்றாசிரியர்களின் முன்னால் இருக்கின்ற முதல் எச்சரிக்கையாகவே அமைந்துள்ளது.
இந்திய வரலாற்று காங்கிரஸின் பொதுத்தலைவராக இருந்த சி.எஸ்.ஸ்ரீனிவாச்சாரி ‘ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், பொதுவான அறிஞர்கள் என்று இவர்கள் அனைவருக்கும் மேலாக, பாடப்புத்தகங்களை எழுதுபவர்கள் தங்களைக் கவனமாகப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். வரலாறு என்பது ஒரு பிரச்சாரமோ அல்லது முரட்டுத்தனமான, மோசமான விளம்பரமோ கிடையாது’ என்று 1941ஆம் ஆண்டு நடைபெற்ற அந்த அமைப்பின் ஐந்தாவது அமர்வில் எச்சரித்திருந்தார்.
வழக்கமான, குறுகிய வரம்புகளுக்கு அப்பாற்பட்ட விரிவான, துணை தேசிய, தேசிய, சர்வதேசியச் சூழல்களை அறிந்து கொண்டு ‘உண்மையான வரலாறு’ குறித்து அப்போதே அவர் வெளிப்படுத்தியிருந்த அந்தக் கருத்துகள் வியக்கத்தக்க வகையில் சமகாலத்திற்கேற்றவையாகவே இருக்கின்றன. வரலாற்றை எழுதுவது குறித்து கவனமாக இருக்க வேண்டியது குறித்துப் பேசிய அந்த ஞானியின் அறிவுரையை எண்பது ஆண்டுகளுக்குப் பிறகும் நாம் இப்போது நினைவுபடுத்திக் கொள்ள வேண்டிய நிலைமையில் இருப்பது உண்மையில் வருத்தத்தை உண்டு பண்ணுவதாகவே உள்ளது.
இந்தியாவிற்கான பங்கைக் கொண்டு உலக வரலாற்றைப் புரிந்து கொள்வதற்காக அல்லது இந்திய நாட்டின் ‘கிழக்கைப் பார்’ என்ற கொள்கைக்கு ஏற்றவாறு தென்கிழக்கு ஆசியாவுடனான இந்தியாவின் தொடர்புகளை பள்ளிகளில் (அல்லது ஏதேனும் ஒரு நிலையில்) பொதுவரலாற்றுக் கல்வியாக சேர்ப்பதற்கான பரிந்துரைகளை – அவை எதேச்சையானவையாக, எளிமையானவையாக இருப்பதால் – தற்போதைய கொள்கை முன்னெடுப்புகள் தீர்மானிக்க முடியாது. இந்தியாவின் தொடர்புகள், பரிமாற்றங்கள், இடப்பெயர்வுகளைப் புரிந்து கொள்வதற்கு கிழக்கு, மேற்கு ஆசியா மற்றும் உலகின் பிற பகுதிகளுடன் இந்தியா கொண்டிருந்த தொடர்புகள் நிச்சயமாக ஆய்வுக்குள்ளாக்கப்பட வேண்டும். அத்தகைய புரிதல் எதுவுமில்லாமல் நவீன காலத்தில் வணிகவியம், காலனித்துவ விரிவாக்கம் ஆகியவற்றின் எழுச்சியை உண்மையில் புரிந்து கொள்ள முடியாது.
இந்திய வரலாற்றைப் பற்றிய சரியான புரிதலானது உலக வரலாறு குறித்த ஆய்வுகளைச் சார்ந்தே இருக்கும் என்ற வாதத்தை முன்வைத்து உலக வரலாற்று ஆய்வைத் தழுவிக் கொள்ள வேண்டும் என்று சி.எஸ்.ஸ்ரீனிவாச்சாரி விடுத்த அந்த வேண்டுகோளை முன்கூட்டியே எதிர்பார்த்ததாகவே 1939ஆம் ஆண்டு இந்திய வரலாற்று காங்கிரஸில் ஆர்.சி.மஜும்தார் ஆற்றிய தலைமையுரை அமைந்திருந்தது. ஆனால் புதுவகை ஊடகங்களால் உலகமே சுருங்கிக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் பள்ளிக்கூட அளவிலே உலக வரலாறு குறித்து கற்பிக்கின்ற முறைகளை நாம் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்பது முற்றிலும் முரண்பாடு கொண்ட செயலாகவே இருக்கிறது.
இந்தியாவின் வரலாறு வளமானதாக, பரந்துபட்டதாக உள்ளது. குறிப்பிட்ட நிகழ்வுகள் அல்லது காலகட்டங்கள் குறித்த முக்கியமான முன்னோக்குகளை உள்ளூர் அல்லது பிராந்திய வரலாறுகளால் நிச்சயமாக வழங்க முடியும். பிராந்தியம் குறித்த மாறாத, குறுகிய சமகாலப் புரிதல் என்று மஜும்தார் மற்றும் பிறரால் நிராகரிக்கப்பட்ட ‘மாகாணக் கண்ணோட்டம்’ என்பதிலிருந்து விலகிய வரலாற்றாசிரியர்கள் மாறிக் கொண்டே இருக்கின்ற அரசியல், மொழியியல், கலாச்சார செயல்முறைகளின் காரணமாக பிராந்தியங்களின் பரிணாம வளர்ச்சி குறித்த நுணுக்கமான விழிப்புணர்வு இருக்க வேண்டுமென்ற வாதத்தை முன்வைத்தனர். பள்ளிப் பாடப்புத்தகங்களின் மூலம் பிராந்திய உருவாக்கம், அடையாளம் ஆகியவற்றின் சிக்கலான தன்மையைக் கடத்துவது நமது கடமையாகும். இந்த வரைவறிக்கையில் முன்மொழியப்பட்டுள்ளவாறு பிராந்திய பங்களிப்பை மட்டுமே கொண்டு ‘தேசிய வரலாறு, கௌரவம், ஒருமைப்பாடு’ ஆகியவற்றை முன்வைக்க முற்படுகின்ற செயல் வரலாற்றாசிரியர்களுக்கு – உண்மையில் வரலாற்றிற்கே தேவையற்ற, தகுதியற்ற செயலாகவே இருக்கும்.
பெண்களும் ‘புகழ்ந்து போற்றப்படாத ஹீரோக்களும்’
பெரும்பாலான வரலாற்று ஆதாரங்கள் குறிப்பாக நவீன காலத்திற்கு முந்தைய காலகட்டங்களில் ஆண்களால் எழுதப்பட்டவையாக பெரும்பாலும் ஆண்களைப் போற்றுகின்ற வகையிலே உருவாக்கப்பட்டவையாக இருப்பதால், பாடங்களில் பெண்களின் வரலாற்றுப் பங்களிப்புகளைச் சேர்க்க வேண்டும் என்ற பரிந்துரை முக்கியமானதாகவே இருக்கின்றது. வேதங்கள், ஜாதகங்கள், உபநிடதங்கள், கல்வெட்டுகள், கலை குறித்த நூல்களை ஆய்வு செய்துள்ள ஏ.எஸ்.அல்டேகரின் ‘ஹிந்து நாகரிகத்தில் பெண்களின் நிலை’ போன்ற நூல்கள் இந்திய வரலாற்றாசிரியர்கள் அதை மறந்திருக்கவில்லை என்பதைக் காட்டுகின்றன.
தாங்கள் வாழ்ந்த சூழலைப் பற்றிய புரிதல் இல்லாமல் மிகமிகக் குறைவான எண்ணிக்கையிலேயே ‘தகுதியான பெண்கள்’ இருந்ததால் அவர்களைக் கணக்கிடுவதில் தடைகள் இருந்தன என்பதாக அடுத்த தலைமுறை அறிஞர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். மேலும் திருமணம், குடும்பம், வீடு, உறவுகள் போன்ற சமூக நிறுவனங்களுக்குள் பெண்கள் வைக்கப்பட்டிருந்த விதம் குறித்த ஆழமான புரிதல், பாலினப் பாகுபாடுகளைக் கட்டுடைத்தல் போன்றவை நமக்கு வெவ்வேறு வடிவங்களில் பண்டைய காலங்களிலிருந்து இருந்து வந்திருக்கும் ஆணாதிக்கம், பாலினப் பாகுபாடு ஆகியவற்றின் வரலாற்று அடிப்படையை உணர்த்திக் காட்டுகின்றன.
தற்போது பயன்பாட்டில் இருந்து வருகின்ற பள்ளிப் பாடநூல்கள் பிருஹதாரண்யக உபநிடதத்தில் உள்ள ‘பிரம்மவாதினி’ (பெண் சந்நியாசி) கார்கி வாச்சக்னவி, சாதவாஹனர் காலத்து கெளதமி பாலாஸ்ரீ, தமிழ் வைணவத் துறவி ஆண்டாள், காகதீய ஆட்சியாளர் ருத்ரம்மாதேவி, சுதந்திரப் போராட்ட வீராங்கனை ராணி சன்னம்மா மற்றும் பலரைப் பற்றி குறிப்பிடவே செய்கின்றன. அவை பொதுவாக சமூகத்தில் பெண்களுக்கு இருந்து வருகின்ற கட்டமைப்பு வரம்புகளை மாணவர்கள் விமர்சன ரீதியாகப் பார்ப்பதற்கும் ஊக்குவிக்கின்றன.
வரலாற்றுப் பாடப்புத்தகங்களில் ‘புகழ்ந்து போற்றப்படாத ஹீரோக்கள்’ சேர்க்கப்பட வேண்டும் என்றுள்ள வரைவறிக்கையின் பரிந்துரை மிகவும் விசித்திரமானதாகவே உள்ளது. லட்சிய வரலாற்றாசிரியர் என்பவர் ‘தனது நாயகர்களின் கதையை இயல்பான முறையில் வெளிக் கொண்டு வருவதற்குப் பதிலாக, அவர்களைச் சுற்றி கதையைக் கட்டுகின்ற போக்கைக் காட்டக்கூடாது’ என்று கூறிய சி.எஸ்.ஸ்ரீனிவாச்சாரியின் பரிந்துரையைப் பின்பற்றுவதற்குப் பதிலாக நாம் நன்கு நிறுவப்பட்டிருக்கும் நடைமுறையிலிருந்து விலகிச் செல்வதாகவே தோன்றுகிறது.
வாரணாசி பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் ‘குப்த்வன்ஷக் வீர்: ஸ்கந்தகுப்த விக்ரமாதித்யா’ என்ற தலைப்பில் 2019 அக்டோபர் 17 அன்று நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஸ்கந்தகுப்தாவை தலைசிறந்த அரசர் என்று போற்றியதுடன், வரலாறு அவருக்கு உரிய தகுதியை வழங்கிடவில்லை என்பதால் நமது வரலாற்றை தேசியவாதக் கண்ணோட்டத்தில் எழுதுவதை உறுதி செய்யும் வகையிலே அதிக முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்திருந்தார்.
மிக முக்கியமாக தற்போதுள்ள பாடப்புத்தகங்களில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ள சில நபர்களுக்கு எதிரான அவதூறுகள் தெளிவுபடுத்தப்பட வேண்டும். இந்த ஆட்சி மங்கள் பாண்டே, ராணி லக்ஷ்மிபாய், பண்டித ரமாபாய், பிர்சா முண்டா, தாதாபாய் நௌரோஜி, பாலகங்காதர திலகர், மகாத்மா காந்தி, பெரியார் ஈ.வெ.ராமசாமி, டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், சுபாஷ் சந்திரபோஸ், ஜவஹர்லால் நேரு, அல்லூரி சீதாராம ராஜு போன்றவர்களை விட்டுவிட வேண்டும் என்று முன்மொழிகிறதா என்ன??
காலனித்துவ அழுத்தங்கள், நவ ஏகாதிபத்திய கருத்துகள் இருந்த போதிலும், இருபதாம் நூற்றாண்டு இந்தியச் சூழலில் இருந்த வரலாற்றுப் புலமைத்துவம் நமக்கு கண்ணியமான, சுயாதீமான வரலாற்றுப் பாதையைப் பட்டியலிட்டுக் காட்டியுள்ளது. 1970கள் மற்றும் 1980களில் எழுதப்பட்ட பள்ளி மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களும், 2006ஆம் ஆண்டு முதல் வெளிவந்துள்ள சமீபத்திய பாடப்புத்தகங்களும், பிராந்திய வேறுபாடுகள் அல்லது பெண்கள் மற்றும் பல்வேறு வரலாற்று நபர்களின் வரலாற்றுப் பங்கு குறித்த பிரச்சனைகளில் எளிதில் பாதிப்பை ஏற்படுத்துபவயாக உள்ளன. அணுகுமுறை மற்றும் விளக்கங்களில் வேறுபாடுகள் இருந்தாலும், பொதுவான கல்விக் கருத்துக்களுடன் இணக்கமான தகவல்கள் மற்றும் விளக்கங்களை வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
தற்போது இருக்கின்ற பள்ளி வரலாற்றுப் பாடப்புத்தகங்களில் உள்ள குறைபாடுகள் குறித்ததாக வரைவறிக்கையில் இடம் பெற்றிருக்கும் குறிப்புகள் உண்மைகளை அடிப்படையாகக் கொண்டிருப்பவையாகத் தோன்றவில்லை. இப்போதுள்ள பாடப்புத்தகங்கள் தகவல்களின் தொகுப்புகளை, உள்ளூர் மற்றும் பிராந்திய வரலாறுகளை, ஆண்கள், பெண்கள் என்று வரலாற்று நபர்களைத் தேர்வு செய்து கொண்டுள்ளவையாக உள்ளன என்றாலும் அவை நிச்சயமாக தன்னிச்சையான அல்லது வரலாற்று அடிப்படை எதுவுமில்லாத கருத்தாக்கங்களிலிருந்து வெளிவந்தவையாக இருக்கவில்லை. அதேபோன்று பாடப்புத்தகங்களில் உள்ள தகவல்களை அதிகரிப்பதன் மூலம் ஏற்படுகின்ற கற்பித்தல் தாக்கங்களைக் கவனத்தில் கொள்வதும் மிகவும் முக்கியமானதாகிறது.
வரலாற்று ஆதாரங்கள் மற்றும் தொல்பொருள் ஆதாரங்களைக் கொண்டு கடுமையான ஆய்வுகளைத் தொடர்ந்து மேற்கொள்வதன் மூலம் கடந்த காலத்தைப் பற்றி நம்மிடம் இருந்து வருகின்ற புரிதல்களைக் கேள்விக்குள்ளாக்குவது, மறுபார்வை கொள்வது, மறுபரிசீலனை செய்வது போன்ற செயல்பாடுகள் அவசியமான தேவையாகவே உள்ளன. ஆனால் அதே நேரத்தில் வரலாறு மற்றும் வரலாற்று தன்னுணர்வைக் கட்டமைக்கவும், மேம்படுத்தவும் நிகழ்காலச் சிந்தனைகளைப் பயன்படுத்திக் கொள்வதில் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பதுவும் முக்கியமானதாகிறது. ‘தேசிய வரலாறு’ பற்றிய கருத்துகள் அல்லது இந்திய வரலாற்றின் பண்டைய மற்றும் இடைக்காலங்களை முறையே பூர்வீக/ஹிந்து, வெளிநாடு/முஸ்லீம் என்பது போன்ற கருத்துகளை ஒருங்கிணைப்பது அதனை எடுத்துக்காட்டுவதாகவே உள்ளது.
கடந்த நூற்றாண்டாகத் திறம்பட்டவர்களின் முயற்சிகள் மற்றும் சுய-உணர்வுப்பூர்வமான விவாதங்கள் மூலம் இந்தியாவின் கடந்த கால வரலாற்றுப் புலமை அதிநவீனத்தின் உயர் மட்டத்தை எட்டியுள்ளது. அவ்வாறான சூழலில் வரலாற்றாசிரியர்களின் திறமையைக் குறைத்து மதிப்பிட முயலும் பிற்போக்கான போக்குகளை எதிர்த்து நிற்பது அவசியமாகிறது.
கற்பித்தல் பரிசீலனைகளை மனதில் வைத்துக் கொண்டு முறையியல் ரீதியாக கடுமையானதாக, முதன்மை ஆய்வுகளின் அடிப்படையிலான வரலாற்றுப் புலமையைப் பள்ளிப் பாடப்புத்தகங்கள் பிரதிபலிக்க வேண்டும். ‘சீர்திருத்தப்பட்ட’ புதிய பாடப்புத்தகங்களை நுழைப்பதற்காக தற்போதுள்ள பள்ளி வரலாற்றுப் பாடப்புத்தகங்களை நீக்கும் வகையிலே ‘உண்மை என்பதாகத் தோற்றமளிக்கின்ற’ தகவல்களைப் பயன்படுத்திக் கொள்வது சரியாகாது. தற்போது சொல்லப்பட்டு வருவதைக் காட்டிலும் வரலாறும், வரலாற்றை எழுதுவதும் உண்மையில் மிகத் தீவிரமான செயல்பாடுகளாகும். இதுவே வரலாற்றைக் கட்டமைக்கிறது என்று கட்டளையிட்டுக் கூறுவதன் மூலமாக தேசியப் பெருமையை நிலைநாட்டி விட முடியாது. அதுமட்டுமல்ல… வரலாற்றை வெட்டி-ஒட்டுகின்ற வகையிலான செயல்பாடாக நிச்சயம் குறுக்கி விடவும் முடியாது.
https://frontline.thehindu.com/cover-story/bjp-attempt-to-rewrite-textbooks-a-disservice-to-history/article38189091.ece
நன்றி: ஃப்ரண்ட்லைன்
தமிழில்: தா.சந்திரகுரு