இன்று அதிகம் தேவைப்படும் விஞ்ஞான பிரசார்! கட்டுரை – ஆயிஷா இரா.நடராசன்
அக்டோபர் 24, தீபாவளி. இன்று இதை எழுதுகிறேன். இதே அக்டோபர் 24, 1995 அன்று என் தந்தை திடீர் நோய்வாய்ப்பட்டு அவசர சிகிச்சை பெற ஆம்புலன்ஸை அழைத்தபோது பிரபல சென்னை மருத்துவமனை (அப்போதெல்லாம் 108 கிடையாது) அதை அனுப்ப மறுத்தது. அதை இப்போது நினைக்கிறேன். பிறகு யார் யாரிடமோ கெஞ்சி ஒரு கார் பெற்று அவரை கிட்டத்து மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வதற்குள் அவரது உயிர் பிரிந்துவிட்டது. காரணம் அன்று முழு சூரிய கிரஹணம். யாருமே சாலைக்கு வரவில்லை. மருத்துவர்களேகூட. ஆம்புலன்ஸ் எப்படி வரும்? நம் நாட்டின் ‘அறிவியல் மனப்பான்மைக்கு இதைவிட பெரிய சான்று தேவை இல்லை.
நாம் எப்போதும் பொருளாதார ஏற்றத்தாழ்வு பற்றி பேசுகிறோம். கல்வியில் பின்தங்கிவிட்டதைப் பற்றி விவாதிக்கிறோம். வேலைவாய்ப்பின்மை பற்றி வேதனைப்படுகிறோம். படித்தவர் பாமரர் என வேற்றுமை இன்றி மூடநம்பிக்கை – பிற்போக்கு அறிவியலற்ற அச்ச நிலையின் உச்சம் பற்றி ஏன் பேசுவதே இல்லை? கல்வி என்கிற ஒன்றை வேலைவாய்ப்போடு மட்டுமே தொடர்புபடுத்தும் நாம் அறிவியல் மனப்பான்மை, விழிப்புணர்வு பெறுவதே கல்வி என்று ஏன் நினைப்பது இல்லை. ஆனால், இந்த விஷயத்தில் விஞ்ஞான பிரசார் செய்துவரும் சேவை நம்மை மெய்சிலிர்க்க வைக்கும் ஒன்று.
அறிவியல் தொழில்நுட்பம் மக்களின் அன்றாட வாழ்வோடு பின்னிக்கிடப்பது போல அறிவியல் மனப்பான்மை அணுகுமுறை இல்லை. பிற்போக்குவாதம், மூடநம்பிக்கை, மதவெறி என பல்வேறு சமூகக் கேடுகளுக்கு எதிராக அறிவியலைக் கொண்டாடும் சவாலான அமைப்பாக விஞ்ஞான் பிரசார் திகழ்கிறது.
1989-ம் ஆண்டில் தொடங்கப்பட்டு இந்த அக்டோபர் 11 அன்று 33-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்தது அது. இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் ஒரு தன்னாட்சி அதிகார அமைப்பாக அது வளர்த்தெடுக்கப்பட்டது.
அதன் ஸ்தாபகர் முதல் இயக்குனர் விஞ்ஞானி டாக்டர் நரேந்தர கே. ஷெகல் விஞ்ஞான் பிரச்சாரை தனித்துவ மக்கள் அமைப்பாக வென்றெடுத்தது வரலாறு. அறிவியலை கொண்டாடுதல் முதல் நோக்கம். பொதுவாகவே அரசியல் தலைவரை, நடிகரை, கிரிக்கெட் வீரரை பெரிய கதாநாயக நிலைக்கு உயர்த்தி ஆரவாரிக்கும் இந்திய சமூகத்தில் விஞ்ஞானிகளைக் கொண்டாடி மக்கள் முன் அங்கீகரிப்பதில் விஞ்ஞான பிரசார் என்றுமே முன்னிலை வகித்து வருகிறது. உலக அறிவியல் சாதனைகளுக்கு சற்றும் சளைக்காத நம் இந்திய அறிவியலின் எழுச்சி நாயகர்களின் பங்களிப்புகளை நமக்கு கொண்டுவந்து சேர்ப்பதில் விஞ்ஞான் பிரச்சாருக்கு பெரும் பங்குண்டு.
1989 முதல் இன்று வரை 350க்கும் மேற்பட்ட சிறிதும் பெரிதுமான அறிவியல் நூல்கள், 2650 மணி நேரத்துக்கும் அதிகமான அறிவியல் விழிப்புணர்வு ஆவண படங்கள், 370 மணி நேர ஆடியோ அறிவியல் விழிப்புணர்வு தொகுப்புகளை உருவாக்கி எழுச்சி நடைபோடுகிறது. விஞ்ஞான் பிரசார். பல பத்தாண்டுகளாக நாம் தொடர்ந்து வாசித்து வரும் கனவு 2047 (DREAM 2047) அறிவியல் மாத இதழ் தனித்து குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே வந்து கொண்டிருந்ததை இன்று ஏனைய பிராந்திய மொழிகளிலும் பலவிதமாக வெளியிடுகிறது விஞ்ஞான் பிரசார். தமிழில் அவ்விதம் வெளிவரும் விஞ்ஞான் பிரச்சாரின் இதழ்தான் நம் ‘அறிவியல் பலகை’.
இப்படிப்பட்ட ஓர் அமைப்பின் தேவை குறித்து ஜவஹர்லால் நேரு விடுதலைக்கு முன்பே தனது இந்தியாவை கண்டுணர்தல் (THE DISCOVERY OF INDIA) நூலில் எழுதினார். சகிப்பின்மை, பிற்போக்குவாதம் மற்றும் அதீத மூடநம்பிக்கை போன்றவை மனிதனை செயல்படவிடாமல் செய்யும் உடலை சுற்றிய சங்கிலிகள் என்பார் அவர். 1953-லேயே விஞ்ஞான் மந்திர் (அறிவியல் கோயில்) என்று அறிஞர் பட்னாகர் தலைமையில் ஓர் அறிவியல் அமைப்பை நேரு உருவாக்கினார். விக்யான் பிரகதி என்று ஒரு சஞ்சிகையும் தொடங்கப்பட்டாலும் அது இந்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆய்வகத்தின் (CSIR) அங்கமாக இருந்ததால் நினைத்த அளவுக்குச் செயல்பட முடியவில்லை .
ஆனால், விஞ்ஞான பிரசார் அமைப்பின் ஸ்தாபகர் முதல் தலைவர் நரேந்தர. கே. ஷெகல் பற்றி தனித்து குறிப்பிட வேண்டும். இந்தியா பெற்றெடுத்த அற்புத துகளியல் இயற்பியல் விஞ்ஞானி. யுனெஸ்கோ உலக அளவில் வழங்கும் சாதாரண மக்களிடம் அறிவியலைக் கொண்டு செல்பவருக்கான உயரிய கலிங்கா விருதை 1991-ம் ஆண்டில் பெற்றவர். தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை இந்தியாவில் அறிமுகம் செய்தவர். 1987-ம் ஆண்டில் அறிவியல் விழிப்புணர்வுக்காக பாரத் ஜன் விக்யான் ஜாதா மேற்கொண்டவர். அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பை 1988 – ம் ஆண்டில் உருவாக்கியவர்களில் ஒருவர். அவரது விஞ்ஞான் பிரசார் ஆண்டுளான 1988 முதல் 2000-ம் ஆண்டு வரை பல அற்புதங்களை அந்த அமைப்பு சாதித்தது.
‘விக்யான்விதி’, மானவ்கா விகாஸ் (மனித பரிணாமவியல்) போன்ற பிரபலமான வானொலித் தொடர்கள். பேராசிரியர் யஷ்பால் வழங்கிய திருப்புமுனை (TURNING POINT) உட்பட பல அறிவியல் தொலைக்காட்சி விழிப்புணர்வு தொடர்கள். 1995-ம் ஆண்டில் பிள்ளையார் பால் குடித்த விந்தையின் போது, அதிலுள்ள விஞ்ஞானத்தை விளக்கி மோசடியை தேசிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.
நோய்த் தொற்று காலத்தில் கோவிட் விழிப்புணர்வு எனும் பிரமாண்ட சேவையோடு இந்திய மருத்துவ கவுன்சிலோடு இணைந்து கோவிட் தடுப்பு நடவடிக்கைகளில் விஞ்ஞான் பிரசார் பெரும் பங்காற்றியது. அறிவியல் கருத்தரங்கங்கள், வானியல், வான் நோக்கும் நிகழ்ச்சிகள், கடற்கரைத் தூய்மை, வன உயிர் பாதுகாப்பு, உள்நாட்டுச் சாதனை விஞ்ஞானிகளை கொண்டாடுதல் என்று அதன் செயல்பாடுகள் அறிவியல் பலகை வழியாக தமிழ் மண்ணிலும் தொடர்வது காலத்தின் தேவை.
அறிவியல் இந்தியன் (THE SCIENTIFIC INDIAN) என்ற தனது நூலின் பின்னுரையில் பாரத ரத்னா டாக்டர் அப்துல்கலாம், ‘சந்திரயான் திட்டம், அணு ஆய்வு திட்டங்கள் ஆகியவற்றுக்கு ஒதுக்குவதைவிட அதிக அளவு தொகையை நாம் அறிவியலை மக்களிடம் எடுத்துச் செல்ல செலவிட வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். நரபலி உட்பட கொடிய பிற்போக்கு அபாயங்கள் சூழும் இன்றைய காலத்தில் விஞ்ஞான் பிரச்சாரின் தேவை அதிகம் உணரப்படுகிறது. தனது முப்பத்தி மூன்றாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் மக்கள் அறிவியல் அமைப்பான விஞ்ஞான் பிரச்சாரை வாழ்த்தி, அதன் தமிழ் வடிவமான அறிவியல் பலகைக்கு தோள் கொடுப்போம்!
”அறிவியல் இந்தியன் The Scientific Indian) என்ற தனது நூலின் பின்னுரையில் பாரத ரத்னா டாக்டர் அப்துல்கலாம், ‘சந்திராயன் திட்டம், அணு ஆய்வு திட்டங்கள் ஆகியவற்றுக்கு ஒதுக்குவதைவிட அதிக அளவு தொகையை நாம் அறிவியலை மக்களிடம் எடுத்துச் செல்ல செலவிட வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.”
நன்றி: அறிவியல் பலகை