Global Claim Article By A Bakkiam. உலகளாவிய உரிமைக்குரல் - அ.பாக்கியம்

உலகளாவிய உரிமைக்குரல் – அ.பாக்கியம்




 (தோழர் என்.ராமகிருஷ்ணன் எழுதிய, மகத்தான பிரெஞ்சு புரட்சி, ரஷ்ய புரட்சி புதிய தரிசனம், சாசன இயக்கம், உலகின் முதல் கம்யூனிஸ்ட் சதி வழக்கு, அயர்லாந்து எண்ணூறு ஆண்டுகள் விடுதலைப்போர், நீதிக்காக போராடும் பாலஸ்தீன மக்கள் ஆகிய ஆறு நூல்களை முன்வைத்து 02.10.2010.அன்று நடைபெற்ற தமுஎகச தென்சென்னை மாவட்ட ஆய்வரங்கில் சமர்ப்பித்தது)

 கடவுள்களால் கடந்த காலத்தை அழிக்க முடியாது. அத்தகைய வலிமை அவர்களுக்கு கிடையாது என்று ஆப்பிரிக்க அறிஞன் அகதான் கூறினான். வரலாறு அந்த அளவிற்கு சக்தி வாய்ந்தது என்பதை உணர்த்துவதுதான் இந்த கருத்தின் அர்த்தமாகும். வெற்றி பெற்ற மன்னர்கள்.தலைவர்கள் கடந்தகால வரலாற்றை அழித்துவிட்டு தங்களது வசதிக்கேற்ற வரலாற்றை எழுதுவர். இந்தவித அழிப்புக்கு எதிரான தொடர்ந்து வரலாற்றினை பாதுகாக்கும் போராட்டமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வரிசையிலேயே மேற்கண்ட புத்தகங்களையும் ஆசிரியர் படைத்துள்ளார்.

வரலாறு என்றால் மன்னர்கள், தளபதிகள், தலைவர்களின் சாதனைகள் என்ற கருத்துமுதல்வாத சித்தாந்தங்கள் இன்றும் ஆதிக்கம் செலுத்துகிறது. ஆளும் வர்க்கமும் இதையே நிலைநாட்ட விரும்புகிறது. ஆசிரியர் மேற்கண்ட புத்தகங்களில் மக்களின் வரலாற்றை, அக்கால பொருள் உற்பத்தி முறையின் பின்னணியோடு விளக்கியுள்ளார். இது நாள் வரையிலான வரலாறுகள் அனைத்தும் வர்க்கப்போராட்டங்களின் வரலாறே என்ற மார்க்சிய பார்வையுடன் கூடிய பதிகவுளை நிலைநிறுத்தியுள்ளார்.

முதலாளித்துவ வர்க்கத்தினர் அனைத்தையும் ஒரு விற்பனைக்கான சரக்காக மாற்றி வருகின்றனர். வரலாற்றை எழுதுவது என்பதையும் அவ்வாறே செய்து விடுகின்றனர் என்று ஏங்கெல்ஸ் எழுதினார். இந்தியாவில் இன்றைய ஆட்சி அதிகாரத்தை பிடிக்கவும், தக்க வைக்கவும் நடைபெறும் அரசியல் வியாபார சந்தையில் வரலாற்று  வணிகம் அமோகமாக விலைபோகின்றது. வரலாற்றின் வடுக்கள் வலிமையானது மட்டுமல்ல எதிர்கால திசையை தீர்மானிக்க கூடியதுமாகும் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

 கடந்த காலத்தை அறிந்த கொள்ளாமல் எதிர்கால பாதையின் இலக்கை எந்த ஒரு இயக்கமும் தீர்மானிக்க முடியாது. வரலாற்றை அணுகும் முறை, ஆய்வு செய்யும் முறை, பயன்படுத்தும் முறை முக்கியமான ஒன்றாகும். அதைவிட வரலாறு யாரால் எழுதப்படுகின்றது? யாருக்காக எழுதப்படு கின்றது என்பது பிரதான கேள்வி? வெற்றி பெற்றவர்களாலும், உயர்குடி மக்களாலும், அரசு சார்ந்த வரலாறுகளும்தான் இன்று அதிகமாக போதிக்கப்படுகின்றது.    வெற்றி கொண்டவர்களே சரித்திரம் எழுதும் சம்பிரதாயத்தை உடைத்தெறிவதற்காக இந்த என் மக்களின் கதை உதவிடும் என்று நம்புகிறேன் என்று அலெக்ஸ்ஹேலி ஏழு தலைமுறைகள் நாவலின் கடைசிவரியில்  முடித்தான்.

இங்கே ராமகிருஷ்ணன் எழுதியுள்ள மேற்கண்ட நூல்கள் அடித்தட்டு மக்களை முன்வைத்தே பேசப்படுகின்றது. வரலாற்றாளன் நிகழ்வுகளை பதிவு செய்வான். கலைஞன் உண்மைகளை தேடுவான் என்ற கூற்றுக்கேற்ப இராமகிருஷ்ணன் வரலாற்றாளனாகவும், கலைஞனாகவும் இப்புத்தகத்தின் வழியே காணப்படுகின்றார்.நிகழ்வுகளையும் பதிவுசெய்கிறார் புள்ளிவிபரங்களையும் பதிசெய்கிறார். அதற்கு பின்னால் உள்ள வர்க்க நலன்களையும் அம்பலப்படுததுகிறார்.

மேற்கண்ட ஆறு தலைப்புகளில் பல புத்தகங்களும், ஆய்வுகளும் வெளிவந்துள்ளது. ஆனால், இந்நூல்கள் புதிய வாசகனும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாகவும் தேவையான அளவு விஷயதானங்களையும், வாசிப்பு தன்மை குன்றாமல் கொடுத்துள்ளார்.

வரலாற்று நூலுக்கு காலவரையரை மிகமுக்கியமானது.காரணம் காலமும்,அக்காலத்தில் ஏற்படும் மாற்றமும் நாம் அறியஉள்ள விஷயங்களை துல்லியமாக் நமக்கு வழங்குகின்றன. பிரெஞ்சுபுரட்சி, ரஷ்யபுரட்சி, சாசன இயக்கம், முதல் கம்யூனிஸ்ட் சதி வழக்கு ஆகிய நான்கு நூலுக்கும் அதற்குரிய காலத்தை அதற்குரிய பின்னனியோடு வரையறுத்துள்ளார். மற்ற இருநூல்களான அயர்லாந்து, பாலஸ்தீனம் ஆகிய போராட்டங்கள் அம்மக்களின் இருப்பிடம், உருவாக்கம் ஆகியவைகளே கேள்விக்கு உள்ளாக்கப்படுவதால், அவர்களின் பூர்வீகத்திலிருந்து காலவரையரையை நிர்ணயித்துள்ளது குறிப்பிடத் தக்கது.

மேற்கண்ட புத்தகங்களில் வர்க்க நிலைபாட்டை மட்டுமல்ல வர்க்க செயல்பாட்டை அதன் போக்கிலேயே தெளிவாக கொண்டுவந்துள்ளது சிறப்பம்சாகும். காரணம், பிரஞ்சுப்புரட்சி, சாசனஇயக்கம் ஆகியவற்றில் உருவாகிவரும் பாட்டாளி வர்க்கத்தின் இருப்பையும், செயல்பாட் டையும், நிலபிரபுத்துவ, முதலாளித்துவ மோதல்களுக்கிடையில் முழ்கிவிடாமல், புத்தகத்தில் நிலைநாட்டியுள்ளார். குறிப்பாக பிரெஞ்சு புரட்சியில் தலைகீழ் மாற்றங்கள், திருப்பங்கள் தேசிய சட்டமன்றம் துவங்கி நெப்போலியன் ஆட்சிக்குவரும் போது இயங்கிய டைரக்டரி வரை உள்ள செயல்பாடுகள் எந்த வர்க்க நலன் சார்ந்தது என்பதை வெளிக்கொணர்ந்து புரிய வைப்பது அவ்வளவு எளிதானது அல்ல. புத்தகம் அதை எளிமையாகவே செய்துள்ளது.              

பிரெஞ்சுப் புரட்சி-ரஷ்யப் புரட்சி -சாசன இயக்கம்
மேற்கண்ட மூன்று புத்தகங்களும் வெவ்வேறுநாட்டில் வெவ்வேறு காலத் தில் ஒன்றன்பின் ஒன்றாக நடைபெற்றது.பிரஞ்சுப்புரட்சி முதலாளித்துவ சகாப்தத்தை துவக்கிவைத்தது.ரஷ்யப்புரட்சி சோசலிச சகாப்தத்தை துவக்கி வைத்தது.சாசன இயக்கத்தில் முதலாளிகள் நலன்உள்ளடங்கி இருந்தாலும்  தொழிலாளர் உரிமைக்கான முதல் இயக்கமாக இருந்தது என்பதை புத்தகத்தை வாசிக்கும்போது புரிந்து கொள்ளலாம்.எனினும் தனித்தனியாக எடுத்துக் கொண்டு ஒவ்வொன்றையும்  நீண்ட கட்டுரையாக மாற்றுவதைவிட புத்தகத் தில் கையாண்டுள்ள சில விஷயங்களை முன்னிறுத்தலாம் என்று கருதுகிறேன்.

முதலாவதாக படைப்பு சராசரி வாசகர்களை ஈர்க்க வேண்டும். அதே நேரம் தீவிரவாசகர்கள் அனுபவிக்கவும் அதில் இடங்கள் அமைந்திருக்க வேண்டும் என்று உம்பட்டோ எக்கோ வின் கூற்றுக்கு ஏற்ப புத்தகங்களின் பல பகுதிகள் அமைந்துள்ளது. தீவிரவாசகர்களுக்கு முழுமையாக தீனிபோடவில்லை என்றாலும் அவர்களுக்கான இடங்களும் உள்ளது.காரணம் புத்தகம் சராசரி வாசகனை சென்றடைய வேண்டும் என்ற நோக்கம் முன்வைக்கப்பட்டதால்  இவ்வாறு அமைந்துள்ளது. வரலாற்றை அறிந்தவர்களுக்கு மட்டுமல்ல புதியவர்களுக்கும் புரியக்கூடிய வகையில் எழுதப்பட்டுள்ளது. இந்த மூன்று புத்தகங்களிலும் காலவரிசைப்படி நிகழ்வுகளை முன்வைத்திருப்பதும், கடினவார்த்தை களை தவிர்த்திருப்பதும் எளிய வாசிப்புக்கும் புரிதலுக்கும் உதவுகிறது. உதாரணமாக அன்றைய பிரெஞ்சுநாட்டு சமுகத்தை புரிந்துகொள்ள, மதகுருக்கள் முதல் எஸ்டேட், நிலபிரபுக்கள் இரண்டாவது எஸ்டேட், மக்கள் மூன்றாவது எஸ்டேட் என்று புள்ளிவிவரங்களுடன் விபரித்திருப்பதை குறிப்பிடலாம்.  ரஷ்ய புரட்சி புத்தகத்தில் எளிமையாக புரிந்துகொள்ளும் வகையில் கீழ்கண்ட விஷயத்தை முன்வைக்கலாம்.

சார்மன்னன் காலத்தில் தொழிலாளர்கள் நிலையை குறிக்கும் வகையில்  உங்கள் அறையில் எத்தனை பேர் என்ற கேள்வியுடனான தலைப்புகள். இதில் 12 பேர்கள் என்று பதில் வரும். எப்படிப்பட்ட அறை? 12 பேர்களும் ஒரே நேரத்தில் படுக்கமுடியாமல் முறைவைத்து படுப்பது, கரியும், அழுக்கும் நிறைந்த சுவர்கள், வியர்வை நாற்றம் வீசும் அறை! என்ற வர்ணனை. புத்தகத்தின் கடைசி அத்தியாயத்தில் புரட்சிக்கு பிறகு உங்கள் அறையில் எத்தனை பேர் என்றால், நான், எனது மனைவி, குழந்தைகள் என்ற பதிலுடன் புத்தகம் முடிவது சராசரி வாசகனுக்காக. இதே போன்று சாகனஇயக்கம் புத்தகத்தில் இங்கிலாந்தின் தொழிற்புரட்சியின் கோரச்சுரண்டலை விளக்கிடதொண்ணூறு ஆண்டுகளில் ஒன்பது தலைமுறைகளை விழுங்கப்பட்டு விட்டன என்ற பீல்டனின் வார்த்தைகள் எளிமையானது மட்டுமல்ல வலிமையானதும் கூட.

அதே நேரத்தில் ரஷ்ய சமூகத்தில் பெரும் தாக்கம் ஏற்படுத்திய நரோதியம் தோன்றுவதற்காக பொருளாதார சமூகக்ரணிகளை ஆழமாகவும், சுருக்கமாகவும் (பக்.14) பதிய வைத்துள்ளதும், ரஷ்யபாராளு மன்ற(டூமா) தேர்தலில் போல்ஷ்விக் கட்சி பங்கேற்காமைக்கு காரணமான தந்திரங்க ளையும் விளக்கியுள்ளார்.(பக்.71) ரஷ்ய புரட்சியின்முக்கியமான தந்திரோஉபாயங்களை தவறாமல் ரத்தினச்சுருக்கமா விளக்கியுள்ளார். உதாரணமாக ரஷ்யாவில் அன்றிருந்த புரட்சிகரமான சக்திகளில் பலபிரிவுகள்,பல போக்குகள் இருந்ததால் ஆயத தாக்குதலை திட்டமிட்டு நடத்துவதில் பல சிரமங்கள் இருந்தது. எடுத்த முடிவுகள் வெளிவந்த முறைகள் புரட்சிக்கு குந்தகம் விளைவிக்கும் என்பதை உணர்ந்த லெனின் ஒரு நிமிடம் தாமதிக்காமல், இன்றே இப்போதே, இந்த நிமிடமே தாக்குலை தொடங்குங்கள் என்ற அறைகூவல், எந்தஅளவு வெற்றிக்கு வித்திட்டது என்பதை புத்தகம் தெளிவாக தேவையான வகையில் விளக்கியுள்ள முறைகள், தீவிர வாசகர்களும் அனுபவிக்கும் வகையில் அமைந்திருக்கிறது

இதேபோன்று பிரஞ்சுப்புரட்சியில் முதலாளித்துவம் அதிகாரத்தை கைப்பறிய பிறகு நடந்த தேசிய சட்டமன்றம், அரசியல் நிர்ணய சபை,தேசியபடை, ஜாக்கோபின்கள் கழகம் அதில் உருவான பிரிவுகள் அனைத்தும் ஆழமான வகையில் விளக்கப்பட்டுள்ளது. அன்னியநாடுகள் படையெடுத்த போது தேசிய படைகள் புரட்சிபாடல்களை பாடி அணிதிரட்டியது, போதியபாதுகாப்பு உடைகளின்றியே தொழிலாளர்கள் யுத்தத்தில் பங்கேற்றது மட்டுமல்ல பாரீஸ் தொழிலாளர்கள் மாதம் 650 துப்பாக்கிகளை உற்பத்திசெய்த நிலையைமாற்றி மாதம் 16000 துப்பாக்கிகளையும், 20000 கிலோ வெடிமருந்துகளையும் தயாரித்து கொடுத்து வெற்றிவாகைசூடினர். தொழிலாளி வர்க்கத்தையும், விவசாயி களையும் முதலாளிவர்க்கம் எப்படி தனது வெற்றிக்கு பயன்படுத்தி விட்டு. அவர்களை கழுத்தை அறுத்து ரத்தவெள்ளத்தில் மூழ்கடித்தது என்ற பதிவு முக்கியமானது.

இதேவகையில், சாசன இயக்கத்திற்கு முன்பாக நடைபெற்ற அனை வருக்கும் வாக்குரிமை என்ற இயக்கம் தீவிரதன்மை வாய்ந்த தொழிலாளர்களின் தலைமைக்கு சென்றுவிடக்கூடாது என்பதற்காக அதிலிருந்த முதலாளிகள் பலபிரித்தாளும் காரியங்களை கையாண்டனர்.1832-க்குபிறகு தொழிலாளி வர்க்கம் தலைமையில் சாசன இயக்கம் அரசியல் இயக்கமாக வீறுகொண்டு எழுந்தபோது  அவற்றை  அடக்கியமுறையும் தொழிற்சங்கத்தை தடைசெய்து தணடித்தது,அதற்குத் தலைமை தாங்கியவர்களை விலைபேசிய தன்மைகளும், மூலதனத்தை தோலுரித்துக் காட்டுகிறது. சாசன இயக்கத்தில் தலைதூக்கிய தார்மீககட்சியினர், பலப்பிரயோக கட்சியினர், ஜனநாயகப் பிரிவினரின் போக்குகள் இயக்கத்தின் உள்முரண்பாடுகளை புரிந்துகொள்ள உதவுகிறது. மார்க்சும், எங்கல்சும் சாசன இயக்கத்தில் தொடர்பை ஏற்படுத்தி இடதுசாரி பிரிவினருடன் இணைந்து செயல்பட்டனர்.

முதலாளித்துவ வர்க்கம் காலனி நாடுகளில் அடித்த கொள்ளையால், தகுதிவாய்ந்த ஆங்கிலேயே தொழிலாளி வர்க்கத்தின் நிலையை உயரச் செய்தது. ஒரு பகுதி தொழிலாளர்களை வசதியானவர்களாக மாற்றியது. இதனாலும், ஒரு உறுதிமிக்க பாட்டாளி வர்க்க ஆட்சி இல்லாததாலும் சாசன இயக்கம் பின்னடைவை சந்தித்தது என்று மார்க்ஸ் கூறினார். இன்றும்கூட ஆளும் வர்க்கம் இதுபோன்ற தந்திரங்களை கையாள்வதை நாம் உணர வேண்டும்.சாசனஇயக்கம் தனிமைப்பட்டபோது சாசன கோரிக்கைகளுக்ககாக நடத்தும் அரசியல் போராட்டத்தை தொழிலாளி வர்க்கத்தின் அன்றாட பொருளாதார போராட்டங்களுடன் ஒன்றிணைப்பது அவசியம் என்று மார்க்ஸ், எங்கல்ஸ் என இருவரும் கருத்து தெரிவித்தனர். இங்கிலாந்து நாடானது சாசனஇயக்கம் என்ற முதலாவது பரந்துபட்ட உண்மையான வெகுஜன மற்றும் திட்டவட்டமான அரசியலைக் கொண்ட பாட்டாளிவர்க்க புரட்சிகர இயக்கத்தை உலகிற்கு அளித்துள்ளது என்று லெனின் மதிப்பீடு செய்தார். சாசனஇயக்கம் என்ற புத்தகத்தில் மேற்கண்ட அம்சங்கள் தீவிரவாசகர்களுக்கும் பயனுள்ளதாகும்.

இரண்டாவதாக, இந்த மூன்றுபுத்தகங்களிலும் நிலபிரபுத்துவத்தின் கொடுமைகள் மனதை நெருடும் வகையில் விளக்கப்பட்டுள்ளது.  மன்னர்களையும் மகாராஜாக்களையும் துதிபாடி மக்களாட் சியின் மகத்துவர்களாக சிததரிக்க முயலும் இந்தக் காலத்தில் நிலபிரபுத்துவத்தின் கோரமுகங்களை நினைகூர்வது நமது கடமை.பிரஞ்சுப்புரட்சி  புத்தகத்தில்,  நீதிபதிகளுக்கு பகிரங்கமாக விலை நிர்ணயிக்கப்பட்டது. 400 வகையான சட்டங்கள, சட்டத்திற்கு மேலே ஆளும் வர்க்கம் இருந்தது. அனைத்து சட்டங்களும்  மூன்றாவது எஸ்டேட் என்று அழைக்கப்பட்ட 92 சதமான மக்கள் மீதான அடக்குமுறைக்கே பயன்பட்டது. சிறிய குற்றங்கள் அல்ல தவறுகளுக்குகூட சக்கரத்தை ஏற்றி எலும்பை முறிப்பது, கையை நறுக்குவது, காதுகளை அறுப்பது, என கொடிய தண்டனைகள் சாதாரணமாக நிறைவேற்றப் பட்டது. தவளைகள் கத்துவதால் நிலபிரபுக்களின் தூக்கம் கெடுகிறது.விவசாயி கள் இரவெல்லாம் தவளைகளை விரட்டிட வேண்டும்.

மீறி தவளைசத்தம் கேட்டால் விவசாயிகள் காது அறுக்கப்படும். கடும் தண்டனைக்கு உள்ளா வார்கள். பட்டினியில் மடிந்து கொண்டிருந்த மக்கள் ஊர்வலமாக சென்று உணவுகேட்டபோதுஇதோஇங்கே இருக்கிற புல்லைத் திண்ணுங்கள் என்று கூறிய நிலபிரபுத்துவ அதிகாரிகள். இந்தியாவில் கூட உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தாலும், எலி திண்ணாலும் திண்ணட்டும, அழுகி வீணாகினாலும் ஆகட்டும் ஏழைகளுக்கு உணவளிப்பது என் வேலை அல்ல என்று மன்மோகன் சிங் அடம்பிடித்தது  லூயி மனனனை நமக்கு நினைவூட்டுகிறது,

இங்கிலாந்தில் கிராமங்களில் கோட்டை போன்ற இடங்களை உருவாக்கி விவசாயிகளை அதற்குள் வசிக்கவும் கட்டாயப்படுத்தினர் வேலைசெய்யும் இடத்தை  (றடிசம டிரளந) உருவாக்கி ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என தனித்தனியாக பிரித்து கல்உடைத்தல், எலும்புகளை பொடியாக்குதல், போன்ற கடின வேலைகளை கொடுத்தனர். கால்வயிறு உணவளிததனர். பட்டினி தாளாமல் அவர்கள் எலும்புளில் இருந்த மஜ்ஜைகளை நக்கித்தின்றனர். பட்டினியால் மடிந்தனர்.

ரஷ்யப்புரட்சி புத்தகத்தில் அடிமைகள் மற்றும் சார்மன்னனின் அடக்குமுறைகள் தொழிற்கூடத் திலும் கல்லூரிகளிலும் எப்படி இருந்தது என்பது விளக்கப்பட்டுள்ளது. தூக்குமேடைகள், நாடுகடத்தல் என்பது சாதாரணமாக நிறை வேற்றப்பட்டுள்ளது. அயர்லாந்து  விடுதலைப் போராட்ட புத்தகத்தில்  நிலபிரபுத்துவ கொடுமைகளை சகிக்கமுடியாத வகையில் உள்ளது.அவர்கள் காட்டை அழித்து உருவாக்கிய விளைநிலங்களை சிதைத்தனர்.காடுகளையும் மேய்ச்சல் நிலங்களையும் கைப்பற்றி அம்மக்களை விரட்டினர். கம்பளி தொழிலுக்காக 96 லட்சம் ஆடுகளுக்காக 11 லட்சம் அயர்லாந்து மக்களை விரட்டியடித்த கொடுமைகளை மார்க்ஸ்  அம்பலப்படுத்தியுள்ளார். கொடூர சுரண்டலால் பஞ்சம். பஞ்சத்தால் 20 சதம் மக்கள் மரணம்.

மூன்றாவதாக, முதலாளித்துவத்திற்கு முந்தைய சமூக அமைப்பில் மேல்கட்டுமானமாக இருந்த மதம் பொருளாதார சுரண்டலின் கருவியாக செயல்பட்டது என மார்க்ஸ் கூறியுள்ளார்.இதற்குரிய பலதகவல்களை இப்புத்தகங்களில் ஆசிரியர் கொடுத்துள்ளார். பிரஞ்சுபுரட்சி புத்தகத்தில் மதக்குருக்கள் முதலாவது எஸ்டேட் என்ற முதல் நிலையில் இருந்தன்ர்.இவர்கள் ஆடம்பர வாழ்வில் திளைத்தனர். சர்ச்சின் வருமானம் முழுவதும் ஆர்ச்பிஷப்களுக்கும், பிஷப்களுக்குமே சென்றது.இத்துடன் இவர்களின் அனைத்து சொத்துக்களுக்கும் லூயிமன்னன் வரிவிலக்கு அளித்திருந்தான்.ஒரு ஆர்ச்பிஷப்பின் வருமானம் மூன்று லட்சம் டாலர். இருநூறுபேர்கள் உண்ணும் உணவுக்கூடம்.நூற்றி எண்பது குதிரைகள் என தனிராஜியமே நடத்தினர்.

சர்ச்கள் தனியாக விவசாயிகளிடம் வரிவசூல் நடத்தினர், சுங்கச்சாவடிகள் அமைத்து வணிகர்களிடம் வரிவசூலித்த னர். தனி நீதிமன்றங்கள் தர்பார்கள் நடத்தினர் என்றால் மதத்தின் பங்கை  பொருளாதார சுரண்டலில் அறியமுடியும். இங்கிலாந்தில் மடாலயங்கள் ஒவ்வொரு பாதிரியாரின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக பிரிக்கப்பட்டிருந்தது.இது பேரிஷ்(யிசளை) என்று அழைக்கப்பட்டது. இற்றின்கீழ் நிலங்கள் இதர சொத்துக்களும் இருந்தன. இவைதவிர வேலைசெய்யும் இடம் (றடிசமாடிரளந) என்ற குழந்தைகளை யும் பெண்களையும் கசக்கிபிழியும் இடமும் இவர்களுக்கு கீழ் செயல்பட்டது.இந்த பேரிஷ் என்ற பகுதியில் கிடைக்கும் வருமானத்தை மூன்றில் ஒருபகுதி ஏழைமக்களுக்காக செலவு செய்யப்பட வேண்டும்  என்ற விதிமுறைகள்கூட அப்பட்டமாக மீறப்பட்டன

 நான்காவதாக, அறிவுஜீவிகள் மற்றும்  கலை இலக்கிய படைப்புகள் பங்கு இப்புத்தகத்தில் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. பிரெஞ்சு புரட்சியில் ரூசோ, மாண்டஸ்க்கியு, வால்டர், தீதரோ சிந்தனைகள் எடுத்தாளப்பட்டுள்ளன. வால்டர் மற்றும் தீதரோ இருவருக்ககுமான  வேறுபாடுகள் குறிப்பிட்டுள்ள முறைகள் அதாவது  சொல்லவந்த பொருளோடு இணைந்தே செல்வது முக்கியத்துவம் பெறுகிறது. வால்டேர் மதபீடங்களை கடுமையாக சாடினார். ஆனால் மதத்தின் இருத்தலை நியாயப்படுத்தினார்.தீதரோ மதபீடங்களையும், மதத்தையும் சாடியதுடன் பொருள்முதல்வாத சிந்தனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.எனவேதான் இவரின் கலைக்களஞ்சியத்தை மன்னன்  தீயிட்டுக் கொளுத்தினான். இந்த அளவிற்கு இல்லை என்றாலும் ரஷ்யப்புரட்சி புத்தகத்திலும் அறிவிஜீவிகளின் பங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. சாசனஇயக்கத்தில்  இவர்களின் பங்கை ஓரளவு குறிப்பிட்டிருந்தால் உதவியாக இருந்திருக்கும்.

  இம்மூன்று புத்தகங்களிலும் கையாளப்பட்ட விஷயங்கள் மாறுபட்டகாலம், இடம், வர்க்க நலன்கள் என்று இருந்தாலும், சாதாரண மற்றும் தீவிரவாசகர்களுக்கு ஏற்ற வகையில் விளக்கப்பட்டுள்ளது. அதேபோன்று நிலபிரபுத்துவத்தின் கொடுமைகள் மூன்றிலும் படம்பிடித்துகாட்டப் பட்டுள்ளது ரஷ்யப்புரட்சி புத்தகத்தில் மக்களை சுரண்டியதில் மதத்தின் பங்கு போதுமாக அளவு இடம்பெற வில்லை .கூடுத லாக ,வந்திருக்கலாம். நரோதினிய தோற்றச்சூழலை சரியாகவே சுட்டியிருக் கும் நிலையில் அதன் தாக்கம் ரஷ்யசமூகத்தில் ஏற்படுத்திய விளைவுகள் இன்னும் அழுத்தமாக இருந்திருக்க வேண்டும் என கருதுகிறேன்.
அயர்லாந்து-பாலஸ்தீனம்
பூர்வீகம்முதல்புத்தகம்எழுதப்படும்காலம்வரைமுக்கியநிகழ்வுகள்,பார்வைகள்,கருத்துக்கள் முன்வைக்கப்படுகிறது. அயர்லாந்து இங்கிலாந்தினால் ஆக்கிரமிக்கப்பட்டது. பாலஸ்தீனம் இங்கிலாந்தினால் ஏமாற்றப்பட்டது.

நான் உலகத்தால் ஏமாற்றப்பட்டு வருகிறேன்,
நான் கடவுளால் ஏமாற்றப்பட்டு வருகிறேன்,
நான் வரலாற்றால் ஏமாற்றப்பட்டு வருகிறேன்,
என்ற கவிதை பாலஸ்தீனம் பற்றி இன்றைய காட்சிகளுக்கும் சாட்சியாக விளங்குகின்றது. அயர்லாந்து என்ற நாட்டை இங்கிலாந்து தன்நாட்டுடன் இணைத்துக் கொண்டது.இன்றும் ஒருபகுதியை இணைத்தே வைத்துள்ளது. ஆனால் பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் என்ற புதிய நாட்டை  உருவாக்கியது. இவை எதிரும் புதிருமாக தோன்றலாம் ஏகாதிபத்தியத்தின் கொள்கை இதுதான். இயற்கையை, உழப்பை, ரத்தத்தை, சரீரத்தை சுரண்டுவது என தனது நலனுக்கு எது உகந்தோ அதுதான் சட்டம்.அதுதான் நீதி. அயர்லாந்து இங்கிலாந்தின் முதல் காலனி நாடு என்று எங்கல்ஸ் கூறினார்.இங்கிலாந்தின் நிரபிரபுத்துவம்அயர்லாந்தை பொருளாதார ரீதியாக சுரண்டியது. தொழில்வளர்ச்சிக்கும், முதலாளித்துவ மூலதன திரட்சிக்கும்  அது உதவியதால் முதலாளித்துவம் பயன்படுத்தியது. அயர்லாந்து பற்றி காரல்மார்க்ஸ், ஏங்கல்ஸ் ஆகிய இருவரின் கருத்துக்கள் மிகமுக்கியமானது ஆகும். எந்த ஒருநாட்டின் தொழிலாளி வர்க்கமும் தன் நாட்டின் ஆளும் வர்க்கம் பிற நாடுகளை அடிமைப்படுத்துவதற்கு ஆதரவளிக்க கூடாது என்று கூறினர். அயர்லாந்தை அடிமைப்படுத்துவதன் மூலமாக இங்கிலாந்தின் பிற்போக்காளர்கள்  பலமடைந்ததுடன் அதைப்பேணி காத்தும் வருகின்றனர்  என்று கூறினார். ஏங்கல்சின் மனைவி மேரிபர்ன்ஸ் அயர்லாந்துக் காரர்.இவர் இப்பிரச்சனையில் மிகுந்த ஆவர்வம் செலுத்தியதாலும்,இவர் இறந்த பிறகு ஏங்கல்ஸ் திருமணம் செய்துகொண்ட இவரது தங்கை லிஸ்ஸியும் இப்பிரச்சனையில் ஆர்வம் செலுத்தியதால்  ஏங்கல்ஸுக்கு இப்பிரச்சனையை புரிந்துகொள்வது எளிதாக  இருந்தது.

   ஜரிஷ் என்ற தேசிய இனத்தை அடிமையாக்கி சமூகஒடுக்கு முறைக்கு உள்ளாக்கியது இங்கிலாந்து. அதே நேரத்தில் உருவாகிவந்த அரபுதேசிய ஒற்றுமையை நசுக்கிடயூதஇனத்தை மூர்க்கத்தனமாக பயன்படுத்தியது. நாகரீகம் தெரியாத அயர்லாந்து மக்களுக்கு நாகரீகத்தை கற்றுத்தருகிறோம் என்று கூறினர்.இதையே இந்தியாவிற்கும் கூறியதை நாம் மறக்க முடியாது. இதையேதான் பாலஸ்தீனத் திற்கும் கூறினர்.ஏகாதிபத்திய சூறையாடலுக்கு அவர்கள் சூட்டிக்கொண்ட பெயர் நாகரீகம்.

     ஏகாதிபத்தியவாதிக  பிரித்தாளும் சூழ்ச்சியின் பிதாமகன்கள். பாலஸ்தீனத்தில்  யூதத்தையும் இஸ்லாத்தையும் மோதவிட்டனர். லெபனானில் கிறிஸ்த்துவத்தையும் இஸ்லாத்தையும், இந்தியாவில் இந்து முஸ்லீமையும் மோத விட்டனர். அயர்லாந்திலோ கிறிஸ்துவ மதப்பிரிவுகளி உள்ள கத்தோலிக்கர்களையும் பிராட்டஸ்டன்ட்களையும் மோத விட்டனர்.

  அயர்லாந்தில் பட்டினியாலும், படுகொலைகளாலும் இருபதுசதம் மக்களை வேட்டையாடினர் .பாலஸ்தீனத்திலோ முதல் பத்தாண்டுகளில் (1921-31)மட்டும் ஜம்பதாயிரம் மக்களை கூட்டம் கூட்டமாக கொன்று குவித்தனர். இன்றுவரை இது பலலட்சங்களை தாண்டி மக்கள் தொகை  சரிபாதியாக குறைந்து விட்டது.

    இந்த இருநாட்டின் விடுதலைப்போராட்டங்களும் பன்முகத்தன்மை கொணடதாக இருக்கிறது. இன்றுவரை இந்த போராட்டங்கள் உயிர்த்துடிப்போடும், உத்வேகம் குன்றாமலும் நடைபெற்று வருகின்றது.

      இந்த இருநாட்டின் விடுதலைப்போராட்டமும் நான்கு முக்கிய வடிவங்களில் நடைபெற்று வருகின்றது.வெகுமக்கள் பங்கேற்கும் இயக்கமாகவும், ஆயுதம் தாங்கிய எழுச்சியாகவும், உண்ணாவிரதம் இருந்து உயிர்நீக்கும் போராட்டமாகவும், சிலநேரங்களில் தனிநபர் பயங்கரவாத மாகவும் நடைபெற்று வருகின்றது.

   இப்போராட்டங்கள் பலநாடுகளின் விடுதலைப்போராட்டங்களுக்கு உந்துசக்தியாகவும் இருந்துள்ளது. தாகூர், பாரதியார், அரவிந்தகோஷ், சரோஜினிநாயுடு ஆகியோர் இப்போராட்டங் களை தங்களது கவிதைகளில் வடித்தனர். வியட்நாம் புரட்சித்தலைவர் ஹோ-சி-மின் அயர்லாந்து போராட்டத்தால் ஆகர்ஷ்சிக்கப்பட்டவர்களில் ஒருவர். காந்தி, நேரு இருவரும் பாலஸ்தீன மக்களின் போராட்டத்தை வலுவாக ஆதரித்தனர்.குறிப்பாக காந்தி அம்மக்களின் போராட்ட முறைகள் தனது கொள்கைக்கு மாறானதாக இருந்தாலும் அதை ஏன் ஆதரிக்கிறார்  என்ற விளக்கம் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது மிக முக்கயமான பகுதியாகும்.

      பாலஸ்தீன மக்களின் போராட்டத்தினூடே இந்திய அரசின் கொள்கையில் என்ன மாற்றம் நிகழ்ந்துள்ளது என்பதையும் அறியமுடிகிறது. 1947-ல் அமைக்கப்பபட்ட சிறப்புக்குழுவால் பாலஸ் தீனம் இருநாடுகளாக பிரிக்க வேண்டும் என்ற பரிந்துரையை இந்தியா கடுமையாக எதிர்த்தது. 1949-ல் இஸ்ரேல் நாடு ஐக்கிய நாடுகள் சபையில் இணைவதை இந்தியா கடுமையாக ஆட்சேபித்தது.

   ஏகாதிபத்தியம் தனது குணத்தை மாற்றிக்கொள்ளவில்லை. மேலும் கோரமுகம் எடுத்துள்ளது. இஸ்ரேல் இன்றும் மூர்க்கத்தனமாக தனது தாக்குதலை நடத்துகின்றது.இந்தியா இன்று போராடும் மக்களை கைவிட்டு இஸ்ரேல் நாட்ட் தனது அச்சு நாடாக்கி ஏகாதிபத்தியத்திடம் மண்டியிட்டுவிட்டது.

   ஆனால் பாலஸ்தீன மக்களோ குண்டுமழைகளுக்கும்.  வெடிச்சத்தங்களுக்கும் துப்பாக்கி ரவைகளுக்கும்நடுவிலிருந்தும், வீடுகளின் இடிபாடுகளுக்கு அடியிலிருந்தும் மீண்டும் மீண்டும் ஆவேசத்துடன் எழுந்து வருகின்றனர். அயர்லாந்து மக்கள் இங்கிலாந்து வசமுள்ள பகுதியை  விடுவிக்க போராடி வருகின்றனர்.

     இவை இரணடும் புத்தகம் அல்ல. நிகழ்காலத்தின் போராட்ட களம். இக்களத்தில்  இறங்க வேண்டும், சினமும், சீற்றமும்  கொள்ள வேண்டும். மாற்றத்திற்கான மார்க்கம் புரிபடும்.

உலகின் முதல் கம்யூனிஸ்ட் சதிவழக்கு
வழக்கு, சதிவழக்கு அதைத்தகர்த்தெரிவதற்கான ஆதாரங்கள், சாட்சிகள் என்ற நீதிமன்ற வளாகத்தை கடந்து சமூக அவலங்களையும் மோதல்களையும் இந்த சிறிய புத்தகம் விவாதிக்கின்றது. மார்க்சும் எங்கல்சும் நூலகங்களிலும், ஆய்வுக்கூடங்களில் இருந்துகொண்டு மட்டும் பணியாற்றவில் லை களத்தில் அமைப்புகளை உருவாக்கிசெயல்பட்டது. தொழிலாளர் இயக்கத்தை பகிரங்க இயக்கமாகவும், வெகுமக்கள் இயக்கமாகவும் மாற்றியது.கம்யூனிஸ்ட் லீக்கில் உருவான இடதுஅதிதீவிர போக்கை வெற்றிகொண்டது வழக்குகளை பிரச்சாரமேடையாக மாற்றியது, சதிவழக்குகளை அம்பலப்படுத்தியது என்ற ஐந்து தளத்தில் இப்புத்தகத்தை உள்வாங்கிக்கொள்ளலாம்.

  ஒன்று, காரல்ம்ர்க்சும், ஏங்கல்சும் பாரிசில் தங்கி அங்கு ஐர்மானியிலிருந்த வந்து சிதறுண்டுகிடந்த தொழிலாளர்களை திரட்டிட முயற்சிஎடுத்தனர். அப்போது நீதியாளர் கழகம் என்ற அமைப்பு இருவரையும் தங்களது அமைப்பில் இணைய அழைத்தது.இதை ஏற்ற அவர்கள் இரகசிய அமைப்பை பகிரங்க அமைப்பாக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் இணைந்து, அவ்வமைப்பை கம்யூனிஸ்ட் லீக் என்று பெயர் மாற்றி பகிரங்க அமைப்பாக்கினர். அதேநேரத்தில் ஐர்மனியில் வேட்டையாடப்பட்ட புரட்சிகர தொழிலாளர்கள் பாரிசிற்கு தப்பிவந்து வேலையின்றி நடைபாதை யிலும்,பூங்காக்களிலும்,தெருக்களிலும் முடங்கிக் கிடந்தனர். இவர்களை பாதுகாக்க மார்க்ஸும், எங்கல்சும் அகதிகள் குழு அமைத்து உதவிசெய்தனர்.

  இரண்டு, பாரிசின் பலபகுதிகளில் மட்டுமல்ல ஐரோப்பாவிலும்கூட தொழிலாளர் குழுக்கள் ரகசியமாக மட்டுமே செயல்படுவது, சதிவேலைகள் மட்டுமே செயல்தளமாக இருந்ததை மாற்றி பகிரங்கமாக திட்டத்தின் அடிப்டையில் செயல்படும் இயக்கங்களாக உருவாக வழிவகுத்தனர். மூன்று, கம்யூனிஸ்ட் லீக் பகிரங்கமாக செயல்பட்டபோதே அவ்வமைப்பில் உடனடியாக கம்யூனிச புரட்சி நடத்த வேண்டும் என்ற எதார்த்தத்திற்கு புறம்பான அதிதீவிர போக்கை களைஎடுத்து லீக்கை காப்பாற்றினர்.

     நான்காவதாக, கைதுகள் என்ற கட்டுரை எழுதியதற்காக மார்க்ஸ், எங்கல்ஸ், பதிப்பாசிரியர் கோர்ப் ஆகியோர்மீது தொடுக்கப்பட்ட வழக்கில் மார்க்ஸ் மூன்றுபேர்களுக்காகவும் வாதாடினார்.ஒவ்வொரு அதிகாரியும் தீங்கான நடவடிக்கை எடுப்பதை நீங்கள் அனுமதிக் கிறீர்கள்.அத்தீங்கை கண்டிப்ப வர்களை நீங்கள் தண்டிக்கிறீர்கள்.  தன் அண்டையிலுள்ள ஒடுக்கப்பட்டவர்களின் சார்பாக முன்வரவேண்டியது பத்திரிக்கை களின் கடமையாகும். ஜெர்மானியில் மார்ச் மாதம் நடைபெற்ற புரட்சி மேல்மட்ட சீர்திருத்தம் செய்துவிட்டு அடிமட்டத்தை அப்படியே வைத்துள்ளது……தற்போது பத்திரிக்கைகளின் முதல் கடமை நடப்பு அரசியல் அமைப்பின் அனைத்து அடித்தளங்களையும் தகர்த்தெரிய வேண்டும் என்பதாகும். என்று நீதிபதிகளுக்கு முன்னால் அக்கட்டுரையின் நியாயத்தையையும்  பத்திரிக்கையின் சமூக கடமைகளையும் எடுத்துரைத்தார். நீதிமன்றத்தில் கூடியிருந்த தொழிலாளர்கள் வாழ்த்துக்களிடையே விடுதலை செய்யப்பட்டனர்.

  மறுநாள் புரட்சிக்குத்தூண்டல் என்ற கட்டுரை எழுதியதற்காக மார்க்ஸ், ஷாப்பர், ஸ்னெய்டர் ஆகிய மூவர்மீதான வழக்கிலும் மார்க்ஸே வாதாடினார். புரட்சி என்பதை சட்டவடிவத்திற்குள் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற உங்கள் கருத்தை ஏற்கமுடியாது என்றதுடன் சமூகம் என்பது சட்டத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது என்ற தங்களின் கருத்தை நிராகரிக்க வேண்டியுள்ளது என்று நீதிபதிகளை பார்த்து மார்க்ஸ் கூறினார். அத்துடன் சட்டம் அது குறிப்பிட்டகாலத்தில் நிலவும் பொருள்உற்பத்தி முறையிலிருந்து தோன்றுகின்றது. ஆகவே புரட்சி என்பது பழைய சட்டமேல்கட்டுமானத்தை அழிக்கும் ஜீவாதார கடமையை கொண்டுள்ளது என்று வாதங்களை முன்வைத்தார்.மன்னன் எதிர்ப்புரட்சி செய்தால்  ஒருபுரட்சியின் மூலம் மக்கள் அதற்கு பதில்தரும் உரிமையை பெற்றுள்ளனர் என்றார். வழக்கிலிருந்து விடுதலைப்பெற்றனர். சட்டம் பற்றிய நீதிபதிகளின் கருத்துமுதல்வாத கருத்துக்களை  தகர்த்து பொருள்முதல்வாதக் கருத்துக்களை நிலைநாட்டினார். அன்று நீதிமன்றத்தை மார்க்ஸ் மிகப்பெரும பிரச்சார மேடையாக மாற்றினார். வரலாறு நெடுகிலும் கம்யூனிஸ்ட்டுகள் இந்தப்பாதையை பயன்படுத்தினர்.

  ஐந்தாவதாக, மார்க்ஸ், எங்கல்ஸ் மற்றும் பலர் விடுவிக்கப்பட்டாலும் அவர்களது பேச்சுக்களும், எழுத்துக்களும்  கம்யூனிஸ்ட் லீக்கின் பணிகளும் பிரெஷ்யாவில் புரட்சியை கொண்டு வந்துவிடும் என்று பிரெஷ்ய அரசு அஞ்சியது. எனவே லீக் உறுப்பினர்கள் பத்துபேர்கள் மீது புரட்சிநடத்தமுயற்சித்ததாக சதிவழக்கை புனைந்து கைதுசெய்தது. மார்க்ஸ், எங்கல்ஸ்  இருவரையும் இவ்வழக்கில் இணைக்க முயற்சி செய்தது. இவர்கள் இருவரும் லண்டனிலிருந்துகொண்டு பிரெஷ்யாவின் கோலோனில் நடைபெற்ற சதிவழக்கை முறியடிக்க பணியாற்றினர்.

  இந்த வழக்கிற்கு தேவையான ஆதாரங்களை திரட்டி அவற்றை பலநகல்கள் (பலபேர்களை வைத்து எழுதவேண்டிய பணி) எடுத்து ரகசியமாக கோலோன் நகருக்கு அனுப்பிவைக்க வேணடிய பெரும்பணியை செய்தார். இதற்காக தனது வீட்டையே அலுவலமாக் கினார்.

  இந்த சதிவழக்கை பயன்படுத்தி டைம்ஸ் பத்திரிக்கை உட்பட பிரபலமான பத்திரிக்கைகள் கம்யூனிஸ்டுகள் மீது அவதூறுகளை அள்ளி வீசியது.கொளுத்துப்போன பிச்சைக்காரர்கள் கூட்டம் சதிகாரர்கள், கொள்ளைக்காரர்கள் என்று எழுதியது.இந்த பிரச்சாரத்தை முறியடிக்கும் வேலையையும்  மார்க்ஸ்,எங்கல்ஸ் இருவரும் செய்தனர்.

  பிரதானமாக மார்க்ஸ் தனது குடும்ப வருமானத்திற்காக எழதவேண்டிவைகளை நிறுத்திவிட்டு வழக்கிற்கான பணியில் இறங்கினார். கடந்த பலவாரங்களாக குடும்பத்தின் சாப்பாட்டிற்காக பாடுபடவேண்டியதற்கு பதிலாக அரசாங்கத்தின் நடவடிக்கையிலிருந்து கட்சியை பாதுகாக்கவேண்டிய வேலையை செய்ய வேண்டி இருந்தது என்று தனது நணபருக்கு எழுதினார். இதனால் குடும்பம் வறுமைக்கு ஆட்பட்டது. செருப்பில்லாததாலும், மேலேஉடுத்திக் கொள்ள உடை இல்லாததாலும வெளியேபோகமுடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறேன் என்று தனது நண்பனுக்கு எதினார். வழக்கு நடைபெற்றபோது அவரது கால்சட்டையும், காலணியும், கோட்டும் அடகு கடைக்கு சென்றிருந்தது.வெள்ளைத்தாள் வாங்குவதற்கே நிதிபற்றாக் குறையாக இருந்தது.

மார்க்ஸ் மற்றும் அவர் குடும்பத்தின் வறுமைக்கிடையிலான உழைப்பாலும், அவர்களின் வழிவந்தவர்கள் தியாகத்திலும், அவர்கள் சிந்திய உதிரத்திலும், இழந்த வாழ்க்கையின் மேலேதான் நமது உரிமைகளும், சலுகைகளும் கிடைக்கப்பெற்றுள்ளது என்ற உணர்வு புத்தகத்தை படிக்கும்போது ஏற்படுகிறது.  மேற்கண்ட ஆறு புத்தகங்களும் உலகின் முக்கிய வரலாற்று நிகழ்வுகளை நம்கண்முன் நிறுத்துகின்றது, சுமார் முன்னூறு ஆண்டு வரலாற்றின் ஆணிவேரை நோக்கி நம்மை அழைத்துச்செல்கின்றது. மாவோ சொன்னாரே உலகவரலாற்றை உருவாக்கும் உந்துசக்தி மக்கள்தான். மக்கள் மட்டுமேதான் என்றாரே அந்தவார்த்தைகளை இப்புத்தகத்தை படிப்பதன் மூலம் உணரமுடியும்.எனவே வரலாற்றின் வேர்பிடித்து வருங்காலத்தை செப்பனிடுவோம் வரலாற்றிணை புரிந்துகொள்வது சிக்கலான பணி என்றாலும் கடந்தகாலத்தை கொண்டு தற்கால சமுதாயத்தின் நிலையை மாற்றும் எண்ணமுடையோர் அப்பணியை முக்கியமானதாகக் கருதிச் செய்யவேண்டியுள்ளது.