ஸ்ரீதர்பாரதியின் கவிதைகள்

ஸ்ரீதர்பாரதியின் கவிதைகள்




சன்மானம்
**************
தவில்காரனின் நடைக்கும்
நாயனக்காரனின் ஏற்ற இறக்கத்திற்கும் ஏற்றபடி

பபூனை சோடியிட்டு
குலுங்கி ஆடுகிறாள்
குஜிலியம்பாறை ஆட்டக்காரி

செத்துப்போன சிலுக்குவார்பட்டி மைனர் மாத்திரம்
இந்நேரம் இருந்திருந்தால்
அள்ளி அணைத்து
குத்தியிருப்பார்
ஐநூத்தி ஒன்னு.

அரட்டல்
***********
சென்ற வருடம்
நாண்டுகொண்ட சின்னம்மா

வயதுக்கு வந்த தன் மகளை
அன்றாடம் அரட்டுவதாக
என்னிடம் குமைகிறாள்
அத்தை

அப்புராணி சின்னம்மா
அப்படி அரட்டுவதாயிருந்தால

கூத்தியாள்பேச்சைக்கேட்டு
கொடுமைப்படுத்திய
குடிகார சித்தப்பனை அல்லவா
அரட்டியிருக்கவேண்டும்?

நிழல்
********
வெயிலில் காய்கிறார்
வீரனார்

வீச்சரிவாள் மீது கவிகிறது
வேம்பின் நிழல்

தேஜஸ்
*********
பௌர்ணமி இரவில்
மினுங்கும் அரசிலைகளுக்கு

புத்தனின் தேஜஸ்

கிளை
********
பழங் கட்டிடத்தில் வேர் பிடித்து நிற்கும்
மரமொன்றின் சிறு கிளைக்கு

பறவையொன்றின்
பாதத்தோற்றம்

– ஸ்ரீதர்பாரதி