“இஸ்லாம்” புரிதலும் – அணுகுதலும் | செ.கா
இஸ்லாம் நேற்று இன்று நாளை
டி. ஞானையா
பாரதி புத்தகாலயம்
விலை: ரூ. 50
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
“ஒரு மதத்தைப் புரிந்து கொள்ள அது தோன்றிய காலம், சூழல், பொருளாதார, அரசியல் பின்னணி, கலாச்சாரம், ஆதிக்க சக்தி ஆகியவற்றைப் புரிந்து கொள்வது அவசியம். அது உலகின் எந்த மதமாயினும் சரி. இஸ்லாமையும் நாம் அப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும்.
பிற மதங்களைப் போல், இஸ்லாம் என்பது எந்த ஒரு தனி நபரையோ, நாட்டையோ, இனத்தையோ குறிப்பதல்ல. அது எந்த மனிதனையும் கடவுளாக்கவில்லை. இஸ்லாம் என்ற அரபுச் சொல்லுக்கு அடிபணிதல், சரணடைதல், சமாதானம் என்று பொருள். பெயர், உருவம், நிறம், வடிவமற்ற பிரபஞ்ச சக்தியே அல்லாஹ் என்று புதுமையான வழிகாட்டல் தருகிறது இஸ்லாம்.
வணிகத் தொழில் நகரத்தில் பிறந்தவர் முகமது நபி. அன்று அங்கு பல்வேறு பழங்குடி இனக்குழுக்களிடையே நிலவிய ஸ்திரமற்ற தன்மையும், தனி உடமையின் விளைவால் பெருகிப் போன செல்வந்தர்களால் ஏற்பட்ட சுரண்டல்களால் உழைப்புக் கூலிகள், ஏழைகள் எனும் பிளவிற்கு வழி வகுத்தன. அடித்தட்டு மக்களின் வாழ்வு காக்க ” ஹில்ப் ஃபுதூல்” எனும் போராட்டக் குழு உருவானது. இதில் இளைஞரான முகமது உறுப்பினரானார்.
நிலபிரபுத்துவம் இல்லாத தெற்கு அரேபியாவினர், எல்லா வகையிலும் நீடித்த வளர்ச்சியை அடைந்திருந்தனர். ஆனால் தாம் வாழ்ந்த வட பகுதி அரேபியாவோ, நிலபிரபுத்துவ மன்னராட்சியின் கீழ் கடுமையான பின்னடைவில் இருப்பதை நபிகள் உணர்ந்தார். இதனை சீர் செய்ய , மீட்டுருவாக்கம் செய்ய, ஒழுங்கும் கட்டுப்பாடும், சட்டமும் ராணுவமும், அதிகார மையமும் கொண்ட அரசின் தேவை பெரிதும் இருந்தது.
எல்லா விவசாய சமூகங்களைப் போலவே, மெக்காவிலும் மழைக்கான வருணபகவான் கோவில்கள் இருந்தன. மெக்காவின் க’அபாவில் மட்டும் 360 கடவுள் விக்ரகங்களும், கோவில்களும் இருந்தன.
மெக்காவில் நிலவிய ஏற்றத்தாழ்வு, வறுமை, ஒழுக்கமின்மை, ஆன்மிகச் சிதைவு, பல தெய்வ வழிபாடு எனச் சீர்கெட்டிருந்த நிலையில் இவற்றை மாற்றும் தேவை முற்றிக் கொண்டிருந்தது. முகமது நபி ” ஹீரா” என்ற குகையில் பல ஆண்டுகள் தவமிருந்தார். க அபாவின் நிர்வாகப் பொறுப்பாளராக நபிகளின் முப்பாட்டனார் இருந்தார் என்பதால் அவர் பெரிதும் மதிக்கப்பட்டார். முகமது நபி தொழில் நிமித்தம் காரணமாக பல நாடுகளுக்கும் சென்று அனுபவம் பெற்றவர்.
ஜூடாயிசம், ஜொராஷ்ட்ரியம், கிறிஸ்துவம் என அப்போது பெரிதும் பரவியிருந்த தத்துவங்களை முகமது நபி ஆழமாக அறிந்திருந்தார். அரேபிய மண்ணில் தோன்றிய மதங்கள் யாவும் அம்மக்களின் வாழ்வை சரியாக நெறிப்படுத்தவில்லை என்றுணர்ந்த அவர், அவற்றிற்கு மாற்று வழி காணவே அவர் தவமிருந்தார். அவர்களை ஒழுக்கப்படுத்தும் கண்டிப்பான மதம் தேவை என்றும் உணர்ந்தார்.
நபிகளின் உறக்கத்தைக் கலைத்து, ஜிப்ரில் தோன்றி, வாசிக்கத் தெரியாத நபிகளை இறைநெறியை வாசிக்கச் செய்தார். ஜிப்ரில் வழிகாட்டுதலில் உலகுக்கு சமாதானம்; மானுடத்துள் சகோதரத்துவம் இவற்றை உருவாக்கும் மதமாக இஸ்லாம் உருவானது.
நபிகள் பல பெண்களை மணந்து கொண்டார். தனது மதத்தைப் பரப்பக் கடுமையான போர்களை மேற்கொண்டார் எனும் இரண்டு குற்றச்சாட்டுகளைப் பொதுவாக இஸ்லாமின் எதிரிகள் முன் வைப்பதுண்டு. சரி, தவறு என்பதை அதன் காலம், சூழல் எதிரிகள், தேவை முதலியவற்றை வைத்தே எதையும் அளவிடவும் மதிப்பிடவும் வேண்டியுள்ளது.
முகமது நபி தனது முதல் மனைவியான தம்மை விட 15 வயது முதியவரான கதீஜாவை திருமணம் செய்து கொண்டார். கணவரை இழந்திருந்த கதீஜாவின் விருப்பத்தின் பேரிலே, தமக்கும் தம்முடைய தொழில் பாதுகாப்புக்கும் உகந்தவரெனக் கருதியே இம்முடிவை அவர் எடுத்தார். கதீஜாவின் மறைவிற்குப் பிறகே 9 விதவைகளை உள்ளடக்கிய 16 பெண்களை, பல்வேறு காரணங்களுக்காகத் திருமணம் செய்து கொண்டார்.
நிற்க !
நமது நாட்டிலும் அண்மைக் காலம் வரை பல தாரத் திருமணங்கள், ஆணுக்கு மட்டுமே அனுமதி அளிக்கும் அநீதி இருந்தது என்பதை மறந்துவிடக் கூடாது. பலதாரத் திருமணம், குழந்தை மணம் , சதி போன்ற பெண்களுக்கு எதிரான அனைத்து அநீதிகளும் மத அங்கீகாரத்துடன் நடந்து வந்தது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. ஆயிரக்கணக்கான பெண்களை மணம் புரிந்து பெண்களை போகப் பொருளாக மட்டுமே நடத்திய இதிகாச நாயகர்களுக்கு, பாடம் சொல்வது போல் ஏக பத்தினி விரதனாக ராமன் ஒருவன் மட்டுமே கொண்டாடப்படுகிறான் என்பதை மறந்துவிடக்கூடாது. இருதாரத் தடைச் சட்டம் என்பதே இந்தியாவில் 1956ல் தான் கொண்டு வரப்பட்டது.
ஆனால் நபிகளின் திருமணங்கள் இதிலிருந்து வேறுபட்டவை. ஆதரவற்ற, விதவைப் பெண்களுக்கு வாழ்வளிக்கவும், அரசு, அரசியல் காரணமான அரசியல் முடிவு அல்லது அரசியல் யுக்தியாகத்தான் இருந்தன. நபிகள் ஸஃபியா, ரைஹானா என்ற யூதப் பெண்களைப் பகை இனத்துடன் உறவு வளர்ப்பதற்காக மணந்து கொண்டார். கிறிஸ்துவர்களுடனான நட்புக்காக “மரியம்” என்ற கிறிஸ்துவ அடிமைப் பெண்ணை மணந்து கொண்டார். ஒன்பது விதவைகளை, அவர்களின் குழந்தைகளுடன் ஏற்றுக் கொண்டது, ஒரு சிறந்த மனிதாபிமான முன்மாதிரி.
மேலும் இஸ்லாம், மனித இயல்புக்கு மாற்றாக, துறவையோ, பிரம்மச்சரியத்தையோ, கன்னியாஸ்திரிகளையோ, சன்னியாசத்தையோ முன்னிலைப்படுத்திய மதமல்ல.
தர்ம யுத்தத்தை எல்லா மதங்களும் நடத்திக் கொண்டிருக்கும் சூழலில், நபிகளின் போர் முறையை நாம் “அமைதியை ஏற்படுத்தி, சமாதானத்தை நிறுவுவதற்கான யுக்தியாக” எடுத்துக் கொள்ள வேண்டும்.
கட்டுப்பாடற்ற வன்முறையும், கொள்ளையுமே வாழ்வு நெறியாகா அமைந்துவிட்ட பாலைவன சமூகத்தில், வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்கான வன்முறை என்றும், ஓயாத போர்களை நிறுத்துவதற்கான போர் என்றும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இஸ்லாம் மட்டும்தான் வன்முறையை மேற்கொள்கிறது என்கிற கருத்து, பலம் வாய்ந்த, உலகு தழுவிய முதலாளித்துவ ஊடகங்களால் இன்று பரப்பப்பட்டு வருகின்றன. WMD என்ற முத்திரையின் பேரில் எண்ணெய் வயல்களில் இன்று இரத்தம் பீறிட்டுப் பாய்கின்றன. ஆயுத விற்பனைக்காக புதிய புதிய பகைகள் விற்பனைக்கு வருகின்றன.
இலங்கையில் பௌத்த வன்முறையாளர் இல்லை. குஜராத்தில் இந்துத் தீவிரவாதி இல்லை. பாலஸ்தீனத்தில் யூத வன்முறை வெறியர்கள் இல்லை. ஈராக்கில் கிறிஸ்துவ வன்முறையாளர் இல்லை. மாறாக, வன்முறை சார்ந்த அனைத்து அடைமொழிகளும் இஸ்லாமியர்க்கே அர்ப்பணிக்கப்பட்டு வருகிறது.
தங்களது வளமான எண்ணெய் வளத்திற்கு அவர்கள் தரும் விலை இதுவோ ?
இஸ்லாம் என்றதும் உடன் நினைவுக்கு வருவது சிலுவைப் போர். கிறிஸ்துவ பயங்கரவாதமும், இஸ்லாமிய பயங்கரவாதமும் துவங்கிய புள்ளி இது. சிலுவைப் போர் 1095 முதல் 1249 வரை 154 ஆண்டுகள் நீடித்தது. புஷ் துவங்கி வைத்தது ஐந்தாம் சிலுவைப்போர். வணிக மையமான வெனிஸ், ஜினோவாவை ஐரோப்பியர் கைப்பற்றும் பொருளாதார அரசியல் லாபம் மதத்தால் வலிமை பெற்றது. பாலஸ்தீனத்தையும், ஜெருசலேமையும் கைப்பற்றிய கிறிஸ்துவர்கள் முஸ்லீம்களை வெட்டிக் குவித்தனர். புனித ஜெருசலம் ரத்தத்தால் குளிப்பாட்டப்பட்டது. இங்கிலாந்து மன்னன் ரிச்சர்ட்டின் கால கட்டத்தில்தான் குழந்தைப் போராளியை உருவாக்கும் கொடிய போர்வெறி சிலுவைப் போரில் துவங்கப்பட்டது.
பக்தி மிக்க ஐரோப்பியக் கிறிஸ்துவர்கள் இக்குழந்தைகளைப் பிடித்து அடிமைகளாக விற்றுக் காசு சேர்த்தனர். 1249 ல் பிரான்சின் ஒன்பதாம் லூயி முஸ்லீம்களால் கைது செய்யப்பட்ட உடன் நான்காம் சிலுவைப் போர் முடிவிற்கு வந்தது. அதன் பிறகு 1918 வரை 669 வருடங்கள் ஜெருசலமும், பாலஸ்தீனமும் முஸ்லீம்கள் வசமே இருந்தது. முதல் உலகப் போரில் துருக்கி தோற்கடிக்கப்பட்டு பிரிட்டன் வசமானதும் இன்றும் பெரும் உலகத் தலைவலியாக உள்ள இஸ்ரேல் – பாலஸ்தீனப் பிரச்சனை துவங்கியது. 1948, இரண்டாம் உலகப் போருக்குப் பின் பாலஸ்தீனத்தின் 78% நிலப்பரப்பை அபகரித்து யூதர்களின் இஸ்ரேல் நாட்டை அரபு மண்ணில் உருவாக்கினர். 1918ல் இன்றைய இஸ்ரேல் நிலப்பரப்பில் இஸ்லாமியர் 55% . ஆனால் இப்பொழுது 14.6%. அதே ஆண்டில் யூதர்கள் வெறும் 50 ஆயிரம். ஆனால் இன்று 63 லட்சம் பேர். ஆனால் ஊடகங்கள் இஸ்ரேலிய பயங்கரவாதம் எனக் குறிப்பிடுவதில்லை. ஹமாஸ் மட்டுமே பயங்கரவாத அமைப்பாக சித்தரிக்கப்படுகின்றன.
இந்தியாவில் இஸ்லாம் கி.பி.712ல் துவங்குகிறது. முகமதி நபிகள் மறைந்து 80 ஆண்டுகளுக்குப் பின் அவரது மருமகன் முகமது பின் காசிம் சிந்துவைக் கைப்பற்றியதில் இருந்து துவங்குகிறது. கி.பி.1002 – கி.பி.1026 வரை கஜினி முகமது 17 முறை இந்தியாவைத் தாக்கிப் பல கோயில்களைக் கொள்ளையடித்த பொழுது கோயிலின் செல்வங்களைக் காட்டிக் கொடுத்தவர்கள் பிராமணப் பூசாரிகள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
மங்கோலியத் தலைவன் செங்கிஸ்கான் வழியினரான முகலாயர்களின் ஆட்சி பாபர் காலத்தில் கி.பி.1526ல் துவங்குகிறது. கி.பி.1528ல் பாபர் அயோத்தி வந்ததன் நினைவாக மிர்பாக்கி என்ற அதிகாரி ஒரு மசூதியைக் கட்டினார். ஆனால் இந்திய பிற்போக்கு வலதுசாரிகள் 1942 டிசம்பர் 21 அன்று, ராமர் கோவிலை இடித்துவிட்டுதான் இந்த மசூதி கட்டப்பட்டது என்று கூறி பட்ட உடைத்து ராமர், சீதை சிலைகளை உள்ளே வைத்தனர். நேரு, ராஜாஜி, வல்லபாய் படேல் ஆகியோர் இதைக் கடுமையாக கண்டித்தனர்.
1528ல் ராமர் கோவில் இடிக்கப்பட்டதற்கான இஸ்லாமிய, பிராமண, பிரிட்டிஷ் ஆதாரம் எதுவுமில்லை. இதே காலத்தில் வாழ்ந்த துளசிதாசர் (ராமசரிதா மானஸ் நூல்ஆசிரியர்) துக்காராம், கபீர், ராமானந்தர், மீராபாய், சைதன்யா போன்ற எவரும் ராமர் கோவில் இடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கவும் இல்லை. பின் வந்த இந்து மகான்களான தயானந்தர், ராஜாராம் மோகன்ராய், ராமகிருஷ்ணர், விவேகானந்தர், தேபேந்திரநாத் தாகூர் போன்ற எவரும் இதுபற்றிக் குறிப்பிடவில்லை.
அதே காலத்தில் அயோத்தியில் நிலவிய தொற்றுநோய், வறுமை மற்றும் கீழ்சாதிக்காரர்களை பிராமணர்கள் இழிவு படுத்திய நிகழ்வு உள்ளிட்ட நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டு இருக்கும்பொழுது, ராமர் கோவில் இடிப்பு மட்டும் எப்படி இடம்பெறாமல் போயிருக்க முடியும் ?
ஆனால் பாபரோ தமது உயிலில், கி.பி. 1530ல் “பெரும்பான்மையான இந்து மதத்தை மதிக்கவும், பசு வதையைத் தவிர்க்கவும், வாளால் அன்றி அன்பால் ஆளவும்” எழுதியுள்ளார்.
50 ஆண்டுகள் நல்லிணக்க ஆட்சி செய்த அக்பரை “இந்திய தேசியத்தின் தந்தை” என்று புகழ்கிறார் நேரு. இந்துக்கள் மீதான ஜிஸியா வரியை நீக்கி, ராஜபுத்திரப் பெண்ணை மணந்து சர்வ சமய ஒற்றுமைக்கான உரையாடலை நிகழ்த்தியவர். இந்து, இஸ்லாம், கிறிஸ்துவர் ஏற்கும் “தீன் இலாஹி” என்ற புதிய மதக் கோட்பாட்டை உருவாக்கினார். அக்பரின் நிதி அமைச்சர் தோடர்மால் அக்பரின் சார்பாக வாரணாசியில் அனுமார் கோவில் கட்ட இடம் வழங்கினார். அது துளசி அனுமார் மந்திர் என்று இன்றும் அழைக்கப்படுகிறது. ஔரங்கசீப்பின் மீது மதவெறியர் என்கிற முத்திரை குத்தப்பட்டிருந்தாலும், தமக்கு இந்து மதம், மொழி, பண்பாடு பற்றி கற்பிக்காத தனது ஆசிரியர் பயனற்ற அரபுமொழியைக் கற்பித்தது குறித்து அவர் எழுதிய கண்டனக்கடிதம் அவர் பற்றிய மாற்று வடிவத்தை உருவாக்குவன.
முகலாயர்களின் பிரதிநிதிகள் தென்னகத்திற்கு வந்து சில பகுதிகளைப் பிடித்தார்களே தவிர, முகலாயர்களின் நேரடி ஆட்சியின் கீழ் தென்னிந்தியா வரவில்லை. ஹைதர் அலியும், அவரது மகன் திப்புவும் பிரிட்டிஷாருக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தனர் என்பது வரலாறு. திப்பு இந்து – முஸ்லீம் ஒற்றுமையின் சின்னமாக விளங்கினான். திப்புவின் அவையில் பூர்ணய்யா, அப்பாஜிராவ், சாம அய்யங்கார், கிருஷ்ணராவ் எனப் பல இந்துக்கள் பதவி வகித்தனர். பிரிட்டிஷாருக்கு எதிராக முதல் ஒருங்கிணைந்த விடுதலைப் போரைத் துவக்கிய பெருமை திப்புவையே சாரும். அதுபோல உலக வரலாற்றில் போர்க்களத்தில் போரிட்டு வீரமரணமெய்திய ஒரே மாமன்னன் என்ற புகழும் இவருக்கே உரியது.
ஆட்சி, அதிகாரம், வாள், வன்முறை மூலம்தான் இஸ்லாம் பரப்பப்பட்டது என்ற கூற்று தமிழகத்திற்கும், கேரளத்திற்கும் பொருந்துவதாக இல்லை. தமிழகமும், கேரளமும் ஆட்சி வழியிலன்றி வணிக ரீதியில் இஸ்லாம் தோன்றும் முன்னரே அரபு நாடுகளுடன் உறவு கொண்டிருந்தன. யவனர்கள் எனும் ரோமானியர்களுடன் வணிகத் தொடர்பு, கலாச்சாரப் பரிமாற்றம் பற்றி சங்கப் பாடல்கள் கூறுகின்றன. முகமது நபிகளின் சமகாலத்தில் (கி.பி.630) மதுரை கோரிப்பாளையத்தில் கூன் பாண்டியனிடம் இஸ்லாமியர்கள் நிலம் வாங்கிய ஆவணமும் உண்டு.
ஒடுக்கப்பட்ட சமணர், பௌத்தர், கள்ளர், நாடார், தலித்துகள் சமத்துவம் வழங்கிய இஸ்லாமுக்கு விருப்பமுடன் மதம் மாறினர். தமிழக, கேரள முஸ்லீம்கள் வட இந்திய முஸ்லீம்களைப் போல் அல்லாமல், தமிழ், மலையாளம் மட்டுமே பயன்படுத்துபவர்களாக உள்ளனர். “இஸ்லாம் எங்கள் வழி, இன்பத் தமிழ் எங்கள் மொழி” என்று முதன் முதலாகத் தமிழுக்கு நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தவர் காயிதே மில்லத் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.
அதுபோல , தமிழ் இலக்கியத்திற்கு இஸ்லாமியரின் பங்களிப்பு மகத்தானது. “சீறாப்புராணம், முகைதீன் புராணம், நாயகர் புராணம்” போன்ற பெரும் இலக்கியப் படைப்புகளும், சீதக்காதி போன்ற புரவலர்களும், உமறுப்புலவர், குணங்குடி மஸ்தான், சவ்வாதுப் புலவர், செய்க் அப்துல் காதர் நயினார் லப்பை போன்ற படைப்பாளர்களும் தமிழை வளப்படுத்தியுள்ளனர்.
மதமாற்றத்தை ஏற்றுக் கொண்ட மதங்கள் இஸ்லாமும், கிறித்துவமும். ஆனால் இந்து மதமோ அவற்றின் உட்பிரிவான சாதி அமைப்போ இவ்வகை மாற்றத்தை ஏற்றுக்கொள்வதில்லை. ஜுடாயிசத்திலும் யூதர்களைத் தவிர வேறு யாரும் சேர முடியாது.
இந்து மதத்தின் தீண்டாமையும், பௌத்த சமண மதத்தாரைக் கழுவிலேற்றிய கொடுமையும், சார்வாகர் என்ற நாத்திகத் தத்துவத்தினரைத் தீயிலிட்டுக் கொன்ற வன்முறையும் மறந்து இஸ்லாம் மட்டும் வன்முறை சார்ந்த மதமாக, இந்துக்களுக்கு எதிரான மதமாக சித்தரிக்கப்படுவது ஏன் ? பரசுரபாகு எனும் மராட்டிய மன்னன் சிருங்கேரி மடத்தைக் கொள்ளையிட்டபொழுது, சங்கராச்சாரியாரைக் காப்பாற்றியது திப்பு சுல்தான்தான். மன்னர்கள் என்றாலே கொள்ளையர்கள்தான் என்பதற்கு மதம் ஒரு பொருட்டல்ல.
மதம் ஒரு நாட்டை உருவாக்க முடியாது என்பதற்கு வங்க தேசப் பிரிவினை நல்ல உதாரணம். ஒன்றுபட்ட இந்தியக் கூட்டாட்சியின் 150 கோடி மக்களில் 50 கோடிப் பேர் முஸ்லிம்களாக இருந்திருப்பர். மூன்றில் ஒரு வாக்காளர் முஸ்லிம். இவர்களை ஒதுக்கிவிட்டு ஜனநாயகம் நிற்காது. எனவே இவர்களுக்கு எதிரான வன்முறைகளும் சாத்தியமில்லை. ஆனால் கிழக்கு, மேற்கு பாகிஸ்தான் பிரிவினைகள் இந்திய முஸ்லீம்கள் மீதான ஒடுக்குதலுக்கு வழிவகுத்துவிட்டன. கேரளா, மேற்கு வங்கத்தில் முஸ்லீம்கள் 25%. குஜராத்தில் 9%. குஜராத் போன்ற கலவரங்கள் கேரளாவில் நடப்பதில்லை. பாகிஸ்தானால் இந்திய முஸ்லீமகளுக்கு எவ்விதப் பாதுகாப்புமில்லை. பாகிஸ்தானில் 15 கோடி முஸ்லீம்கள், இந்தியாவில் 17 கோடி முஸ்லீம்கள். சிதறிக் கிடக்கும் இவர்கள் முற்றுகையிடப்பட்டவர்களாகவே வாழ்கிறார்கள். இந்து அடிப்படைவாதம் வளரவே பாகிஸ்தான் அடித்தளமிட்டது. மதச்சார்பின்மை அரசியல் மேலும் பலவீனப்பட்டுவிட்டது. அசாம், காஷ்மீர் உட்பட தேசிய இனங்களின் பிரச்சனைக்குத் தீர்வு காண நாம் அவர்கள் நிலையிலிருந்து சிந்திப்பதும் அணுகுவதும் பிரச்சனைகள் தீவிரமடையாமல் தீர்வு காண இன்றும் உதவக்கூடும்.
“தாயே உன்னை வணங்குகிறேன்” எனும் வந்தே மாதரப் பாடலைப் பாடுவதற்குத் தயக்கம் ஏன் ? எனும் கேள்வி நியாயமானதே. ஆனால் யார் அந்தத் தாய் ? அது எப்போது எதற்காகப் பாடப்பட்டது. அதன் முதலிரண்டு அடிகள் மட்டும் அங்கீகரிக்கப்பட்டது ஏன் ? அந்தத் தாய் இந்துக்களின் காளிதான். பக்கிம் சந்தர் சட்டர்ஜி என்ற சனாதன வங்க பிராமணர் 1875ல் எழுதிய “ஆனந்த மடம்” நாவலில் அதன் கதாநாயகன் சத்தியானந்த் என்ற பிராமணன் முஸ்லிம்களை வெட்டிக் கொல்ல அழைக்கும் பாடல் இது. பிரிட்டிஷ் அரசு கூட இந்து மத ரீதியிலான தேசபக்தி நாவல் என அங்கீகாரம் தந்தது. வந்தே மாதரம் பாடல் தேசபக்திப் பாடல் அல்ல. இந்து மத வெறியூட்டும் பாடல். முஸ்லிம் எதிர்ப்புப் பாடல். மத வெறியற்ற, மத நல்லிணக்கம் வேண்டும், சமாதான சகவாழ்வு விரும்பும் எவரும் இப்பாடலைப் பாட முன்வர மாட்டார்கள்.
பாலைவனப் பகுதியில் சிறு சிறு குழுக்களாகச் சிதறி, பல பல உருவங்களை வழிபட்டு, கொள்ளையே தொழிலாக வாழ்ந்த மக்களை நாகரிகப்படுத்தி ஒழுங்குபடுத்த உருவான மதம் இஸ்லாம். இன்று உலகம் முழுதும் பரவி 55 நாடுகளில் அரசாண்டு கொண்டு, விஞ்ஞானம் முன்னேறிய நாடுகளில் பரவி சிறந்த அறிவியல் விஞ்ஞானிகளை உலகுக்குத் தந்து கொண்டுள்ள மதம். மாறுபட்ட சூழலுக்கு ஏற்ப மாற்றங்களை அனுமதிக்காது என்பது மதத்தை பிற்போக்கு சக்திகளின் பிடியில் தள்ளிவிடும்.
நபிகளின் மறைவுக்குப் பின் 5,96,000 ஹதீக்கள் (குரானில் இல்லாத நபிகளின் போதனைகள்) போலியானவை என்று கூறி 7257 மட்டும் ஏற்றுக் கொண்டார் அல்புகாரி (826-888). ஹதீத்களைக் காட்டி சட்டம் உருவாக்குவதை உலமாக்களே எதிர்த்தனர்.
இஸ்லாமிய எழுத்தாளரான ஏ.ஜி.நூரானி் , “இன்று முஸ்லிம்கள் குரானுக்கு மாறுபட்டு மோதாதிருத்தல், குரானில் சொல்லப்படாதது இஸ்லாமிய அரசு என்பதை உணர்தல், குரானில் சொல்லப்படாத ஜிகாத் என்பதை வக்கிரமாகத் திரித்துப் பயன்படுத்துதல் இவற்றைக் கைவிட்டுவிட்டு இஸ்லாமை நவீனமயப்படுத்துவது அவசியம்” என்பதை வலியுறுத்துகிறார். “இஸ்லாமிய அரசு என்பது அரசியல் குறிக்கோள். நாடு பிடிக்கவும், மக்களைச் சுரண்டவும், தமது ஆடம்பர உல்லாச வாழ்வுக்காகவும் கலிபாக்கள் துவங்கியதே” என்கிறார் ஆய்வாளர் வில்பரட் மேட்லாங்.
ஆட்சியாளர்களாக இருந்த பென்பெல்லா, நாசர், மொசாத், நஜிபுல்லா, சுகர்னோ, ஹபிப், முஸ்தபா கமால் பாட்சா போன்றோர் இஸ்லாமியப் புரிதலை மாற்றி, பல புதிய சட்டங்களைக் கொண்டு வந்து, அவை குரானுக்கு முரண்பட்டதல்ல என்று உணர்த்தி மக்கள் ஆதரவு பெற்றனர். பலதார மணத்தடை, பெண்ணுக்கு ஆணுக்கு விவாகரத்து உரிமை, விவாகரத்து உரிமை கட்டுப்பாடு ஆகியவை மதப் பிற்போக்காளர்களை மீறி பெருவாரி மக்களின் வரவேற்பைப் பெற்றன. மதச் சார்பற்ற நவீன கல்வியை கமால் அட்டா டர்க் பூர்கிபாவில் அமலாக்கினார்.
பிற சக இந்திய சமூகத்தினர் விரும்பாத, தவறாகப் பார்க்கப்படும் பழக்கங்கள் மாற்றப்பட இஸ்லாமிய சமூகம் தமக்குள் ஆய்வு செய்வது அவசியம். இஜித்திகாத் என்ற அறிவு சார்ந்த ஆய்வுக்கு பதில் முடக்கும் ஜிகாத் முன்னிலைப்படுத்துவது ஆபத்து என்பதை உணர வேண்டும். புர்கா, பர்தா, தலாக், பெண் ஜீவனாம்சம், பெண் கல்வி, வேலை மறுப்பு, உரிமை மறுப்பு, பலதார மணம் போன்றவை இஜ்திகாத்துக்கு உட்பட வேண்டும். இஸ்லாமியரிடம் சகிப்புத் தன்மை இல்லை என்ற குற்றச்சாட்டை இஸ்லாமிய அறிஞர்களும் ஏற்கின்றனர். ஏசுவுக்கும், மேரி மகதலேனாவுக்கும் உறவு என்ற டாவின்சி கோட் 5 கோடிப் பிரதிகள் விற்கப்பட்டது. இதனால் கிறிஸ்து மதம் சிதறிவிடவில்லை. இப்பொழுதுள்ள பைபிளுக்கு மாற்றாக எழுதப்பட்ட பல வேதங்கள் உண்டு. விமர்சனங்கள், விளக்கங்கள், புதிய கோணங்கள், மறுவாசிப்பு ஆகியவற்றால் மட்டுமல்ல, அடக்குமுறைகளால் கூட மதம் அழிந்துவிடவில்லை என்பது வரலாறு.
இஸ்லாம் ஒரு உருவத்தை முன்வைத்ததல்ல. அது ஒழுங்கின்றி, ஒற்றுமையின்றிச் சிதறி வாழ்ந்த மக்கள் கூட்டத்தை நெறிப்படுத்த உருவான நன்முயற்சி. இஸ்லாம் இதுவரையான அனைத்து மதங்களிலிருந்தும், தத்துவங்களிலுமிருந்தும் உருவாக்கப்பட்ட வாழ்வு நெறி. இஸ்லாம் புதுமை, சீர்திருத்தம், புரட்சி ஆகியவற்றை ஏற்றுக் கொண்டு உருவான மதம்.
எனவே மனித குலத்தின் ஒற்றுமையை உருவாக்கும் மதச்சார்பற்ற சமத்துவ நோக்கு, போரற்ற, வன்முறையற்ற, பகிர்வு உணர்வுமிக்க சமாதான வாழ்வு, இவற்றை வலியுறுத்தும் அனைத்து சக்திகளுடனும் உறவு கொண்டு கைகோர்த்து, போராடி புதிய உலகை உருவாக்குவதில் இஸ்லாம் ஆக்கப்பூர்வமாக முன்னிற்க முடியும்.
“மனிதர்களாகி” உங்களில் ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒரு சட்ட செயல்முறை வரையறுத்துத் தந்துள்ளோம். அல்லா விரும்பியிருந்தால் அனைவரையும் ஒரே இனமாக, ஒரே மதமாகப் படைத்திருக்க முடியும். அவன் உங்களுக்குக் கொடுத்ததைச் சோதித்துப் பார்க்கத்தான் இவ்வாறு செய்தான்’ என்கிறது குரான்.(5:48)
சோதனையில் வெற்றி பெறுவதும், சகோதரத்துவம் நிறைந்த சமூகத்தை உருவாக்குவதுமே நம் அனைவர் முன் உள்ள தலையாயக் கடமை.
“இன்ஷா அல்லாஹ்”
ஒரு ஆசிரியராக வரலாற்றை அணுகுதலும் , மதங்களின் தோற்றம் குறித்த புரிதலும் மிக அவசியம் என நினைத்து இந்த சிறுநூலை வாசித்தேன்.
இன்று உலகில் நிலவும் அனேக வன்முறைகளுக்கு மதவெறி ஓர் காரணம் என்பதை நாம் அறிவோம்.
அந்த அடிப்படையில், இந்நூல் எனக்கு அந்நிய மதமான “இஸ்லாமைக்” குறித்து ஓரளவு புரிந்து கொள்ள உதவியது.
எல்லா மத வெறியும் ஆபத்தானதே.
எல்லா மதங்களிலும் வன்முறைகள் உள்ளன.
எல்லா மதங்களிலும் புராணக் கதைகளும், போலி உருட்டுகளும் கொட்டிக் கிடக்கின்றன.
எனவே, இந்தப் பதிவு முன்வைக்கிற மாற்று மத விமர்சனத்தை, அந்த காலகட்டத்தோடு தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டும்.
மூன்று நாட்களாக, எடிட் செய்து, டெலிட் செய்து, மறுபடியும் டைப் செய்து, இஸ்லாமைப் பின்பற்றும் நண்பர்களின் கருத்து கேட்டு, என்னளவில் மனதுக்கு நெருக்கமான ஒரு பதிவாக இதை வடிவமைத்திருக்கிறேன்.
இதை வாசிக்கும் எந்த ஒரு மதப்பற்றாளருக்கும் முரண்பாடுகள் எழும் என்பதை அறிவேன்.
ஒருவேளை, அப்படியான முரண்பாடுகள் எழுமாயின் அவற்றை உணர்வு & நம்பிக்கை ரீதியில் அணுகாமல், தர்க்க ரீதியாக அணுகி சான்றுகளின் அடிப்படையில் மறுக்கலாம்.
காலங்காலமான நம்பிக்கைகளில் இருந்து ஒரு புதிய உரையாடலைத் தொடர்வது என்பது மானுட நாகரீகப் போக்கின் முக்கியமான நகர்வு.
நன்றி.
படித்து விட்டு உங்க கருத்தை சொல்லுங்க.