பட்டாம் பூச்சியும் உலக உருண்டையும்
********************************************
எப்படியாவது வயசு காலங்களில்
நம்மை ஒரு பூதம்
பிடித்துக் கொள்கிறது
பிறகு வாழ்க்கை முழுவதும்
அதைத் தோளில் ஏற்றிக்கொண்டு
சுற்றித் திரிவதே
நமது பிழைப்பாக இருக்கிறது
எனக்கு நேசிக்கத் தெரியாது
விட்டு விடு என்றால்
கெக்கலியிட்டு சிரித்தபடி
நேசத்தை விட பெரிது
உலகத்தில் பிறிதொன்றில்லை என்கிறது
கருணையைப் பற்றிச் சொன்னால்
நீ வேறு கிரகத்தில் இருக்க வேண்டிய
ஆள்தான் என்று கிண்டல்
நான் ஒரு முறை அதை
தழுவிக் கொள்ள முடியாது என்று
சொன்ன போது
என் நிழலைத் திருடிக் கொண்டு சென்றுவிட்டது
நான் பட்டுப்பூச்சியைப் போல
எடையற்றவனாகி
துயருற்றேன்
கடவுள் என் கனவில் வந்து
உலக உருண்டையைப்
பரிசளித்தார்
அதுவோ வெறிகொண்ட மிருகம் போல
என் கரங்களில் சுழன்றாடியது
என்னை மன்னிக்க வேண்டி
மனதார வேண்டினேன்
அது என் மனதின் நல்ல பதிவை மட்டும்
கொஞ்சம் கிள்ளி எடுத்துக்கொண்டு
சென்றது
இப்போது வள்ளலார் ஞாபகத்திற்கு
வருவதேயில்லை
பிறகு எப்படி வாடிய பயிர் வரும்?
பிறகு எல்லோரையும் போலவே
என் தோளிலும் அந்த குரங்குக் குட்டி
தொற்றிக்கொண்டேயிருக்கிறது
புத்தர் என்றால் காளானும்
கர்த்தர் என்றால் சிலுவையும் தான்
ஞாபகத்திற்கு வருகின்றன
இப்போதெல்லாம்
வானில் பறக்கும் சிறு பறவையைப் பார்த்தாலும்
அவ்வளவு பொறாமையாய் இருக்கிறது
வாக்குறுதிகள்
******************
அரசியல் வாதிகள்
கொடுத்த வாக்குறுதிகளையெல்லாம்
அவர்களே நம்பியிருந்தால்
இன்று இந்தியா உலகிலேயே
அறிவாளிகளின்
‘தேசமாக மாறியிருக்கும்
பொதுமக்கள்
அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளையெல்லாம்
நம்பாமலே இருந்திருந்தாலாவது
இன்று இந்தியா
குறைந்த பட்சம்
அறிவாளிகளின் தேசமாகவாவது
இருந்திருக்கும்
சதுரங்க விளையாட்டு
**************************
சதுரங்கக் கட்டத்தில்
ஒரு கருப்பு சிப்பாயாக நிற்கிறேன்
நகர்த்துவார்களா
வெட்டி வீழ்த்துவர்களாவென்று
தெரியவில்லை
ஆனால் ராசா சிரித்த முகத்தோடு தான்
பவனி வருகிறார்
நலம் விசாரிக்கிறார்
தாய்மார்களிடம் ஆசி பெறுகிறார்
வாக்கு கேட்கிறார்
அவர்கள் முழங்குகிறார்கள்
” வெள்ளை மனதோடு வாக்களிப்போம்
எதிரிகளைத் தோற்கடிப்போம்”
ராசாவே ராசாவே
எங்களைப் போன்ற சிப்பாய்கள்
என்ன செய்வார்கள்?
” அக்னிப் பாதையில் நடந்து வா
அழுக்குகளை எரித்துவா”
அப்படியென்றால் எங்கள் இடத்தில்
ஒரு கருப்புக் கிடாயை வைத்து
விளையாடுங்களேன்”
” கருப்பு கிடாய்கள் தான் நீங்கள் “
” ஐயா நாங்கள் ஏழைகள்”
” அடுத்த ஐந்தாண்டு ஆண்டுகளுக்குள்
இந்த நாட்டில் ஏழைகள் யாரும்
இருக்கப் போவதில்லை”
” அப்டியானால் எல்லோரும்
பரலோகத்தில் தான்
இருப்பார்களா ராசா”
யாருக்காக என்று …..
**************************
சாலையோரத்து மரங்கள் நிற்பது
தமக்காக என்று நினைப்பான் பயணி
கிளைகளில் அமரும் பறவைகள்
தமக்காக என்று நினைக்கும்
நிழலுக்கு இளைப்பாரும் தெருநாய்கள்
தமக்காகவே என்று நினைக்கும்
தமக்கு எண்ணிக்கையில் ஒன்று அதிகம்
என்று நினைப்பான்
தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பாளன்
யார் யார் தன்னை தமக்கென்று நினைத்தாலும்
தான் யாருக்காக என்று நினைக்கவே தோன்றாது மரங்களுக்கு
*****************************
மசக்கை நிலா
சாம்பலில் புரளும் நேரம்
என் தேநீர் கோப்பையில்
நீலவானம் பனித்துண்டாக
மிதக்கிறது
காலத்தை ஒரு மிடறு உறிஞ்சிக்குடிக்கிறேன்.
இரவு என்பது
ஒரு காக்கை இறகு
பிழையறியும் நெஞ்சங்களின்
இரகசிய கருவறை
காலை என்றால் சூரியனை
செல்வந்திப் பூவாக பறித்து
நீ சூடிக் கொள்ளலாம்
தளும்ப தளும்ப தண்ணீர் குடத்துக்குள்ளும்
இட்டு வரலாம்
ஆனால் கரிய இரவை என் செய்வாய் ?
சாத்தானும் கடவுளும்
விடிய விடிய கண்ணாமூச்சி ஆடி
ஒய்ந்த பின்
ஆளுக்கொரு விழியில் விழுந்து
குறட்டை விடும் நேரம்
இரகசியமாக எடுத்து
உன் கூந்தலில்
சொருகிக் கொள்
**************
கல்வி வியாபாரமாகி விட்டது
மதம் வியாபாரமாகிவிட்டது
கலை வியாபாரமாகிவிட்டது
அரசியல் வியாபாரமாகிவிட்டது
நாடும் உலகமும் மனிதமும்
வியாபாரமாகிவிட்டது
யாவும் எவையும்
வியாபாரமாகிவிட்ட
இந்த உலகத்தில்
அன்பின் நிமித்தம்
நான் எதை உனக்கு
பரிசளிப்பேன் ?
வேண்டுமானால்
இன்னும் வணிகமயாமாகிவிடாத
இந்தக் கவிதையின்
ஒரு நல்ல பகுதியை தேர்ந்து
நீ எடுத்துக்கொள்கிறாயா?
*********************
எந்த நேரத்தில் பறக்குமென்று யாருக்கும் தெரியாது
சிறகு விரித்து தயராக
இருக்கும் ஒரு பறவை
அது ஒரு புறாவாக இருக்கலாம்
ஒரு காக்கையாக இருக்கலாம்
ஒரு குருவியாகவும் இருக்கலாம்
அல்லது
ஒரு துப்பாக்கி ரவையாகவும்
இருக்கலாம்
தங்கேஸ்
தமுஎகச
தேனி மாவட்டம்